உலகளாவிய ரீதியில் சாதனை படைக்குமா கட்டுநாயக்க விமான நிலையம்?

புனரமைக்கப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தில் உலகிலுள்ள எந்தவொரு விமானத்தையும் தரையிறக்க முடியும் என பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

விமானம் நிலையத்தின் ஓடுபாதையின் தரம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க செய்தியாளர் சந்திப்பொன்றை நேற்று ஏற்பாடு செய்திருந்தார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திட்டமிட்ட வகையில் புனரமைக்கப்படாமையினால் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து சேவையின் சான்றிதழ் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தன.

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து சேவையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், மிகப்பெரிய விமானங்களை தரையிறக்குவதற்காக பிரதான ஓடுபாதையில் 75 மீற்றர் அகலம் அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையின் தரம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இங்கு ஊடகவியலாளர் ஒருவர் பிரதி அமைச்சரிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் உலகின் எந்தவொரு விமானத்தையும் தரையிறக்க முடியும். எனினும் 45 மீற்றர் அகலத்தை கொண்ட E குறியீட்டிலான அளவிலேயே காணப்படுகின்றது.

எனினும் ஓடுபாதையின் இரண்டு தோல்பட்டைகளும் 15 அடி என்ற கணக்கில் பெரிதாக்கப்பட்டுள்ளது. அதனால் 75 மீற்றர் அகலமாகவே காணப்படுகின்றது. இதன் காரணமாக எந்தவொரு பிரச்சினையுமின்றி A380 விமானம் உட்பட அனைத்து விமானத்தையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முடியும்.

இதற்கு முன்னர் விமான ஓடுபாதையில் விமானங்களை இயக்கும் போது இரண்டு பக்க என்ஜின்களை இயக்காமல் நடுவில் இருக்கும் இரண்டு விமான என்ஜின்களை மாத்திரம் பயன்படுத்தியுள்ள நிலையில் விமான சற்று மேலே சென்றதன் பின்னர் ஏனைய என்ஜின்கள் இயக்கப்பட்டுள்ளது.

தற்போதைய புனரமைப்பின் பின்னர் இரண்டு பக்க தோள்பட்டை பகுதிகள் பெரிதாக்கப்பட்டுள்ளமையினால் அனைத்து என்ஜின்களையும் இயக்கிய நிலையில் விமானத்தை இயக்க முடியும். உலகிலுள்ள எந்தவொரு விமானத்தையும், கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையில் இயக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அறிவியலில் புதிய கண்டுபிடிப்பு : இலங்கை இளைஞனுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!!

உலக புகழ்பெற்ற சஞ்சிகையாக கருதப்படும் போர்ப்ஸ் சஞ்சிகையினால் பிராந்தியத்தின் சிறந்த இளம் தொழில் முனைவோரை பட்டியலிடும் வேலைத்திட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய 2017ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த 30 இளம் தொழில் முனைவோர் பட்டியலில் இலங்கை இளைஞர் ஒருவர் இடம் பிடித்துள்ளார். ரக்கித மாலேவன என்ற இளைஞரே குறித்த 30 பேருக்குள் இடம்பிடித்துள்ளார்.

ஆசிய பிராந்தியத்தில் 30 வயதிற்கு குறைவான சிறந்த இளம் தொழில் முனைவோர் இதன் ஊடாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு நெனோ தொழில்நுட்பத்தின் ஊடாக HIV/AIDS நோய்க்கு சிகிச்சை ஒன்றை கண்டுபிடிப்பதற்கு அவசியமான வியூகம் ஒன்றை தயாரித்தமைக்காக ரக்கித மாலேவன என்ற இளைஞரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டியிருந்தார்.

அவர் Forbes 30 Under 30 என்ற பட்டியலில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாட துறைக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அவர் கொழும்பு நாலந்தா பாடசாலையின் பழைய மாணவராகும். அத்துடன் அவர் ideanerd SL என்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

4 வயது தங்கையுடன் வேன் ஓட்டிச் சென்ற 8 வயது சிறுவன்!!(வீடியோ)

அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் கிழக்கு பாலெஸ்டின் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் வேன் ஓட்டி செல்வதாகவும், அவனுடன் 4 வயது சிறுமி அமர்ந்து செல்வதாகவும் பொலிஸ் அதிகாரி ஜேக்கப் கோச்லருக்கு தகவல் கிடைத்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொலிஸார் விரைந்து சென்றனர்.
அதற்குள் அந்த சிறுவன் வேனை புகையிரத பாதையின் ஆள் இல்லாத கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக பத்திரமாக ஓட்டி சென்று அங்குள்ள பிரபல வணிக வளாகத்தை அடைந்தனர்.

அங்கு தனது தங்கையுடன் அமர்ந்து பாலாடை கட்டி பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இதற்கிடையே அங்கு சென்ற பொலிஸ் அதிகாரி கோச்லர் வேன் ஓட்டி வந்த சிறுவனை கண்டதும் நிம்மதி அடைந்தார்.

ஏன் வேன் ஓட்டி வந்தாய் என கேட்டார். அதற்கு அவன் எங்களுக்கு பாலாடை கட்டியுடன் கூடிய பர்கர் சாப்பிட ஆசையாக இருந்தது. ஆனால் எனது அம்மா, அப்பா ஆகியோர் நன்றாக தூங்கி கொண்டிருந்தனர்.

எனவே நான் வீட்டில் இருந்த எனது தங்கையை அழைத்துக் கொண்டு தந்தையின் வேனை ஓடி வந்தேன் என்றான்.

வேன் ஓட்ட எப்படி கற்றுக் கொண்டாய் என கேட்டதற்கு யூடியூப் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளான்.

அரசாங்க ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம் : விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை!!

அரசாங்க அலுவலக வேலை நேரத்தில் மாற்றம் மேற்கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று செயற்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அமைச்சரவை அனுமதியின் கீழ் 3 மாதங்களுக்கு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக பத்தரமுல்லையில் அமைந்துள்ள நிர்வாக நகரத்தை கேந்திரமாக கொண்டு எதிர்வரும் நாட்களில் செயற்படுத்துவதாக திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூப்பசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரச நிர்வாக அமைச்சுடன், மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விரைவில் நவீனமயப்படுத்தப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு அறிமுகம்!!

புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டினை தயாரிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச தரத்திற்கமைய புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்கும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த குழுவின் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பது தொடர்பில் பரிந்துரை பெற்றுக் கொள்ளவுள்ளதாக நிர்வாக இயக்குனர் என்.ஏ.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ரயிலில் தொங்கிக்கொண்டு செல்ஃபி எடுக்க முயற்சி : தவறி வீழ்ந்த நண்பரைக் காப்பாற்ற முயன்ற நால்வர் பலி!!

இந்தியா, கொல்கத்தாவின் தும்தும் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தாராகாந்த் மாகால் என்பவர் தன்னுடைய நண்பர்கள் நால்வருடன் கோவிலுக்கு சென்று விட்டு ரயிலில் வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில், ரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.

இவரின் இந்த விபரீத செல்ஃபி முயற்சியில் நண்பர்களான சுமித்குமார், சஞ்ஜீவ், காஜல் ஷாகா, சந்தானு ஆகிய நண்பர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, தாராகாந்தின் கால் தவறி ரயிலில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார். உடனடியாக அவரைக் காப்பாற்றும் நோக்கில் பிற நண்பர்களும் ஒருவர் பின் ஒருவர் ரெயிலில் இருந்து கீழே குதித்துள்ளனர். அவசரத்தில் எதிர் புறத்தில் வந்த ரயிலை இவர்கள் கவனிக்கவில்லை.

இதனால், கீழே குதித்த நண்பர்கள் மீது ரயில் ஏறிவிட்டது.
இந்த சம்பவத்தில் தாராகாந்த் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் எதிர்புறமாக வந்த ரெயிலை நண்பர்கள் கவனிக்கத் தவறிவிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் நால்வரும் 25 முதல் 30 வயதுடையவர்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

ரஷித்கானிடம் ஏதோ ஒன்று உள்ளது கவனத்தில் கொள்ளச் சொல்கிறார் முத்தையா முரளிதரன்!!

ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானிடம் சிறப்பான ஏதோ ஒன்று உள்ளது என்று இலங்கை அணியின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐ.பி.எல். தொடர் 2017 விறுவிறுப்படைந்துள்ளது. நடப்பு சம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

அந்த அணியில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 18 வயதான லெக்ஸ்பின்னர் ரஷித் கான் இடம்பிடித்துள்ளார். இவரை அந்த அணி 4 கோடி ரூபாவுக்கு ஏலம் எடுத்தது.

அவர் 4 கோடி ரூபாவுக்கு தகுதியானவரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இரண்டு போட்டிகளிலும் தனது லெக்ஸ்பின் மற்றும் கூக்ளி பந்தால் எதிரணி துடுப்பாட்ட வீரர்களை கலங்கடித்துவிட்டார்.

இரண்டு போட்டிகளில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

சிறப்பாக பந்து வீசும் அவரை ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் வெகுவாக பாராட்டியுள்ளார். ரஷித் கான் குறித்து முரளிதரன் கூறுகையில்,

‘‘நான் ரஷித்கானை இரண்டு முறைதான் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் நாங்கள் அவரைத் தேர்வு செய்தோம். ஏனென்றால் அவரது ஆட்டத்தை சர்வதேச போட்டியில் நாங்கள் பார்த்திருக்கிறோம்.

சிறந்த வீரர்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார். அவரிடம் ஏதோ ஒரு சிறப்புத் திறமை உள்ளது. மற்ற லெக்ஸ்பின்னர்களை விட சற்று மாறுபடுகிறார். வழக்கமான பந்து வீச்சாளரை விட பந்தை சற்று வேகமாக வீசுகிறார்.

அதுபோல் சில மாறுபட்ட அளவுகளில் பந்து வீசும் திறமையும் அவரிடம் உள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசினார். இது எங்கள் அணிக்கு சிறந்ததாக அமைந்தது.

அவர் சிறப்பாக செயற்படுவார் என்று நினைத்தோம். எங்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றி விட்டார்” என்றார்.

வவுனியாவில் அனாதரவாக வீதியோரத்தில் கிடந்த மோட்டார் சைக்கிள் மீட்பு!!

வவுனியா – யாழ். பிரதான வீதியில் வீதியோரத்தில் ஆனாதரவான நிலையிலிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிசாரால் நேற்றிரவு மீட்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா- யாழ். பிரதான வீதியோரத்தில் நிலத்தில் சரிந்து விழுந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், ஹெல்மட், ஒரு சோடி பாட்டா என்பனவும் 3 மணித்தியாலத்திற்கும் மேலாக அவ்விடத்தில் காணப்பட்டுள்ளன.

அப்பகுதியில் செய்தி சேகரிப்புக்காக சென்றிருந்த ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், விபத்து ஏதாவது நடந்திருக்கலாம் என்னும் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் அப்பகுதியில் இருந்து விபத்துக்குள்ளாகி எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த மோட்டார் சைக்கிள், ஹெல்மட் என்பன வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது எவ்வாறு அவ்விடத்தில் வந்தது என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

வவுனியா மினி சூறாவளி : தடைப்பட்ட A9 வீதி போக்குவத்து!!

 
வவுனியா ஈரப்பெரிய குளம் பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்துள்ளதுடன், மினி சூறாவளி தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக வீதியோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், வீடுகள் சிலவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், A9 வீதியில் பாரிய மரம் ஒன்று விழுந்துள்ளதாகவும், இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மரத்தை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு!!

மினுவாங்கொட, புளுகஹமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி அருகில் இருந்து கொங்ரீட் கம்பம் ஒன்றில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

ஹொரம்பெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது மற்றும் 34 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெற உள்ளதுடன், மினுவாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அநீதி இழைக்கப்படுகிறதா வாருங்கள் தயக்கமின்றி தட்டிக்கேட்போம் : கே.கே.மஸ்தான்!!

 
மீள்குடியேற்ற செயலணியினனால் வழங்கப்படவுள்ள வீடுகளுக்கான புள்ளி வழங்களில் அநீதி இழைக்கப்பட்டிருக்குமாயின் அதிகாரிகளிடம் தயக்கமின்றி அதற்கான நீதியை கேட்டும் கிடைக்கவில்லையாயின் குறித்த விடயம் தொடர்பிலான உடன் நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

மீள் குடியேற்ற செயலணியின் உப குழுவில் இணைக்கப்பட்டுள்ள கே.கே.மஸ்தான் ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பெயரில் கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று மன்னார் அடம்பன் பகுதியிலுள்ள கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் குறித்த வீட்டுத்திட்டத்தில் சில குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக மக்களால் முறையிடப்பட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பான புள்ளிகளையும் பெயர்களையும் பொது இடங்களில் ஒட்டுமாறும் இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களது பிரச்சினைகள் வெளிக்கொணரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் நல்லாட்சியில் எந்த பொதுமகனும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் நானும் உறுதியாக இருக்கின்றேன் எனினும் என் அரசியல் பிரவேசத்திற்கு முன்னரான குறைகளை என்னிடம் அதிகம் சொல்லப்படுதாக தெரிவித்தார்.

என்னைப்பொறுத்த வரையில் என் மனசாட்சிக்கு ஏற்ப எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை வெளிப்படைத்தன்மையுடையதாக செய்ய வேண்டும். எனக்கு அரசியல் மூலமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எந்த தேவையும் கிடையாது எனவே மக்களுக்கு எது கிடைக்கப்படுகிறதோ அது மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கப்படவேண்டும் என்பதிலேயே நான் அவதானமாக இருக்கின்றேன்.

என்னுடைய சேவைகள் எனக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு மட்டுமல்ல மாறாக எல்லா மக்களுக்கும் கிடைக்கப்படுபவை கொடுக்கப்படும் இவ்வாறு கிராமம் கிராமமாக செல்லும்பொழுதுதான் தெரிகிறது தமக்கு கிடைக்கப்பெறுவவேண்டிய பல சலுகைகள் அரசியல் மூலமாக இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது என்று எனவே இனியும் அந்த தவறுகள் நடக்க இடமளிக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

குப்பை மேடு சரிந்து அனர்த்தம் : இதுவரை 10 சடலங்கள் கண்டெடுப்பு!!

கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு நேற்று பிற்பகல் சரிந்து விழுந்த விபத்தில் இதுவரை 10 பேரின் சடலங்கள் கண்டெுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் 04 சிறுவர்களும் 06 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அதேவேளை காயமடைந்த 07 பேர் தொடர்ந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் பாதிக்கப்பட்வர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விஷேட வேலைத் திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

வவுனியாவில் 50வது நாளைக்கடந்த போராட்டம் : புத்தாண்டிலும் தீர்வும் இல்லை நிம்மதியும் இல்லை!!

 
புத்தாண்டு தினத்திலும் தமக்கு தீர்வும் இல்லை, நிம்மதியும் இல்லை என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா கந்தசாமி ஆலய முன்றலில் ஒன்றுகூடி காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு பதில் தா என இறைவனிடம் மன்றாடி அழுது புலம்பி வழிப்பட்ட பின் அங்கிருந்து பசார் வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று வைத்தியசாலை சந்தியை அடைந்து அங்கிருந்து A9 வீதியில் ஊர்வலமாகச் சென்று 50வது நாளாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்ட களத்தை அடைந்தது.

ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் நல்லாட்சி அரசே காணாமல் போனோருக்கு பதில் என்ன, மைத்திரி அரசே எமது பிள்ளைகளுக்கு பதில் கூறு, சம்மந்தன் ஐயா எமது போராடத்திற்கு பதில் என்ன.., நீங்களோ கொண்டாட்டத்தில் நாங்களோ தெருவில், எமது போராட்டம் 50 நாளைக் கடந்து விட்டது தீர்வு என்ன என கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் காணாமல்போனோரின் உறவுகளுக்கு புத்தாடைகள் வழங்கிய புலம்பெயர் தமிழன்!!

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றுடன் 50வது நாளை எட்டியுள்ளது.

வவுனியா செய்தியாளர் பாஸ்கரன் கதீஷனின் வேண்டுகோளுக்கினங்க கனடா கியூபிக் மொன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதி ( Truck Driver) ஜனார்தனினால் காணாமல் போன உறவினர்களுக்கு நேற்று (13.04.2017) இருபத்தைந்து புத்தாடைகள் வழங்கப்பட்டது.

இன்று பிறந்துள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தில் நாங்கள் அனைவரும் புத்தாடைகள் அணியும் போது தமது உறவுகளை தொலைத்து நிற்கும் காணாமல் போன உறவுகளும் புத்தாண்டில் புத்தாடைகள் அணிய வேண்டும் என்ற ஒர் எண்ணத்திலேயே இப் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

வவுனியாவில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!!

 
பாடசாலை செல்லும் வசதியற்ற தரம் 4,6,7,8,9, உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தாம் பாடசாலைக்கு நடந்து செல்வதாகவும் வசதியற்ற நிலையில் கல்வியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்ததையடுத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் தனது ஊதிய நிதியிலிருந்து ஆறு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கனகராஜன்குளம், மாதர்பணிக்கர்மகிழங்குளம், நானாட்டான், பாலமோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனது குருமன்காடு அலுவலகத்தில் வைத்து நேற்று (13.04) காலை 10.30 மணியளவில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது

இந்நிகழ்வில் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் திரு. ஜெயகெனடி, மாணவர்களின் பெற்றோர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விஷேட பூஜை வழிபாடுகள்!!

 
தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (14.04.2017) காலை 6.30 மணிக்கு வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளி அம்மன் தேவஸ்தானத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இவ் விஷேட பூஜை வழிபாட்டில் 100க்கு மேற்ப்ட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.