இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், 40இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த ரயில் விபத்தினால் சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சில ரயில்கள் வேறு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபா வழங்கப்படும் என இந்திய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதனைத்தவிர, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என ஆந்திர பிரதேஷ் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று எழுதப்பட்ட வாசகம் அடங்கிய பதாகையை வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், இளம்பெண்கள் சென்னை மெரினா கடற்கரையில் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்கள். அவர்களோடு சேர்ந்து மெரினா கடற்கரையில் அமர்ந்து போராடி வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். தனது உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாது அவர் போராடி வருகிறார்.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நடிகர் சிவகார்த்திகேயன் 2 நாட்களுக்கு முன்பு மெரினா கடற்கரைக்கு வந்தார். அப்போது அவர் தன்னுடன் மகள் ஆராதனாவையும் அழைத்து வந்திருந்தார். ஆராதனா தனது கையில் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று எழுதப்பட்ட வாசகம் அடங்கிய பதாகையை வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள ஆற்காட்டில் மகளுடன் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
மெரினாவில் இன்று 6ஆவது நாளாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உலக அளவில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் ஆற்காடு நகரில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சதீஷ் என்ற இளைஞர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷமிட்டபடி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றினார்.
பிறகு, தனது மகள் மிருதுளா மீதும் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து பெட்ரோல் பாட்டிலை கைப்பற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2வது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அந்த அணி 19.3 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 113 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனையடுத்து 114 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் மெத்தியூஸ் 54 ஓட்டங்களை விளாசினார்.
பின்னர் 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை 119 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.
எனவே 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் 1-1 என தற்போது சமப்படுத்தப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான 20 இருபது போட்டி எதிர்வரும் 25ம் திகதி இடம்பெறவுள்ளது.
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இளைஞர்கள் சிலர் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேரூந்துகள் இன்றியும் வியாபார நிலையங்களில் மக்கள் இன்றியும் வெறிச்சோடிக்காட்சியளிக்கும் அரச பேரூந்து நிலையத்தில் இன்று காலை வியாபார நிலையத்தில் பணியாற்றும் இளைஞர்கள் சிலர் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டு வருவதைக்காணக்கூடியதாக இருந்தது.
வவுனியாவில் புதிய பேரூந்து நிலையம் திறந்துவைக்கப்பட்டதிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான பேரூந்து சேவைகள் புதிய பேரூந்து நிலையத்தில் இடம்பெற்று வருகின்றன.
உள்ளுர் சேவைகள் மட்டுமே அரச பேரூந்து நிலையத்தில் இடம்பெற்று வருகின்றது. இதன் காரணமாகவே பொதுமக்கள், பேரூந்துக்கள் இன்றி காட்சியளிக்கும் அரச பேரூந்து நிலையத்தில் இளைஞர்கள் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விவசாய தொழில் முனைவோரை ஊக்கிவிக்கும் மாநாடு நேற்று (21.01.2017) காலை 9.30 மணியளவில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
உலக வங்கியின் நிதி அணுசரணையில் விவசாயத்துறையை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் இம் மாநாடு நடைபெற்றது.
இதன்போது விவசாயிகளின் உற்பத்திகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் அவர்களது உற்பத்திகளை அதிகரிக்க ஆலோசனை வழங்கல், நிதி வழங்கல் தொடர்பான தெளிவுபடுத்தும் கருத்துரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப்பாளர் ரோஹண கமகே, ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் செயலாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் வீடுகளுக்குள் வாள்வெட்டு கும்பல் ஒன்று புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டித்தள்ளியுள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை 04.30 மணியளவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியிலுள்ள 5 வீடுகளுக்குள் புகுந்த இந்த மர்ம கும்பல், வீடுகளில் இருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை நடாத்திவிட்டுச் சென்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தவறி கீழே விழுந்த தன் தாயின் உயிரை தன் சமயோஜித புத்தியால் காப்பாற்றிய சிறுவனின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியா நாட்டின் Telford நகரில் Gemma என்றும் பெண் தன் மகன் Jacob (4) உடன் வசித்து வந்தார். ஜேக்கப்பால் சரியாகவும், தெளிவாகவும் பேச இயலாது. இந்நிலையில் தன் வீட்டு சமையலறையில் Gemma வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென தவறி தரையில் விழுந்துள்ளார்.
தரையில் அவரின் தலை வேகமாக மோதியதால் மயக்கமடைந்துள்ளார். உடனே அருகிலிருந்த அவரின் மகன் Jacob தன் தாயை எழுப்ப முயல அவரால் எழுந்திருக்க முடியவில்லை.
உடனே 999 என்ற அவசர உதவி எண்ணுக்கு Jacob போன் செய்து தன் தாய்க்கு ஏற்ப்பட்டுள்ள நிலையை தன் மழலை மொழியில் கஷ்டப்பட்டு விளக்கியுள்ளான்.
பின்னர் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த அவசர உதவி பிரிவு ஆட்கள் Gemma – ஐ தூக்கி கொண்டு போய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தற்போது அவருக்கு சிகிச்சையளிக்கட்டு வருவதுடன், அவர் உயிருக்கு ஆபத்தில்லை எனவும் தெரிகிறது.
இது பற்றி Gemma கூறுகையில், என் மகன் தான் என் ஹீரோ. என் உயிரையே அவன் காப்பாற்றியுள்ளான். அவனை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.
இலங்கையின் வான் பரப்பில் அடையாளம் தெரியாத பறக்கும் மர்ம பொருள் ஒன்று தென்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களில் குறித்த மர்ம பொருளை நேற்றிரவு அவதானிக்கப்பட்டுள்ளது.
வட்ட வடிவமான குறித்த பொருள் ஒன்று கதிர் வீச்சு போன்று பிரகாசமான ஒளியுடன் சுற்றி வந்ததாக பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தொலைக்காட்டி கொண்டு நோக்கும் போது பிரகாசமான, சதுர வடிவ பொருள் போன்று இருந்துள்ளது. இது வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இரத்தினபரி,ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மேல் மாகாண வான்பரப்பிலும் குறித்த மர்மபொருள் தெளிவாக இரவு 7.15 அளவில் தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு பரபரப்பு காரணமாக கொதிநிலையில் இருக்கும் தமிழக நகரங்களில் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்க ஏதேனும் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என தகவல்கள் பரவுகின்றன. ஆனால், அவை எதுவும் ஊர்ஜிதமான தகவல்களாக இல்லை.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை மெரினாவில் மட்டும் லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளனர். இதுதவிர சென்னை, கோவை, மதுரை, சேலம், நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் போராட்டக்குழுவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமையே இல்லாமல் அறவழியில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் இந்தப் போராட்டம் உலகம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது.
ஆறாவது நாளாகத் தொடரும் இந்தப் போராட்டத்தின் பலனாக, தமிழக அரசு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தை பிறப்பித்தது… ’ஆறு மாத காலம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி’ என்ற ஆளுநரின் அறிவிப்பு உற்சாகம் கிளப்பும் என்ற எதிர்பார்ப்பு சடுதியில் கலைந்தது. மெரினா முதல் அலங்காநல்லூர் வரை ஆளுநரின் அறிவிப்பு எந்த உற்சாகக் கூக்குரலையும் எழுப்பவில்லை.
இதனிடையே ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைக்க சென்னையிலிருந்து விமானம் மூலம் அலங்கநல்லூர் சென்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் மக்கள் அவரை வரவேற்க தயராக இல்லை. அவர்கள் தெளிவாக, “ஆறு மாத காலத்துக்கு அனுமதி என்பது நிரந்தரத் தீர்வல்ல. எங்களுக்குத் தேவை உறுதியான, உண்மையான தீர்வு. தற்காலிக தீர்வு என்பது எங்கள் நோக்கமல்ல, முந்தைய காலங்களில் நடந்தது போலவே கண்துடைப்பாக ஏதேனும் அறிவித்து போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய அனுமதிக்க மாட்டோம்.
நூற்றாண்டுகளாக நடந்து வரும் ஜல்லிக்கட்டை எந்த இடையூறும் இல்லாமல் இனி ஆண்டாண்டு காலம் நடத்தச் செய்யும் வகையில் காட்சிப் பட்டியல் இருந்து காளைகளை நீக்க வேண்டும் என்ற நிரந்தரத் தீர்வை எட்டும்வரை எங்கள் போராட்டம் தொடரும்’ என்று பன்னீர்செல்வத்தை திரும்பி அனுப்பினர்.
இந்நிலையில் மக்களின் தன்னெழுச்சியைக் கட்டுக்குள் கொண்டுவர, அரசு ஏதேனும் கடுமையான முடிவுகள் எடுக்கலாம் என்று மாணவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
முதல்வர் அலங்காநல்லூர் செல்வதற்கு முன்பே, அவர் தலைமையில் தமிழக டி.ஜி.பி. (பொறுப்பு) டி.கே.ராஜேந்திரன், பொலிஸ் கமிஷனர் ஜோர்ஜ் மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அந்தக் கூட்டத்தில் இந்த எழுச்சியைக் கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதோடு சட்டம்- ஒழுங்கை சிக்கல் இல்லாமல் கையாளவும் மாநிலம் முழுக்க அமைதியை நிலவச் செய்வது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில், “லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக ஏதேனும் தடை உத்தரவை பிறப்பிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அது தவறான நோக்கத்தோடு பயன்படுத்தப்படாது. லட்சக்கணக்கில் கூடியிருக்கும் மக்களை எந்த அசம்பாவிதமும் நிகழாமல் வீடு திரும்பச் செய்யும் நடைமுறைக்காக மட்டுமே அந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.
போராட்டக் குழுவினர் இதுவரை அமைதியாக அறவழியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். எங்கும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. ‘ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்’ என்ற கோரிக்கையை போராட்டக் குழுவினர் வலியுறுத்தி, அதனால் ஏதேனும் களேபரமானால், அது பரவாமல் இருக்க சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கப்படும் என்றனர்.
எந்த சூழ்நிலையிலும் இயல்பை இழக்காதீர்கள்!
மாணவர்களே, இளைஞர்களே…. நீங்கள் ஒரு மகத்துவமான போராட்டத்தை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். வரலாறு உங்களை கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் எது நடந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் இயல்பை இழக்காதீர்கள். அமைதியை இழக்காதீர்கள். இதுநாள் வரை நீங்கள் கடைபிடித்த அமைதி, அறவழி போராட்டத்தை, அந்த மனநிலையை எந்த நொடியிலும் தக்க வைத்திருங்கள்.
வதந்திகள், ஹேஷ்யங்கள் பரவினாலும் சூழ்நிலைக்கேற்ப சமயோசிதமாகச் செயல்படுங்கள். கூட்டத்தைக் கலைக்கும் கெடுபிடிகளோ, வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளோ மேற்கொள்ளப்பட்டால், பொறுமையாக ஒத்துழையுங்கள்… அல்லது அமைதி வழியில் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள். எந்த சூழ்நிலையிலும் நிதானம் இழக்க வேண்டாம்… அது மட்டும் முக்கியம்.
ஏனென்றால், மெரினா முற்றுகை ஒரு வரலாற்று பாடம். அதைத்தான் நாளைய தலைமுறை படிக்கப்போகிறது. அதில் ஒரு பிழையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயம் செய்வீர்கள் அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய சரித்திரம் படைத்திருக்கிறார்கள் இளைஞர்கள்.
இந்திய அரசியலைப் பொறுத்த வரையிலும், எதிர்ப்பு போராட்டங்கள், உரிமைப் போராட்டங்கள் என்று எதை எடுத்தாலும் அது தமிழர்களிடத்தில் இருந்து, தமிழகத்தில் இருந்து தான் மற்றைய மாநிலங்களுக்கும் பரவும்.
கடந்த 1965ம் ஆண்டு தமிழகத்தில் நிகழ்ந்த மொழிப்போர், இன்றளவும் பேசப்படும் அரசியல் மற்றும் உரிமை மீட்புப் போராக வரலாறாகி நிற்கிறது.
அதனைத் தொடர்ந்து ஈழத்தில் நிகழ்ந்த இனவழிப்பை கண்டித்து 1980ம் ஆண்டுகளில் தமிழகத்தில் தன்னெழுச்சியாக அன்றைய மாணவர்கள் போராட்ட களத்தில் குதித்திருந்தனர். அதேபோன்று, 2009ம் ஆண்டு ஈழத்தில் நிகழ்ந்த இனவழிப்பிற்கும் மாணவர்கள், இளைஞர்கள், ஈழ உணர்வாளர்கள் என்ற அத்தனை பேரும் களத்தில் இருங்கியிருந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்தும் தாங்கள், பாதிக்கப்படுவதை உணர்ந்து ஜல்லிக்கட்டிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தடைச்சட்டத்தை உடைப்பதற்கான அறவழிப் போராட்டத்தை மாணவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.
அறப்போராட்டம், அமைதிப்போராட்டம், மௌனப்போராட்டம், மாணவர் எழுச்சி, உரிமை மீட்புப் போர் என்று பல்வேறு விதத்திலும் அழைக்கப்படுகிறது மாணவர்கள் எழுச்சியை.
இது தமிழகம் எங்கும் மிகமிக அமைதியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
யாருமே இங்கே தலைவர்கள் இல்லை. யாரும் சொல்லிக்கொடுத்து போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை. அவர்களாகவே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூரில் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்று மெரீனாவில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் படைகளோடு வீரஎழுச்சியாகி நிற்கிறது.
ஆட்சியாளர்களை நடுநடுங்க வைத்திருக்கிறது. இந்நிலையில் தான் இன்று அனைவராலும் இந்தப் போராட்டத்தை வியந்து பார்க்க வைத்திருக்கிறார்கள் இளைஞர்கள்.
குறிப்பாக இதுவரை காலமும் தமிழகம், இந்தியா உட்பட பல இடங்களில் நிகழ்ந்த போராட்டங்கள் வன்முறைகள், கலவரங்களில் தான் போய் முடியும். ஆனால் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் போராட்டம் இதுவரை எந்த அசம்பாவிதங்களும் இன்றி தொடர்கின்றது.
இளைஞர்கள் தங்களுக்குள்ளேயே ஒருங்கிணைப்புக்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். வாகனங்களை சாதாரணமாக நெருக்கடி இன்றி செலுத்திச் செல்ல முடிகின்றது.
போக்குவரத்து காவல்த்துறையினருக்கு உதவியாக நேரடியாக களத்தில் இறங்கி போக்குவரத்தை சரி செய்துகொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள்.
பொதுவாக, இளைஞர்களை காவல்த்துறையினர் போக்குவரத்தின் போது மிரட்டுவர். ஆனால் இன்று இளைஞர்கள் போக்குவரத்தை சீர் செய்ய அவர்களுக்கு துணையாக நிற்கிறார்கள் காவல்த்துறையினர்.
பெண்கள் போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இதுவரை எந்தத் தொந்தரவும் வந்ததாக செய்திகள் வெளியாகியிருக்கவில்லை.
தமிழ் இளைஞர்களிடத்தில் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என டெல்லியில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
தமிழகத்திற்கு மட்டுமல்ல, முழு இந்தியாவிற்குமே தமிழர்கள் தலைமை தாங்கக் கூடிய வல்லமையும் திறமையும் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார் இந்தியா முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ.
மெரீனா கடற்கரையில் மனிதத் தலைகளால் நிரம்பிக்கிடக்கிறது. இதை இந்திய மத்திய அரசாங்கம் வியந்து பார்த்துக் கொண்டே தன்னுடைய நகர்வை நகர்த்த வேண்டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
ஏனெனில் மத்திய உளவுத்துறை அனுப்பிய அறிக்கையில், தமிழகத்தின் நிலை குறித்து மிக நேர்த்தியான மற்றும் ஆபத்தான நிலை குறித்து விபரிக்கப்பட்டிருந்ததால் தான் மோடி அரசாங்கம் பணிந்தது என்கிறார்கள்.
குறிப்பாக வன்முறையற்ற எதிர்ப்புக்களைத் தமிழ் மக்கள் காட்டிக்கொண்டிருப்பது அவர்களுக்கு தலைவலியாக மாறியிருந்தது.
கலவரங்களாக போராட்டம் இடம்பெற்றிருந்தால் அரசாங்கம் இலகுவில் அடக்கியிருக்கும். ஆனால், இப்போராட்டம் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்டிருந்ததே அரசாங்கத்திற்கு சிக்கலை உருவாக்கியிருந்தது.
அதற்கு காரணம் ஒவ்வொரு தமிழனும் தான். தங்கள் எதிர்ப்பை அமைதியான வழியில் பதிவு செய்துகொண்டிருந்தனர்.
போராட்டத்திற்கு வந்தவர்களின் தாகத்தை, பசியை தீர்க்க தன்னார்வ தொண்டர்கள், உதவியாளர்களும் களத்தில் நிற்கிறார்கள். அவர்களின் உதவிக்கரம் போராட்டத்தை வலுப்பெறச் செய்திருக்கிறது.
இளைஞர்கள் பெண்களை பாதுகாக்கிறார்கள். அச்சமின்றி பெண்களும் இரவில் தங்கியிருந்து தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இதுதான் தமிழன், இது தான் தமிழர் நாடு என்பதைக் காட்டி நிற்கிறது மெரீனாக் கடற்கரை.
போராட்டம் என்றால் அது அறவழியிலும் இப்படியும் முன்னெடுக்கலாம் என்பதை காட்டியிருக்கிறார்கள்.
நாளைய இந்திய சமூகத்திற்கு மெரீனா கடற்கரையில் இப்பொழுது நடந்துவரும் போராட்டம் நல்லதொரு பாடமாக, வரலாறாக மாறியிருக்கிறது.
ஒரு தன்னெழுச்சியான போராட்டம் அரசாங்கங்களை அடங்க வைத்திருப்பது மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.
தமிழர்களும், தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் யுவதிகள் விழித்துவிட்டார்கள். இனி தமிழகத்தில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அரசியல்வாதிகள் நிதானமாக சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
இனி ஒரு விதி செய்வாய்…! என்னும் பாரதியின் வரிகளுக்கு இணங்க புது சரித்திரம் படைத்திருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டிற்கான தடை அதை உடை என்று தொடங்கினார்கள். இன்று புது சரித்திரம் படைத்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் நாளைய தலைவர்களுக்கு.
இலங்கை முழுவதும் 1268 கிலோ மீற்றர் நடந்து செல்லும் முயற்சியில் பெண்ணொருவர் ஈடுபட்டுள்ளார். குறித்த பெண் இன்று ஹங்கம நகரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 10ஆம் திகதி கதிர்காமம், கிரிவெஹேர என்ற பிரதேசத்தில் இருந்து அவர் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
தேவிகா காசிவெட்டி என்ற பெண்ணே இவ்வாறு பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் எதிர்வரும் மே மாதம் கிரிவேஹேர என்ற பகுதியில் தனது பயணத்தை நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளார்.
கதிர்காமம், மாத்தறை, களுத்துறை, கொழும்பு, சிலாபம், மன்னார் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சென்று மீண்டும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஊடாக கதிர்காமம், கிரிவேஹேர வரை கடல் வழியாக பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களில் நடிகை நயன்தாரா பங்கேற்றுள்ளார். நடிகைகளில் இவர் மட்டுமே பங்கேற்றது சிறப்பு.
மெரினாவில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் நடிகர் லோரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி போன்றோர் முழு மூச்சாக களப் பணியாற்றி வருகிறார்கள். முன்னணி நடிகர் விஜய் தனது முகத்தை மூடியபடியே மெரினா சென்று போராட்ட களத்தில் கால் பதித்து திரும்பினார்.
நடிகைகளை பொறுத்தளவில், முன்னணி நடிகையான நயன்தாரா மெரினா சென்று இளைஞர்கள் போராட்டத்தை நேரில் கண்டார். இவர் ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு இருப்பதாக அறிக்கை வெளியிட்டார் என்பது நினைவிருக்கலாம்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக இன்று (22.01.2017) செட்டிகுள இளைஞர் அமைப்பினாலும், சிறகுகள் இளைஞர் அமைப்பு மற்றும் முகநூல் நண்பர்களினாலும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செட்டிகுளம் விவேகானந்தர் சிலைக்கு முன்பாக இன்று காலை குறித்த போராட்டம் இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் செட்டிக்குள இளைஞர் சம்மேளனம், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், வர்த்தக சங்கம், மதகுருமார்கள், பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் எங்கள் அடையாளம் ஜல்லிக்கட்டு எங்கள் கலாச்சாரம், உங்களுக்காய் நாங்கள் எங்களுக்காய் நீங்கள், தமிழனுக்காய் வா தமிழா, உரிமைக்காய் குரல் கொடுப்போம் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.