மியன்மார் நிலநடுக்கத்தை கணித்த பாபா வங்கா.. 2025இல் மேலும் பல பேரழிவுகள்!!

2025ஆம் ஆண்டு தொடர்பில் பாபா வங்கா மேற்கொண்டுள்ள கணிப்புக்களில் மியன்மார் நிலநடுக்கம் பற்றியும் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கேரியாவைச் சேர்ந்த மறைந்த பாபா வங்கா, தனது வாழ்நாளில் கணித்த பல விடயங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில், 2025ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நிகழ்வுகள் குறித்தும் அவர் கணித்திருக்கிறார்.

அவற்றில் ஒன்றான மியன்மார் மற்றும் தாய்லாந்து நிலநடுக்கம் தற்போது நிகழ்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த அனர்த்தம் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்ந்து நிலநடுக்க எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, இந்த ஆண்டின் இறுதி வரை பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்களும், இயற்கை சீற்றங்களும் உண்டாகும் என பாபா வங்கா கணித்துள்ளார்.

அதற்கமைய, அமெரிக்க மேற்கில் நிலநடுக்கங்கள் மனித சமுதாயத்தில் பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கணிப்பில் இருந்துள்ளது.

அத்துடன், அவரது கணிப்புகளில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உலகின் பல்வேறு அம்சங்களில் முக்கியமான பொறுப்புகளை வகிப்பார், உக்ரைன் போரில் அவர் முன்னிலை வகிப்பார் என்றும், ஐரோப்பிய நாடுகள் பின்தங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், வேற்றுக் கிரகவாசிகளின் தாக்குதல் ஏற்படக்கூடும் என்றும், உலகம் முழுவதும் போரால் பாதிக்கப்படும் என்றும் பாபா வங்கா கணித்திருக்கிறார்.

அதேவேளை, அடுத்து வரும் 3000 ஆண்டுகளில் நடப்பவை தொடர்பில் அவர், கணித்துள்ள விடயங்களும் வெளியாகியுள்ளன.

அதற்கமைய, 2028ஆம் ஆண்டு புதிய கண்டு மின்சக்தி கண்டுபிடிக்கப்படும், பசி ஒழியும் மற்றும் வீனஸ் செல்வான் மனிதன் என அந்த கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

2043 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இஸ்லாமிய பெரும்பான்மை ஏற்படும், 2046இல் மனித மாற்று உறுப்புக்களில் ஆய்வகங்களில் சிந்தட்டிக்கில் உருவாகும் என கூறப்பட்டுள்ளது.

2066இல் சுற்றுச்சூழலை மறுகட்டமைக்கும் ஆயுதத்தை அமெரிக்கா உருவாக்கும் மற்றும் 76களில் சமூகத்தில் சாதி முறை ஒழியும் என கணிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!!

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடுவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சைகள் டிசம்பர் 20 ஆம் திகதி முடிவடைய இருந்த நிலையில் சீரற்ற வானிலை காரணமாக பிற்போடப்பட்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெற்றன.

இந்த உயர்தரப் பரீட்சைக்கு மொத்தமாக 3 இலட்சத்து 33 ஆயிரத்து 183 பரீட்சார்த்திகள் தோற்றினார்கள்.

இதில் பாடசாலை மாணவர்கள் 2 இலட்சத்து 53 ஆயிரத்து 380 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 79 ஆயிரத்து 795 பேரும் பரீட்சைக்கு முகங்கொடுத்தார்கள்.

எனவே, வருகின்ற ஏப்ரல் மாதத்துக்குள் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகரிக்கும் வெப்பநிலையால் ஆபத்து : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

தற்போது நிலவும் வெப்பமான வானிலை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மேல், வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தில் நிலவக்கூடும்.

அதற்கமைய, குறித்த பகுதிகளில் 39 பாகை செல்சியஸ் முதல் 45 பாகை செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள் லேசான ஆடைகளை அணியுமாறும், நிழலான பகுதிகளில் ஓய்வெடுத்தல் மற்றும் போதியளவு நீரை அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிக வெப்பத்தால் ஏற்படக்கூடிய சுகாதார பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்துமாறும், சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்திலிருந்து குதித்த வெளிநாட்டவர் : பொலிஸார் அதிரடி நடவடிக்கை!!

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த அமெரிக்க பிரஜை ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான வெளிநாட்டவரிடம் நடத்திய விசாரணையில், தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட் ஜம்பிங் போட்டிக்காக வந்ததாகக் கூறியுள்ளார்.

இருப்பினும், பாராசூட் ஜம்பிங் போட்டிக்காக அனுமதி ரத்து செய்யப்பட்டதாகவும், அது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தாமரை கோபுரத்திலிருந்து குதித்து பாதுகாப்பாக தரையிறங்கிய பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர், பாராசூட்டின் உதவியுடன் உயரமான இடங்களிலிருந்து குதிப்பது தனது பொழுதுபோக்காக இருப்பதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

 

500 ரூபாய்காக கொடூர கொலை : விசாரணைகள் ஆரம்பம்!!

இந்திய தலைநகர் டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் இளைஞர் ஒருவர் நேற்று (30) மாலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் குறித்த இளைஞரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். ஆனால், இளைஞரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை தொடங்கினர். விசாரணையில் கொல்லப்பட்ட இளைஞர் 500 ரூபா பணத்திற்காக கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

இளைஞரிடமிருந்து 500 ரூபா பணத்தை திருட இரு சிறுவர்கள் உட்பட 3 பேர் முயற்சித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் இளைஞரை 3 பேரும் கத்தியால் குத்திக்கொன்றுள்ளனர். இதையடுத்து கொலை செய்த சிறுவர்கள் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயர்தர பெறுபேற்றுக்காக காத்திருந்த தமிழ் மாணவி பரிதாப மரணம்!!

மட்டக்களப்பு- தாழங்குடாவை சேர்ந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அலோசியஸ் ஸ்பெக் அக்ஷனா (வயது 19) சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பெறுபேற்றுக்காக காத்திருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நோய் நிலமை காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு நாயாற்று கடற்பகுதியில் குளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

புதிய இணைப்பு : நாயாறு கடலில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் உத்தரவிட்டுள்ளார்.

முல்லைத்தீவு நாயாறு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலத்தை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் நேரில் சென்று இன்று (31.03.2025) மாலை பார்வையிட்டிருந்தார்.

அதனையடுத்து சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து சென்று சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தார்.

முதல் இணைப்பு : முல்லைத்தீவு நாயாற்று கடற்பகுதியில் குளிக்க சென்ற பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும்,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் இன்றையதினம் (31.03.2025) கப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு வந்துள்ளனர்.

குறித்த பெண்கள் நாயாற்றுகடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென மூன்று பெண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

சடலமாக மீட்பு

நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் 47, 21 வயதுடையஇரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 வயதுடைய மற்றைய யுவதியொருவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த யுவதி சடலமாக மீட்கபட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கபட்டவர் இருட்டுமடு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த சிவகுமார் வினுஷிகா என தெரியவந்துள்ளது. வாகனத்தையும்,

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கொக்குளாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டு தம்பதி பயணித்த வாகனத்தில் மோதுண்ட இளைஞன் பலி!!

அனுராதபுரத்தில் வெளிநாட்டு தம்பதியினர் பயணித்த காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கவரக்குளம் A13 வீதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்ததாக அனுராதபுரம் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அனுராதபுரத்தில் வசிக்கும் 31 வயதுடைய தொழிலாளி என தெரியவந்துள்ளது.

அனுராதபுரத்திலிருந்து கவரக்குளத்தை நோக்கிச் சென்ற கார் ஒன்றும், கவரக்குளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கடவத்தையை சேர்ந்த 59 வயதுடைய மோட்டார் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மத்திய , சப்ரகமுவ , மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் குருநாகல் மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பெருந்தொகை பணம், தங்கத்துடன் இளம் யுவதி கைது!!

கொழும்பு ராகம பகுதியில் பணம் மற்றும் தங்கப் பொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேல் மாகாணம் – வடக்கு குற்றப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 13 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் ஹெரோயின் விற்பனை மூலம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் 1.1 மில்லியன் ரூபாய் பணம், 4 மில்லியன் மதிப்புள்ள தங்கம், 2 மின்னணு தராசுகள் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் களனி பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேல் மாகாணம் – வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

30 ஆயிரம் புதிய அரச ஊழியர்கள் ஜனாதிபதி அநுரவின் உறுதிமொழி!!

அரச சேவையில் 30,000 இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பியுங்கள், நாங்கள் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு புத்தள நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”அரச வேலைகளுக்கு இப்போது நிறைய செய்தித்தாள்களில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பியுங்கள், நாங்கள் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறோம்.

நாங்கள் 30,000 புதிய, திறமையான இளைஞர்களை வேலைக்கு அமர்த்துகிறோம். பணம் இப்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

அரச சேவையில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது, ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவு உயர்த்தப்பட்டுள்ளது. அஸ்வெசும கொடுப்பனவு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவை எதுவுமே கிடைக்காமல் 8 இலட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக 5000 ரூபா பெறுமதியான உணவுப் பொதியை சதொச ஊடாக 2500 ரூபாவுக்கு வழங்குகிறோம்.

மேலும் அஸ்வெசும பெறாத ஒரு குழு உள்ளது. அவர்களுக்கு தகுதி இருந்தும் அவை கிடைப்பதில்லை. நாங்கள் விண்ணப்பங்களை கோரியுள்ளோம்.

இப்போது, ​​ஜூன் மாதத்தில் தேர்வு செய்யும் சபை ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்ட 400,000 குடும்பங்களுக்கு புதிதாக அஸ்வெசும கொடுப்பனவை வசதியை வழங்க நடவடிக்கை மேற்கொள்வோம்.” என கூறியுள்ளார்.

வவுனியாவில் குளத்தின் கரைப்பகுதியிலிருந்து உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு!!

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் – நேரியகுளம் பிரதான வீதியிலுள்ள தம்பனை புளியங்குளம் குளக்கரைக்கு அண்மித்த பகுதியில் இன்று (01.04) காலை உருகுலைந்த சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டனர்.

சடலத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் சேட் ஒன்றும் காணப்படுவதுடன் குறித்த சடலம் ஐந்து தொடக்கம் பத்து நாட்களுக்கு மேற்பட்டதாக இருக்கலாம் என்பதுடன் சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுதினால் ஆணா பெண்ணா என்பதில் கடின நிலமை ஏற்பட்டுள்ளமையுடன் பொலிஸார் மேலதிக விசாரணகளை முன்னெடுத்துள்ளமையுடன் தடவியல் பொலிஸாரும் விசாரணைகளை தொடர்கின்றனர்.

சடலத்தினை அடையாளம் காண்பதற்காகவும் பிரேத பரிசோதனைகளுக்காகவும் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கனேடிய பொது தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் வேட்பாளர்கள்!!

எதிர்வரும் ஏப்ரல் 28, 2025 அன்று நடைபெறவுள்ள கனேடிய பொதுத் தேர்தல் களத்தில், மொத்த வேட்பாளர்களில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் இருவர் லிபரல் கட்சி சார்பிலும், இருவர் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பிலும் களமிறங்குகின்றனர். இந்த இரு கட்சிகளும் கனடாவின் மத்திய மற்றும் மாகாண அரசியலில் மாறி மாறி ஆட்சி புரியும் பிரதான அரசியல் கட்சிகளாக திகழ்கின்றன.

கடந்த லிபரல் அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய கரி ஆனந்தசங்கரி ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

அத்துடன், மார்க்கம் நகரசபையின் 7ஆம் வட்டார உறுப்பினராக பணியாற்றும் ஜுவொனிற்றா நாதன், புதிய முகமாக மார்க்கம் பிக்கரிங்-புரூக்ளின் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் களமிறங்குகிறார்.

மேலும், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியில் லைனல் லோகநாதன் போட்டியிடுகிறார்.

முன்னாள் பொலிஸ் அதிகாரியான நிரான் ஜெயநேசன், அதே கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் மார்க்கம்-யூனியன்வில் தொகுதியில் நிற்கிறார்.

இந்த நான்கு தமிழ் வேட்பாளர்களுக்கும் வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சிலர், வெற்றி பெறுவதற்கு வேட்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

நான்காவது முறையாக தேர்தலில் போட்டியிடும் கரி ஆனந்தசங்கரி, இதற்கு முன் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அனுபவம் கொண்டவர்.

லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், அவருக்கு நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் பதவிகள் வழங்கப்படும் என கட்சியின் தலைமை உறுதிப்படுத்தியுள்ளது.

கனடாவின் பொதுத் தேர்தலில் தமிழ் பேசும் வேட்பாளர்கள் பங்கேற்பது, தமிழ் சமூகத்தின் அரசியல் செல்வாக்கை பிரதிபலிக்கிறது.

லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி ஆகியவை கனடாவின் மிகப்பெரிய அரசியல் சக சக்திகளாக இருப்பதால், இந்த தேர்தல் தமிழர்களுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

மக்களுக்கு வெப்பமான காலநிலை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று வெப்பமான காலநிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால், போதுமான அளவு தண்ணீர் பருகவும், வெயில் தாக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், வெள்ளை அல்லது வெளிர் நிற ஒளி ஆடைகளை அணியவும் மக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

புத்தளத்தில் கடற்கரை பகுதியிலிருந்து சடலம் மீட்பு!!

புத்தளம் – தொட்டுவாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடாமடுவெல்ல கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (28.03.2025) மாலை இடம்பெற்றுள்ளதாக தொட்டுவாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சடலமானது மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொட்டுவாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இன்று இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞன் பரிதாபமாக பலி!!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம், கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார்.

மேலும் விபத்து சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.