வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான லொறி!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (03.04.2025) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் சிறியரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே கல்முனைப் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி பின் உயர் அழுத்த மின் இணைப்பு கம்பத்தையும் உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை லொறியின் முன் பகுதியும் மின்சார கம்பம் மற்றும் மதிலும் பலத்த சேதமடைந்துள்ளன.

விபத்தின் காரணமாக அந்த பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளதுடன், பின்னர் மின்சாரம் வழமைக்குத் திரும்பி உள்ளது. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

விபத்துக்குள்ளான பகுதியில் அதிக வளைவுகள் வீதியில் அமைந்து உள்ளதால் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனத்தை செலுத்த வேண்டும் எனவும்,

தற்போது அடிக்கடி ஓரளவு மழை பெய்து வருவதாலும் மிகவும் அவதானமாக வாகனங்களை ஓட்டுநர்கள் செலுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்து : பறிபோன யாழ். குடும்பஸ்தரின் கால்!!

அநுராதபுரம் ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரது கால் அகற்றப்பட்டுள்ளது.

குறித்த விபத்து, நேற்றையதினம்(02.04.2025) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி ஒன்றில் முன்னால் இருந்து பயணித்துக் கொண்டிருந்தார்.

இதன்போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லொறி மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது, அவரது ஒரு காலை அகற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் குறித்த விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கையை நிலைகுலைய வைக்கவுள்ள அமெரிக்கா : பல தொழிற்சாலைகள் மூடப்படும் ஆபத்து!!

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

அவர் எடுத்த முடிவால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரயல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு சில தொழிற்சாலைகளை மூடுவதற்கும் வழிவகுக்கும் என்று அவர் கூறினார். உலகெங்கிலும் உள்ள 25 நாடுகள் மீது நாளைய தினம் முதல் வரிகளை விதிக்க உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10 சதவீதம் குறைந்தபட்ச வரியை ட்ரம்ப் அறிவித்தார். 2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் டொலர்களுக்கு மேல் இறக்குமதி செய்தது.

இந்தப் புதிய வரிகள் விதிக்கப்படுவது இலங்கைப் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாற்றுச் சந்தையை தேடுவதன் மூலம் அமெரிக்காவின் வரி நெருக்கடியை சமாளித்துக் கொள்ள வாய்ப்பாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், இலங்கையில் இருந்து அதிகளவான ஆடைகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடொன்றில் 24 வயது யுவதி செய்த மோசமான செயல் : அலுமாரியில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கம்பஹா, யாகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்ய்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது, நீண்ட கால விசாரணைக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டதாக மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

குறித்த யுவதி துபாயில் உள்ள பொறளை மெகசின் வீதியை சேர்ந்த திலன் என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான போதைப்பொருட்களை தனது வீட்டில் பொதி செய்து 07 வருடங்களாக விற்பனை செய்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட யுவதியின் பெற்றோர் இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த யுவதி கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட யுவதியின் அலுமாரியில் இருந்து போதைப்பொருளை் கடத்தலுடன் தொடர்புடையவர்களின் பெயர்கள் அடங்கிய புத்தகம் ஒன்று கிடைத்துள்ளதாகவும் மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் பெண் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது!!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குடபட்ட சின்னசாளம்பன் பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று வலியுறுத்திய நிலையில் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய நபரே இவ்வாறு ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமொற்றில் பணியாற்றும் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான்,

சின்னச்சாளம்பன் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து, பெண்ணொருவரின் கணவர், மற்றைய பெண்ணை வீதியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக

இவ்வாறு கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பெண்ணைத் தாக்கிய நபர் தலைமறைவாகியிருந்தார்.

இத்தகைய சூழலில் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், தாக்கிய நபரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று குறித்த இடத்திற்கு விரைந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பெண்ணை கொடூரமாகத் தாக்கிய குறித்த நபர் உடனடியாகக் கைது செய்யப்படவேண்டுமென பொலிசாரிடம் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய 24மணிநேரத்திற்குள் குறித்த நபர் கைதுசெய்யப்படுவார் என ஒட்டுசுட்டான் பொலிசார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடமும் உத்தரவாதம் அளித்திருந்தனர்.

அந்தவகையில் குறித்த நபர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

AI ஐ பயன்படுத்தி பெண்களின் போலிப் படங்களை உருவாக்கியவர் கைது!!

ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, இரண்டு பெண்களின் போலி ஆடையின்றிய படங்களை உருவாக்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு, அனுராதபுரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படங்கள், இணையத்தில் பரவலாகப் பரப்பப்பட்டதால் குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சந்தேகநபர் அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஏப்ரல் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!!

நாட்டில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம் (3) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 934,480 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,970 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 263,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,230 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 241,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 28,850 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 230,800 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 249,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 230,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலுள்ள சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையில் ஒட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஸ்வர்ணா விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

ஒட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், இலங்கையில் 93 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த நிலை இருந்தது. அதன் பிறகு, அது தொடர்பான கணக்கெடுப்பு முறையாகச் செய்யப்படவில்லை.

ஒட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை உலகில் அதிகரித்து வரும் போக்கு உள்ளதுடன், இலங்கையிலும் அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நாங்கள் உணர்கிறோம்.

அதை மிக விரைவாக அடையாளம் காண்பது முக்கியமாகும். ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் காண முடிந்தால், 90% பேரை இரண்டரை முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் சரிப்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2025இற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

2025ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (04.04) முதல் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை விண்ணப்பதாரிகளிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் விண்ணப்பங்களை பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காதல் விவகாரத்தில் தங்கையை படுகொலை செய்த அண்ணன்!!

காதல் விவகாரத்தில் தங்கையை அரிவாளால் வெட்டி கொலைச் செய்த அண்ணனைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பருவாய் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் வித்யா. இவர் மார்ச் 30ம் தேதி தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென தலையில் பீரோ விழுந்துள்ளது.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வித்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். போலீசாருக்கு தகவல் எதுவும் கொடுக்காமல் உறவினர்கள் அந்த பெண்ணை அடக்கம் செய்து விட்டனர்.

இந்நிலையில் வித்யா வெண்மணி என்ற இளைஞரை காதலித்து வந்தார். அந்த இளைஞர் வித்யாவை பெண் கேட்டு சென்ற நிலையில் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். வித்தியாவின் பெற்றோர் பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இது குறித்து அந்த பெண்ணின் வீட்டில் அடிக்கடி தகராறு நடைபெற்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் அவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் பிரச்சனை நடந்து கொண்டிருந்த நேரத்தில் காதலி பலியானதால் அவருடைய காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டு தற்போது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட வித்யாவின் அண்ணன் சரவணன் தான் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.

அதன்படி வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் கோபத்தில் தன்னுடைய தங்கையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டார்.

பின்னர் தலையில் பீரோ விழுந்ததாக நாடகமாடி உடலை அவசரம் அவசரமாக அடக்கம் செய்துள்ளனர். போலீசார் சரவணனை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

லண்டனிலிருந்து சென்ற இலங்கை விமானத்தில் ஏற்பட்ட திடீர் குழப்பம்!!

பிரித்தானியாவின் லண்டனில் இருந்து இலங்கைக்கு பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று திடீரென ஓமானின் மஸ்கட்டுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டமையினால் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான UL504 விமானமே இவ்வாறு ஓமனுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.

வானிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்!!

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

தென், கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ட்ரம்பின் வரி விதிப்பின் எதிரொலி : கடும் சரிவை சந்தித்துள்ள ஆசிய பங்குச்சந்தைகள்!!

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில், உலகெங்கிலும் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை பெரிய அளவில் அதிகரிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க பொருட்கள் மீது எந்த அளவு வரி விதிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு பதிலுக்கு வரி விதிப்போம் என கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ஆசிய பங்குச் சந்தைகள் சரிவை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு 2.68 வீத சரிவையும், ஹொங்ஹொங்கின் ஹேங் செங் குறியீடு 1.16 வீத சரிவையும், சீனாவின் CSI 300 குறியீடு 0.48 வீத சரிவையும் சந்தித்துள்ளது.

மேலும், தென் கொரியாவில், கோஸ்பி குறியீடு 1.29 வீத சரிவையும், அவுஸ்திரேலியாவின் S&P/ASX 200 குறியீடு 1.17வீத சரிவையும் சந்தித்துள்ளது.

இலங்கை ரூபாவிற்கு எதிராக பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி!!

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.6875 ரூபாவாகவும், கொள்வனவு விலை 292.0185 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் பெறுமதி

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 394.3011 ரூபா மற்றும் கொள்வனவு விலை 380.1418 ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 329.8707 ரூபா எனவும் கொள்வனவு விலை 317.0976 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஏழாம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் : மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!

நேற்று (01) காலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏழாம் வகுப்பில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவன் சுகாதாரமும் உடற்கல்வியும் கற்கையின் பாடப்புத்தகத்தை பாடசாலைக்கு நேற்றைய தினம் கொண்டு செல்ல மறந்துள்ளார்.

இதனால் அந்த பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் இந்த மாணவனை பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த மாணவன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் YouTuber கிருஸ்ணா தொடர்பில் நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு!!

யாழ்ப்பாண YouTuber கிருஸ்ணாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

YouTuber கிருஸ்ணா மீதான வழக்கு இன்று (2) எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களிடம் நிதியுதவி பெற்று பிறருக்கு உதவுவதாக காட்டிக்கொள்ளும் YouTuber கிருஸ்ணா அது தொடர்பிலான காணொளிகளையும் வெளியிடுவார்.

அந்தவகையில் யுவதி ஒருவரிடம் அநாகரிகமாக வார்த்தை பிரயோகித்தமை தொடர்பில் சர்ச்சையானதை அடுத்து YouTuber கிருஸ்ணா , கைதாகி விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.