நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த திணைக்களம் இன்று (25.01.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வவுனியாவில் உளுந்து செய்கை முற்றாக அழிவு : விவசாயிகள் கவலை!!

வவுனியாவில் (Vavuniya) கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக உளுந்துச் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது உளுந்து செய்கை என்றும் இலங்கையில் விளைவிக்கப்படும் தானியங்களில் உளுந்தும் முக்கியமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி உளுந்து செய்கையானது வடக்கில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அதற்கான கேள்வியானது அதிகமாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடன்பட்டும், நகைகளை அடைவு வைத்தும் செட்டிகுளம், ஓமந்தை, பாவற்குளம், சூடுவெந்தபுலவு, நெடுங்கேணி, சிப்பிக்குளம், பறநாட்டாங்கல் என பல பகுதிகளிலும் உளுந்து செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 2024-2025 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பெரும் போகத்தில் 5650 ஹெக்டேயர் அளவில் வவுனியாவில் உளுந்து செய்கை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும், நோய் தாக்கத்தினாலும் இம்முறை உளுந்து செய்கையாளர்கள் பலர் பாதிப்படைந்துள்ளதுடன் பயிர் செய்கைக்கு செலவு செய்த பணத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

உளுந்து அறுவடைக்கு தயாரக இருந்த வேளை வவுனியாவில் தொடர்ச்சியாக கனமழை பெய்தமையால் உளுந்து செடிகளிலேயே முளைத்து விட்டது.

இதனால் அதனை அறுவடை செய்ய முடியாத நிலையில் தமது செலவீனத்தைக் கூட மீளப் பெற முடியாதவாறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உளுந்து 100 வீதம் அழிவடைந்துள்ள நிலையில் தமக்கான நஷ்ட ஈட்டை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொலைபேசி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை : கடுமையாகும் சட்டம்!!

நாட்டிற்குள் சட்டவிரோதமாகவும் தரமற்ற தகவல் தொடர்பு சாதனங்களையும் எதிர்காலத்தில் இறக்குமதி செய்ய வாய்ப்பே இருக்காது என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த விதிகளை மீறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என அதன் இயக்குநர் ஓய்வு பெற்ற ஜெனரல் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்தார்.

வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் முடிவடைவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

அதற்கமைய, தற்போது செயலில் உள்ள தொலைபேசிகளின் IMEI எண்கள் பதிவு செய்யப்படவில்லை என்றால், அவை எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு வலையமைப்புகள் செயலில் இருக்காது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்பு IMEI எண்கள் பதிவு செய்யப்பட்ட வலையமைப்புகளுக்கு எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது என்று இயக்குநர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.

40 ரூபாவால் அதிகரித்த தேங்காயின் விலை : குறைந்துள்ள உற்பத்தி!!

மக்கள் தொகை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு காரணம் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வருடத்தின் இறுதியில் 160 ரூபாவில் இருந்து சடுதியாக 40 ரூபாவால் தேங்காயின் விலை அதிகரித்து 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

2000 ஆம் ஆண்டளவில், தேங்காய் உற்பத்தி 3,000 மில்லியன் தேங்காய்களாக இருந்ததாகவும், அப்போது நாட்டின் மக்கள் தொகை 18 மில்லியனாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகை 23 மில்லியனாக அதிகரித்திருந்தாலும், தேங்காய் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு தேங்காய் உற்பத்தி இல்லாததே தேங்காய் பற்றாக்குறைக்கு முக்கிய காரணியாக உள்ளது என்று பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தேங்காய் பற்றாக்குறைக்கு நீண்டகால தீர்வாக இந்த ஆண்டு 3 மில்லியன் தென்னை மரக்கன்றுகளை நடுவதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது.

இருப்பினும், 2024 ஆம் ஆண்டின் இறுதியில், ஒரு தேங்காயின் சில்லறை விலை 160 லிருந்து 200 ரூபாவாக உயர்ந்துள்ளது. தற்போது வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் தேங்காய் உற்பத்தி சுமார் 700 மில்லியன் தேங்காய்களால் குறைந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் வருடாந்த தேங்காய் உற்பத்தி 2020 இல் 2792 மில்லியன் தேங்காய்களாகவும், 2021 இல் 3120 மில்லியன் தேங்காய்களாகவும், 2022 இல் 3391 மில்லியன் தேங்காய்களாகவும், 2023 இல் 2682 மில்லியன் தேங்காய்களாகவும் பதிவாகியுள்ளன.

தேங்காய் விளைச்சல் குறைவதற்கு பல முக்கிய காரணிகள் பங்களித்துள்ளன. இதில் குறைக்கப்பட்ட உர பயன்பாடு, காட்டு விலங்குகளால் ஏற்படும் சேதம், வானிலை மாற்றங்கள் மற்றும் சமீபத்தில் தென்னை பயிர்ச்செய்கை நிலங்களை பிற திட்டங்களுக்கு விற்பனை செய்தல் ஆகியவை அடங்கும்.

உணவுப்பொதி வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கடையொன்றில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி காணப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னெடுத்த விசாரணையில், அம்பலங்கொடையில் (Ambalangoda) உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கப்பட்ட உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி கிடந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்னெடுத்து வருகின்றது.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது தாக்குதல்!!

வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது இனந்தெரியாதநபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

செட்டிக்குளம் பிரதேசத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து வீதியில் தரித்து நின்ற சமயத்தில் குறித்த தனியார் பேரூந்தினை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து முந்திச்செல்ல முற்பட்டுள்ளது.

இதன் போது திடீரென தனியார் பேரூந்து புறப்பட முற்பட்டமையினால் ஆடைத்தொழிச்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்தின் கண்ணாடியுடன் தனியார் பேரூந்தின் கண்ணாடியுடன் மோதுண்டு சிறு சேதம் ஏற்பட்டது.

இதனையடுத்து இரு பேரூந்தின் சாரதிகளுக்கும் கருத்து முரன்பாடு ஏற்பட்டமையுடன் பின்னர் இரு பேரூந்துகளும் தொடர்ந்து பயணித்தன.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்தினை சூடுவெந்தபுலவு பகுதியில் வழிமறித்த இனந்தெரியாத நபர்கள் பேரூந்தின் முன்பக்க கண்ணாடி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து ஆடைத்தொழிற்சாலையில் சாரதி தனது ஊழியர்களை பாதுகாக்கும் பொருட்டு பேரூந்துடன் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

எனினும் குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதி உலுக்குளம் பொலிஸ் பிரிவில் வருகின்றமையினால் அப்பகுதி பொலிஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சை : மட்டக்களப்பு மாணவி வரலாற்று சாதனை!!

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை பிரதி அதிபர் திருமதி.வனித்தா தியாகராஜா தெரிவித்தார் .

வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மாணவி ஜோர்ச் ரோஷலினா 180 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும், கல்குடா வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நேற்றுமாலை வெளியாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையின் தவறால் உயிரிழந்த யுவதி : அதிர்ச்சியில் பெற்றோர்!!

பண்டாரவளையில் யுவதி ஒருவரின் மரணத்திற்கு மருத்துவமனை அதிகாரிகள் தான் காரணம் என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

துல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தேவ்மினி சமத்கா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நீண்ட நாட்களாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த யுவதிக்கு உரிய சிகிச்சையளிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

17 ஆம் திகதி காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கும் அவருக்கு முறையான சிகிச்சை கிடைக்கவில்லை எனவும், பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிப்பதில் கூட தாமதம் ஏற்பட்டதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.

தனது மகளின் உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கூட அனுமதிக்கப்படவில்லை என்று அவரது தாயார் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார். சரியான சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்.

மருத்துவமனையின் தவறு காரணமாக மகளை இழந்துவிட்டோம் என தாயார் குறிப்பிட்டுள்ளார். குறித்த யுவதி இம்முறை உயர்தர பரீட்சை எழுதுவதற்கு தயாராக இருந்ததாக பெற்றோர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

தெற்காசிய மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டியில் சாதனைப்படைத்த அகிலத்திருநாயகி!!

இந்தியா அசாம் மாநிலத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டின் சர்வதேச தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்ற திருமதி அகிலத்திருநாயகி அவர்கள் நான்கு பதங்களை வென்று சாதனைப்படைத்துள்ளார்.

இவர் முல்லைத்தீவு முள்ளியளை மண்ணினைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் ஆவார்.

10000 M ஓட்டத்தில் முதலாம் இடமும் 3000 M வேக நடையில் இரண்டாம் இடமும் 1500 M ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடமும் 5000M ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த 18 மாணவர்கள்!!

2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், அதன்படி, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், 188 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், 17 மாணவர்கள் 187 மற்றும் 186 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதிக மதிப்பெண் பெற்ற 18 மாணவர்களில் 11 பேர் ஆண் பிள்ளைகள் என்றும் அவர் தெரிவித்தார். 2024 ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதன்படி, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதம் 16.05% ஆகும். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2023 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 15.12% பேர் சித்தியடைந்திருந்தனர். மேலும், இந்த ஆண்டு பெறுபேறுகளின் படி, 77.96% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர்.

இதுவும் கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகும். 2023 ஆம் ஆண்டில், 77.75% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தனர்.

மேலும், பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 37.70% பேர் 100 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர். இருப்பினும், 2023 உடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.

அதேவேளை கடந்த ஆண்டு, பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 45.06% பேர் 100 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் வீதியால் சென்ற குடும்பஸ்தர் திடீரென கிழே விழுந்து உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – றொட்டியாலடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் (23)இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செட்டிவளவு, இணுவில் மேற்கு பகுதியை சேர்ந்த 65 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தவேளை கீழே மயங்கி விழுந்துள்ளார்.

இதன்போது வீதியால் பயணித்தவர்கள் அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக குறித்த மரணம் சம்பத்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு : யாழில் முதலிடத்தை பெற்ற மாணவன்!!

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (23.01.2025) மாலை வெளியாகின. இதுவரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் பரமேஸ்வரன் பிரசோதன் 186 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.

இதேநேரம், யாழ். ஜோன் பொஸ்கோ மாணவன் 185 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

 

காணாமல் போன தமிழ் சிறுவனை கண்டால் அறிவிக்கவும் : தாய் விடுத்த கோரிக்கை!!

மாத்தளை நகரில் 5 நாட்களுக்கு முன்பு காணாமல் போன தனது 16 வயது மகனைக் கண்டுபிடிக்க சிறுவனின் தாயார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளார்.

முத்தெட்டுதென்ன கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சுனேத்ரா ஜெயராணி என்பவரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மாத்தளை, முவந்தெனிய கல்லூரியில் படிக்கும் ருவிஷன் என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். தாயார் மாத்தளை நகரத்திற்குச் செல்வதாகக் கூறி 19 ஆம் திகதி காலை வீட்டை விட்டுச் சென்று மாலை வீடு திரும்பினார்.

வீடு திரும்பிய போது மகனை காணவில்லை எனவும் 5 நாட்களாகியும் மகனை கண்டுபிடிக்கவில்லை எனவும் தாயார் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் ரத்தோட்ட பொலிஸாரிடம் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

அருகிலுள்ள வீட்டில் இருந்த பாதுகாப்பு கேமராவில், மாணவன் ஒரு குடையை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவது பதிவாகியுள்ளது.

காணாமல் போன தனது மகன் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் ரத்தோட்டா பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு குறித்த தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!!

இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்,

சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும் பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமீட்டம் நிறைந்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

யாழில் ஒரே நாளில் வெவ்வேறு விபத்துக்களில் உயிரிழந்த மூவர்!!!

யாழ்ப்பாணம்(Jaffna) – றொட்டியாலடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது, நேற்று முன்தினம்(22) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, செட்டிவளவு, இணுவில் மேற்கு பகுதியை சேர்ந்த சபாபதிப்பிள்ளை நித்தியானந்தம்(வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் சம்பவதினத்தன்று மாலை மோட்டார் சைக்கிளில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தவேளை கீழே மயங்கி விழுந்துள்ளார்.

இதன்போது அந்த வீதியால் வந்தவர்கள் அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (22.01) வீதியை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த தயநாதன் விதுசன்(வயது 32) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் சம்பவதினத்தன்று(22) ஆவரங்கால் சந்தியால் வீதியை கடக்க முற்பட்பட்ட போது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த அவர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரை மோதிய மோட்டார் சைக்கிள் சாரதியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் ஒருவர் நேற்றுமுன்தினம்(22) உயிரிழந்துள்ளார். இதன்போது மூளாய் – வேரம் பகுதியை சேர்ந்த தர்சன் பாமினி(வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பப் பெண்ணுக்கு நேற்றுமுன் தினம் மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் : இன்றைய விலை விபரம்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(24) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 829,069ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 29,250ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 234,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 26,820ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் (22 karat gold 8 grams) விலையானது 214,500ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 25,600 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams)204,750ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 217,500 ரூபாவாகும். இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 201,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.