மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட இளம் ஆசிரியை : இரத்தக் கறையுடன் தாய் கைது!!

மகளை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரின் உயிரிழந்த பெண்ணின் தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அதற்கமைய கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை தாய் மற்றும் அவரது 36 வயது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சொத்து தகராறு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட எழுதிய கடிதம் பொலிஸாரினால் மீட்கப்பட்ட நிலையில், அதில் இரத்தக்கறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்தக் கடிதத்தில், மகள் தனக்கு தொந்தரவாக இருந்ததாகவும், அதிகப்படியான பேராசை காரணமாக 14 ஆண்டுகளாக சொத்துக்காக சண்டையிட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொலை இடம்பெற்ற நாளில் தனது கழுத்தை நெரிக்க மகள் வந்ததால் தான் இந்த கொலையை செய்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும்

கைது செய்யப்பட்ட 76 வயதான தாய் மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்க்க முயற்சித்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதல் இணைப்பு : மாத்தறை, கம்புருபிட்டிய பகுதியில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய திருமணமாகாத பெண் என்றும், அவர் ஒரு ஆசிரியை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அறையில் இருந்து கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் இந்த கொலையை தான் தான் செய்ததாக, பெண்ணின் தாயின் கையெழுத்தில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான சகோதரனுக்கும், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தும் வகையில் அந்த கடிதம் எழுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குளிக்க சென்ற 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

திருகோணமலை கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை குளிக்கச் சென்று காணாமல்போன 4 இளைஞர்களில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு இளைஞன் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று (01.02) காலை அவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

சீனக்குடா தானியகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கையில் கோர விபத்து : இருவர் பலி : 25 பேர் காயம்!!

ஹபரணை, கல்வாங்குவ பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை-ஹபரணை வீதியில் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மேலும் 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது பேருந்தில் 50 பயணிகள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பூமியில் மோதப்போகும் சிறுகோள் : எச்சரிக்கை விடுத்துள்ள வானிலையாளர்கள்!!

சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வருவதாகவும் அது சில ஆண்டுகளில் பூமியுடன் மோதும் என்று வானிலையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குறித்த சிறுகோள் 2024 லுசு4 என்று அழைக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 200 அடி விண்வெளிப் பாறையான இது, 2032 கிறிஸ்மஸிற்கு முன்னதாக பூமியுடன் மோதக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதன் மோதல், பூமியில் கணிசமான அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கேடலினா ஸ்கை சேர்வே மையத்தை சேர்ந்த டேவிட் ரங்கின் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த சிறுகோளான 2024 லுசு4 பூமிக்கு வரும் நிகழ்வை தொடர்ந்து அவதானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோள் 40-100 மீட்டர் அகலம் கொண்டதாக கருதப்படுகிறது. சிலவேளைகளில் அது இந்த அளவை விட பெரிதாகவும் அமையலாம் என்று அவர் கணித்துள்ளார்.

தற்போதைய நிலையில் அது 301 மைல் உயரத்தில் பூமியைத் தாண்டிச் செல்வதைக் காணமுடிவதாகவும் வானிலையாளர் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், 2024 லுசு4 என்ற இந்தக் கோள், தற்போது பூமியிலிருந்து சுமார் 27 மில்லியன் மைல்கள் தொலைவில் விண்வெளியில் பயணித்து வருகிறது. அத்துடன், இது மணிக்கு 13.5 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கிறது என்று அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபரில் இலங்கையில் மாபெரும் பண்டிகை : யாழில் வைத்து ஜனாதிபதி கூறிய செய்தி!!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனைத்து இலங்கையர்களும் கொண்டாடும் இலங்கையர்களுக்கான பண்டிகையை அறிமுகப்படுத்த நான் விரும்புகின்றேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித் துறையில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடக்கு – கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கு உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களும் இணைந்து முதலாவதாக ஆட்சிக்குக் கொண்டு வந்த அரசாங்கம் எங்களுடையது.

பல தசாப்தங்களாக நாட்டில், வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என்று தனித்தனியான அரசியல் நிலை காணப்பட்டது. கடந்த அரசாங்கங்கள் நாட்டு மக்களை தனித்தனியாக பிரித்து கையாண்டனர்.

அது எந்தளவு என்றால், ஒரு யுத்தமே நாட்டில் உருவாகும் அளவுக்கு பிரித்தாளும் கொள்கையை கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்டிருந்தன. பிரித்தாளும் அரசாங்கங்கள் எப்போதும் இதுபோன்று பொதுவெளியில் மக்களை சந்திப்பதில்லை. இனி ஒருநாளும் பிரிந்து செயற்படாது நாங்கள் அனைவரும் ஒன்றாகவே செயற்படவேண்டும்.

தனித்தனி மதமாக இருந்து விழாக்களைக் கொண்டாடாமல் நாங்கள் இலங்கையர்களாக இணைந்து ஒரு விழாவை கொண்டாடுவோம். வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக நான் புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.

நாங்கள் அனைவரும் இலங்கையர்களாக ஒரு விழாவை இணைந்து கொண்டாட உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். ஒக்டோபர் மாதம் எங்களுடைய கலை, கலாசாரங்களை, பண்பாடுகளை சேர்த்து பாரம்பரியமாக ஒரு விழாவை நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அனைவரும் இணைந்து இந்த விழாவைக் கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

யாழில் அர்ச்சுனாவின் பேச்சை இடைநிறுத்திய ஜனாதிபதி அநுர:: சபையில் சலசலப்பு!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இடையில் அவரது உரையை மறித்து ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

வடக்கு – கிழக்கிலே வைத்தியர்கள் நியமிக்கப்படும் போது, அவர்களின் தகைமை அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும். அநேகமாக சிங்களவர்களே நியமிக்கப்படுகின்றார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்துதான் பின்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வந்துள்ளேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்ததாகவும் அர்ச்சுனா இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், மேலும் வடக்கு பகுதிகளில் உள்ள வைத்தியசாலை பிரச்சினை மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் மிக நீண்ட நேரம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, இடைமறித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விளக்கமளித்துள்ளார். இதன்போது, அர்ச்சுனாவின் உரை இடைமறிக்கப்பட்ட நிலையில், சபையில் சிறு நகையொலியுடன் சலசலப்பு ஏற்பட்டது.

வவுனியாவில் புகையிரதம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் காயம்!!

வவுனியாவில் ரயிலில் மோதி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (31) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில் வவுனியா, அவுசதப்பிட்டிய பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 44 வயதுடைய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். இதில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னாள் காதலனால் பலியான இளம் யுவதி : வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!!

இரத்தினபுரியின் எலபாத பகுதியில் களனி பல்கலைக்கழக பட்டதாரியான 29 வயதான சந்திமா ஹர்ஷனி குணரத்ன, தனது முன்னாள் காதலனால் படுகொலை செய்யப்பட்ட துயர சம்பவம் தொடபில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கொலை சம்பவம் ஜனவரி 29, ஆம் திகதி அவரது வீட்டில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரத்தினபுரியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஓரு அதிகாரியாகப் பணிபுரிந்த சந்திமா, சம்பவம் நடந்த அன்று காலையில் தனது தாயாருடன் சமைத்துக்கொண்டிருந்துள்ளார்.

பொலிஸ் விசாரணைகளின்படி, தாய் தற்காலிகமாக சமையலறையை விட்டு வெளியேறியபோது சந்தேக நபர் வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்து , சந்திமாவின் பின்னால் நெருங்கி, மீன் கத்தியால் அவள் தொண்டையை அறுத்து, கொன்றுள்ளார்.

சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் இரவு சந்தேக நபர் தெல்லபட பகுதியில் உள்ள மூடப்பட்ட பள்ளி கட்டிடத்தில் தங்கியிருந்து அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்துள்ளமை காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் ஹர்ஷனியின் வீட்டிற்கு வந்து போயுள்ளார்.

இந்நிலையில் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கயான் என்ற ஆசிரியர் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இரத்தினபுரிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் டியுசன் வகுப்புகளை நடத்தி வந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

கொலைக்குப் பிறகு, சந்தேக நபர் விஷம் குடித்துவிட்டு, ஒரு வயலில் கிடந்த பிரதேசவாசிகள் இரத்தினபுரி பொது மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில் , நீதிமன்ற உத்தரவின்படி சிறைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இறந்த பெண்ணின் தந்தை, கே.குணரத்ன சந்தேக நபருடனான தனது உறவை தனது மகள் கைவிட்டதாக கூறுகிறார். சந்தேக நபர் தனது மகளிடம் உறவை மீண்டும் தொடங்க பல சந்தர்ப்பங்களில் கேட்டிருந்தார்.

எனினும் சந்தேக நபரின் நடத்தை சரியில்லை என்பதால் மகள் மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தொடங்கிய காதல் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் போனதாலும்,

பாதிக்கப்பட்டவருக்கு வேறு உறவுகள் இருந்ததாக சந்தேகம் எழுந்ததாலும் இந்தக் கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஊறவைத்த அரிசியை சாப்பிட்டதால் பள்ளி மாணவி மூச்சுத்திணறி பலி!!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆதனூரில் வசித்து வருபவர் ராமசாமி . இவரது மகள் மாலதி. இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை எப்போதும் வென்றான் சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

முதலுதவி செய்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

அங்கு சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் அதிகமாக அரிசி சாப்பிட்டதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

12 வயதுடைய சிறுமி நீரில் ஊறவைத்த அரிசிகளை தொடர்ந்து சாப்பிட்டதால், மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படும் விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலதி அங்குள்ள அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி எப்போதும் அரிசியை நீரில் ஊறவைத்து சாப்பிடுவது வழக்கம் என தெரிகிறது. அதே போலவே சம்பவ நாளிலும் சிறுமி வீட்டில் இருந்தபோது,

அதிகமாக அரிசியை ஊறவைத்து சாப்பிட்டதாக தெரியவருகிறது. இதனால் வீட்டில் மூச்சுத்திணறி இருக்கிறார். இதனைக்கண்டு பயந்துபோன பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.

எப்போதும் வென்றான் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லை . இதனால் சிறுமியை அவசர ஊர்தியில் தூத்துக்குடிக்கு அழைத்துச்செல்ல முற்பட்டுள்ளனர்.

ஆனால், சிறுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து இருக்கிறார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

முதற்கட்டமாக உறவினர்கள் கூறும்போது, சிறுமி எப்போதும் அரிசியை நீரில் ஊறவைத்து சாப்பிடுவார் எனத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முதலாமாண்டு மாணவனை திருமணம் செய்த பேராசிரியர்!!

மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள ஹரிங்காட்டாவில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (MAKAUT) அமைந்துள்ளது. உளவியல் துறையில் பணிபுரியும் ஒரு பேராசிரியரும்,

அதே துறையின் முதலாமாண்டு மாணவரும் மணமகன் மற்றும் மணமகள் போல உடையணிந்து வகுப்பறையில் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பெங்காலி முறைப்படி திருமணம் செய்து கொள்வதையும், மாணவர் ஆசிரியரின் நெற்றியில் குங்குமம் பூசுவதையும் காட்டுகிறது. இது சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது,

மேலும் இந்த விஷயத்தை விசாரிக்க பல்கலைக்கழக அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர்.

இது தொடர்பாக, பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகையில், “சம்பந்தப்பட்ட பேராசிரியர் இது உண்மையான திருமணம் அல்ல என்றும், இது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஒரு நிகழ்வு என்றும் கூறியுள்ளார்.

இது வேண்டுமென்றே தவறாக சித்தரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். எனவே, இந்த விஷயத்தை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

“விசாரணையின் முடிவு வரும் வரை சம்பந்தப்பட்ட பேராசிரியரையும் மாணவரையும் விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம்.

உண்மையில், பேராசிரியரின் நடவடிக்கைகள் முற்றிலும் கல்விசார்ந்தவையா அல்லது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை தேவையா என்பது விசாரணைக்குப் பிறகு தான் தெரியும்” என்று தெரிவித்துள்ளனர்.

அறிவுரை கூறியவரைக் கொலை செய்த மாணவன் : தாயும் கைது!!!

நன்றாகப் படிக்குமாறு அறிவுரைக் கூறியவரை அரிவாளால் வெட்டிக் கொலைச் செய்ததாக 11ம் வகுப்பு படித்து வந்த மாணவரைப் போலீசார் கைதுச் செய்துள்ள நிலையில், கொலைக் குற்றத்தை மறைத்ததற்காக மாணவரின் தாயாரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம், மதுரையான்காடு பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்தாயி(88). இவர் வீட்டில் தனியே வசித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி 27ம் தேதி தலை வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

இது குறித்து விசாரணை நடத்தி வந்த ஆட்டையாம்பட்டி போலீசா, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினா்.

இதில், மூதாட்டியின் வீட்டருகே வசித்து வந்த மதுரையைச் சோ்ந்த பாண்டி மனைவி கிருஷ்ணபிரியா (38), அவரது மகன் ஆகிய இருவரும் அவசர அவசரமாக பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து காரில் வெளியே செல்வது சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து கிருஷ்ணபிரியாவை காவல் நிலையத்திற்கு அழைத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் மூதாட்டியை தனது மகன் தான் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தாா்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “கணவா் இறந்த நிலையில் கிருஷ்ணபிரியா, மூதாட்டியின் வீட்டருகே தனது மகனுடன் தங்கி அரியானூரில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார்.

சம்பவத்தன்று மூதாட்டி, கிருஷ்ணபிரியாவின் மகனிடம் தந்தை இல்லாததால் நன்றாகப் படித்து தாய்க்கு உதவுமாறு அறிவுரை கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மாணவா், மூதாட்டி தூங்கும் போது அரிவாளால் அவரது தலையை வெட்டிவிட்டு அங்கிருந்து தனது வீட்டிற்கு வந்துள்ளாா்.

ஹோட்டல் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வந்த கிருஷ்ணபிரியா, மகனின் சட்டையில் இருந்த ரத்தக் கரையைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னர் இது குறித்து மகனிடம் தொடர்ந்து விசாரிக்கையில், மூதாட்டியைக் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளாா்.

இதனையடுத்து அங்கிருந்து இருவரும் காரில் ஏறி புதுவையில் உள்ள அவா்களது உறவினா் வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளனர். பின்னா் அவா்கள் விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட நிலையில் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது எனப் போலீசா தெரிவித்தனா்.

கொலை செய்த மாணவா், கொலையை மறைத்த குற்றத்திற்காக அவரது தாயார் கிருஷ்ணபிரியா ஆகிய இருவரையும் கைது செய்த ஆட்டையாம்பட்டி போலீசார், இருவரையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் மாணவரை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலும், கிருஷ்ணபிரியாவை சேலம் பெண்கள் சிறையிலும் அடைத்தனா்.

2032இல் பூமிக்கு பேராபத்து : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

2032 ஆம் ஆண்டில் 024 YR4 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அஸ்டிராயிட் டெரெஸ்டிரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம் (ATLAS) விஞ்ஞானிகள், பூமியிலிருந்து சுமார் 8,29,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து சிறுகோள் பூமியை நோக்கி வருவதாக 2024ஆம் ஆண்டு கண்டறிந்தனர்.

இந்த சிறுகோள் தற்போது பூமியிலிருந்து 27 மில்லியன் மைல்கள் தொலைவில் சூரியக் குடும்பத்தைச் சுற்றி நகர்ந்துகொண்டிருக்கிறது.

சுமார் 196 அடி விட்டம் கொண்ட இந்த 2024 YR4 சிறுகோள் 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்க 1.2 சதவீதம் (1-in-83) வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

2028 ஆம் ஆண்டில் இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 2024 YR4 சிறுகோள் பூமியைத் தாக்கினால், பூமியின் மீது சுமார் 8 மெகா டன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்று நாசா கணித்துள்ளது.

இது 1945ல் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு ஆற்றலை விட 500 மடங்கு அதிகமாகும். சிறுகோளின் பாதையை நகர்த்த விஞ்ஞானிகள் விண்வெளியில் வைத்து மோதலை ஏற்படுத்தும் திட்டத்தைப் பரிசீலித்து வருகின்றனர்.

இந்நிலையில் , 2024 YR4 சிறுகோளைக் கவனமாகக் கண்காணித்து வரும் ஆய்வாளர்கள், 2032 இல் அதன் தாக்கம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்!!

இலங்கைக்கு அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையான அரிசி இருப்புகளைப் பெறமுடியும் என அண்மையில் நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்காலத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியிடமிருந்து நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்படவுள்ள 5 பில்லியன் ரூபாய் நிதி குறித்து

வினவிய குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா , அந்த நிதியை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான திட்டமொன்றின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். இதன்படி, நெல் கொள்முதல் செயல்முறை கடுமையான மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கும்,

செயல்பாட்டில் ஏற்படக்கூடிய முறைகேடுகளைத் தடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

இளம் ஆசிரியை கொலையில் சகோதரன் கைது : தாயாரால் பொலிஸார் குழப்பம்!!

கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (31) அதிகாலை 3.30 மணியளவில் திருமணமாகாத இளம் ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பெண்ணின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர். தற்போதைய விசாரணைகளில் இந்தக் கொலை கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 34 வயதுடைய திருமணமாகாத பெண் என்றும், அவர் ஒரு ஆசிரியை என்றும் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட நபர் தொடர்பில் இன்னும் தகவல்கள் வௌியாகாத நிலையில், கொலைக்கான சந்தேகத்தின் பேரில் அவரது மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார், தானே இந்தக் கொலையை செய்ததாகக் கூறி பொலிஸாருக்கும், சந்தேகநபரான மகனுக்கும் எழுதிய கடிதமொன்றையும் பொலிஸார் சடலத்திற்கு அருகிலிருந்த மேசையிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் போதைப்பொருளுடன் வயோதிபப் பெண் கைது!!

வவுனியாவில் போதைப்பொருளுடன் வயோதிப பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரினால் செட்டிகுளம் பகுதியில் வைத்து 51 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 1740 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 2380 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையினை பூவரசங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த பூவரசங்குளம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (31) வௌியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இதேவேளை, ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்த வானிலை எதிர்பார்க்கப்படலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.