ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களை கொச்சைப்படுத்திய கிருஷ்ணசாமி!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறு குழந்தைகள் என அனைவரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போராட்டம் தமிழகத்தில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் தமிழக முதல்வரான பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் போராட்டம் நடத்தும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் முதல்வரின் உறுதியான தீர்ப்புக்கு பின்னரே அடுத்த கட்ட நிலைமை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான கிருஷ்ணசாமி ஜல்லிக்கட்டு விவாகாரம் குறித்து போராடும் இளைஞர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதில் அவர் பொங்கல் தினத்தன்று மாடுகளை துன்புறுத்த வேண்டாம் என்பதற்காகத்தான் அன்றைய நாள் கொண்டாடப்படுகிறது.

ஆனால் நீங்கள் அன்றைய தினம் மாட்டை கொடுமை செய்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல் இருக்க வேண்டும் என்றால் தாம் 50 வருடம் பின்னர் தான் செல்ல வேண்டும் எனவும், போராடும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் இனிமேல் வாகனங்களில் செல்லக்கூடாது, காளைகளை பயன்படுத்திதான் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழக மக்களை அவர் இழிவுபடுத்துவது போல் அந்த வீடியோவில் பேசியுள்ளது, தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி போராடும் தமிழர்களுக்கு பெரும் ஆத்திரத்தை மூட்டியுள்ளதாக அந்த வீடியோவை பார்ப்பவர்கள் தங்கள் கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

மெரினா போராட்டத்தில் திடீர் திருப்பம் : சம்மதம் தெரிவித்த மாணவர்கள்!!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் களம் இறங்கியுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் இதனால் போராட்டத்தை கைவிடுமாறும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

மேலும், தமிழகத்தின் 10 அமைச்சர்கள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தும், மாணவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

வாடிவாசல் திறந்தால் மட்டுமே வீட்டு வாசலை மிதிப்போம் என்று முழக்கமிட்டவாறு இரவுபகலாக இளைஞர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மெரினா போராட்டத்தில் திடீர் திருப்பமாக அரசு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்போது முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்த இளைஞர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 15 பேர் கொண்ட குழு அமைக்க மாணவர்கள், இளைஞர்கள் தற்போது திட்டமிட்டு வருகின்றனர்.

15 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டு விவேகானந்தர் இல்லம் அருகே கூட இருப்பதாகவும், அவர்கள் போராட்டக்குழுவினர் பிரதிநிதிகளாக இருந்து அனைவரின் உணர்வுகளை அரசிடம் வெளிப்படுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது

நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட்?

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சிக்கிய சின்னாபின்னமான த்ரிஷாவுக்கு தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை ஆதரித்ததால் நடிகை த்ரிஷாவுக்கு எதிராக பலர் செயல்பட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் பிடிவாரண்ட் அவரது தாய் உமா கிருஷ்ணனுக்கு தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு தனது மகள் த்ரிஷாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதாக அவரது அம்மா உமா பத்திரிகை ஒன்று மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை த்ரிஷா சமீபத்தில் வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது உமா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என சென்னை நீதிமன்றம் உமா கிருஷ்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இந்த தகவல் தான் நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தவறாக பரவி வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக பாலத்தின் மேல் ஏறி ஆர்ப்பாட்டம்!!

ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவது போராட்டம் வெடித்துள்ள நிலையில், இராமேஸ்வத்திலும், இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவருகின்றது.

மாணவர்கள், தமிழர் தேசிய முன்னணி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக இரயில் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்க்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்.

பீட்டா என்ற அமைப்பிற்கு எதிராக தடை விதிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கட்டுப்படுத்து நோக்கில் பொலிஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும், அது தோல்வியில் முடிவடைந்து.

எனினும், பயணிகளின் நலன் கருதி பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இதேவேளை, பாலத்தின் மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிருக்கு உலை வைக்கும் கைத்தொலைபேசி மோகம்!!

தண்டவாளம் மீது நடந்து செல்லும் இளைஞர், யுவதிகள் புகையிரதத்தினால் மோதுண்டு மரணமடைதல், வீதியைக் கடக்கும் வேளையில் வாகனங்களால் மோதுண்டு மரணமடைதல், ‘செல்பி’ படமெடுத்த சமயம் நீருக்குள் விழுந்து அல்லது ரயிலில் அகப்பட்டு மரணமடைதல்….இவ்வாறான விபத்துச் செய்திகள் நாளாந்தம் ஊடகங்களில் வெளிவந்தபடியே இருக்கின்றன. ‘

செல்பி’ படமெடுத்த வேளையில் சம்பவித்த இரண்டு மரணங்கள் பற்றிய செய்திகள் கடந்த ஒரு வார காலத்தில் வெளிவந்திருந்தன. இவ்விரு சம்பவங்களிலும் பலியானவர்கள் இளவயதினராவர். இவ்வாறான அநியாய மரணங்களுக்கு கையடக்கத் தொலைபேசியே காரணமாக அமைந்திருக்கின்றது.

தகவல் தொழில்நுட்பத்தின் அதியுச்ச கண்டுபிடிப்பாக இன்று ‘ஸ்மாட்ஃபோன்’ திகழ்கின்றது. ஸ்மாட்ஃபோன்களின் வருகையினால் சாதாரண கைத்தொலைபேசிகள் வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கின்றன.

இப்போதெல்லாம் ஸ்மாட்ஃபோன்கள் வைத்திருக்காதோரைக் காண்பது அபூர்வம். உலகத்தையே சுருட்டியெடுத்து உள்ளங்கைக்குள் வைத்திருக்கிறது ஸ்மாட்ஃபோன். அதனால் உண்டாகின்ற அனுகூலங்களை இங்கு கூற வேண்டிய அவசியமில்லை.

இன்றைய இயந்திர வாழ்க்கையில் அவ்வாறான கைத்தொலைபேசிகள் ஏராளமான பயன்களைத் தருகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் ஸ்மாட்ஃபோன்களால் நாளாந்தம் மனித உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் வேதனையான விஷயம்.

தொலைபேசியில் யாருடனாவது உரையாடியபடியோ இல்லையேல் ‘வாற்ஸ்அப்’ அல்லது ‘வைபர்’ மூலம் தகவல் பரிமாறியபடியோ ரயில் தண்டவாளத்திலும், வீதியிலும் நடந்து சென்ற பலர் அநியாயமாக உயிரிழந்து போயிருக்கிறார்கள்.

ஓடுகின்ற ரயிலின் அருகில் நின்றபடி ஷெல்பி எடுத்தல், கடலலைக்கு முன்பாக கம்பீரமாக நின்று ஷெல்பி எடுத்தல் போன்ற வேளைகளிலெல்லாம் உயிரிழந்த இளைஞர், யுவதிகள் ஏராளம்.

இது குறித்து ஊடகங்கள் அடிக்கடி எச்சரிக்கின்றன. அரசாங்க மற்றும் சமூகநல அமைப்புகளும் புத்திமதி கூறுகின்றன. ஆனாலும் அநியாய மரணங்கள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன. தங்கள் உயிரைத் துச்சமென மதிக்கும் அளவுக்கு கைத்தொலைபேசி மோகம் எமது இளவயதினரை மாத்திரமன்றி பெரியவர்கள் பலரையும் ஆட்கொண்டு விட்டதென்பது நன்றாகவே தெரிகின்றது.

பித்துப் பிடித்தவரைப் போல நாள் முழுவதும் கைத்தொலைபேசியிலேயே மூழ்கிக் கிடக்கும் பலரை அலுவலகங்கள், வீதிகள், பொது இடங்கள் போன்றவற்றில் அடிக்கடி நாம் காண்கிறோம்.

இவர்கள் கைத்தொலைபேசிக்கு அடிமையானவர்கள் என்பது மட்டுமன்றி, ஒருவித மனநோய்க்கு உள்ளானவர்களென மனநல வைத்தியர்கள் கூறுகின்றனர். அளவு கடந்த ஈடுபாட்டினால் நாளடைவில் ‘மேனியா’ என்ற நிலைமைக்கு ஆளாக வேண்டிய பரிதாபம் ஏற்பட்டு விடுகின்றது.

நாம் தற்காலத்தில் பயன்படுத்துகின்ற நவீன தொடர்பு சாதனங்கள் அத்தனையையும் முதன் முதலில் கண்டுபிடித்தவர்கள் மேற்கு நாட்டவர் ஆவர்.

மேற்கின் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து ஜப்பான், சீனா, வியட்நாம், கொரியா, தாய்வான், சிங்கப்பூர், மலேசியா போன்ற கைத்தொழில் வல்லமை நாடுகள் தொடர்பு சாதனங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன. இச்சாதனங்களின் இன்றைய பயன்பாட்டினால் பெருமைப்பட வேண்டியது மேற்குலகம் ஆகும்.

ஆனால் கைத்தொலைபேசியினால் உயிரை மாய்த்துக் கொள்ளும்படியாகவோ, பித்துப் பிடித்துப் போகும்படியாகவோ மேற்கு நாட்டவர்கள் மாறி விடவில்லை. அவர்கள் கைத்தொலைபேசியை தேவை கருதி பயன்படுத்தும் பக்குவ நிலையிலேயே உள்ளனர். எனவே அங்கெல்லாம் கைத்தொலைபேசி மரணங்கள் அரிது.

இலங்கை போன்ற நாடுகளில்தான் இந்த விபரீதம் எல்லை கடந்து விட்டது. கைத்தொலைபேசி மோகத்தினால் உயிரையே மாய்த்துக் கொள்கின்றார்களென்றால் இந்த மடைமையை என்னவென்று கூறுவது.

உலக சந்தை இன்று அகலத் திறந்தபடி காணப்படுகிறது. அனைத்து இறக்குமதிப் பொருட்களும் தாராளமாகவே நாட்டுக்குள் வந்து சேருகின்றன. ஸ்மாட்ஃபோன் கைத்தொலைபேசிகளின் வருகையும் நாளாந்தம் அதிகரித்தபடியே செல்கிறது.

நவீன சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் போட்டி போட்டபடி உற்பத்தியில் இறங்கியிருக்கின்றன. போட்டி வர்த்தகமானது புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழியமைப்பது ஒருபுறமிருக்க, நவீன சாதனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

இதன் காரணமாகவே ஸ்மாட்ஃபோன் போன்ற சாதனங்கள் அனைவரின் கைகளிலும் தாராளமாகவே புரளுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ‘ஸ்மாட்ஃபோன்’ வைத்திருக்கத் தவறுவது, அகௌரவம் நிறைந்ததென எண்ணும் அளவுக்கு நிலைமை வந்து விட்டது.

கைத்தொலைபேசியினால் உண்டாகின்ற அனுகூலங்களைப் பார்க்கிலும் ஆபத்துகள் அதிகரித்தபடி செல்வதனால் இவ்விடயத்தை இனிமேலும் அலட்சியப்படுத்திக் கொண்டிருக்க முடியாது.

கைத்தொலைபேசிப் பாவனை குறித்து நன்மைகளையும் தீமைகளையும் புரிய வைப்பதில் ஊடகங்கள் நிறையவே பங்காற்ற வேண்டியிருக்கின்றது.

அதேசமயம் சமூக ஆர்வலர்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.கைத்தொலைபேசியின் நன்மை தீமைகளை பாடசாலை மட்டத்திலிருந்து எடுத்துரைப்பது சிறந்ததென அறிவுஜீவிகள் கூறுகின்றார்கள்.

அக்கருத்தும் கவனத்தில் எடுக்கப்படுவது முக்கியம்.விஞ்ஞானத்தின் விந்தையினால் மனிதன் சௌகரியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்ற பெருமைக்கு அப்பால், உயிரையே இழந்து கொண்டிருக்கும் அவலமும் நடந்து கொண்டிருக்கின்றது.

அறிவுக் கூர்மை நிறைந்த நவீன சாதனங்களால் மனித அறிவு மழுங்கிப் போவதற்கு இடமளிக்கலாகாது.

இலங்கைக்கு கிடைத்த தோல்வி : கண்டுகொள்ளாத கின்னஸ் குழு!!

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சினால் கொழும்பு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்ட நத்தார் மரத்திற்கு இதுவரை கின்னஸ் அறிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் திகதியில் இரு ஒரு வாரம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்ட இந்த நத்தார் மரம் 238 அடியை கொண்டதாகும். நத்தார் மரம் தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்வதற்கு கின்னஸ் அறிக்கை குழுவின் எந்தவொரு உறுப்பினரும் இலங்கை வராத நிலையில், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சினால் அதன் தகவல்கள் இணையத்தின் ஊடாக கின்னஸ் அறிக்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சரிடம் வினவப்பட்டுள்ளது. எதிர்வரும் 2 வாரங்களில் அதற்கான கின்னஸ் அறிக்கை கிடைக்கும் என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் நத்தார் மரத்தின் நிர்மாணிப்பு பணிகள் சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையினால் கின்னஸ் அறிக்கைக்கான உயரத்தை எட்டமுடியவில்லை என அதற்கு உதவியவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்ட நத்தார் மரம் அடி என்ற போதிலும் இன்னறும் கின்னஸ் இணையத்தளத்தில் 2009ஆம் ஆண்டு பிரேஸிலில் நிர்மாணிக்கப்பட்ட மரமே குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்­தி­ய­த­­ரைக்­கடல் பகு­தியில் அக­திகள் படகு விபத்­து : 180 பேர் உயி­ரி­ழப்­பு!!

லிபியா அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 180 பேர் உயிரிழந்துள்­ளனர்.

இது குறித்து சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு, ஐ.நா. அகதிகள் நல ஆணையம் ஆகியவற்றைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் தெரிவித்ததாவது, கிழக்கு ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்டோர், ஐரோப்பிய நாடுளில் அடைக்கலம் தேடி லிபியாவிலிருந்து படகு மூலம் கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டனர்.

புறப்பட்ட 5 மணி நேரத்தில், அந்த அகதிகள் படகின் இயந்­திரம் பழு­­த­டைந்­துள்­ளது. அதையடுத்து, இரு தளங்களைக் கொண்ட அந்தப் படகு கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் மூழ்கியது.

இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 4 பேரை மட்டுமே பிரான்ஸ் மீட்புப் படகால் உயிருடன் மீட்க முடிந்தது. மேலும், விபத்தில் உயிரிழந்த 4 பேரது உடல்களும் மீட்கப்பட்டன.

விபத்தில் உயிர் பிழைத்தவர்களிடம் நடத்திய விசாரணையில், படகுடன் கடலுக்குள் மூழ்கி சுமார் 180 பேர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. உயிர் பிழைத்தவர்களில் இருவர் எரித்ரேயாவையும், இருவர் எத்தியோப்பா வையும் சேர்ந்தவர்கள் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்­ள­னர்.

வெள்ளை மாளி­கை­யி­லி­ருந்து வெளியேறும் ஒபா­மாவின் புதிய வீடு இதுதான்!!

 
ஒபாமாவின் பத­விக்­காலம் நாளை­யுடன் நிறைவடையவுள்ள நிலையில், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறி புதிய வீட்டில் குடியேறத் தயாராகி வருகின்றனர் அவரது குடும்பத்தினர்.

வொஷிங்டன் புறநகர்ப் பகுதியான கலோரமாவில் 8,200 சதுர அடியிலுள்ள வீட்டில் ஒபாமா குடியேறவுள்ளார்.

வொஷிங்டனில் ஒபாமா தம்பதியின் மகள்களின் பாட­சா­லைக் கல்வி நிறைவடையும் வரை அந்த வீட்டில் குடியிருக்கத் தீர்மானித்துள்ளனர்.

வெள்ளை மாளிகையிலிருக்கும் அவர்களது பொருட்களைப் புதிய வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பணி இடம்­பெற்று வரு­வ­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் செய்தி வெளியிட்­டுள்­ளன.

குளிர்காலத்தில் யானைகளுக்கு ஆடை கொடுத்த புதுமை!!

 
குளிர்காலத்தில் பாதுகாப்பாக தூங்குவதற்காக, யானைகளுக்கு குளிரை தாங்கும் ஆடைகளை தயாரித்து அணிவித்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் மதுரா நகரத்தில் அமைந்துள்ள வனஜீவராசிகளுக்கான அமைப்பான எஸ்ஓஎஸ் யானைகள் பாதுகாப்பு மையத்தில், குளிர்காலத்தில் யானைகளை இதமாக வைப்பதற்கு தேவையான மிகப்பெரிய ஆடைகளை அருகிலுள்ள கிராமத்து பெண்கள் தயாரித்து கொடுத்துள்ளனர்.

முதல் கட்டமாக 20 யானைகளுக்கு தேவையான குளிர் தாங்கும் ஆடைகளை தயாரிப்பதற்கு ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலங்கள் செலவாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு மைய நிறுவனர் கார்த்திக் சத்தியநாராயணன் குறிப்பிட்டுள்ளதாவது யானைகளுக்கு தேவையான பாதுகாப்பை நாம் உருவாக்கியுள்ளோம். அதுபோல குளிரை தாங்கும் ஆடைகளையும் வழங்கி அவற்றின் நலனில் புது வழிகளை பின்பற்ற தொடங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது 20 யானைகளுக்கு மட்டுமே ஆடைகள் அணிவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் குளிர்காலத்திற்கு முதல் சுமார் 50 யானைகளுக்கு தேவையான ஆடைகளை தயாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாழடைந்த காணிக்குள் புதைக்கப்பட்டிருக்கும் மர்மபொருள் : மட்டுவில் மக்கள் பரபரப்பு!!

மட்டக்களப்பு பாரதி லேன் 4 ஆம் வீதியில் அமைந்நது பாழடைந்த தனியார் காணியொன்றில் மர்மமான பொருள் ஒன்று புதைக்கப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த காணியானது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் டெங்கு உருவாகும் வகையிலும் மாசடைந்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்

இந்த காணி உரிமையாளர்கள் எந்தவித கவனம் செலுத்தாமல் உள்ளமையால் இந்த மர்ம புதையல் தொடர்பாக சுகாதார பரிசோதகர் கவனத்துக்கு மக்கள் கொண்டுச் சென்றுள்ளனர்.

குறித்த காணியில் புதைக்கப்பட்டுள்ள மர்மபொருள்ள என்ன என்று தெரியாத நிலையில் மக்கள் அங்கு கூடி நின்றுள்ளதோடு சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.

விபத்து வாய்ப்பு குறைவான, உலகின் மிகவும் பாதுகாப்பான 5 விமானங்கள்!!

 
விமானப் பயணங்கள் இனிமையானவை என்றாலும் மிகக் கோரமான விபத்துக்கள் விமானப் பயணங்கள் மீதான அச்சத்தை உண்டாக்குகின்றன.

இருப்பினும், தற்போது விற்பனையில் உள்ள சில விமானங்கள் மிக மிக பாதுகாப்பான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன.

என்றாலும், எல்லாவற்றையும் மீறி வானிலை, மனிதத் தவறுகள் காரணமாக விபத்துக்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.

இதேவேளை, அனைத்து வித சூழல்களிலும் சில விமான வடிவமைப்புகள் விபத்தில்லா அல்லது மிக மிகக் குறைவான விபத்துக்களில் சிக்கிய புள்ளிவிபரங்களுடன் உலகின் பாதுகாப்பான விமான வடிவமைப்புகளாக அறியப்படுகின்றன.

அவையாவன..

01. எயார்பஸ் A340

உலகின் மிகவும் பாதுகாப்பான விமான வடிவமைப்பாக எயார்பஸ் A340 விமானம் கருதப்படுகிறது. இந்த விமானம் ஒரு விபத்தில் கூட சிக்கியதில்லை என்பது தான் இந்த பெருமைக்கு காரணம். இது A340 – 200, 300, 500 மற்றும் 600 ஆகிய மாடல்களில் விற்பனை செய்யப்பட்டது. 261 முதல் 326 பேர் வரை பயணிக்கும் இருக்கை வசதி கொண்டதாக இருந்தது. கடந்த 1991 ஆம் ஆண்டு முதன்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்ட இந்த விமானம், 1993 இல் பயணிகள் சேவைக்கு வந்தது. லூஃப்தான்ஸா, சைபீரியா, தென்னாபிரிக்கா எயார்லைன்ஸ், சுவிஸ் இன்டர்நேஷனல் எயார்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இந்த வகை விமானம் இருக்கிறது.

இது 4 என்ஜின்கள் பொருத்தப்பட்ட விமானம். இந்த விமானம் மணிக்கு 871 கிமீ வேகம் வரை பறக்கவல்லது. முழுவதுமாக எரிபொருள் நிரப்பினால் 14,400 கிமீ தூரம் வரை பறக்கும். 1993 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 377 எயார்பஸ் A 340 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

02. போயிங் 777

உலகின் மிகவும் பாதுகாப்பான விமான வடிவமைப்புகளில் இரண்டாவது சிறந்த மாடல் என்ற பெருமையை போயிங் 777 விமானம் பெறுகிறது. 18 மில்லியன் மணிநேர பயணத்தில் ஒரு விபத்தில் மட்டும் சிக்குவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1994 ஆம் ஆண்டு முதன்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது. 1995 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. எமிரேட்ஸ், யுனைடேட் எயார்லைன்ஸ், கத்தே பசிஃபிக் மற்றும் எயார் பிரான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விமானத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. கடந்த மாதம் வரை 1,460 போயிங் 777 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 396 பயணிகள் வரை செல்லும் இருக்கை வசதி கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட இந்த விமானம் மணிக்கு 892 கிமீ வேகம் வரை செல்லும். அதிகபட்சமாக 13,650 கிமீ தூரம் வரை பறக்கும்.

03. போயிங் 747

உயிருக்கு அதிக அச்சுறுத்தல் உள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த வகை விமானங்களையே பயன்படுத்துகின்றனர். இந்த விமானத்தின் விபத்து புள்ளி விபரங்களைப் பார்க்கும்போது 17 மில்லியன் மணிநேர பயணத்திற்கு ஒரு விபத்தில் சிக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 1969 ஆம் ஆண்டு இந்த விமானம் முதன்முறையாக பறக்கவிட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 1970 ஆம் ஆண்டில் பயணிகள் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிரிட்டிஷ் எயார்வேஸ், கொரியன் எயார், லூஃப்தான்ஸா, சைனா எயார்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. கடந்த மாதம் வரை 1,568 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 4 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த விமானமானது அதிகபட்சமாக 939 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். முழுவதுமாக எரிபொருள் நிரப்பினால் 14,320 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து செல்லும்.

04. போயிங் 737

புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்த விமானமும் விபத்தில்லா சேவையில் மிகச் சிறந்ததாக இருக்கின்றது. 16 மில்லியன் மணிநேர பயணத்தில் சராசரியாக ஒரு விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

1997 இல் முதன்முறையாக சோதனையோட்டம் நடத்தப்பட்டது. 1998 ஆம் ஆண்டு சேவைக்கு வந்தது. சவுத்வெஸ்ட் எயார்லைன்ஸ், ரையன்எயார், யுனைட்டட் எயார்லைன்ஸ், லயன் எயார் ஆகிய நிறுவனங்களிடம் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் இதுவரை 6,203 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இருக்கை வசதியை பொறுத்து 149 முதல் 220 பேர் வரை செல்லும் மாடல்களில் கிடைக்கிறது. இந்த விமானத்தில் 2 என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. மணிக்கு 844 கிலோமீட்டர் வேகம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம் முழுவதுமாக எரிபொருள் நிரப்பினால் 5,460 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும்.

05. போயிங் 767

இந்த விமானமும் மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. இந்த விமானம் 15 மில்லியன் நேர பயணத்தில் சராசரியாக ஒரு விபத்து வாய்ப்பு இருப்பது புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவருகின்றது.

1981 ஆம் ஆண்டு முதன்முறையாக சோதனையோட்டம் நடத்தப்பட்டது. 1982 ஆம் ஆண்டில் சேவைக்கு வந்தது. இதுவரை 1,096 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இரட்டை என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த விமானம் மணிக்கு 900 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். முழுவதுமாக எரிபொருள் நிரப்புகையில், 12,200 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும்.

மார்ச் மாத இறுதி வரை மழை இல்லை : வறட்சியினால் மின்சாரத்திற்கும் தட்டுப்பாடு!!

மார்ச் மாத இறுதி வரை போதுமான மழையை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

தொடரும் வறட்சி குறித்து தெளிவுபடுத்துவதற்காக சில அரச நிறுவனங்கள் இணைந்து நேற்று ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது, வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் ஓரளவு மழையை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாட்டிற்கு முழுமையான தீர்வு கிடைக்காது என லலித் சந்திரபால மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வறட்சியினால் ஏற்பட்டுள்ள மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக 60 மெகா வாட்ஸ் மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய விலை மனு கோரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் அநுர விஜயபால குறிப்பிட்டார்.

எனினும், மின்சாரத்தை மக்கள் சிக்கனமாகப் பாவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், களுத்துறை மாவட்டத்தில் நீர் விநியோகத்தில் பிரச்சினை இருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் அலாவுதீன் அன்சார் தெரிவித்தார்.

கடல் நீர் ஆற்றில் கலப்பதாலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளதென சுட்டிக்காட்டிய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர், அந்த நீரை சுத்தப்படுத்தி மக்களுக்கு விநியோகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

மாத்தறை மாவட்டத்தில் நிலவும் பிரச்சினை காரணமாக அங்கு1 மணித்தியாலத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

காதலன் மீது அசிட் வீசிய இளம்பெண்!!

பெங்களூரில் திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது இளம்பெண் ஒருவர் அசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லிதியா (வயது 26) என்பவர் பெங்களூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரும், துணி வியாபாரியான ஜெயக்குமாரும் (30) கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் லிதியா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜெயக்குமாரிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. அப்போது ஜெயக்குமார் திருமணத்துக்கு மறுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து, அவர் லிதியாவை சந்திப்பதையும் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் லிதியாவை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய ஜெயக்குமார் முயற்சித்ததாக தெரிகிறது. இதை அறிந்து லிதியா அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் தன்னை ஏமாற்ற நினைத்த ஜெயக்குமாரை பலி வாங்க லிதியா திட்டம் தீட்டினார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு ஜெயக்குமார் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை தனது ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து சென்ற லிதியா, ஜெயக்குமார் மீது அசிட் வீசினார்.

மேலும், ஜெயக்குமாரின் முகத்தில் பிளேடால் சரமாரியாக கீறிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் ஜெயக்குமாரின் முகம் ரத்த வெள்ளமாக மாறியது.

இதையடுத்து ஜெயக்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று லிதியாவை கைது செய்தனர்.

திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது இளம்பெண் ஒருவர் அசிட் வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய விதிகளுடன் வாகன லீசிங் முறை அமுல்!!

இவ்வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட வாகன கொள்வனவு தொடர்பான லீசிங் முறைமை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இது குறித்தான விதிமுறைகள் வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அதனை கடந்த திங்கட்கிழமை (16) முதல் நடைமுறைப்படுத்துமாறு, தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய,

சுற்றுலா மற்றும் போக்குவரத்து துறை தொடர்பான வாகன கொள்வனவுக்கு 100% லீசிங் வசதி
முச்சக்கரவண்டிக்கு, பெறுமதியில் 10% இனை செலுத்தி பெறும் முறை 25% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
# மோட்டார் கார் மற்றும் வேன்களுக்கு 50% லீசிங் வசதி
# லொறி மற்றும் கனரக வாகனங்களுக்கு, 90% லீசிங் அறவிடப்படும்.

பிரான்ஸில் ஜனாதிபதி வேட்பாளரை நடுரோட்டில் அடித்த இளைஞன்!!(வீடியோ)

பிரான்ஸ் நாட்டின் பிரதமராக 2014லிருந்து 2016 வரை பதவி வகித்தவர் Manuel Valls. உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ள இவர் தற்போது நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் சோசலிச கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்குகிறார்.

இதற்காக அவர் தற்போது தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்துக்காக வட மேற்கு பிரான்ஸில் உள்ள பிரிட்டானி பகுதிக்கு வந்த அவர் அங்கு மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த மக்களிடம் அவர் வாக்கு சேகரித்து கொண்டிருந்த போது அங்கு வந்த 18 வயது இளைஞர் ஒருவர் Valls கன்னத்தில் பளாரென அறைந்தார்.

உடனே அவர் அருகில் இருந்த பாதுகாவலர் அந்த இளைஞனை பிடித்து தரையில் தள்ளி அடித்தார். பின்னர் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து Valls கூறுகையில், நான் பொது மக்களை சந்திக்க என்றுமே பயந்ததில்லை. வன்முறை எதற்குமே தீர்வாகாது என அவர் கூறியுள்ளார்.

போன மாதம் Valls மீது இதே போல ஒருவர் மாவை ஒரு துணியில் வைத்து அவர் உடை மீது கொட்டியது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட் என்னவென்று தெரியுமா?

 

கடந்த 2016 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட்களின் பட்டியலில் 123456 முதலிடம் பிடித்துள்ளது.

இணையதள ஹெக்கிங் நடவடிக்கைகளை தடுக்க பலர் பல்வேறு கடவுச்சொற்களை (password ) கணனிகளிலும், மொபைலிலும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிகமான பயனர்கள் பயன்படுத்திய கடவுச்சொல் 123456 என்பது கீப்பர் செக்யூரிட்டி (Keeper Security) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கீப்பர் செக்யூரிட்டி நிறுவனம் உலகின் முதல் 25 இடங்களில் உள்ள கடவுச் சொற்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. அதில் முதலிடத்தில் ‘123456’ இடம்பெற்றுள்ளது.

மேலும் கீ போர்ட்களில் காணப்படும் வரிசை ‘qwerty’என்பதையும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிய வந்துள்ளது .

கீப்பர் செக்யூரிட்டி நிறுவனம் வெளியிட்ட பட்டியல் பின்வருமாறு….

1. 123456
2. 123456789
3. qwerty
4. 12345678
5. 111111
6. 1234567890
7. 1234567
8. password
9. 123123
10. 987654321
11. qwertyuiop
12. mynoob
13. 123321
14. 666666
15. 18atcskd2w
16. 7777777
17. 1q2w3e4r
18. 654321
19. 555555
20. 3rjs1la7qe
21. google
22. 1q2w3e4r5t
23. 123qwe
24. zxcvbnm
25. 1q2w3e