யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்ற பௌத்த துறவி!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்பின் டிப்ளோமா பயின்ற பௌத்த துறவி பட்டம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (21) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது, பௌத்த துறவி ஒருவர், தமிழில் பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து பட்டம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக இவருக்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

யாழில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு : துயரத்தில் குடும்பம்!!

யாழ். சேந்தாங்குளம் கடலில் (21) நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் காங்கேசன்துறை வீதி, இணுவில் பிரதேசத்தை சேர்ந்த பி.சாருஜன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் அவரது நண்பர்கள் 14 பேருடன் குளிப்பதற்காக நேற்று மாலை (21) இளவாலை சேந்தாங்குளம் கடலுக்கு சென்றனர்.

கடலில் குளித்துக்கெண்டு இருந்தவேளை திடீரென கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பின்னர் இளைஞனின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அதேவேளை குறித்த கடல் பகுதியானது பாரிய அலை எழும் பகுதியாக காணப்படுகிறது. இருப்பினும் எந்தவிதமான எச்சரிக்கை அறிவிப்புகளும் காட்சிப்படுத்தப்படவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு முன்னரும் இவ்வாறு மரணம் இதே பகுதியில் சம்பவித்துள்ளதாகவும், உரிய எச்சரிக்கை சமிக்ஞைகளை காட்சிப்படுத்துமாறும் அங்கு செல்லும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனைவியை வெட்டிகொன்ற கணவன் : அதிர்ச்சியின் உறவினர்கள்!!

குடும்ப தகராறு காரணமாக கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை சம்பவம் ரத்தோட்டை பொலிஸ் பிரிவின் கைகாவல இசுருகம பகுதியில் இன்று (22) அதிகாலை 5.00 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் கணவர் இருவரும் மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுக்கு பாடசாலை செல்லும் இரு பிள்ளைகள் (மகள் 11 – மகன் 13) இருப்பதாக தெரியவந்துள்ளது. கொலைக்குப் பிறகு மறைந்திருந்த சந்தேகநபரான கணவர், கைது செய்யப்பட்டுளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வீதியில் வீசப்பட்ட சடலத்தால் அதிர்ச்சி : சிசிடிவி கமராவில் பதிவான காட்சி!!

வெள்ளம்பிட்டி வெலேவத்த ரம்யவீர மாவத்தை பகுதிக்கு முச்சக்கரவண்டியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சடலம் ஒன்றி வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருகில் உள்ள ஒரு வீட்டு உரிமையாளரிடம் அந்த நபர் அதிகமாக மது அருந்தி மயக்கமடைந்ததாக தெரிவித்தனர்.

இருப்பினும், அவர் அந்த நேரத்தில் ஏற்கனவே இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. ஒருவர் மூன்று சக்கர வண்டியை ஓட்டவும், மற்றவர் உடலை சாலையில் இழுத்துச் செல்லவும் செய்யும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குடியிருப்பாளர்கள் 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்தனர், ஆனால் பாரா மெடிக்கல் ஊழியர்கள் அந்த நபர் இறந்துவிட்டதாக உறுதி செய்த பிறகு உடலை எடுக்காமல் சென்றுவிட்டனர்.

பாதிக்கப்பட்டவர் கடவதையைச் சேர்ந்த 56 வயது நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். உடலை வீசியதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் மூன்று சக்கர வண்டி மற்றும் அதன் ஓட்டுநரைக் கண்டுபிடிக்க வெள்ளம்பிட்டிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டமான நிலைமை நிலவக்கூடும் என்றும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியாவில் 161வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு!!

வவுனியா வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் அமைந்துள்ள பொலிஸ் விரச்சாவடைந்தவர்களின் நினைவுத்தூபிக்கு அருகே நேற்று (21.03.2024) காலை 7.30 மணியளவில் உயிர்நீத்த மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த பொலிசாரின் 161வது பொலிஸ் வீரர்கள் தினம் வன்னி மற்றும் கிளிநொச்சி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் சமாந்த விஐயசேகர தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கைப் பொலிஸாரால் வருடா வருடம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொலிஸ் வீரர்கள் தினம் நேற்று 161வது தினமாகும். அத்துடன் யுத்தகாலத்தில் உயிர்நீத்த பொலிஸாரையும் இத்தினத்தில் நினைவுகூரப்பட்டு வருகின்றனர். வவுனியா பிராந்திய நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சோமரத்ன விஐயமுனி, வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக குமார மற்றும், வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி,

உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பிரிவிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் எனப்பலரும் கலந்துகொண்டு உயிர் நீத்த பொலிசாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

வவுனியாவில் வீதிகளை ஆக்கிரமித்த கட்டாக்காலி மாடுகள் – களத்தில் இறங்கிய அதிகாரிகள்!!

வவுனியா நகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 50 கட்டாக்காலி மாடுகள் நேற்று முன்தினம் இரவு பிடிக்கப்பட்டன. வவுனியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனையடுத்து நகரசபைக்குள்ள அதிகாரங்களை கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் நகர சபையினரால் பிடிக்கப்பட்டது.

எனவே கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் தண்டப்பணத்தினைச் செலுத்தி (கட்டாக்காலி மாடு பிடித்தல் கட்டண விபரம் வருமாறு, பிடி கூலி 1000, தண்டப்பணம் 3000, நாள் ஒன்றிற்கான பராமரிப்புக் கட்டணம் 1000) அவற்றை மீளப்பெற்றுச்செல்லுமாறு சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபை அறிவித்துள்ளது.

வவுனியா விபுலானந்தா கல்லூரி ஆய்வு கூடம் பரீட்சை எழுதும் மாணவர்களால் உடைப்பு!!

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் ஆய்வு கூடம் இம்முறை பரீட்சை எழுதும் மாணவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வருகின்றது. பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் பாடசாலை விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் கணித கூடம் என்பவற்றின் கதவை உடைத்துள்ளதுடன் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து, குறித்த நிலையத்திற்கு பொறுப்பான பரீட்சைப் பொறுப்பதிகாரி மற்றும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்திய போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளார் பாடசாலைக்கு சென்று நிலமையை பார்வையிட்டிருந்த போதும் மாணவர்கள் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுகப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பில் விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு அமைப்பு!!

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பில் விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த.கனராஜ் தெரிவித்துள்ளார்.

வவுனியா கல்வியற் கல்லூரி தொடர்பாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர் நேற்று (21.03) கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக பெற்றோர்கள் சிலரால் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் கல்வி அமைச்சிடம் விளக்கம் கோரியிருந்தோம். கல்வி அமைச்சினால் கல்வியற் கல்லூரிகளுக்கு பொறுப்பாக இருக்கின்ற பிரதான ஆணையாளர் ஊடாக விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின் அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் 15 வயதுச் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் : இளைஞர் கைது!!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவரை அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்ததாகவும், குறித்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் சிறுமியின் தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் 103 உறுப்பினர்களை தெரிவுசெய்ய 1231 வேட்பாளர்கள் களத்தில்!!

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1231 வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.

இன்று மாலை வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று மதியம் 12 மணியவளவில் நிறைவுக்கு வந்திருந்தது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வவுனியா மாநகரசபை

இதுவரை நகரசபையாக இருந்து தரமுயர்த்தப்பட்ட வவுனியா மாநகரசபைக்கு முதலாவது தேர்தலாக இது அமைந்துள்ளது. இம்முறை மாநகரசபையில் மொத்தமாக 20 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

அதற்காக 10 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன. அவற்றில் மக்கள் போராட்ட முன்னணியின் வேட்பு மனு முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியில் வேட்பாளர் ஒருவர் நிராகரிக்கப்பட்டுள்ளார். அதன்படி 11 தரப்புக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 26 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். அதற்காக 12 அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது.

அவற்றில் ஜனநாயக தேசியக் கூட்டணி, ஐக்கியதேசிய கட்சி மற்றும் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 13 தரப்புக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை

வெண்கல செட்டிகுளம் பிரதேசசபைக்கு 18 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்னர். அதற்காக 10 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தநிலையில் விண்ணப்பித்த 12 தரப்புக்களின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச சபை

வவுனியா வடக்கு பிரதேச சபையில் 23 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். அதற்காக
09 அரசியல் கட்சிகளும் 02 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது.

அவற்றில், இரண்டு சுயேட்சைக் குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 9 தரப்புக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வவுனியா சிங்கள பிரதேச சபை

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் 16 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். அதற்காக 07அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் அவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் 103 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 1231 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

இதேவேளை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 71 தரப்புக்கள் கட்டுப்பணத்தினை செலுத்தியிருந்ததன. அவற்றில் 11 தரப்புக்கள் வேட்புமனுக்களை கையளித்திருக்கவில்லை.
இத்தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 129293 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர். என்றார்.

இலங்கையில் பிரான்ஸ் நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

எல்ல பகுதியில் அமைந்துள்ள லிட்டில் அடம்ஸ் ஸ்பீ்க்கை (Little Adam’s Peak) தரிசிக்கச் சென்ற 64 வயதுடைய பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் குன்றிலிருந்து தவறி விழுந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (19) மாலை செங்குத்தான பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் அவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள பணியாளர்கள் டிரோன் கமெராக்களின் உதவியுடன் உயிர்காக்கும் படையினர் குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த வெளிநாட்டு பெண் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சொகுசு கார் ஒன்று ரயிலிலுடன் மோதி விபத்து!!

பாதுக்கை – லியான்வல, துத்திரிபிட்டிய மற்றும் வட்டரெக்க இடையேயான ரயில் கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று ரயிலிலுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக களனிவௌி ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

 

அரிசி விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு : கடும் அதிருப்தியில் மக்கள்!!

தமிழ், சிங்கள புத்தாண்டு நெருங்கும் நிலையில் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

பல பகுதிகளில் அரிசி கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக விற்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பல்வேறு தயாரிப்பு பெயர்களில் விற்கப்படும் அரிசி காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.

அரிசி விலை

220 ரூபாய் கட்டுப்பாட்டு விலையில் இருந்த நாட்டு அரிசி, சில பகுதிகளில் 230 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 240 ரூபாய் கட்டுப்பாட்டு விலை கொண்ட சம்பா அரிசி 260 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கிரி சம்பா, சில தயாரிப்பு பெயர்களின் கீழ் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அரிசி விலை உயர்வு குறித்து நேற்று நாடாளுமன்றத்திலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேர்த்திக்கடனுக்காக சென்ற இளம் தாய் : சாரதியின் மோசமான செயலால் புரட்டிவிடப்பட்ட முச்சக்கரவண்டி!!

பதுளையில் முச்சக்கர வண்டிக்குள் இளம் தாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தி முச்சக்கரவண்டியை வேண்டுமென்றே புரட்டி விட்ட சந்தேகநபர் கைது.

ஒரு பிள்ளையின் தாயான 22 வயதுடைய பெண்ணை, முச்சக்கர வண்டிக்குள் வைத்து நேற்று (19) பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த போது, அந்த பெண் குரல் எழுப்பியமையால், முச்சக்கரவண்டியை அதன் சாரதி வேண்டுமென்றே புரட்டி விட்டுள்ளார்….!!

சம்பவத்தின் போது அந்த பெண்ணும், சந்தேகநபரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளம் தாய் குழந்தைக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான தேவாலயத்துக்குச் சென்று, முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது,

பின் சக்கரத்தில் ஏதோ சத்தம் கேட்பதாக தெரிவித்த சாரதி, முச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு, பின்பக்க ஆசனத்துக்கு சென்று குறித்த பெண்ணை துன்புறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் குரல் எழுப்பிய போது சத்தம் கேட்ட திசையை நோக்கி ஒரு சிலர் ஓடி வந்த நிலையில் அவர்களை கண்ட சாரதி, முச்சக்கரவண்டியை இயக்கி, வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது, முச்சக்கர வண்டியில் இருந்து தான், பாய்வதற்கு முயன்றபோதும், அவ்வாறு செய்தால், முச்சக்கரவண்டி புரண்டு விடும் என்று தெரிவித்துள்ள சாரதி அந்த முச்சக்கரவண்டியை வேண்டுமென்றே விபத்துக்கு உள்ளாகி விட்டாகவும் பெண்ணின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நூடுல்ஸை சாப்பிட மறுத்த மனைவி : கணவன் செய்த மோசமான செயல்!!

இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் கண்டோலியில் உள்ள நந்தலால்பூர் பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்தவர் சந்தீப். இவரது மனைவி குஞ்சன்.

கடந்த பல ஆண்டுகளாக சந்தீப்புக்கும் அவரது மனைவி குஞ்சனுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததுள்ளது. வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக இருவரும் ஒருவரையொருவர் சந்தேகித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மதியம், சௌமீன் எனப்படும் நூடில்ஸை குஞ்சனுக்காக சந்தீப் வாங்கி வந்துள்ளார். ஆனால் குஞ்சன் அதை சாப்பிட மறுத்ததால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்தீப் மனைவியை தாக்கத்தொடங்கியுள்ளார்.

ஆத்திரமடைந்த சந்தீப் மனைவியின் கழுத்தை நெரித்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். பின் தனது மகன்களை கூப்பிட்டு மனைவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லமாறு கூறியுள்ளார்.

அவர்கள் சென்றதும் சந்தீப் மனைவியை கொன்றதாக கூறி பொலிஸில் சரணடைந்துள்ளார். குஞ்சன் இறந்துவிட்டதாக வைத்தியர்களும் அறிவித்துள்ளனர். சந்தீப்பை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.