அம்பாறையில் வெள்ள நீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்களிற்காக ட்துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நிந்தவூர் மாவடிப்பள்ளி சம்மாந்துறை பகுதிகளில் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
மாணவர்களின் தவிர்க்க முடியாத பிரிவின் காரணமாக துக்கத்தினை வெளிப்படுத்தும் விதமாக வெள்ளைக் கொடி கட்டி பறக்கவிடப்பட்டுள்ளது. அம்பாறை காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் உயிரிழந்திருந்தனர்.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் சம்மாந்துறை பகுதியை சேர்ந்த மாணவர்கள் தமது பிரதேசத்திற்கு செல்லும் வழியில் காரைதீவு,மாவடிப்பள்ளி பாலத்தடியில் வெள்ள அனர்த்தத்தின் அகப்பட்டு உயிரிழந்தமை நாடு உழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வருட இறுதியில் சுனாமி அனர்த்தம் உருவாகி இலங்கையில் பல பகுதிகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்னும் ஒரு கருத்து சமூக ஊடகங்ளில் பெருமளவில் பகிரப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அது ஒரு தவறான கருத்து எனவும் சுனாமி அல்லது புவிநடுக்கம் ஆகியவை ஏற்படுவதற்கான எதிர்வுகூறல்களை ஒருபோதும் முன்னைக்க முடியாது என யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், அதனை நிகழும் போது எதிர்கொள்வது தான் மிக முக்கியமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ள அதேவேளை, 2024ஆம் ஆண்டு சுனாமி பேரலை ஏற்படும் என்னும் கருத்து ஒரு வதந்தி எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், இவ்வாறு பரப்பப்படும் இந்த செய்தி எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாத ஒன்று, எனவே இது குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என பிரதீபராஜா கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை குறித்து லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு தகவல் வழங்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியுள்ளதாவது,
பொலன்னறுவை மகாவலி ஆறு மற்றும் திவுலான வில்லுவ அணைக்கட்டு நிரம்பி வழிவதால் தமது கூட்டத்திலிருந்து பிரிந்த காட்டு யானைக்குட்டி ஒன்று, எருமை மாடுகளின் கூட்டத்துடன் திவுலான கிராமத்தில் உள்ள மாட்டுத்தொழுவத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4-5 வயதுடைய சுமார் 5 அடி உயரம் கொண்ட இந்த யானைக் குட்டி, சோமாவதி காப்புக்காட்டில் வழமையாக உலாவித்திரிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையிலேயே சீரற்ற வானிலை காரணமாக, தமது கூட்டத்தில் இருந்து பிரிந்து,திவுலான கிராமத்தில் உள்ள மாட்டுத் தொழுவத்திற்கு எருமைக் கூட்டத்துடன் வந்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள், மன்னம்பிட்டிய வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து, குறித்த யானைக்குட்டியை காட்டுக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக வனஜீவராசிகள் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு 7இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் குழந்தைகளுக்கான பால் மா பக்கட்களை திருடிய சந்தேகத்தின் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுமார் ஆறாயிரம் ரூபா பெறுமதியான பால் மா இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்காக இரண்டு பால் மா பக்கட்டுகளை பணம் செலுத்தாது எடுத்துச் சென்ற போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த பெண்ணை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர்.
இதன்போது, குறித்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து குருந்துவத்த வைத்தியசாலைக்கு அருகாமையில் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெண்ணிடமிருந்து குழந்தைகளுக்கான இரண்டு பால் மா பக்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 32 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, இதுவரையில் 12 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 2 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 23 மாவட்டங்களில் 99,876 குடும்பங்களைச் சேர்ந்த 335,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளை சேர்ந்த 95 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் 1,708 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் 8,678 குடும்பங்களைச் சேர்ந்த 27,717 பேர் தங்களது இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் 279 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து தம்பதியினருக்கும் வீடு வழங்கப்பட வேண்டும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ரீ.பி. சரத் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
வீடுகள் இல்லாத காரணத்தினால் திருமணம் செய்வது காலம் தாழ்த்தப்படுவதாகவும் அவ்வாறான ஓர் நிலைமை இனி நீடிப்பதற்கு இமளிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
24 முதல் 30 வயதுக்குள் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் அதுவே சரியான வயது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வயதில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வோருக்கு வீடு ஒன்றை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் நிலையை எட்டும் வரையில் நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கனடாவிற்கு பணிக்கு அனுப்புவதாக சுமார் ஏழு கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் ஆனந்த அபேரத்னவிற்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே மறுத்துள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் முன்வைத்த அறிக்கைக்கு அமைய பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சந்தேக நபரான வைத்தியர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் பிணை வழங்குமாறு கோரிய போது, மக்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் அனைத்தும் செலுத்தப்பட்டதன் பின்னர் பிணை வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக நீதவான் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை விசாரணைப் பிரிவிற்கு வழங்குமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய, சந்தேகநபரான வைத்தியரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீஆனி மனம்பேரி என்ற சட்டத்தரணியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது. சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி ஜகத் அபேநாயக்க நீதிமன்றில் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை – காரைத்தீவில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், நிந்தவூர் மத்ரஸாவைச் சேர்ந்த அதிபரையும் ஆசிரியரையும், டிசம்பர் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட உழவு இயந்திர சாரதிக்கு உதவியாளராக கடமையாற்றிய இருவரையும் பிணையில் செல்ல சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
2024 நவம்பர் 26 ஆம் திகதி வெள்ளம் காரணமாக பேருந்துகள், கிடைக்காததால் பாடசாலை முடிந்து உழவு இயந்திரத்தில் வீடு திரும்புமாறு குறித்த அதிபர் பாடசாலை சிறுவர்களுக்கு பணிப்புரை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உழவு இயந்திரத்திற்கான போக்குவரத்துச் செலவை ஈடுசெய்யும் பணத்தையும் அதிபர் மாணவர்களுக்கு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், முன்னதாக வெள்ளநீர் காரணமாக வீதி பாதுகாப்பற்றது என எச்சரித்து உழவு இயந்திரத்தை போக்குவரத்துக்கு பயன்படுத்த வேண்டாம் என இராணுவத்தினர் அறிவுறுத்தியிருந்த நிலையிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, 11 பாடசாலை மாணவர்கள், சாரதி, உதவியாளர் என மொத்தம் 13 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம், வெள்ள நீரை கடந்து செல்லும் போது பலத்த நீரோட்டம் காரணமாக கவிழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னர் ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் 6 மாணவர்களைக் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன 6 சிறுவர்களும் 12 மற்றும் 16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 5 பேரின் உடலங்கள்; மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை மேலும், உழவு இயந்திர சாரதியினதும் உழவு இயந்திரத்தில் பயணித்த மற்றுமொருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
யான் ஓயா முகத்துவாரத்திற்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்ததில் நபரொருவர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சீரற்ற காலநிலையிலும் எச்சரிக்கை மீறி நேற்று முன்தினம் (27.11.2024) யான் ஓயா முகத்துவாரத்திற்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தந்தை மற்றும் மகன் இருவரும் படகு கவிழ்ந்த நிலையில் தந்தை காணாமல் போனதுடன் மகன் தப்பித்து நீந்தி கரை சேர்ந்துள்ளார்.
இது தொடர்பாக விபத்தில் இருந்து தப்பிய காணாமல் போனவரின் மகன் முபாரக் ஜாகிர் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து காணாமல் போன நபர் புடவைகட்டு – சாகரபுர பகுதியில் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் புல்மோட்டை 01 இலுப்பையடி சந்தியைச் சேர்ந்த 56 வயதுடைய செய்லாப்தீன் முபாறக் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் சக்தி மிக்க தாழ் அமுக்கமானது திருகோணமலையிலிருந்து வடகிழக்காக சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து சுமார் 290 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்று இரவு 11.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்தது.
இந் நிலையில், இது வடக்கு – வடமேற்குத் திசையையினூடாக தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து செல்கின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் வானிலையில் காணப்படுகின்ற தாக்கமானது இன்று முதல் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் பெய்யக்கூடும். வட மாகாணத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அதேசமயம் புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களுக்கு செல்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.
புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். மேலும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றும் சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
அம்பாறையில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் ஒருவரின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி அன்று கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் 4 நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கடற்படையினர் இன்று (29) திரவந்திய மேடு பகுதியில் கரையொதுங்கிய சடலத்தை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து செல்லப்பட்டிருந்த நிலையில் அங்கு சடலத்தை அவரின் உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை பாண்டிருப்பு பகுதியை சேர்ந்த நாகலிங்கம் சுரேஸ் (வயது-48) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் மீதான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, இன்றைய தினம்(29.11.2024) வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலையானது, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நேற்று (28) இரவு திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீட்டர் தொலைவிலும் காங்கேசன்துறைக்கு கிழக்கே 290 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதன்படி, நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
நாட்டின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வட மாகாணத்தில் சில இடங்களில் அதிகபட்சம் 100 மி.மீ. க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும். மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வாகன இறக்குமதி மீண்டும் அனுமதிக்கப்படும் போது முதல் கட்டமாக பேருந்துகள் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அனுமதி நிதி அமைச்சினால் வழங்கப்படும் என்று தாம் நம்புவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே(Indika Sampath Merenchige) தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் கார்களை இறக்குமதி செய்ய முடியும் என்றும் இந்த நடவடிக்கை அடுத்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் அரசாங்கத்திற்கு அதிக வருமானம் கிடைக்கும்.
மேலும் அந்நிய செலாவணியையும் சேமிக்க முடியும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே சுட்டிக்காட்டினார்.
தற்போது நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக இன்றும் (29) நாளையும் (30) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் மிதமான அல்லது கன மழை பெய்யக்கூடும் என யாழ்.
பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பதிவில் மேலும்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்திய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது பருத்தித்துறையின் கற்கோவளத்திலிருந்து கிழக்காக 430 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இதன் நகர்வு வேகம் மிக மிக குறைவாகவே உள்ளது. இன்று மாலை 6.00 மணியிலிருந்து மணித்தியாலத்திற்கு 1.2 கி.மீ. வேகத்திலேயே நகர்கின்றது. இதே வேகத்தில் நகர்ந்தால் இது கரையைக் கடக்கும் திகதி மாற்றமடையும்.
இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 30.11.2014 அன்று இந்தியாவின் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது.
இதில் வேடிக்கையான விடயம் யாதெனில், தற்போது பருத்தித்துறைக்கு கிழக்காக 430 கி.மீ. தொலைவில் உள்ள இதன் மையம், கரையைக் கடக்கும் போது பருத்தித்துறைக்கு வடகிழக்காக 113 கி.மீ. தொலைவில் காணப்படும்.
ஆகவே, இதன் மூலமே இதன் நகர்வு பாதை எத்தன்மை வாய்ந்ததென அறிய முடியும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகமும் திசையும் நிச்சயமாக ஆய்வுக்குட்படுத்த வேண்டிய விடயம்.
ஒரு தாழமுக்கம்/ புயல்/ சூறாவளி தோற்றம் பெற,
(1) சமுத்திர மேற்பரப்பின் சூடான வெப்பநிலை ( Sufficient warm temperature at sea surface )
(2) வளிமண்டல உறுதியற்ற தன்மை (Atmospheric instability)
(3) கொரியோலிசு விசையின் செல்வாக்கு பகுதி (lmpact area of Coriolis force)
(4) வளிமண்டல மாறன் மண்டலத்தின் கீழ் மற்றும் மத்திய பகுதிகளில் காணப்படும் உயர் ஈரப்பதன் (High humidity in the lower to middle levels of the troposphere)
(5) முன்னரே காணப்படும் குறைவளவான குழப்பம்(A pre-existing low-level focus or disturbance)
(6) குத்தான காற்று முறிவு(Vertical wind shear) என்பன அமைதல் வேண்டும்.
ஆனால் ஒரு தாழமுக்கம்/ புயல்/ சூறாவளி நகர்வதற்கு சில விசைகள் அடிப்படையானவை.
1. அமுக்க சாய்வு விகித விசை ( Pressure Gradient Force)
2. மைய நீக்க விசை(centrifugal force)
3. கொரியோலிசு விசை(Coriolis force)
4. உராய்வு விசை (Frictional Force)
அந்த வகையில் தற்போது உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வினை மைய நீக்க விசை மற்றும் உராய்வு விசை மற்றும் கொரியோலிசு விசை ஆகியன பாதித்துள்ளன.
கொந்தளிப்பான கடல்
அதனால் தான் மிக மெதுவாகவும் குழப்பமான திசை மாற்றங்களுடனும் இது நகர்கின்றது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக நாளையும் நாளை மறுதினமும் (29 மற்றும் 30ம் திகதிகள்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இன்று இரவும் ஏனைய பகுதிகளுக்கு நாளையும் மழை கிடைக்கும். மிகக் கன மழை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ. வரை வீசும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் வரை கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும் – என்றுள்ளது.
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் தொடர்ந்தும் வெள்ள நிலைமை ஏற்பட்டு வருவதனால் அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் கோரிக்கை விடுத்ததோடு, அவர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களையும் வழங்குவதற்கு ஆவண செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (28.11) பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றபோதே இக் கோரிக்கையை அவர் முன் வைத்தார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா திருநாவற்குளத்தில் தொடர்ந்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய தேவை இருக்கின்றது. அங்கு இருக்கின்ற வடிகால் முன்புறமாக அகலமாகவும், பின்புறமாக ஒடுக்கமாகவும் காணப்படுவதனால் வெள்ள நீர் விரைவாக வழிந்து ஓட முடியாமல் உள்ளது.
இதன் காரணமாகவே கிராமத்துக்குள் வெள்ள நீர் சென்று வீடுகளுக்குள்ளும் செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகிறது. இப்பகுதியில் சிலர் மதில்களை கட்டி வைத்திருக்கிறார்கள். எனவே இவற்றை ஒழுங்கமைத்து வெள்ள நீர் ஓடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது மாத்திரம் இன்றி சுமார் 20 வருடமாக மக்கள் இங்கு வசிக்கிறார்கள். எனினும் அவர்களுக்கான காணிக்கான எந்தவித ஆவணங்களும் இதுவரை கிடைக்கவில்லை.
இதன் காரணமாக அவர்கள் வீடுகளுக்கு கூட காப்பீடு செய்ய முடியாத நிலைமையில் வெள்ள அபாயத்துக்குள் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கான காணி ஆவணங்களை வழங்குவதற்கு விரைந்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் (காணி), குறித்த பகுதியில் உள்ள குளம் தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக அவர்களுக்கு காணிக்கான ஆவணங்களை நடமாடும் சேவை ஊடாக விரைவில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய முடியும் என தெரிவித்தார்.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (28.11.2024) காலை பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்ப்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது,
குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியூதீன்,காதர் மஸ்தான், ம.ஜெகதீஸ்வரன், து.ரவிகரன்,செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம்,
மற்றும் அரச அதிபர் பி.எ.சரதசந்திர, பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், பொலிசார், இராணுவத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.