வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை!!

 
வவுனியாவில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் சிறப்பம்சமாக வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் அருட்தந்தை சத்தியராஜ் தலைமையிலும் பொங்கல் கொண்டாடப்பட்டது.

இந்து ஆலயங்களில் இந்து மதகுருக்கள் தலைமையில் பொங்கல் இடம்பெற்றிருந்ததுடன் சிறுவர்கள் முதல் பெயரியவர் புத்தாடைகள் அணிந்து பட்டாசு கொளுத்தி பொங்கல் பொங்கியிருந்தனர்.

வவுனியா நகரிலும் வர்த்தக நிலையங்களில் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டிருந்தது.

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் மரதன் ஓட்டம்!!

 
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் 2017ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் முதல் நிகழ்வாக ஆண் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டம் இன்று 13.01.2016 கல்லூரியின் அதிபர் ரீ.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வினை பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் ஆசிரியருமான கே.நிரஞ்சன் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் பொருளாளருமான எஸ்.தவச்செல்வன் ஆகியோர் ஆரம்பித்துவைத்தனர்.

கல்லூரியின் மரதன் ஓட்டத்தில் வெற்றிபெற்ற முறையே கே.நிசாந்தன், கே. நிசோபன் மற்றும் இ.கிரிதரன் ஆகியோருக்கான வெற்றிக் கேடயங்களை கல்லூரியின் அதிபர் ரீ.பூலோகசிங்கம் வழங்கினார்.

மரதன் ஓட்டத்தில் வெற்றிபெற்ற பெண்களுக்கான பிரிவில் முறையே எஸ்.தினோதியா, சா.சானுஜா மற்றும் எஸ்.சரணியா ஆகியோருக்கான வெற்றிக் கேடயங்களை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி பி.உதயசேகரம் வழங்கினார்.

ஆண்கள் பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை வெற்றி பெற்ற மாணவர்கள் இருவரும் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நடைபாதையில் தொலைபேசி சிம் அட்டை விற்பனைக்குத் தடை!!

 
வவுனியா மத்திய பேரூந்து கட்டடத் தொகுதியில் நடைபாதையிலிருந்து தொலைபேசிக்கு பயன்படுத்தப்படும் சிம் அட்டையினை விற்பனை செய்து வருகின்றனர்.

சிம் அட்டையை விற்பனை செய்பவர்கள் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள எத்தனித்து வருவதை அவதானித்த அப்பகுதியில் விற்பனை நிலையத்தினை நடாத்திவரும் உரிமையாளர்கள் இது தொடர்பாக பொலிசாரின் அவசர தொலைபேசி அழைப்புக்கு முறைப்பாடு மேற்கொண்டதுடன் வவுனியா நகரசபை செயலாளரிடமும் முறையிட்டதையடுத்து இன்று காலை அப்பகுதிக்குச் சென்ற பொலிசார், நகரசபை உத்தியோகத்தர்கள் பேரூந்து நிலைய கட்டடத் தொகுதியிலுள்ள நடைபாதையில் இன்று முதல் தொலைபேசி சிம் அட்டையினை விற்பனை செய்வதற்கு தடைவிதித்ததுடன்,

பொலிசார் தொலைபேசி சிம் அட்டை விற்பனை செய்த சில இளைஞர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளர் திரு.ஆர் தயாபரனிடம் தொடர்பு கொண்டபோது, நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வது வவுனியா நகரில் முற்றாக தடை செய்துள்ளதாகவும் குறிப்பாக பேரூந்து நிலைய கட்டடத் தொகுதியிலிருந்து பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளும் நடைபாதையில் தொலைபேசி சிம் அட்டையினை விற்பனை செய்து வருவது இன்றிலிருந்து முற்றாகத் தடை செய்துள்ளதாகவும் மீறி செயற்படுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் ஒளவையார் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

 
வவுனியாவில் இன்று (13.01.2017) காலை 9 மணியளவில் தமிழ் விருட்சம், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், நகரவரியிறுப்பாளர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த ஒளவையார் நினைவு தினம் வெளிக்குளம் சந்தியிலுள்ள அன்னாரது நினைவுத்தூயில் இடம்பெற்றது.

அன்னாரின் நினைவுதினத்தை முன்னிட்டு மலர் அஞ்சலி செலுத்தி நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வில் ஒளவையார் திருவுருவச்சிலையினை நிறுவிய முன்னாள் நகரசபை பிதாவும், வடமாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், கலை இலக்கிய நண்பர்கள் வட்டத் தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கள், வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபாரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், பிரதேச காலாச்சார உத்தியோகத்தர் த.பிரதீபன், முன்னாள் நகரபிதா சந்திரகுலசிங்கம், தமிழ்த் தேசிய இளைஞர் கழகத் தலைவர் சு.காண்டீபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கேசவன், மற்றும் சமூக ஆர்வலகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சாரதி பரிதாபமாக மரணம்!!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இருக்கைப் பட்டி அணியாது வேகமாக டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி ஒருவர் வீதித் தடுப்பில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையால் ஏற்பட்ட விபத்தில் மரணந்துள்ளதாக பறயனாலங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முருங்கன் பகுதியில் இருந்து பூனாவ பகுதியை நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் வாகனம் வவுனியா, செட்டிகுளம், பெரியகட்டுப் பகுதியில் வேகமாக பயணித்த போது வீதியில் போடப்பட்டிருந்த வேகத் தடையில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையால் டிப்பர் வாகனம் வேகத்தடையைத் தாண்டி பாய்ந்தபோது சாரதி டிப்பர் வாகனத்தில் முன் கண்ணாடி வழியாக தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

வாகனத்தை செலுத்திய சாரதி இருக்கைப் பட்டி அணியவில்லை. இதன்காரணமாகவே அவர் தூக்கி வீசப்பட்டிருக்கிறார் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் முருங்கனைச் சேர்ந்த பிலிப்பு ஜேசுராஜா (வயது 55) என்பவரே மணமடைந்தவாராவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பறயனாலங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் களைகட்டிய தைப் பொங்கல்!!

 
வவுனியாவில் தைப்பொங்கலை முன்னிட்டு வியாபாரம் களைகட்டியதையடுத்து நகரின் மத்திய பகுதியில் பொங்கல் பொருட்கள் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. பொலிஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

தைப்பொங்கல் திருநாள் நாளைய தினம் (14.01) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

இறந்த மனிதன் சவப்பெட்டியிலிருந்து எழுந்து வந்து பேசிய அதிசயம் : திகைத்து நின்ற உறவினர்கள்!!

சீனாவில் இறந்ததாக கருதப்பட்ட முதியவர் ஒருவர் எழுந்து இங்கே என்ன நடக்கிறது என்று குடும்பத்தாரிடம் பேசிய சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Sichuan மாகாணத்தின் Junlian பகுதியைச் சேர்ந்தவர் Huang Mingquan. இவருக்கு 75 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் உள்ளார்.

இவர் கடந்த சில வாரங்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அதன் காரணமாக சரிவர உணவு எடுத்துக் கொள்வதில்லை, இதனால் குடும்பத்தார் எந்த நேரத்திலும் இவர் இறக்க நேரிடும் என்று நினைத்துள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு திடீரென்று மூச்சு நின்றுள்ளது அதுமட்டுமின்றி அவரது கை மற்றும் கால் பாதங்கள் குளிர்ந்த நிலையில் இருந்துள்ளன. இதைக் கண்ட அவரின் மகன் மற்றும் உறவினர்கள் இறந்துவிட்டதாக கருதியுள்ளனர்.

இறந்தவருக்கு என்ன இறுதி சடங்கு செய்வார்களோ அதே போன்று பேனர்கள், மாலைகள் மற்றும் சவப் பெட்டிகள் என அனைத்தையும் தயார் செய்துள்ளனர். அதன் பின்னர் அவரை உறவினர்கள் சவப்பெட்டியில் வைத்துள்ளனர்.

சுமார் எட்டு மணி நேரம் கழித்து திடீரென்று சவப் பெட்டியில் இருந்த அவர் எழுந்து இங்கே என்ன நடக்கிறது என்று கேள்வி கேட்டுள்ளார்.

இதைக் கண்ட உறவினர்கள் திகைத்துப் போய் நின்றுள்ளனர். அதன் பின்னர் அவரின் மகன் ஓடிவந்து தந்தையை அனைத்து அழுதுள்ளார். பொதுவாக அப்பகுதியில் இறந்தவர்களை அன்றைய தினமே மண்ணில் புதைக்க மாட்டார்கள், இரண்டு தினங்களுக்கு பின்னரே புதைப்பார்கள்.

இதனால் அவர் உடனடியாக புதைக்கப்பட்டிருந்தால் உயிருடன் வந்திருப்பதற்கு வாய்ப்பில்லை, இந்த சம்பிரதாயமே அவரை காப்பாற்றியதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

வவுனியாவில் யுத்தத்தில் தந்தையை இழந்த மகனின் கதறல் : நெஞ்சை உருக்கும் ஓர் சம்பவம்!!

தனது தந்தையாரை மீண்டும் காண்பதற்கு தான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்று 12 வயது சிறுவன் கண்ணீர் மல்க பாடிய கவிதை எல்லோர் மனத்தினையும் நெகிழ வைத்திருந்தது.

காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவினை பிறப்பிடமாக கொண்ட இந்த 12 வயதான சிறுவன் , கடந்தகாலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக தனது தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றார்.

மேலும் தந்தையின் இழப்பால் தவிக்கும் தாய் மற்றும் தனது ஏக்கத்தினை வெளிப்படுத்துவதற்காக அந்த சிறுவன் பாடிய கவிதை, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியதுடன், இறுதியில் அந்த கடவுளுக்கு கருணை இருந்தால் எமக்கு உதவ வேண்டும் என கூறி சோகத்தினை தாங்கிக்கொள்ள இயலாமல் கதறி அழுகின்றான்.

இவ்வாறு யுத்தம் நிறைவடைந்து இன்றும் கூட தமது நெஞ்சில் யுத்த வடுக்களை மக்கள் சுமந்து வருகின்றார்கள் என்பதற்கு இது உதாரணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பிறந்தநாள் வீட்டில் இடம்பெற்ற அசம்பாவிதம் : 15 பேர் வைத்தியசாலையில்!!

விஷமான உணவை உற்கொண்ட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அனைவரும் பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உப்புகிணற்றடி கரணவாய் வடக்கு பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சமைக்கப்பட்ட உணவே இவ்வாறு விஷமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் பிறந்தநாள் கொண்டாட்ட வீட்டினை பரிசோதனை செய்தனர்.

இதன்போது சமைக்கப்பட்ட இறைச்சியே இவ்வாறு விஷமாகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அந்த இறைச்சியினை வல்வெட்டித்துறையில் உள்ள இறைச்சிக்கடையில் தாம் கொள்வனவு செய்ததாக வீட்டார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னனெடுக்கப்பட்டுள்ளன.

வவுனியாவைப் பொறுப்பேற்கும் பிரம்டன் மாநகரசபை : ஒப்பந்தத்தின் முதற்கட்டம் நிறைவு!!

வவுனியா நகரை மேம்படுத்தும் நோக்கில் பிரம்ரன் மாநகசபை ‘சகோதர இரட்டை நகர உடன்படிக்கை’ ஒன்றை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த உடன்படிக்கை தொடர்பாகப் பிரம்டன் பாராளுமன்ற மாநாகரசபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி முதல்வரை வரவேற்றுக் கலந்துரையாடினர்.

பிரம்ரன் மாநகரசபைக்குச் சென்றிருந்த முதலமைச்சர் முதலில் ரொரன்ரோ பெரும்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரம்ரன் உதவி நகரபிதா உட்பட நகரசபை உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றை நடத்தினார்.

தாயக அரசியல் பொருளாதார நிலவரம் உட்படப் புலம்பெயர் தமிழ் மக்களின் தாயகம் சார்ந்த ஈடுபாடுகள் குறித்தும் உரையாடப்பட்டன.

அத்துடன், பொதுமக்கள் முன்னிலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பிரம்ரன் நகரில் வாழும் 20.000 தமிழர்களின் சார்பில் வடமாகாண முதலமைச்சரை வரவேற்பதில் பிரம்ரன் நகரம் மிகுந்த மகிழ்ச்சியை அடைவதாகப் பிரம்ரன் உதவி நகர பிதா மார்ட்டின் மெடிரொஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மார்ட்டின் மெடிரொஸ் தனதுரையின் போது பிரம்ரன் நகரில் வாழும் தமிழ் மக்கள் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவதிலும் பொதுச் சேவைகளில் ஈடுபடுவதிலும்

மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளிலும் மிகுந்த பங்களிப்பை வழங்கி வருவதைச் சுட்டிக்காட்டினார்.

இரட்டை நகர உடன்படிக்கைகளுக்கான முதல் கட்ட நடவடிக்கைகளையும் அதன் இலக்குகளையும் பொறிமுறைகளையும் விளக்கமாக முன்வைத்தார்.

பின்னர் முதல்வர் விக்னேஸ்வரனின் கருத்துக்களைப் பகிருமாறு கேட்டுக் கொண்டார்.

முதல்வர் தனது பேச்சில் புலம் பெயர் மக்களுக்கும் தாயகத்துக்குமான உயிர்த்துடிப்பான உறவை இந்த இரட்டை நகர உடன்படிக்கை ஊடாக உத்தியோக பூர்வமாக்கி ஒருவருக்கொருவர் பெற்றுக் கொள்வதன் நன்மைகளை விளக்கினார்.

முதல்வருக்கு பிரம்ரன் தமிழ்ச் சங்கம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அத்துடன் பிராம்ரன் தமிழ்ச் சங்கம் சார்பில் மாங்குளத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் உயிரிழை – முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோர்களின் அமையத்துக்கான பயிற்சி நிலைய கட்டிடமும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

வடமாகாண சபை சார்பில் வடமாகாண சின்னம் பொறிக்கப்பட்ட நினைவுப் பரிசை முதலமைச்சர் துணை மேயர் மார்ட்டின் மெடிரொஸிடம் வழங்கினார்.

ஏறக்குறைய 300க்கு மேற்பட்ட பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும், பலரும் அவருடன் நெருங்கி உரையாடும் வாய்ப்பையும் அங்கு பெற்றனர். அமலிதன் சேவியர் நிறைவுரையும், சுஜி ராஜன் நன்றியுரையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

சண்டைப் பயிற்சி எடுத்து வரும் திரிஷா!!

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் திரிஷா. அதன் படி, தற்போது மோகினி, கர்ஜனை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கர்ஜனை படத்தில் சண்டைக்கு முக்கியத்துவமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் திரிஷா. இதனால், கோலி சோடா, பத்து எண்ணுறதுக்குள்ள ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணிபுரிந்த சுப்ரீம் சுந்தர், திரிஷாவுக்கு சண்டைப் பயிற்சி வழங்கி வருகிறாராம்.

இப்படம் வட இந்தியாவில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை சுந்தர் பாலு என்பவர் இயக்கி வருகிறார்.

அமித் பார்கவ் என்பவர் இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

பூமியின் உள்மையப் பகுதியில் இதுவரை அறியப்படாத ஆதாரப்பொருள் கண்டுபிடிப்பு!!

பூமியின் உள்மையப் பகுதியில் இதுவரை அறியப்படாத ஆதாரப்பொருள் ஒன்றை அடையாளம் கண்டிருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இரும்பு மற்றும் நிக்கலுக்கு பிறகு பூமியின் உள்மையப் பகுதியில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இருப்பதாக நம்பப்படும் இந்த ஆதாரப் பொருளை பல தசாப்தங்களாக விஞ்ஞானிகள் தேடி வந்துள்ளனர்.

பூமியின் உள்மையப் பகுதியில் நிலவுகின்ற உயர் தட்பவெப்ப நிலையையும் அழுத்தங்களையும் மீள் உருவாக்கி சோதனைகள் நடத்தியதன் மூலம் இந்த ஆதாரப்பொருள் சிலிக்கானாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

என்றாலும், உலகம் எவ்வாறு உருவானது என்பது பற்றி இன்னும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவும்.

“இன்னொரு முக்கிய ஆதாரப் பொருளாக இருப்பது சிலிக்கான் என நாங்கள் நம்புகிறோம். பூமியின் உள்மையப் பகுதியின் எடையில் சுமார் 5 சதவீதம் இது இருக்கும். இரும்பு-நிக்கல் உலோகக் கலவையில் கலந்திருக்கலாம்” என்று இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய டோக்கியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஈஜி ஒக்டானி பிபிசி க்கு தெரிவித்துள்ளார்.

1,200 கிலோமீட்டர் ஆரமுடைய பூமியின் உள்மையப் பகுதி திடமான ஒரு பந்து போன்றதாகக் கருதப்படுகிறது.

பூமியின் உள்மையப் பகுதி மிகவும் ஆழத்தில் இருப்பதால், நேரடியாக இதனை ஆய்வு செய்ய முடியாது. எனவே, இந்தப் பகுதிக்குள் அதிர்வலைகளை உட்புகச்செய்து அதன் மூலம் அப்பகுதி எதனால் ஆனது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.

பெரும்பாலும் இரும்பால் உருவாக்கப்பட்டுள்ள பூமியின் உள்மையப் பகுதி, 85 சதவீதம் இரும்பாலும், சுமார் 10 சதவீதம் நிக்கலாலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றை சேர்த்து பார்த்தால் 5 சதவீதம் எஞ்சியுள்ளது. அந்த 5 சதவீத பொருளை பற்றிய ஆய்வு மேற்கொள்ள ஈஜி ஒக்டானியும், அவருடைய அணியினரும் இரும்பு மற்றும் நிக்கல் கலவையை உருவாக்கி, அதனை சிலிக்கானோடு சேர்த்தனர்.

பூமியின் உள்மையப் பகுதியில் நிலவுகின்ற அதே அளவு அதிக அழுத்தங்களுக்கும் தட்டவெப்ப நிலைக்கும் அதனை உட்படுத்தினர்.

பூமியின் உள்மையப் பகுதியில் இருக்கின்ற அதிர்வலை தரவுகளோடு இந்த கலவை பொருந்தியுள்ளது.

ஆனாலும், சிலிக்கான் இருப்பதை உறுதி செய்ய இன்னும் அதிக ஆய்வுகளை நடத்த வேண்டியுள்ளது. பிற ஆதாரப் பொருட்கள் இருப்பதற்கான சாத்தியக்கூற்றை இது தவிர்க்கவில்லை என்று பேராசியரியர் ஒக்டானி கூறியிருக்கிறார்.

தகவல்: பிபிசி

92 வயது தாயை பல வருடங்களாக வீட்டு சிறையில் அடைத்து வைத்த மகன்!!(வீடியோ)

சீனாவின் கியாங்சி மாகாணத்தில் 92 வயது மூதாட்டியை அவரது மகனும் மருமகளும் சேர்ந்து வீட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

சரியான படுக்கை வசதி, கழிவறை வசதி மற்றும் உணவுகள் என எதையுமே அந்த மூதாட்டிக்கு அவர் மகன் செய்து கொடுக்கவில்லை.

சில வருடங்களாக இந்த மூதாட்டி சித்திரவதைகளுக்கு ஆளாகி வந்துள்ளார். பொலிஸாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், கணவன் மனைவி இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பூசகரினால் வழங்கப்பட்ட திரவம் நஞ்சானதால் உயிரிழந்த பெண்!!

குளி­யாப்­பிட்டி – தும்­ம­ல­சூ­ரிய பிர­தே­சத்தில் தோஷம் கழிப்­ப­தற்­காக பூசகர் ஒருவர் வழங்­கிய ஒரு­வகை திரவம் விஷ­மா­ன­தால்­ அ­தனை அருந்­திய பெண் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

கண­வ­ரி­ட­மி­ருந்து பிரிந்து தனி­யாக வசித்­து­வரும் சிலாபம் – பங்­க­தெ­னிய பிர­தே­சத்தை சேர்ந்த 38 வய­தான இந்த பெண், தனக்கு ஏற்­பட்­டி­ருந்த தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்­வ­தற்­காக குறித்த மடத்­துக்கு சென்­றுள்ளார்.

அங்­கி­ருந்த பூசகர் மந்­தி­ரிக்­கப்­பட்ட ஒரு­வகை திர­வத்தை அப்­பெண்­ணுக்கு பரு­கு­வ­தற்­காக வழங்­கி­யுள்ளார் எனவும் அதன்­பின்னர் அதனை அருந்­திய குறித்த பெண் சுக­யீ­ன­ம­டைந்­த­த­னை­ய­டுத்து வைத்­தி­ய­சா­லையில் அனுமதிப்பட்ட நிலையில் உயிரிழந் துள்ளதாக தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரோபோ குரங்கு குட்டி இறந்து விட்டதாக நினைத்து மனமுடைந்து போன குரங்குகள் :  காணொளி இணைப்பு!!

கெமரா பொருத்தப்பட்ட ரோபோ குட்டி குரங்கை பார்த்து உயிரிழந்த குரங்கு என நினைத்து, குரங்குகள் கண்ணீர் விடும் நெகிழ்ச்சியான காட்சியை சர்வதேச ஊடகம் காணொளியாக பதிவு செய்துள்ளது.

 

ரோபோ குரங்கு குட்டி இறந்து விட்டது என நினைக்கும் குரங்குகள் அதற்கு உயிர் இருக்கின்றதா என சோதனை செய்து பார்ப்பதும் குரங்கை அங்கும் இங்குமாக பயத்துடன் தூக்கி கொண்டு செல்வதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

பின்னர் குட்டி குரங்கை தடவி பார்த்து, கட்டியணைத்து, குரங்குகள் தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றன. பின்னர் தனது இன குரங்குகளை ஒன்றை ஒன்று கட்டிக்கொண்டு வருந்துகின்றன.

வவுனியா வீரமாணிக்கன்குளம் திருமகள் வித்தியாலயம் திறந்து வைப்பு!!

 
செட்டிகுளம், துட்டுவாகை பகுதியில் நேற்று முன்தினம் (11.01.2017) அன்று வீரமாணிக்கன்குளம் திருமகள் வித்தியாலயம் எனும் புதிய பாடசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் க.கோமளேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர், செட்டிகுளம் கோட்டக்கல்விப்பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய பிரதம விருந்தினர்களுள் ஒருவராகிய சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், ஒர் சமூகத்தின் எழுச்சிக்கு பாடசாலையே பிரதான வகிபாகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஆரம்ப நிலை கல்வி மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது. அவ்வகையில் இன்றைய தினம் இந்த பாடசாலை இங்கு உதயமாகியதன் மூலம் இந்த பின்தங்கிய பிரதேசம் இன்று முதல் வளர்ச்சிப்பாதையை நோக்கி செல்லும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் சுகாதார அமைச்சர் Dr.ப.சத்தியலிங்கம் அவர்கள் இந்த பாடசாலையின் வேலி அமைப்பிற்காக ஏற்கனவே இந்த வருடத்திற்கான தனது நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார் என தெரிவித்ததுடன் இப்பாடசாலைக்கு தேவையான மேலதிக வளங்களை கல்வி அமைச்சருடன் பேசி பெற்றுக்கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார் என்ற சுகாதார அமைச்சர் Dr.ப.சத்தியலிங்கம் அவர்களின் செய்தியினையும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பெற்றோர், மாணவர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.