வவுனியாவில் இராணுவ வாகனம் மோதி இளைஞன் படுகாயம்!!

 
வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு முன்பாக இன்று 12.01.2017 பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வாகனம் மோதி இளைஞன் படுகாயம் அடைந்து, வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று பிற்பகல் தாணடிக்குளம் விவசாயக் கல்லூரிக்கு முன்பாக வவுனியா நகரை நோக்கிச் சென்ற இராணுவ வாகனம் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தாண்டிக்குளம் பகுதியில் கராஜ் ஒன்றில் பணிபுரியும் நிம்புஜோர்ஜ் என்ற 25 வயது இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.

இராணுவ வாகனம் அதிக வேகமாக சென்ற காரணத்தினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம் இன்று பிற்பகல் 1.20 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து 200 மீற்றர் தொலைவிலுள்ள வவுனியா பிரமண்டு வித்தியலாயத்திற்கு முன்பாக பிறிதொரு விபத்தில் பொலிசார் சென்ற வாகனம் வைத்தியசாலையில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. தாதிய உத்தியோகத்தருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

வவுனியா ஏ9 வீதியில் வாகன விபத்து : ஒருவர் படுகாயம்!!

 
வவுனியா ஏ9 வீதி வைத்தியசாலைக்கு அருகே இன்று (12.01.2016) மதியம் 2.15 மணியளவில் இடம்பெற்ற வான் – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

மன்னார் வீதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வான் ஏ9 வீதிக்கு ஏற முற்ப்பட்ட சமயத்தில் வவுனியாவிலிருந்து ஒமந்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலில் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்தவர் காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

தொலைக்காட்சியில் சனல் மாற்றிய சம்பவம் : இளைஞன் தூக்கிட்டு உயிரிழப்பு!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை பிரதேசத்தில் தொலைக் காட்சியில் சனல் மாற்றிய சம்பவத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அண்ணன் தங்கை இருவருக்கும் இடம்பெற்ற வாக்குவாதப் பிரச்சினையில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

தற்கொலை செய்து கொண்டவர் விஸ்வலிங்கம் குணாளன் (வயது 18) என்ற இளைஞர் எனவும் நேற்று இரவு சுமார் 08.30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிழந்தவரின் சடலம் செங்கலடி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை நிறைவடைந்ததும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட இளம் ஜோடி!!

இரத்தினபுரி நகர எல்லையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த இளம் ஜோடி அறைக்குள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பகல் இரத்தினபுரி நகரில் விடுதி ஒன்றில் அறை ஒன்றினை வாடகைக்கு எடுத்து தங்கிய ஜோடி நேற்றிரவு இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தற்கொலை செய்து கொண்ட ஜோடி தங்கியிருந்த அறையில் இருந்து நேற்றிரவு சத்தம் கேட்டுள்ளது அதனைத் தொடர்ந்து விடுதி ஊழியர்கள் அறையின் கதவை தட்டிய போதும் கதவு திறக்கப்படவில்லை.

இதனையடுத்து அறையை திறந்து பார்த்த போது இருவரும் ஏதோ ஒரு பானத்தை அருந்திய நிலையில் விழுந்து கிடந்தமையை ஊழியர்கள் கண்டுள்ளனர்.

அதன் பின்னர் இவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்பே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த 27 வயதான ஆண் தேல நோரகொல்ல, பிரதேசத்தை சேர்ந்தவர் என உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பெண்ணை அடையாளம் காண விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சக மாணவர்களின் துன்புறுத்தல் : நெதர்லாந்தில் ஈழத்து தமிழ் சிறுவன் தற்கொலை!!

நெதர்லாந்தில் ஈழத்து தமிழ் சிறுவன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 15 வயதான தருக்சன் செல்வம் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த சிறுவன் கல்வி கற்ற பாடசாலையின் சக மாணவர்களின் துன்புறுத்தல் காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தற்கொலை செய்துகொண்ட குறித்த நபரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் (instagram) பதிவிட்டு மோசமாக எழுதியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த நபர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தருக்சன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பாலியல் சேட்டை புரிபவர்களை கைதுசெய்ய நடவடிக்கை!!

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவிகள் மீது பாலியல் சேட்டைகள் புரிபவர்களை கண்காணிப்பதற்கு சிவில் பொலிஸாரை கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்.மத்திய பேருந்து நிலையம் மற்றும் கோட்டை பகுதிகள், பொலிஸ் நிலையத்திற்கு அண்மித்த பகுதிகளில் சிறுவர்கள் மீதான பாலியல் சேட்டைகள், ஆபாச படம் காண்பித்தல் போன்ற சமூக சீர்கேடான விடையங்கள் நடைபெறுவதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது வீதியில் பிச்சை எடுப்பவர்கள் இங்காணப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் பிச்சை எடுப்பவர்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பெண்கள் மீதான பாலியல் சேட்டை புரிபவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் பொதுமக்கள் முறைபாட்டினை வழங்கும் பட்சத்தில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்று பிச்சை எடுப்பவர்களை கட்டுப்படுத்த முடியும் என யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு அப்பகுதியில் பொலிஸ் பிரிவினை அமைத்தல் மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தீபாவுக்கு ஆதரவாக தி.மு.க தொண்டர்கள் : அச்சத்தில் தளபதி : ஆடிப்போயுள்ள மன்னார்குடி தரப்பு!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என்றே கூறவேண்டும்.

நாளுக்கு நாள் தமிழக அரசியல் பரபரப்புடனேயே நகர்ந்துகொண்டிருக்கின்றது. குறிப்பாக தமிழகத்தின் இரு பிரதான அரசியல் கட்சிகளில் ஏற்பட்ட தலைமைத்துவ மாற்றமே இந்த பரபரப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

தற்போது ஆளும் கட்சியான அ.தி.மு.கவின் பொது செயலாளராக வி.கே.சசிக்கலா அண்மையில் நியமிக்கப்பட்டார். எனினும், அவரின் நியமனத்திற்கு அந்த கட்சியின் அடிநிலைத் தொண்டர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், அ.தி.மு.க கட்சி அடிநிலை தொண்டர்கள் பலரும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், நாள்தோறும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்கள், சென்னை, தி.நகரில் உள்ள தீபாவின் இல்லத்தை முற்றுகையிட்டு, அவரை தீவிர அரசியலில் ஈடுபடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க தி.மு.க கட்சியின் செயல் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அந்த கட்சியின் உறுப்பினர்கள் சிலரின் மத்தியில் எதிர்ப்பு வெளியாகியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், மு.க.ஸ்டாலினை வெறுக்கும் அவர்கள் தி.மு.க கட்சியில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளதாகவும் தமிழக ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தி.மு.க கட்சியில் இருந்து வெளியேறும் உறுப்பினர்கள் தீபாவுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதனை தடுக்கும் முயற்சியில் தி.மு.க கட்சி தீவிரமாக செயற்படுவதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், தி.மு.க கட்சி உறுப்பினர்களின் இந்த முடிவால் மு.க.ஸ்டாலின் அச்சத்தில் இருக்கும், அதே நேரத்தில் மன்னார்குடி தரப்பினருக்கு இது பேரிடியாக அமைந்துள்ளதாக அரசியல் செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் சரித்திரம் படைக்கவுள்ள இலங்கை : சர்வதேச நட்சத்திரங்கள் முதலீடு!!

உலக புகழ்பெற்ற 4 நட்சத்திரங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர்.

இலங்கையின் பாரிய பொருளாதார திட்டமான World capital centre திட்டத்தில் முதலீடு செய்வதற்கே அவர்கள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கட்டடத்தின் நிர்மாணிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் உலகின் பாரிய மற்றும் உயரமான கட்டடங்களில் 9வது இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த திட்டத்திற்காக எதிர்வரும் 4ஆம் திகதி அதாவது சுதந்திர தினத்தன்று குறித்த கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது. இந்நிலையில் 2020ஆம் ஆண்டு இந்த கட்டடத்தின் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படவுள்ளன.

எதிர்வரும் சுதந்திர தினத்தன்று அடிக்கல் நாட்டும் திட்டத்தில் முதலீடு செய்ய உலக புகழ்பெற்ற நான்கு நட்சத்திரங்களும் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரபல நட்சத்திரங்கள் யார் என்பது தொடர்பில் விரைவில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜல்லிக்கட்டு நடைபெறுவதில் சிக்கல் : உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாதென உச்சநீதிமன்றம் அறிவிப்பு!!

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கலுக்கு முன்பாக தீர்ப்பு வருவது சந்தேகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது நடத்தும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இடைக்கால அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர்.

மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு குறித்து தீர்ப்பு எழுதப்பட்டு வருவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் வெளியிட்ட கருத்தால் பொங்கல் பண்டிகைக்கு முன்னால் ஜல்லிக்கட்டு நடத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் 154வது பிறந்ததின நிகழ்வு!!

 
தமிழ் விருட்சம், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், வரியிறுப்பாளர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த சுவாமி விவேகானந்தரின் 154வது பிறந்ததின நிகழ்வு இன்று (12.01.2017) வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் சிலையடியில் தமிழ் மணி அகளங்கன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், தமிழ்மணி அகளங்கன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், முன்னாள் நகரபிதா சந்திரகுலசிங்கம் மோகன், வரியிருப்பாளார் சங்கத்தலைவர் சந்திரகுமார் கண்ணன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டிபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கேசவன் மற்றும் அரச, அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா நகரசபையால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வுருவச்சிலை 1998.04.03 அன்று நகரசபைத் தலைவராக இருந்த ஜீ.ரி.லிங்கநாதன் ( வடமாகாணசபை உறுப்பினர்) அவர்களின் அழைப்பின் பேரில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த கே.கணேஷ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தில் 10 ஆயிரம் பொருத்து வீடுகள்!!

வவுனியா மாவட்டத்தில் 10 ஆயிரம் பொருத்து வீடுகளை வழங்குவதற்கு கிராமசேவையாளர்களூடாக விண்ணப்பப்படிவம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனரமைப்பு புனர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சினால் இவ்விண்ணப்பப்படிவங்களின் விநியோகம் அரசாங்க அதிபரின் சிபாரிசுக்கு அமைவாக இடம்பெற்று வருகின்றது.

கிராமசேவையாளர்களுக்கு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர், கிராமசேவையாளர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர்களினால் பொருத்தவீடு தொடர்பாக விளக்கம் கிராமசேவையாளர்களுக்கு அளிக்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 13ம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் வீடுகளில் செட்டிகுளம் பிரதேச செயலகம், வவுனியா வடக்கு பிரதேச செயலகம், வவுனியா தெற்கு, வவுனியா நகரம் போன்ற பகுதிகளிலுள்ள பொருத்து வீடு தேவையுடையவர்களுக்கு பொருத்துவீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் எம்.எம்.சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா நெடுங்கேணியில் வீதியை ஊடறுத்துச் செல்லும் யானைகளால் அச்சத்தில் மக்கள்!!

புளியங்குளம் – நெடுங்கேணி வீதியில் மாலை நேரங்களில் அடிக்கடி யானை ஊடறுத்துச் செல்வதால் அவ் வீதியால் பயணம் செய்வோர் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது.

நேற்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் வவுனியா, புளியங்குளம் – நெடுங்கேணி வீதியில் உள்ள வயல்வெளிகள் முடிவடையும் இடத்தில் வீதிக்குள் பிரவேசித்த யானைகள் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் நடமாடியுள்ளது.

இதனால் அவ் வீதியால் பயணித்தோர், வேலை முடிந்து வீடு திரும்பிய அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் அச்சத்துடனேயே பயணித்ததாக தெரியவருகிறது. இவ் வீதியில் அடிக்கடி யானை ஊடறுப்பதாகவும் அவ் வீதியால் பயணிப்போர் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் இன்றி மக்கள் அவதி!!

வவுனியாவில் பல இடங்களில் கடும் வறட்சி காரணமாக கிணற்றுக்குள் தண்ணீர் இன்றி மக்கள் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றனர்.

செட்டிகுளம் பாவற்குளம் 6ம் யுனிட் மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள பொதுமக்கள் அப்பகுதியிலுள்ள பொதுக்கிணற்றில் நீரைப்பெற்றுவந்த நிலையில் வறட்சியின் காரணமாக குடிநீர் வற்றியுள்ளது.

இதன் காரணமாக குடிநீரினைப் பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாக, இன்று பாவற்குளம் பகுதியில் அடிக்கல் நாட்டும் நிகழ்விற்குச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வன்னி மவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்கு மக்கள் கொண்டுவந்துள்ளனர்.

அப்பகுதியிலுள்ள பொதுக்கிணற்றிலே பல காலங்களாக குடிநீரைப் பெற்று வந்துள்ளதாகவும் தற்போதை வறட்சி காரணமாக குடிநீர் அற்று இருக்கும் பொதுக்கிணறினை ஆழப்படுத்திதருமாறும் அதைவிட தமது பகுதிக்கு குளாய் கிணறு ஒன்றினையும் பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரியிருந்தனர்.

இதையடுத்து அப்பகுதி மக்களிடம் பொதுக்கிணறினை ஆழப்படுத்த உடன் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அப்பகுதியில் குளாய்க் கிணறு ஒன்றினையும் பெற்றுத்தருவதற்கு அனர்த்த முகாமைத்துவப்பிரிடனும், மாவட்ட திட்டப்பணிப்பாளருடனும் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்துள்ளார்.

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கால்கோள் விழா!!

 
வவுனியா விபுலானந்த கல்லூரியில் நேற்று (11.01.2016) காலை 9.30 மணியளவில் கால்கோள் விழா நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வின் பாடசாலையின் ஆசிரியர்கள் , பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தரம் ஒன்று மாணவர்கள் புதிதாக பாடசாலைக்கு இணைந்த மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றதுடன் குழுப்பாடல், நடனம் என பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

 
வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் வீதியில் இரு முற்சக்கரவண்டிகள் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தயிசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மறவன்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை பின்புறமாக வந்த மற்றுமொரு ச்சக்கரவண்டி மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், இரு முச்சக்கரவண்டி சாரதிகளும் படுகாயமடைந்துள்ளனர்.

இந் நிலையில் இவ் விபத்து குறித்த விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-ஜெரோம் ரோய்-

வவுனியாவில் இளைஞன் கொடூரமாக அடித்துக்கொலை!!

 
வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் வீதியில் வீடு ஒன்றில் பாட்டியுடன் வாடைக்கு குடியிருந்து வந்த பாலரஞ்சன் பாலநிஷாந்தன் என்ற 25 வயது இளைஞனே இவ்வாறு கொடூரமாக தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இவர் குடியிருந்த வீட்டிற்கு முன்பாக இருந்த மற்றுமொரு இல்லத்தில் வைத்தே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் பெற்றோர் சுவிஸ்லாந்தில் வசித்து வருவதாகவும் திருமணமாகி மனைவி நைனாதீவில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.