மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று (27 ) காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது. மன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவிற்குப் பின் பகுதியில் உள்ள வீடொன்றே தீப்பற்றி எரிந்தது.
இதனையடுத்து அயலில் உள்ள மக்கள் விரைவாகச் செய்யப்பட்டதனால் தீப்பரவல் அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவ முன்னதாக அணைக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் மன்னார் மின்சார சபை, மன்னார் நகர சபையின் தீயணைப்பு வாகனம் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன் முழுமையாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
குறித்த தீ பரவல் காரணமாக எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லையெனினும் வீட்டில் காணப்பட்ட உடமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கிரகங்களின் அரிய சீரமைப்பு இந்த நாட்களில் வானில் நடைபெற்று வருகின்றது.
ஜனவரி 29 மற்றும் பெப்ரவரி நடுப்பகுதி வரை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு 90 நிமிடங்களுக்குள் இந்த வான அணிவகுப்பை சிறப்பாகக் காணலாம்
என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் 6 கிரகங்களின் அரிய சீரமைப்பின் கண்கவர் காட்சியை அவதானிக்க முடியும். வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் இவ்வாறு அவதானிக்கப்படுவதாகவும் வெற்றுக் கண்ணால் பார்க்கக்கூடிய அளவுக்கு பிரகாசமாக இருப்பதைக் காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி பெல்மதுளை பகுதியில் 19 வயது பாடசாலை மாணவியை மதுபானம் அருந்த வைத்த மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபானம் அருந்திய மாணவி சிகிச்சைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி காரில் வந்து இறங்கும் போது, போதையில் நிலை தடுமாறி வந்துள்ளார். அத்துடன், காரில் இருந்த இன்னொரு நபரும் போதையில் இருந்துள்ளார்.
இதன்போது, வீதியில் நின்றுகொண்டிருந்த குழு ஒன்று விசாரிக்கையில், போதையில் இருந்த மற்றைய நபர் மாணவியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த குழுவினர் ஆசிரியரை தாக்கியதுடன் அவரை பெல்மதுளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து, மாணவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் நடைபெற்ற I Am Model Search Kids International – 2025 அழகுப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சிறுமி முதல் பரிசை வென்றுள்ளார்.
இந்த போட்டியில் 16 நாடுகளைச் சேர்ந்த 42 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் இலங்கை சிறுமி முதலிடத்தைப் பெற்றுள்ளார். கொழும்பு வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 8 வயதாக ஏஞ்சலா விமலசூரிய என்ற சிறுமியே விருது பெற்றுள்ளார்.
கடந்த 24ஆம் திகதி தாய்லாந்தின் பேங்கொக்கில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற ஏஞ்சலா நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் ஏஞ்சலா நேற்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை வரவேற்க அவரது பயிற்சியாளர் உட்பட ஒரு குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளவத்தையில் சென் லோரன்ஸ் பாடசாலையில் நான்காம் தரத்தில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாய் ஒன்றை தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் வடமாகாணம் – மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், ஒட்டுசுட்டானில் உள்ள இணக்கச்சபை ஒன்றில் விசித்திரமான தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் அதில் நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பதிவு ஒன்று அதிகம் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாங்குளத்தை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இணக்கச்சபை
ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில், பெண் ஒருவர் தனது ஆட்டினை நாய் ஒன்று கடித்து விட்டதாக கூறி, முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்போது, இணக்கசபையில் இருந்த மூன்று நீதவான்கள், குறித்த நாயை தூக்கிலிட்டு கொலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன், நாயை தூக்கிலிட்டு கொலை செய்த பின்னர் அதனை புகைப்படம் எடுத்தும் தமக்கு அனுப்பி வைக்குமாறு குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த பெண் அந்நாயின் கழுத்தை மரமொன்றில், கயிற்றினால் கட்டி, கொலை செய்துள்ளதுடன் அதனை புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் கவனத்திற்கு ந்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
மனிதாபிமானமற்ற வகையில், ஐந்தறிவுடைய உயிரினம் ஒன்றுக்கு இவ்வாறான ஒரு தண்டனை வழங்கப்பட்டுள்ளமை கண்டிக்கப்பட வேண்டிய விடயம் எனவும் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதேவேளை, இந்த சம்பவத்தில் தொடர்பானவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறும் பொதுமக்கள் கோரி வந்தனர்.
மனிதாபிமானமற்ற செயல்
இதனை தொடர்ந்து, மாங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 48 வயதுடைய பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907ஆம் ஆண்டு 13ஆம் இலக்க விலங்குகளுக்கு வன்கொடுமை செய்வதைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக பொதுமக்கள் மத்தியில் இவ்வாறான மனிதாபிமானமற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது சமூக சீர்குலைவுகளை எடுத்துக் காட்டும் வகையில், உள்ளது.
பொதுவாகவே, விலங்குகள், ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றன. அதிலும், அவற்றை பராமரிப்பதன் மூலமே உலகில் உயிர் பல்வகைமை மற்றும் சமநிலையை பேண முடியும்.
அத்துடன், மனிதாபிமான முறையில், அவற்றிற்கு ஏற்படும் தீங்குகள் தொடர்பில் மனிதர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றாகும்.
எனவே, இது போன்ற செயல்களை தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் விழிப்புடனும், அவதானத்துடனும் இருப்பது மிக அவசியமானதொன்றாகும்.
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில் வீதியைவிட்டு விலகிய வான் மின்சாரத் தூணுடன் மோதியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து நேற்றையதினம்(26.01.2025) இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது, மின்சார தூண் உடைந்து வீழ்ந்ததுடன் வான் பலத்த சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய மாநிலம் ஒடிசாவில் இளம்பெண்ணொருவர், ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்தார். ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நம்ரதா பெஹெரா (20). இவர் தனது தோழிகளுடன் பூரி-பார்பில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார்.
ரயில் சென்றுகொண்டிருந்தபோது நம்ரதா செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர் தடுமாறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனை கவனித்த ரயில்வே ஊழியர் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து நம்ரதாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
முதியோர் இல்லத்தில் உருவான காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்ற சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய மாநிலமான அசாம், கோலாகட் மாவட்டத்தில் உள்ள போககாட் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பத்மேஸ்வர் கோலா (71). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனது 2 சகோதரர்களின் ஆதரவில் இருந்து கொண்டு வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருடைய இரண்டு சகோதரர்களும் இறந்து விட்டதால் பெல்டோலா பகுதியிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
அதேபோல், சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேஜ்பூரை சேர்ந்தவர் ஜெயபிரபா (65). இவருக்கும் குடும்ப சூழ்நிலை காரணமாக இன்னும் திருமணமாகவில்லை. இவரும், கவுகாத்தியில் மத்காரியா பகுதியிலுள்ள பெண்களுக்கான முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த வருடம் மார்ச் மாதம் சந்தித்துள்ளனர். இதில், பத்மேஸ்வரருக்கு நல்ல குரல் வளம் இருப்பதால் இந்தி பாடல்களை அடிக்கடி பாடுவார். இது ஜெயபிரபாவுக்கு மிகவும் பிடிக்கவே, இருவரும் விரும்ப ஆரம்பித்துள்ளனர்.
இந்த விடயம், இரு முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு தெரியவரவே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.
பின்னர், இத்திருமணத்தை நடத்தி வைக்க மோனாலிசா சொசைட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் விருப்பம் தெரிவித்தது. இதையடுத்து, இருவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து முறைப்படியே திருமண சடங்குகள் அனைத்தும் நடந்தன.
இது தொடர்பாக தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான உத்பால் ஹர்சவர்தன் கூறுகையில், “பொது நிதியுதவியுடன் இந்த திருமணத்தை செய்து முடித்துள்ளோம்.
திருமணத்திற்கு வந்த 4000 பேருக்கு உணவு பரிமாறியுள்ளோம். அவர்கள் மணமக்களை வாழ்த்தி சென்றனர்” என்றார்.
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் ஜிலேலகுடா, நியூ வெங்கட்ராமா காலனியில் வசித்து வருபவர் 39 வயது குருமூர்த்தி. முன்னாள் ராணுவ வீரரான இவரது மனைவி 35 வயது வெங்கட மாதவி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற குரு மூர்த்தி காஞ்சனப்பேட்டையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் குருமூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து அடிக்கடி கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குருமூர்த்தி மனைவியை கொலை செய்தார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டினார்.
எலும்புகளை தனியாகவும், சதைகளை தனியாகவும் பிரித்தெடுத்தார். அவற்றை குக்கரில் போட்டு வேக வைத்தார். வேகவைத்த சதைகள், எலும்பு துண்டுகளை ஜில்லேலவில் உள்ள குளத்தில் வீசினார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்தனர். குருமூர்த்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த குருமூர்த்தி, உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்துள்ளார். இந்த உடலை எப்படி அழிப்பது என்பது குறித்து செல்போனில் யூடியூப் மற்றும் ஆங்கில படங்களை பார்த்து எலும்புகளை கரைப்பது எப்படி என வீடியோக்களை பார்த்தார்.
இதனை தொடர்ந்து நாய் ஒன்றை கொன்று சோதனை செய்ய முடிவு செய்தார். அவரது வீட்டின் அருகே சுற்றி திரிந்து கொண்டிருந்த நாய்க்கு உணவளித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
உள்ளே வந்த நாயை அடித்துக்கொன்று துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் நாய் கறி எலும்புகளை குக்கரில் வேகவைத்து, வெயிலில் காயவைத்து பொடிப்பொடியாக்கி கால்வாய் தண்ணீரில் கரைத்துள்ளார்.
அதே பாணியில் மனைவியை வெட்டி சமைத்து தண்ணீரில் வீசியதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
யாழ். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தொடருந்து ஓமந்தை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
இந்த தொடருந்தின் ஒரு பெட்டி 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தடம் புரள்வுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், தொடருந்தின் தடம்புரள்வை சரிசெய்யும் பணியில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மஹாவவிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் பாதை பழுதுபார்க்கப்பட்டு திறக்கப்பட்ட பின்னர் பதிவான முதல் ரயில் தடம் புரண்ட சம்பவம் இதுவாகும்.
சிங்கள யுவதியை காதலித்த தமிழ் இளைஞனின் தந்தையை யுவதியின் தாத்தா கொலை செய்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (26.01) இடம் பெற்ற இச்சம்பவத்தில் 03 பிள்ளைகளின் தந்தையான ஜோசப் இராஜேந்திர குமார் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஓபநாயக்க பொலிஸ் பிரிவிலுள்ள ஹுனுவலை தோட்டத்தில் இரு இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து அப்பகுதி கிராம சேவையாளரின் தலைமையில் பிரதான வீதியொன்றை “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டத்தின் கீழ் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
சுமார் 100 பேர் கலந்து கொண்ட சிரமதானத்தில் சிங்கள் யுவதி ஒருவரை காதலித்த , தோட்ட தமிழ் இளைஞர் ஒருவரின் தந்தையும் யுவதியின் தாத்தாவும் கலந்து கொண்டுள்ளனர் .
இந்நிலையில் அவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியது. இதன் போது பெண்ணின் தாத்தா சிரமதான பணிக்கு கொண்டு வந்த மண் வெட்டியால் தலையில் தாக்கியதில் தமிழ் இளைஞனின் தந்தை தலையில் பலத்த காயம் மேற்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்த போதிலும் பெண்ணின் தாத்தா மட்டுமே நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
திருமணம் செய்யாது காதல் ஜோடி, காதலன் வீட்டில் பல மாதங்களாக தங்கி இருப்பது தொடர்பில் பெண்ணின் தாத்தா வினவிய போதே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பிரேத பரிசோதனைக்காக பிரேதம் காவத்தை பொது வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
பிரேசில் நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானமொன்றின் வால்பகுதியில் மின்னல் தாக்கும் காணொளியொன்று தற்போது இணையத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பிரேசிலின் – பவுலோ நகரில் குவாருலோஸ் விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது.
அப்போது, வானில் இருந்து மின்னல் ஒன்று விமானத்தின் வால் பகுதியை தாக்கியுள்ளது.இதனை விமான பயணியான பெர்ன்ஹார்டு வார் என்பவர் காணொளி எடுத்துள்ளார்.
இதுபற்றி பெர்ன்ஹார்டு வார் கூறும்போது, பெரிய புயல் ஒன்று வீசியதால், விமானங்கள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நாங்களும் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்திருந்தோம்.
இது புகைப்படம் எடுப்பதற்கான சரியான தருணம் என உணர்ந்தேன். அப்போது, நாங்கள் ஜன்னல் வழியே வெளியே பார்த்து கொண்டிருந்தபோது, விமான நிலைய தரை பகுதியருகே மின்னல் தாக்கியது. அது விமான வால் பகுதியையும் தாக்கியபோது படம் பிடித்தேன் என தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், ஆண்டுக்கு சராசரியாக ஓரிரு முறை விமானம் மீது மின்னல் தாக்குதல் ஏற்படும்.
மின்னல் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் விமானம் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு உள்ளது. எனினும், மின்னல் தாக்கிய பின்னர், அந்த விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், விமானத்தின் புறப்பட தாமதடைந்ததுடன் பயணிகளும் சரியான நேரத்தில் புறப்பட முடியாமல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சரிசெய்யப்பட்ட பிறகு 6 மணி நேரம் கழித்து விமானம் பயணத்திற்குப் புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
DRAMATIC moment lightning strikes tail of plane multiple times at São Paulo-Guarulhos Airport in Brazil pic.twitter.com/rZDnTA83Xt
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஐரோப்பா ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த இருவர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை குயில்வத்த பகுதியில் நேற்று (26) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாடகை அடிப்படையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கரவண்டியில் பயணித்த குறித்த இருவரில் ஒருவர் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகவேகத்தில் முச்சக்கவண்டியை செலுத்தியதாலேயே, முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த ஐரோப்பா ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த இருவரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,
விபத்தில் முச்சக்கரவண்டி கடும் சேதமடைந்துள்ளதாகவும் வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன கமகே தெரிவித்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவருவதற்கு முன்னர் அதில் தோற்றிய மாணவன் உயிரிழந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது.
பெறுபேறுகள் வெளியாவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்த மாணவன் 159 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
பலாங்கொடை, வதுகாரகந்த பகுதியை சேர்ந்த சுபுன் சதருவன் என்ற இந்த மாணவன் பலாங்கொடை வலேபொட தொரவெலகந்த பாடசாலையில் கல்வி பயின்றுள்ளார்.
வெளியான பெறுபேறுகளுக்கு அமைய அந்தப் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரேயொரு மாணவர் அவராகும்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து, தாயார் குசுமா பொடிமணிகே தகவல் வெளியிட்டுள்ளார்.
“என் மகன் இந்த முறை புலமைப்பரிசில் பரீட்சை எழுதி முடிவுகளுக்காக காத்திருந்தார். புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய பின்னர் 160 மதிப்பெண்களை பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
எனினும் தேர்வு முடிவுகள் வருவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, அவர் திடீரென நோய்வாய்ப்பட்டு எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்.
முடிவுகளைப் பார்க்கும்போது, அவர் 159 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையில் சித்தியடைந்த ஒரே மாணவன் என் மகன்தான். எனினும் இந்த முடிவில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி – அஹுங்கல்ல கடற்கரையில் நீரில் மூழ்கிய ரஷ்ய தம்பதி ஒன்றை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (25.01.2025) இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் ரஷ்யாவை சேர்ந்த 51 வயது ஆணும் 46 வயது பெண்ணும் கடலில் நீந்திக் கொண்டிருந்த வேளை பலமான அலையில் சிக்கியுள்ளனர்.
இதன்போது, பொலிஸ் அதிகாரி மனோஜ் அரியரத்னா மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சங்கீத் மற்றும் துலாஞ்சயா இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இவ்வாறான பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் உட்பட நீச்சல் வீரர்கள் வலுவான நீரோட்டம் உள்ள பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருகோணமலையில் பாதசாரிகள் கடவையால் வீதியை கடந்தபோது மோட்டார் சைக்கிளால் விபத்துண்டு வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் திருகோணமலையின் பிரபல ஆசிரியை ஒருவரே நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை இந்த விபத்தை ஏற்படுத்தியவரும் உயிரிழந்தவரிடம் கல்வி கற்ற மாணவர் என கூறப்படுகின்றது. இந்நிலையில் ஆசிரியையின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.