குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திடீரென கொட்ட ஆரம்பித்த முடி : 72 மணி நேரத்தில் வழுக்கை : அச்சத்தில் மக்கள்!!

இந்திய கிராமம் ஒன்றில் உள்ள மக்களுக்கு திடீரென முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கையாவதால் அச்சம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, புல்தானா மாவட்டத்தில் உள்ள பாண்ட்கான், கல்வாட், ஹிங்னா கிராமங்களில் இவ்வாறு அங்குள்ள மக்களுக்கு முடி உதிர்வதாக கூறப்படும் நிலையில் ஏராளமான மக்கள் பாதிக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

72 மணி நேரத்தில் வழுக்கை

அங்குள்ள ஆண், பெண் என இருவரும் கடந்த சில வாரங்களாக முடி உதிர்தல் பிரச்சனைக்கு உள்ளாகி வருகின்றனர். இதில், பலருக்கு வழுக்கை தலை ஆகும் அளவுக்கு பிரச்னை ஏற்படுகிறது.

இவர்களுக்கு, உச்சந்தலையில் சிறிது அரிப்பு ஏற்படுகிறது. இதையடுத்து, சில நாட்களுக்கு பின் ரோமத்தின் தன்மை சொரசொரப்புடன் மாறுதல் ஏற்பட்டு 72 மணி நேரத்தில் வழுக்கையாகி தானாகவே முடி உதிர்ந்து விடுகிறது.

அவர்கள் தங்களது தலைமுடியை லேசாக கோதினாலும் மொத்த முடியும் வந்து விடுவதாக கூறுகின்றனர்.

இந்த மூன்று கிராமங்களில் சுமார் 50 பேருக்கு கடந்த ஒரு வாரத்தில் முடி உதிர்ந்துள்ளதால் அச்சம் நிலவுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தண்ணீர் மாதிரிகளை எடுத்து சோதனை

இதற்கான காரணம் என்னவென்று இன்னும் கண்டறியவில்லை. இருந்தாலும் மாவட்ட அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று தண்ணீர் மாதிரிகளை எடுத்து சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, முடி மற்றும் தோல் மாதிரிகளை சோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் ரமா பாட்டீல் கூறுகையில்,

“கடந்த 10 நாட்களாக எங்கள் கிராமங்களில் ஒருவித மர்ம நோய் பரவுகிறது. முடியை தொட்டாலே உதிர்கிறது” என்றார்.

இந்த 2நிலையில் முடி கொட்டுவது சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

தலைமுடியை வெட்டியதால் உயிரை மாய்த்த பாடசாலை மாணவன்!!

வெல்லவாய , மெதகலகம பிரதேசத்தில் தலைமுடி வெட்டியதால் பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவனின் தலைமுடியை வெட்டுமாறு அவனது தாயாரிடம் பாடசாலையில் அறிவுறுத்தப்பட்டிருந்த காரணத்தினால், தாய் மாணவனின் தலைமுடியை சிறிதளவு வெட்டியுள்ளார்.

இதன்போது மாணவனுக்கும் அவனது தாய்க்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெல்லவாய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய வாகனம் வாங்கவுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

தற்போதைய சூழ்நிலையில் புதிய வாகனங்களை கொள்வனவு செய்வது பொருத்தமானதாக இருக்காது என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர்,” முன்னதாக வாகன இறக்குமதி நிறுத்தப்பட்ட பின்னர் இலங்கையில் இருக்கின்ற வாகனங்களின் விலை பலமடங்கு அதிகரித்தன எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், இந்நிலையில், வாகனங்களை வைத்து கொள்ள முடியாது பலர் விற்பனை செய்த நிலையில் அதனை கொள்வனவு செய்தவர்கள் அவற்றை விற்பனை செய்ய முடியாது சிரமத்தில் உள்ளனர்.

ஏற்கனவே, அரச துறையில் இருக்கின்ற, அனுமதி பத்திரங்களை வைத்து கொண்டிருப்பவர்கள், மிக பெரிய எண்ணிக்கையில் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான நிலையில், எந்த கட்டுபாடும் இல்லாமல், வாகன இறக்குமதியை அனுமதிக்குமாக இருந்தால் டொலரின் வெளிப்பாய்ச்சல் மிகப்பெரிய அளவில் இடம்பெற வாய்ப்புள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக இலங்கையில் தற்போதுள்ள டொலர் கையிருப்புக்கள் கரைந்து விடும். எனவே அரசாங்கம் டொலர் கையிருப்பை கரைத்து விடாமல் வாகன இறக்குமதியையும் அதேநேரத்தில் அனுமதிக்க வேண்டிய ஒரு சூழல் இருக்கின்றது.

இந்நிலையில், வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்டால், பழைய வாகனங்களின் விலை குறைவடையும் என்னும் மக்களின் கருத்து சாத்தியப்பட வாய்ப்பில்லை எனவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

இதேவேளை, விலைக்குறைப்பு ஒரு சிறிய மாற்றத்தில் ஏற்படலாமே தவிர பழைய நிலைமையில் வாகனங்களின் விலைகள் இருக்காது. எனவே, இப்போதைய சூழ்நிலையில் வாகனங்களை வாங்காமல் இருப்பது தான் பொருத்தமானதாக இருக்கும்.

ஏனென்றால், புதிய வாகனங்கள் அனுமதிக்கப்படும் போது, பழைய வாகனங்களின் சந்தை ஒரு குறிப்பிட்ட அளவில் நிலை கொள்ளும்.

ஒரு குறிப்பிட்ட விலைமட்டத்திற் அது சமநிலை அடைய வாய்ப்பு இருக்கின்றது. அது தான் மிக பொருத்தமான தருணமாக இருக்கும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(10) தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது . 792,107ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 27,950ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 223,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 25,630ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 205,000ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 24,460 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams)195,650ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 214,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 198,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சட்டத்தரணி பரிதாபமாக உயிரிழப்பு!!

திருக்கோவில் பிரதேச தம்பட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தம்பிலுவிலை சேர்ந்த சட்டத்தரணி லயன் எஸ்.சசிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (05) மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது தம்பட்டை பிரதேசத்தில் கென்றர் வாகனமொன்று மோதி படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று (09) உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் தடவையியல் மருத்து துறையில் டிப்ளோமா பட்டம் பெற்ற எஸ்.சசிராஜ் ,அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர் என்பதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும் செயற்பட்டிருந்தவர் என கூறப்படுகின்றது.

இன்று காலை கிளிநொச்சி A9 வீதியில் விபத்து : ஒருவர் பலி!!

கிளிநொச்சி ஏ-09 வீதியில் கந்தசாமி கோவிலடியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (10.01) காலை 5.45 மணியளவில் யாழ். பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த விபத்தில் கனேசபுரம் கிளிநொச்சியை சேர்ந்த குமரேஸ்வரன் யோகலிங்கம் (வயது-75) என்பவரே உயிரிழந்துள்ளார்.

 

கொழும்பில் காணாமல் போன தமிழரை தேட உதவி கோரும் பொலிஸார்!!

காணாமல் போன ஒருவரை கண்டு பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 69 வயதான மாணிக்கம் துரைசிங்கம் ரொபின்சன் என்பவரே இவ்வாறு காணாமல் காணாமல் போயுள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் திகதி முதல் குறித்த நபர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து அடி எட்டு அங்குலம் உயரமுடைய மாநிறமான ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீல நிற டெனிம் காற்சட்டையும், நீல நிற சேர்ட்டும் அணிந்திருந்த நிலையில் குறித்த நபர் காணாமல் போயுள்ளார். இந்த நபருக்கு நினைவாற்றல் குறைவு என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் பற்றிய விபரங்கள் தெரிந்தால் 0718591571 அல்லது 0112431861 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் கொட்டாசேனை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

யாழில் ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி நிதிசேகரிப்பு : இருவர் கைது!!

யாழ். நெல்லியடி பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியினையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் பெயரையும் பயன்படுத்தி நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மதபோதகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நெல்லியடி நகரில் நிதிசேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, நிதி கொடுக்க மறுத்தவர்களை அநுரவின் ஒளிப்படத்தைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.

இதன்போது, வர்த்தகர்களுக்கும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டோருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அங்கு கூடிய வர்த்தகர்கள் குறித்த நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்க்கொண்டு நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபர்களை கடுமையாக எச்சரிக்கை செய்த பின் விடுவித்துள்ளனர்.

நிதி சேகரிப்பில் ஈடுபட்ட மதபோதகர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் சிறுவர்களைப் பராமரிப்பதற்காகவே இந்த நிதி பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த மதபோதகர் கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரசார மேடைகளில் ஆசியுரைகளை கூறி தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவு கோரி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம் இடியுடன் கூடிய மழை!!

நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தாயின் செயலால் ஆத்திரமடைந்த மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

மொனராகலையில் தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  கடந்த 8ஆம் திகதி வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல பகுதியில் குறித்த மாணவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

15 வயதான எதிரிமன்னகே கவீஷ லக்மால் என்ற மாணவனே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். குறித்த மாணவன் அதே பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

மாணவனின் தந்தை சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார். உரிய முறையில் முடி வெட்டிய பின்னர் மாணவனை பாடசாலைக்கு அனுப்புமாறு தாயாரிடம், பாடசாலை ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கமைய, தாயார் தலைமுடியை வெட்டியதால் ஆத்திரமடைந்த மாணவன் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை வெல்லவாய ஆதார மருத்துவமனையில் நடைபெறவுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அடகு வைக்கப்படும் தங்க நகைகள் : இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை!!

இலங்கையில் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக கடன் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உணவுத் தேவைகளுக்காக தங்க ஆபரணங்கள் அடகு வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்ப அலகுகள் தங்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாக தெரியவந்துள்ளது.

“உணவு அடிப்படையிலான தகவல் மற்றும் செயல் வலையமைப்பு” (FLAN Sri Lanka) நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. அமைப்பின் ஆராய்ச்சி அதிகாரி ஷெஹாரி விஜேசிங்கவினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு (2024) மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி, காலி, நுவரெலியா, கொழும்பு, அனுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ மற்றும் மஹரகம பிரதேச செயலகப் பிரிவுகள் இந்த ஆய்விற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்த கணக்கெடுப்புக்காக, மேற்கண்ட மாவட்டங்களில் இருந்து 1352 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குடும்பங்களில் 34.3 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். மொத்த மாதிரியில் 62 சதவீதம் பேருக்கு நிரந்தர வருமானம் இல்லை என்பதும், சுமார் 57 சதவீதம் பேருக்கு உணவுப் பாதுகாப்பு இல்லை என்பதும் தெரியவந்தது.

இந்த மாதிரியில் உள்ள 35 சதவீத வீட்டுக்காரர்களின் மாத வருமானம் 49,589 ரூபாவாகும். கணக்கெடுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அவர்களின் வருமானத்தில் 42 சதவீதத்தை உணவுக்காக செலவழிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் 6 சதவீதம் சுகாதாரத்திற்காகவும் அதேபோல் கல்விக்கு 9 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. கணக்கெடுக்கப்பட்ட வீட்டுக்காரர்களில் 60 சதவீதம் பேர் புகைபிடித்தல் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குழுவில் 31.7 சதவீதம் பேர் உணவு வாங்க கடன் பெற்றுள்ளதாகவும், தங்க ஆபரணங்களை அடகு வைத்து, சொத்துக்களை விற்று கடனுக்கு பணம் எடுத்தல் போன்றவற்றின் மூலம் உணவுக்கு பணம் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது விலை அதிகரித்துள்ள நிலையிலும் மக்கள் அரிசி நுகர்வை குறைக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில் அனுமதிப்பத்திரமின்றி தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனத்துடன் ஒருவர் கைது!!

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (08.01.2025) அனுமதிப்பத்திரமின்றி 73 தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனத்துடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே திவுல்வெவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது மரக்காரம்பளை பகுதியில் குறித்த பட்டா ரக வாகனத்தினை மறித்து சோதனைக்குட்படுத்திய சமயத்தில்,

73 தேக்கு மரக்குற்றிகளை அனுமதிப்பத்திரம் இன்றி ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் பட்டா ரக வாகனத்தினை பொலிஸார் கைப்பற்றியமையுடன் வாகனத்தின் சாரதியினையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த பட்டா ரக வாகனம் மற்றும் 73 தேக்கு மரக்குற்றிகள் என்பவற்றுடன் கைது செய்யப்பட்ட வாகனத்தின் சாரதியையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வவுனியாவில் தொலைபேசி கம்பத்துடன் மோதுண்டு வான் விபத்து!!

வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் தொலைபேசி இணைப்பு கம்பத்துடன் மோதுண்டு வான் விபத்துக்குள்ளானது.

பண்டாரிக்குளம் பகுதியிலிருந்து புகையிரத நிலைய வீதி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வான் பண்டாரிக்குளம் அம்மன் கோவிலை அண்மித்த பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகேயிருந்த தொலைபேசி இணைப்பு கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் வாகனம் மற்றும் தொலைபேசி இணைப்பு கம்பம் என்பன பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித உயிராபத்துகளும் நிகழவில்லை.

வவுனியா குளத்தில் கழிவுகள் நிறைந்த நீரில் கழுவி விற்பனை செய்யப்படும் மரக்கறிகள்!!

வவுனியாவில் உள்ள இலுப்பையடி பகுதியில் மொத்த மரக்கறி விற்பனை நிலையங்களுக்கு வரும் சில மரக்கறிகள் கழிவுகள் நிறைந்த வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக கரட் போன்ற மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மொத்த வியாபாரிகள் அதனை தமது கடைகளின் பின் இருக்கும் கழிவுகள் வீசப்படும் வவுனியா குளத்தில் கழுவிய பின் அதனை விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்ட போது,

அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வர்த்தகர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த போதும், தற்போதும் சில வியாபாரிகள் வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை செய்து வருகின்றனர்.

வவுனியா குளமானது நகரில் அமைந்துள்ளதால் பல வர்த்தக நிலையங்களின் கழிவுகள் மற்றும் குப்பை கூலங்கள் என்பன அதில் வீசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குறித்த நீரில் மரக்கறிகளை கழுவி விற்பனை செய்வது தொடர்பில் நகரசபை கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் அவர்களது வர்த்தக உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மரக்கறி கொள்வனவு செய்யும் நுகர்வோர் கோரியுள்ளனர்.

இறுதிச் சடங்கிற்கு சென்று வீடு திரும்பிய தம்பதி விபத்தில் பலி!!

மாத்தளையில் சம்பவித்த விபத்தில் தம்பதி ஒன்று உயிரிழந்ததுடன், 3 வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

பல்லேபொல, நாரங்கமுவ, மடவல உல்பத பகுதியில், குழு ஒன்றை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி, வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இறந்தவர்களும் காயமடைந்தவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் என தெரியவந்துள்ளது.

மாத்தளை, உக்குவெல பகுதியை சேர்ந்த 75 வயதான முகமது இப்ராஹிம் ரிஷாப்தீன் மற்றும் 65 வயதான அவரது மனைவி ரஷீனா உம்மா ஆகியோரே உயிரிழந்தனர்.

விபத்தில் இறந்தவரின் உறவினரான 3 வயது குழந்தை மற்றும் முச்சக்கர வண்டியின் 35 வயது சாரதி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மில்லவான பகுதியில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட குடும்பம் மீண்டும் வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. பல்லேபொல, நாரங்கம பகுதியில் உள்ள பாறையிலிருந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை அதிகரிப்பு!!

இலங்கையில் இன்று(9) 24 கரட் தங்க விலை மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (9) தங்க நிலவரப்படி,

24 கரட் தங்கம் 212,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 195,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 159,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,563 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,375 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 19,938 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.