வவுனியாவில் போதைப் பொருள் விற்பனை செய்த ஒருவர் கைது!!

வவுனியா பொலிஸாரின் திடீர் சுற்றி வளைப்பில் வைரவ புளியங்குளம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் போதைப் பொருள் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து, விசேட பொலிஸ் குழு வவுனியா, வைரவ புளியங்குளம், புகையிரத வீதி ஒன்றில் தனியார் கல்வி நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்த சிறிய வெற்றிலை கடை ஒன்றினை சுற்றி வளைத்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தில் விற்பனைக்கு தயாராக இருந்த 140 கிராம் மாபா, ஒரு கிலோ மாபா கலந்த பாக்கு உள்ளிட்ட போதைப் பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்தை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டில் இலட்சக்கணக்கான விசாக்களை வழங்கவுள்ள ஐரோப்பிய நாடு!!

இந்த ஆண்டில் 1,65,000 வேலை விசாக்களை வழங்குவதற்கு இத்தாலி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கூடுதலாக 10,000 விசாக்களை பராமரிப்பு பணியாளர்களுக்காக ஒதுக்க இத்தாலி தீர்மானித்துள்ளதோடு பணியாளர்களுக்கான அதிக வாய்ப்புகள் இத்தாலியில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இத்தாலியில் தொழிலாளர் பற்றாக்குறை, முதியோர் அதிகரிப்பு, பிறப்பு வீதத்தில் குறைவு போன்ற காரணங்களால் வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை ஈர்ப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், கட்டிடக்கலை தொழிலாளர்கள், பொறியாளர்கள், உணவக பணியாளர்கள், சமையலர்கள், ஹோட்டல் ஊழியர்கள், மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு நிபுணர்கள், பயிர் உற்பத்தி மற்றும் கடற்றொழில் போன்ற துறைகளில் இத்தாலியில் வேலைவாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, சீசனல் அல்லாத வேலை விசா(Non-seasonal work visa) சீசனல் வேலை விசா(Seasonal Work Visa), பராமரிப்பு பணியாளர் விசா (Caregiver Visa), சுயதொழில் விசா (Self-Employment Visa) மற்றும் ‘EU Blue Card’ போன்ற விசா வகைகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கமைய, இத்தாலியில் உள்ள வேலை வழங்குநரின் அனுமதியை பெற்று இத்தாலி தூதரகத்தில் விண்ணப்பித்து விசாவினை பெற்றுக் கொள்ள முடியும்.

காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு!!

நாட்டில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிடப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மற்றும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவயில் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு வானில் நிகழப்போகும் அதிசயம் : வெற்றுக் கண்ணால் பார்க்க வாய்ப்பு!!

சூரிய மண்டலத்தில் உள்ள புதனைத் தவிர மற்ற அனைத்து கிரகங்களும் ஒரே கோட்டில் தெரியும் ஓர் அரிய நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி விஞ்ஞானி மற்றும் பொறியியலாளரான கிஹான் வீரசேகர, இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

சனி, வீனஸ், வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் வெறும் கண்களுக்கு தெரியும் என்றும், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றை, அவற்றின் மங்கலான தன்மை காரணமாக தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரிய நிகழ்வு, குறைந்தது ஒரு மாதத்திற்கு இரவு வானத்தில் தெரியும் என்று வீரசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, பெப்ரவரி இறுதிக்குள், புதனும் வானில் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், பெப்ரவரி 25 ஆம் திகதி, புதன் உட்பட சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் மாலை 7 மணிக்குப் பிறகு ஒரே கோட்டில் தென்படும் என்று விண்வெளி விஞ்ஞானி மற்றும் பொறியியலாளரான கிஹான் வீரசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக பெருந்தொகை நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

அதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளா்.

தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் : நீதிமன்றத்தில் வெளிப்பட்ட அதிரடி தகவல்!!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே 14 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

இதற்கிடையில், நிலுவையில் உள்ள ஒழுக்காற்று விசாரணை காரணமாக இராமநாதன் அர்ச்சுனா சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் சார்பாக ஆஜரான மூத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி மாயாதுன்னே கொரியா மற்றும் நீதிபதி மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு,

மனுதாரர் கோரியபடி அறிவிப்புகள் மற்றும் இடைக்கால நிவாரணம் வழங்குவதை பரிசீலிக்க மனுவை மே 14 ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைத்தது. பிரதிவாதிகள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் மேலும் கால அவகாசம் வழங்கியது.

இராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினரிலிருந்து தகுதி நீக்கம் செய்து அறிவிக்கும் குவோ வாரண்டோ ரிட் வகையிலான உத்தரவை பிறப்பிக்கக் கோரி சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

மனுதாரர் சார்பாக சட்டத்தரணி என்.கே.அசோக்பரன் மற்றும் ஷெனல் பெர்னாண்டோ ஆஜராகினர், துஷாரி ஜெயவர்தனாவின் அறிவுறுத்தலின் பேரில் மூத்த சட்டத்தரணி சேனானி தயாரத்ன இராமநாதன் அர்ச்சுனாவுக்காக ஆஜரானார்.

அர்ச்சுனா சுகாதார அமைச்சுடன் இணைக்கப்பட்ட ஒரு பொது அதிகாரி என்றும், எனவே, ஒரு பொது அதிகாரியாக, அவருக்கு அரசுடன் ஒப்பந்தம் இருப்பதாகவும் மனுதாரர் கூறினார்.

அரசியலமைப்பின் பிரிவு 91(1)(e) பொது ஒப்பந்தங்களில் ஏதேனும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுக்கிறது என்று மனுதாரர் கூறினார்.

அர்ச்சுனா சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் பதில் மருத்துவ அத்தியட்சகராக பணியாற்றினார் என்றும், பின்னர் பேராதனை போதனா மருத்துவமனைக்கு இணைக்கப்பட்டார் என்றும் மனுதாரர் மேலும் கூறினார்.

செப்டம்பர் 29, 2024 அன்று அல்லது அதற்கு முந்தைய திகதியில் அர்ச்சுனாவின் பேஸ்புக் சுயவிவரம், அப்போதைய சுகாதார அமைச்சக செயலாளரால் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பகிரங்கமாக வெளிப்படுத்தியதாக மனுதாரர் கூறினார்.

எனவே, அரசியலமைப்பின் பிரிவு 91(1)(d) மற்றும் 91(1)(e) ஆகியவற்றின் கீழ் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்று மனுதாரர் கூறினார்.

வவுனியாவில் தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அனுராதபுரம், நிக்கவரெட்டி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சத்துரங்க ஹேரத் என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. குறித்த பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் ஒருவர் நிலைதடுமாறி கீழே வீழ்ந்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த அவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் நேர்ந்த கொடூரம் : தங்க நகைக்காக கொல்லப்பட்ட பெண்!!

சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெருமதியான தங்க நகையை பறித்து கொள்வதற்காக பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் இரத்தினபுரியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,

இரத்தினபுரி – வெவள்வத்த பொலிஸ் பிரிவில் கலபட பகுதியில் கருக பட்டை தோட்டத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கடந்த 31 திகதி மீட்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி பன்னில, நிரி எல்ல பகுதியை வசிப்பிடமாக கொண்ட 58 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அவர்களது மகனுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பின் கலபட பகுதிக்கு வந்து தனியாருக்கு சொந்தமான ஓர் காணியில் தங்கியிருந்து அவரது தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

நாளாந்தம் மாலை வேளையில் அந்த பெண்ணின் கணவர் கலபட சந்தியில் உள்ள வியாபர நிலையங்களுக்கு சென்று வருவார். கடந்த 30 ஆம் திகதி வழமையை போல் கலபட பகுதியில் உள்ள வியாபார நிலையத்திற்கு சென்று சில பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு திரும்பி வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த கணவர், நீராட தயாராகி கொண்டிருந்த நிலையில் அவரது மனைவியை காணவில்லை என்று அத்தோட்ட காவலாளியின் உதவியுடன் வீட்டை சுற்றி தேடியுள்ளார்.

வீட்டை சுற்றி தேடி கிடைக்காததால் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்த பின்னர் வெவள்வத்த பொலிஸ் நிலையத்திற்கு சென்று தெரிவித்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள், அயலவர்களின் உதவியுடன் வீட்டு சுற்று வட்டாரத்தில் தேடி பார்த்த போது, வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள கருக பட்டை தோட்டத்தில் இருந்து குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

குறித்த பெண்ணின் சடலத்தை, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியும் இரத்தினபுரி நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதுடன், சடலம் பிரேத ப‌ரிசோதனை‌க்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

பிரேத பரிசோதனைகளில் குறித்த பெண் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட வெவள்வத்த பொலிஸார் அதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பணியாற்றிய நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க நகையை பறித்து கொள்வதற்காக குறித்த நபர் கொலை செய்துள்ளமை விசாரணையின்போது தெரியவந்துள்ளது. சந்தேக நபர் இறக்குவானை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

சந்தேக நபர் இறக்குவானை பகுதியில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட ஓர் குற்றவாளி என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை இன்று ஞாயிற்றுக்கிழமை (02) இரத்தினபுரி நீதிமன்ற நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தவுள்ளனர்.

வவுனியாவில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான முன்பள்ளி தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!!

கல்வி அபிவிருத்தி குழுமத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான முன்பள்ளி தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வொன்று நேற்று (01.02.2025) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட மேலதில அரசாங்க அதிபர் திரு.தி.திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கருத்தரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

அத்துடன் கல்வி அபிவிருத்தி குழுமத்தின் பிரதிநிதிகள், வவுனியா தெற்கு உதவிக் கல்விப்பணிப்பாளர், வவுனியா வடக்கு உதவிக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், முன்பள்ளி இணைப்பாளர்கள் உள்ளிட்ட வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா!!

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் மா.இளஞ்செழியன் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில், வவுனியா ஈரப்பெரியகும் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று இந்நிகழ்வு (01.02) இடம்பெற்றது.

முன்னதாக ஏ9 பிரதான வீதியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து நீதிபதி மா.இளஞ்செழியன் வரவேற்கப்பட்டதுடன், அவரது 27 வருட நீதித் துறை சேவையை பாராட்டி வடக்கு – கிழக்கு பகுதிகளில் இருந்து வருகை தந்த மேல் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற, நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், வடக்கு – கிழக்கைச் சேர்ந்த சட்டத்தரணிகள் எனப் பலரும் அவரது சேவையை பாராட்டி கௌரவிப்புக்களை வழங்கியிருந்தனர்.

நீதித்துறையில் 27 வருடத்தை பூர்த்தி செய்த முதல் தமிழ நீதிபதியாக கடமையாற்றிய மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் அரசங்கத்தின் இழுத்தடிப்புகளாலும், கால தாமங்களாலும் அவர் ஓய்வு நிலைக்கு செல்கின்றார். இருப்பினும் அந்த பதவி நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனப் பலரும் இதன் போது கருத்து தெரிவித்தனர்.

திருகோணமலையில் வான் விபத்தில் ஒருவர் பலி!!

கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்றையதினம் (01.02.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி குறித்த வானின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமானவர்களுக்கான உலக அழகு ராணி போட்டியில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!!

அமெரிக்காவின் லொஸ் வேகாஸில் நடைபெற்ற மிஸஸ் வேர்ல்ட் போட்டியில் இலங்கையின் இசாடி அமந்தா இரண்டாவது வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் ட்சேகோ கேலே மிஸஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றுள்ளார். அதேநேரம் தாய்லாந்தின் ப்ளாய் பான்பெர்ம் மூன்றாவது வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக, கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமண்டா மிஸஸ் ஸ்ரீலங்கா பட்டத்தை வென்றிருந்தார்.

குற்றச்சாட்டு

இதற்கிடையில், அமந்தா மற்றும் தேசிய அமைப்பாளர் சந்திமல் ஜெயசிங்க ஆகியோர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடவுச்சீட்டுக்களை பெறுவதிலும், தனது ஆடைகளை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்வதிலும் சிரமங்களை எதிர்கொண்டதாக சந்திமல் ஜெயசிங்க கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திடமிருந்து ஆதரவு கிடைத்திருந்தால், இலங்கை பட்டத்தை வென்றிருக்க முடியும் என்று இசாடி அமந்தா தெரிவித்துள்ளார். இந்தநிலையில், தமது முயற்சிக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் நண்பர்கள் உதவியதாக சந்திமல் ஜெயசிங்க கூறியுள்ளார்.

வவுனியா இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!!

வவுனியா தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடித்து வழக்கு விசாரணையை வவுனியா நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர்.

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

மேலும், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றில் நேற்று(30) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மேல் நீதிமன்றில் பிணை கோரி பிணை மனு விண்ணப்பித்துள்ளார்.

அதன் வழக்கு விசாரணை வரவுள்ளதால் விளக்கமறியலை நீடித்து வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

தென்னிலங்கையில் ஒரே நேரத்தில் கொலை செய்யப்பட்ட மூவர் : அதிரடியாக களமிறங்கிய பொலிஸார்!!

காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக ஏழு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் இடம்பெற்ற, துப்பாக்கிச் சூட்டில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேகநபர்களால் சுடப்பட்டதில், விடுதி ஒன்றின் உரிமையாளர் உட்பட மூவர் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்கள் என்பதுடன், மற்றையவரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில் புதிய பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு!!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை (02) முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

யாழ்.கடற்பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!!

யாழ்ப்பாணம்  வடமராட்சி, கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில், வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் நேற்று (31) மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.