வவுனியா பொது வைத்தியசாலையில் கடமைபுரியும் ஆண் தாதிய உத்தியோகத்தர் மீது நேற்று இரவு (01.12.2016) கடமைக்கு சென்றபோது வைத்தியசாலையின் விடுதியிலுள்ள வளவிற்குள் வைத்து தலைக்கவசம், ஜக்கட் அணிந்த இனந்தெரியதாக நபர் ஒருவர் பின் தொடர்ந்து மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த தாதிய உத்தியோகத்தர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இந்நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரை இன்று சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இக் கைது சம்பவம் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் வினவிய போது..
இன்று எமது உத்தியோகத்தரை சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் கைது செய்தனர். அதன் பின்னர் அவரை விடுதலை செய்ததாக தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (02.12.2016) இரவு 8.00 மணியளவில் புட்சிட்டிக்கு அருகே இ.போ.ச பேரூந்து மீது தாக்குதல் நடாத்திய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து மீது வவுனியா புட்சிட்டிக்கு அருகே இன்று இரவு 8.00 மணியளவில் இருநபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக இரு சந்தேகநபர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். எனினும் இச் சம்பவத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்ப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 02 ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் சேமமடு முதலாம் படிவத்தில் இராணுவத்தினரால் விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்ட 22 பொதுமக்களும் காணாமல் போனதன் 32ம் ஆண்டு நினைவு ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு இன்றையதினம் (02.12.2016) சேமமடு முதலாம் படிவ ஆதி விநாயகர் ஆலயத்தில் சேமமடு உறவுகளினால் அனுஷ்ட்டிக்கப்பட்டது.
இவ் விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிஷெல் ஒபாமா ஒருபோதும் தேர்தலில் போட்டியிட மாட்டாரென ஒபாமா திட்டவட்டமாக கூறியுள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்காக பிரசாரம் செய்தவர், ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா.
“நான் ஜனாதிபதி பதவிக்கு வந்தால் மிஷெல்லுக்கு அமைச்சு பதவி அளிப்பேன்” என ஹிலாரி கூறி இருந்தார். ஆனால் தேர்தலில் அவர் தோல்வியை தழுவ நேரிட்டது.
இந்தநிலையில் அடுத்த தேர்தலில் மிஷெல் ஒபாமா போட்டியிடக்கூடும் என யூகங்கள் எழுந்தன. இது தொடர்பாக ‘ரோலிங் ஸ்டோன்’ என்ற பத்திரிகைக்கு ஒபாமா அளித்த செவ்வியின்போது அவர், “மிஷெல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார்.
நீங்கள் அறிந்தபடி மிஷெல் திறமை வாய்ந்தவர். அமெரிக்க மக்களுடன் அவர் வியக்கத்தக்க தாக்கத்தை கொண்டுள்ளார். ஆனால் அவர் அரசியலில் இருக்க வேண்டுமென விரும்புகிறார் என நான் தமாஷ் தான் பண்ண வேண்டும்” என கூறினார்.
ஏற்கனவே மிஷெலிடம் அவரது எதிர்கால திட்டம் குறித்து கேட்டபோது அவர், “நான் ஒருபோதும் ஹிலாரியின் பாதையில் செல்ல மாட்டேன்” என குறிப்பிட்டமை நினைவுகூறத்தக்கது. ஹிலாரி, தனது கணவர் கிளிண்டனின் பாதையில் அரசியலில் குதித்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் வருடத்தின் அதி சிறந்த டயலொக் கிரிக்கெட் வீரர் விருதை மூன்றாவது தடவையாக வென்றெடுத்தார்.
வருடத்தின் சிறந்த டயலொக் கிரிக்கெட் வீரருக்கான விருதை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடமிருந்து இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் பெறுகின்றார்
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பிரகாசிக்கும் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் மகுடம் சூட்டும் விழாவான டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுவிழா, வோட்டர்ஸ் எஜ் மண்டபத்தில் புதன் இரவு கோலாகலமாக நடைபெற்றது.
2015 – 2016 கிரிக்கெட் பருவகாலத்தில் அதி சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியவர்களைக் கௌரவிக்கும் இவ்விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாகிஸ்தானின் கிரிக்கெட் மேதை வசிம் அக்ரம் ஆகியோர் முறையே பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
வருடத்தின் மக்கள் அபிமான கிரிக்கெட் வீரருக்கான விருதினை டயலொக் ஆசியாட்டாவின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கவுள்ள சுமித் வீரசிங்கவிடமிருந்து திலக்கரட்ண டில்ஷான் பெறுகின்றார்.
வருடத்தின் அதி சிறந்த டயலொக் கிரிக்கெட் வீரர் விருதை வென்றெடுத்த ஏஞ்சலோ மெத்யூஸ், டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் ஆகிய இரண்டு வகை போட்டிகளிலும் அதி சிறந்த சகலதுறை வீரருக்கான இரண்டு விருதுகளையும் வென்றெடுத்தார்.
வருடத்தின் மக்களின் அபிமான வீரராக சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற திலக்கரட்ன டில்ஷான் வென்றெடுத்தார்.
இவ் விழாவில் திலக்கரட்ன டில்ஷானும் லசித் மாலிங்கவும் தலா இரண்டு விருதுகளுக்கு சொந்தக்காரர்களாகினர்.
மக்கள் அபிமான வீரர் விருதை விட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த துடுப்பாட்டக்காரர் விருதையும் டில்ஷான் வென்றெடுத்தார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் ஆகிய இரண்டு வகை அரங்குகளிலும் வருடத்தின் அதி சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதுகளை லசித் மாலிங்க வென்றெடுத்தார்.
கடந்த வருடம் முன்னேறிவரும் வீரருக்கான டயலொக் விருதை வென்றெடுத்த குசல் மெண்டிஸ், வருடத்தின் எதிர்கால கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றெடுத்தார். பாகிஸ்தானின் கிரிக்கெட் மேதை வசிம் அக்ரமிடமிருந்து இந்த விருதைப் பெறும் பாக்கியம் குசல் மெண்டிஸுக்கு கிடைத்தமை அவரது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வருடத்தின் அதி சிறந்த டெஸ்ட் துடுப்பாட்டக்காரராக தினேஷ் சந்திமாலும் வருடத்தின் அதி சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளராக ரங்கன ஹேரத்தும் தெரிவாகினர்.
வருடத்தின் அதி சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்டக்காரர் விருது குமார் சங்கங்காரவுக்கு வழங்கப்பட்டது.
சர்வதேச மகளிர் கிரிக்கெட்
*அதி சிறந்த சர்வதேச ஒருநாள் துடுப்பாட்டக்காரர்: சமரி அத்தப்பத்து.
*அதி சிறந்த சர்வதேச ஒருநாள் பந்துவீச்சாளினி: இனோக்கா ரணவீர.
*அதி சிறந்த சர்வதேச ஒருநாள் சகலதுறை வீராங்கனை: ஷஷிகலா சிறிவர்தன.
இதர விருதுகள்
*வருடத்தின் அதி சிறந்த வர்ணனையாளர்: ரசல் ஆர்னல்ட்.
*வருடத்தின் அதி சிறந்த ஊடகவியலாளர்: ரெக்ஸ் க்ளமென்டைன் (தி ஐலண்ட்).
*வருடத்தின் அதி சிறந்த மத்தியஸ்தர்: ருச்சிர பல்லியகுரு.
மகளிர் கிரிக்கெட் அணியினர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிவருவதால் அவர்களில் எவரும் விருது விழாவில் கலந்துகொள்ள வில்லை.
குமார் சங்கக்கார, ரசல் ஆர்னல்ட், ரெக்ஸ் க்ளமென்டைன் ஆகியோர் தொழில் நிமித்தம் விருதுவிழாவுக்கு வருகை தரமுடியாமல் போனதாக தெரியவருகின்றது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான விருதுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வழங்கப்படவுள்ளன.
கர்நாடகாவில் விலங்குகள் மற்றும் மனிதர்களை தின்னும் கொடூர விலங்கு ஒன்று பிடிபட்டுள்ளதாக கூறி வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கர்நாடகாவின் எல்லைப் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி விசித்திரமான மிருகம் ஒன்று பிடிபட்டுள்ளது. இதை சமூகவலைத்தளங்களில் இது ஒரு கொடூரமான விலங்கு என்றும் விலங்குகள் மற்றும் மனிதர்களை உண்ணும் ஏலியன் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் கர்நாடகாவின் எல்லைப் பகுதி வழியே செல்பவர்கள் பார்த்து கவனமாக செல்லுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளது.
ஹைதராபாத்தில் காணாமல் போன கல்லூரி மாணவி ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெட்ஹகோனி மோனிகா என்ற 23 வயது மாணவி ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு பொருளியல் படித்து வருகிறார். நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த மோனிகா அங்கு கல்லூரி விடுதியிலே தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று தான் வீட்டுக்கு வருவதாக அவருடைய தாயாரிடம் மோனிகா கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. அவருடைய போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது.
பல இடங்களில் தேடிவிட்டு அவருடைய விடுதியில் விசாரித்த போது அவர் சனிக்கிழமையே கிளம்பிவிட்டதாக விடுதியில் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மோனிகா காணாமல் போனது தொடர்பாக உஸ்மானியா பல்கலைக்கழக பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் காணாமல் போன மோனிகாவை தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை யாரேனும் மர்மநபர்கள் கடத்தி இருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் ரூபாய் நோட்டு தடையால் தினக்கூலி ஒருவர் தனது மனைவியின் இறுதிச்சடங்கை நடத்துவதற்கு பணம் இல்லாமல் 2 நாட்களாக வங்கி வாசலில் காத்திருந்த அவலநிலை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத என்ற அறிவிப்பால், வங்கி கணக்கில் பணம் இருந்தாலும் அதை எடுக்க முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லை. இதனால் நாடு முழுவதும் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா என்ற பகுதியைச் சேர்ந்தவர் தினக்கூலியான முன்னி லால்(66). இவரது மனைவி பூல்வதி(61).
பூல்வதி புற்றுநோயால் கடந்த திங்கட்கிழமை மரணம் அடைந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய கையில் பணம் இல்லை. மகன்களை அழைத்து வங்கியில் பணம் எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
ஆனால், இரண்டு நாட்களாக வங்கியில் பணம் எடுக்க சென்றவர்கள் பட்டுவாடா செய்வதற்கு பணம் இருப்பு இல்லை என்று வங்கி நிர்வாகம் சொன்னதை அடுத்து, ஒரு பிளாஸ்டிக் டென்ட் போட்டு தனது மனைவியின் சடலத்தை அங்கு வைத்தார்.
இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டதால் சம்பவ இடத்திற்கு காவல் துறையினரும், உள்ளூர் அரசியல் பிரமுகரும் சென்றுள்ளனர்.
இதையடுத்து, இறுதிச்சடங்கு நடத்த காவல் அதிகாரி 2000 ரூபாயும், அரசியல் பிரமுகர் 1000 ரூபாய் கொடுத்தும், லால் தனக்கு வங்கயில் பணம் இருக்கிறது, எனது பணத்தைக் கொண்டு தான் மனைவியின் இறுதிச் சடங்கை நடத்துவேன் என பிடிவாதமாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் வங்கிக்கு பணம் கொடுத்ததை அடுத்து தனது மகனின் கணக்கில் இருந்து 15,000 ரூபாயை லால் எடுத்துக்கொண்டு தனது மனைவியின் இறுதிச் சடங்கை நடத்தியுள்ளார்.
அன்பிற்கும் நட்பிற்குமான வலயமைப்பினரால் ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு வவுனியா இறம்பைக்குளம் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நிர்வாக உறுப்பினர்களான சிவராசா பிரதீப், ரவீந்திர டீ சில்வா, சிவில் சமூக செயற்பாட்டாளர் இ. இராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு, டிசம்பர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரையும் ‘பாராபட்சமற்ற சமூகத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் இளைஞர் யுவதிகளுக்கு தெளிவூட்டும் செயற்பாடுகள் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இன்றைய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந் நிலையில் வவுனியாவில் தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன.
வவுனியாவிலிருந்து வடக்கிற்கான தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ள போதும் வடக்கை தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கான தனியார் பஸ் சேவையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வும் கருத்தரங்கும் ஊர்வலமும் நேற்று(01.12.2016) வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி பவானி பசுபதிராஜா தலைமை தாங்கியிருந்தார்.
இதன்போது எயிட்ஸ் நோய் பரவுவதன் முறைகள் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக முற்சக்கரவண்டி உரிமையாளாகள் மற்றும் சாரதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டதுடன் வவுனியா நகர்ப்பகுதியில் விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தாய்சேய் நலன் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி ஜெயதரன், பாலியல் நோய் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி கே.சந்திரகுமார், பாலியல் நோய் சிகிச்சை நிலைய பொது சுகாதார பரிசோதகர் து.சிவானந்தன் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
தனிம அட்டவணையில் உள்ள 118 கூறுகளையும் ஒரே முறை ஞாபகத்துடன் கூறும் 5 வயது சிறுவன் ஒருவர் தொடர்பில் இங்கிலாந்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் எட்பீல்டில் வசிக்கும் இந்த 5 வயதுடைய மெத்திவ் என்ற சிறுவன் இலங்கை பொறியியலாளர் மற்றும் வைத்தியரின் மகனாவார்.
தனிம அட்டவணையில் உள்ள 118 கூறுகளையும் ஒரே முறை ஞாபகத்துடன் கூறுவதற்காக குறித்த சிறுவன் 1 நிமிடமும் 16 வினாடிகளை மாத்திரமே செலவிட்டுள்ளார்.
2011ஆம் ஜுலை மாதம் 5ஆம் திகதி பிறந்துள்ள மெத்திவ் தனது திறமையை 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் 27ஆம் வெளிப்படுத்தியுள்ளார். அதன் போது அவரது வயது 1850 நாட்கள் மாத்திமே.
கின்னஸ் புத்தகத்திற்கு சமமான ரெகோர்ட் செட்டர் இணையத்தில் தற்போது வரையில் அவரது திறமை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் வெகு விரைவில் அவர் உலக சாதனை ஒன்றை படைப்பதற்கு ஆயத்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனிம அட்டவணையில் உள்ள 118 கூறுகளையும் ஒரே முறை ஞாபகத்துடன் கூறும் உலகில் வயது குறைந்த சிறுவன் மெத்திவ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் இந்த சாதனையை இந்தியாவை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒரு பதிவு செய்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பிரஜை ஒருவர் கடந்த எட்டு நாட்களாக தங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சீனாவை சேர்ந்த பிக்கு ஒருவர் தங்கியிருப்பதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
களனி பிரதேச பௌத்த விகாரைக்கு தொடர்புபட்டுள்ள மாநாயக்க பௌத்த பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்காக, குறித்த பிக்கு இலங்கை வந்துள்ளார்.
களனியில் அமைந்துள்ள பௌத்த பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ள போதிலும், அவர்கள் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கே குறித்த பிக்குவை அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து பௌத்த பல்கலைக்கழக நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது, குறித்த பிக்குமார் தங்கியிருப்பதற்கு தேவையான கட்டிட நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தியடையவில்லை. இதனால் சீன நாட்டு பிக்குவை தங்க வைப்பதற்கான வசதிகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
சீனாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுடன் பிக்குவை அனுப்பி வைக்க முயற்சித்த போதும், அவர் செல்ல மறுத்துள்ளார்.
குறித்த பிக்கு சீன மொழியில் மாத்திரம் பேசுவதால், அவரிடம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவது கடினமாக உள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2003 ஆம் ஆண்டு பௌத்தம் மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெண் ஒருவர் கால்நடை வளர்த்து அன்றாட தேவைகளை நிறைவேற்றி வருகின்றார்.
கலஹா – பெல்வூட் பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான சாலிக்க நவோதனி என்ற பெண்ணே, பட்டம் பெற்று கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றார்.
குறித்த பெண்ணின் வீடு மிகவும் பழமையானதாகவும், அடிப்படை வசதிகளற்றதாகவும் காணப்படுகிறது.
குறித்த பெண்ணுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் அவர்கள் குப்பி விளக்குகளை வைத்துக்கொண்டே கல்வி நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று தனது இளங்கலை சான்றிதழை வீட்டின் சுவரில் தொங்கவிட்டுள்ள குறித்த பெண், கணவனுக்கு உதவியாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
தொழில் பெறுவதற்காக பல பரீட்சைகளை மேற்கொண்டிருந்த நிலையிலும் அவருக்கு எந்த தொழிவாய்ப்பும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை உயர் கல்வி படிப்பதற்காக தன் கணவர் செலவுகளை மேற்கொண்டிருந்தார். எனினும் அதன்மூலம் எந்தவித பிரதிபலனும் கிடைக்கவில்லை. ஆனால் கணவனுக்கு உதவ வேண்டும் என்றும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
என்னுடைய கல்வியை வைத்து கணவனுக்கு உதவி செய்ய முடியாமல் போனாலும் அவருடைய தொழிலுக்காக என்னால் உதவ முடியும் என குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய வலியை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே சுவரில் பட்டம் பெற்ற சான்றிதழை தொங்கவிட்டுள்ளதாக குறித்த பெண் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பைரவா உடைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருவோருக்கு, ஆடை வடிவமைப்பாளர் சத்யா வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பைரவா’இப்படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார் சத்யா.
பைரவா படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்த அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. சமீபத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், விஜய்யின் ஆடை வடிவமைப்பை சிலர் கேலி செய்து வருகிறார்கள். இதற்கு ஆடை வடிவமைப்பாளர் சத்யா தனது ட்விட்டர் தளத்தில் பதிலளித்திருக்கிறார்.
சாம்பல் கலந்த சிவப்பு சட்டை ரெடிமேட் ஆக வாங்கி, அதன் முன்பகுதியை வெட்டி சாம்பல் நிறத்துணியைத் தைத்தோம். அந்த சட்டையில் பாக்கெட்டின் கீழ் நிறைய பட்டன்கள் இருக்கும். அது ஒரு புதிய முயற்சி. சாம்பல் கலந்த சிவப்பு நிறப் பேண்ட்டை தனியாக செய்தோம்.
சுருக்கமாக சொல்வதென்றால் மடங்கும் போது நீல நிறம் தெரியும் வகையில் உருவாக்கினோம். ‘பைரவா’வுக்காக இந்த கடின உழைப்பை மேற்கொண்டோம். நேர்மறையோ, எதிர்மறையோ உங்கள் கருத்துகளை வெளியிடலாம். ஆனால், மொத்த காட்சிகளோடு உடையைப் பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தால் மகிழ்வேன்
என்று தெரிவித்திருக்கிறார்.
ஜனவரி 12 ஆம் திகதி வெளியீட்டிற்கு இப்படம் தயாராகி வருகிறது.
கிரேக்கத்தின் எதன்ஸ் நகரில் இடம்பெற்ற ஆண் அழகன் போட்டியின் போது வெற்றி வாய்ப்பை தவரவிட்ட போட்டியாளர் ஒருவர் கோபத்தில் நடுவரை தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதன்ஸ் நகரில் இந்த ஆண்டுக்கான வைர கிண்ண ஆண் அழகன் போட்டி நடைபெற்றது. இதில் கிரேக்கத்தின் பிரபல ஆண் அழகர்களில் ஒருவரான கியான்னிஸ் மேகோஸ் என்பர் 100 கிலோவுக்கான போட்டியாளர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் இருந்துள்ளார்.
ஆனால் நடுவர்கள் வெற்றியாளராக வேறொரு நபரை தெரிவு செய்து அறிவித்துள்ளனர்.
இதில் ஆத்திரம் கொண்ட கியான்னிஸ் நடுவர்களை தாக்கத் துவங்கியுள்ளார். கிரேக்கத்தில் மிகவும் பிரபலமானவரும் ஆண் அழகர்களால் மரியாதை அளித்து வருபவருமான அர்மாண்டோ மார்க்வெஸ் என்ற நடுவரை கியான்னிஸ் தூக்கிய வீசிய சம்பவம் அங்கிருந்த பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.