வவுனியா மாநகரசபை உள்ளிட்ட மூன்று சபைகளிலும் போட்டியிட மக்கள் போராட்ட முன்னணி இன்று (17.03.2025) வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.
அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, சிங்கள பிரதேசசபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் குறித்த முன்னணி போட்டியிடவுள்ளது.
அதற்கான கட்டுப்பணத்தை அந்த அமைப்பின் வன்னி மாவட்ட முக்கியஸ்தர் என்.பிரதீபன் மற்றும் காமினி உட்பட முக்கியஸ்தர்கள் செலுத்தியிருந்தனர்.
மாத்தளை, யடவத்த அருகே உள்ள நீர்வீழ்ச்சியில், சுமார் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தெமட்டகொட பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் கடந்த 15 ஆம் திகதி இரவு சலகம தோட்டத்தின் ஹுலங்கல பகுதியில் நான்கு இளைஞர்களுடன் தங்கியிருந்துள்ளார்.
இதன் பின்னர், இந்தக் குழு நேற்று (16) காலை 7.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ள வேளையில் உயிரிழந்தவர் திடீரென ஓடத் தொடங்கி பின்னர் தாழ்வான காட்டுப் பகுதியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குறித்த இளைஞனின் உடலின் பாகங்கள் காட்டுப் பகுதியில் சிதறிக் கிடந்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மஹாவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏழு மற்றும் ஆறு வயதுடைய மகன்கள் சரியாக படிக்காததால் அவர்களை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட பகீர் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தியாவின ஆந்திரப் பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ONGC) ஊழியராக இருந்தவர் 37 வயதான சந்திர கிஷோர். இவருக்கு ஏழு மற்றும் ஆறு வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த 14 ஆம் திகதி இரவு 10 மணியளவில் அவர்களை தண்ணீர் நிறைந்த வாளியில் மூழ்கடித்து கொன்ற பின்னர் அவர் படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியில் சென்ற அவரது மனைவி அறைக்கதவை திறந்தபோது, கணவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தைகள் மயக்கமடைந்த நிலையிலும் இருப்பதைக் கண்டார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், சந்திர கிஷோர் தனது மகன்கள் படிப்பில் சிறந்து விளங்கவில்லை என்றால், எதிர்காலத்தில் அவர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும் என பயந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மன அழுத்தத்தால், அவர் இவ்வளவு இறுதியில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் குறித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை இன்று (17) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 885,753 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,250 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 250,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்தோடு, 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 28,650 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 229,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 27,350 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 218,750 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.
மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சலகம பிரதேசத்தில் ஹுலங்கல மலையிலிருந்து கீழே தவறி விழுந்து இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (16.03) இடம்பெற்றுள்ளது. கொழும்பு – 09, தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞன் தனது 03 நண்பர்களுடன் இணைந்து ஹுலங்கல மலையை பார்வையிட சென்றுள்ளார். இதன்போது இந்த இளைஞன் ஹுலங்கல மலையிலிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (17) காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயம்.
நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, ஆராச்சிகட்டுவ, பத்துலுஓய பகுதியில் வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதி, பின்னர் கடை மற்றும் வீட்டொன்றின் மீது மோதி விபத்துள்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் வீட்டில் இருந்த ஒரு சிறு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிலாபம் மற்றும் முந்தலம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட நீர்ச்சத்து இழப்பால் ஆசிரியை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் நீர்ச்சத்து இழப்பால் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன் தினம் (15) மதியம் கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயத்தைச் சேர்ந்த 53 வயது ஆசிரியையே உயிரிழந்தவராவார்.
அவர் மாணவர்களுக்காக கூடுதல் வகுப்பு நடத்த பாடசாலைக்கு சென்ற நிலையில் நீரிழப்பு காரணமாக மயங்கி விழுந்து பின்னர் மாரடைப்பால் இறந்தது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அதேவேளை கடந்த வாரமும் யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் இதேபோல் அதிக நீர்ச்சத்து இழப்பால் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் நடத்திய பின்னர், இறந்த ஆசிரியையின் உடலை இறுதிச் சடங்கிற்காக உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் குறித்த ஆசியையின் மரணம் பாடசாலை சமூகத்திடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகளவான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.
நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று இன்று (17) காலை ஆராச்சிகட்டுவ பொலிஸ் பிரிவின் பத்துலுஓயா பகுதியில் விபத்துக்குள்ளானது.
பேருந்து, சாலையை விட்டு விலகி மரம், கடை மற்றும் வீடு ஆகியவற்றின் மீது மோதியதில் குறைந்தது 21 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், விபத்துக்குப் பிறகு, வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தை, அவர் தூங்கிக் கொண்டிருந்த படுக்கையில் ஒரு அலமாரி விழுந்ததில் படுகாயமடைந்துள்ளது.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் மற்றும் முந்தலம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், விபத்துக்கான காரணம் குறித்து ஆராச்சிகட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்போது குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர் குறித்த சிறுமி தானே கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
அம்மம்மா தன்னைத் திட்டுவதாகவும், தன்னில் பாசம் காட்டுவதில்லை எனவும் மன அழுத்தம் காரணமாக இருவரையும் கொலை செய்ததாகவும் பொலிஸாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மூதூர் – தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்றுமுன்தினம் (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி. தஸ்னீம் பௌசான், சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் விஜயம் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த சம்பவத்தில் 68 வயதான சிறிதரன் ராஜேஸ்வரி, 74 வயதான சக்திவேல் ராஜகுமாரி ஆகிய இரு பெண்களே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூதூர் தாஹா நகர் பகுதியைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவமாதாக கடமையாற்றிவரும் சிறிதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற தினம் அதிகாலை சிறிதரன் தர்ஷினி மூதூர் வைத்தியசாலையில் வியாழக்கிழமை இரவுக் கடமைக்காக சென்றிருந்த நிலையில் குறித்த வீட்டில் 15 வயதான அவரது மகள், தாயாரான சிறிதரன் ராஜேஸ்வரி மற்றும் பெரியம்மாவான சக்திவேல் ராஜகுமாரி ஆகியோர் மாத்திரம் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் அதிகாலை வேளை குறித்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது கூரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் இருவருடைய கழுத்துப் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்த நிலையில் 15 வயதான மகள் சிறு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதன்போது குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர் குறித்த சிறுமி தானே கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
அம்மம்மா தன்னைத் திட்டுவதாகவும், தன்னில் பாசம் காட்டுவதில்லை எனவும் மன அழுத்தம் காரணமாக இருவரையும் கொலை செய்ததாகவும் பொலிஸாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதன் பின்னர் குறித்த சிறுமி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டி கம்பளை கல்வி வலயத்தில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் ஐந்தாம் தர மாணவர்கள் குழு ஒன்று, ஓவியம் தீட்டும் திட்டத்திற்காக கொண்டு வரப்பட்ட தின்னரில் (tinner) எஞ்சி இருந்ததை தரையில் கொட்டி தீ வைத்து வேடிக்கை பார்த்துள்ளனர்.
ஒரு மாணவன் சிறிது தின்னரை போத்தலில் எடுத்து தனது பாடசாலை பையில் வைப்பதைப் பார்த்த மற்றொரு மாணவன், இது குறித்து ஒரு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் கோபமடைந்த இரண்டு மாணவர்கள், தின்னர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் தீ வைத்து, சம்பந்தப்பட்ட மாணவர் மீது வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிந்து கொண்டிருந்த தின்னர் மாணவனின் காலில் விழுந்த நிலையில், மாணவர் அங்கிருந்து ஓடும்போது, மற்றொரு வகுப்பில் இருந்த ஆசிரியர் மாணவனைத் தடுத்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தார்.
தீ விபத்தில் மாணவனின் கால்கள் எரிந்த நிலையில், அவர் கம்பளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த துயர சம்பவத்தை எதிர்கொண்ட மாணவர் கூறுகையில் “அன்று எங்கள் வகுப்பு ஆசிரியர் வரவில்லை. எங்கள் வகுப்புத் நண்பர்கள் பாடசாலையில் இருந்த தின்னர் கேனை எடுத்து தரையில் வீசி விளையாடினர்.
அதில் ஒருவர் பெயிண்ட் டப்பாவில் தினரை ஊற்றி, பையில் போட்டு, வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்காக மறைத்து வைத்தர். நான் அதைப் பார்த்து முறைப்பாடு செய்தேன். பின்னர் அவர்கள் என்னை கட்டிக்கொடுத்ததாக திட்டினர்.
பின்னர் அவர்கள் பெயிண்ட் டப்பாவில் தினரை ஊற்றி, அதைப் பற்றவைத்து, என் முகத்தில் எறிந்தனர். அது மேசையில் பட்டு கீழே விழுந்து இரண்டு கால்களிலும் தீப்பற்றியது.
பின்னர், நான் அங்கிருந்து ஓடிக்கொண்டிருந்த போது, நான்காம் வகுப்பு ஆசிரியர் பாடசாலை பை ஒன்றை எடுத்து என் காலில் அடித்து, ஆசிரியரின் தண்ணீர் போத்தலை எடுத்து, கால்களின் மீது தண்ணீரை ஊற்றி, தீயை அணைத்தார்.
என் கால்கள் எரிகிறது, என்னால் அதைத் தாங்க முடியவில்லை. “எனக்குப் பாடசாலை கூட போக வழி இல்லை.” என்றார். இது தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் குழு மற்றும் கம்பளை வைத்தியசாலை, பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாடசாலைகளில் பிள்ளைகளின் செயல்பாடுகளில் ஆசிரியர்கள் உட்பட பெரியவர்கள் கவனம் செலுத்தாமல் இருப்பது எப்படி கடுமையான துயரங்களுக்கு வழிவகுக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு தெளிவான எடுத்துக்காட்டு ஆகும்.
யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார். இதன்போது வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரகாஸ் பிருந்தா (வயது 26) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் ஆறு மாதங்கள் கர்ப்பிணியாக காணப்படுகின்றார். கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த 2ஆம் மாதம் 20ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்துள்ளார்.
இந்நிலையில் அயலவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் நாளையதினம் நடைபெறவுள்ளது.
தம்பதியினரை மிரட்டி கார், பணம் மற்றும் தங்க நகைகளைத் கொள்ளையிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (16.03) பிற்பகல் திருகோணமலை சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள மான்களை பார்வையிடும் இடத்திற்கு சென்றிருந்த தம்பதியினரை, காரில் பிரவேசித்த மூன்று பேர் மிரட்டி, அவர்களின் கார், பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் இது குறித்து திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் தெரிவக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று மாலை கிண்ணியா பாலத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திருகோணமலையைச் சேர்ந்த 34 மற்றும் 35 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட கார், திருட்டிற்காக பயன்படுத்திய கார் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரையும் கைது செய்வதற்காக திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனியார் பேருந்தில் காணாமல் போன வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரின் பொதிகளை கண்டுபிடித்த அனுராதபுரம் பொலிஸார், அதனை சுற்றுலாப் பயணி ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த வெள்ளிக்கிழமை (14) ஒரு பேருந்தில் இருந்து தனது பொதிகளை இறக்க மறந்துவிட்டதாக , சுற்றுலாப் பயணி அனுராதபுரம் பொலிஸ் சுற்றுலாப் பிரிவில் முறைப்பாடு அளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு-கோட்டையிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த சுற்றுலாப் பயணி, அனுராதபுரம் நகரில் இறங்கும் போது தனது பொதிகளை எடுக்க மறந்துள்ளார்.
அது தொடர்பில், அனுராதபுரம் பொலிஸார் கோட்டை பேருந்து நிலையத்தில் நடத்திய விசாரணையில், தொலைந்து போன பொருட்களை வவுனியாவுக்குச் செல்லும் பேருந்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சுற்றுலாப் பயணியை மீட்ட அனுராதபுர பொலிஸ் சுற்றுலாப் பிரிவின் அதிகாரிகள், வெளிநாட்டு பயணியின் பொதிகளை (15) அவரிடமே திருப்பி ஒப்படைத்துள்ளனர்.
இந்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தாதியர்களின் பதவி உயர்வில் இழக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும் நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான அரசாங்க வைத்தியசாலைகளில் இன்று பகல் 10 மணி முதல் 1 மணி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையுடன் 12.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு முன்பாகவும் தாதியர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாதியர்கள் எங்களது ஓ.ரி 1/80 என்று கூறிய மதவத்த எங்கே?, அமைச்சரே 2027 ஆண்டு சம்பளத்தில் கணக்கிடுவதென்று பொய் சொல்ல வேண்டாம், பழைய முறையில் பதவி உயர்வு என்றால் வரவு செலவு திட்டத்தில் போட்டது ஏன்,
அரசே தாதியருக்கு வரவு செலவு திட்டத்தில் சரியான நீதியை பெற்றுக்கொடு, வரவு செலவு திட்டத்தினை கொண்டு வந்தது சுகாதார ஊழியர்களை தாக்கவா? போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் தாதியர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர்கள் பகல் 10.00 மணி முதல் 1.00 மணி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த போதிலும் நோயாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவசர நோயாளர் பிரிவு , விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சைப் பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுப்பட்ட தாதியர்கள் சேவைகளில் ஈடுபட்டிருந்தமையுடன் ஏனைய சேவைகளிலிருந்து 3மணிநேரம் தாதியர்கள் விலகியிருந்தனர்.