இலங்கையில் மார்ச் மாதம் வரை மழை இல்லை : மூன்று மாதங்களுக்கே குடிநீரை விநியோகிக்க முடியும்!!

நாட்டின் பல மாவட்டங்களில் மார்ச் மாதம் வரை மழையை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டவிலயல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குழாய் நீரை விநியோகிக்க மூன்று மாதங்களுக்கு போதுமான நீரே தற்போது காணப்படுவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் தொடரும் வறட்சியுடனான காலநிலை காரணமாக விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

50 அல்லது 60 வீதமான நிலத்தில் விவசாயம் செய்யுமாறு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிய போதிலும், 75 வீதமான நிலப் பரப்பில் விவசாயம் செய்யப்படடுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 24 வீதமான சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விளைச்சல் அழிவடையும் நிலையை எதிர்கொண்டுள்ளதுடன், 76 வீதமான விளைச்சலினை பாதுகாக்க முடியும் என நீர்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பருவகாலத்தில் 8000 ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ளப்படும் நாச்சாதுவ பிரதேசத்தில் இம்முறை 3000 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, பயிர்செய்கையை மட்டுப்படுத்துமாறு தமக்கு அதிகாரிகள் அறிவிக்கவில்லை என பலாங்கொட விவசாயிகள் தெரிவித்தனர்.

குடிநீர் இன்றி பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கண்டி, பொலன்னறுவை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கான நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.

தெதுரு ஓயாவின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையினால் குருநாகல் நகருக்கான நீர் விநியோகம் 12 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஹட்டன் நகருக்கு நீர் விநியோகிக்கும் சிங்கமலை மற்றும் இன்மோரி நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறவைடைந்துள்ளமையால் ஹட்டன் நகருக்கான நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மவுசாலை – காசல் ரீ மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருகின்றது. மொனராகலை நகரை அண்மித்த சில பகுதிகளுக்கான நீர் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் நீர் தேவையின் 55 வீதம் இயற்கை நீர் நிலையங்கள் மூலமே பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

தொடரும் நிலமையின் கீழ் பிரதான நீர் தேக்கங்களின் மின் உற்பத்தியினை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை இணக்கம் தெரிவித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் குறிப்பிட்டார்

புதிதாக 400 குழாய் கிணறுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், நாடளாவிய ரீதியில் மேலும் 1000 குழாய் கிணறுகளை புனரமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யூடியூப்பிற்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகப் படுத்தும் பேஸ்புக்!!

வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் யூடியூப் நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது. இதன்படி, பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், இவ்வாறு விளம்பரங்கள் வரும் வீடியோக்களுக்கு என்று சில சிறப்பியல்புகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் குறைந்தது 90 வினாடிகள் ஓடக் கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறான வீடியோக்களின் இடையில் மாத்திரம் 15 வினாடிகள் ஓடக்கூடிய விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும.

வழக்கமாக யூடியூப் வீடியோக்களில் ஆரம்பத்திலேயே விளம்பரங்கள் காட்சிப்படுத்துவது வாசகர்களுக்கு இடையூறாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி விளம்பரங்கள் அனைத்தும் பாரம்பரிய தொலைக்காட்சிகளில் வெளியாகும் விளம்பரங்களைப் போன்றே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விளம்பரங்களின் ஊடாக கிடைக்கும் லாபத்தில் 55 சதவீத தொகையை வீடியோக்களை வெளியிடும் நபர்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் விளம்பரம் மூலமாக மட்டும் சுமார் 700 கோடி டாலர்(96 சதவீதம்) அளவுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் வளர்ச்சியின் பெரும்பகுதி, கைபேசி மூலமாக வரும் விளம்பர வருவாய் என தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நிலவரத்தின்படி, நாளொன்றுக்கு 5 கோடி மக்கள் பேஸ்புக்கில் வீடியோக்களை காண்கின்றனர். அவர்கள் அனைவரும் வீடியோக்களை பார்க்கும் நேரம் அன்றாடம் சராசரியாக 10 கோடி மணிநேரமாக உள்ளது. இந்த பயன்பாட்டை சாதகப்படுத்திக் கொள்வதுடன் வருமானமாக்கும் முயற்சியில் பேஸ்புக் தற்போது களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமண விருப்பத்தை பசுவின் உடலில் எழுதி காதலிக்கு தூதுவிட்ட விவசாயி!!

 
இங்கிலாந்தில் டைரோன் பகுதியில் திருமண விருப்பத்தை பசுவின் உடலில் எழுதி காதலிக்கு விவசாயி தூதுவிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் டைரோன் பகுதியில் உள்ள பைவ் மைல்டவுன் கிராமத்தை சேர்ந்த விசாயியான ஆஷ்லே பாரெல் என்பவரே இவ்வாறு காதல் தூது அனுப்பியுள்ளார்.

குறித்த நபர், அன்னா லூயிஸ் மார்ட்டின் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந் நிலையில், தனது காதலியை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் தனது விருப்பத்தை மிக நூதன முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது கிறிஸ்துமஸ் என பெயருடைய தனது பசுவின் உடலில் ‘என்னை திருமணம் செய்து கொள்’ என வாசகத்தை எழுதி அன்னா லூயிஸ் வசிக்கும் பகுதிக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அங்கு வாழும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இனி சகல விசேட தினங்களிலும் மதுபானசாலைகள் மூடல்!!

சகல போயா தினங்கள் மற்றும் விசேட தினங்களில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டும் என இலங்கை மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.

2017ம் ஆண்டில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டிய தினங்கள் குறித்த அட்டவணையை வௌியிட்டுள்ள மதுவரித் திணைக்களம் இ்ந்த அறிவித்தலையும் விடுத்துள்ளது.

இதன்படி, போயா தினம், சுதந்திர தினம், புத்தாண்டு தினம் மற்றும் அதற்கு முதல் தினம், ரம்ழான் பண்டிகை, மது ஒழிப்பு தினம், மற்றும் நத்தார் தினம் உள்ளிட்ட விசேட தினங்களில் மதுபான சாலைகள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடலில் பெரும் பகுதி இயங்காது : ஆனால் இலங்கை இளைஞன் அவுஸ்திரேலியாவில் வரலாற்றுச் சாதனை!!

 
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை இளைஞன் தினேஷ் பலிபன (32) தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகின்றார்.

நெஞ்சு பகுதிக்கு கீழ் செயலற்ற நிலையில் இருக்கும் தினேஷ் பலிபன அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பல்கலைக்கழகத்தில் பயின்று வைத்திய கலாநிதியாக வெளியேறி உள்ளார்.

குறித்த இலங்கை பிரஜை பிரிஸ்பேன் பல்கலைக்கழகத்தில் வைத்திய கற்கையைமேற்கொண்டு வந்த நிலையில் பிலிஸ்பேனில் வசிக்கும் அவரது பெற்றோரை சந்திக்க சென்ற போது ஏற்பட்ட விபத்தில் நெஞ்சு பகுதிக்கு கீழ் செயலற்ற நிலைக்கு உள்ளானார்.

இதன் காரணமாக, தினேஷ் பலிபனவின் வைத்திய கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன. குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டுடிருந்த தினேஷ் ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தனது பட்டப்படிப்பை தொடர தீர்மானித்தார்.

வைத்தியராக வேண்டும் என்ற எண்ணத்தில் கல்வி நடவடிக்கைகளை கடந்த இரு வருடங்களுக்கு முன் அவுஸ்திரேலிய பிரிஸ்பேன் பல்கலைக்கழகத்தில் கல்வியை ஆரம்பித்தார்.

இந்த நிலையில் அவர் தனது வைத்திய பட்டப்படிப்பை தற்போது நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியப்பட்டம் பெற்றுள்ள இரண்டாவது நபர் என்ற வரலாற்றுச் சாதனையையும் இலங்கையில் பிறந்த தினேஷ் பலிபன பெற்றுள்ளார்.

யாழ் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற கண்கவர் பட்டம் விடும் திருவிழா!!

 
வருடா வருடம் ஒவ்வொரு தமிழர்களின் பொங்கல் திருநாளின் போது புதுவிதமான வடிவில் பட்டங்கள் வடிவமைத்து விண்ணில் பறக்க விடும் காட்சி வல்வெட்டித்துறையில் நடைபெறுவதுண்டு.

அவ்வகையில் இம்முறையும் மிக அழகான, மற்றும் பெரியளவிலான பட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பறக்கவிடப்பட்டது.

இது பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்ததாக அங்கு பட்டங்களை பார்வையிடச் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

நெருப்பை பயன்படுத்தி முடி திருத்தும் நபர் : பாகிஸ்தானில் பரவும் புதிய கலாச்சாரம்!!

பாகிஸ்தானில் சலூன்கடைக்காரர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு நெருப்பை பயன்படுத்தி முடி திருத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த சலூன்கடைக்காரர் ஒருவர் அங்கு முடி திருத்த வரும் வாடிக்கையாளர்களின் தலையில் கத்திரிக்கோலுக்கு பதிலாக தீ வைத்து முடியை சரிசெய்கிறார்.

முதலில் முடிவெட்டிக்கொள்ள வந்திருப்பவரின் தலையில் கிரீம் மற்றும் பவுடரை தடவி அதில் தீ வைக்கிறார். தீ நன்கு எரிந்து கொண்டிருக்கும் போது சீப்பினால் முடியை வேகமாக சீவுகிறார். அவ்வாறு சீவும் போது தீ அணைந்துவிடுகிறது.

தலை முடியில் தீ வைத்தாலும் கூட முடி தீப்பற்றி எரியவும் இல்லை, அளவும் குறையவில்லை. முடியை நேர்படுத்துவதற்காக இ்வ்வாறு செய்யப்படுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது குறித்து சமூகவலைத்தளங்களில் ஒரு சிலர் இது ஆபத்து என்றும் ஒரு சிலர் இதை ஆதரித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

யாழில் தமிழர் கலாச்சார உடையில் தைப்பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டவர்கள்!!

 
இலங்கை உட்பட உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் தைத்திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். யாழ்.நல்லூர் ஆலயத்தில் பொங்கள் தினத்தை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் பூஜை வழிபாடுகளில் கலந்துக் கொள்வதற்காக தமிழர்கள் தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டவர்களும் பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிநாட்டவர் வேஷ்டி, சேலை அணிந்து பொங்கல் தினத்தை கொண்டாடியுள்ளனர்.

தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், மொழிகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காகவே வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு வழிபாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி அசத்திய கனேடிய பிரதமர்!!(காணொளி)

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் கொண்டாட்டம் உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் உலகம் முழுவது தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள அரசியல் பிரமுகர்கள் தமது வாழ்த்துச் செய்தியினை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கனடாவில் வாழும் தமிழ் மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்தினை தமிழில் தெரிவித்துள்ளார்.

இந்திய, இலங்கை தலைவர்களிடம் இல்லாத பண்பும், அவரது தமிழ் பேசும் விதமும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும் கனடாவில் ஆண்டு தோறும் தை மாதத்தினை நாடளாவிய ரீதியில் தமிழர் மரபுகளை அனுஷ்டிப்பதற்குரிய மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரில் இருந்து வெளியேறினார் திரிஷா!!

ஜல்லிக்கட்டு தொடர்பான சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை திரிஷா டுவிட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.

பீட்டாவுக்கு ஆதரவாக இருந்த திரிஷா-வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன, மீம்ஸ்கள், போஸ்டர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வசைபாட ஆரம்பித்தனர்.

ஆனால் தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை என திரிஷா குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் அவரது டுவிட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள், ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவே மீண்டும் பிரச்சனை வெடித்தது.

இந்நிலையில் டுவிட்டரில் இருந்து விலகுவதாக திரிஷா அறிவித்துள்ளார்.

இந்த முடிவு தற்காலிகமானது தான் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாணவன் மன்னாரில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

வவுனியா மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா தவசிகுளம் பகுதியை சேர்ந்த 18 வயதான விநோத் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் மன்னாரில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து உயர்தரத்தில் கல்வி கற்றுவந்தார் என தெரியவருகின்றது.

இதன்போது ஏற்பட்ட காதல் முறிவினால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனின் பொங்கல் வாழ்த்துச் செய்தி!!

உழுதுண்டு வாழ்ந்த பரம்பரை உணவின்றி, உலை வைக்க முடியாத அளவுக்கு இயற்கையால் ஏமாற்றப்பட்ட பொங்கல் தினத்தை எமது மக்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர்.

பொங்கல் படைத்து, புத்தாடை அணிந்து சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் நன்நாளை மகிழ்வுடன் கொண்டாட முடியாத நிலைக்குள் வன்னியின் விவசாயப் பெருங்குடிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இருப்பினும் இருக்கின்ற வளத்தினை கொண்டு எழிமையான, ஆரவாரமற்ற பொங்கலை பொங்கி மகிழ்ந்திட வாழ்த்தி நிற்கின்றேன்.

ஏமாற்றங்கள் எங்களை சூழ்ந்துவரினும் புதிய ஆண்டில் மேலும் மேலும் நம்பிக்கை வைத்து, தடைகள் தாண்டி, முன்னோக்கி பயணிக்க திடசங்கற்பம் கொள்வோம்.

கடினமான பாதையின் பயணம் விடியலுடன் நிறைவு செய்திட நம்பிக்கை கொண்டு உழைத்திடுவோம். ஏமாற்றங்கள், சவால்கள், தடைகள் எமது துன்பியல் அனுபவங்களாக, வரலாறாக கடந்து சென்றாலும் ஒற்றுமையுணர்வுடன் உழைத்திட்டால் ஓரடியேனும் கடந்து செல்ல முடியும். கட்சி, மத, பிரதேச வேறுபாடுகள் களைந்து அரசியல் உரிமைக்கான அவசியம் உணர்ந்து, ஓரணியாக நின்று ஓங்கி குரல் எழுப்ப இப்பொங்கல் தினத்தில் இறைவன் அனைவருக்கும் ஆத்ம பலத்தை வழங்கி அருள் பொழிய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

செந்தில்நாதன் மயூரன்,
மாகாணசபை உறுப்பினர்,
வடக்கு மாகாணம்

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் : சிவ கஜேந்திரகுமார்!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு வருடமும் தை முதலாம் நாள் உலக வாழ் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகின்றது.விவசாயிகள் தமது அறுவடைக்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு இணைந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றிசெலுத்தும் முகமாக இத் திருநாளை கொண்டாடுகின்றனர்.

அதாவது உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்தது வழிபட்டனர்.

பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இலங்கையில் அநேகமாக இரு நாட்களே பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகிப் பண்டிகை : – சூரிய நாட்காட்டியின் படி, தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது.

பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள், தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுப்படுத்துகிறார்கள்.

பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால், நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமாக இருக்கலாம் எனக் கருதுவர்

இரண்டாம் நாள் தைப்பொங்கல்: – தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க, பொங்கலுக்குத் தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். புதுப்பானை வாங்குவர். மேற்கு உலக நாடுகளில் பொங்கலுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். பொங்கலன்று அதிகாலை எழுந்து மொழுகுவர்.

வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும், புதிய கரும்பையும், புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். கோலமிட்ட இடத்தில் தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.

இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே, தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்: – மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு வண்ணம் பூசி, கூரான கொம்பில் சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்குத் தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளைச் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம், காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனைக் காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறுவது வழமை. உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல்… மாட்டு பொங்கல் பட்டி பெருக.. பால் பானை பொங்க.. நோவும் பிணியும் தெருவோடு போக..’ என்று கூறி. மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

நான்காம் நாள் காணும் பொங்கல்: – காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் விழா. காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து பெறும். இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினைக் கட்டி, அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று, அதனை கல்லில் இழைத்து பாதத்திலும் முகத்திலும் பூசிக்கொள்வார்கள். இவ்வகையில் தமிழர் திருநாள் நன்முறையில் அனைத்து வகை மக்களாலும் கொண்டாடப்படும்.

எனவே தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். இத்தனை காலமும் தடைப்பட்ட காரியங்கள் தை பிறந்தவுடன் ஈடேறும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. எனவே நாமும் இயற்கைக்கும், சூரியனுக்கும், கால்நடைகளுக்;கும் நன்றி கூறி அனைத்து சுப காரியங்களும் ஈடேற பிரார்த்திப்போம்.

தைத்திருநாளில் தமிழர்கள் மனம் இனிமைபெற வாழ்த்துகிறேன் : வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான்!!

தமிழர் ஆண்டின் தொடக்கம் எனப்படும் தை மாதம் முதல் நாளிலே தமிழர்களினாலும் உழவர்களினதும் திருநாளாம் தைப் பொங்கல் தினமாம் இன்று நமது இலங்கை திருநாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற எம் இனிய உறவுகள் தமிழர்கள் அனைவரினதும் இல்லங்களில் இனிமையான உள்ளங்களில் பொங்கல் பொங்கி தமிழர்களின் மனம் இனிமைபெறவும் அபிலாசைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எம் மக்களின் உள்ளங்களில் இவ’வாண்டில் இனிமைபெறவும் வாழ்த்துகின்றேன் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான கே காதர் மஸ்தான் அனுப்பிய பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசாவின் பொங்கல் வாழ்த்துச் செய்தி!!

தை பிறந்தால் வழிபிறக்கும் பிறக்கும் என்ற கூற்றுக்கு இணங்க எம்மக்கள் தைப்பொங்கல் நாளைஎதிர்பார்த்து இருந்து சந்தோசமாக புதிய அரிசி தானியவகைகளை சேர்த்து பொங்கலிட்டு கொண்டாடவேண்டிய எம்மக்கள் காலநிலை மாற்றத்தின் காரணமாக இப்பொங்கல் திருநாளை கவலையுடன் கொண்டாடவேண்ய நிலையில் உள்ளதையிட்டு மிகவும் மனவேதனையுடன் எமது மக்களுக்கு இப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ம.தியாகராசா
வடமாகாணசபை உறுப்பினர்.

வவுனியாவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்!!

 
வவுனியாவில் ஆலயங்கள், வீடுகள், வர்த்தக நிலையம் மற்றும் தொழிலகங்களிலும் பொங்கல் பொங்கி படைத்து வழிபாடுகள் நடைபெற்றது.

இதேவேளை வவுனியா பொலிஸ் நிலையத்தில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி தலைமையில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

இப் பொங்கல் நிகழ்வின் போது இடமாற்றம் பெறவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.