இலத்திரனியல் வாகனத் துறையில் இலங்கையின் புதிய புரட்சி!!

உலகளாவிய ரீதியில் நாளுக்கு நாள் ஒவ்வொருத் துறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அதற்கு ஏற்றாற் போல எமது நாடும் பல துறைகளில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகின்றது.

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி, எரிபொருள் நெருக்கடி போன்ற காரணங்களால் இலத்திரனியல் வாகனங்களுக்கான கேள்வி எம்மத்தியில் மாத்திரமின்றி உலகளாவிய ரீதியிலும் அதிகரித்து காணப்படுகின்றது.

புதிய அறிமுகம்

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான், இலங்கையில் இலத்திரனியல் வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது தனியார் நிறுவனமொன்று.

குறிப்பாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருந்த போது இலத்திரனியல் வாகனத்தின் தேவை அதிகமாக உணரப்பட்டது.

இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த இலத்திரனியல் மோட்டார் வாகனம் உற்பத்தி செய்யப்பட்டு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த இலத்திரனியல் வாகன அறிமுகமானது இலங்கையில் இலத்திரனியல் வாகனத் துறையின் புரட்சியாக பலராலும் பார்க்கப்படுகின்றது.

 

ஃபெங்கல் புயலின் தாக்கம் : தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

வங்காள விரிகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ‘ஃபெங்கல் ’(Fenjal strome) புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், இந்தியாவின் – தமிழ்நாடு உள்ளிட்ட பல பிரதேசங்கள் கனமழையினால் பாதிப்புக்குள்ளாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ தொடக்கம், 80 முதல் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.

இந்த புயலானது புதுச்சேரி அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், எனவே, இப்பகுதிகளுக்கு கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 180 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 210 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம், கூறியுள்ளது.

மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல ஏக்கர் விவசாய நிலங்கள் நாசம் : கவலையில் விவசாயிகள்!!

சீரற்ற வானிலை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதால் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சூரங்கல், வன்னியனார் மடு, சிவத்தபாலத்தடி உள்ளிட்ட சுமார் 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

கடன் பெற்றும் பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்தும் மேற்கொண்ட நெற்பயிர்ச்செய்கை நிலங்கள் இம்முறை கனமழையால் வெள்ள நீரில் மூழ்கியதில் பயிர்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளன.

இதனால் பெருமளவில் நஷ்டமடைந்துள்ளோம். அரசாங்கம் எங்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம்!!

புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமான மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி வரை சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சென்னைக்கு அருகில் 140 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. நாகையிலிருந்து வடகிழக்கே 210 கி.மீ., புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புயல் இன்று மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதிகன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி கணவன் – மனைவி பரிதாபமாக பலி!!

புத்தளத்தில் மின்சாரம் தாக்கியதில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் உயிரிழந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

சம்பவத்தில் 54 வயதான எஸ். ஏ. எஸ். ஸ்டான்லி திலகரத்ன மற்றும் 53 வயதான சந்திரிகா மல்காந்தி என்பவர்களே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நபர் முந்தலம பகுதியில் கார் கழுவும் நிலையம் ஒன்றை நடத்தி வந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் வீட்டில் தண்ணீர் பாய்ச்சும் மோட்டருக்கான மின்சார இணைப்பில் ஏற்பட்ட பழுதை சீர்செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இதன்போது கணவனை காப்பாற்ற முயற்சித்த மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் மற்றும் மனைவி அயலவர்களால் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தம்பதியினரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை முந்தல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த இந்திய வீரர் திடீரென மைதானத்தில் விழுந்து உயிரிழப்பு!!

இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்திலேயே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

35 வயதான இம்ரான் பாட்டேல் என்ற வீரரே இவ்வாறு கிரிக்கெட் மைதானத்தில் உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக இந்த வீரர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தோள்பட்டை வலி

மகராஷ்டிர மாநிலத்தில் புனோவில் நடைபெற்ற போட்டியொன்றின் இடைநடுவில் குறித்த வீரர் மாரடைப்பு காரணமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த நிலையில் மரணித்துள்ளளார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பாட்டேல் சிறிது நேரம் விளையாடிய போது நெஞ்சு மற்றும் தோள்பட்டை பகுதியில் வலி எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட நடுவர்கள் அவரை பெவிலியன் திரும்ப அனுமதித்துள்ளனர். எனினும் பெவிலியன் திரும்பும் வழியிலேயே கீழே வீழ்ந்து பட்டேல் உயிரிழந்துள்ளார்.

இறுதி 4 ஓட்டங்கள்

இந்த போட்டியானது நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்பட்டதாகவும் இதனால் பாட்டேல் உயிரிழந்த காட்சிகள் ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கீழே விழுந்த இம்ரானை மீட்டு வைத்தியசாலைலயில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பதற்கு முதல் பந்திலும் அவர் 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

புனேவில் சில மாதங்களுக்கு முன்னதாக மற்றுமொரு கிரிக்கெட் வீரர் மைதானத்தில் விழுந்து உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சம்தொட்ட மரக்கறிகளின் விலை!!

மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதி மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால், மரக்கறி செய்கை நீரில் மூழ்கியமை விலை அதிகரிபிற்கு முக்கியமான காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, பச்சை மிளகாய் கிலோ 800 ரூபாவிற்கும், தக்காளி கிலோ 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

கறி மிளகாய் கிலோ 650 ரூபாவிற்கும், போஞ்சி கிலோ 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக ஹட்டன் பகுதி மரக்கறி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் : பொலிஸில் சிக்கிய நபர்!!

கதிர்காமம் கொயாகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மனைவியை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்த பின்னர் தலைமறைவாகி இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்படடுள்ளார்.

சந்தேக நபர் குடும்பத் தகராறு காரணமாக மனைவியுடன் சண்டையிட்ட நிலையில், கோடரியால் மனைவியின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கணவர் ஒருவித விஷமருந்தியிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நிலந்த பிரதீப் குமார என்ற நபரே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபருக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாய் ஒன்றினால் காப்பாற்றப்பட்ட குடும்பம்!!

களுத்துறை, தொடங்கொட பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கமகொட பகுதியில் நாயினால் குடும்பம் ஒன்று காப்பாற்றப்பட்டுள்ளது.சீரற்ற காலநிலையால் பெய்த கடும் மழையுடன் கூடிய காற்று காரணமாக புளியமரத்தின் கிளையொன்று வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக வீடு முற்றாக இடிந்துள்ளதுடன், வீட்டில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் காரணமாக வீட்டில் உள்ளவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அதிகாலை 2 மணியளவில் வீட்டு உரிமையாளரின் படுக்கையறையின் படுக்கைக்கு அருகில் வந்த நாய் நுளம்பு வலையை கடித்து கிழித்ததுடன், வீட்டு உரிமையாளரின் ஆடை கடித்து இழுத்துள்ளது.

வீட்டின் ஏனையவர்கள் உறங்கும் அறைக்கும், உரிமையாளரை இழுத்து சென்ற நாய், அவர்களையும் வெளியே அழைத்து சென்றுள்ளது.

குடும்பத்தினர் வெளியே வந்து சில நிமிடங்களின் மரத்தின் கிளை வீட்டின் கூரையின் மீது விழுந்துள்ளது. வீட்டின் சமையலறையின் சுவர்கள் கட்டிலின் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாயின் செயற்பாட்டினால் அனைவரும் விழிந்துக் கொண்டமையால், உயிராபத்தில் இருந்து தப்பியதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சுங்கத்தின் உதவி அத்தியேட்கசராக யாழ்ப்பாண இளைஞன் நியமனம்!!

இலங்கை சுங்கத்தின் உதவி அத்தியேட்கசர் பதவிக்கு யாழ்.நயினாதீவு சேர்ந்த கேதீஸ்வரன் துஷ்யந்தன் என்ற இளைஞன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சுங்கத்தின் தலைமையத்தில் கேதீஸ்வரன் துஷ்யந்தன் இன்றையதினம் (29.11.2024) நியமனம் பெற்றுள்ளார்.

நயினாதீவு 07ம் வட்டாரத்தை பெருமைப்படுத்திய கேதிஸ்வரன் துஷயந்தனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஏழு வயதில் சாதித்த யாழ்ப்பாண தமிழ் சிறுமி!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் சிறுமி ஒருவர் ஏழு வயதில் சதுரங்கப் போட்டியில் சாதித்து சாதனை படைத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற தேசிய மட்ட சதுரங்க திறந்த போட்டியில் யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை சேர்ந்த செல்வி கஜீனா தர்ஷன் என்ற ஏழு வயது சிறுமி தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

குறித்தப் போட்டியில் 200 மாணவர்கள் பங்கு பற்றிய நிலையில் 7 வயது சிறுமியான கஜீனா தங்கப் பதக்கத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் சர்வதேச போட்டிகள் மற்றும் பொதுநலவாய போட்டிகளில் பங்கு பற்றி பதக்கங்களை பெற்றுள்ளார்.இதன்மூலம் சாதனைச் சிறுமியாக பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்!!

வவுனியா வைத்தியசாலையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பதவியாவைச்சேர்ந்த கரப்பவதியொருவர் நேற்று இரவு பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிற்கு சிசேரியன் அறுவைச்சிகிச்சை மூலம் 4 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன.

மேற்படி தாயார் மகப்பேற்று வைத்திய நிபுணர் காமினி அவர்களால் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வந்ததார்.

இந்நிலையில் கரிப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டு வைத்தியர் திலீபன் அவர்களினால் சிசேரியன் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு நான்கு குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டுள்ளன.

மேற்படி தாயாரும் குழந்தைகளும் நலமாகவுள்ளதுடன், நான்கு குழந்தைகளும் சிறப்பு குழந்தை நலப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

அதேவேளை வவுனியா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிரசவிக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் வைத்தியசாலையில் மற்றுமொரு துயர சம்பவம் : இளம் தாய் மரணம்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவை சேர்ந்த இந்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சளி அதிகரிப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் விசாரணைகளை கொண்டதோடு உடற்கூற்று பரிசோதனைக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனையில் இதய வால்வுகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இதயம் செயலிழந்தமையாலேயே இந்த தாய் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவை நோக்கி நகரும் சூறாவளி : இலங்கை வானிலையில் மாற்றம்!!

பீன்ஜல் ( peinjal ) சூறாவளியானது இந்தியாவை நோக்கி நகருவதால இலங்கையின் நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

பீன்ஜல் ( peinjal ) சூறாவளியானது திருகோணமலையிலிருந்து வடகாக சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்காக சுமார் 280 கிலோமீற்றர் தொலைவிலும் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது.

இது வடக்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்வதுடன் இன்று நண்பகல் வேளையில் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களுக்கு இடையாக ஊடறுத்து செல்லக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இதன் காரணமாக நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கமானது படிப்படியாக குறைவடைவதுடன் வட மாகாணத்திலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் வானம் முகில் செறிந்தும் காணப்படும்.

வட மாகாணத்தின் சில இடங்களில் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களுக்கு செல்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்று அவர் கூறினார்.

வவுனியா செட்டிகுளத்தில் குடும்பப் பெண் தீயில் எரிந்து மரணம்!!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீயில் எரிந்து மரணமடைந்துள்ளார். நேற்று (29.11) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்ப பெண் ஒருவர் இரவு வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் செட்டிகுளம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம் குடும்ப பெண்ணே மரணமடைந்தவராவார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் உயிரிழப்பு!!

புத்தளம் – முந்தல் 412 ஏக்கர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (28) மின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 55 மற்றும் 52 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்பதியர் வசித்துவந்த வீட்டுக்கு அருகில் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், மின்சார இணைப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுதை கணவர் திருத்த முற்பட்டபோது, அவரை மின்சாரம் தாக்கியுள்ளது.

இந்நிலையில், கணவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் மின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அதனையடுத்து, இருவரும் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.