வவுனியா ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தின் புதிய கட்டட திறப்பு விழா பாடசாலை அதிபர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நேற்று (05.04.2017) நடைபெற்றது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், வவுனியா நகர கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்..பி.நடராஜ், முன்னாள் அதிபர் சு.கருணாநிதி, ஆகியோருடன் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், பொது மக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பிரேசிலின் தெற்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இளைஞர் ஒருவரை கொள்கையர்கள் மூவர் கோடூரமாக தாக்கியுள்ளனர்.
குறித்த இளைஞன் பயிற்சி ஒன்றிற்காக பிரேசிலின் தெற்கு பகுதிக்கு சென்றுள்ளார்.
இதன்போது இளைஞரை மூன்று கொள்ளையர்கள் வாளால் தாக்கியதில், குறித்த இளைஞரின் கழுத்தின் பாதி பகுதி வெட்டுப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞர் இறந்துவிட்டார் என நினைத்து பள்ளத்தில் தள்ளிவிட்டு, அவரிடமிருந்த கையடக்க தொலைபேசிகளை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த இளைஞர் தான் இறந்தது போல் பாவனை செய்து, இரவு முழுவதும் பாதி தலையை பிடித்தாவாறு இருந்துள்ளார்.
கழுத்தின் திசுக்கள் மற்றும் தோல்கள் என்பன கழுத்தின் பாதி பகுதியில் முழுமையாக வெட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொள்ளையர்கள் மீது உள்ள பயத்தால் இளைஞர் இரவு முழுதும் கடும் வேதனையுடன் அதே இடத்தில் மறைந்திருந்துள்ளார்.
பின்னர் விடிந்ததும் பாதி தலையினை ஒரு கையில் தாங்கியவாரு சுமார் கால் மைல் தூரம் நடந்துசென்று வீதியின் ஓரத்தில் அமர்ந்துள்ளார்.
இதன்போது அப்பகுதிக்கு தீயணைப்பு வாகனமொன்று வந்துள்ளது. இந்நிலையில் அதிலுள்ள வீரர்கள் இளைஞரை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இளைஞர் குறித்த வீரர்களிடம் கொள்ளையர்கள் தன்னை தாக்கி கொலைசெய்ய முயன்றதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் உடனடியாக செயற்பட்டு, அம்பியுலன்ஸை வர வைத்து இளைஞரை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளனாவர் 18 வயதான பெட்ரிக் டி சவுஷா என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் துண்டிக்கப்பட்ட பாதி கழுத்துடன் குறித்த இளைஞர் இரவு முழுவதும் தங்கி, கால் மைல் தூரம் நடந்து வந்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.
வவுனியா தரணிக்குளம் கனேஷ வித்தியாலயத்தின் 140 மாணவர்களுக்கு ஒரு லட்சத்து ஆறுபதாயிரம் ரூபா பெறுமதியான பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த உதவிகள் கொழும்பு றோட்டரிக் கிளாப்பினால் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
25 வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மாணவர்களுக்கு மூலம் 75 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு தவணைப் பரீட்சையில் 6 தொடக்கம் 13 வகுப்பு வரை முதலாம், இரண்டாம், மூன்றாம். அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் இ.லிங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா, பிரதி அதிபர் ம.ஜெகதீஸ்வரன் அவர்களுடன் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
வேறு நபருக்கு சொந்தமான வங்கி கடன் அட்டையை திருடி பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பெண் 15 தடவைகள் அட்டையை பயன்படுத்தி, 5 வங்கி கிளைகளில் பணம் பெற்றுக்கொண்ட நிலையில் நீர்கொழும்பு குற்ற விசாரணை பிரிவினரால் நேற்று செய்துள்ளனர்.
குறித்த பெண் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை கொள்ளையடித்துள்ளார். 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சதலங்காவ பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற 84 வயதான பெண் அரசாங்க அதிகாரி ஒருவரின் கடன் அட்டையை, திருடப்பட்டே இந்த பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
வங்கி அட்டைக்கு சொந்தமான பெண்ணின் நினைவாற்றல் குறைவென்பதனால், கடன் அட்டைக்கான இரகசிய இலக்கத்தை நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.
இதனை அறிந்து கொண்ட மோசடி பெண், அவரின் கைப்பை திருடி இரகசிய இலக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரையான காலப்பகுியில் நீர்கொழும்பு, சீதுவ, ரந்தொளுகம, மினுவங்கொடை, கம்பஹா நகரங்களில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தின் ஊடாக, 15 தடவைகள் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
16 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாகிய மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு, மாத்தறை உயர் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.
2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதிக்கு அண்மித்த ஒருநாள் அக்குரெஸ்ஸ எல்லேவெல பிரதேசத்தில் மேலதிக வகுப்பினுள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்டதனை தொடர்பில் ஆசிரியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட கணித ஆசிரியருக்கு எதிராக 9 வருடங்கள் விசாரிக்கப்பட்ட நீண்ட வழக்கிற்கு பின்னர் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடுமையான வேலைகளுடன் கூடிய 20 வருட சிறைத்தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணமும் செல்லுத்தமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
65 வயதான குற்றவாளி அக்குரஸ்ஸ எல்லவெல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
வயதான தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு அனுராதபுரம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கல்னேவ, நெகம்பஹ, அலிவங்குவ கிராமத்தில் வாழ்ந்த பத்து தம்பதிகளுக்கு இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் 75 வயதுடைய மணமகன் மற்றும் 65 வயதுடைய மணமகள் உட்பட் 10 தம்பதிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
5 பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய டீ.ஜனா மற்றும் 65 வயதுடைய ஏச்.ஏ.சோமாவத்தி ஆகிய தம்பதி உட்பட கிராமத்தில் திருமணம் செய்யாமல் இருந்த தம்பதிகளுக்கே இவ்வாறு சட்டரீதியாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வழிக்காட்டலுக்கமைய, நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ரஞ்சித் ஷாந்த கஹவல அந்த கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்து தகவல் பெற்றுக் கொண்டுள்ளார்.
அமைச்சரின் ஆலோசனைக்கமைய, அனைத்து பிள்ளைகளையும் பாடசாலை அனுப்புவதற்கு அவசியமான நடவடிக்கை, கிராமத்தில் வாழும் 30 குடும்பங்களுக்கு கைதொழில் வேலைத்திட்டம் ஆரம்பித்தல், திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்த மக்களுக்கு திருமணம் செய்து வைத்தல், அடையாள அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றிற்கு அவசியமான ஆவணங்கள் வழங்கி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த கிராமத்தில் வாழும் அனைவருக்கும் நிரந்தர வீடு வழங்குவதற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஜவின் ஆலோசனை கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
6 அங்குலம் உயரமான வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்கள் பூமியில் வாழ்ந்து வந்தமைக்கும் ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவதுண்டு.
வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் எனறே பதிலளித்து வருகின்றனர்.
தோமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் பிலெய்டன் என அழைக்கப்படும் வேற்றுகிரகவாசிகள் வடமேற்கு ஆர்ஜென்டினாவில் இருந்து 70 மைல் தூரத்தில் இருக்கும் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பறக்கும் தட்டுகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் யுஎப்ஓ சார்ந்த பத்திரிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
ஆர்ஜென்டினாவில் மொத்தம் 30 பிரிவினர் இருப்பதாகவும் அவர்கள் தங்களது பரிணாம வட்டத்தின் இறுதியை நெருங்கி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிலெய்டன் பேஸ் காச்சி, லா போமா, ரூட் 40 இடையே இருக்கலாம் என்றும், இதன் மற்ற பிரிவினர் பிரபஞ்சத்தின் மூலைகளில் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
இதன் முக்கிய தளமானது வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளில் மறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேற்றுக்கிரக புத்திஜீவிகள் தொடர்பிலான ஆய்வுகளும் மர்மங்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. ஆனால் அறிவியல் அறிந்த, கண்டுபிடித்த உண்மைகள் மட்டும் வெளிப்படுத்தப்படுவதில்லை.
அந்த வகையில் பூமிக்கு வேற்றுக்கிரக வாசிகளின் வருகைகள் இடம்பெற்று வந்ததாகவே விண்வெளி தொடர்பில் ஆய்வு செய்பவர்களின் நம்பிக்கை.
அதற்கான ஆதாரத் தேடல்களுக்கு மட்டும் குறைவில்லாமல் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
அந்த வகையில் சிலி நாட்டு மலைப்பகுதியில் 6 அங்குல உயரம் கொண்ட மனித உடலமைப்பை ஒத்த எழும்புக் கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஒஸ்கர் முனோல்ஸ் என்பவர் இதனை கண்டுபிடித்துள்ளார், அதனைத் தொடர்ந்து இது குறித்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதனால் மேலும் பல எலும்புக்கூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டன.
பின்னர் ஸ்டீவன் கீரீயர் எனப்படும் ஆய்வாளர் மற்றும் எலும்பியல் டி.என்.ஏ நிபுணர் மூலமாக ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதில் கிடைத்த ஆய்வு முடிவுகள் ஆச்சரியம் அளித்துள்ளது.
அதாவது குறித்த எலும்புகளோடு பூமிக்கு சம்பந்தப்படாத உலோகம் கலந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது, பின்னர் இதன் ஆய்வுகள் வேற்றுக்கிரகங்கள் தொடர்பில் ஆய்வு செய்பவர்களோடு இணைத்துக்கொள்ளப்பட்டு, வேறு கோணங்களில் ஆய்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.
அந்த ஆய்வுகள் மூலம் குறித்த எலும்புகள் வேற்றுக்கிரகவாசிகளுடையவை எனவும் அவர்கள் பூமிக்கு வந்து சென்றுள்ளார்கள் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த உயிரினம் சிரியஸ் எனப்படும் நட்சத்திரத் தொகுதிக்கு உரியவையாக இருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இவை வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய ஆதாரம் அதனால் வேற்றுக் கிரகவாசிகள் இருப்பது உண்மை எனவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
புனரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை இன்று (06) மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இதற்கமைய விமான நிலையத்தின் பணிகள் இன்று முதல் வழமையான நேர அட்டவணையின் பிரகாரம் முன்னெடுக்கப்படவுள்ளன.
புனரமைப்புப் பணிகளுக்காக கடந்த ஜனவாரி மாதம் 6 ஆம் திகதியிலிருந்து விமான நிலையம் தினமும் 8 மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்ததாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த புனரமைப்புப் பணிகள் சீன நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. புனரமைப்புப் பணிகளுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய விமானமாக கருதப்படுகின்ற ஏ_380 விமானத்தை தரையிறக்குவதற்கான வசதிகள் இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார்.
குழந்தைகள் திருமணம் குற்றமான விடயமல்ல என புதிய சட்டவாக்கமொன்று மலேசியாவில் இயற்றப்பட்டுள்ளது.
மலேசியாவில், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் பக்குவமடைந்தவர்களாக இருப்பதனால், குறித்த காலகட்டத்தில் உடல் மற்றும் மனோரீதியாக அவர்கள் திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர். அதனால் திருமணத்திற்கு வயது ஒரு தடையாக இல்லை என மலேசியாவில் சட்டமொன்று இயற்றப்பட்டு, பாராளுமன்றத்தில் விவாதமொன்றும் இடம்பெற்றுள்ளது.
குறித்த விவாதத்தில் பேசியுள்ள மலேசிய ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே, திருமணத்திற்கு வயது ஒரு தடையல்ல என தெரிவித்துள்ளார். இருப்பினும் குறித்த சட்டவாக்கத்திற்கு அந்நாட்டு எதிர் கட்சி ஆதரவு அளிக்கவில்லை.
மேலும் மலேசியாவில் நடைமுறையிலுள்ள குடிமையியல் மற்றும் இஸ்லாமிய சட்டங்களின்படி ஆண், பெண் இருவரும் 18 வயதுக்குக் குறைவாகவே திருமணம் செய்து கொள்கின்றனர். குடிமையியல் சட்டத்தின்படி திருமண வயது 18 ஆக இருந்தாலும், அந்நாட்டு மாநில முதல்வர்களின் அனுமதியை பெற்று 16 வயதிலேயே திருமணம் செய்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து தாக்கியதில் இறைச்சிக் கூட உரிமையாளர் ஒருவர் பரிதாபமாக பலியானார். ராஜஸ்தான் மானிலத்தின் மேற்குப் பிரதேசமான அல்வாரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும், இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பசுக்களும் மாடுகளும் இந்துக்களின் புனிதச் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றை இறைச்சிக்காக வெட்டுவதை இந்தியாவின் பல மானிலங்கள் தடை செய்துள்ளன.
இந்நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த இறைச்சிக் கூட உரிமையாளரான பேலு கான் (55) என்பவர் கடந்த திங்கட்கிழமையன்று தனது வாகனத்தில் மாடுகள் சிலவற்றை ஏற்றிக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது வாகனத்தை ‘கௌ ரக்ஷக்’ என்ற பசுக்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திடீரென்று சூழ்ந்துகொண்டனர். வாகனத்தை விட்டு பேலு கான் இறங்கியதும் அவர் மீது கண்மூடித்தனமாகத் தாக்கவும் தொடங்கினர். பேலு கானுக்கு ஆதரவாக வந்த மற்றும் சிலரையும் இந்த கும்பல் சரமாரியாகத் தாக்கியது.
பேலு கான் சுய நினைவிழந்து விழுந்த பின்னரே அந்தக் கும்பல் கலைந்து சென்றது. இதன் பிறகு அங்கிருந்த சிலர் பேலு கானை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பேலு கான், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சீனாவில் மணப்பெண் கிடைக்காததால் வாலிபர் ஒருவர் ரோபோட் எந்திரத்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சீனாவில் தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள வேண்டும் என்று சட்டம் இருந்தது. எனவே, பெரும்பாலான தம்பதியினர் ஆண் குழந்தைகளை மட்டுமே தேர்வு செய்து பெற்றுக்கொண்டனர். இதனால் பெண் குழந்தைகள் பிறப்பு மிக குறைவாக இருந்தது.
அவர்கள் வளர்ந்து ஆளாகி உள்ள நிலையில் தற்போது ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைக்கவில்லை. இதனால் பல ஆண்கள் அதிக வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.
இப்படி பெண் கிடைக்காததால் வாலிபர் ஒருவர் ரோபோட் எந்திரத்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த வாலிபரின் பெயர் செங் ஜியா ஜியா (வயது 31). ரோபோட் என்ஜினீயரான இவர், பல்வேறு ரோபோட்டுகளை உருவாக்கி உள்ளார்.
கடந்த ஆண்டு இளம்பெண்ணை போன்ற தோற்றம் உடைய ரோபோட் ஒன்றை உருவாக்கினார். அதற்கு இங் இங் என்று பெயரிட்டார்.
செங் ஜியா ஜியா திருமணத்துக்கான பெண் தேடி வந்தார். அவருக்கு பெண் கிடைக்கவில்லை. இதனால் அவர் உருவாக்கிய பெண் ரோபோட்டையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கு அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து அவருக்கு காங்சுகு என்ற இடத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் அவரது தாயார் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.
அவர்களுடைய பாரம்பரியப்படி திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணின் முகத்தை மூடி அவரை மணமகன் தூக்கி செல்வது வழக்கம். அதேபோல் ரோபோட்டின் முகத்தை மூடி மணமகன் தூக்கி சென்றார்.
இந்த ரோபோட்டின் எடை 30 கிலோ. இதனால் சில வார்த்தைகளை பேச முடியும். கேட்ட கேள்விகளுக்கு பதிலும் சொல்லும். ஆனாலும், திருமண வாழ்க்கைக்கு தகுந்தபடி செயல்பட ரோபோட்டில் சில மாற்றங்களை செய்ய இருப்பதாக செங் ஜியா ஜியா கூறினார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ.100 கோடியை செலுத்தத் தேவையில்லை என, இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றம் பெப்ரவரி மாதம் 14ம் திகதி அளித்த தீர்ப்பில், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா இறந்துவிட்ட காரணத்தால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் முடிவுக்கு வந்துவிட்டன. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும் அவர்கள் நான்கு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் மற்றும் தலா ரூ.10 கோடி அபராதமாக செலுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டது.
கர்நாடக விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவிக்க கோரியும், அவரது சொத்துக்களை விற்று அவருக்கு விதிக்கபட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க உத்தரவிடக் கோரியும் கர்நாடக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது.
இந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதாவ் ராய் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்க உகந்தது இல்லை என்றும் ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் செலுத்த வேண்டிய அபராதத்தை வசூலிக்க முடியாது என்றும் தெரிவித்து சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும், ஜெயலலிதா குற்றவாளியா இல்லையா என்பதை பரிசீலிக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த சீராய்வு மனுவை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 38 பேர் தமிழகத்தை அடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் தங்கச்சி மடம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 38 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், மீனவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இந்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் டெல்லியில் சந்தித்து வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக 38 மீனவர்களும் இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், கோட்டைப்பட்டி னத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் என 38 பேரும் இலங்கை கடற் படையினரால் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள், கடலோரக் காவல் படைக்கு சொந்தமான ‘ஆயுஷ்’ கப்பல் மூலம் காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கு இந்திய கடலோரக் காவல் படையின் காரைக்கால் மைய கமாண்டர் எஸ்.என்.எம்.பட்நாயக் மீனவர்களை நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமியிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து, மீனவர்களுக்கு உடைகள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை ஆட்சியர் வழங்கினார். மீன்வளத் துறை இணை இயக்குநர் அமல் சேவியர் உடனிருந்தார்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 41 ஆவது நாளாகவும் இன்று (05.04.2017) தொடர்கின்றது.
குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இன்று (05.04.2017) காலை 10 மணியளவில் அனுராதபுரம், வவுனியா, மன்னார் , கிளிநொச்சி , யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மாவட்டங்களின் தாதுப்பொருள் விநியோகத்தர்களின் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் கிரவல், மணல், கல் ஏற்றுவதற்கு அனுமதிப்பத்திரம் வேண்டுமெனத் தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியொன்று இடம்பெற்றது.
எங்களை எங்கள் வாகன லீசிங் கட்ட விடுங்கள், வேண்டும் வேண்டும் கிரவல், மணல், கல் அனுமதிப்பத்திரம் வேண்டும், கிரவல் மணல் கல் அனுமதிப்பத்திரங்களை உடனடியாக வழங்கு என பல்வேறு வாசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியலாயத்திற்கு முன்பாக ஆரம்பமான இப் பேரணி கண்டி வீதி வழியாக மணிக்கூட்டு சந்தியை வந்தடைந்து பஜார் வீதியூடாக கொறவப்பொத்தானை வீதியூடாக வவுனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.
வவுனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்த ஆர்ப்பாட்டகாரர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மகஞர் ஒன்றினையும் அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
இக் கவனயீர்ப்புப் பேரணியில் சுமார் 100க்கு மேற்ப்ட்ட மக்களும் 80க்கு மேற்ப்பட்ட டிப்பர் வாகனங்களும் கலந்து கொண்டிருந்தது.
டிப்பர் சாரதிகளின் போராட்டம் காரணமாக வவுனியா மணிக்கூட்டு சந்தி , ஏ9 வீதி, கொறவப்பொ த்தானை வீதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்ப்ட்டமை குறிப்பிடத்தக்கது.
தமது காணியை ஒப்படைக்குமாறு கோரி இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் இணைந்து விசப் போத்தலுடன் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். இன்று மதியம் இப் போராட்டம் இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, தோணிக்கல், சேக்கிழார் வீதியில் கடந்த 1978 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து வசித்து வந்த குடும்பம் ஒன்று நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1991 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்றிருந்தது.
அதன்பின் அவர்களது காணியில் உள்ள வீட்டில் ஒரு குடும்பம் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த நிலையில் தங்கியிருந்தது. அவர்களால் குறித்த காணியில் பிறிதொரு வீடும் கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த குடும்பம் கிளிநொச்சியில் வசித்து வரும் நிலையில் தமது உறவினர் எனக் கூறி ஒரு குடும்பத்தை குறித்த காணியில் குடியேற்றியுள்ளனர். இந்நிலையில் இடம்பெயர்ந்து இந்தியா சென்ற காணி உரிமையாளரும் அவரது மகனும் கடந்த 23 ஆம் திகதி வவுனியாவிற்கு வந்த நிலையில் தமது காணிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த காணியில் வசிப்பவர்கள் அது தமது காணி எனவும், அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறி அவர்களது காணியையும், அவர்களது வீட்டையும் கொடுக்க மறுத்து வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இருந்து வந்தவரிடம் அவரது காணி தான் என்பதற்கான ஆதாரங்கள் 1976 ஆம் ஆண்டு முதல் உள்ளது.
இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் ஆகியவற்றுக்குச் சென்றும் தமக்கான நீதி கிடைக்கவில்லையென தெரிவித்து தமது காணி வேண்டும் அல்லது இவ்விடத்திலேயே மருத்து குடித்து சாவேன் எனத் தெரிவித்து குறித்த காணி உரிமையாளர் மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன்போது குறித்த தாயையும், அவரது உறவினர்களையும் அழைத்து பேசிய மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் ஆகியோர் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசாவை அழைத்து குறித்த காணி ஏன் உரியவர்களிடம் ஒப்படைக்கபடவில்லை என்பது பற்றி கலந்துரையாடினர்.
இதனையடுத்து மாவட்ட செயலக உத்தியோகத்தர் ஒருவரை குறித்த காணிக்கு அனுப்பி அதன் உண்மை நிலை தொடர்பாக அறியத்தரும்படி மாவட்ட அரச அதிபர் தெரிவித்திருந்தார். ஒரு வார காலத்திற்குள் சரியான முடிவு வழங்கப்படும் என மாவட்ட செயலக அதிகாரியால் வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதேவேளை, நேற்று இரவும் குறித்த தாய் தனது காணியின் முன்பாக மருத்துப் போத்தலுடன் போராடியிருந்தார். அக்காணிக்கு அயலில் உள்ள மக்களும் அவ்விடத்திற்கு வந்து தாம் இங்கு இருந்த காலத்தில் இந்தியாவில் இருந்து வந்தவர்களே இருந்ததாகவும், அது அவர்களது காணி எனவும் தெரிவித்து ஆதரவு வழங்கினர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மருந்துப் போத்தலை மீட்டதுடன் போராட்டத்தை சமரசமாக தீர்த்து வைத்திருந்தனர்.