யாழில் இடம்பெற்ற கோர விபத்து : படுகாயமடைந்தவர் உயிரிழப்பு!!

புதிய இணைப்பு : யாழ் ஆவரங்கால் பகுதியில் நேற்று (22.01.2025) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த உதயநாதன் விதுசன் (வயது 32) சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், ஆவரங்கால் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற குறித்த இளைஞன் மீது மோதியே விபத்து இடம்பெற்றது.

முதலாம் இணைப்பு : யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விபத்து சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், ஆவரங்கால் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற இளைஞன் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையிலும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையிலும்,

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அச்சுவேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விதுஷன் (வயது 32) என்ற மாடுகளைக் கூட்டிச் சென்ற இளைஞனும்,

தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நெல்லியடி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த தேவமனோகரன் பிரணவன் (வயது 23) என்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இரு இளைஞர்களும் தற்போது உயிருக்கு போராடி வருவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றிக்கு சிக்கலாக மாறியுள்ள அர்ச்சுனாவின் சிறப்புரிமை!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த சிறப்புரிமை பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், சபை விவகாரங்களை முன்னெடுத்து செல்வதில் பெரும் சிக்கல்நிலை உருவாகும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இராமநாதன் அர்ச்சுனா இன்று(23.01.2024) சபையில் முன்வைத்த கருத்து தொடர்பில் பதில் வழங்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“சபாநாயகரே இங்கு நாடாளுமன்ற உறுப்பினர முன்வைத்துள்ள கருத்துக்களுக்கான தீர்வை வழங்குவது உங்களது கடமை. எனினும் அவர் முன்வைத்த சிறப்புரிமை குற்றச்சாட்டு தொடர்பில் சபையில் தெளிவுபடுத்த வேண்டும்.

அவர் தற்போது நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என ஆளும் தரப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.

அவருக்கு வாய்ப்பு வழங்காமை ஜனநாயகத்திற்கு எதிரான விடயமாகும். எனினும் இதற்கான முழு பொறுப்பும் எதிர்க்கட்சி தலைவரிடமே உள்ளது. அவருக்கான நேரத்தை எதிர்க்கட்சி தலைவரே ஒதுக்கியிருக்க வேண்டும்.

இதனை நாடாளுமன்றிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி, நான் அவருக்கு எடுத்துரைத்துள்ளேன். இந்நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்காமை தொடர்பில் எங்களை கைகாட்டுவதில் எந்த பயனும் இல்லை.

இது தொடர்பில் மீண்டும் சபைக்கு அறிவிக்கின்றேன். தயவுசெய்து அவருக்கான நேரத்தை எதிர்க்கட்சி வழங்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அரசாங்கம் என்ற வகையில் அவரின் உரிமைக்காக நாங்கள் குரல் கொடுப்போம். ஏனைய துணை குழுக்களுக்கு கூட அவரை நியமித்துள்ளோம். சபாநாயகரே, இந்த பிரச்சினைக்கு நாடாளுமன்ற செயற்குழுவில் கலந்தாலோசித்து உரிய தீர்வை வழங்க வேண்டும்.

இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்தி செல்வதில் பெரும் சிக்கல் நிலை உருவாகும். அர்ச்சுனா மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கும் அரசாங்கத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

பாதுகாப்பு பிரிவு தொடர்பான நடைமுறைகள் சட்டத்திற்கு அமைவாகவே இடம்பெறும். எவ்வாறாயினும் அவரை கைது செய்வதாக இருந்தால், அது சபாநாயகரின் அனுமதியினுடனே இடம்பெறும்.

நாங்கள் தேசிய ஒருமைப்பாட்டோடு வேலை செய்ய விரும்புகிறரோம். தயவு செய்து இந்த விடயத்துக்குள் தேசிய பிரச்சினையை உள்ளிழுக்க வேண்டாம்” என்றார்.

தேங்காய் விலை 300 ரூபாவாக உயரும் சாத்தியம்!!

தென்னை சார்ந்த உற்பத்தித் தொழிலுக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களையாவது உடனடியாக இறக்குமதி செய்யாவிட்டால் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 300 ரூபா வரையில் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில்துறையினர் அதிக விலைக்கு தேங்காய்களை கொள்வனவு செய்வதால் நுகர்விற்கான தேவை 250 முதல் 300 ரூபாவாக உயரும் என இலங்கை தேங்காய் கைத்தொழில் சபையின் தலைவர் ஜயந்த சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் துறைக்காக 100 மில்லியன் தேங்காய்ப்பால், உறைந்த தேங்காய் துருவல் அல்லது துருவிய காய்ந்த தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்யுமாறு அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,

இதற்கு அரசாங்கத்திடம் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துண்டுகளாக்கப்பட்ட காய்ந்த தேங்காய்களை பயன்படுத்தி தேங்காய் எண்ணெய் தயாரிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, 2021 மற்றும் 2024 க்கு இடையில் நாட்டின் தேங்காய் அறுவடையானது 700 மில்லியனுக்கும் அதிகமான தேங்காய்களினால் குறைந்துள்ளது எனவும்,

தொடர்ந்து தேங்காய் தட்டுப்பாடு காரணமாக தேங்காய் விலை அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு விரைவில் : பிரதமர் உறுதி!!

நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (23) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக, பெறுபேறுகளின் மதிப்பீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால், பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது.

244,092 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும், 79,787 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் என மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

முன்னதாக இந்த பரீட்சை வினாத்தாளில் மூன்று வினாக்கள் வெளியில் கசிந்தமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இது தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சனம் வெளியிட்டு போராட்டங்களை நடத்தியிருந்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

என்னை சுட்டு வீழ்த்துங்கள் : சபையில் அர்ச்சுனா எம்.பி இன்றும் ஆவேசப் பேச்சு!!

என்னை இந்த அரசாங்கம் புலி, புலி என்று அடையாளப்படுத்துகின்றது. இப்படி கூறி ஏன் மன உளைச்சலுக்கு என்னை உள்ளாக்குகின்றீர்கள்.

என்னை விடுதலைப் புலியாக கருதினால் என்னை கைது செய்யுங்கள். இல்லையென்றால் சுட்டு வீழ்த்துங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் படுகொலைகளை செய்துள்ளது. படுகொலை செய்து வந்த அரசாங்கம் தான் இது என்றும் அவர் தெரிவித்தார். 1980ஆம் ஆண்டுகளில், எவ்வளவு மக்களை ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்துள்ளார்கள்.

பல படுகொலைகளை செய்த தரப்பு இது என்றும், முடிந்தால் தன்னையும் கொலை செய்து விடுமாறும் தெரிவித்த அர்ச்சுான எம்.பி யுத்தத்தின்போது இலட்சக்கணக்கான தமது மக்கள் முள்ளிவாய்க்காலில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்திற்கு வழங்கிய முழு ஆதரவினையும் இன்றிலிருந்து முழுதுமாக மீளப் பெற்றுக் கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்று வரும் அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

64 நாட்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கதைப்பதற்கு இடம் கொடுக்காவிட்டால் அது இந்த அரசாங்கத்தினுடைய வெட்கம்கெட்ட செயல். ஏன் இவர்கள் பயப்படுகின்றார்கள்.

எனக்கு கதைப்பதற்குரிய நேரத்தை வழங்கவில்லை என்று கேட்டால் அதற்கு ஒரு குழுவினை நியமித்துள்ளனர். நான் பல நாட்கள் காத்திருந்துள்ளேன். இது எந்த வகையில் நியாயம்.

நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு 36 நாட்கள் கதைப்பதற்கு அனுமதி வழங்காமல் முதலாவது நாளாக நான் உரையாற்றுவதற்கு கூட எனது சொந்த பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கான அவசியத்தை இந்த அரசாங்கம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

இன்றில் இருந்து இந்த அரசாங்கத்திற்கு எனது மனதால் நான் கொடுக்கின்ற அனைத்து ஆதரவுகளையும் மீளப் பெற்றுக் கொள்கின்றேன். இன்றில் இருந்து உண்மையான எதிர்க்கட்சியாக நான் செயற்படுவேன்.

எனக்கு எதிராக 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வாகனத்தின் முன் விளக்குகளை ஒளிரவிட்டதற்காக கைது செய்கிறார்கள். ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் இது நடக்குமா. இந்த விடயத்தை நான் பாரிய கவலையுடன் நான் முன்வைக்கின்றேன்.

மிகப் பெரிய எதிர்பார்ப்பு இந்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் மீது இருந்தது. யாழ்ப்பாணத்து மக்கள் பாரிய எதிர்பார்ப்பில் மூன்று எம்.பிக்களை தெரிவு செய்திருக்கின்றார்கள். ஆனால் எனக்கு இங்கு கதைப்பதற்கு கூட நேரம் கொடுக்கப்படுவதில்லை.

இங்கு தமிழ் சிங்கள மக்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்றால் உயரிய சபையான நாடாளுமன்றத்தில் உண்மையான விடயங்களை கதைப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.

ஏன் இந்த அரசாங்கம் ஒரு சுயேட்சைக் குழு உறுப்பினரைப் பார்த்துப் பயப்படுகின்றது. இந்த அரசாங்கத்திற்கு முதுகெழும்பு இருந்தால் இன்றில் இருந்து இந்த பிரச்சினையை முடித்துக் காட்டுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

யாழில் பாடசாலை மாணவியை சீரழித்த ஆசிரியர் அதிரடியாக கைது!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையில் வைத்து மாணவியை 52 வயதான ஆசிரியர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் , ஆசிரியரை கைது செய்துள்ள பொலிஸார், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

விசாரணைகளை தொடர்ந்து ஆசிரியரை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

நாட்டின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (22.01) வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ. அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஏனைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன்,

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

வவுனியாவில் கனமழை காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேருக்கு நிவாரணம் வழங்க அரசாங்க அதிபர் உத்தரவு!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட 19 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேருக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ. சரத்சந்ர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அந்தியபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த பீடியா பண்ணை கிராமம், வவுனியாவிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் மிகவும் கடினமான சூழலில் அமைந்துள்ள கிராமமாகும்.

பிரதான சாலையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் காட்டுப் பாதையில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் பாதுகாப்பான மையத்தை அமைக்கக் கூட ஒரு நிரந்தரக் கட்டிடம் இல்லை.

மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த இந்தக் குடும்பங்கள் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தனர். டிராக்டர்கள் மற்றும் லொரிகளைப் பயன்படுத்தி அதற்குள் தங்கியிருக்கின்றனர்.

குறித்த பிரதேசத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மாவட்டச் செயலாளர், இந்த மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் தங்குமிடத்தை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்கள பிராந்திய அலுவலகம் வெள்ளத்தில் முழ்கியது!!

வவுனியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் வெள்ளத்தில் முழ்கியதால் அதன் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் இன்று (22.01) காலை முதல் கன மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக வெள்ள நீர் காரணமாக வவுனியா குடிவரவு குடியகல்வு பிராந்திய அலுவலகத்திற்குள் வெள்ள நீர் புகுந்த வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.

இதனால் அதன் கடவுச் சீட்டு விநியோக செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதுடன், அலுவலகத்தில் கடமையாற்றுவோர் வெள்ளத்திற்குள் நின்று தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த நீரை வெளியேற்றுவதற்கு அலுவலக உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வவுனியாவைச் சேர்ந்த பெண் மருதானை பொலிஸ் சிறைக்கூண்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு!!

கொழும்பு,மருதானை பொலிஸ் நிலைய சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (22.01.2025) இடம்பெற்றுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று செவ்வாய்க்கிழமை (21) மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளார்.

இதன்போது, இந்த பெண் இன்றைய தினம் அதிகாலை 04.00 மணியளவில் பொலிஸ் நிலைய சிறைக்கூண்டினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளவத்தையில் கடத்தப்பட்ட பெண் : விசாரணையில் அம்பலமான தகவல்!!

வெள்ளவத்தையில் உள்ள தனியார் மருத்துவமனை விடுதிக்கு முன்பாக பெண் ஒருவர் கடத்தப்பட்டதைக் காட்டும் காணொளி காணொளி தொடர்பில் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை (18.01.2024) நடந்த இந்த கடத்தல் சம்பவத்தில், அந்தப் பெண் பொலிஸ் சீருடையில் இருந்த ஒருவர் உட்பட இரண்டு நபர்களால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளவத்தை பொலிஸார் விரிவான விசாரணைகளை தொடங்கியுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

கடத்தல் தொடர்பான ஆரம்ப விசாரணையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கடத்தல்காரர்கள் குறித்த பெண்ணிடம் பணம் உள்ளிட்ட பொருட்களை பெற்று, பின்னர் வெலிக்கடை பகுதியில் விட்டுச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வான் வாடகைக்கு எடுக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது. குற்றச் செயலுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாய்க்காலுக்குள் பாய்ந்து கெப் வாகனம் விபத்து!!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவின் இருதயபுரம்(பச்சநூர்) பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் புரண்டு விழுந்து சிறிய ரக கெப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் (22.01) காலை இடம் பெற்றுள்ளது.இவ்விபத்து சம்பவத்தில் வாகனத்தில் பயணித்தோர் சிறிய காயங்களுடன் தெய்வாதீனமான முறையில் உயிர் தப்பியுள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த கெப் ரக வாகனமே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்ணனை கொன்று தலைமறைவான தம்பி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் கத்திக் குத்துக்குக்கு இலக்காகிய நிலையில் நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது.

உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடே இச் சம்பவத்துக்கு காரணம் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. இதில், தம்பிக்காரன் தனது 43 வயதுடைய சகோதரனை குத்திக் கொலை செய்து தலைமறைவாகியுள்ளார்.

கத்திக் குத்துக்கு இலக்கான நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தலைமறைவான சகோதரனை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதின்ம வயது சிறுமியை சீரழித்த குடும்பஸ்தர்!!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா- பிரவுன்ஸ்வீக் தோட்ட பிரவுன்ஸ்வீக் பிரிவில் வசிக்கும் 15 வயதான சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக திருமணமான 32 வயதான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி, தாத்தா பாட்டியின் பாதுகாப்பிலேயே இருந்த நிலையில் , குடும்பஸ்தரின் வீட்டுக்கு, அவ்வப்போது சென்று வந்த நிலையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படுகின்றது.

கிடைக்கபெற்ற தகவலையடுத்து குடும்பஸ்தரை கைது செய்த பொலிஸார், சிறுமியை டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதித்தனர். சந்தேக நபர் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்ட போது எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவம் : 20 பேரை தேடும் பொலிஸார்!!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி, கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 20 பேர் கொண்ட குழுவை கோப்பாய் பொலிஸார் கைது செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையை இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்து யாழ், நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இளைஞனை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட போது , எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றின் அடிப்படையிலும் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய 20 பேர் வரையில் அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும்,

அவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு அருச்சுனா எம்பி நாடாளுமன்றத்திற்கு பெரும் தலைவலி!!

இலங்கையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் – அர்சுனாவால் நாடாளுமன்றம் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சட்டவிரோதமான செயலைச் செய்தால், அவருக்கு எதிராக நாட்டின் சட்டங்களை எந்த சந்தேகமும் இல்லாமல் அமல்படுத்த முடியும்.

ஆனால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதால் ,ஐந்து வருடங்களுக்கு நாடாளுமன்றம் அவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அமைச்சரவை பேச்சாள்ர் கூறினார்.

இன்றைய அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நேற்று இரவு, போக்குவரத்து விதிகளை மீறி, வண்ணமயமான விளக்குகளை எரியவிட்டு வாகனம் ஓட்டிச் சென்ற ராமநாதன் அர்ச்சுனாவை, சோதனை செய்வதற்காக தடுத்து நிறுத்தியபோது, ​​போக்குவரத்து பணியில் இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளுடன் ராமநாதன் அர்ச்சுனா தகராறு செய்துள்ளார்.

போலீசார் கேட்டபோது , அவரது ஓட்டுநர் உரிமத்தை வழங்க மறுத்த அர்ச்சுனா,அவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். ஒரு போலீஸ் அதிகாரியின் தொலைபேசியில் அவை பதிவாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கிய அனுராதபுரம் காவல்துறை, தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 183 மற்றும் 344 மீறல் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தற்போதுள்ள சட்ட விதிகளின்படி மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், சந்தேக நபரைக் கைது செய்ய மேலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து பிப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டால், அவருக்கு எதிராக சட்டம் பிரயோகிக்கப்படும். நாடாளுமன்றத்தில் அவரது நடத்தை குறித்து நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன. எம்.பி. அர்ஜுனனுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் வைத்த குற்றச்சாட்டுகளும் உள்ளன. இது தொடர்பாக இன்று ஒரு நாடாளுமன்றக் குழு கூடியது.

அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். நாடாளுமன்றத்தில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்களை அமைக்கலாம். சிறப்புரிமைக் குழுக்களை அமைக்கலாம்.

ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.