ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மெரீனாவில் மக்களுடன் 4 நாட்களாக இரவு பகலாக லாரன்ஸ் இருந்ததால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
ஒருவாரம் சிகிச்சை பெற வேண்டும் என்று வைத்தியர்கள் கூறினர். ஆனால் “போராட்ட களத்தில் நானும் இருக்க வேண்டும். அந்த மக்கள் முகங்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். உணவு மற்றும் குடிநீர், பெண்களுக்காக கழிப்பறை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். போராட்டம் வெற்றி பெற்ற பிறகு வந்து ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றேன்” என்று கூறி மருத்துவ மனையில் இருந்து மீண்டும் மெரீனாவுக்கு ராகவா லோரன்ஸ் சென்றார்.
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய இருவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா, ஓமந்தை, பெரியமடு பகுதியில் பெறுமதியான முதிரை மரங்களை வெட்டிய இருவர் ஓமந்தை பகுதி வனவளபாதுகாப்பு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 18 முதிரை மரக்குற்றிகள், மரம் வெட்டும் இயந்திரம், கோடரி என்பன கைப்பற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த இரு நபர்களையும் வவுனியா நீதிபதியின் முன் முன்னிலைப்படுத்திய போதே அவர்கள் இருவருக்கும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
48 மற்றும் 27 வயதுடைய புளியங்குளம், பனிக்கநீராவி மற்றும் ஓமந்தை, பெரியமடு பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 27 வயதுடைய நபர் மீது மரக்கடத்தல் தொடர்பில் கனராயன்குளம் பொலிஸ் நிலையத்திலும் முன்னர் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இச் சட்டவிரோத மரம் வெட்டும் நடவடிக்கையை ஓமந்தை, பெரியமடு பகுதி விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஐ.பி ரஞ்சன தலைமையிலான குழுவினரும் மற்றும் ஓமந்தை பகுதி வனவளபாதுகாப்பு பிரிவியைச் சேர்ந்த ரி.வி.சமன்பிரியந்த, எல்.என்.ஏ.நுவன்சமீர, லைஜீரு உதார உள்ளிட்ட குழுவினரே முறியடித்திருந்தனர்.
தமிழர்களின் தீவிர போராட்டத்தின் பலனாக நாளை காலை ஜல்லிக்கட்டு நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வரே வந்தாலும் நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு இல்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அறிவித்துள்ளனர்.
நிரந்தர அனுமதி கிடைத்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அலங்காநல்லூர் மக்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்களும் ஜல்லிக்கட்டு பிரச்னையில் அவசர சட்டம் வேண்டாம், நிரந்தர சட்டம் வேண்டும், நிரந்தர சட்டம் பிறப்பிக்கப்படும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
எனினும், தமிழக அரசு நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில் தற்போது நடக்குமா என்ற நிலை உருவாகியுள்ளது.
ஜல்லிக்கட்டிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஒருங்கிணைந்து அவசரச் சட்டம் கொண்டு வருவதை உறுதி செய்துள்ளன.
குறித்த அவசர சட்டம் நேற்று கொண்டு வந்தபோதும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக அவசர சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.
இதனடிப்படையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை பத்து மணியளவில் அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும். மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என 16ம் திகதி மதுரை அலங்காநல்லுரில் வலைதளம் மூலம் இணைந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறாததால், அங்கேயே உண்ணாவிரதம் இருந்தனர்.
24 மணிநேரம் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் 300 பேரை போலீஸார் கைது செய்தனர். சில இடங்களில் தடியடி நடத்தப்பட்டது.
இந்த தகவல் காட்டு தீயாக பரவியது. இன்று தமிழகம் மட்டும் இல்லாமல் உலக முழுவதும் தமிழர்கள் பல லட்சம் பேர் வீதிக்கு வந்து ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகின்றனர்.
சென்னை மெரினாவில் இன்று கட்டுக்கடங்காத பல லட்சம் தமிழர்கள் கூடி ஐந்தாவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த லட்சம் மாணவர்கள் கூடுவதற்கு வித்தாக இருந்தவர்கள் மேலே படத்திலுள்ள 17 பேர் தான். இவர்கள் விதைத்த விதை இன்று மெரினாவில் மணல் தெரியாமல், மனித தலைகளாக தெரியும் அளவில் வித்திட்ட இவர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
வவுனியாவில் இன்று (21.01.2017) காலை பழைய பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக இரு பேருந்துகள் மோதிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கல்முனையிலிருந்து முல்லைத்தீவு செல்ல இருந்த பேருந்தும் பழைய பேருந்து தரிப்பிடத்திலிருந்து பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட பேருந்தும் ஒன்றை ஒன்று மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டு பேருந்துகளும் இ.போ.சபைக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் இன்று (21.01.2017) மதியம் 2 மணியளவில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயனித்துகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றை முச்சக்கர வண்டி ஒன்று முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் கனரக வாகனத்தின் பிற்பகுதியில் மோதுண்டு எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் முச்சக்கர வண்டி மோதியதில் பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள வாகன திருத்தும் நிலையத்தில் பணிபுரியும் ரூபன் என்பவரே பலத்த காயங்களுக்கு உள்ளனதால் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மது போதையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டின் பெயரில் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு கையொப்பமிட்டு அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை நேற்று (20.01.2017 வெள்ளிக்கிழமை) அனுப்பி வைத்துள்ளனர்.
வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக குறித்த சங்கத்தின் வவுனியா மாவட்டத்தலைவி திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை அறிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தின் முழுவிவரமும் வருமாறு:
21.01.2017
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள எமது இறுதி முடிவை தங்களுக்கு அறியப்படுத்தல் தொடர்பாக,
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினராகிய நாங்கள், சிறீலங்கா அரச படைகள் மற்றும் அரச துணை ஆயுதகுழுக்களால் எமது உறவுகள் கடத்திச்செல்லப்பட்டமையை கண்கண்ட சாட்சிகளாக உள்ளோம்.
அரசினால் நியமிக்கப்பட்ட பலதரப்பட்ட ஆணைகுழுக்கள், உள்ளூர் மற்றும் சர்வதே மனித உரிமை அமைப்புகள், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், தமிழ் மக்களின் அரசியல் அதிகாரம் பெற்றுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு, சர்வதேச சமுகம் என்று சகல தரப்புகளிடமும் முறையிட்டும், வருடங்கள் பல கடந்த நிலையிலும் எமது உறவினர்கள் விடுவிக்கப்படவில்லை.
இந்தநிலையில், சாத்வீக ரீதியாக சகல கவனவீர்ப்பு மற்றும் அழுத்த போராட்டங்களை நடத்தியும், எமது உறவினர்கள் தொடர்பில் உரிய தீர்வு எமக்கு வழங்கப்படவில்லை. ஆகவே வேறுவழியின்றி பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுப்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.
01. எமது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா?
02. உயிருடன் இருந்தால், அவர்கள் எந்த இரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்?
03. உயிருடன் இல்லாவிட்டால், அவர்களுக்கு என்ன நடந்தது? யாரால்? எப்படி? கொலைசெய்யப்பட்டு, எங்கே புதைக்கப்பட்டுள்ளார்கள்? என்பவற்றை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.
04. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள எமது உறவுகள் உயிரோடு இருப்பின், அவர்கள் தத்தமது குடும்பத்தினரோடு இணைந்து வாழ்வதற்கு உடனடியாக வழி விடுவதோடு, சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
குறித்த எமது கோரிக்கைகள் அனைத்தும் நிபந்தனைகள் ஏதுமின்றி தங்களால் நிறைவேற்றப்படும் வரை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். நாங்கள் உயிர் இழந்தால் அதற்குரிய முழுப்பொறுப்பையும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்.
இப்படிக்கு,
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைமைக்குழு மற்றும் உறுப்பினர்கள்.
வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று (20.01.2017) பொங்கல் நிகழ்வுகள் பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் நடைபெற்றது.
வவுனியா பிரதேச செயலகத்தின் வளாக முற்றலில் பொங்கல் பானை வைத்து பிரதேச செயலகத்தின உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள் அரிசியிட்டு பொங்கல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மற்றும் இறை வணக்கத்துடன் பிரதேசசெயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் மாணவர்களின் இசைக்கச்சேரி மற்றும் சிதம்பரபுரம் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பொங்கல் நிகழ்வில் எமது கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததுடன் பாடகர் கந்தப்பு ஜெயந்தனால் எழுதி பாடப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பாடல் ஒன்றும் கந்தப்பு ஜயந்தனால் பாடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பிரதேச செயலகத்தில் வளாகத்தில் அமைந்துள்ள கோவிலில் பூஜை வழிபாடுகள் நடைபெற்றதுடன் பொங்கல் பிரசாதமும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர்களான வீ.பிரதீபன் மற்றும் இ.நித்தியானந்தன், தமிழ் மணி அகளங்கள், கலாபூசனம் சிவசோதி, தமிழ் விருட்சம் தலைவர் மற்றும் செயலாளரான சந்திரகுமார் (கண்ணன்) மற்றும் மாணிக்கன்ஜெகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தி வந்த பசு மிருக வைத்தியரின் அசமந்த போக்கால் இறந்துள்ளது.
மகாறம்பைக்குளம் கல்வெட்டுசந்தி பிரதேசத்தை சேர்ந்த வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பசு ஒன்று கடந்த திங்கட்கிழமை காலை கன்று ஈனுவதற்காக இருந்த போதும் அது ஈனவில்லை.
கன்று இடையில் நின்று விட்டது. இது தொடர்பில் உடனடியாக மிருக வைத்தியரை நாடியும் அவசரமாக வர வேண்டும் என்று விடயத்தை கூறியும் அதனை குறித்த மிருக வைத்தியர் பொருட்படுத்தவில்லை.
பல மணி நேரம் மிருக வைத்தியசாலையில் காத்திருந்த குடும்பத்தவர் பின்னர் வீட்டிற்குச் சென்றுள்ளார். வைத்தியரின் சிகிச்சையின்றி மாலையளவில் பசு இறந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தவர் கருத்து தெரிவிக்கையில்,
இறந்த பசுவிலிருந்து ஒரு நாளைக்கு 6 லீட்டர் பால் கறந்து கொடுப்பதாகவும், வாழ்வாதாரமாக பசுவை நம்பியே வாழ்ந்து வருகின்றோம்.
இவ்வாறான வைத்தியர்கள் இருக்கும்வரை நாம் மீண்டும் மீண்டும் கஷ்டத்தின் மத்தியிலே வாழ வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம்.
இது போல் வேறு யாருக்கும் நடக்காத வண்ணம் இனிமேலாவது செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக இன்று மிருக வைத்தியரை தொடர்பு கொண்டு வினவிய போது, ஊடகத்திற்கு நான் பதில் கூற வேண்டிய அவசியமில்லை எனவும் அலட்சிய போக்கில் பதிலளித்தார்.
வவுனியாவில் நேற்று மாலை அரச மற்றும் தனியார் பேருந்து சங்க உறுப்பினர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் இணைந்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் தலைமையில் அவரது காரியலாயத்தில் மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணிவரையும் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.
இக் கலந்துரையாடல் சுமூகமான முறையில் இடம்பெற்றுள்ளதுடன் அரச தனியார் பேருந்து சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஒருமித்த கருத்துடன் இணைந்து செயற்படுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு நீண்ட கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதுவரையும் எதுவித இடையூறுகளையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தவேண்டாம் என்று இக் கலந்தரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.
இக் கலந்தரையாடலில் கலந்து கொண்ட அனைவரும் தவறாமல் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கலந்துரையாடல் இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கபட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், அரச, தனியார் பேருந்து சங்கப்பிரதிநிதிகள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள், சிறுவியாபரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த 17.01.2017அன்று தனியார் மற்றும் அரச பேருந்து சாரதிகளிடையே ஏற்பட்ட கலவரம் காரணமாக மூவரை கைது செய்துள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே கலவரம் காரணமாக பொலிஸார் அரச பேருந்து நிலையத்தில் பணியாற்றி நேரக்கணிப்பாளர் ஒருவரையும் அன்றைய கலவரத்தின்போது வீதியில் அமர்ந்து பேருந்தினை செலுத்த இடம்கொடுக்காமலும் பேருந்தின் கண்ணாடி மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்து தனியார் பேருந்து சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
அவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா நகரசபை ஊழியர்களால் நேற்று (20.01.2017) வீதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர்களின் பொருட்களை பறிமுதல் செய்து வவுனியா நகரசபைக்கு ஏற்றிச் சென்றனர்.
இதனையத்து வீதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இரு வர்த்தகர்கள் பறிமுதல் செய்த மரக்கறிகளை மீள தருமாறு கோரி ஹோரவப்பத்தானை வீதியின் நடுவில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்ப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் இரு வர்த்தகர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான உள்ளுராட்சி எல்லை நிர்ணயத்தில் நிலவும் குறைபாடு தொடர்பில் தமிழ்த் தேசிக்கூட்டமைப்பு மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் எடுத்துரைத்துள்ளது.
நேற்றுமுன்தினம் (19.01) வவுனியா வடக்கு கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழாவுக்கு வருகை தந்த அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் இந்தக்கோரிக்கை தமிழ் தேசியக்கூட்;டமைப்பினால் முன்வைக்கப்ட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட குழுக்களின் பிரதித்தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் வடக்கு மாகாண சபை சுகாதார அமைச்சரின் சார்பில் அவரது பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன் அடங்கிய குழுவினர் இந்தக்கோரிக்கையை அமைச்சரிடம் முன்வைத்துள்ளனர்.
வடக்கு பிரதேச சபையுடன் புதிதாக நான்கு வட்டாரங்கள் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக எல்லைக்குள் காணப்படும் சிங்களக் குடியேற்றக்கிராமங்களை உள்ளடக்கிய நான்கு வட்டாரங்கள் கடந்த அரசாங்கத்தினால் வவனியா வடக்கு பிரதேச சபையின் கீழ் இணைக்கப்பட்டிருந்தன.
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரதேசத்துடன் நேரடியாக தொடர்புபடாத நிர்வாக ரீதியாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இந்தக்கிராமங்களின் உள்ளுராட்சி மன்றத்தை வவுனியா மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
இதனால் நிர்வாக ரீதியில் பாரிய பிரச்சனையை மேற்படி வட்டாரங்கள் எதிர்நோக்கியிருந்த நிலையில் வடக்கு பிரதேச சபையின் 47ஆவது அமர்வில் தாங்கள் வவுனியா வடக்கிலிருந்து பிரிந்து செல்ல சம்மதிப்பதாக தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த அரசாங்கத்திற்கு நாம் வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவை அவர்கள் சரியாக பயன்படுத்த வில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது உடகவியலாளர் ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் புதிய ஜனாதிபதி பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. இந்த இரண்டு வருடத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து உங்களது கருத்து என்ன என கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு பதிலளித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
யுத்தத்திற்கு பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவே வாக்களித்து இருந்தார்கள். துரதிஸ்டவசமாக 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகா தோல்வியடைந்தார். சர்வதேச சமூகமும் மஹிந்த ஏதாவது செய்வார் என நம்பி இருந்த தருணம் அது. ஆனால் மஹிந்த போரின் போது தனக்கு உதவி வழங்கிய நாடுகளை கைவிட்டு தன்னை ஒரு இடதுசாரியாக காட்டிக் கொண்டு சீனா, கியூபா, ரஸ்யா போன்ற நாடுகளை கையில் வைத்துக் கொண்டு அமெரிக்காவையும், ஐநாவையும் ஏமாற்ற முற்பட்டதன் விளைவு அவர்களது கோபத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டி ஏற்பட்டது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் தென்னிலங்கை பெரும்பான்மை அரசியல் கட்சிகளை பெரியளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும், மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதற்காக அவர்கள் சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சர்வதேச சமூகம் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளையும் ஒரே இடத்திற்கு கொண்டு வந்து மாற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்தது. தமிழ் மக்களும் சர்வதேச சமூகத்தையே நம்பியிருந்தனர். சர்வதேசத்தின் உடைய ஆதரவு தமிழ் மக்களுக்கு தேவையாக இருந்ததால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆட்சி மாற்றத்திற்கு நிபந்தனையற்ற வகையில் பூரண ஆதரவு வழங்கியது. அதன் விளைவாகவே நல்லாட்சி அரசாங்கம் என்னும் பெயரில் ஒரு கூட்டு அரசாங்கம் உருவானது.
இந்த அரசாங்கத்தின் உருவாக்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்கு பாரியளவிலானது. இந்த நிபந்தனையற்ற எமது ஆதவை அரசாங்கம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே நான் கருதுகிறேன்.
குறிப்பாக ஆட்சி மாற்றம் நடைபெற்ற உடனடியாகவே நூறு நாள் வேலைத்திட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் இன்று இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் பல பிரச்சனைகள் அவ்வாறே உள்ளன. தமிழ் அரசியல் கைதிகளாக தடுத்து வைத்திருப்போரைக் கூட ஒரு நல்லெண்ண அடிப்படையில் இந்த அரசாங்கம் விடுவிக்கவில்லை.
காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் இதுவரை உரிய பதிலை வழங்கவில்லை. காணி விடுவிப்பு பற்றி பார்க்கும் போது அங்கொன்றும், இங்கொன்றுமாக சில காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் அது முழுமையாக நடைபெறவில்லை. புதிய காணி சுவீகரிப்புக்கள் கூட இடம்பெற்றிருக்கின்றது.
சிங்கள குடியேற்றங்கள், புத்தர் சிலைகள் நிறுவுதல் என்பன முன்னைய ஆட்சியைப் போல தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. இவற்றுக்கு எதிராக நாம் கொடுக்கும் குரல்கள் அனைத்தும் விளலுக்கு இழைத்த நீராகவே இருக்கிறது. ஆகவே இரண்டு வருடங்களில் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பாரிய நன்மைகள் எதுவும் கிடைத்ததாக இல்லை எனத் தெரிவித்தார்.