கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம் (29) தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது.
தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 825,292 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின் (24 karat gold 1 grams) விலை 29,120 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 232,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் (22 karat gold 1 grams) விலையானது 26,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் ( 22 karat gold 8 grams) விலையானது 213,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 25,480 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 203,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் பகுதியில் வைத்து போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும், மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்தின் தைப்பொங்கல் விழா நேற்று 27.01.2025 (திங்கட்கிழமை) புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.த.முகுந்தன் அவர்களது தலைமையில் ஊழியர் நலன்புரி சங்கத்தின் அனுசரணையில் இடம்பெற்றது.
மேற்படி பொங்கல் விழாவில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கல்விசார் மற்றும் கல்வி சாரா உத்தியோகர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஏஐ மாதிரிகள் ஆபத்தான “ரெட் லைனை” கடப்பதாகவும், தங்களை தாங்களே வடிவமைத்துக்கொள்ளும் (self-replication) திறனை பெறுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த காலத்தில் AI (செயற்கை நுண்ணறிவு) பல துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. இரு வெவ்வேறு சூழ்நிலைகளைக் கொடுத்து, அதற்கு இந்த ஏஐ மாதிரிகள் எப்படி இயங்குகிறது என்பதை ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
இதற்கமைய, சமீபத்தில் நடத்திய ஆய்வின் முக்கியமான தகவல்களில், சில AI உருவாக்கங்கள் மனித தலையீடு இல்லாமல் தங்களை வடிவமைத்துக்கொள்கின்றன.
அதிலும் எந்தவொரு பிழையும் இல்லாமல் இவை தங்களை தாங்களே பிரதி எடுத்துக் கொள்கின்றது. தன்னை அணைக்க (shutdown) செய்யும் முயற்சிகளிலிருந்து தப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும் திறனை அவை பெற்றுள்ளன.
இது ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறு வடிவமைத்துக்கொள்ளும் போது, அதனை தடுக்கும் மென்பொருட்களை நீக்குவது, ரீபூட் செய்வது, அல்லது காணாமல் போன கோப்புகளை கணினியில் தேடுவது போன்ற நடவடிக்கைகளும் இதில் இடம்பெறுகின்றன.
ஆய்வாளர்கள் இதை ஏஐ அமைப்புகளின் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து புதிய சிக்கல்களை எழுப்பும் முக்கியமான மைல்கல்லாகக் கருதுகின்றனர். “இது ஒரு ஆபத்தான தொடக்கமாக இருக்கலாம்,” என வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மாணவர்கள் பயன்படுத்தும், பென்சில் மற்றும் வர்ண பூச்சுகள் தொடர்பில் பெற்றோர்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்காக பென்சில் மற்றும் வர்ண பூச்சுகளைக் கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் மகிந்த விக்ரமாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பென்சில் மற்றும் வர்ண பூச்சுகளைத் தயாரிப்பதற்காக வெவ்வேறு இரசாயனங்களும் உலோகங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றைக் கொள்வனவு செய்யும் போது இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பிரியந்த பெர்னாண்டோ கருத்துரைத்துள்ளார். இதன்போது தரமற்ற வர்ண பூச்சுகள் தொடர்பில் பெற்றோர்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் சிறுவர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்றதாகவும் அந்த சபை கூறியுள்ளது.
இதன்படி, கடந்த வருடம், சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 8,746 முறைப்பாடுகள் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன.
இதில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகளாக 2,746 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சிறுவர்கள் மீதான சித்திரவதை தொடர்பாக 1,950 முறைப்பாடுகளும், சிறுவர்கள் யாசகம் பெறுவது தொடர்பாக 229 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
சிறுவர்கள் மீதான கடுமையான, தவறான நடத்தை சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை தவறான வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலகட்டத்தில், வயது குறைந்த கர்ப்பங்கள் தொடர்பாக 53 முறைப்பாடுகளும், பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பாக 39 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளது.
தவறான நடத்தை தொடர்பாக 42 முறைப்பாடுகளும், தவறான செயல்களுக்கு சிறுவர்களை தூண்டுவது தொடர்பாக 25 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த ஆண்டில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக 14 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன, மேலும் தவறான புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல்கள் தொடர்பாக 151 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
2024 ஆம் ஆண்டில் தற்கொலை முயற்சி தொடர்பாக 18 முறைப்பாடுகளும், போதைப்பொருள் பழக்கம் தொடர்பாக 120 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயமொன்றில் மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அதன்படி யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 05 நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு இவ்வாறு விற்பனையாகியுள்ளது.
புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவத்தில் நேற்றையதினம் ஐந்தாம் நாள் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.
இதன்போது, விஷேட அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து முருகப் பெருமான் உள்வீதி, வெளிவீதியூடாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து ஒரு மாம்பழம் 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
அதேவேளை புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் பக்த அடியவர் ஒருவரே மாம்பழத்தினை ஏலத்தில் எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காலி, ரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனேகொட பிரதேசத்தில் 5 கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் (அம்பர்) சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத்கம, கனேகொட பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 23 கிலோ நிறையுடைய திமிங்கில வாந்தி (அம்பர்) கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ரத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றிலிருந்து (28ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
தலங்கம, தலவத்துகொட பகுதியில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் தம்பதியினருக்கு டுபாய் மற்றும் இலங்கையில் இருந்து தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மிரட்டல் விடுத்து அவர்களிடம் 5 மில்லியன் ரூபாவை கப்பமாக பெற முயன்ற இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நுகேகொட பிரிவு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து 7100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தொலைபேசி அழைப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக மிகுந்த அதிர்ச்சியிலும் பயத்திலும் இருந்த தொழிலதிபர் தம்பதி, பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, மிரட்டல் விடுத்த இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை ஆராய்ந்த போது அவை உள்ளூர் தொலைபேசி எண்ணை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பின்னர் நீண்ட விசாரணையின் போது, பன்னல பகுதியில் இருந்து அழைப்புகளை மேற்கொண்ட சந்தேக நபர் அதே பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று (27 ) காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது. மன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவிற்குப் பின் பகுதியில் உள்ள வீடொன்றே தீப்பற்றி எரிந்தது.
இதனையடுத்து அயலில் உள்ள மக்கள் விரைவாகச் செய்யப்பட்டதனால் தீப்பரவல் அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவ முன்னதாக அணைக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் மன்னார் மின்சார சபை, மன்னார் நகர சபையின் தீயணைப்பு வாகனம் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன் முழுமையாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
குறித்த தீ பரவல் காரணமாக எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லையெனினும் வீட்டில் காணப்பட்ட உடமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கிரகங்களின் அரிய சீரமைப்பு இந்த நாட்களில் வானில் நடைபெற்று வருகின்றது.
ஜனவரி 29 மற்றும் பெப்ரவரி நடுப்பகுதி வரை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு 90 நிமிடங்களுக்குள் இந்த வான அணிவகுப்பை சிறப்பாகக் காணலாம்
என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் 6 கிரகங்களின் அரிய சீரமைப்பின் கண்கவர் காட்சியை அவதானிக்க முடியும். வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் இவ்வாறு அவதானிக்கப்படுவதாகவும் வெற்றுக் கண்ணால் பார்க்கக்கூடிய அளவுக்கு பிரகாசமாக இருப்பதைக் காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி பெல்மதுளை பகுதியில் 19 வயது பாடசாலை மாணவியை மதுபானம் அருந்த வைத்த மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபானம் அருந்திய மாணவி சிகிச்சைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி காரில் வந்து இறங்கும் போது, போதையில் நிலை தடுமாறி வந்துள்ளார். அத்துடன், காரில் இருந்த இன்னொரு நபரும் போதையில் இருந்துள்ளார்.
இதன்போது, வீதியில் நின்றுகொண்டிருந்த குழு ஒன்று விசாரிக்கையில், போதையில் இருந்த மற்றைய நபர் மாணவியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த குழுவினர் ஆசிரியரை தாக்கியதுடன் அவரை பெல்மதுளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து, மாணவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் நடைபெற்ற I Am Model Search Kids International – 2025 அழகுப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சிறுமி முதல் பரிசை வென்றுள்ளார்.
இந்த போட்டியில் 16 நாடுகளைச் சேர்ந்த 42 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் இலங்கை சிறுமி முதலிடத்தைப் பெற்றுள்ளார். கொழும்பு வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 8 வயதாக ஏஞ்சலா விமலசூரிய என்ற சிறுமியே விருது பெற்றுள்ளார்.
கடந்த 24ஆம் திகதி தாய்லாந்தின் பேங்கொக்கில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற ஏஞ்சலா நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் ஏஞ்சலா நேற்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை வரவேற்க அவரது பயிற்சியாளர் உட்பட ஒரு குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளவத்தையில் சென் லோரன்ஸ் பாடசாலையில் நான்காம் தரத்தில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாய் ஒன்றை தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் வடமாகாணம் – மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், ஒட்டுசுட்டானில் உள்ள இணக்கச்சபை ஒன்றில் விசித்திரமான தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் அதில் நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பதிவு ஒன்று அதிகம் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாங்குளத்தை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இணக்கச்சபை
ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில், பெண் ஒருவர் தனது ஆட்டினை நாய் ஒன்று கடித்து விட்டதாக கூறி, முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்போது, இணக்கசபையில் இருந்த மூன்று நீதவான்கள், குறித்த நாயை தூக்கிலிட்டு கொலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன், நாயை தூக்கிலிட்டு கொலை செய்த பின்னர் அதனை புகைப்படம் எடுத்தும் தமக்கு அனுப்பி வைக்குமாறு குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த பெண் அந்நாயின் கழுத்தை மரமொன்றில், கயிற்றினால் கட்டி, கொலை செய்துள்ளதுடன் அதனை புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் கவனத்திற்கு ந்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
மனிதாபிமானமற்ற வகையில், ஐந்தறிவுடைய உயிரினம் ஒன்றுக்கு இவ்வாறான ஒரு தண்டனை வழங்கப்பட்டுள்ளமை கண்டிக்கப்பட வேண்டிய விடயம் எனவும் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதேவேளை, இந்த சம்பவத்தில் தொடர்பானவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறும் பொதுமக்கள் கோரி வந்தனர்.
மனிதாபிமானமற்ற செயல்
இதனை தொடர்ந்து, மாங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 48 வயதுடைய பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907ஆம் ஆண்டு 13ஆம் இலக்க விலங்குகளுக்கு வன்கொடுமை செய்வதைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக பொதுமக்கள் மத்தியில் இவ்வாறான மனிதாபிமானமற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது சமூக சீர்குலைவுகளை எடுத்துக் காட்டும் வகையில், உள்ளது.
பொதுவாகவே, விலங்குகள், ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றன. அதிலும், அவற்றை பராமரிப்பதன் மூலமே உலகில் உயிர் பல்வகைமை மற்றும் சமநிலையை பேண முடியும்.
அத்துடன், மனிதாபிமான முறையில், அவற்றிற்கு ஏற்படும் தீங்குகள் தொடர்பில் மனிதர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றாகும்.
எனவே, இது போன்ற செயல்களை தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் விழிப்புடனும், அவதானத்துடனும் இருப்பது மிக அவசியமானதொன்றாகும்.
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில் வீதியைவிட்டு விலகிய வான் மின்சாரத் தூணுடன் மோதியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து நேற்றையதினம்(26.01.2025) இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது, மின்சார தூண் உடைந்து வீழ்ந்ததுடன் வான் பலத்த சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.