வவுனியாவில் இரு வேறு இடங்களில் அடிக்கல்நாட்டும் நிகழ்வு!!

 
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரு பகுதிகளில் வீடமைப்பு அதிகார சபையின் அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமத்திற்கு கிராமம் – வீட்டிற்கு வீடு செமட்ட செவண மாதிரிக்கிராம வேலைத்திட்டம் வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வவுனியா செட்டிகுளம், பெரியகுளம் பகுதியில் மீள் குடியேற்றப்பட்டு வீடுகளின்றி வசித்துவரும் 87குடும்பங்களுக்கும், பாவற்குளம் 6ம் யூனிட்டில் வசித்துவரும் 16 குடும்பங்களுக்கும் என இருவேறு இடங்களில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

ஐந்து இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுவரும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டத்தில் ஆரம்ப நிகழ்வு இன்று (11.01.2017) காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் திருமதி குறுஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், ஜக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் எம்.எம்.சிவலிங்கம், பி.எம்.மகீர், செட்டிகுளம் உதவி பிரதேச செயலாளர் திரு.முகுந்தன், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள், செட்டிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம அபிவிருத்திச்சங்கம், பயனாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையில் கால்கோள் விழா!!

 
வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையில் கால்கோள் விழா இன்று (11.01.2017) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையின் அதிபர் தி.யுவராஜா தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக உமா இராசையா ( ஒய்வு பெற்ற அதிபர் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி) , பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தரம் ஒன்று மாணவர்கள் புதிதாக பாடசாலைக்கு இணைந்த மாணவர்களை பூக்கோத்து கொடுத்து வரவேற்றதுடன் குழுப்பாடல், நடனம் என பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வவுனியாவில் வடமாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியா கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இன்று (11.01.2017) காலை 11 மணியளவில் காணாமல் போனோரின் உறவினர்கள் வடமாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டமொ ன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது காணாமல் போணோரின் உறவினர்களினால் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் புகைப்படம் ஏரிக்கப்பட்டது. இதனை வடமாகாண சுகாதார அமைச்சர் உண்ணாவிரதம் இருந்தவர்கள் விசமிகள் என தெரிவித்தமையால் இன்று அமைச்சருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புலம்பெயர் தமிழர்களே காசு கறக்க கனடா வரும் சுத்திய அமைச்சர் ஜாக்கிரதை , சம்பந்தன் தீர்வு குழந்தையைப் பெற கஸ்டப்படுகிறார் டாக்குத்தர் நீ போய் வைத்தியம் பார்த்து விடு , செத்த பிணங்கள் எங்களை பார்த்து விசமிகள் என்று கூறுவதா?, ஊழல் விசாரணைக் குழுவுக்கு முன்னாள் ஆஜராகி முதலில் உன்னை யோக்கியம் என்று ந ரூபி என பல்வேறு பாதாதைகளை தாக்கிய வண்ணம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் விடயம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியோக செயலாளரிடம் தொடர்பு கொண்டபோது, அமைச்சர் தற்போது வெளிநாட்டிக்குச் சென்றுள்ளார். அவர் மீண்டும் இலங்கை வந்ததன் பின்னர் கருத்து தெரிவிப்பதாக தெரிவித்தார்.

சுமார் ஒரு மணிநேரம் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இடம்பெற்ற மார்கழி திருவாதிரை ஆருத்தரா தரிசனம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் 2016.01.11 புதன்கிழமை அதிகாலை மார்கழி உற்சவத்தின் போதான ஆருத்திரா தரிசனம்   மிக சிறப்பாக இடம்பெற்றது .

மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில்  உள்ள  நடராஜர் பெருமானுக்கு  விசேட  அபிசேகங்கள் இடம்பெற்று  வசந்த மண்டப   பூஜையின் பின்  நடராஜ பெருமான்  ஆடி ஆடி   உள்வீதி வெளி வீதி  வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .

ign: center;”>

 

அப்பா இல்லாத போதும் அம்மாவின் வழிகாட்டுதலே என்னை வவுனியா மாவட்டத்தில் சாதிக்கவைத்தது!!

அப்பா இல்லாத போதும் அம்மாவின் வழிகாட்டுதலே என்னை வவுனியா மாவட்டத்தில் சாதிக்கவைத்து ஒரு மாணவனாக மாற்றியமைத்தது என வவுனியா மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் ரங்கநாதன் ஜதுகுலன் தெரிவித்துள்ளார்.

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ரங்கநாதன் ஜதுகுலன் வர்த்தகப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். தனது வெற்றி குறித்து மாணவன் தெரிவித்ததாவது..

எமது பாடசாலை வரலாற்றிலும், வவுனியா வடக்கு வலயத்தின் வரலாற்றிலும் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெறுவது இதுவே முதல் தடவை.

அந்த நிலைக்கு நான் வருவதற்கு எனக்கு வழிகாட்டிய எனது பாடசாலையின் முன்னைநாள் அதிபர் அமிர்தலிங்கம், தற்போதைய அதிபர் சுபாஸ்கரன், எனக்கு கற்பித்த கணக்கீடு ஆசிரியர் நிமால், பொருளியல் ஆசிரியர் ஞானேஸ்வரன், வர்த்தக ஆசிரியர் சிவாஜின் ஆகியோருக்கும் எனக்கு நிதி உதவிகளை வழங்கியவர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இதற்கு மேலாக அப்பா இல்லாத போதும் அம்மாவின் வழிகாட்டுதல்களே என்னை வவுனியா மாவட்டத்தில் சாதிக்க கூடிய ஒரு மாணவனாக மாற்றியமைத்தது.

எதிர்காலத்தில் ஒரு கணக்காளராக வரவேண்டும். இன்னும் படிக்க வேண்டும் என்பதே எனது அவா எனத் தெரிவித்தார்.

விடைபெறும் யாகூ : இனிமேல் யாகூ கிடையாது!!

யாகூ நிறுவனத்தின் பெயர் அல்டாபா(Altaba) என மாற்றப்பட உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாகூவின் பயனாளர்கள் கணக்கு திருடப்பட்டன, இதனையடுத்து மாபெரும் மாறுதல்களை முன்னெடுக்கும் நோக்கில் யாகூவின் பெயர் அல்டாபா என மாற்றப்பட உள்ளது.

இதற்கிடையே யாகூவின் செயல் தலைவர் உட்பட தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பதவி விலக முடிவு செய்துள்ளதாகவும், யாகூவின் இயக்குனர் எரிக் பிராண்டே தலைவராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கலக்கப்போகும் இலங்கை புதுமுகங்கள் : இலங்கை தேர்வாளர்கள் அதிரடித் திட்டம்!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான T20 தொடரில் இலங்கையில் அணியில் அறிமுக வீரர்கள் முதன் முறையாக சர்வதேச களத்தில் களமிறங்கி கலக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய வீரர்களை இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான T20 தொடருக்கான அணியில் புதிய முகங்களான சகலதுறை வீரர் Thikshila de Silva, துடுப்பாட்டகாரர்களான Sandun Weerakkody மற்றும் Niroshan Dickwella தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Mahinda College Galle மாணவனான 23 வயது Thikshila, துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் திறன் படைத்தவராக திகழ்கிறார். உள்ளூரில் அவர் பங்கேற்ற 16 T20 போட்டிகளில் 15 சிக்சர்ஸ் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய சுற்றுப்பயணத்தில் Weerakkody, Niroshan Dickwella இருவரும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது Weerakkody சதம் அடித்து அசத்தியுள்ளார்.

எனினும் இதை உறுதி செய்யும் வகையில் ஜனவரி 20ம் திகதி தொடங்கவுள்ள T20 தொடருக்கான இலங்கை அணியை இலங்கை தேர்வாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சி : கமராவில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ!!

போலந்து நாட்டில் உள்ள ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை கிழே தள்ளிவிட்டு கொலை செய்ய முற்பட்ட நபரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலந்தில் Leszno நகரில் உள்ள ரெயில்வே நிலையத்தில் சுமார் 72 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், வீல் சேரில் சென்றுள்ளார். அப்போது அவர் அங்கு ரெயிலில் செல்வதற்காக காத்துக் கொண்டிருந்த போது 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவரிடம் பேசத் தொடங்கியுள்ளார்.

இருவரும் நன்றாக பேசியுள்ளனர். அப்போது முதலில் வந்த ரெயிலில் அந்த நபர் செல்ல வேண்டாம் என்றும் அடுத்து வரும் ரெயிலில் செல்லலாம் என்று கூறியுள்ளார். இதனால் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணும் தமக்கும் உதவியாக இருக்கும் என கருதி சரி என்று அடுத்து ரெயில் வருவதை எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த நபர் மாற்றுத்திறனாளி வீல் சேரில் இருந்ததால் அவரை நகர்த்திச் சென்றவாறு பேசியுள்ளார். அப்போது திடீரென்று அவர், வீல் சேரில் இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை ரெயிநிலையத்தின் நடைபாதைக்கு கீழே உள்ள தண்டவாளத்தில் தள்ளிவிட்டு, கற்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதைக் கண்ட அருகில் இருந்த சக பயணிகள் இருவர் அவரை தடுத்து, அப்பெண்ணை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் அவருக்கு சில இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதால் தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குதலுக்கான காரணம் குறித்து இன்னும் சரிவர தகவல் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் மீது கொலை செய்ய முயற்சித்ததாக கூறி பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் மனநிலை சரியில்லாதவரா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இரண்டு வயது சிறுவனை கடத்திச் சென்று கொடுமைப்படுத்திய கொடூரன் : அதிர்ச்சி தரும் காரணம்!!

இந்திய தலைநகர் டெல்லியில் திருமணத்திற்கு மறுத்த பெண்மணியின் குழந்தையை கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கிய கொடூரனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

டெல்லியில் கணவருடன் குடியிருந்து வருபவர் 25 வயதான சோனி. இவரது மகன் ஆதித்யா(2) திடீரென்று காணாமல் போனதாக கூறப்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்களுடன் இணைந்து சோனி மற்றும் கணவரும் தேடுதலில் ஈடுபட்டனர்.

ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அடுத்த நாள் காலையில் சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படும் பகுதியில் சிறுவன் ஒருவனது முனகும் குரல் கேட்ட சாரதி ஒருவர் குறித்த பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

முகம் மற்றும் உடலில் பல பகுதியில் அமிலத்தால் அந்த சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் உடல் வெந்து மிகவும் ஆபத்தான நிலையில் சிறுவனை அப்பகுதியில் தள்ளிவிட்டு குற்றவாளிகள் தப்பியுள்ளனர்.

இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்ட சோனி உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றார். ஆபத்து கட்டத்தை தாண்டிய சிறுவனிடம் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்திய நபர் 20 வயதான கோவிந்த் ராம் எனமும், மங்கல் என்ற நபருக்காக இந்த கொடுஞ்செயலை தாம் செய்ததாகவும் ராம் ஒப்புக்கொண்டுள்ளான்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய மங்கல் என்பவன், சோனியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பல ஆண்டுகளாக தொல்லை தந்து வருபவன்.

மங்கலின் தொல்லை காரணமாக சோனியின் குடும்பம் தங்களது கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து வேறு பகுதிக்கு குடியேறியுள்ளது.

இருந்தும் மங்கல் தொடர்ந்து தொல்லை அளித்து வந்துள்ளான். சோனி தற்போது 8 மாத கர்ப்பிணியாகவும் 2 வயது குழந்தைக்கு தாயாராகவும் உள்ளார்.

இருப்பினும் அந்த நபர் தொடர்ந்து தொல்லை அளித்து வரும் நிலையில் தற்போது தமது குழந்தையை கடத்தி சென்று தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் தம்மால் தாங்க முடியவில்லை என்று சோனி பொலிசாரிம் முறையிட்டுள்ளார்.

தற்போது தலைமறைவாக இருக்கும் மங்கலை கைதும் செய்யும் நோக்கில் பொலிசார் முனைப்பு காட்டி வருகின்றனர்.

வவுனியாவில் அரச ஊழியர்கள் பற்றாக்குறை!!

வவுனியா மாவட்டத்தில் அரச ஊழியர்களின் பற்றாக்குறை நிலவுவதாக மாவட்டச் செயலாளர் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இதனால், அரச பணிகளை மக்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், வவுனியா மாவட்டத்தில் 102 கிராம சேவர்கள் தேவைப்பட்ட ​போதிலும் தற்போது 62 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

அதனால் தற்போது கிராம அதிகாரிகளை தெரிவு செய்வதற்கான பரீட்சை நடத்தப்பட்டுள்ளதுடன், விரைவில் அவ்வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், தொழில்நுட்ப அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள், சமுர்த்தி முகாமையாளர்கள் பதவிகளிலும் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

மாவட்டத்தில் தொழில்நுட்ப அதிகாரிகளின் பற்றாக்குறையினால் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை சரிவர நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் கால் பதிக்கும் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன்!!

நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் தனது சேவையினை இலங்கையிலும் விஸ்தரிக்கும் நோக்கில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.ராதகிருஸ்ணன் அகரம் பவுண்டேஷன் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வறுமையில் இருக்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்காக கொண்டு கடந்த 2006ஆம் ஆண்டு அகரம் பவுண்டேஷன் ஆரம்பிக்கப்பட்டது.

அகரம் பவுண்டேஷனின் வருடாந்த ஒன்று கூடல் அண்மையில் இடம்பெற்ற நிலையில், அதில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.ராதகிருஸ்ணன் அவர்களும் கலந்துகொண்டார்.

இதன் போது அகரம் பவுண்டேஷன் இலங்கையில் செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து ஆராயும் நோக்கில் அகரம் பவுண்டேஷனின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தாய்மையடையும் முதலாவது ஆண்!!

பிரித்தானியாவை சேர்ந்த ஆண் ஒருவர் சமூக வலைதளங்கள் ஊடாக விந்தணு தானம் பெற்றுக்கொண்டு கருதரித்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த ஹைடன் கிராஸ் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டப்பிரகாரம் ஆணாக மாறியுள்ளார்.

எனினும், அவர் இன்னும் முழுவதுமாக மாறவில்லை. இதனால் அவரது உடலில் கருப்பை உள்ளது. இதை உணர்ந்த ஹைடன் தாய்மை அடைய விருப்பம் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தான் தாய்மை அடைய விந்து தானம் அளிக்கும்படி சமூகவலைத்தளங்கள் ஊடாக விளம்பரம் செய்ததன் மூலம் விந்தணு தானம் செய்ய முன்வந்த நபரிடம் விந்தணு பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, வெற்றிகரமாக கருதரித்த ஹைடன், தற்போது கருதரித்து நான்கு மாதங்கள் ஆகியுள்ளன. இந்நிலையில், விரைவில் ஆரோக்கியமான குழந்தை ஒன்றை பெற்றெடுக்க போவதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் பிரித்தானியாவில் குழந்தையை பெற்றெடுக்கும் முதல் ஆண் என்ற பெருமையை ஹைடன் பெறவுள்ளார்.

கால்கள் அகற்றப்பட்டதா : ஜெயலலிதாவின் மரணம் பற்றிய வழக்கில் 3 கேள்விகள்!!

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

மர்ம மரணம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் , அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் என்பவர் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் திகதி மர்மமான முறையில் இறந்துள்ளார்.

அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம் ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் 3 பேர் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதேபோல, நாகை மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் ஞானசேகரன், டிராபிக் ராமசாமி ஆகியோரும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதிக்கு சந்தேகம்

அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் தொடர்ந்த வழக்கை முன்பு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் தனக்கு பல சந்தேகங்கள் உள்ளன.

அவரது உடலை தோண்டி வெளியில் எடுத்து பரிசோதித்தால் தான் உண்மைகள் எல்லாம் வெளியில் வருமா?’ என்று கேள்வி எழுப்பினார். நீதிபதியின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்ய மாநில அரசு சார்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது.

பகிரங்கப்படுத்த வேண்டுமா?

அதற்கு நீதிபதிகள், ‘ஜெயலலிதா தமிழகத்தின் முதல்–அமைச்சராக இருந்தவர் என்பதற்காக, அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து மருத்துவ சிகிச்சை விவரங்களையும் பகிரங்கமாக வெளியில் சொல்ல வேண்டுமா?

அல்லது உடல்நல குறைவு, அதுதொடர்பான மருத்துவ சிகிச்சை ஆகியவற்றை ஜெயலலிதாவின் அந்தரங்கமாக கருதக்கூடாதா? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் எழுகின்றன.

ஒருவேளை வெளியில் சொல்லவேண்டும் என்றால், நாளை பொதுஅலுவல் பதவிகளில் உள்ளவர்களுக்கு காய்ச்சல், ஜலதோசம் வந்தால் கூட அந்த விவரங்கள் வெளியிட வேண்டியது வருமா?

அதேபோல, ஒரு நோயாளியின் சிகிச்சை விவரங்களை ஒரு ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்துள்ளது’ என்று கருத்து தெரிவித்தனர்.

கால்கள் அகற்றப்பட்டதா?

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘ஜெயலலிதாவின் மரணத்தை சுற்றி எழுந்துள்ள பல சந்தேகங்களினால் பொதுமக்கள் கடுமையான வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்பே அவரது கால்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை பார்க்க மாநில கவர்னரை கூட அனுமதிக்கவில்லை’ என்றார்.

அதற்கு, கால்கள் அகற்றப்பட்டதாக எந்த ஆதாரங்களை கொண்டு கூறுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது வேதனைப்படுவதற்கு என்ன இருக்கிறது?’ என்று கருத்து கூறினார்கள்.

அதற்கு மூத்த வக்கீல், ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணைக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது’ என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘நேதாஜி மர்ம சாவு ஆங்கிலேயர் காலத்தில் நடந்தது. அதையும், ஜெயலலிதாவின் சாவையும் சம்பந்தப்படுத்தக்கூடாது’ என்றார்கள்.

மர்மம் இல்லை

அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த ஒரு மர்மமும் இல்லை.

மனுதாரர் வக்கீல்கள், பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த அனைத்து ஆதாரங்களும் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் உள்ளது.

இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டால், அந்த விவரங்களை மூடிமுத்திரையிட்ட உரையில் தாக்கல் செய்ய தயாராக உள்ளது’ என்று கூறினார்.

3 கேள்விகள்

இதையடுத்து நீதிபதிகள், ‘ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்கள் யாரும் அவரது சாவில் மர்மம் உள்ளது என்று கூறி வழக்கு தொடரவில்லை. அதனால், இந்த வழக்கில் 3 கேள்விகள் எழுந்துள்ளன.

ஒன்று, இந்த வழக்கை தொடர அ.தி.மு.க. தொண்டர்கள் இருவருக்கும், டிராபிக் ராமசாமிக்கும் அடிப்படை உரிமை உள்ளதா? என்பதை பார்க்கவேண்டும்.

இரண்டாவது, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் குறிப்பிட்ட சந்தேகம் எதுவும் உள்ளதா?.

மூன்றாவது, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களில், எதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தலாம்?.

இந்த 3 கேள்விகளுக்கு விடை காணவேண்டியதுள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பதில் அளிக்க வேண்டும்

எனவே, அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் தாக்கல் செய்த வழக்கிற்கு, பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர், மத்திய உள்துறை செயலாளர், தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், சி.பி.ஐ. இயக்குனர் உள்ளிட்டோர் தனித்தனியாக பதில் மனுக்களை தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்கப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 23–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதே நேரம் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யாததால், அந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

– Daily Thanthi-

பூமிக்கு அருகில் செவ்வாய் : வெற்றுக்கண்ணால் பார்க்க இலங்கையர்களுக்கு வாய்ப்பு!!

பூமிக்கு மிக அருகிலுள்ள கிரகமான செவ்வாய் நாளைய தினம் மிகவும் பிரகாசமாக தோன்றும். அதனை வெற்று கண்ணால் பார்வையிடுவதற்கு இலங்கை மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

பெளர்ணமி தினமான நாளை இரவு செவ்வாய் கிரகம் தெளிவான காட்சியாக தோன்றும் என கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நாளை சூரியன் மறைந்த பின்னர் செவ்வாய் கிரகம் தெளிவாகவும், பூமிக்கு அருகிலும் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய 12ஆம் திகதி இரவு 7 மணியில் இருந்து 10 மணிவரை இந்த காட்சியினை இலங்கையர்கள் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

மீண்டும் இந்த காட்சியை எதிர்வரும் வருடம் ஒகஸ்ட் மாதமே காண முடியும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா செட்டிகுளம் பிரதேச பிரிவுக்குட்பட்ட நேரியகுளம் குமாரசாமி முன்பள்ளி புனரமைப்பு!!

 
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடாவடிக்கை அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் செட்டிகுளம் பிரதேச பிரிவிற்குட்பட்ட நேரியகுளம் இளைஞர் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு வேலை நிறைவு பெற்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இதனை முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் கழகத்தின் தலைவரும் ஆகிய சங்கரன் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு இளைஞர் சேவை அதிகாரி இ.சசிகரன், மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவர் கா.கிரிதரன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாக உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கயிறடித்தலில் நாய் கின்னஸ் சாதனை : காணொளி இணைப்பு!!

கயிறடித்தல் (ஸ்கிப்பிங்) போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த புரின் எனும் பெயருடைய பீகிள் இன நாய் ஒன்று நிமிடத்திற்கு 58 தடவைகள் குதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த 11 வயதான புரின் தனது உரிமையாளரான மகோடா குமாகையுடன் சேர்ந்து 1 நிமிடத்தில் 58 முறை ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இதற்கு முதலும் குறித்த குழு 1 நிமிடத்தில் 51 முறை ஸ்கிப்பிங் செய்து சாதனை படைத்திருந்தனர். தற்போது தாங்களே செய்த சாதனையை இருவரும் முறியடித்துள்ளனர்.

புரின் இதற்கு முதல் உரிமையாளர் மகோடா வீசிய 14 மினி புட்பால்களை கோல் விழாமல் தடுத்தல், ஒரு பந்தின் மீது நின்று 10 மீட்டர் தூரத்தை 10.39 விநாடிகளில் கடந்தது, என பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறது.

மேலும் புரினின் கின்னஸ் சாதனை தொடர்பாக உலக கின்னஸ் நிறுவனம் ஆவலாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.