லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, லிட்ரோ விற்பனையாளர்கள் பல வாரங்களாக பல பகுதிகளில் புதிய எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

லாஃப் எரிவாயு விலை உயர்வு காரணமாக லிட்ரோ எரிவாயுவை வாங்க நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த முறை லிட்ரோ எரிவாயு விலை உயர்த்தப்படாவிட்டாலும், லாஃப் தனது 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.420 உயர்த்தியுள்ளது. அத்தோடு, 5 கிலோ சிலிண்டர் ரூ.168 அதிகரித்து ரூ.1,645 ஆக விற்பனை செய்யப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்து இடம்பெற்ற அதே இடத்தில் மற்றுமொரு விபத்து : ஸ்தலத்தில் ஒருவர் பலி!!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிரான்குளம் விஷ்னு ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இடத்தில் இன்று(02.04.2025) காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்து மின் கம்பத்தில் மோதியிருந்தது.

அதில் காரைச் செலுத்தி வந்த சாரதி தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதுடன், கார் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. மின்கம்பத்தில் கார் மோதியதால் மின்கம்பிகள் அறுந்த நிலையில் அப்பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டிருந்தது.

இவ்வாறிருக்க, ஸ்தலத்திற்கு விரைந்த மின்சாரசபை ஊழியர்கள், தடைப்பட்டிருந்த மின்சாரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவேளை,

மோட்டார் சைக்கிளில் தனது மகனுடன் சென்ற ஒருவர் குறுக்கே இருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டுள்ளார். இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழைந்துள்ளார்.

எனினும், அவருடன் பயணித்த மகன் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அதே இடத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குறித்த மின் கம்பிகள் அறுந்திருந்தாலும் மின்சார பழுதுபார்க்கும் வேலைகள் நடைபெறுகின்றன என்பது தொடர்பாக சமிக்ஞை ஏதுமின்றி மிச்சார சபை ஊழியர்கள் செயற்பட்டதன் காரமாகவே இந்த விபத்துச் சம்பவம் மீண்டும் அதே இடத்தில் இடம்பெற்றதாக அங்குள்ள பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில், ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்து முறைப்படி ஆட்டுக்குட்டியுடன் திருமணம் : காதல் தோல்வியால் வினோத முடிவு!!

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த பகவான் சிங் என்ற 27 வயதான இளைஞர், ஆட்டுக்குட்டி ஒன்றை திருமணம் செய்துள்ளார். குறித்த இளைஞன் தனது காதல் தோல்வியடைந்ததால் இந்த வினோத முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தான் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டியின் கழுத்தில் மாலையிட்டு, அதற்கு பொட்டு வைத்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், அந்த ஆட்டிற்கு பூஜா என்று பெயரிட்டுள்ளதுடன் அந்த திருமண புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், “நான் இந்த ஆட்டை பல மாதங்களாக வளர்த்து வருகிறேன். அது என்னுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது. இதனால் இந்த முடிவை எடுத்துளேன்” என பகவான் சிங் தெரிவித்துள்ளார்.

யாழில் இரண்டரை வயது குழந்தையின் அசாத்திய திறன்!!

ஆயிரம் தமிழ் சொற்களுக்கு ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி யாழ். சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை ஒருவர் அசத்தியுள்ளர்.

குழந்தையின் குறித்த அசாத்திய திறனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.

சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயது சிறுமி காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000 இற்கும் அதிகமான பெயர்களை தமிழில் கேட்கும் போது அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிகவும் அசாத்தியமாக கூறுகின்றார்.

தந்தையார் முச்சக்கர வண்டி ஓட்டுனராகவும் தாயார் குடும்ப பெண்ணாகவும் உள்ள பெரிய அளவிலான பின்புலங்கள் இல்லாத குடும்பத்தில் பிறந்த குறித்த குழந்தையானது இதுவரை ஏடு தொடக்கப்பாடாத நிலையில் இவ்வாறு அதிசிறந்த ஞாபக சக்தியை கொண்டுள்ளமையானது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், யாழ். ஊடக அமையத்தில் இவ்விடையம் குறித்து ஊடக சந்திப்பொன்றை பெற்றோர் முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன் அந்த குழந்தையின் அசாத்திய திறனை வெளிக்கொண்டு வருவதுடன் அந்த ஆற்றலை உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்படுவதற்கான முயற்சியை பெற்றோர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(2) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 929,739 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 32,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 262,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 30,070 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 240,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 28,700ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams)229,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 247,500 ரூபாவாகும். இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 228,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றி கைது செய்த பொலிஸார்!!

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை பொலிஸ் பிரிவின் ஹேகித்த வீதியிலுள்ள விடுதி ஒன்றில் பெண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணை அதிகாரிகள், விடுதியில் உள்ள குளியலறையில் ஒரு பெண் மயக்கமடைந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.

அந்தப் பெண்ணை மீண்டும் உயிர்ப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்போது குறித்த பெண் 6 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் என்ற மருந்தை வைத்திருந்ததற்காக அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பை சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேலும் விசாரித்தபோது, ​​அந்தப் பெண் வெளிநாட்டில் இருந்தபோது போதைப்பொருள் வியாபாரி ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், போதைப்பொருள் வியாபாரி அவருக்கு T-56 துப்பாக்கி மற்றும் 113 தோட்டாக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகக் கொடுத்ததாகவும் தகவல் தெரியவந்தது.

சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கமைய, அவரது இரண்டாவது கணவர் வசிக்கும் ராகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதம் மற்றும் வெடிமருந்துகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

டி-56 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை மறைத்து வைத்திருந்த ராகம வீட்டில் வசிக்கும் சந்தேக நபரின் 40 வயது கணவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர், மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

பொருளாதாரக் குழப்பத்தில் உச்சம் தொடும் தங்க விலை : காரணம் இதுதான்!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைகளால் ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.

முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மாற்ற விரும்புவதால், இந்த ஆண்டு மட்டும் தங்கத்தின் விலை 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் போருக்கு மத்தியில், ஸ்திரத்தன்மை வாய்ந்த முதலீட்டை விரும்புவோருக்கு தங்கம் ஒரு பிரதான தேர்வாக மாறியுள்ளது.

பல ஆண்டுகளாக தங்கம் உயர்ந்து வரும் நிலையில், உங்க சந்தையின் சமீபத்திய போட்டி நிலைமை அதன் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தியுள்ளது.

உலக சந்தையின் இந்த நிச்சயமற்ற நிலை நீடித்தால் அடுத்த 18 மாதங்களில் பவுன் ஒன்றுக்கு 987 அமெரிக்க டொலர்கள் வரை தங்கத்தின் விலை செல்லலாம் என கூறப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடிகளின் போது தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகின்ற போதிலும் அது சிலவேளைகளில் நிலையற்றதாகவும் இருக்கலாம்.

பங்குகள் அல்லது பத்திரங்களைப் போல தங்கம், பங்குலாபம் அல்லது வட்டியை உருவாக்காது. தங்கம் வாங்கும் போது இருந்ததை விட விலை அதிகமாகும் போது அதனை விற்பதன் மூலம் மட்டுமே முதலீட்டாளர்கள் இலாபம் உழைக்க முடியும்.

நிச்சயமற்ற சந்தைகளில் திடீரென தங்கத்தின் விலை வாங்கும் போது இருந்ததை விட குறைவடைந்தால் அது ஒரு நட்ட அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய முதலீடாக மாறும்.

இதேவேளை, தொட்டுணரக்கூடிய உண்மையான தங்கத்தை வாங்கும் போது அது பாதுகாப்புப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

எனவே, சில முதலீட்டாளர்கள் பத்திரங்களின் மூலம் தங்கத்தை கொள்வனவு செய்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் உண்மையான உலோகத்தை கையாள வேண்டிய தேவை இல்லை.

எனினும், தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் அதில் முதலிட வேண்டாம் என நிதி வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

சந்தை நிலவரங்கள் நிச்சயமற்றதாக இருப்பதால் தங்கத்தின் விலை திடீரென குறைவடைவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்வது சிலவேளைகளில் உங்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அளிக்கலாம்.

தங்கம் அல்லது பங்கு என எந்த சொத்தாக இருந்தாலும் அதனை முழுமையாக நம்பி முதலீடு செய்வது ஆபத்தானது. பல்வேறு சொத்துக்களை உள்ளடக்கிய சமநிலையான முதலீட்டு மூலோபாயம் பொருளாதார நிச்சயமற்ற தன்மையிலிருந்து உங்களின் முதலீட்டை பாதுக்காக்க உதவும்.

 

நடிகர் வடிவேலு பாணியில் திருடிய தங்க சங்கிலியை விழுங்கிய நபர்!!

தங்கச் சங்கிலி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில், சந்தேகநபரை விசாரித்த போது, அவர் வழங்கிய வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பொலிஸார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அந்தப் பரிசோதனையின் மூலம், சந்தேகநபர் சங்கிலியை விழுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன் பின்னர், அதிகாரிகள் அவரிடமிருந்து சங்கிலியை மீட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம் : தமிழர் பகுதியில் சோக சம்பவம்!!

நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட இறக்காமம் பொலிஸ் பிரிவில் உள்ள நெய்னாகாடு சாவாறு பகுதியில் நேற்று (01) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (31) மாலை நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற குறித்த மீனவர் காணாமல் போயிருந்த நிலையில், தனது கணவரை காணவில்லை என அவரது மனைவி நேற்று காலை இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, காணாமல் போன மீனவரின் நண்பரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, காணாமல் போன மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பியை கொடூரமாக கொன்ற அண்ணன் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி!!

ஜா-எல பொலிஸ் பிரிவின் ஏகல சாந்த மேத்யூ மாவத்தை பகுதியில் நேற்று (01) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பண தகராறு தொடர்பாக இரண்டு சகோதரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதன் விளைவாக மூத்த சகோதரர் தம்பியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் சாந்த மேத்யூ மாவத்தை, ஏகல பகுதியில் வசிக்கும் 24 வயது இளைஞர் ஆவார். சம்பவத்துடன் தொடர்புடைய ஏகல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் ராகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஜா-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் ஏற்படவுள்ள மாய நிகழ்வு : வானிலை நிபுணர் விடுத்துள்ள தகவல்!!

கொழும்பில் சூரியன் உச்சம் பெறவுள்ளதால், மக்களின் நிழல் மறைந்துவிடும் என வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதி மதியம் 12.12 மணிக்கு சிறிது நேரம் நிழல் மறைந்துவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவொரு ஒளியியல் மாயை நிகழ்வாகும். ஆண்டின் இந்த நேரத்தில், அதிகபட்ச சூரிய சக்தி பெறப்படுகிறது. ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் சூரியன் நம் நாட்டின் மீது உச்சத்தில் இருக்கும். இந்த உச்சம் ஏப்ரல் மாதம் 5 முதல் 15ஆம் திகதி வரை நீடிக்கும்.

ஏப்ரல் 7 ஆம் திகதி கொழும்பில் சூரியன் உச்சத்தில் இருக்கும். அன்று மதியம் 12.12 மணிக்கு யாராவது வெளியே இருந்தால், அவர்களின் நிழல் ஒரு கணம் மறைந்துவிடும்.

அவர்களால் தங்கள் சொந்த நிழலைப் பார்க்க முடியாது. வேறு யாராவது அதைப் பார்க்க முடியும். இந்த நிலைமை 4 முதல் 15 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நீடிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : ஊதியத்தை உயர்த்த திட்டம்!!

இலங்கை தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ.27,000 ஆக உயர்த்துவதற்காக, தற்போதுள்ள சட்டத்தை திருத்த திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு அறிவித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தனது முகப்புத்தக பதிவில் இதனை பதிவிட்டுள்ளார். அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து மே மாதத்தில் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார்.

தற்போது குறைந்தபட்ச ஊதியம் ரூ. 21,000 ஆக உள்ளது. இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்துடன் இந்த அதிகரிப்பு ஒத்துப்போகிறது என்றும், அடுத்த ஆண்டு ரூ. 35,000 ஆக மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மீது அவதூறு : வீதிக்கு இறங்கிய மக்கள்!!

கிளிநொச்சி – முழங்காவில் ஆரம்ப பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மீது அவதூறு பரப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலையின் நுழைவாயிலை மூடி இன்று (01) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

முழங்காவில் ஆரம்ப பாடசாலையில் கடமையாற்றும் அதிபர் , ஆசிரியர்கள் மீது சமூக வலைத்தளம் ஊடாக அவதூறு பரப்பி வருவதன் காரணமாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் முழங்காவில் பொலிஸ் நிலையம் மற்றும் கல்வி திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாடளித்துள்ளனர்.

எனினும் முறைப்பாடளித்தும் இதுவரை எந்தவித தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக பாடசாலையில் கற்றல் செயற்பாடுகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு குடியேறினால் பணமும் வீடும் இலவசம் : அழைப்பு விடுக்கும் ஐரோப்பிய நாடு!!

இத்தாலியின் ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் பணம் வழங்க இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது .

இந்த நகரத்தின் 33 கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் இந்திய மதிப்பில் 92 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்க முடிவு செய்துள்ளது.

அதேவேளை வெளிநாட்டவரும் இந்த வாய்ப்பை பெறலாம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் அரசாங்கம் கொடுக்கும் வீட்டில் 10 ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும் இல்லையெனில் கொடுத்த பணத்தை திரும்ப அரசாங்கத்திற்கே வழங்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இத்தாலியின் ட்ரெண்டினோ கிராமத்தை விட்டு மக்கள் வெளியேறி நகர் புறங்களில் தற்போது குடியேறி வருவதால் இம்முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேவாலயத்தில் அதிசய சிலை திருட்டு : CCTV இல் சந்தேகநபர்!!

கம்பஹா – கந்தானையில் உள்ள புனித செபஸ்டியார் திருத்தலத்தில் வைக்கப்பட்டிருந்த புதுமையான செபஸ்டியாரின் சிலை ஒன்று திருடப்பட்டுள்ளது. இந்த சிலை இன்று (01) அதிகாலை 2.15 மணி முதல் 3.00 மணிக்கு இடையில் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவப்பு நிற தொப்பி மற்றும் கறுப்பு நிற ஆடை அணிந்து முகத்தை மூடிக் கொண்டு வந்த நபரொருவர் சிலையைத் திருடிச் செல்லும் காட்சி புனித செபஸ்டியார் திருத்தலத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

சந்தேகநபர் திருத்தலத்தின் ஆண்கள் முன்பள்ளி பகுதியூடாக நுழைந்து அதே வழியாக திரும்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் கந்தானை புனித செபஸ்டியார் திருத்தலத்தின் பங்குத்தந்தை, பங்கு மக்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன புதுமையான சிலையைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இலங்கையிலுள்ள உயரமான கட்டடங்கள் பாரிய நிலநடுக்கத்தை தாங்குமா? நிபுணர் வெளியிட்ட தகவல்!!

 

இலங்கையிலுள்ள உயரமான கட்டடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி கொண்டது என நில அதிர்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த கட்டடங்கள் அதி நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இலங்கை அனுபவித்த அதிகபட்ச நிலநடுக்கம் சுமார் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஆகும். இது எந்த தாக்கத்தையும் சேதத்தையும் ஏற்படுத்தாது.

இருப்பினும், தற்போது கட்டப்பட்டு வரும் மற்றும் சமீபத்திய காலங்களில் கட்டப்பட்ட அனைத்து நவீன வானளாவிய கட்டடங்களும் மிதமான அளவிலான நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டமைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளன.

சர்வதேச கட்டுமானத் தரம் கொண்ட நிலநடுக்க எதிர்ப்பு தொழில்நுட்பம் இப்போது இலங்கையிலும் பின்பற்றப்படுகிறது.

மேலும் நகரத்தைத் தாக்கும் பாரிய நிலநடுக்கத்தில் கூட, கொழும்பு வானளாவிய கட்டிடங்கள் தாங்கும் சக்தி கொண்டவையான உள்ளன என்று நில அதிர்வு நிபுணர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.