மீன் பாணுக்குள் இருந்த லைட்டர் : வாடிக்கையாளர் அதிர்ச்சி!!

பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வாங்கிய மீன் பாணுக்குள் லைட்டர் ஒன்று இருந்தமை வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த சம்பவம் நேற்று (08.01) காலை இடம்பெற்றுள்ளது. பாணந்துறை அருக்கொடை பிரதேசத்தில் வசிக்கும் தந்தை ஒருவர் தனது இரண்டு மகன்களுடன் பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றிற்கு இன்று காலை சென்றுள்ளார்.

இதன்போது, தந்தை தனது இரண்டு மகன்களுக்கும் பேக்கரியில் இருந்து இரண்டு மீன் பாண்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ஒரு மகன் மீன் பாணை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மீன் பாணுக்குள் லைட்டர் ஒன்று இருப்பதை கண்டு தனது தந்தையிடம் அதனை காண்பித்துள்ளார்.

இதனையடுத்து தந்தை முறைப்பாடு வழங்குவதற்காக பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு சென்றுள்ளார்.

இதன்போது, பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள், குறித்த போக்கரி பாணந்துறை மாநகர சபைக்குட்பட்டது எனவும் இது தொடர்பில் பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் முறைப்பாடு வழங்குமாறும் தந்தையிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்ட யுவதி பரிதாபமாக உயிரிழப்பு!!

இந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் புஜ் தாலுகா பகுதியிலுள்ள கண்டேரய் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண் நேற்று முன்தினம்(6) காலை ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தார்.

இதையடுத்து தீயணைப்புப் படையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் (என்டிஆர்எப்) சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு உறுதுணையாக எல்லை பாதுகாப்புப் படையினரும் (பிஎஸ்எஃப்) செயல்பட்டனர். நேற்று முன்தினம் தொடங்கிய மீட்புப் பணி நேற்று வரை தொடர்ந்தது.

இந்நிலையில் 33 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இளம்பெண் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் , அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பாரிய விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டி : 2 பேர் பலி, மூவர் வைத்தியசாலையில்!!

மாத்தளை – பல்லேபொல, மடவலை வீதியின் நாரங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்திருப்பதாகவும், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் நேற்றிரவு (07-01-2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்து காட்டிய 82 வயது மூதாட்டி!!

தேசியளவிலான பளு தூக்கும் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் கோவையை சேர்ந்த 82 வயது கிட்டம்மாள் என்ற மூதாட்டி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சாதனைக்கு வயது தடையல்ல என்பதை 82 வயதான கிட்டம்மாள் எடுத்துக்காட்டியுள்ளார்.

தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்ட இவர் வார இறுதி நாட்களில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார். இதன் விளைவாக டெல்லியில் ‘நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன்’ சார்பில் நடந்த பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று முதலிடத்தைப் பெற்று சாதித்துள்ளார்.

பளு தூக்கும் போட்டியில் மூதாட்டி தங்கம் வென்றமைகக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்து : தெய்வாதீனமாக உயிர் தப்பிய நபர்!!

திருகோணமலை – சேருநுவர, தங்கநகர் பகுதியில் மீன்களை ஏற்றிவந்த லொறி ஒன்று பாதையை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (08.01.2025) காலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த மீன் லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது, வாகன சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும், வேறு எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

யாழ் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர்!!

யாழ்ப்பாணம் ஏ 9 பிரதான வீதியில் சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் மதவாச்சி, வஹமல்கொல்லேவ பகுதியில் நேற்றையதினம் (08.01.2025) காலை இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் ஹமல்கொல்லேவ, ரம்பாவ பகுதியை சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் ரம்பேவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான காட்சிகள் பேருந்தில் இருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இலங்கையில் 26 வயதான இளைஞன் எடுத்த விபரீத முடிவு : பரபரப்பு சம்பவம்!!

ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (08-01-2025) மதியம் கொட்டகலை – கிரிஸ்லஸ்பாம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் சுமார் 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து, பதுளை நோக்கி செல்லும் ரயிலில் மோதியே இவர் உயிரிழந்ததாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கொட்டகலை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. உயிரிழந்த இளைஞன் பற்றிய விபரம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சி!!

நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கிளிநொச்சியில் மதகுரு ஒருவர் மீது தாக்குதல்!!

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் மதகுரு ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனகாம்பிகைகுளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் நேற்று (07.01) மீளாய்வு நடவடிக்கைக்காக குறித்த மதகுரு சென்றுள்ளார். இந்நிலையில், அவர் அங்கிருந்த ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். குறித்த குருக்கள் அணிந்திருந்த உருத்திராக்க மாலை மற்றும் தங்கச் சங்கிலி என்பனவும் அறுத்து வீசப்பட்டுள்ளன.

முருகன் வீதி கனகாம்பிகைகுளம் பகுதியை சேர்ந்த சிவ ஸ்ரீ சிவகுமாரன் என்ற மதகுருவே இவ்வாறு படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் கணவன்.. தற்கொலை செய்வது போல நடிக்க முயன்ற இளம் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் நகைச்சுவையாக தூக்கிட்டு தற்கொலை செய்வது போல நடிக்க முயற்சித்த மனைவி நிஜமாகவே உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் அங்கொட கொடல்ல மாவத்தையில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு திருமணமாகி 3 வருடங்கள் கடந்த நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதோடு, கணவர் உதவியுடன் வீட்டின் பின்புறம் மற்றுமொரு அழகான வீட்டையும் கட்டியுள்ளார்.

புது வீட்டின் புதுமனை புகுவிழா எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 04ஆம் திகதி, குறித்த பெண் தன் கணவருக்கு வீடியோ கால் செய்து விட்டு, தனது அறையில் உள்ள படுக்கையில் கதிரையை வைத்து, அதன் மேல் ஏறி, மேற்கூரையில் தொங்கிய கயிற்றை கழுத்தில் போட்டு, போலியாக தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதன்போது, எதிர்பாராத விதமாக கதிரை கவிழ்ந்ததில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மனநலம் பாதித்த 2 குழந்தைகளை கொலை செய்து கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் வசித்து வருபவர் 38 வயது அனுப்குமார். பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகி 35 வயதில் ராக்கி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர். இதில் ஒரு குழந்தைக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தங்களுடைய குழந்தைகளை கவனித்துக் கொள்ள இரு பெண்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் பணிபுரியும் பெண்களிடம் புதுச்சேரிக்கு செல்ல இருப்பதால் அதிகாலையில் வீட்டிற்கு வேலைக்கு வரும்படி கூறிய நிலையில் அதில் ஒரு பெண் சீக்கிரம் வந்துவிட்டார்.

அவர் வீட்டின் கதவை தட்டிய நிலையில் கதவு திறக்காததால் அந்த பெண் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது கணவன் மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .

அதன்பிறகு சிறுமி பிரியங்கா மற்றும் மற்றொரு குழந்தை வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்ததையும் கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போது கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை எதுவும் இல்லை. இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தியதும் தெரியவந்தது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் இரவு தன்னுடைய தம்பிக்கு அனுப்குமார் ஒரு இமெயில் அனுப்பியுள்ளார். மேலும் கடன் பிரச்சனை காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது குழந்தையின் மருத்துவ செலவு உட்பட பல்வேறு காரணங்களால் கடன் தொகை அதிகரித்திருக்கலாம் எனவும் அதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் அந்த கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை!!

காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டின் சில பகுதிகளில் இன்று (07.01) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.

அத்துடன் சபரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழையின் போது, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற நபர் கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை தனது பயண பொதியில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

66 வயதான பொஸ்னிய பிரஜை ஒருவர் இன்று காலை விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது சூட்கேஸில் கால்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் 114 brushகளில் 02 கிலோ 759 கிராம் கொக்கெய்னை மிக நுணுக்கமாக மறைத்து வைத்திருந்தார்.

அவர் கொலம்பியாவில் இருந்து இந்த போதைப்பொருள் கையிருப்புடன் கட்டாரின் தோஹாவுக்கு சென்று அங்கிருந்து இன்று அதிகாலை 02.40 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான QR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

கைது செய்யப்பட்ட பொஸ்னிய பிரஜை மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் வசிக்கும் பெண்ணொருவரின் வீடொன்றில் நடந்த மோசடி : 6 பேர் கைது!!

இத்தாலியில் வசிக்கும் பெண்ணொருவரின் சிலாபத்திலுள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டு பொதி செய்து விற்பனை செய்யப்பட்ட பெருந்தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சிலாபம் பகுதியிலுள்ள கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செரெப்புவத்தை பிரதேசத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. இதன்போது 3 கோடி ரூபா பெறுமதியான 23 கிலோ கிராம் கஞ்சாவுடன் 6 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 06 ஆம் திகதி மாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனையின் போது, ​​கஞ்சா பொதி செய்யப்பட்ட ஒரு வான் ஒன்று தயாராக இருந்தது. அந்த வானும் கைப்பற்றப்பட்டது.

இத்தாலியில் வசிக்கும் உரிமையாளரான பெண் தனது வீட்டை பராமரிப்பதற்காக தனது சகோதரருக்கு வழங்கியுள்ளார். வீட்டை கவனித்துக்கொள்வதற்காக ஒவ்வொரு மாதமும் தனது சகோதரருக்கு பணம் அனுப்புவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அவரின் சகோதரர் ஏனையவர்களுடன் இணைந்து போதைப்பொருள் விற்பனைக்காக அந்த வீட்டினை பயன்படுத்தியுள்ளார். இந்த வர்த்தக நடவடிக்கை குறித்து இத்தாலியிலுள்ள வீட்டின் உரிமையாளரான பெண்ணுக்கு தெரியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் கொண்டுவரப்பட்ட கஞ்சா கையிருப்பை இவர்களுக்கு வழங்க பன்னல பிரதேசத்தில் கடத்தல்காரர் ஒருவர் செயற்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

வென்னப்புவ சிந்தாத்திரிய, வாய்க்கலை, நீர்கொழும்பு, பெரியதுகல மற்றும் கட்டுவா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 22 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரீட்சை விடைத்தாள் கசிவு : குற்றத்தை ஏற்றுக் கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்!!

புதிய இணைப்பு : வடமத்திய மாகாணத்தில் பரீட்சை வினாத்தாள்களுக்கான விடைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வடமத்திய மாகாண கல்விச் செயலாளரால் இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமத்திய மாகாணத்தில் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு புவியியல் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை சமூக ஊடகங்களில் கசியவிட்டதை, ஆசிரியர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார். இந்த தேர்வுகள் இந்த மாதம் 10ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11ஆம் வகுப்புக்கான பருவத் தேர்வுகள் அடுத்த 10 நாட்களுக்குள் நடத்தப்படும் என்று வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், கசிந்ததாக கூறப்படும் தேர்வுத் தாள்கள் மீண்டும் தயாரிக்கப்படும் என்றும் தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடமத்திய மாகாணத்தில் உள்ள அரசப் பாடசாலைகளில் 11ஆம் வகுப்புத் தேர்வுத் தாள்கள் கசிந்ததற்கான விசாரணை, அநுராதபுரத்தில் உள்ள மூத்த பொலிஸ் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ், அநுராதபுரம் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிங்கள இலக்கியம், அறிவியல் மற்றும் ஆங்கில தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததால், வடமத்திய மாகாணத்தில் உள்ள அரசப் பாடசாலைகளில் 11 ஆம் வகுப்புக்கான அனைத்துப் தேர்வுகளும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்க ஊழியர்களுக்கு வெளியாகிய மகிழ்ச்சியான செய்தி!!

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச நிர்வாக, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச சேவைகளில் நிலவி வரும் சம்பள முரண்பாடுகளை களைவதற்கான ஆரம்ப ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்தன அபேரட்ன தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள், கடந்த அரசாங்கங்களின் சில தீர்மானங்கள் போன்ற காரணிகளினால் அரச சேவையில் ஒவ்வொரு தரத்திற்கும் இடையில் கடுமையான சம்பள முரண்பாட்டு நிலைமை நீடித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

1992ஆம் ஆண்டு முதலே சில சேவைகளில் சம்பள முரண்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் அரச ஊழியர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் சம்பள முரண்பாடு களைவது சவால் மிக்கது என அமைச்சர் அபேரட்ன தெரிவித்துள்ளார்.