2025க்கான சனி பெயர்ச்சி இன்று : பொற்காலம் ஆரம்பமாகும் ராசிகள்!!

ஜோதிடத்தில், சனி மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக பார்க்கப்படுகிறது. அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ள சனி பகவான் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார்.

சனி பெயர்ச்சியால் உருவாகும் சனியின் நிலை மாற்றத்தால், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ஜோதிடத்தின் படி இன்று (29) சனி கும்ப ராசியிலிருந்து வெளியேறி, மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நிகழ்வு இரவு 10:07 மணிக்கு நிகழும். 30 வருடங்களுக்குப் பிறகு சனி பகவான் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

இன்று சனி பெயர்ச்சி மட்டுமின்றி, சூரிய கிரகணமும் நிகழப் போகிறது. அதனுடன் அன்றைய தினம் சனி அமாவாசை ஆகும்.

மீன ராசிக்கு பெயர்ச்சி அடையும் சனி ​​மகர ராசியில் இருந்து முழுமையாக வெளியேறுவார். மேலும் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்கார்களுக்கும் சனி திசையில் இருந்து விமோசனம் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மங்கள பலன் கிடைக்கும். அதிகபட்ச நன்மைகள் உண்டாகும். ஆடம்பரங்களும், வசதிகளும் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். புதிய வழியில் வருமான அதிகரிக்கும். திடீர் லாபம் பெறலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகர பலன் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும். புதிய வாய்ப்புகளை பெறலாம். சமூக அந்தஸ்து உயரும். கௌரவமும் அதிகரிக்கும். வேலையில் பெரிய பதவியும் பொறுப்பும் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலையில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியைப் பெறலாம். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.

தெற்கு அதிவேக வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து!!

இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து நேற்று (28.03) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.

தீ விபத்தின் போது பஸ்ஸின் சாரதிக்கும் பயணிகளுக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார், தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மியான்மார் நில நடுக்க பலி எண்ணிக்கை 1000 ஐ கடந்தது!!

மியன்மரில் நேற்று (28) ஏற்பட்ட நில அதிர்வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது. நில அதிர்வால் 2,376 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது.

சிறிது நேரத்தில் 6.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது.

புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மியான்மரின் மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

பெண் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் : 17 வருடங்களுக்கு பின் தெரிந்த உண்மை!!

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது வைத்தியரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 வருடங்களுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு லக்னோவில் சந்தியா என்ற பெண் ஷி மெடிக்கல் கேர் என்ற வைத்தியசாலையில் குழந்தை பெற்றெடுத்தார். அதன்பின் பல வருடங்களாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது.

இதற்காக பல வைத்தியர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் லக்னோ வைத்தியக் கல்லூரியில் சந்தியா எடுத்த எக்ஸ்ரேயில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது.

மார்ச் 26 ஆம் திகதி அவரது வயிற்றிலிருந்த கத்திரிக்கோலை வைத்தியர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். இதனையடுத்து தனது மனைவி சந்தியாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

அதில், 17 வருடங்களாக தனது மனைவி வேதனைப்பட்டதற்கு வைத்தியர் புஷ்பா ஜெய்ஸ்வாலின் அலட்சியம் தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவானது அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது.

எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.

ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்குரிய செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளன.

ஆகக்குறைந்தது நிலநடுக்கத்திற்குரிய விழிப்புணர்வு செயற்திட்டங்களை இலங்கையின் அனைத்து மக்கள் மத்தியிலும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.

இல்லையேல் 2004ஆம் ஆண்டின் சுனாமி அனர்த்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தது போன்று ஒரு நிலநடுக்க அனர்த்தத்தினாலும் இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்களின் இறப்பை நாம் தவிர்க்க முடியாது என்பது உண்மை என கூறியுள்ளார்.

எக்ஸ் தளத்தை விற்பனை செய்த எலோன் மஸ்க்!!

தொழிலதிபர் எலோன் மஸ்க் (Elon Musk) சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தை தனது சொந்த நிறுவனமான எக்ஸ் ஏ.ஐ. (xAI) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த விடயத்தை எலோன் மஸ்க் நேற்று இரவு (28) தனது எக்ஸ் தளத்தில் உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அத்தோடு, அவர் தனது எக்ஸ் நிறுவனத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எக்ஸ் ஏ.ஐ. நிறுவனம் எக்ஸ் தளத்தை வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்தை 80 பில்லியன் டொலர்களாகவும், எக்ஸ் தளத்தை 33 பில்லியன் டொலர்களாகவும் மதிப்பிடுகிறது.

எக்ஸ் மற்றும் எக்ஸ் ஏ.ஐ. ஆகியவற்றின் எதிர்காலம் ஒருங்கிணைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த இணைப்பு, எக்ஸ் ஏ.ஐ.யின் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன்களை எக்ஸ் தளத்தின் பரந்த பயனர் தளத்துடன் இணைத்து, சிறப்பான, ஆற்றல் மிகுந்த சேவையை மக்களுக்கு அளிக்க முடியும் ” என மஸ்க் தெரிவித்துள்ளார்.

முன்னதாக எக்ஸ் தளத்தில் X AI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் தொழில்நுட்பமான ‘குரோக் 3’ ஏஐ (Grok 3 AI) அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்ட நபர்!!

தெலுங்கானாவின் ஒரே மண்டபத்தில் ஒரு நபர் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ள செய்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. லிங்காபூர் மண்டலத்தில் கும்னூர் கிராமத்தில் சூரியதேவ் என்ற நபர் வசித்து வருகிறார்.

இவர் லால் தேவி மற்றும் ஜல்காரி தேவி என்ற இருபெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து தாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்கிறோம் என்று தெரிவித்தபோது, முதலில் கிராம பெரியவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனால் இறுதியில் அவர்கள் திருமணத்திற்கு சம்மதித்ததை தொடர்ந்து அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதன்படி, இரண்டு பெண்களின் பெயர்களையும் ஒரே திருமண அழைப்பிதழில் அச்சிட்டு, ஒரே மண்டபத்தில், ஒரே முகூர்த்த நாளன்று அவர்களை சூர்யதேவ் பீம் திருமணம் செய்தார்.

இவர்கள் மூவரும், தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் திருமணம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வீடியோவில், சூர்யதேவ் பீம், இரண்டு பெண்களுடன் அக்னி குண்டத்தை சுற்றி திருமணச்சடங்கில் ஈடுபடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

A/L பெறுபேறுகள் : மாணவர்கள் குழப்பமடைய வேண்டாம் : பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு!!

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அண்மைக் காலமாக க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் பல தகவல்கள் பரவி வருகின்றன.

எனினும் , க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

எனவே சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலியான தகவல்களினால் மாணவர்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மனைவி மீது சந்தேகம் : பச்சிளம் குழந்தையை கொன்ற தந்தை!!

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இரண்டரை வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரத் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, மண்ணடி லிங்கி செட்டி தெரு பகுதியில் அக்ரம் ஜாவித் என்பவர் தனது மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், தொடர்ச்சியாக கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அதிகாலை குழந்தை மூச்சு திணறி இறந்துவிட்டதாக குடும்ப உறுப்பினர்களை ஜாவித் நம்ப வைத்து நாடகமாடியுள்ளார். இதனையடுத்து சந்தேகம் அடைந்த மனைவியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், பிரேத பரிசோதனையில் குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக குழந்தையை அவ்வப்போது அடித்து துன்புறுத்துவதும், தாய் இல்லாத நேரத்தில் குழந்தைக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளதாகவும் ஜாவித் பொலிஸாரின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் மூலம் பெண் குழந்தை கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. ஜாவித்தின் மனைவிக்கு ஏற்கனவே ஒரு ஆண் நண்பர் இருப்பதாகவும் தாங்கள் இருவரும் கருப்பாக இருக்கும் பட்சத்தில் குழந்தை மட்டும் எப்படி சிவப்பாக பிறந்தது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தையை கொன்றதாக ஜாவித் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் பெண் குழந்தையை படுகொலை செய்த அக்ரம் ஜாவித்தை பொலிஸார் கைது செய்து விசாரணை முடித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய, ஜாவித்தை எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழப்பு!!

விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மட்டக்களப்பு – மூதூர் பாரதிபுரத்தைச் சேர்ந்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பாரதிபுரம் பகுதியில் வைத்து இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயமடைந்த இளைஞன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சமுத்திரகனியின் பைலா படத்தில் நடிக்கும் இலங்கை நடிகை!!

தயாரிப்பாளர் ராசய்யா கண்ணனின், சமுத்திரகனியில் பைலா படத்தின் மூலம் இலங்கை நடிகை மிச்சல, தமிழில் அறிமுகம் ஆகிறார்.

பைலா படத்தில் ராஜ்குமார், யோகி பாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, விஜய் டிவி ஆண்ட்ரூ, என். இளங்கோ உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

காதலன் படம் சூப்பர் ஹிட் ஆனதும், ‘நடனப் புயல்’ பிரபுதேவாவைத் தேடி ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் வந்தன.

அப்போது அவர் ஒத்துக்கொண்ட படங்களில் ஒன்று ‘ராசய்யா’. பிரபுதேவா ஜோடியாக ரோஜா நடிக்க, இளையராஜா இசை அமைத்திருந்தார். படத்தை இயக்கியவர் பி. கண்ணன்.

இந்நிலையில் ‘ராசய்யா’ படத்தை இயக்கிய டைரக்டர் ‘ராசய்யா கண்ணன்’ என்றே இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறார். பி. கண்ணன் ‘கலா தியேட்டர்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

அந்த நிறுவனம் மூலம் ‘கதையல்ல நிஜம்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இதன் தொடர்ச்சியாக தனது கலா தியேட்டர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ‘பைலா’ என்று தலைப்பு சூட்டியுள்ளார். கதாநாயகனாக சமுத்திரக்கனி நடிக்க, அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் இலங்கை நடிகை மிச்சல, தமிழில் அறிமுகம் ஆகிறார். ராஜ்குமார், யோகி பாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, விஜய் டிவி ஆண்ட்ரூ, என். இளங்கோ உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சேஸிங்’ படத்தை இயக்கிய கே.வீரக்குமார் இந்தப் படத்துக்கு கதை எழுதி இயக்குகிறார். தயாரிப்பாளர் ராசய்யா கண்ணன் திரைக்கதை எழுத, இயக்குநர் விஜி வசனம் எழுதியுள்ளார். ‘அய்யோ சாமி..’ ஆல்பம் புகழ் சனுகா இசையமைக்கிறார்.

இன்று நிகழும் இவ்வாண்டின் முதல் சூரிய கிரகணம்!!

2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்றைய தினம் நிகழவுள்ளது. இந்திய நேரப்படி, இந்த சூரிய கிரகணமானது இன்று பிற்பகல் 2:20 மணிக்கு தொடங்கி மாலை 6:13 மணி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வரும்போது தற்காலிகமாக சூரியன் மறைக்கப்படும் நிகழ்வே சூரிய கிரகணமாக தென்படுகிறது.

இது ஒருசில நகரங்களில் முழுமையாகவும், ஒரு சில நாடுகளில் பகுதியாகவும் தெரிகிறது. ஆனால், இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என கூறப்படுகிறது.

எனினும் இதனை ஐரோப்பாவின் சில பகுதிகள், ஆசியாவின் வடக்கு பகுதிகள், வடக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள், தென் அமெரிக்காவின் வடக்கு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அவதானிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வாண்டிற்கான இரண்டாவது சூரியகிரகணம் செப்டெம்பர் 21 ஆம் திகதி தென்படவுள்ளது.

ஜூஸ் கடைக்காரருக்கு 7.79 கோடிக்கு வருமான வரி : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் ஜூஸ் கடைக்காரர் ஒருவருக்கு ரூ.7.79 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம் சராய் ரெஹ்மான் பகுதியில் வசிப்பவர் முகமது ரஹீஸ்(35). இவர் அலிகார் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஜூஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

யூஸ் கடை மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.500 – 600 வரை சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு கடந்த 18 ஆம் தேதி வருமான வரி அலுவலகத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது.

அந்த நோடீஸில், ரூ.7.79 கோடி வரி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் மார்ச் 28 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முகமது ரஹீஸ், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார். இதுகுறித்து ரஹீஸ் கூறுகையில்,

இவ்வளவு வரி எவ்வாறு வந்தது என்று எனக்கு தெரியாது. வயதான பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், மிகவும் கஷ்டப்பட்டு வருவதால் என்ன செய்வதென்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் , ஜூஸ் கடைக்காரருக்கு ரூ.7.79 கோடிக்கு வருமான வரி விதித்த சம்பவம் அங்கு பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மியன்மாரை உலுக்கிய பாரிய பூகம்பம் : ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!!

மியன்மார் தாய்லாந்து தலைநகரத்தை உலுக்கியுள்ள பூகம்பம் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் இது பரந்துபட்ட பேரழிவு என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

மியன்மாரின் மண்டலாய் நகரத்தினை பூகம்பம் தாக்கியதை தொடர்ந்து ஐந்துமாடிக்கட்டிடமொன்று தங்கள் கண்முன்னால் இடிந்துவிழுந்தது என அதனை நேரில் பார்த்தவர்கள் ரொய்ட்டர் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

சுமார் 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தை சேர்ந்த ஒருவர் ஐந்துமாடிக்கட்டிடம் எனது கண்முன்னால் இடிந்து விழுந்ததை பார்த்தேன் என தெரிவித்துள்ளார்.

அனைத்தும் குலுங்கதொடங்கியதும் நாங்கள் வீட்டிலிருந்து வெளியே ஓடினோம் என தெரிவித்துள்ள அவர், எனது நகரில் அனைவரும் வீதியில் நிற்கின்றனர் வீடுகளிற்குள் செல்வதற்கு எவருக்கும் துணிச்சல் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு நபர் கூறுகையில், மண்டலாயி;ல் தேநீர் கடையொன்று இடிந்து விழுந்தது,உள்ளே பலர் சிக்குண்டுள்ளனர் எங்களால் அருகில் செல்ல முடியவில்லை,நிலைமை மிக மோசமாக உள்ளது என தெரிவித்துள்ளது.

அதேவேளை இதுவரை மியன்மார் அதிகாரிகள் உயிரிழப்புகள் சேதங்கள் குறித்து எந்த விபரங்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் இன்று (28) 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் தாய்லாந்து மற்றும் வியட்நாம் வரை உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உணவகங்களில் உணவு கொள்வனவு செய்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

நாடளாவிய ரீதியில் நியாயமான விலையில் உணவுகளை வழங்கும் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தேசிய உணவு ஊக்குவிப்புச்சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து தற்போது உணவகங்களை நடத்தி வரும் வர்த்தகர்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, முதலாவது மாதிரி உணவகம் ஏப்ரல் முதலாம் திகதி நாரஹேன்பிட்டியில் திறக்கப்படவுள்ளது. இதன் இரண்டாம் கட்டமாக தற்போதுள்ள உணவகங்களின் தரத்தை உயர்த்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுகளின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் மக்களின் உரிமையை உறுதிப்படுத்தல், சரியான சுகாதாரத் தரத்திற்கு ஏற்ற உணவை பெற்றுக் கொள்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குதல்,

நுகர்வோர் நம்பிக்கையை வளர்ப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், அது தொடர்பில் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பேருந்து கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலி!!

பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் தாய், தந்தை, சகோதரியை இழந்த சிறுவன் பரிதவித்தது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உலுக்கியது.

தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவீந்தர். இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கோயில் திருவிழாவிற்காக காரில் பயணித்தார்.

காரில் ரவீந்தர், அவரது மனைவி ரேணுகா, மகள் ரிஷிதா (8) மற்றும் மகன் ரிஷிகிருஷ்ணா (6) ஆகியோர் ஒன்று சேர்ந்து பயணித்தனர்.

இந்நிலையில் இவர்களது கார் பிபி குடேம் அருகே சூர்யாபேட்டை பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது, எதிரே வந்துக் கொண்டிருந்த அரசு பேருந்து இவர்களது கார் மீது நேருக்கு நேராக மோதி கோர விபத்திற்குள்ளானது. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை மீட்டு சூர்யாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முயற்சித்தனர்.

ஆனால், ரவீந்தர், ரேணுகா மற்றும் ரிஷிதா ஆகிய மூன்று பேருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு,

மூன்று பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.