வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இராணுவ முகாமில் மின்சாரம் தாக்கி இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசியதாக மூன்று இராணுவ வீரர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, ஓமந்தை, கொம்புவைத்தகுளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் மின்சாரம் தாக்கி யானை ஒன்று கடந்த மாதம் இறந்துள்ளது.
இறந்த யானையை இராணுவத்தினர் துண்டு துண்டாக வெட்டி குளத்திற்குள் வீசியதாகவும் அதன் உடற்பாகங்கள் குளத்தில் காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள் மற்றும் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த விசாரணைகளையடுத்து மூன்று இராணுவ வீரர்கள் நேற்று (04.01) வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மூவரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
ஒருதொகை போதைமாத்திரைகளுடன் இருவரை வவுனியா விசேடஅதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து யாழில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கிபயணித்த தனியார் பேருந்தை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வழிமறித்த பொலிசார் அதில் சோதனையை முன்னெடுத்தனர்.
இதன்போது மறைத்துவைக்கப்பட்ட நிலையில் பெருமளவான போதை மாத்திரைகள் மீட்கப்பட்டது. அதனை உடமையில் வைத்திருந்த தென்பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டதுடன் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாளைமறுதினம் வங்காள விரிகுடாவில் தாளமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நாளை மறுதினம் (07.01.2025) காற்று சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இந்த தாளமுக்கமானது 08.01.2025 முதல் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக எதிர்வரும் 08.01.2025 முதல் 12.01.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அத்தோடு இந்த மழை 12 ம் திகதியைத் தாண்டியும் தொடரும் வாய்ப்புள்ளது. ஏனெனில் எதிர்வரும் 12.01 2025 அன்று மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஒன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளது ( அடுத்த சில நாட்களின் பின்னரே இதனை உறுதிப்படுத்த முடியும்).
எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நாட்களைக் கருத்தில் கொண்டு தமது நெல், உழுந்து மற்றும் பயறு போன்ற அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.
எதிர்வரும் 09.01.2025 முதல் 12.01.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். எனவே மீனவர்கள் இந்நாட்களில் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். நேற்று (04.01.2025) தேவை நிமிர்ந்தம் வெளியில் சென்ற நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர், கார் கதவு திறக்கப்படாமையால் அதிக நேரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் நெவில் டிலக்சன் என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இளைஞனின் மரணம் கனடா வாழ் தமிழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை சிறுபோகம் மற்றும் பெரும் போகம் போன்ற நெற் பயிற்செய்கை காலங்களில் எலிக்காய்சல் தொற்று கடந்த காலங்களில் குறிப்பிட்டளவு பதிவாகியிருக்கிறது.
எனினும், 2024 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரை 41 பேர் எலிக்காச்சல் நோயினால் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாதிக்கப்பட்டனர். அவர்கள் குணமடைந்து தற்போது வீடுகளுக்கு சென்றுள்ளனர் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
பெண்களே உஷாராக இருங்க… இது போல ஆட்டோவிலோ, பேருந்திலோ, காரிலோ பயணிக்கும் போது பண்ணாதீங்க. கை, சிரம் வெளியே நீட்டாதீர்கள் என்று பல முறை வேடிக்கையாக படித்திருப்போம்.
ஆனால் ஒரு உயிரையே இந்த செயல் காவு வாங்கியிருக்கிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே இலவும் தடத்தில் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுல்பர் நிஜாஸ் (30).
இவர் நெடுங்கண்டம் நகரில் சென்று கொண்டிருந்த போது திடீரென அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து தலை சுற்றியதால், மருத்துவமனைக்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார்.
அப்போது சுல்பர் நிஜாஸ் வாந்தி எடுப்பதற்காக ஆட்டோவில் இருந்து தலையை வெளியே நீட்டிய போது, திடீரென அவர் நிலை தடுமாறி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நெடுங்கண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சுல்பர் நிஜாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து நெடுங்கண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செயிண்ட்மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரின் பெற்றோர் பழனிவேல், சந்தேக மரணம் என விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தினர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி காவல் நிலைய காவல்துறையினர் சந்தேகம் மரணம், பணியில் அஜாகரத்தையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் எமில்டா,
முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ், மூவரும் நள்ளிரவு 2 மணிக்கு கைது செய்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தையின் உடல் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குழந்தையின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் அப்பகுதி மக்கள் போராட்டம் செய்து வந்தனர். இதனையடுத்து இன்று பள்ளிக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மொனராகலை,புத்தல பிரதேசத்தில் முகமூடி அணிந்திருந்த இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை வழிமறித்து அச்சுறுத்தி தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (03.01) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவத்தன்று, புத்தல பிரதேசத்தில் பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது முகமூடி அணிந்திருந்த இருவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர்.
இதன்போது இந்த பெண் மோட்டார் சைக்கிளுடன் கீழே வீழ்ந்த நிலையில் , சந்தேக நபர்கள் இருவரும் குறித்த பெண்ணை அச்சுறுத்தி அவரது கழுத்திலிருந்த தங்க மாலை, தோடுகள் மற்றும் பணப் பையிலிருந்த 15 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் புத்தல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ள வெளிநாட்டு தம்பதி ஒன்று மிகவும் மோசமான செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காலி, உனவட்டுன பிரதேசத்தில் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த தம்பதியையும் அவர்களின் நாயையும், குறித்த வெளிநாட்டு தம்பதி கொடூரமாக தாக்கியுள்ளனர்.
குறித்த வெளிநாட்டவர்கள் செல்லும் போது நாய் குலைத்தமையினால் கோபமடைந்த நாயையும் வீட்டு உரிமையாளரையும் தாக்கியுள்ளனர். இது தொடர்பில் கேட்க சென்ற நாயின் உரிமையாளரை கற்களால் தாக்கியதால் அவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்கியதன் பின்னர் எங்களை ஒன்றும் செய்ய முடியாது நாங்கள் உக்ரைனியர்கள் என அந்த தம்பதி கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் முழுமையாக காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் (02.01) இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் இன்றையதினம் (04.01.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என 202 நோயாளர்களின் தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றது.
இவற்றில் 94 பேருக்கு இந்த எலிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10 நோயாளர்கள் எலிக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
இவர்களில் ஏழு பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும், மூன்று பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இவ்வாறு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் எலிக்கய்ச்சல் நோய் என்ற சந்தேகத்துடன் புதிதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 2ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு இறப்புகள் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்தவர். மற்றவர் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் எலி காய்ச்சல் காரணமாக இதுவரை எட்டு இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி 2ஆம் திகதி ஏற்பட்ட இறப்பில், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள துன்னாலை கிராமத்தை சேர்ந்த 23 வயதுடைய ஆண் ஒருவர் ஆவார்.
இவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் இவர் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லவில்லை. மருந்தகங்களிலும், தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்றுள்ளார்.
பின்னர் நோய் முற்றிய நிலையில், ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,
பின்னர் அங்கிருந்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன், நாங்கள் அவரது பகுதியில் வழங்கிய தடுப்பு மருந்தை இவர் துரதிஷ்டவசமாக பெற்றுக் கொள்ளவில்லை.
விவசாயிகள், கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த தடுப்பு மருந்தை, உங்களது சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுக்கு சென்று அந்த தடுப்பு மருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.
பெரும்பாலான இறப்புக்கள் தாமதமாக சிகிச்சைக்கு வந்த காரணத்தினாலேயே சம்பவித்துள்ளது.
பின்னர் நாங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வுக்கு அமைவாக மக்கள் காய்ச்சல் ஏற்பட்டபோது உடனடியாக சிகிச்சையை பெற்றுக் கொண்ட நிலையில் அவர்களது உயிரை காப்பாற்றகூடியவாறு இருந்தது.
இந்த காலப்பகுதியில் டெங்கு நோய் மற்றும் எலி காய்ச்சலின் தாக்கம் காணப்படுகின்றது. எனவே ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் தாமதிக்காமல் அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு செல்லுங்கள்.
மேலும், எலி காய்ச்சலானது கால்நடைகளில் இருந்து பரவுகின்றதா என்பது தொடர்பான பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றன.
அநேகமாக அதன் பெறுபேறுகள் அடுத்த வாரத்தில் வெளிவரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை பயன்படுத்தி பறவைகளைக் கொலை செய்த நபர்கள் கொக்கட்டிசோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்கட்டிசோலை பொலிஸாரால் நேற்று முன்தினம் (02.01.2025) சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் இடம் பெயர்ந்து வரும் வெளிநாட்டு அரிய வகை சுற்றுலா பறவைகள் இலங்கையின் பல்வேறு இடங்களில் தமது வாழ்க்கையை கழிப்பது வழக்கம்.
இவ்வாறு இடம்பெயர்ந்து வரும் பறவைகளை சட்டவிரோதமாக கொலை செய்து வியாபாரப்படுத்தும் பல சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்கடிச்சோலை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பயணித்த வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றினுள் தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளும் கொலை செய்யப்பட்ட பறவைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டி சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சீனாவில் (China) பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும்,
குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் இதுபோன்ற வைரஸ்கள் பரவுவது இயல்பானது என்றும் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், பல நாடுகள் சீனாவுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு தற்போது அறிவித்துள்ளன.
இந்நிலையில், சீனாவுக்குச் செல்லும் சீன நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டினரின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்றும், சீனாவுக்கு பயணம் செய்வது ஆபத்து இல்லை என்றும் சீன அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மனித மெட்டா நியூமோவைரஸ் (HMPV) என்ற வைரஸ் சீனாவில் பரவி வருகிறது. இதன் அறிகுறிகளாக இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்றன இருக்கும்.
இந்த நோய் முதன்முதலில் 2001 இல் கண்டறியப்பட்டதுடன், இதைத் தடுக்க எந்த தடுப்பூசியும் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியா – மெல்பேர்னில் உள்ள தோல் நிபுணரான வைத்தியர் பிரதீப் திஸாநாயக்கவுக்கு சிறுவர் துஷ்பிரயோகத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இரண்டு சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 52 வயதான பிரதீப் திசாநாயக்கவுக்கு 10 வருடங்களும் 10 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்து மீண்டும் அவுஸ்திரேலியா திரும்பிய நிலையில் மதங்களை அடிப்படையாகக் கொண்டு பிரசங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில் பிரதீப் திசாநாயக்க ஐந்து தடவைகள் ஒரு சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்தியதாகவும், 16 வயதுக்குட்பட்ட மற்றொரு சிறுமியை இரண்டு முறை துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரதீப் திஸாநாயக்க அனைத்து குற்றங்களையும் நீதிமன்றில் ஏற்றுக்கொண்டுள்ளார். எனினும் வைத்தியர் பிரதீப் திஸாநாயக்க , மதத்தின் அடிப்படையில் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டதாக நீதிமன்றத்தில் நியாயப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதீப் திஸாநாயக்கவுக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட தங்கத்துடன் பத்தலங்குண்டுவைக்கு அண்மித்த கடலில் வைத்து மூன்று சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 11 கிலோ 300 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழில் மதுபான சாலையொன்றில் நுழைந்த வன்முறைக் கும்பலொன்று அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திய சிசிரிவி காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 31ஆம் திகதியன்று யாழ் நகரிலுள்ள மதுபான சாலையொன்றிற்குள் கறுப்புத் துணியால் முகத்தை மறைத்துக் கொண்டு வாள்களுடன் வன்முறைக் கும்பலொன்று நுழைந்துள்ளது.
இதன் போது மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது வாள்களால் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சிசிரிவி காணொளிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.