யாழில் தோண்டி எடுக்கப்பட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட நபரின் சடலம்!!

மன்னார் நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான ஒரு வழக்குடன் தொடர்புபட்டு பின்னர் உயிரிழந்த ஜேசுதாசன் ரஞ்சித்குமார் என்பவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் (வயது 42) என்பவர் கடந்த 2022.06.13 அன்று உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் – கல்லூண்டாயில் உள்ள சேமக்காலையில் அவரது உடலம் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மன்னார் – இலுப்பை கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அதன்பின்னர் நவாலி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்திலும் வழக்கு இடம்பெற்று வந்துள்ளது.

இந்நிலையில் அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக வைத்தியர் ஒருவர் தெரிவித்ததோடு, கிராம சேவகரும் அதற்கு இணங்க பூர்வாங்க செயற்பாடுகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது இவ்வாறு இருக்கையில் குறித்த நபர் மீதான விபத்து மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நபர் அங்கு பிரசன்னமாகவில்லை.

அத்துடன்,குறித்த நபர் உயிரிழந்து, அவரது சடலம் யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்ட விடயம் அதன்பின்னரே நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

இளம் ஆசிரியை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த சோகம்!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

ஆசிரியையான குறித்த யுவதி தனது வீட்டின் அறையினுள் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார். சம்பவத்தில் 23 வயதான இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலத்தை பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும்படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார்.

விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலையில் பயங்கரம் : ஐவர் மீது துப்பாக்கிச்சூடு!!

இன்று (04.01.2025) அதிகாலை 1 மணியளவில் வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற 5 பேரே இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இரண்டு பேர் மட்டுமே சுடப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர் வெலிகம வலான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கப்பரதோட்டை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் உயிரிழந்த கைதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் ஆலய கேணியை சுத்தம் செய்தவர் மின்சாரம் தாக்கி பலி!!

வவுனியாவில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் இன்று (03.01.2025) மாலை இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்… குறித்த ஆலயத்தில் அமைந்துள்ள கேணியை துப்புரவாக்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது நீர் இறைக்கும் இயந்திரத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டமையால் குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் கார்த்திக் வயது 45 என்ற குடும்பஸ்த்தரே சாவடைந்தார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காதலித்துவிட்டு ஏமாற்ற நினைத்த இளைஞன்.. ஆத்திரத்தில் காதலி செய்த விபரீத செயல்!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஏ.குடுகனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் மனுகுமார் (வயது 25). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பவானி (25) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

இருவரும் பியூ கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனுகுமார் பவானியிடம் சரியாக பேசுவதில்லை என கூறப்படுகிறது.

மேலும், திருமண பேச்சு வார்த்தை நடந்தால், தற்போது அதுபற்றி பேச மறுத்து வருகிறார். அதுமட்டுமின்றி பவானி செல்போனில் அழைத்தபோதும் மனுகுமார் பதில் சொல்லாமல் தவிர்த்து வந்தார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில், புத்தாண்டு கொண்டாட, மனுகுமாருக்கு அவரது நண்பர்கள் போன் செய்தனர்.

அப்போது, ​​பவானி அங்கு வந்தார். பின்னர் இருவரும் தனித்தனி அறையில் அமர்ந்து காதல், திருமணம் குறித்து பேசினர். அப்போது மனுகுமார் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பவானி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனுகுமாரை பலமுறை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த மனுகுமாரை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து படாவனே போலீசார் வழக்குப்பதிவு செய்து பவானியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கசந்த திருமண வாழ்க்கை.. விபரீத முடிவெடுத்த பிரபல தொழிலதிபர்!!

டெல்லியைச் சேர்ந்த கஃபே உரிமையாளர் புனித் குரானா தனது மனைவியுடன் விவாகரத்து கோரி நடந்து வரும் சட்டப் போராட்டத்தின் மத்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இவர் நேற்று மாலை கல்யாண் விஹாரில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் வெளியிட்ட 54 நிமிட வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

புனித் குரானா 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணமானதில் இருந்தே கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியைப் பிரிந்து தந்தை வீட்டுக்குச் சென்றார் புனித். இதற்கிடையே இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் இருவரும் சொத்து பிரச்னை குறித்து பேசிய 2 நிமிட ஆடியோவும் வைரலாகி வருகிறது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக புனித் மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், செவ்வாய்கிழமை மதியம் புனித் தூக்கில் தொங்கியதை குடும்பத்தினர் பார்த்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக முழு விசாரணை நடைபெற்று வருகிறது. புனித்தின் மொபைலை போலீசார் கைப்பற்றினர். புனித் குரானா தற்கொலைக்கு முன் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த விவகாரம் பெரும் கவனம் பெற்றது. 24 பக்க தற்கொலைக் கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது தற்கொலைக் குறிப்பில் விவாகரத்து வழக்கை தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் கேட்டதாகவும் எழுதி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காதலியின் வீட்டில் ஒரே சேலையில் விபரீத முடிவெடுத்த காதலர்கள்!!

காதலியின் வீட்டில், ஒரே சேலையில் காதல் ஜோடிகள் இருவரும் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதிக்காத நிலையில், காதலர்கள் இந்த சோக முடிவை எடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வெங்கனூரில் வசித்து வந்தவர் உபன்யா (18). உபன்யாவும் சுகினும் (23) கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களது உறவுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மன உளைச்சலில் இருந்த காதலர்கள் கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு இரவு 11 மணியளவில் உபன்யா வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டில் யாரும் இல்லை.

இந்நிலையில் காதலர்கள் வீட்டில் உள்ள அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதையடுத்து, கோவில் திருவிழா முடிந்து வீட்டுக்கு வந்த உபன்யாவின் அண்ணன், சகோதரனும், காதலனும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதல் உறவுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததால் இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து… ஒரே வாரத்தில் சீர்குலைந்த குடும்பம்!!

உயிர் பிரிந்து, உயிர் பிறத்தல் என்பது உலக நியதி. வருடாவருடம் சிலர் பிறக்க பலர் இறத்தல் என்பதும், பலர் இறக்க சிலர் பிறத்தல் என்பதுமாக மாறி மாறி இந்த இயற்கைச் சுற்றுவட்டம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

அண்மைக்காலங்களாக, இறப்புக்கள் என்பது கோரமாக மாறிக் கொண்டிருக்கின்றது.

யுத்தம், இயற்கை சீற்றம், இயற்கை மரணம் என்பதைத் தாண்டி, வஞ்சம், பொறுப்பின்மை, பழிதீர்த்தல், கவனயீனம் போன்ற பிரயோசனமற்ற காரணங்களால் பறிபோகும் உயிர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக, உலக நாடுகளைத் தவிர்த்து இலங்கையை பார்க்கும் போது, குற்றச் செயல்களால், விபத்துக்களால், பழி உணர்ச்சிகளால், அற்ப ஆசைகளால் பறிபோகும் உயிர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து செல்கின்றன.

கடந்த காலங்களில், இலங்கையை உலுக்கிய கொடூர கொலைகள், பரிதாப மரணங்களை ஏற்படுத்திய கொடூர விபத்துக்கள் பல நிகழ்ந்துள்ளன.

இவை அனைத்திற்கு பிறகும் ஏதோ ஒரு குடும்பம், யாரோ ஒருவருடைய வாழப்பட வேண்டிய வாழ்க்கை சீர்குலைந்து போகின்றது.

இயற்கையாக நடப்பதைத் தாண்டி, மனிதம் மறந்த சில மனிதர்களால் பறிக்கப்படும் இவ்வகை உயிர்களையும், வாழ்க்கையையும் யார் திருப்பிக் கொடுப்பது.

கடந்த மாதம் 25ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகைத் தினத்தன்று கிளிநொச்சியில் ஒரு கோர விபத்து இடம்பெற்றது. தனது 2 மற்றும் 6 வயதுகளையுடைய பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெற்றோர் விபத்துக்கு இலக்காகினர்.

டிப்பர் வாகனமொன்று அந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதில் இந்த கோர விபத்து இடம்பெற்றது. சம்பவம் இடம்பெற்ற அன்றையதினமே, 2 வயதுக் குழந்தை பரிதாப மரணத்தைத் தழுவியது.

விபத்துக்கு இலக்கான தந்தை, தாயார் மற்றும் 6 வயது மகள் ஆகியோர் பலத்த காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனாலும், விபத்தின் கோரம் சிகிச்சைப் பெற்று வந்த தாயையும் நேற்று (02) காவு கொண்டுள்ளது.

ஏற்கனவே, 2 வயது பிள்ளையை பறிகொடுத்து, இன்று தாயையும் பறிகொடுத்திருக்கும் அந்தக் குடும்பத்தின் பேரிழப்புக்கு ஒரு டிப்பர் வாகனத்தின் சாரதியின் கவனயீனமே காரணம்.

சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு முன்தினம் அனைவரும் குடும்பமாக சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக அந்த பொழுதைக் கழித்து விட்டு வந்துள்ளனர்.

அதேபோலத்தான் அன்றைய கிறிஸ்மஸ் பொழுதும் அவர்களுக்கு விடிந்தது. ஆனால், அன்று மாலையே அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோசத்தையும் அந்த விபத்து பறித்துச் சென்றுள்ளது.

தனது இரு பிள்ளைகளையும், எப்படி வளர்க்க வேண்டும், எப்படி ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்க வேண்டும் என்று எத்தனை எத்தனை கனவுகளை அந்த பெற்றோர் சுமந்திருப்பர்.

இன்று தந்தையும், ஒரே ஒரு மகளுமாய் தனித்து விடப்பட்டுள்ள அவர்களின் துயர மன நிலைக்கும், கேள்விக்குறியாகும் இனி வரும் நாட்களுக்கும் விதியை எப்படி காரணம் காட்டுவது.

விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்ற மக்கள் குறிப்பிட்டிருந்தனர்.

வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு என்று பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், பலர் பின்பற்றுகின்ற போதிலும், இவ்வாறான ஒரு சிலரின் பொறுப்பற்றத் தன்மையினால் விலை மதிக்க முடியாத பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன என்பதை எங்கணம் ஏற்பது.

மதுபாவனை, தொலைபேசி பாவனை, தூக்கமின்மை, கவனயீனம் உள்ளிட்ட காரணங்களே பெரும்பாலும் விபத்துக்களுக்கு காரணமாகின்றன.

இவற்றை தவிர்ப்பதால் சாரதிகளுக்கு எவ்வித நட்டமும் ஏற்படப் போவதில்லை, ஆனாலும் பலரால் இவை பின்பற்றப்படுவதுமில்லை. இது போன்ற பெறுமதியற்ற காரணங்களால் ஏன், எதற்கு என்றே தெரியாமல் பறிபோகும் உயிர்களுக்கு சமாதானம் சொல்வோர் இங்கு யார்

பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் மற்றும் விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு!!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இவ்வாண்டிலும் கட்டம் கட்டமாக இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை மார்ச் மாதத்தில் நடத்துவதற்கும், இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சையை ஒக்டோபர் அல்லது நவம்பரில் நடத்துவதற்கும் கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சகல தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைக்குரிய தவணைகள், தேசிய பரீட்சைகள் தொடர்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில், முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் 14ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மார்ச் 15 முதல் 31ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 12 முதல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21ஆம் திகதி முதல் மே 9ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மே 10 முதல் 13 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இரண்டாம் தவணை மே 14ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஆகஸ்ட் 8 முதல் 17 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஆகஸ்ட் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 16ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17ஆம் திகதி முதல் டிசம்பர் 19ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளில், இம்மாதம் 27 முதல் பெப்ரவரி 28 வரை முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. மார்ச் முதலாம் திகதி முதல் 31ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இரண்டாம் கட்டம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 12 முதல் 20 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 முதல் மே 23 வரை இடம்பெறவுள்ளது. மே 24 முதல் 27 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இரண்டாம் தவணை மே 28 முதல் ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை இடம்பெற்றது. ஆகஸ்ட் 20 முதல் 24 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஆகஸ்ட் 25 முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. நவம்பர் 1 முதல் 16 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17 முதல் டிசம்பர் 19ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

 

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (03) முதல் தற்காலிகமாக மழை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

வருடத்தின் ஆரம்பத்திலேயே உச்சத்தை தொட்டுள்ள தங்கத்தின் விலை!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. கடந்த சில தினங்களுடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(03) தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 781,504 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 27,570 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 220,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 25,280 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 202,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 24,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 193,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 212,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 196,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு தினத்தில் பிள்ளைகளுடன் சென்ற ஆசிரியைக்கு நேர்ந்த கதி!!

கேகாலை – அவிசாவளை வீதி அட்டால பிரதேசத்தில் நேற்று (1) மாலை வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக பிந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் அம்பே பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கற்பிக்கும் அட்டாலை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய அனுஷா ஜயசேகர என்ற ஆசிரியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆசிரியை தனது இரண்டு குழந்தைகளுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், எதிர் திசையில் இருந்து வந்த வேன் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கேகாலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மகள் மற்றும் மகன் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், வேன் சாரதி கரவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் கர்ப்பிணிப் பெண்ணை கொன்ற கணவன் : பிள்ளையின் செயலால் சிக்கிய தந்தை!!

அனுராதபுரத்தில் உள்ள பகுதியொன்றில் இளம் கர்ப்பிணிப் பெண்ணை கணவன் கொடூரமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் அனுராதபுரம், பதவியா பகுதியை சேர்ந்த 27 வயதான ருவந்தி மங்கலிகா என்ற குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

8 மாத கர்ப்பிணித் தாய் நேற்று முன்தினம் (31-12-2024) சந்தேக நபரான கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிள்ளையின் கற்றல் நடவடிக்கையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறி கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாயை, தந்தை சண்டை அவதானித்த 2ம் தரத்தில் கல்வி பயிலும் பிள்ளை அயலவர்களின் உதவியை நாடியுள்ளது.

இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட அயல்வீட்டவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்த போதும், குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் 33 வயதுடைய சந்தேக நபரான கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் உருக்குலைந்த நிலையில் பெண் சடலம் : உயிரிழந்தது யார்?

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து நேற்று (2 ) பிற்பகல் வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

வயல் ஒன்றுக்கு பசளை இடச் சென்றவர்கள், வயல் கிணற்றுக்குள் வயோதிப பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ணுற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் தொடர்பில் தகவல் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ் : அச்சத்தில் உலக நாடுகள்!!

கொவிட் -19 வைரஸின் பின் சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன.

மேலும், இன்ஃபுளுவென்சா (influenza) வைரஸூம் பரவி வருகிறது. சீனாவில் பல வைரஸ்களின் தாக்கம் வேகமாக பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு சீனாவில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், இது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த வைரஸ் பரவல் நிலை குறித்து சீன அதிகாரிகள் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று!!

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று (03) இரவு தென்படும் என விண்வெளி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, வடகிழக்கு வானில் அதிகாலை ஐந்து மணி வரை இந்த விண்கல் மழையை வெற்று கண்களால் தெளிவாகக் காண முடியும் என கிஹான் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விண்கல் மழையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.