இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இரு மாடுகளுக்கு ஆடம்பர திருமண வைபவத்தை நடத்தியுள்ளார். குஜராத் மாநிலத்தின் பவ்நகரில் கடந்த வியாழக்கிழமை இத்திருமண வைபவம் நடைபெற்றது. அஹமதாபாத் நகரைச் சேர்ந்த வர்த்தகரான விஜய் பர்சனா என்பவரே இந்த ஆடம்பர திருமணத்தை நடத்தினார்.
உடற்பயிற்சி நிலையங்கள் (ஜிம்) பலவற்றை நடத்திவரும் விஜய் பர்சனா, அறக்கட்டளையொன்றையும் நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமான பண்ணையொன்றில் உயர்ரகத்தை சேர்ந்த இரு பசுக்கள் உள்ளன. ராதா, பூனம் என இப்பசுக்களுக்கு அவர் பெயரிட்டுள்ளார். இப்பசுக்களுக்கு இரண்டரை வருட வயதானவுடன் அவற்றை காளையொன்றுடன் ஜோடி சேர்த்துவைக்க விஜய் பர்சனா விரும்பினார்.
இதற்காக “அர்ஜூன்” எனும் காளை தெரிவுசெய்யப்பட்டது. இந்த நிகழ்வை ஆடம்பர திருமண வைபவமாக அவர் நடத்தினார். இசை நிகழ்சசிகள், ஊர்வலங்கள் சகிதம் இவ்வைபவம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் இந்த “திருமண வைபவத்தை” காண்பதற்கு திரண்டிருந்தனர். இது குறித்து விஜய் பர்சனா (44) கருத்துத் தெரிவிக்கையில், “பசுக்கள் தான் எம்மை முன்னேற்ற முடியும்.
நான் ஃபிட்னஸ் துறையில் இருப்பவன் என்ற வகையில், எமது ஆரோக்கியத்துக்கு பசுப்பால் தயாரிப்புகள் ஏற்படுத்தும் சிறந்த விளைவுகளுக்கு நான் சாட்சியாக உள்ளேன். ஒவ்வொரு வீட்டிலும் பசுவொன்று வளர்க்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த செய்தியை பரப்புவதற்காக பூனத்தின் திருமணத்தை ஒரு பொது நிகழ்வாக நான் கொண்டாடினேன் எனத் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸ ‘செமட்ட செவன’ தேசிய விடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 844 பயனாளிகளுக்கு இன்று (04.07.2016) காலை 11.00 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் உதவித்திட்டங்களை வழங்கி வைத்தார்.
இதன் போது ‘செமட்ட செவன’ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 244 பயனாளிகளுக்கு 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் வரையிலான காசோலைகளையும் 400 பயனாளிகளுக்கு சீமந்து பக்கற்றுக்களும், 200 பயனாளிகளுக்கு வீட்டு உறுதிப்பத்திரங்களையும் வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் றோகண புஸ்பகுமார, வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கே.கே.காதர் மஸ்தான் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், சர்வமதத்தலைவர்கள், பயனாளிகள் என 700க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய தினம் (04.07.2016) காலை 9.00 மணியளவில் மன்னாரிலும் ‘செமட்ட செவன’ தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது 2.0 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது.இதில் அக்ஷய் குமார் பங்கேற்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு வர, அவர் ஒரு பேட்டியில் இதுக்குறித்து மனம் திறந்துள்ளார்.
இந்த பேட்டியில் ‘ஷங்கர் எல்லாம் ஒரு இயக்குனரே இல்லை, அவர் ஒரு விஞ்ஞானி, அப்படித்தான் யோசிக்கின்றார், இந்த படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது’ என கூறியுள்ளார்.
பாகுபலி வெற்றியால் உற்சாகத்தில் உள்ளார் தமன்னா. இவர் அடுத்து பாகுபலி-2, தர்மதுரை, தேவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் நடித்த அனைத்து படங்களிலுமே கஷ்டப்பட்டு தான் நடித்தேன், இதில் ஒரு சில படங்கள் தோல்வியடையும் போது மனதிற்கு சங்கடமாக இருக்கும்.
அந்த தயாரிப்பாளரை பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கும், அதனால், எப்போதும் முழுக்கதையையும் படித்து நன்றாக இருந்தால் தான் தற்போது தான் நடிக்கவே சம்மதிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.நடித்துவிட்டால் கடமை முடிந்தது என பல நடிகைகள் ஒதுங்கி செல்லும் நிலையில் தமன்னா தன் தயாரிப்பாளர்களுக்காக வருத்தப்படுவது பாராட்டத்தக்கது.
இணைய வழியான பாலியல் துஷ்பிரயோகம் உட்பட இணைய குற்றங்கள் தொடர்பாக இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் 1100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களை முடக்கி ஏனையவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி தவறுதலாக பயன்படுத்துவது தொடர்பாக 70 வீதமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிகாட்டியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதம பொறியியலாளர் ரொசான் சந்தரகுப்தா,
குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பெண்களின் கணக்குகளே முடக்கப்பட்டு அவர்களின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட விபரங்கள் தவறான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. எனவே இதுதொடர்பில் பெண்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.
2015 ஆம் ஆண்டில் இணைய குற்றங்கள் தொடர்பாக 2800 முறைப்பாடுகளும் 2014 ஆம் ஆண்டு 2500 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன. இதன் பாரதூரதன்மையை அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.
குறிப்பாக இளம் யுவதிகளே குறிவைக்கப்படுகின்றனர். சில பெண்களின் நிர்வாண புகைப்படங்களும் வெளியாகின்றன. அதாவது உருமாற்றம் செய்யப்பட்டு இவ்வாறான புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
இதேவேளை குறுஞ்செய்தி மற்றும் ஸ்நெப்செட் தொடர்பில் இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் மிகவும் அவதானமாக இருப்பதோடு தொழினுட்பம் தொடர்பான அறிவும் அவசியமாகும் என்றார்.
மத்தள ராஜபக்ச வானூர்தி தளத்தை மீள இயக்க உள்ளுர் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகள் கோரப்பட்டுள்ளன.போக்குவரத்து அமைச்சின் தகவல்படி, இதற்கான விளம்பரம் அரசாங்க நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நீண்டகாலத்துக்கான முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.போக்குவரத்து அமைச்சின் விளம்பரப்படி மத்திய ராஜபக்ச வானூர்தி தளத்தில் முதலீட்டை மேற்கொள்ளும் நிறுவனங்கள், உள்ளுர் மற்றும் மூன்றாம் நாடுகளுக்கு சேவைகளை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் இதற்கான விண்ணப்ப திகதி ஆகஸ்ட் மாதம் 12ம் திகதியுடன் முடிவடைகின்றது.
வெட் வரி அதிகரிப்பு தொடர்பில் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும்வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டங்களை கவனத்திற் கொண்டு நாடளாவிய ரீதியல் உள்ளவர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றை இன்று மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்த கலந்தரையாடல் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது வெட் வரி திருத்தம், மற்றும் 11வீதம் தொடக்கம் 15 வீதம் வரைஅதிகரிக்கப்பட்ட வெட் வரியினால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதோடு, இந்த கலந்துரையாடல் நிகழ்வின் போது நிதி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துக்கொள்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், அந்தப் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்படுத்த கண்டி மாநகர சபையின் தீயணைப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுளள்னர். தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
திருகோணமலை கந்தளாயில் நஞ்சு கலந்த நீரினை பருகிய விவசாயி ஒருவர் மயக்கமுற்ற நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.கந்தளாய், நான்காம் குலனி, பகுதியைச் சேர்ந்த பி.குலசேகர வயது 53 என்பவரே நஞ்சு கலந்த நீரினை பருகியதால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
நேற்று (03) மாலையில் குறித்த நபர் தனது வயலுக்கு நஞ்சு கலந்த எண்ணெய் விசிறுவதற்காக வயலுக்குச் சென்று, எண்ணெய் விசிறி விட்டு வாய்க்காலில் ஓடிய நீரினை பருகியுள்ளார்.பின்பு அரை மணித்தியாலயத்தின் பின்னர் திடீரென மயக்கமுற்று விழுந்ததால் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குறித்த நபரின் வீட்டாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
வாய்க்காலில் நஞ்சு திட்டமிட்டு கலந்து விடப்பட்டுள்ளதா? அல்லது நஞ்சு கலந்த எண்ணெய் உபகரணத்தினை கழுவிய போது நீரில் நஞ்சு கலந்துள்ளதா? போன்ற விசாரணைகளை கந்தளாய் வைத்தியசாலைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திரஜித் குமாரசுவாமி இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதியினால் இவருக்கான நியமனக் கடிதம் இன்று கையளிக்கப்பட்டது.
மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அர்ஜூன மகேந்திரனின் பதவிக்காலம் கடந்த மாதம் 30ம் திகதியுடன் நிறைவுக்கு வந்த நிலையில், புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி, ஜனாதிபதியால் கடந்த 2ம் திகதி நியமிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இந்திரஜித் குமாரசுவாமி, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பட்டதாரியுமாவார்.
இந்திரஜித் குமாரசுவாமி, சஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்.
1973ம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியில் இணைந்த குமாரசுவாமி, 1989ம் ஆண்டு வரை அங்கு பொருளியல் ஆய்வுப் பிரிவிலும், வங்கிகள் கண்காணிப்புப் பிரிவிலும் பணியாற்றினார்.
அதன் பின்னர், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் சேவையாற்றிய கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, 1990ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு வரை பொதுநலவாய நாடுகளின் செயலகத்தில் உயர்மட்ட பதவிகளை வகித்துள்ளார்.
இன்று நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்ற நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை வைத்தியர்களும் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனால் நோயாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
எட்கா உடன்படிக்கை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் இன்று காலை 8.00மணிமுதல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இப் பணிப்புறக்கணிப்பு சம்பந்தமாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்..
ஏவ்வித முன்னறிவித்தலின்றி இவ்வாறு வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுபட்டுவருவதானால் நாங்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. 12.00 மணிக்கு பின்னர் வருமாறு தெரிவிக்கின்றனர்.
வருத்தம் என்று தான் வைத்தியசாலைக்கு வருகின்றோம் எம்மை இவ்வாறு சிரமத்துக்குள்ளாக்கின்றனர். ஏனக்கு வயது 72 சுகயினம் காரணமாக கஸ்டத்தின் மத்தியிலும் முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்கு வந்தேன். மீண்டும் 12.00 மணிக்கு வைத்தியசாலைக்கு முச்சக்கரவண்டியில் வருவது என்றால் எங்கே செல்வது பணத்திற்கு? என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.
திருடனை கண்ட மாணவி ஒருவர் நடுநிசியில் திடீரென்று எழுந்த போதும் குறித்த திருடன் தப்பிச்சென்றுவிட்டான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு பெண் பாதுகாப்பு ஊழியரே பணியில் இருந்தார். எனினும் அவர் உறக்கத்தில்இருந்தமையால் அவரால் திருடனை பிடிக்கமுடியவில்லை என்று பல்கலைக்கழக மாணவர் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒரு காலகட்டத்தில் இதிகாசங்களை செதுக்கும் விதமாக அமைந்த காதல், தற்காலத்தில் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகளாக மாறிக் கொண்டு தான் இருக்கிறது.
பொருத்தமில்லாதவரை தேர்ந்தெடுத்து ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்ணினத்தின் மரணங்களுக்கு காரணங்களாய் அமைவது வாடிக்கையாகி விட்டது.
தாய்மையைப் போற்றும் மங்கையராய் பிறத்தல் மிக மிக அரிது. எனவே பெண்ணாய் பிறந்த ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும் என்பர். அப்படிப்பட்ட பெண்களை ஒரு தலைக்காதல் என்ற பெயரில் உயிரைப் பறிக்கும் கலிகாலம் தற்போது உலகெங்கும் பரவியுள்ளது.
உலகில் பெண்ணியம் உண்டு, பெண்களுக்கு பாதுகாப்புண்டு என கூறுபவர்களுக்கு நடுவில் ஒருதலைக் காதலுக்காக கழுத்தை அறுத்து கொள்வது, சம்மதம் கூறாவிட்டால் ஆவேசத்தில் கூட்டுவன்புணர்வு செய்து கொலை செய்வது மற்றும் திராவகம் வீசி கொலை செய்தல் போன்றவற்றால் பெண்களின் உயிர்களுக்கு உத்தரவாதமின்றி ஊசலாடும் நிலை தற்போது நிலவி வருகின்றது.
இந்திய மக்களையே அச்சத்தில் தள்ளிய சம்பவம் தான் சமீபத்தில் இடம்பெற்ற மென்பொருள் பொறியியலாளர் சுவாதியின் கொலை. பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் வைத்து கழுத்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டது யாவரும் அறிந்ததே. இந்தக் கொலைக்கான காரணம் ஒருதலைக் காதல் என்பது பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் இந்தியாவில் சுவாதி பின்னர் சந்தியா. சுவாதி கொலையின் சூடு தணியும் முன் இந்தியாவில் மீண்டும் மக்களை உலுக்கிய சம்பவம், 18 வயதான சந்தியா கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டது. பள்ளிப் பருவத்திலிருந்து ஒரு வருடமாக ஒரு தலைக்காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் வேறொரு திருமணம் செய்து கொள்ளப் போவதாக சந்தியா கூறியதன் விளைவு உயிர் பறி போனது.
பெண்களைக் கண்டால் பேயும் இரங்கும் என்ற காலம் தற்போது மழுங்கடிக்கப்பட்டுள்ளது. அம்பாறையில் காதலை ஏற்க மறுத்ததால் நண்பர்களின் உதவியுடன் தனிமையில் அழைத்து வந்து காதலித்த பெண்ணை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்த சம்பவம் மக்களை வியப்புக்ககுள்ளாக்கியுள்ளது.
இலங்கை மக்களிடையே பல மாதங்கள் கடந்த பின்னும் பேசப்படும் ஒரு சம்பவம் பள்ளி மாணவி வித்தியா கொலை. புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வண்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டமை. காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் கோபமுற்று நண்பர்களுடன் இணைந்து பாடசாலைக்கு சென்ற மாணவியை கடத்தி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தவனும் ஒரு தலைக் காதலனே.
இவ்வாறு உலகில் ஒரு தலைக் காதலுக்காக பெண்களை கொலை செய்வது ஏன்? நேற்று சுவாதி இன்று சந்தியா நாளை யாரோ? இதற்கு தீர்வு கிடைக்காதா? என்ற ஏக்கம் தற்போது பெண்கள் மத்தியில் அதிகம் காணப்படுகின்றது.
இவ்வாறான கொலைச் சம்பவங்களுக்கு ஊடகங்களும் துணைபோகின்றனவா? என்ற சந்தேகமும் எழத்தான் செய்கின்றது. காரணம் கொலை. கொலைச் சம்பவத்தை நியாயப்படுத்துவதற்காக கொலையினை தெளிவாக விபரிக்கின்றன.
அதுவே அடுத்த கொலையினை செய்வதற்கு தூண்டுதலாக அமைகின்றன என்றும் கூறலாம். இருந்தாலும் இறந்தவரை மறுபடியும் கொலை செய்வதும் நியாயம் இல்லைதானே. இத்தகைய கொலைகளின் காரணம் தான் என்ன? தனிப்பட்ட மனித குரோதத்திற்காக இடம்பெறுகின்ற என்றாலும் கொலையாளி எப்போதுமே நினைத்திருக்கமாட்டான் கொலைக்கு பின்னால் எத்தனை பாதிப்புக்கள் நிகழும் என்பதை மட்டும்.
தன்னுடைய விருப்பத்திற்கு ஈடுகொடுக்காதவர்களை கொன்றொழித்து விட்டால் நியாயமாகிவிடும் என எண்ணப்படுமாயின், அன்றாடம் இந்த உலகம் பிணங்களுக்கிடையில் தான் வாழ நேரிடும். உலகமே சுடுகாடாகிவிடும் என்பது திண்மம். காதல் எனும் பெயரினை மையப்படுத்தி புனிதமாக மதிக்கப்பட வேண்டிய பெண்ணினத்திற்கு தீங்கிழைக்கும் சில மூட ஆணாதிக்கவாதிகள் பிறக்கின்றனரா? அல்லது விதைக்கப்படுகின்றனரா? என்பது கேள்விக் குறிதான்.
காதல் என்பது புனிதமானது. அதனைக் கொச்சைப்படுத்தும் வகையில் இந்த கால தலைமுறை நடந்து கொள்வது ஏன்? கொலை செய்வதனால் காதல் கை கூடுமா? ஒரு தலைக்காதலுக்கு முடிவு கொலை அல்ல.
எதிர்கால தலைமுறையினரே சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
பிரித்தானியாவைச் சேர்ந்தப் பெண், தன் பிள்ளை உயிரிழந்ததால் அவரின் முட்டைக்கலத்தை வைத்து கருக்கட்டல் மேற்கொண்டு தனது பேரப்பிள்ளையை பெற்றெடுக்கும் நோக்கில் முயற்சித்து வருகிறார்
தன் பிள்ளை உயிரிழந்துள்ளதால் தன் பிள்ளையின் முதல் குழந்தையை தான் பெற்றெடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். ஆனால் பாட்டியின் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்க மறுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
மனித முளையவியல் ஆணையத்தின் படி இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க,குறித்த 60 வயதான பாட்டியின் மகள் புற்று நோய் காரணமாக 29 வயதில்உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
புற்றுநோயால் இறந்த மகளின் முட்டைகலத்தை வைத்து கருக்கட்டல் மேற்கொள்வது சிறந்தது அல்ல,அத்துடன் பாட்டி தன் மகள் பற்றி எந்த விடயமும் ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை என்றும் மேன்முறையீட்டு நீதிபதிகள் இந்த விடயத்தை நிராகரித்துள்ளனர்.
இந்த உறைந்த முட்டைகளை பயன்படுத்தி குழந்தையை பெற்றெடுக்க முடியுமா என்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மனித கருத்தரித்தல் அதிகார சபையிடம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த திட்டம் திருத்தமாக அமைய கூடியதற்கான சாத்தியமே காணப்படுவதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மனித கருத்தரித்தல் அதிகார சபை வழங்கும் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய விரைவில் நீதிமன்றம் தீர்மானம் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்தரித்தல் அதிகார சபை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கிட்டும் என எதிர்ப்பார்ப்பதாக குறித்த 60 வயது பாட்டி தெரிவித்துள்ளார்.
வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் தீபாவளி துடுப்பாட்ட போட்டித் தொடரை முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆரம்பித்து வைத்தார்.
வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தினால் வருடந்தோறும் தீபாவளி தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் நேற்று (03.07.2016) மாலை 2.00 மணியளவில் கோவில்குளம் இந்துக் கல்லூரி மைதானத்தில், கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு க.பார்த்தீபன் தலைமையில் வெகு சிறப்பாக ஆரம்பமானது.
இவ் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்ப போட்டியினை தொடக்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப போட்டியில் அல்-மதினா மற்றும் என்.சி.சி. விளையாட்டு கழகங்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் திரு கா.பார்த்தீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினர் மற்றும் கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், கழகத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.