ஒரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்: பன்னீர் செல்வம் அறிவிப்பு!!


ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, மிருகவதை தடை சட்டத்தில், மாநிலம் சார்பில் திருத்தம் செய்யப்பட்டு, வரைவு அவசர சட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.இந்த வரைவு சட்டம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, குடியரசுத் தலைவர், பிரதமரிடம் ஒப்புதல் பெற்று இந்த சட்டம் பிறப்பிக்கப்படும்.

இதனைத்தொடர்ந்து, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டுக்கு ஓரிரு நாட்களில் அவரச சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என கூறியுள்ளார்.இதனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என கூறியுள்ளார்.

பன்னீர் செல்வத்தின் இந்த அறிவிப்பை மாணவர்கள் வரவேற்றுள்ளனர். இருப்பினும் வாடிவாசல் திறந்து, அதனுள் இருந்து காளைகள் சீறிப்பாயும் காட்சியை பார்க்கும் வரை நாங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என கூறியுள்ளனர்.மேலும், இது உலக தமிழர்களுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் 1,500 பேருக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கவுள்ள ஜனாதிபதி!

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு 1,500 பேருக்குக் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்களையும், 500 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியையும் வழங்கி வைக்கவுள்ளார்.எதிர்வரும் 25ஆம் திகதி முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் இடம்பெறும் நிகழ்வில் பாடசாலைக் கட்டடத் திறப்பு விழாவுடன் 1500 பேருக்கான காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைப்பதோடு. அத்துடன் 500 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வைக்கவுள்ளார்.மேலும் கேப்பாப்புலவில் விடுவிக்கப்படும் நிலங்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடல் கூட்டமொன்று முள்ளிவளை வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெற்றது.இக்கூட்டத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர், மாவட்ட செயலர் முல்லைத்தீவு மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டவர்களினால் இலங்கையில் ஏற்பட போகும் மாற்றம்..!


சமீப காலமாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பணிகள் இலங்கைக்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு வரும் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 2 லட்சமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜீன் மெரின் சூ இந்த தகவலை தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு 20 ஆயிரம் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், 2017ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகைத்தரும் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரிக்க கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கினால் 29 வயதான இலங்கை பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி!


கம்பஹாவை சேர்ந்த பெண்ணொருவரிடம் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பிரதான நீதவான் டீ.ஏ.ருவண் பத்திரன உத்தரவிட்டுள்ளார்.பேஸ்புக்கில் நண்பராகி குறித்த பெண்ணிடம் 8 லட்சத்து 65 ஆயிரதம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்த குற்றச்சாட்டில் நைஜீரிய இளைஞனருக்கு நீதிபதி விளக்கமறியல் உத்தரவிட்டார்.

சந்தேகநபரான நைஜீரிய நாட்டவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்து கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.இதன்போது கம்பஹா மோசடி விசாரணை பிரிவினர் கோட்டை நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கமைய சந்தேகநபர் சிறைச்சாலை ஊடாக கம்பஹா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கம்பஹா டிக்மன் வீதியில் வசிக்கும் 29 வயதுடைய திருமணமான பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிகின்றார்.இந்த நிலையில் சந்தேக நபரான நைஜீரிய நாட்டவர் பேஸ்புக் ஊடாக குறித்த பெண்ணை அறிந்து கொண்டு, அந்த பெண்ணுக்கு நைஜீரிய நாட்டில் இருந்து பரிசு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.அந்த பரிசில் உள்ள தங்க நகைகளுக்கு வரி செலுத்த வேண்டும் என கூறி பல முறை இலங்கை வங்கிகள் இரண்டில் பணம் வைப்பு செய்யுமாறு கூறி இவ்வாறு பணத்தினை மோசடி செய்துள்ளதாக நீதிமன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் முறைப்பாட்டாளர் வங்கியில் பணம் வைப்பு செய்ததற்கான தகவல்களை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சந்தேக நபரிடம் வாக்குமூலம் ஒன்று பெற்றுக் கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணிகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் சந்தேக நபர் பேஸ்புக் ஊடாக இலங்கை பெண்களிடம் நட்பு ஏற்படுத்தி பணம் மோசடி செய்துள்ளதாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையான செய்தியாளர்கள் யார்? சொல்கிறார் ஜனாதிபதி

நிலைபேறான அபிவிருத்திச் சமுகத்தின் பொறுப்புக்களையும், கடமைகளையும் நிறைவேற்றும் போது பாடசாலை மாணவர்கள் உண்மையான செய்தியாளர்களாக திகழ்கிறார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.திகன ஹெங்கல்ல மகாவித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிலைபேறான அபிவிருத்தி பாடசாலை சங்கங்களை அமைக்கும் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நிலைபேறான பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் வழிகாட்டல் கோவையை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் ஜனாதிபதி இதன்போது கையளித்துள்ளார்.இந்தத் திட்டம் தொடர்பான இணையத்தளம் ஒன்றும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

வாகனம் கால்வாயில் விழுந்து விபத்து – சகோதரர்கள் பலி!!

தெஹியத்தங்கண்டிய பகுதியில் இன்று அதிகாலை கெப் ரக வாகனம் கால்வாயில் விழுந்ததில் இருவர் பலியாகியுள்ளனர்.வாகனத்தில் பயணித்தவர்களே குறித்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் சடலங்களின் பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் நடாத்தப்படவுள்ளன என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெஹியத்தங்கண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் செய்த இளைஞன் விபத்தில் மரணம்!!

கிளிநொச்சி – புளியம்பொக்கணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியாகிய இளைஞன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர் என தெரியவந்துள்ளது.குறித்த விபத்து கிளிநொச்சி – புளியம்பொக்கணை பகுதியில் நேற்று இரவு நடந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதில் பலியாகிய இளைஞன் யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை கற்கை நெறியை கடந்த ஆண்டில் நிறைவு செய்திருந்த சுப்பிரமணியம் முரளிதரன் (வயது24) எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி – கந்தசுவாமி கோவில் முன்பாக நேற்றுமாலை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த போராட்டத்தில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடுதிரும்பிய நிலையில் கனரகவாகனம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் குறிப்பிட்டிந்தனர்.

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழினுட்ப ஆய்வுகூட கட்டடம் திறந்து வைப்பு!(படங்கள்)

உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்க நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட  வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழினுட்ப ஆய்வுகூட  கட்டடம் உள்ளுராட்சிகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் நேற்று (19.01.2017) திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வானது மாணவர்களின் பாண்ட் வாத்தியத்துடன்  பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு பிரதம விருந்தினரால் தொழினுட்ப ஆய்வுகூடத்தின்  கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், பாடசாலையில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கான கௌரவிப்பையும் வறிய மாணவர்களுக்கான உதவித்திட்டமும் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. அமைச்சரின் வருகையினை நினைவுபடுத்தி மரநடுகை நிகழ்வொன்றும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே.கே.மஸ்தான் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் உள்ளுராட்சிகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் மேலதிக செயலாளர்கள் எஸ்.டி.ஏ.பி.பொரலெஸ்ஸ, எம்.எம்.நஜீமுதீனும் பணிப்பாளர்கள் என்.டி.என்.புஸ்பகுமார, ஏ.பி.இளஞ்கிங்க, டி.பி.சமரக்கோனும் உதவிப் பணிப்பாளர்களான ஜி.ரஞ’சித், பிரசாத், டிமுத் ரணசிங்க, வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளர்  வை. சிறீஸ்கந்தராஜா,  மற்றும்அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மரத்தில் கயிறுகட்டி விளையாடிய சிறுவர்களுக்கு நேர்ந்த அவலம்!!

 
வவுனியா பாரதிபுரம் ஐம்பது வீட்டுத்திட்டம் பகுதியில் வசித்துவரும் ஒரே குடும்பத்ததைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் விளையாட்டிற்கு மரத்தில் கயிறுனைப் போட்டு கழுத்தில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராமல் இருவரின் கழுத்தில் கயிறு இறுக்கி கழுத்தில் காயங்களுடன் அயலவர்களின் உதவியுடன் இன்று மாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பாரதிபுரம் ஐம்பது வீட்டுத்திட்டம் பகுதியில் வசித்துவரும் குறித்த சகோதரர்கள் இருவரின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகின்றார். தந்தை வேலைக்குச் சென்றுள்ளார். சிறுவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்கள்.

இன்று மாலை இருவரும் மரத்தில் கயிறுபோட்டு அதனை தமது கழுத்தில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கயிறு கழுத்துப் பகுதியில் இறுகி இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது குறித்த சிறுவர்கள் இருவர்களின் கூக்குரலினையடுத்து அயலில் உள்ளவர்கள் சென்று இருவரையும் மீட்டுள்ளனர்.

12 மற்றும் 13வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது விபரீதத்தினை எதிர்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  

கார் சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் : மீறினால் வழக்கு!!

கார் சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இரு பக்கமாக இருக்கும் ஜன்னல்களில் திரைகளை பயன்படுத்துதல் மற்றும் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை மீறுபவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முச்சக்கரவண்டிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பயணிகள் போக்குவரத்து மற்றும் பாடசாலை வேன் சேவையினை தரமிக்கதாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மாங்குளத்தில் பதற்றம் : பொலிஸார் குவிப்பு!!

 
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் காணப்படும் மாங்குளத்தில் பொதுமகன் ஒருவர் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான குளத்துக் காணியில் அத்துமீறி பாதையமைத்ததையடுத்துள்ளமையால் அங்கு சற்று பதற்றமான நிலை காணப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் காணப்படும் மாங்குளத்தில் பொதுமகன் ஒருவர் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான குளத்துக் காணியில் அத்துமீறி பாதையமைத்தமையினையடுத்து கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் இரண்டு தடவைகள் கடிதம் மூலம் உத்தியோகபூர்வமான அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொதுமகனால் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு இவ் பாதையினை ஒரு சில வாரங்களில் அப்புறப்படுத்துவதாக பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும் இவ் பாதை அகற்றப்படாததையடுத்து இன்று (19.01.2017) மாலை 3 மணியளவில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து அமைக்கப்பட்ட பாதையினை அப்புறப்படுத்து நடவடிக்கையில் ஈடுபட்ட சமயத்தில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு அப்புறப்படுத்துவதை நிறுத்துமாறு தெரிவித்தனர்.

இதனால் அவ்விடத்தில் சற்று பதற்ற நிலை காணப்பட்டது. அதன் பின்னர் செட்டிக்குள பொலிஸாரின் தலையீட்டால் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஜயகுமார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்வதாக தெரிவித்து சம்பவ இடத்திலிருந்து சென்றார்.

அத்துடன் செட்டிக்குள பிரதேச பிரிவில் காணப்படும் முல்லைக்கல் குளக் காணியிலும் அடாத்தாக பாதை இன்று அமைத்துக் கொண்டிருப்பதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் கோரி கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தரால் செட்டிக்குள பொலிசில் 2000ம் ஆண்டின் 46ம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 83வது பிரிவின் கீழ் முறைப்பாடும் இடப்பட்டது.

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக ட்ரம்ப நாளை பதவியேற்கிறார்!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் 45வது ஜனாதிபதியாக நாளை பதவி ஏற்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, டொனால்டு டிரம்ப் (வயது 70) வெற்றி பெற்றார். அவர் வாஷிங்டனில் நாளை (20ம் திகதி) நடக்க உள்ள பிரமாண்ட விழாவில் அந்த நாட்டின் 45-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

அவர் பதவி ஏற்கும்போது இரண்டு பைபிள்களை பயன்படுத்துகிறார். ஒன்று, முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்தியது. மற்றொன்று, டிரம்ப் தனது குழந்தைப்பருவத்தில் பயன்படுத்தியது.

அவர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கிற விழா, ‘மீண்டும் அமெரிக்காவை மாபெரும் நாடாக்குவோம்’ என்ற பொருளில் கொண்டாடப்படுகிறது.

டிரம்ப் பதவி ஏற்பு விழாவுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பதவி விலகிச்செல்கிற ஜனாதிபதி ஒபாமா நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டார்.

பதவி ஏற்பு விழாவை நேரில் காண்பதற்காக வாஷிங்டனில் அமெரிக்கர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றனர். இந்திய வம்சாவளியினரும் திரளாக குவிகின்றனர்.

டிரம்ப் பதவி ஏற்பு விழாவையொட்டி, அவரது ஆதரவாளர்கள் வாஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்கனவே நடத்த தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஸ் – லொறி மோதி பயங்கர விபத்து : 24 சிறுவர்கள் உயிரிழப்பு!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளிப்பேருந்து மீது லொரி ஒன்று மோதியதில் 24 இற்கும் அதிகமான சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஈடா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த பேருந்து இன்று காலையில் மாணவர்களுடன் வந்து கொண்டிருந்தது.

ஆசாத்பூர் கிராமம் அருகே வரும் போது, திடீரென எதிர்பாரத விதமாக எதிரே வந்த லொரி மீது பேருந்து மோதியதில், பேருந்தில் இருந்த 24க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.

மேலும், பல குழந்தைகள் படுகாயமடைந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அந்த மாவட்டத்தில் கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், பள்ளி நிர்வாகம் அந்த உத்தரவை மீறி பள்ளியை திறந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பலியான குழந்தைகளின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்த குழந்தைகள் விரைவில் குணமாகிட தான் பிராத்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டம் ஓயக்கூடாது : விஜய் சேதுபதி ஆவேசம்!!

ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் வரை போராட்டம் ஓயக்கூடாது என்று மாணவர்களை சந்தித்து நடிகர் விஜய்சேதுபதி ஆதரவு தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இங்கு ஏராளமானவர்கள் பீட்டா அமைப்புக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுக்கு எதிராகவும் கோசம் போட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி வந்தார். அவர் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது..

தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டாக சங்க காலத்திலேயே அடையாளம் காட்டப்பட்டது ஜல்லிக்கட்டு. இந்த வீர விளையாட்டுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமங்களில் பொங்கல் விழா களை இழந்து உள்ளது. இந்த தடை தமிழ் இனத்துக்கே செய்யும் துரோகம் ஆகும். தற்போது மாணவர்கள் ஒருங்கிணைந்து பாரம்பரியத்தை காக்க போராடுவது பாராட்டுக்குரியது.

ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்கும் வரை நமது போராட்டம் ஓயக்கூடாது. உங்களது போராட்டத்துக்கு நான் எப்போதும் துணை நிற்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

திண்டுக்கல் அருகே ஆத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கருப்பன் பட சூட்டிங் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற விஜய்சேதுபதி திடீரென மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் : கொலை செய்து சூட்கேஸில் அடைத்த கணவன்?

லண்டன் – லீசெஸ்டர்ஷயர், எவிங்டன் என்ற இடத்தில் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவரின் சடலத்தை பயணப்பை (சூட்கேஸ்) ஒன்றில் அடைத்த குற்றச்சாட்டுக்காக குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரண் டோடியா (46) என்ற பெண்ணையே கொலை செய்து அவரின் உடலை பயணப்பையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளது.

கிரண் டோடியாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர் கடந்த 17 வருடங்களாக லண்டனில் பணியாற்றி வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எவிங்டன் என்ற இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் பயணப்பை ஒன்று இருப்பதைக்கண்டு அந்த நாட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த நாட்டு பொலிஸார் குறித்த பெண்ணின் சடத்தை பயணப்பையிலிருந்து எடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கிரணின் கணவர் அஷ்வின் டோடியாவை (50) லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

வித்தியா கொலை வழக்கில் எப்போது தீர்ப்பு?

பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் பல வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் வெளியுலகத்திற்கு கொண்டு வரப்படுபவை ஒரு சில மாத்திரமே.

மற்றவைக்கு என்ன நடக்கின்றது, ஏன் வெளி கொண்டு வரப்படுவதில்லை, பெண்ணென்பவள் துணிச்சல் மிக்கவளாக இருக்க வேண்டும் என சிலர் வசனம் பேசுவார்கள்.

ஆனால் இவ்வாறு தனக்கு நடக்கும் வன்முறைகளையும், கொடுமைகளையும் வெளிக்கொணர முடியாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கும் காரணிகள் என்ன என்பது குறித்து யாரும் சிந்திப்பதில்லை.

அங்கு தான் எல்லோரும் தவறிழைக்கிறார்கள். எந்த பெண்ணுமே தன்னுடைய நலனை மாத்திரமே கருதி செயற்படுவதில்லை. குடும்பம், சமூகம், கௌரவம் இவை தான் வன்முறைகள் வெளிவராமல் இருப்பதற்கான முக்கிய காரணம்.

என்னதான் கலாச்சாரம் மாறியிருந்தாலும், நாகரீகம் வளர்ந்திருந்தாலும் உலகில் பெரும்பாலான பெண்கள் குடும்பம், சமூகம் மற்றும் கெளரவம் என்னும் வலைகளுக்குள் சிக்கி திணறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பல விழிப்புணர்வு கூட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, அது மக்களை ஏமாற்றுவதற்கான போலி நாடகமாகவே காணப்படுகிறது. அந்தவகையில் அதிகளவில் பேசப்பட்ட ஒரு விடயமே சுவாதி கொலைச்சம்பவம்.

இந்த கொலைச்சம்பவத்திற்கான காரணகர்த்தா யார்? என தெரியவராத நிலையில், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் சிறைக்குள்ளேயே வைத்து தற்கொலை செய்துகொண்டாத தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இலங்கையில் பரவலாக பேசப்பட்ட, அனைவரது மனதினையும் உருக்கிய சம்பம் புங்குடு தீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்.

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் கொலை வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 12ஆம் திகதி வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த மாணவி கொலை செய்யப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்னும் தண்டனை கிடைக்கவில்லை.

குறித்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நீதிமன்றில் தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இது வரையிலும் அவர்களுக்கான விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இந்த கொலை வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் விரைவாக அடையாளம் காணப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே அனைவரினது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டுமாயின், இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்திருக்கின்றனர்.