கோடிக்கணக்கான அமெரிக்க டொலர் பெறுமதியுடைய மாணிக்கக்கல் : இலங்கை தொழிலதிபருக்கு அச்சுறுத்தல்!!

பிரபல தொழிலதிபர் துஷார பெரேரா, 2017ஆம் ஆண்டு தனக்குக் கிடைத்த ஒரு சிறப்பு நீல சபையர் (மாணிக்ககல்) தொடர்பாக அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகவும், அதன் மதிப்பு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும் என்றும் கூறியுள்ளார்.

இந்த மாணிக்கக்கல் கொருண்டம் குடும்பத்திலிருந்து வந்த 350 கரட் நீல சபையர் ஆகும். அமெரிக்க மற்றும் ஜெர்மனியில் இருந்து வர்த்தகர்கள் இதை வாங்க ஆர்வமாக இருந்தபோதிலும், சட்ட மற்றும் நிதி கட்டுப்பாடுகள் காரணமாக அவரால் இலங்கைக்கு பணத்தை கொண்டு வர முடியவில்லை.

எனவே, கல்லை விற்க அவர் அரசாங்க அமைச்சர்களிடம் உதவி கேட்க வேண்டியிருந்தது.

2017 முதல், இலங்கையின் இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையம் கரடுமுரடான கற்களுக்கான மதிப்பீடுகளை வழங்காததால், இந்த இரத்தினக் கல்லை வெளிநாடுகளுக்கு விற்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.

அத்துடன், ஏற்றுமதி விதிகள், விலையுயர்ந்த கற்களை மட்டுமே வெளிநாடுகளுக்கு விற்க அனுமதிக்கின்றன.

இந்த நேரத்தில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர் விற்பனைக்கு மத்தியஸ்தம் செய்ய முன்வந்தார், ஆனால் 150 மில்லியன் இலஞ்சம் கோரினார் என்று தொழிலதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரும் உதவிக்கு ஈடாக கல்லின் மதிப்பில் ஒரு பங்கைக் கேட்டிருந்தார்.

தொழிலதிபர் துஷாராவின் அறக்கட்டளையின் துணைத் தலைவர் பதவியை அவருக்கு வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

இந்தநிலையில், 2018 ஆம் ஆண்டு தாம் கடத்தப்பட்டு, கப்பம் வாங்குவதற்காக அவிசாவெல்லாவின் புவக்பிட்டி பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக துஷாரா கூறியுள்ளார்.

இந்த அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் துஷாரா கூறியுள்ளார்.

இதேவேளை, ஒரு கொள்வனவாளரை கண்டுபிடித்து இரத்தினக் கல்லுக்கு பணம் பெற்றாலும், இலங்கையின் சட்டங்களால், பணத்தை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவதில் சட்ட சவால்களையும் எதிர்கொள்வதாக துஷார தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தப் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் பேசி தீர்வு காணத் தயாராக இருப்பதாக துஷார கூறியுள்ளார்.

வவுனியா சுந்தரபுரத்தில் ஒருவர் வெட்டிக் கொலை!!

வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று வியாழக்கிழமை (23.01.2025) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் இவரது வீட்டுக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோதே கூரிய ஆயுதத்தால் இவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் இவரது மைத்துனர் ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள் : அதிகாரிகள் மௌனம்!!

வவுனியா மன்னார் பிரதான வீதியில் குருமன்காடு – பட்டானிச்சூர் இடைப்பட்ட வயல் நிலங்களில் தொடர்ந்தும் மண் கொட்டப்பட்டு மேட்டு நிலங்களாக மாற்றி கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது மௌனம் காப்பதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பட்டானிச்சூர் புளியங்குளத்தின் கீழுள்ள வயல் நிலங்களிலேயே இவ்வாறு மண் கொட்டப்பட்டு வேலிகள் போடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்ற சமயத்தில் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 83 ஆம் பிரிவின் பிரகாரம்,

கட்டளை பிறப்பிக்கப்பட்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் தற்போது எவ்வித நடவடிக்கைகளும் உரிய அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக விவசாயம் செய்வதற்கான நிலங்கள் இல்லாமல் போகின்ற நிலைமை வவுனியா மாவட்டத்தில் உருவாகுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் உடனடியாக இவ்விடயத்தில் தலையிட்டு குறித்த மண், வேலிகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வவுனியாவில் 128 கிலோ மாட்டிறச்சியுடன் வாகனம் மடக்கிப் பிடிப்பு : இருவர் கைது!!

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4ம் கட்டை பகுதியில் 128 கிலோ மாட்டிறச்சியுடன் வாகனம் ஒன்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கேதிவுல்வெவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது குறித்த பட்டா ரக வாகனத்தினை சோதனைக்குட்படுத்திய சமயத்தில் கொள்கலன்களில் 128 கிலோ மாட்டிறச்சியினை முறையற்ற முறையில் கொண்டு சென்றமை உட்பட்ட குற்றச்செயல்களில் குறித்த வாகனத்தினை பொலிஸார் கையகப்படுத்தியமையுடன் வாகனத்தின் சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களின் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் கையகப்படுத்தப்பட்ட 128 கிலோ மாட்டிறச்சி உட்பட பட்டா ரக வாகனம் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய மேலதிக நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் கைது!!

வவுனியா ஓமந்தை A9 வீதியில் நேற்று (23.01.2025) காலை பத்து மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை தொடர்ந்து வந்த இளைஞர் இருவர் குறித்த பெண்களை வழிமறித்து தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த 7 இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்துள்ளனர்

பாதிக்கப்பட்ட பெண்கள் வன்னி பிராந்திய பிரதிபொலிஸ் மா அதிபரின் அவசர இலக்கமான 107 ற்கு தொடர்பு கொண்டு முறையிட்டதை அடுத்து உடனடியாக செயல்பட்ட ஓமந்தை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த இளைஞர்களை அடையாளம் கண்டு ஓமந்தை சேமமடு பகுதியில் துரத்திப்பிடித்துள்ளனர்.

கைது செயப்பட்ட இருவரும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்தவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயணித்து கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்!!

அநுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த ச்ம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (23.01.2025) காலை இடம்பெற்றுள்ளது. விரந்து வந்த தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ள நிலையில், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக:ள் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சடுதியான அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை!!

கடந்த சில நாட்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது அதிகரிப்பை பதிவு செய்து வரும் நிலையில், இன்றையதினம் (23) தங்கத்தின் விலை சடுதியான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 824,251 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின் (24 Karat Gold 1 Grams) விலை 29,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 232,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 Karat Gold 1 Grams) விலையானது 26,660 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்று 213,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 21 கரட் தங்கம் ஒரு கிராமின்(21 Karat Gold 1 Grams) விலையானது 25,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 216,500 ரூபாவாக உள்ளது.

22 கரட் தங்கம் ஒரு பவுணானது 200,200 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,751.82 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

கடலுக்கடியில் சென்று மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்ட தம்பதியினர்!!

ஆழ்கடலில் நீருக்கடியில் சென்ற ஒரு ஜோடி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தற்போதைய காலத்தில் படகிலோ அல்லது விமானத்திலோ திருமணம் செய்து கொண்டு வைரலாகி வருகின்றனர். ஆனால், இங்கு ஒரு ஜோடி கடலுக்கடியில் திருமணம் செய்துள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஜான் டி பிரிட்டோ மற்றும் தீபிகா. இவர்கள் இருவரும், கடல் மாசு விழிப்புணர்வு, கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு ஆகிய விடயங்களை வலியுறுத்தி ஆழ்கடலுக்கு சென்று நீருக்கடியில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

அதற்காக அவர்கள் டெம்பிள் அட்வென்சர் ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் உதவியுடன் புதுச்சேரி தேங்காய்திட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவில் கடலுக்கு சென்றனர்.

அங்கு அவர்களுக்காக 50 அடி ஆழத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. தென்னை ஓலையில் பூக்கள் இணைத்து திருமண நிகழ்வு நடத்தினர்.

பின்னர், கடலுக்கடியில் சென்று மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுடன் 5 பேர் கடலுக்கடியில் சென்றனர்.

இதுகுறித்து பயிற்சியாளர் கூறுகையில், “முதல்முறையாக நீருக்கடியில் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் நீச்சல் வீரர்கள் என்பதால் சிரமம் ஏற்படவில்லை” என்றார்.

நடுவானில் விமானத்தில் 11 மாதக் குழந்தை உயிரிழப்பு!!

தோஹாவில் இருந்து கொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தாயுடன் பயணித்துக் கொண்டிருந்த 11 மாத கைக் குழந்தைக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பாட்டு நேற்று முன்தினம் அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தது.

கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட கல்ஃப் ஏர் விமானம் நடுவானில் வந்துக் கொண்டிருந்த போது விமானத்தில் தாயுடன் பயணித்துக் கொண்டிருந்த ஃபெசின் அகமது என்ற 11 மாதக் குழந்தைக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

உடண்டியாக இது குறித்து கொச்சி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விமானம் தரையிறங்கியவுடன் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

ஆனால் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர். இது குறித்து அங்கமாலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானத்தில் திடீரென குழந்தை உயிரிழந்ததால், பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் குழந்தையின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

திருமண வேளையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த தந்தை : திருமணம் முடியும் வரை மகளிடம் மறைத்த உறவினர்கள்!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவைச் சேர்ந்த சந்துரு. இவரது மகள் தீக்ஷிதாவுக்கு ஜனவரி 20 ஆம் தேதி (நேற்று) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சந்துரு தனது மகளுக்கு பிரமாண்டமான திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

ஜனவரி 19 ஆம் தேதி, சந்துரு தனது மகளின் திருமணச் சான்றிதழைப் பெற ஹுலிதிமாபுரா சென்றார். அதன் பிறகு, அவர் இரு சக்கர வாகனத்தில் திரும்பினார்.

வழியில், அவர் ஒரு சாலை விபத்தில் சிக்கினார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.

இருப்பினும், உறவினர்கள் தீக்ஷிதாவிடம், சந்துரு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினர். மருத்துவமனையில் இருந்தபோது, ​​சந்துரு தனது மகள் மற்றும் மனைவியிடம் ஒரு திருமண வேலையில் மும்முரமாக இருப்பதாகவும்,

இடையில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்ததாகவும் அவர் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், தீக்ஷிதாவின் திருமணத்திற்குப் பிறகு, தீக்ஷிதா மற்றும் அவரது தாயாருக்கு அவரது தந்தை சந்துரு இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சந்திருவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதைத் தொடர்ந்து, திருமண வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது.

7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்!!

ஹைதராபாத்தில் வசித்து வருபவர் சச்சின் . இவரது மனைவி சினேகா 7 மாத கர்ப்பிணி. இந்த கர்ப்பம் குறித்த சந்தேகம் சச்சினுக்கு எழுந்த வகையில் அவரை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.

தற்போது சினேகா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சச்சின் சினேகாவை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து அவரது வயிற்றில் அமர்ந்து தலையணையால் முகத்தை மூடி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

வயிற்றில் ஓங்கி அடித்ததில் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையும் வெளியே வந்து உயிரிழந்தது.

இதனையடுத்து கொலை சம்பவத்தை மறைத்து விபத்து நடந்தது போல காட்டுவதற்காக கேஸ் சிலிண்டரை கசிய வைத்துவிட்டு சச்சின் தப்பி ஓடினார்.

கேஸ் வாசனை அதிகமாக வந்ததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு சினேகா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சினேகா மற்றும்

குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொல் பேச்சு கேட்காததால் ஆத்திரம் : மகன் மீது உட்கார்ந்த தாய் : மூச்சுத்திணறி சிறுவன் உயிரிழந்த சோகம்!!

மகன் மீது தாய் அமர்ந்த நிலையில், மூச்சுத்திணறி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் 48 வயது பெண் ஜெனிஃபர் வில்சன்.

அவர் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். இந்த பையனுக்கு 10 வயது. ஜெனிஃபர் 154 கிலோ எடை கொண்டவர். இந்த நிலையில், தனது மகன் தனது பேச்சைக் கேட்காததால் ஜெனிஃபர் கோபமடைந்தார்.

இதனால் ஜெனிஃபர் சிறுவனின் மீது அமர்ந்தார். ஜெனிஃபர் சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே சிறுவனின் மீது அமர்ந்தார்.

இதனால் மூச்சு விட முடியாமல் சிறுவன் இறந்தான். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது ஜெனிஃபரை கைது செய்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, ​​ஜெனிஃபருக்கு இப்போது 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், கோழி மிதித்து குஞ்சு இறக்காது என்ற பழமொழியும் உள்ளது. ஆனால் தாய் தன் மகனின் மீது அமர்ந்ததால் சிறுவன் இறந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த பெண் மருதானை பொலிஸ் நிலையத்தில் தற்கொலை : மேலதிக தகவல்!!

கொழும்பு – மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் சிறைக்கூடத்தில் நேற்றையதினம் (22.01) சடலமாக மீட்கப்பட்ட பெண் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், குறித்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை நடைபெறும் வரை பொலிஸ் நிலைய பிணவறையில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

32 வயதான குறித்த பெண் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்றையதினம் (22) தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் பெண், வவுனிக்குளம் – அம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைய நேற்று முன்தினம் (21.01) இரவு மருதானை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், சிறைச்சாலையின் இரும்புக் கதவில் தனது பாவாடையை கட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிற்சை பலனின்றி பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நீதவான் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி குக்கரில் சமைத்து ஏரியில் வீசிய கொடூர கணவன்!!

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் ஜனவரி 18ம் தேதி புட்டவெங்கடா மாதவி என்ற 35 வயது பெண் மாயமானதாக அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவருடைய கணவரான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குருமூர்த்தியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தன்னுடைய மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இவர் தன்னுடைய மனைவியை கொலை செய்த பின்னர் வீட்டின் குளியலறையில் வைத்து உடலை துண்டு துண்டாக வெட்டி பின்னர் சில உடல் பாகங்களை குக்கரில் வைத்து சமைத்ததாக அதிர்ச்சி தரும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் எலும்புகளை வெட்டி எடுத்து அரைத்து அவற்றை வேக வைத்துள்ளார். தொடர்ந்து 3 முதல் 4 நாட்களாக சதை மற்றும் எலும்புகளை வேகவைத்து பின்னர் ஏரிக்கரையோரம் சென்று அவற்றை வீசிவிட்டதாக கூறியுள்ளார்.

இவர்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்த நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகள் இருவரும் வெளியே சென்ற நிலையில் தன்னுடைய மனைவியை அவர் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதன் அடிப்படையில் போலீசார் குருமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகளும் பலி!!

கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை பூர்வீகமாக தற்போது கனடாவில் வசித்த 40 வயதான தந்தையும் அவரது 03 வயது மகளுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில், அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த வேளை , அவர்களது வாகனம் விபத்துக்கு உள்ளானதை அடுத்து, காயமடைந்த தனது மகளை விபத்துக்கு உள்ளான வாகனத்தில் இருந்து மீட்டு

அதிவேக நெடுஞ்சாலையை கடக்க முற்பட்ட வேளை மற்றுமொரு வாகனம் அவர்கள் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவத்துடன் மூன்று வாகனங்கள் தொடர்புடையதாகவும் , விபத்து தொடர்பில் கனேடியன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஈராக்கில் 9 வயதில் திருமணம் செய்யலாம் : புதிய சட்டம் அறிமுகம்!!

ஈராக்கில் சிறுவர் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி இனி 9 வயது சிறுமிகளுக்கும் திருமணம் செய்து வைக்க முடியும்.

ஈராக்கில், கடந்த 1959ஆம் ஆண்டு முதல் சிறுவர் திருமணம் என்பது சட்டப்பூர்வமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அதில் சிறிய மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சட்டத் திருத்தம், நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த சட்டத்தின்படி, இனி ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் 9 வயது முதல் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம். சன்னி இஸ்லாமிய பெண்களுக்கு திருமண வயது 15ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நீதியை மேம்படுத்துவதற்கும், மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒழுங்கமைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான படிதான் இந்த சட்டம் என்று, நாட்டின் சபாநாயகர் மஹ்மூத் அல்-மஷ்ஹதானி கருத்துரைத்துள்ளார்.