மன்னாரில் இருந்து ராமர் பாலத்திற்கு விசேட சுற்றுலாப் பயணிகள் படகு சேவை!!

மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்)வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

படகுச் சேவை தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் (22) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் பத்தநாதன் மற்றும் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.எம். கீர்த்தி ஸ்ரீ சந்திரரத்ன மற்றும் பிரதேச செயலாளர்,முப்படையினர், பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மே மாதம் 15 ஆம் திகதி இத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். திட்டத்தை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டு நீண்ட காலமாக தாமதமான இந்த திட்டத்தை வெகு விரைவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நேற்றைய கூட்டத்தில் குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

அதே நேரம் பாதுகாப்பு ஏற்பாடுகள், பயணிகள் எண்ணிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் கடற்படையினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் எனவும் கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணம் தொடர்பில் தீர்மானிப்பது குறித்தும் நேற்றைய கூட்டத்தில் முடிவு காணப்பட்டுள்ளது.

மதபோதகராக மாறிய இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்!!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான மலிந்த வர்ணபுர போதகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நியூசிலாந்தின் போதகராக, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவால் நியமிக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று போதகர் ஜெரோம் பெர்னாண்டோவால் மலிந்த வர்ணபுரவுக்கு குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மலிந்த வர்ணபுர வலது கை வேகச் சுழல் பந்து வீச்சாளராகவும் செயற்பட்டார். 1998 – 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனது முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கினார்.

எனினும் அவர், 2007 ஆம் ஆண்டு வரை இலங்கை துடுப்பாட்ட அணிக்கு விளையாடவில்லை. ஆனால் அதற்கு முன்னர் 1998 பொதுநலவாயப் போட்டிகளின் போது அங்கு சென்ற இலங்கை துடுப்பாட்ட அணியில் இடம்பிடித்திருதார்.

இலங்கை A அணிக்கு விளையாடி பங்களாதேஷ் A அணிக்கு எதிராக பெறப்பட்ட 242 ஓட்டங்கள், இவர் பெற்ற கூடிய ஓட்டங்களாகும்.

வவுனியாவில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது!!

வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை (22) இரவு வீடொன்றை சோதனை செய்த பொலிஸார் அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த 30 போத்தல் சட்டவிரோதசாராயத்தை கைப்பற்றினர்.

அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 48 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் அவரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

விபத்தில் பல்கலைக்கழக பொறியியல் மாணவன் பரிதாபமாக பலி!!

குருணாகல், நிக்கவெரட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக பொறியியல் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதிய விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பன்னிபிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயதான கவிந்த ருக்‌ஷான் விஜேபண்டார என்ற இளைஞர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் உயிரிழந்த இளைஞனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஹெட்டிபொல பகுதியை சேர்ந்த 18 வயதான சதீப சதுரங்க என்ற இளைஞன் ஆபத்தான நிலையில் நிக்கவெரட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிங்கள புத்தாண்டுக்காக ரஸ்நாயக்கபுர பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு, இரண்டு உறவினர்களும் மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டுள்ளது.

மாணவரின் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட அதிகாரி, முதுகுத் தண்டு, விலா எலும்புகள், முதுகெலும்பு மற்றும் உள் உறுப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்பால் மரணம் ஏற்பட்டதாக தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாத்திரை வந்த இளம் காதலர்கள் : மாணவி வீடு செல்ல மறுத்ததால் சிக்கிய ஜோட!!

ஹட்டன் பகுதியில், வீட்டாரிடம் தெரிவிக்காமல் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த பாடசாலை மாணவன் மற்றும் மாணவி, நீதிமன்ற உத்தரவுக்கமைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று (22.04) இடம்பெற்றுள்ளது.

வீட்டாரிடம் தெரிவிக்காமல் ஹட்டன் வீதி வழியாக சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன், மாணவி இருவரும் பொலிஸாரால் ஹட்டன் பதில் நீதவானின் உத்தரவுக்கமைய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எல்பிட்டிய பகுதியிலிருந்து ஹட்டன் வீதி வழியாக சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த குறித்த இருவரும் காதலர்கள் என தெரியவந்துள்ளது.

ஹட்டன் நகரில் சுற்றித்திரிந்த அவர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்து விசாரித்த போது, ​​ இருவரும் தங்கள் வீடுகளுக்கு தெரிவிக்காமல் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்ததாக ஹட்டன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் எல்பிட்டிய பொலிஸாரிடம் விசாரித்த போது, ​​குறித்த மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களுடைய பெற்றோர் பொலிஸில் புகார் அளித்ததை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பின்னர் குறித்த மாணவர்களின் பெற்றோரையும் ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து மாணவர்களை ஒப்படைத்த போது, மாணவி தனது பெற்றோருடன் வீட்டிற்கு செல்ல மறுத்ததால், ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் குறித்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சூதாட்ட விடுதியில் இளைஞன் கொலை : நடந்தது என்ன?

புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞனின் மாமாவும் அத்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஆனமடுவ, வடத்த, ஹல்மில்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை செய்யப்பட்ட இளைஞனின் தாயின் இளைய சகோதரனும் அவரது மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞனின் மாமா நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் இளைஞனின் மாமாவும் அத்தையும் ஆனமடுவ பிரதேசத்தில் சூதாட்ட விடுதி ஒன்றையும் நடத்தி வந்துள்ளனர். சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட இளைஞன் தனது மாமாவின் சூதாட்ட விடுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது இளைஞனுக்கும் மாமாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் தகராறாக மாறியுள்ளது.

தகராறின் போது கோபமடைந்த மாமா, தனது சகோதரியின் மகன் என்றும் பார்க்காமல் இளைஞனை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.

வாய்க்காலுக்குள் கார் புரண்டு வீழ்ந்து விபத்து!!

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் வாய்க்காலுக்குள் காரொன்று புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று (21.04) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் காரின் சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

கல்முனையிலிருந்து – திருகோணமலை நோக்கி பயணித்த குறித்த காரில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக காரானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வாய்க்காலினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பு : காரணத்தை வெளியிட்ட அதிகாரி!!

இலங்கையில் இந்த வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 60,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல், ஆபரணங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கையால் கடந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 15,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சபையின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.

ஒரு வார காலப்பகுதியில் மட்டும் தங்கத்தின் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருடத்தின் 4 மாதங்களில் 60000 ரூபாய் வரை தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு பிரதான காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தங்கத்தின் கோரிக்கை அதிகரித்துள்ளமையினால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.

இதேவேளை, இந்த ஆண்டு இறுதிக்குள் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 4,000 அமெரிக்க டொலர்களாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறைய வேண்டுமெனில் நாட்டின் மத்திய வங்கி தங்க இருப்புக்களை வெளியிட வேண்டும் என உதவி பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

குருணாகல் – தம்புள்ளை வீதியில் விபத்து : இளைஞன் பலி : மூவர் காயம்!!

குருணாகல் – தம்புள்ளை வீதியில் தம்படவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தொரட்டியாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (22.04) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளையிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த லொறி ஒன்று குருணாகலில் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, தம்புள்ளையிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த லொறியில் இருந்த இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் யட்டிகல்பொத்த, கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஆவார். இந்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொரட்டியாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

45 கோடி முதல் 13 கோடி வருமானம் : இந்தியாவின் டொப் 6 பெண் யூடியூபர்கள்!!

யூடியூப் இன்று இந்தியாவில் ஒரு புரட்சிகரமான டிஜிட்டல் தளமாக உருவெடுத்துள்ளது. பொழுதுபோக்கு, கல்வி, மற்றும் பலதரப்பட்ட உள்ளடக்கங்களை வழங்குவதன் மூலம் கோடிக்கணக்கானோரை சென்றடைகிறது.

இந்த டிஜிட்டல் யுகத்தில், பல திறமையான இந்தியப் பெண்கள் யூடியூப் சேனல்களை உருவாக்கி, அதன் மூலம் மிகப்பெரிய வருமானம் ஈட்டி சாதனை படைத்து வருகின்றனர்.

2024 ஆம் ஆண்டின் படி, இந்தியாவில் அதிக சம்பாதிக்கும் டாப் 6 பெண் யூடியூபர்களைப் பற்றி இந்த விரிவான கட்டுரையில் பார்க்கலாம்.

ஸ்ருதி அர்ஜுன் ஆனந்த்

அழகு, ஒப்பனை மற்றும் சரும பராமரிப்பு தொடர்பான வீடியோக்களை வழங்குவதில் முதலிடத்தில் இருப்பவர் ஸ்ருதி அர்ஜுன் ஆனந்த். இவரது சேனலுக்கு 1.20 கோடிக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

அழகு குறிப்புகள், மேக்கப் tutorials மற்றும் தயாரிப்பு விமர்சனங்கள் மூலம் இவர் ஆண்டுக்கு சுமார் ₹ 45 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிஷா மதுலிகா

சமையல் கலையில் தனது தனித்துவமான திறமையால் லட்சக்கணக்கான இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்தவர் நிஷா மதுலிகா. வீட்டில் எளிமையாக செய்யக்கூடிய சுவையான உணவு recipes-ஐ தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார்.

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது ஆண்டு வருமானம் சுமார் ₹ 43 கோடி.

கோமல் பாண்டே

ஃபேஷன், ஸ்டைல் மற்றும் லைஃப்ஸ்டைல் தொடர்பான வீடியோக்களை 2017 ஆம் ஆண்டு முதல் பதிவிட்டு வரும் கோமல் பாண்டே, இளைஞர்களின் ஃபேஷன் தேர்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இவரது தனித்துவமான உடை அலங்கார பாணி மற்றும் ஸ்டைலிங் டிப்ஸ் பலரையும் கவர்ந்துள்ளது. இவர் ஆண்டுக்கு சுமார் ₹ 30 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார்.

பிரஜக்தா கோலி

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் வேடிக்கையான மற்றும் நகைச்சுவையான சம்பவங்களை தனது கலகலப்பான வீடியோக்கள் மூலம் பிரதிபலித்து வருகிறார் பிரஜக்தா கோலி.

இவரது நகைச்சுவை உணர்வு மற்றும் யதார்த்தமான நடிப்பு பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இவர் ஆண்டுக்கு சுமார் ₹ 16 கோடி வரை சம்பாதிக்கிறார்.

அன்சிதா தீக்சித்

நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு வீடியோக்களை பதிவேற்றுவதில் அன்சிதா தீக்சித் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளார்.

இவரது நகைச்சுவை பாணி மற்றும் துணிச்சலான கருத்துக்கள் இளைஞர்களிடையே மிகவும் பிரபலம். இவர் தனது யூடியூப் சேனல் மூலம் ஆண்டுக்கு சுமார் ₹ 16 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார்.

நிகாரிகா சிங்

நிகாரிகா சிங் ‘கேப்டன் நிக்’ என்ற தனது யூடியூப் சேனலில் நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான கதைகளை தனது தனித்துவமான பாணியில் சொல்வதன் மூலம் பார்வையாளர்களைக் கட்டிப்போடுகிறார்.

இவரது கதை சொல்லும் திறமை மற்றும் நகைச்சுவை உணர்வு இவருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுத் தந்துள்ளது. இவரது ஆண்டு வருமானம் சுமார் ₹ 13 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

Chat GPTஇல் இனி ப்ளீஸ்- தேங்க் யூ கூற வேண்டாம் : விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!!

சமீபத்தில், OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் எல்ட்மேன் கூறிய ஒரு கூற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ChatGPT இன் AI சாட்போட்களுக்கு “தயவுசெய்து” மற்றும் “நன்றி” என்று பணிவுடன் கூறுபவர்களால் தனக்கு நிறைய செலவாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓபன் ஏஐ துறையைப் பொறுத்தவரை இப்போது செட்ஜிபிடி தான் முன்னிலை வகித்து வருகிறது.

ஏஐ துறையில் அவர்கள் கொண்டு வரும் அப்டேட்ஸ்கள் பயனாளர்களை கவரும் வகையில் கொண்டு வரப்படுகிறது. இதனால் செட்ஜிபிடி பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதேநேரம் பயனாளர்கள் செய்யும் சில வேலைகளால் செட் ஜிபிடியின் செலவும் அதிகரித்து வருகிறதாம்.

Please, Thank You

இந்நிலையில், நாம் செட் ஜிபிடியிடம் பொதுவாகக் கேள்விகளுடன் சேர்த்து அனுப்பும் ப்ளீஸ் மற்றும் தேங் யூ உள்ளிட்ட வார்த்தைகளால் செட்ஜிபிடிக்கு பல மில்லியன் டொலர் செலவாவதாக ஓபன் ஏஐ தலைவர் சாம் எல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

மேலும், பதில்கள் தருவது இயந்திரம் என்பதால் அதற்கு Please, Thank You போன்ற மரியாதைகள் தேவையில்லை. இதற்கென குறிப்பிட்ட மின்னாற்றல் தேவைப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இளம் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி காட்டிற்கு நடுவே பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்!!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தர்மத்துப்பட்டி – பன்றிமலை அமைதி சோலை அருகே 60 அடி பள்ளத்தில் (13.04.25) இரவு 22 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் இருப்பதாக அங்கு கால்நடை மேய்ச்சல் செய்பவர்கள் கன்னிவாடி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக கன்னிவாடி காவல் துறையினர் வனப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி கார்த்திகேயன் மேற்பார்வையில் கன்னிவாடி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிக்குழு அமைத்து விசாரணை நடைபெற்றது.

சம்பவம் நடந்த பகுதியில் வழித்தடத்தில் இருக்கும் கிராமத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணையை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கொல்லப்பட்ட இளம்பெண் மாரியம்மாள் (22) என்றும் இவர் பெற்றோர் யாரும் இல்லாததால் ஆசிரமத்தில் வளர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சாணார்பட்டி, எமக்கல்லாபுரத்தை சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்ததாகவும், இதனால் இரண்டு முறை கர்ப்பம் அடைந்ததாகவும் அதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மாரியம்மாள் பிரவீனை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாரியம்மாளை காதலன் பிரவீன் அமைதிச் சோலை அருகே அழைத்துச் சென்று கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் பிரவினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இளம் பெண் நடுக்காட்டில் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல் கைகூடாதததால் உயிரை விட்ட மாணவன்!

அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் கடந்த சனிக்கிழமை (20) அன்று தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கே.எம். தருஷ தில்ஷான் காவிந்த என்ற 19 வயதுடைய மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவனின், காதல் உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றது.

கடிதம் ஒன்றை எழுதி வைத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிரடி மாற்றம் காணும் தங்கத்தின் விலை!!

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாக அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது. அதன்படி, இன்றைய தினம் (22.04) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,035,976 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 36,550 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 292,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 33,510 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 268,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,990 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 255,850 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 277,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 255,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களே அவதானம் : காலநிலை மாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை, மக்களின் உடல்நலத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ,மக்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்களில் தீவின் சில பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் கடுமையான சூரிய ஒளி காரணமாக தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக வெளியில் வேலை செய்பவர்கள் மற்றும் விளையாடுபவர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சூரிய ஒளியில் நீண்ட நேரம் வெளிப்படுவது நீரிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால், போதுமான அளவு சுத்தமான தண்ணீர் அல்லது ஏதாவது ஒரு திரவத்தை குடிப்பது முக்கியம்.

அத்தோடு, இந்த நாட்களில் சில பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

மேலும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவுவதற்கு இது ஒரு காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பஸ் – லொறி மோதி விபத்து : இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர் காயம்!!

நிட்டம்புவை – கிரிந்திவெல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்றுள்ளது. இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நிட்டம்புவையிலிருந்து கிரிந்திவெல நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது, பஸ் சாரதியும் அதில் பயணித்த 21 இராணுவ சிப்பாய்களும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.