அதிகரிக்கும் மழைவீழ்ச்சி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

நாட்டில், பல பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, ஊவா, தென், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் தெற்குப் பகுதியில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மரண வீட்டுக்கு சென்ற பேருந்துடன் மற்றுமொரு பேருந்து மோதி விபத்து : 16 பேர் காயம்!!

ஹபரணை – மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (29) காலை 11:00 மணியளவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் விபத்தில் சிக்கியுள்ளன.

விபத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த 12 பேரும், தனியார் பேருந்தில் பயணித்த 4 பேரும் காயமடைந்து பொலன்னறுவை பொது மருத்துவமனையிலும், ஹபரணை பிரேதச மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு பேருந்துகளின் சாரதிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்கவிலிருந்து சிறிபுர பகுதியில் இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளான தெரிவித்த பொலிஸார் , தனியார் பேருந்து சாரதியின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

யாழில் மின்வாசிப்பாளர் போல கொள்ளை : பெண்களே அவதானம்!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி அரசடி வீதி பகுதியிலுள்ள வீடொன்றிலுள் நேற்று (28) காலை பெண் ஒருவரிடமிருந்து ஒன்றரைப் பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் காலை 10 மணியளவில் சென்ற இனந்தெரியாத ஒருவர் சில வீடுகளுக்கு சென்று மின்வாசிப்பாளர் போலவும்,

முகவரி ஒன்றினை விசாரிப்பது போன்று விசாரித்துவிட்டு, இறுதியாக பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்த வீட்டினுள் நுழைந்து தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாடொன்றில் தப்பியோடிய இலங்கையர்களால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!!

இலங்கையில் இருந்து வேலைவாய்ப்புக்காக இஸ்ரேல் சென்ற பலர் தப்பியோடியுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்களின் ஆதரவுடன் விவசாயத் துறையில் பணியாற்றுவதற்காக இஸ்ரேல் சென்றவர்களில் சுமார் 80 சதவீதமானவர்கள் தங்கள் பணியிடங்களை விட்டு தப்பி ஓடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய துறைகளில் வேலை செய்ய முடியாமல் தங்கள் பணியிடங்களை விட்டு சென்று வேறு வேலைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் அரசு விவசாயத் துறையில் அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை இலங்கைக்கு வழங்கியிருந்தது.

எனினும் ஊழல் அரசியல்வாதிகள் பொருத்தமற்றவர்களை அதற்கு தெரிவு செய்து, வேலைவாய்ப்பு துறையை சீரழித்துள்ளதாக கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் சார்புகள் இன்றி, சரியான நபருக்கு சரியான பதவியை வழங்குவதே தற்போதைய அரசாங்க கொள்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலியல் விவசாயத்துறையில் அதிகளவான வேலைவாய்ப்புகள் இலங்கையர்களுக்கு காத்திருக்கின்றன.

இந்நிலையில் அவ்வாறு வேலைகளுக்கு செல்வோர் பொறுப்புடன் செயற்படுவதுடன், அங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டாம் என பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கடன் தொல்லை.. ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, 15 வயது மகளுக்கு நேர்ந்த சோகம்!!

சேலம் மாவட்டம் அரிசி பாளையம், முத்தையாளர் தெருவில் வசித்து வருபவர் 45 வயது பால்ராஜ். இவர் வெள்ளி தொழில் புரிந்து வருகிறார். இவரது மனைவி ரேகா, 15 வயது மகள் ஜனனி.

இவர் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்றதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாகவே இவர் செய்து வந்த வெள்ளித் தொழில் நலிவடைந்ததால் சரிவர கடன் செலுத்த இயலவில்லை. அதே நேரத்தில் வங்கியில் இருந்து கடனைத் திருப்பி அடைக்குமாறு தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக மன உளைச்சல் அடைந்து மூவரும் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அப்பா என்னை மன்னிச்சிடுங்க.. கடிதம் எழுதிவைத்துவிட்டு இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலத்தில் சாமுண்டேஸ்வரி நகரில் வசித்து வருபவர் பீட்டர் கொல்லப்பள்ளி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

இருப்பினும், குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.

அந்த வழக்கில் இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். இதனால் பீட்டர் கடும் மன உளச்சலில் இருந்ததாக தெரிகிறது. பீட்டர் தனது சகோதரர் ஜோயல் என்பவருடன் தங்கி வந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று ஜோயல், ஞாயிறுக்கிழமை தேவாலயத்திற்கு சென்றுள்ளார். பிரார்த்தனை முடிந்து வீடு திரும்பியபோது, தனது சகோதரர் பீட்டர் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அவரது சடலத்தின் அருகில் கடிதம் ஒன்றும் இருந்தது. தனது மரணத்திற்கு காரணம் எனது மனைவியின் கொடுமையே என குறிப்பிட்டு இருந்தது.

இந்த கடிதத்தில் தனக்கும் தனது மனைவிக்கும் கடந்த 3 மாதங்களாக குடும்பத்தகராறு இருப்பதாக பீட்டர் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில், “அப்பா, மன்னிக்கவும். என் மனைவி பிங்கி என்னை துன்புறுத்துகிறாள்.

அவள் என் மரணத்தை விரும்புகிறாள். என் மனைவியின் சித்திரவதையால் நான் உயிரிழந்து கொண்டிருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

அண்ணா தயவுசெய்து பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.உயிரிழந்தவர் 3 மாதங்களுக்கு முன்பு வேலை இழந்ததால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரித்ததாக கூறுகின்றனர்.

இதுகுறித்து ஜோயல் “எனது சகோதரருக்கு நீதி கிடைக்க வேண்டும், பெண்ணை கைது செய்ய வேண்டும், என் சகோதரனைப் போல யாரும் பாதிக்கப்படக்கூடாது” எனக் கூறினார்.

இன்ஸ்டாவால் விபரீதம் : இளைஞன் மீது ஆசையால் பெண் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலத்தில் வசித்து வருபவர் விஜய் . இன்ஸ்டாகிராம் மூலமாக ஸ்வேதா (23) என்ற பெண் அறிமுகமானவர். இதில் ஸ்வேதா திருமணமாகி சமீபத்தில் மனைவியை பிரிந்தவர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்த விஜய் மற்றும் ஸ்வேதா இருவரும் நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தனர். ஆனால் திடீரென ஸ்வேதா கடந்த இரு நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதிய தற்கொலை கடிதத்தில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை நான் மட்டும்தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு நான் செய்து தீவிர விசாரணை நடத்தியதில் விஜய் முதலில் திருமணம் செய்து கொள்வதாக உறுதி கொடுத்துவிட்டு பின்வாங்கினார்.

இதன் காரணமாகத்தான் ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் இயேசுவின் சிலுவையில் இருந்து கசிந்த நீர் : ஆச்சர்யத்தில் மக்கள்!!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் இயேசுவின் சிலுவையில் இருந்து இன்று(28) நீர் கசிந்த சம்பவம் பிரதேசவாசிகளை ஆச்சர்யத்திகுள்ளாக்கியுள்ளது.

சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இயேசுவின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் இயேசுவின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றுள்ளனர்.

சகோதர மதத்தினர் மற்றும் இராணுவத்தினர், பொலிசார், பொது மக்கள் என பலர் இந்த காட்சியை பார்வையிட்டதோடு மட்டுமன்றி புகைப்படங்களையும் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தேவாலய பங்குத்தந்தையால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியுமென நிர்வாகத்தினர் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

 

அந்தாட்டிக்காவின் வின்சன் மலையை ஏறிய முதல் இலங்கையர்!!

அந்தாட்டிக்காவின் மிக உயரமான மலையான வின்சன் மலையை ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை ஜோஹன் பீரிஸ் பெற்றுள்ளார்.

4,892 மீற்றர் உயரம் கொண்ட குறித்த மலையில் ஏறி அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

இதேவேளை, 2018ஆம் ஆண்டில், உலகின் மிக உயரமான மலைத் தொடரான எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய இரண்டாவது இலங்கையர் என்ற பெருமையை ஜோஹன் பீரிஸ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வேலை வாய்ப்புக்காக காத்திருந்த இளைஞன் : தகராறில் பறிபோன உயிர்!!

அவிசாவளை வித்தியாலயம் மாவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நண்பர்கள் தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் சூரியகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் என பொலிஸார் கூறியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞன் வேலை வாய்ப்பு காரணமாக இரண்டு மாத காலமாக குறித்த விடுதியில் தற்காலிகமாக தங்கியிருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞனுக்கும் விடுதியில் தங்கியிருந்த ஏனைய நபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தாகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதீத வேகம் : லண்டன் விபத்தில் இலங்கைத் தமிழர் உயிரிழப்பு!!

லண்டன் நோத்ஹால்ட்டில் (NORTHOLT) பகுதியில் இடம்பெற்றா விபத்தில் 47 வயதான இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரை வேகமாக ஓட்டிச் சென்றவேளை ரைசிலிப (Ruislip Road) வீதியில் வைத்து பொலிசார் மறிக்க முற்பட்டவேளை காரில் இருந்தவர்களை காரை நிறுத்தாமல் படுவேகமாக சென்றதாக கூறப்படுகின்றது.

பொலிஸார் காரை துரத்திச்சென்ற நிலையில் கார் எதிரே வந்த கார் மீது(FORD FOCUS) மோதி விபத்துள்ளானதாக கூறப்படுகின்றது.

காரில் பயணித்த 4 இளைஞர்களில், பின் சீட்டில் இருந்த 2 இளைஞர்கள் காரை விட்டு இறங்கி ஓடித் தப்பிவிட்டதாகவும் முன்னால் அமர்ந்திருந்த இளைஞர் மற்றும் காரை ஓட்டிய சாரதியை மட்டுமே பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

கைதானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காரில் சென்ற இலங்கைதமிழர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

நாட்டில், பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இளம் தம்பதி : சிறுமியை கட்டி வைத்து கொள்ளை!!

கம்பஹாவில் வீடொன்றுக்குள் புகுந்து பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எண்டேரமுல்ல, பாதிலியாத்துடுய பகுதியில் நேற்று இரவு வீடொன்றில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பல வீடுகளில் கொள்ளையிட்ட இளம் தம்பதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபருக்கு 21 வயது எனவும் பெண் சந்தேக நபருக்கு 20 வயது எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் களனி பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் வெளியே சென்றிருந்த போது அவர்களின் மகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

இதன்போது, சந்தேக நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து, மகளின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்து, அவரை மிரட்டி, கயிற்றால் கட்டி வைத்தது விட்டு வீட்டிலிருந்து தங்க நகைகளைத் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் திருட்டு இடம்பெற்ற சில மணித்தியாலங்களுக்கு தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியிடம் திருடப்பட்ட பல தங்க நகைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவசரப்பட்டு தேங்காய்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம் : அரசாங்கம் அறிவிப்பு!!

நுகர்வோர், அவசரப்பட்டு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,”தேங்காய் தட்டுப்பாடு என்பதற்காக கலவரமடைந்து அவசரப்பட்டு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டாம். தேங்காய்களின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் என எவராலும் எதிர்வு கூற முடியாது.

அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தோட்ட நிறுவனங்கள் ஊடாகவும், சதொச ஊடாகவும் தேங்காய்களை விநியோகித்துக் கொண்டே இருக்கின்றோம். எவ்வாறாயினும் நாம் இதனை முகாமை செய்து கொண்டு பயணிக்கின்றோம் என்பது உண்மை. சில துறைகளில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

எனினும் அரசாங்கம் அவற்றுக்கான முழுமையான முயற்சியுடன் தலையிட்டு வருகிறது. இவை பருவ கால பிரச்சினைகளாகும். அவற்றுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம்.

இதேவேளை, அரிசி விலை தொடர்பில் எவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும் கட்டுப்பாட்டு விலையை நீக்குவதில்லை என்பதில் அரசாங்கம் ஸ்திரமாக உள்ளது.

நாட்டரிசியை விட சிவப்பு அரிசிக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும்.

ஆனால் நாட்டரிசி பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. 70 மெட்ரிக் தொன் தட்டுப்பாடு காணப்பட்ட நிலையில் அதனை விட அதிகமாகவே அரிசி இறக்குமதி செய்யப்பட்டது.

இம்முறை 7 இலட்சம் மெட்ரிக் தொன் அறுவடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு படிப்படியாக தீர்வு வழங்கப்பட்டு வருகிறது.

பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும், விலை அதிகரிக்கும் வேகம் குறைவடைந்துள்ளது. இதுவே பணவீக்க வீழ்ச்சியாகும்.

இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு எவரேனும் மோசடிகளில் ஈடுபட்டால் நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் : ஆண் படுகொலை : ஆபத்தான நிலையில் பெண்!!

புத்தளம், மாதம்பே பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மாதம்பே பழைய நகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். காயமடைந்த இருவரையும் உடனடியாக சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் ஆண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாதம்பே பகுதியில் வசித்து வந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

காயமடைந்த பெண்ணின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாகவும், தகாத உறவே கொலைக்குக் காரணம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையை செய்த சந்தேக நபர் நேற்று இரவு மாதம்பே பொலிஸ் பிரிவின் பட்டியகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பட்டியகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போன பிரான்ஸ் பிரஜை யாழில் கண்டுபிடிப்பு!!

அநுராதபுரத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் காணாமல் போன நிலையில் நேற்றையதினம்(28.01.2025) அவர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மூன்று சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த நிலையில் அவர்களில் ஒருவர் நேற்றையதினம் காணாமல் போயுள்ளார். இது குறித்து அநுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த வெளிநாட்டு பிரஜை நேற்றையதினம், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் யாழ். நகரப் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.