திருமணத்தை சிறப்பாகவும் வித்தியாசமாகவும் நடாத்தவேண்டும் என்பதே ஒவ்வொருவரினதும் விருப்பமாகும். ஒருசிலர் அதற்கும் மேல் ஒருபடி சென்று மற்றோர் வேடிக்கை பார்க்குமளவில் திருமணத்தை நடாத்துகின்றனர்.
சமீபத்தில் யாழில் வித்தியாசனமான திருமணங்கள் இடம்பெற்றதுடன் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டிருந்தன.
யாழில் மாட்டுவண்டியில் மணமக்கள் சென்ற காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில் இதே போன்று வவுனியாவில் ஒரு வினோத திருமணம் சமீபத்தில் இடம்பெற்றுள்ளது.
றோயல் காடன் மண்டபத்தில் இடம்பெற்ற திருமணத்தில் மணமக்கள் உட்பட நண்பர்கள் சிலரும் லேண்ட் மாஸ்டர் வாகனத்தில் வீட்டிலிருந்து திருமண மண்டபத்திற்கு வருகைதந்திருந்தனர்..
வவுனியா மாவட்டத்திலே 2013 முதல் தமிழ் மொழி, இலக்கிய மற்றும் கலைத்துறைகளில் பலதரப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் தமிழ் மாமன்றமானது, பிரதேசக் கலை இலக்கிய ரசனை மேம்பாட்டினை ஏற்படுத்தும் பொருட்டு 2014 முதல் ஒவ்வொரு வருடமும் முத்தமிழுக்கும் விழா எடுத்து வருகின்றது.
2014 இலே இயல் விழா என்னும் பெயரிலும் 2015 இலே தமிழ் மாருதம் 2015 எனும் பெயரிலும் ஒரு நாள் விழாவாக இடம்பெற்றுக் கலை இலக்கிய ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்ற இவ்விழாவானது, இந்த ஆண்டு தமிழ் மாருதம் 2016 என்னும் பெயரில், இரு நாட்கள் இடம்பெறும் விழாவாக வவுனியா நகரசபைக் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வருகின்ற செப்டெம்பர் 3ம் திகதி மாலை 4 மணிக்கு வவுனியா பொது நூலக சரஸ்வதி சிலையில் இருந்து ஊர்வலமாக ஆரம்பிக்கும் இந்நிகழ்வு, செப்டெம்பர் 4ம் திகதி காலை மாலை இரு நேரமும் இடம்பெறவுள்ளது.
காலை நிகழ்வுகள் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 12.30க்கு நிறைவு பெறுவதுடன், மாலை நிகழ்வுகள் மாலை 4.00க்கு ஆரம்பமாகி 8.30 மணிக்கு நிறைவு பெறும் வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் பூபாலசிங்கம் புத்தகசாலையின் பங்களிப்புடனான புத்தக மலிவு விற்பனைக் கண்காட்சியும், சித்திரக் கண்காட்சியும் இணைந்ததாக இவ்விழா சிறக்கவுள்ளது.
வவுனியா, கொழும்பு, யாழ்ப்பாணம் என இலங்கையின் பல பாகங்களில் இருந்து சிறப்புப் பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள். கம்பவாரிதி.
இ.ஜெயராஜ் சிறப்புப் பேச்சாளராக நிகழ்வைப் பெருமைப்படுத்துகிறார். அத்துடன் பேராசிரியர் தி. வேல்நம்பி, செஞ்சொற்செல்வர் இரா.செல்வவடிவேல், கலாநிதி செ.சேதுராஜா, அ.வாசுதேவா போன்ற விசேட பேச்சாளர்களும், கவிஞர் ச.முகுந்தனும் யாழ்ப்பாணத்திலிருந்து பங்கேற்கிறார்கள்.
தமிழ்மணி மேழிக்குமரன், இலக்கியச்சுடர் ஐ.கதிர்காமசேகரன், பண்டிதர் வீ.பிரதீபன், வித்தியாரத்னா சி.வரதராஜன், திரு.என்.கே.கஜரூபன் போன்ற சிறப்புப் பேச்சாளர்கள் வவுனியாவில் இருந்து பங்கேற்கிறார்கள்.
இவர்கள் அனைவரின் ஒன்றிணைவிலும் வழக்காடு மன்றம், பட்டி மன்றம், சுழலும் சொற்போர், கவியரங்கம் போன்ற இயற்றமிழ் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
‘சிதம்பரம் இசைமைந்தன்’ நயினை ப.சிவமைந்தன் குழுவினர் வழங்கும் இசை அரங்கோடு, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களின் நாட்டார் பாடலும், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி அ.கவிநயாவின் இசையும் அசைவும் ஆகியன இசைத்தமிழ் நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளது.
“சிதம்பரேஸ்வரம் நடனாலயம்” வழங்கும் “தமிழ் மூச்சு” என்னும் நாட்டிய அளிக்கையும், “பாரத நர்த்தனாலயா” மாணவிகளின் கலச நடனமும் நிகழ்வைச் சிறப்பிக்கவுள்ளது.
“கலைநிலாக் கலையகம்” வழங்கும் “மறந்துபோன சுவடுகள்” நாடகம் நாடகத்தமிழ் நிகழ்வாக இடம்பெறவுள்ளது.
வன்னிப் பிரதேசத்தின் மாபெரும் கலை இலக்கிய நிகழ்வான தமிழ் மாருதம் 2016ல் ஆர்வம் கொண்ட அனைவரையும் பங்கேற்று நிகழ்வினைச் சிறப்பிக்குமாறு தமிழ் மாமன்றத்தினர் தாழ்மையுடன் அழைக்கிறார்கள்.
வவுனியா பூந்தோட்டம்-ஸ்ரீநகர் துர்க்கையம்மன் ஆயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக இளைஞர்கள் இன்று(28.08.2016) சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
வருடாந்தத் திருவிழா நாளை ஆரம்பமாவதற்கு முன்னிட்டு ஸ்ரீநகர் துர்க்கையம்மன் ஆலயத்திலிருந்து பூந்தோட்டம் சந்திவரையான பகுதி லயன்ஸ் விளையாட்டுக் கழக இளைஞர்களால் துப்பரவு செய்யப்பட்டது.
இவ்வாறு பிரதேச இளைஞர்கள் தாமாக முன்வந்து சிரமதானப் பணியில் ஈடுபடுவதை பார்த்த பிரதேச மக்கள் இவ் இளைஞர்களின் முயற்சியை பாராட்டிச் சென்றதை காணமுடிந்தது.
இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய லக்ஷர்‐இ‐தொய்பா பயங்கரவாத அமைப்பு உறுப்பினர்கள் நால்வரை பாகிஸ்தான் பொலிஸார் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் லக்ஷர் பகுதியில் வைத்தே இன்று அதிகாலை இவர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக லக்ஷர் நகரில் இருந்து கடாபி மைதானத்திற்கு செல்லும் வழியில் இந்த பயங்கரவாத தாக்குதல் இலங்கை அணியினர் சென்ற பஸ் மீது மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது இலங்கை அணி வீரர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ். குடாநாட்டின் ஆறு முக்கிய சந்திகளில் வீதிச் சமிக்ஞை விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ். நகரை அண்டியுள்ள வேம்படிச் சந்தி, ஆரியகுளம் சந்தி, திருநெல்வேலிச் சந்தி, கோப்பாய்ச் சந்தி, சுன்னாகம் சந்தி, நெல்லியடிச் சந்தி ஆகிய ஆறு முக்கிய சந்திகளிலேயே இவ்வாறு வீதிச் சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்படவுள்ளன.
திருநெல்வேலிச் சந்தி, கோப்பாய்ச் சந்தி ஆகிய இரு சந்திகளிலும் சமிக்ஞை விளக்குகளை பொருத்தப்பட்டுள்ள நிலையில் ஏனைய நான்கு சந்திகளிலும் வீதிச் சமிக்ஞை விளக்குகளைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். குடாநாட்டில் இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, அண்மைக் காலமாக யாழ். குடாநாட்டின் முக்கிய சந்திகளான மேற்படி சந்திகளில் போக்குவரத்து நெரிசல் வழமையை விட அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்த நிலையில் வீதிச் சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், வீதி விபத்துக்களையும் தவிர்க்க முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மீண்டும் வாகனங்கள் பதிவு நடவடிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளொன்றிற்கு 1858 வாகனங்கள் பெருந்தெருக்கள் ஊடாக இணைந்து கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிக்கைக்கமைய கடந்த வருடத்தில் 668907 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் கார்கள் 105628 முச்சக்கர வண்டிகள் 129547, மோட்டார் சைக்கிள்கள் 370889, கெப் வாகனங்கள் 26899 என வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அதற்கமைய மாதத்திற்கு 55742 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
வரலாற்றிலே கடந்த வருடம் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆறு வருடத்தில் வாகன பதிவுகள் 325 வீதத்திற்கும் அதிகமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த வருடத்தில் பெப்ரவரி மாதத்தில் 32801 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2015ஆம் ஆண்டு வாகன இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்பட்ட போதும் வாகன இறக்குமதிகளில் குறைவு ஏற்படவில்லை என்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை தம்பதியினர்கள் இருவரை இந்தியா திருப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த தம்பதி இருவரும் போலி ஆவணங்களை வைத்துக் கொண்டு இந்திய கடவுச் சீட்டு மற்றும் ரேஷன் அட்டை பெற்ற குற்றச்சாட்டுக்காகவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு பெண் இருப்பதாகவும்,இவர்களுடன் இலங்கை செல்வதற்கு இந்த தம்பதிகள் ஏப்ரல் மாதம் முயற்சித்துள்ளனர் இதன் போதே குடிவரவு,குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இவர்கள் 2011 ஆம் ஆண்டு பயணிகள் விசாவில் இந்தியா வந்தார்கள் என்றும்,அதன் பின்னர் இலங்கைக்கு திரும்ப செல்லவில்லை என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பறிமதல் செய்யப்பட்ட கடவுச் சீட்டை கோயம்புத்தூர் பிராந்திய கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு குடிவரவு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த தம்பதிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை முன்னெடுக்குமாறும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளுமாறும் திருப்பூர் பொலிஸாரிடம் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.
அனைவரினதும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள இக் கைப்பேசி தொடர்பாக தகவல்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருந்தன. இதன் தொடர்ச்சியாக தற்போது மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது குறித்த கைப்பேசியானது iPhone 7 எனும் பெயருடனயே அறிமுகம் செய்யப்படும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் அவ்வாறில்லாமல் iPhone 6SE என்ற பெயருடனேயே குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணமாக அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய கைப்பேசியில் முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் கைப்பேசியின் வடிவமைப்பில் சிறிய மாற்றம் மட்டுமே ஏற்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும், அதனால்தான் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப் புதிய தகவலை உறுதிப்படுத்தக்கூடிய சில புகைப்படங்களும் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.
எது எவ்வாறெனினும் குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒன்லைனில் கோப்புக்களை சேமிக்கக்கூடிய கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை தரும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக Dropbox திகழ்கின்றது. இந் நிறுவனம் தற்போது தனது பயர்களிடம் ஓர் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.
இதன்படி Dropbox தளத்தில் கணக்கினை வைத்திருக்கும் பயனர்கள் தமது கடவுச் சொற்களை உடனடியாக மாற்றுமாறே அவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதிகளவான பயனர்கள் கடந்த 2012ஆம் ஆண்டின் பின்னர் இதுவரை ஒரு போதும் கடவுச் சொற்களை மாற்றாது உள்ளனர் என்பதை அந் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தனிப்பட்ட தரவுகள் ஒன்லைன் சேமிப்பகத்தில் காணப்படுவதனால் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் சில சமயங்களில் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டுவிடும்.
இந்த பிரச்சினையிலிருந்து பயனர்களை பாதுகாக்கவே இவ்வாறு அவசர எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தவிர வழங்கப்படும் கடவுச் சொற்கள் வலிமை மிக்கதாக இருப்பதை உறுதிப்படுத்துமாறும், இரு படி சரிபார்ப்புக்களை (Two Step Verification) அக்டிவேட் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உலகின் மின்னல் வேக மனிதர் என்றழைக்கப்படுபவர் உசைன் போல்ட். லண்டன் ஒலிம்பிக்கை தொடர்ந்து ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் 100, 200, 400 மீற்றர் ஓட்டப்பந்தயங்களிலும் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். இதன் மூலம் பலகோடி ரூபாய்களையும் சம்பாதித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ரியோ ஒலிம்பிக்கில் அவர் பல பெண்களுடன் கும்மாளம் அடித்த செய்த வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கில் சம்பாதித்த 20 மில்லியன் டொலர்களையும் (134 கோடி) தான் படித்த பள்ளிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ஜமைக்கா அரசு விளையாட்டுத்துறைக்கு நிதியில்லை என்று போதியளவு நிதியை ஒதுக்காத நிலையில் விளையாட்டுத்துறையை மீட்டெடுக்கும் வண்ணம் வில்லியம் கினிஃப் நினைவுப்பள்ளிக்கு நிதியளித்துள்ளார்.
உலகிலேயே மிகக் குறைந்த வயதில் 15 நாடுகளுக்குத் தனியாக விமானத்தை ஓட்டிச் சென்று அவுஸ்திரேலிய இளைஞர் சாதனை படைத்துள்ளார்.
அஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்தைச் சேர்ந்த லக்லான் ஸ்மார்ட் என்பவர் தனியாக விமானத்தை ஓட்டிக்கொண்டு பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினார். அதன்படி மருச்சிடோர் விமான நிலையத்தில் இருந்து ஜூலை 24ம் திகதி ஸ்மார்ட் தனது பயணத்தைத் தொடங்கினார்.
இதையடுத்து 15 நாடுகளின் 24 இடங்களுக்குச் சென்ற அவர், பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பினார். இதையடுத்து ஸ்மார்ட்டுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
18 வயது 7 மாதம் 21 நாட்களில் விமானத்தைத் தனியாக ஓட்டி ஸ்மார்ட், இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த மாத் குத் மில்லர், உலகின் குறைந்த வயதில் தனியாக விமானத்தை ஓட்டி சாதனை புரிந்திருந்தார்.
இது குறித்து லக்லான் ஸ்மார்ட் கூறியதாவது, தாம் சாதனை படைப்பதற்கு உறுதுணையாக இருந்த தமது பெற்றோர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும், இந்த தருணம் தமது வாழ்வில் மிகவும் மறக்க முடியாத தருணம் என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இந்தோனிசியா அருகே சென்று கொண்டிருந்த பொழுது தொலை தொடர்பு தகவல் சரியாக கிடைக்காததால் விமானம் மலை மீது மோதியிருக்கும், ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன் என தெரிவித்துள்ளார்.
இவர், 45000 கிலோ மீட்டர்கள் தூரத்தை 2 மாதங்கள் பயணித்து இச்சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலிய சாகச கலைஞர் ஒருவர் தமது சாகச நிகழ்ச்சி ஒன்றை பேஸ்புக் வாயிலாக ஒளிபரப்பு செய்து கொண்ட சம்பவம் சோகத்தில் முடிந்துள்ளது.
இத்தாலியரான Armin Schmieder என்ற 28 வயது சாகச கலைஞர் பல்வேறு சாகசங்களை பொதுமக்கள் பார்வையில் செய்து சாதித்துள்ளார்.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள அல்ப்ஸ் மலை முகட்டில் இருந்து சாகசம் மெற்கொள்ள இருப்பதாக அவர் தமது ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதன்படி அல்ப்ஸ் பகுதியில் உள்ள ஒரு மலை முகட்டில் இருந்து குதித்து சாகசம் செய்வதை பேஸ்புக் வாயிலாக அவர் பொதுமக்களுக்கு ஒளிபரப்பு செய்துள்ளார்.
தனது உடலில் பொருத்தப்பட்டிருக்கும் கமராவை பயன்படுத்தி அவர் பேஸ்புக்கில் தம்மை தொடரும் பயனாளர்களுக்கு இந்த சிறப்பு சாகசத்தை ஒளிபரப்பியுள்ளார்.
ஆனால் எதிர்பாராத வகையில் அந்த சாகச நிகழ்வு விபத்தில் முடிந்துள்ளது. மலை முகட்டில் இருந்து குதித்துள்ள அவர் நிலைகுலைந்து விழுந்து விபத்தில் சிக்கியுள்ளார்.
இச்சம்பவத்தை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அதிர்ச்சியில் ஒரு கணம் ஸ்தம்பித்துள்ளனர்.
குறிப்பிட்ட சாகச கலைஞருக்கு என்ன நேர்ந்தது என அவர்கள் தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பி விசாரித்து வந்துள்ளனர்.
இதனிடையே பேர்ன் நகர பொலிசார் அந்த சாகச கலைஞரின் உடலை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த கலைஞரின் உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்பதை விசாரித்து வருவதாகவும் பேர்ன் மாகாண பொலிசார் உறுதி அளித்துள்ளனர்.
சாகச கலைஞரின் நண்பர் இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மட்டுமின்றி Armin மிகவும் கைதேர்ந்த சாகச கலைஞர் எனவும், இந்த புதிய சாகசத்தில் அவர் கடந்த ஓராண்டு காலமாக மட்டுமே பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் அந்த நண்பர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சாகச கலைஞரின் அந்த கடைசி சாகச நேரலையை ஏராளமானோர் கண்டு களித்து வந்தனர். விபத்து நடந்த உடன் குறிப்பிட்ட பகுதிக்கு மீட்பு படையினரை அனுப்பி இருந்தும் அவரை உயிருடன் மீட்க முடியாமல் போனது துரதிர்ஷ்டம் என அவரது நண்பர் விட்டு விலகாத அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த தம்பதியர் தங்கள் குழந்தையின் மோசமான தோற்றத்தை பார்த்து, அதனை பராமரிக்க முடியாமல் நிராகரித்து சென்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூளையில் திரவம் அதிகமாகும் ஹைட்ரோசிபாலஸ்(hydrocephalus) என்ற நோயால் ராயல் குமார் பாதிக்கப்பட்டுள்ளான். இதன் காரணமாக இச்சிறுவனின் தலைப்பகுதி சாதாரண அளவை விட 3 மடங்கு பெரிதாகவும், மேலும் பார்ப்பதற்கு கோரமாகவும் இருந்துள்ளது.
மேலும், தொடர்ந்து வாந்தி எடுத்தல், தூக்கமின்மை போன்ற பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளான். குழந்தை படும் துயரத்தை கொஞ்சம் கூட உணர்ந்துகொள்ளாத பெற்றோர் அவனை கைவிட்டுள்ளனர்.
தங்கள் குழந்தையை பராமரிப்பது சிரமமாக உள்ளது என கூறியுள்ளனர். இந்நிலையில், குழந்தையின் உறவினர்களான பிரபா தேவி (30) மற்றும் அவரது கணவர் ராஜேந்திர பிரசாத் ஆகிய இருவரும் தான் அக்குழந்தையை பராமரித்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் தாங்கள் சேமித்து வைத்த நகைகள் மற்றும் அனைத்தையும் அடமானம் வைத்து குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்ற போராடுகின்றனர்.
குழந்தையின் மருத்துவ செலவுக்கு இதுவரை 2,00,000 செலவாகியிருந்தாலும் முன்னேற்றம் எதுவும் ஏற்படவிலை என இவர்கள் கூறியுள்ளனர்.
ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், மூளையில் உள்ள திரவத்தை நீக்க shunt என்னும் மருத்துவ உபகரணத்தை உள்ளே செலுத்தி, அதன் மூலம் இரத்த ஓட்டத்தை இலகுவாக்கி சரி செய்யும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.
இதில், அச்சிறுவனுக்கு பொருத்தப்பட்ட shunt சரியான முறையில் வேலை செய்யாத காரணத்தால், மூளையின் மற்றொரு பக்கத்திலும் அக்கருவியை பொருத்தியுள்ளனர்.
இதன் காரணமாக, அக்குழந்தையின் உடலில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வாந்தி எடுத்தல், தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து விடுபட்டுள்ளது.
இரண்டாயிரம் உணவுகளை தொடர்ந்து 50 மணி நேரத்தில் சமைத்து மதுரை சமையல் கலைஞர் கின்னஸ் சாதனை முயற்சியில் இறங்கியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த ராம்பிரகாஷ் (31) என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் Longest Cooking Marathon என்ற தலைப்பில் 50 மணி நேரம் தொடர்ந்து சமைக்கும் சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து ராம் பிரகாஷ் கூறியதாவது; மக்களிடையே இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வு குறைந்து வருகிறது. இதை ஊக்குவிக்கும் வகையில் தான் நான் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இந்த சாதனை முயற்சியின் மூலம் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேலான இயற்கை உணவுகளை 50 மணி நேரத்தில் சமைக்க உள்ளேன்.
மேலும், இயற்கை வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பொருள்களையே உணவுகள் சமைக்க பயன்படுத்தியுள்ளேன். நான் சமைக்கும் உணவின் எடை, தரம் குறித்து கின்னஸ் அமைப்பைச் சேர்ந்த நடுவர் சகபாய் மங்கள் சோதிக்க உள்ளார் என தெரிவித்துள்ளார்.
சாதனை முயற்சி தொடங்கிய நாளான வெள்ளிக்கிழமை 500 வகையான உணவுகளை ராம் பிரகாஷ் சமைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை தனது சாதனை முயற்சியை நிறைவு செய்ய உள்ளார்.
இதுவரை 42 மணி நேரத்தில் 1,500 உணவு வகைகள் சமைக்கப்பட்டது தான் சாதனையாக உள்ளது குறிப்பிடதக்கது.
ஆந்திராவைச் சேர்ந்த இனிப்பு கடைக்காரர் ஒருவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 12,500 கிலோ எடையிலான லட்டு தயாரித்து விநாயகருக்கு படைத்துள்ளார்.
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன ராவ் என்ற அந்த நபர், இந்த பிரம்மாண்ட லட்டை தயாரிக்க 2400 கிலோ சுத்தமான நெய், 3350 கிலோ கடலை மாவு, 4950 கிலோ சர்க்கரை, 400 கிலோ முந்திரி, 200 கிலோ பாதாம், 125 கிலோ ஏலக்காய், 30 கிலோ பச்சை கற்பூரம் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளார்.
கடந்த ஆண்டு இவர் 6000 கிலோ எடையுள்ள லட்டினை தயாரித்து விநாயகருக்கு படைத்து, அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொடுத்தார்.
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த மெகா லட்டினை விநாயகருக்கு படைத்து, பக்தர்களுக்கு கொடுக்க உள்ளதாகவும்,
இந்த லட்டினை தயாரிக்க ரூ.30 லட்சம் செலவானதாகவும் மெகா லட்டு தயாரிக்க உதவியவர் தெரிவித்துள்ளார். உலகின் மிகப் பெரிய லட்டினை தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதே தனது லட்சியம் என மல்லிகார்ஜூனா ராவ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் நண்பன் ஒருவனுக்கு எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கழிப்பறை கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தை சேர்ந்த அகத்தியன் என்ற மாணவன் அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளார். இதனால் அவருடைய சக நண்பர்கள் அகத்தியனிடம் சென்று விசாரித்த போது, தன் காலில் இருந்த தோல் நோயை காட்டி வருந்தியுள்ளார்.
இதை தொடர்ந்து அடிக்கடி விஷக்காய்ச்சல் வருவதாக கூறியுள்ளார். இதற்கு தன் வீட்டில் கழிப்பறை இல்லாததும், திறந்த வெளியில் மலம் கழிப்பதும் தான் காரணம் என கூறி தன் நண்பர்களிடம் வருந்தியுள்ளார்.
இதை உணர்ந்த நண்பர்கள் தங்களால் முயன்ற அளவுக்கு பணம் சேர்த்தனர். இதை பற்றி பள்ளி ஆசிரியர் ஒருவரிடமும் தெரிவித்துள்ளனர்.
அவர் உதவியோடு கழிப்பறை கட்டுவதற்கான பேரணியை நடத்தினர். சக மாணவர்களிடமும் பணம் பெற்றனர்.
கழிப்பறை கட்டுவதற்கான பணம் கிடைத்துவிட்டதால் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கழிப்பறையை கட்டி நிறைவு செய்தனர். மாணவர்களின் செயல்பாடுகளை அறிந்த கல்வி அதிகாரிகள், அவர்களை நேரில் அழைத்து பாராட்டினர்.
நண்பனுக்காக பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து கழிப்பறை கட்டிய மாணவர்களின் செயல்பாடுகளை அக்கிராம மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து சென்றனர்.