கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் : விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்….!!!

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் நேற்று (07.01) காலை இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ, வட்டரப்பல பகுதியைச் சேர்ந்த பிரதான போதைப்பொருள் வியாபாரிகளான படோவிட்ட அசங்க மற்றும் கொஸ் மல்லி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

படோவிட்ட அசங்கவின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவரென கூறப்படும் எட்டயா என்ற போதைப்பொருள் வியாபாரியின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த இரு இளைஞர்களும் 20 மற்றும் 36 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். எட்டயா என்ற போதைப்பொருள் வியாபாரி போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார்.

இந்த வீட்டில் எட்டயாவின் மனைவியின் உறவினரான 20 வயது இளைஞனும் மற்றுமொரு இளைஞனும் உறங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு பாதாள உலக குழுவின் கூலிப்படையினர், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு உறங்கிக் கொண்டிருந்த இரு இளைஞர்களையும் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் 36 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 20 வயதுடைய நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், கொலையாளிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. படோவிட்ட அசங்க மற்றும் கொஸ் மல்லி ஆகியோர் பிரதான போதைப்பொருள் வியாபாரிகள் எனவும்,

இவர்களுக்கு இடையில் சில காலமாக போதைப்பொருள் தொடர்பில் முரண்பாடு நிலவி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல்காரர்களான கொஸ் மல்லியும் அவரது நெருங்கிய உதவியாளருமான சுவா சமந்தாவும் டுபாயில் தலைமறைவாகி இரத்மலானை உட்பட பல பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வருகின்றனர்.

படோவிட்ட அசங்கா டுபாயில் மறைந்திருந்து கல்கிஸ்ஸ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வருகிறார். கொல்லப்பட்ட இரு இளைஞர்களும் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக, 4 பேர் ஏற்கனவே சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் மூவர் படோவிட்ட அசங்கவின் உதவியாளர் எனவும் மற்றைய நபர் கொஸ் மல்லியின் உதவியாளர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவோரிற்கு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

அதன்படி சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஊடாக 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே அவ்வாறான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

 

வவுனியாவில் 113 பேருக்கு டெங்கு நோய்த் தாக்கம்!!

வவுனியா மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 113 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

எனினும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரை 113 பேர் வவுனியாவில் டெங்கு நோயினால் பாதிப்படைந்தனர். அதில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 82 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் குணமடைந்து தற்போது வீடுகளுக்கு சென்றுள்ளனர் எனவும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

ஓமானில் உயிரிழந்த இலங்கை யுவதி : அரச உத்தியோகஸ்தர் உட்பட மூவர் கைது!!

ஓமானில் மரணித்துள்ள அம்பாந்தோட்டை யுவதி மற்றும் அவரது சகோதரியை ஏமாற்றி சுற்றுலா விசாவில் தொழிலுக்கு அனுப்பியதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் அரச உத்தியோகஸ்தர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த யுவதியின் மரணம் கொலையா ? தற்கொலையா ? என ஓமானின் இலங்கை தூதரக காரியாலயம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நயவஞ்சகமான முறையில் மனித கடத்தல் இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில், ஓமான் நாட்டுக்கு வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு அழைத்துச் சென்று, பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்காகி மரணித்த அம்பாந்தோட்டை சுசீ கிராமத்தைச்சேர்ந்த 22 வயதுடைய யுவதி மற்றும்

அவரது மூத்த சகோதரியை ஏமாற்றி நயவஞ்சகமான முறையில் மனித கடத்தலில் ஈடுபட்டுவந்த அம்பாந்தோட்டை சமுர்தி அபிவிருத்தி அதிகாரி உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை வெளிவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளின் விசேட நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி மற்றும் ஒரு சந்தேக நபர் அம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் வைத்து சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய சந்தேக நபர் அம்பாந்தோட்டை நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகயின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதிகள் இருவரையும் டுபாயில் பராமரிப்பு சேவை தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து ஓமானில் வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்காக அனுப்புவதற்கு இந்த சந்தேக நபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சுற்றுலா விசாவில் சென்றுள்ளதால், தொழில் இல்லாமல் ஓமானில் பல்வேறு இடங்களில் இந்த யுவதிகள் இருவரும் தொழிலுக்காக அமர்த்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகிய நிலையில் 22 வயதுடைய துவான் ராசிக் ரமீசா என்ற யுவதி அங்கு மரணித்துள்ளதாக அவரின் மூத்த சகோதரி தனது தாயிக்கு அறிவித்துள்ளார்.

அனுமதி பத்திரம் எதுவும் இல்லாமல் சுற்றுலா விசா ஊடாக தொழிலுக்காக அனுப்பிய இந்த நடவடிக்கை மனித கடத்தல் என்பதுடன் அது சட்டவிரோத நடவடிக்கையாகும்.

இவ்வாறான மனித கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டுவருபவர்களுக்கு எதிராக தராதரம் பார்க்காமல் சட்டத்தை கடுமையாக செயற்படுத்துவதாக பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் இதுதொடர்பில் ஓமானின் இலங்கை தூதரக காரியாலயம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

விசாரணைகளின் முடிவின் பின்னரே சடலத்தை நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மூவரும் அம்பாந்தோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவர்கள் மூவரையும் ஜனவரி 17ஆம் திகதிவரை விளக்கு மறியலில் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுள்ளது.

8 வயது மாணவி வகுப்பறையில் சுருண்டு விழுந்து மரணம்!!

சமீப காலங்களாக இளைய தலைமுறையினர் அதிகம் மாரடைப்பால் மரணித்து வருகின்றனர். இதற்கு உணவு பழக்கம் ஒரு காரணமாக கூறப்பட்டாலும், மாரடைப்பால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விளையாடிக் கொண்டிருக்கும் போது மரணம், நடனமாடிக் கொண்டிருக்கும் போது மரணம் என்று அதிர்ச்சியளிக்கிறது.

இந்நிலையில் 8 வயது குழந்தை ஒன்று பள்ளி வகுப்பறையில் சுருண்டு விழுந்து மாரடைப்பால் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் தாலுகாவில் உள்ள பாடனகுப்பே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லிங்கராஜு. இவரது மனைவி ஸ்ருதி. இந்த தம்பதியருக்கு தேஜஸ்வினி என்று 8 வயதில் ஒரு மகள்.

தேஜஸ்வினி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். படிப்பில் ஆர்வத்துடன் இருக்கும் தேஜஸ்வினி, வழக்கம் போல நேற்று பள்ளிக்கு சென்றார். வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்களிடம் வீட்டுப் பாடங்களை காண்பிக்கும்படி ஆசிரியை கேட்டார்.

அப்போது, தேஜஸ்வினி திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். மேலும், சுயநினைவின்றி சிறுநீரும் கழித்து விட்டார். இதை பார்த்து ஆசிரியையும், சக மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே, சிறுமியை அருகில் உள்ள ஜே.எஸ்.எஸ்., மருத்துவமனைக்கு பள்ளி நிர்வாகத்தினர் துாக்கிச் சென்றனர். சிறுமியை சோதனை செய்த டாக்டர்கள், ‘சிறுமி திடீர் மாரடைப்பால் இறந்து விட்டார்’ என கூறினர்.

இது குறித்து தகவலறிந்து ஓடோடி வந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகே மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம் : கல்லூரி மாணவர் பரிதாப மரணம்!!

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஐஐஎம் மாணவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள், நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இந்திய நிர்வாக மேலாண்மை கல்லூரியில் (ஐஐஎம்) குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நிலேய் கைலாஷ்பாய் (28) எனும் மாணவர் 2ம் ஆண்டு எம்பிஏ படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 4ம் தேதி கைலாஷ்பாய்க்கு 29வது பிறந்தநாள் என்பதால் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த சக மாணவர்களுடன் சேர்ந்து கைலாஷ் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.

அதன் பின்னர் தனது அறைக்கு திரும்பிய போது 2வது மாடியில் இருந்து கைலாஷ்பாய் தவறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே கைலாஷ் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கைலாஷ் உயிரிழந்த சம்பவம் அடுத்த நாள் காலை தான் பிற மாணவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கைலாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மாணவன் உயிரிழந்த சம்பவம் கல்லூரி விடுதியில் உள்ள பிற மாணவர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சவுதியில் கதறும் மக்கள் : மக்கா, மதீனாவில் திடீர் வெள்ளம், புழுதிப் புயல்!!

சவுதி அரேபியா மெக்கா மற்றும் மதீனாவில் கடுமையான வானிலையை எதிர்கொள்கிறது. கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு, புழுதிப் புயல், ஆலங்கட்டி மழை போன்றவை ஏற்பட்டுள்ளன.

இந்த மோசமான வானிலை நாளை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகள் அதிக உஷார் நிலையில் உள்ளனர்.

கடுமையான வானிலை மெக்கா, மதினா நகரங்களில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த பகுதி முழுவதுமே போக்குவரத்து சிரமமாக உள்ளது.

தூசிப் புயல்கள் குடியிருப்பாளர்களுக்கு பெரும் சவாலானதாக இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆலங்கட்டி மழை பெய்து சேதத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அதிகாரிகள் பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு பதிலளிக்க அவசர சேவைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், நிலைமையை சமாளிப்பதற்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், அதிகாரப்பூர்வ ஆலோசனைகளைப் பின்பற்றவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மின்சாரத் தடைகள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்கு தயாராக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்ல போதைப்பொருள் விற்ற பல்கலைக்கழக மாணவன்!!

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தனியார் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ்த்தில் ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பல்கலைக்கழக மாணவன் வெளிநாடு செல்வதற்காக ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த மாணவன் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ” லலித் கன்னங்கர ”என்பவருக்குச் சொந்தமான ஐஸ் போதைப்பொருளை ஹங்வெல்ல, கொஸ்கம, பாதுக்க மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களில் விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(07) தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 779,673ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை . 27,510 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 220,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 25,220ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 201,750ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 24,080ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams)192,600ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 211,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 195,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் விரைவில் முக்கிய முடிவு!!

அர்ச்சுனாவின் (R.Archchuna) நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் குழுவொன்றின் விசாரணையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.

இன்று(07.01) நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் குழுவொன்று அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்து அறிக்கை வெளியிடவுள்ளது.

குறித்த அறிக்கையை அடிப்படையாக வைத்து நாடாளுமன்றத்தில் அவரின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இடியுடன் கூடிய மழை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாட்டின் சில பகுதிகளில் இன்று (07) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

அத்துடன் தென் மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிருகக் காட்சிச் சாலையின் ஒரேயொரு ஒராங்குட்டான் குரங்கும் உயிரிழப்பு!!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நீண்டகாலமாக பார்வையாளர்களை மகிழ்வித்த ஒரேயொரு ஒராங்குட்டான் குரங்கும் உயிரிழந்துள்ளது.

இந்தோனேசியாவில்(Indonesia) இருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு நன்கொடையாக கிடைத்த கோனி ஒராங்குட்டான் தம்பதிக்கு 2009 ஆம் ஆண்டு இந்த ஒராங்குட்டான் குரங்கு பிறந்தது.

அண்மையில் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஒராங்குட்டான் குரங்கு நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளது. இறக்கும் போது இதற்கு சுமார் 15 வயது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த ஒராங்குட்டான் குரங்கின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திணறிய விமானங்கள்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த நான்கு விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

இன்று காலை கட்டுநாயக்க பிரதேசத்தில் நிலவிய பனிமூட்டமான காலநிலை காரணமாக இவ்வாறு திருப்பி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இன்று அதிகாலை 5:00 மணியளவில் டுபாயில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யூ.எல்-226 விமானம், சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-881 விமானம்,

இந்தியாவின் பெங்களூரில் இருந்து அதிகாலை 05-05 மணிக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-174 விமானம் என்பன மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

மேலும், துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து இன்று காலை 06:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம், இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்காவில் இருந்து திருப்பி விடப்பட்ட விமானங்கள் காலை 09:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளன.

காலை 07.00 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழ்ந்திருந்த அடர்ந்த மூடுபனி படிப்படியாக குறைந்து தற்போது விமான நிலையம் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதால், விமான சேவைகள் சாதாரணமாக நடைபெறுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

HMPV வைரஸ் குறித்து இலங்கையர்கள் அச்சம்கொள்ள வேண்டாம்!!

இந்த நாட்களில் சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், சில சந்தர்ப்பங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட ஒரு வைரஸ் நிலை என இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என வைரஸ் நோய்க்கான இலங்கை விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே வைத்தியர் ஜூட் ஜயமஹா இதனை தெரிவித்துள்ளார். இதன்போது வைத்தியர் ஜூட் ஜயமஹா HMPV வைரஸ் தொடர்பான அறிகுறிகளையும் விளக்கினார்.

பொதுவாக இருமல், சளி, இலேசான காய்ச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும், மேலும், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு நிமோனியாவாக மாறலாம்.

ஆனால் இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது மற்றும் அனைவருக்கும் நடக்காது. இது உயிரிழப்பதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவு. சில நாட்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்றவற்றுக்குப் பிறகு பெரும்பாலான மக்கள் குணமடைகின்றனர். வைரஸ் உள்ளதா என்று சோதிக்க வேண்டிய அவசியமுமில்லை என தெரிவித்தார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை : கணவன் தலைமறைவு!!

மாத்தறை பிரதேசத்தில் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று (06) பிற்பகல் , திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிந்திகேவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் , நில்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தையடுத்து, சந்தேக நபரான கணவன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் மிரளவைத்த தனிநபர் கடன்!!

இலங்கையில் தனிநபர் கடன் 13 இலட்சம் ரூபாயை தாண்டிள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் செலுத்தப்பட வேண்டிய மொத்த பொதுக் கடன் தொகை 29,150 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் இது 6.47 வீத அதிகரிப்பாகும் என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2023ஆம் ஆண்டில் 8 இலட்சத்து 31,951 மில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட்டுள்ளதுடன் 75 இலட்சத்து 41,282 மில்லியன் ரூபா திறைசேரி பில்கள் மூலமாகவும் பெறப்பட்டுள்ளது.

இதன்படி, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023ஆம் ஆண்டு பெறப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களின் அளவு 67.4 சதவீத அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின் படி, 2023ஆம் ஆண்டு தனிநபர் கடன் பெறுமதியும் அதிகரித்துள்ளதாகவும், அது 13 இலட்சத்து 22,793 ரூபாவாகும் எனவும் கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை 2022 ஆம் ஆண்டில், தனிநபர் கடன் தொகை 12 லட்சத்து 34,358 ஆக இருந்த நிலையில் இது ஒரு வருடத்தில் 88,435 ரூபாய் அதாவது 7.16 சதவீதம் அதிகரித்துள்ளது.

எனினும் , நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு அளவு வலுவாக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.