இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் நாடெங்கும் 70 எய்ட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக பால்வினை மற்றும் எச்.ஐ.வி.(எய்ட்ஸ்) நோய்த்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இவர்களுள் 70 சதவீதமானவர்கள் ஆண்கள் எனவும், அவர்களில் பெரும்பாலானோர் ஓரினச் சேர்க்கையாளர்கள் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குறித்த நபர்கள் 25 தொடக்கம் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அவர் இதன்போது தெரிவித்தார். இந்த நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படவேண்டும் எனவும், அவ்வாறு செய்யத் தவறினால் நிலைமை மேலும் விபரீதமாக இடமுண்டு எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புத்தளம்- மஹா கும்புக்கடவல பகுதியில் இரட்டைக் குழந்தைகளை துஷ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 14 வயதுடைய இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் அதே பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாதிக்கப்பட்ட பெண்களின் தாயார் வெளிநாடு ஒன்றில் தொழில் புரிவதாகவும், தந்தை இவர்களை கைவிட்டு சென்றுள்ளதால் பாட்டியுடன் வாழ்ந்து வந்ததாகவும் அவ் வேளையிலேயே குறித்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர் கைது செய்யப்பட்டு புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் கடும் வெப்பநிலை தொடர்வதால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதுடன், வெப்பத்தை தனிக்கும் உணவு வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்ட அதிக வெப்பத்தால் மன்னார் மாவட்டமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மன்னாரில் இளநீருக்கும், எலுமிச்சம் பழத்திற்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. மேலும் கெக்கரிக்காய், வெள்ளரிப்பழம், பப்பாசிப்பழம் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதுடன் அதன் விலையும் சரிசமனாக அதிகரித்துள்ளது.
முன்னர் 40 ரூபாவுக்கு விற்பனையாகிய இளநீர் தற்போது 60 ரூபா முதல் 80 ரூபாவரை அதிகரித்துள்ளது.இதேவேளை ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த வெள்ளரிப்பழம் மற்றும் பப்பாசிப்பழங்களின் விலை தற்போது 80 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வட்டவளை டீ கார்டன் பகுதியில் 200 அடி பள்ளத்தில் பாய்ந்தே குறித்த வேன் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
வேனில் இருவர் பயணித்துள்ளதாகவும், சாரதி பாய்ந்து உயிர்தப்பியுள்ளதாகவும் மற்றொருவர் சிறு காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2016ம் ஆண்டுக்கான சர்வதேச ஊடக சுதந்திரம் தொடர்பான தரவரிசைப் பட்டியலை எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வொஷிங்டனில் வைத்து வெளியிட்டுள்ளது.
இதன் பிரகாரம் ஊடக சுதந்திரம் தொடர்பான விடயத்தில், கடந்த வருடம் 165வது இடத்தில் இருந்த இலங்கை இந்த ஆண்டு 24 இடங்கள் முன்னேரி 141வது இடத்தைப் பிடித்துள்ளது.
180 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் பின்லாந்து தொடர்ச்சியாக ஆறாவது வருடமாகவும் முதலாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இரண்டாம், மூன்றாம் இடங்களில் நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளும், இந்தியா 133வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 120 வது இடத்திலும், நேபாளம் 105 வது இடத்திலும், பூட்டான் 95 வது இடத்திலும் உள்ளன.
இலங்கையின் மனித உரிமைகள் துறையில் குறிப்பிடத்தகக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிரித்தானியா மற்றும் பொதுநலவாய அமைப்பு அலுவலகம் கூறியுள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக வௌியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் நாட்டிற்குள் ஊடக சுதந்திரம் உட்பட கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சமூகத்தில் குழுக்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானியா மற்றும் பொதுநலவாய அமைப்பு அலுவலகம் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டின் பின்னர் இந்த சிறந்த போக்கு இலங்கைக்குள் இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்குள் மனித உரிமைகள் விடயத்தில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக மேலும் பல நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் திகதி புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.
7.8 பில்லியன் மரங்களை எதிர்வரும் 5 வருடங்களுக்குள் நாட்டுவதும் புவியை சுத்தமாகவும் இயற்கை வனப்புடனும் பேணுவது இந்த புவி தினத்தின் கருதுகோளாகும்.
1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவரான ஜான் மெக்கானெல் (John McConnell) அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர்.
மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார்.
அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் புவி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
புவி தினம் அனுஷ்டிக்க ஆரம்பித்து இன்று 40 வருடங்கள் கடந்துள்ள போதிலும் புவியின் பாதுகாப்பு தொடர்பிலான கருதுகோள்கள் பெருமளவில் அதிகரித்துள்ளனவே தவிர, புவி வெப்பமடைதல் போன்ற இயற்கைக்கு ஒவ்வாத காரணிகளை மனிதன் அதிகளவில் செயற்படுத்தியே வருகின்றான் என்பது கவலைக்குரிய விடயமாகும்.
வவுனியாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் யுவதி வேலைக்குச் செல்வதாக கூறி விட்டுச் சென்று இதுவரை வீடு திரும்பவில்லை என்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வந்த குறித்த19 வயது யுவதி நேற்று முன்தினம் (19.04.2016) பிற்பகல் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று (20.04.2016) தாயார் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த யுவதி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் அந்நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றதாகவும் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவர் பயிற்சியின் போது திடீரென்று கீழே விழுந்து இறந்து போனது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாபிரிக்கா முன்னாள் வீரர் பின்கோ நகம் கேப் டவுனில் கிரிக்கெட் அகடமியை நடத்தி வருகிறார். அங்கு பயிற்சி மற்றும் உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. அப்போது இடைவேளையில் லுகான்யா டஸ்கி,22 என்ற வீரர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு இதய கோளாறு இருந்ததாக கூறப்படுகிறது.
கிரிக்கெட் அகடமியை நடத்தி வந்த பின்கோ நகம் கூறுகையில், டஸ்கி நலமாகவே இருந்தார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
அவர் உடற்தகுதி தேர்வின் ஒரு பகுதியை முடித்து விட்டு தனது சட்டையை கழற்றி சக வீரர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.அப்போது திடீரென இரும்பிக் கொண்டே கீழே விழுந்து விட்டார்.
நாங்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், இருப்பினும் தாமதம் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.
டஸ்கி குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களை தெரிவித்த தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஹாரூன் லோர்கட், இது அதிர்ச்சி தரும் செய்தி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் அமர்ந்து உணவு உண்பதற்கு ஏற்ற வகையில் உணவகம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.
60 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ரோமானியர்கள் தாங்கள் உண்ணும் உணவுப்பொருட்கள் ஆடைகளில் சிந்திவிடுவதால் அதனை தவிர்ப்பதற்காக அரைநிர்வாணம் மற்றும் நிர்வாணமாக அமர்ந்து சாப்பிடும் உணவகங்களை அமைத்தனர்.
ரோமானியர்களிடம் நல்ல வரவேற்பைபெற்ற இந்த உணவகம் தற்போது லண்டனில் வரவிருக்கின்றது, ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் அரைநிர்வாண முறையில் அமர்ந்து மது அருந்தும் மதுபானக்கடைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மதுபானக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்தும் மது அருந்தும் இருக்கையானது நன்றாக வடிவமைக்கப்பட்டு சற்று நாகரீகமாக இருக்கும்.
இந்நிலையில், அரைநிர்வாண மதுபானக்கடைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அதனை அடிப்படையாக கொண்டு லண்டனில் உணவகம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது.
இந்த உணவகம் முற்றிலும் மூங்கிலைகொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும், மேலும் வாடிக்கையாளர்களை சுற்றி மெழுகுவர்த்தி வெளிச்சங்களே இருக்கும், மின்சார விளக்கு, கைப்பேசிகள் போன்ற நவீன உலகத்தில் இருந்து விடுபட்டு மாறுபட்ட உலகத்திற்கு உங்களை அழைத்துசெல்வது போன்று இருக்கும்.
மேலும், இந்த உணவகத்தில் இரண்டுஅறைகள் இருக்கும், உட்புறமாக இருக்கும் அறையில் நிர்வாணமாக இருக்கும் வாடிக்கையாளர்களும்,வெளிப்புற அரையில் அரைநிர்வாண வாடிக்கையாளர்களும் அமர்ந்து உணவருந்தலாம்.
இந்த உணவகத்திற்கு செல்ல வேண்டுமானால்,http://thebunyadi.com/ என்ற இணையதளத்தில் நமது பெயரை பதிவு செய்த பின்னர், அவர்களிடம்இருந்த அந்த நபருக்கு ரகசிய கோடு அனுப்பப்படும்,அதன் பின்னரே இந்த உணவகத்திற்கு செல்ல முடியும்.
இந்நிலையில், வரவிருக்கின்ற இந்த உணவகத்திற்கு செல்வதற்காக 5,000 பேர் தங்களுடைய பெயர்களை பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் மெக்டொனால்ட் தனியார் நிறுவனம் சுமார் 5,000 கோடி ரூபாய் வரை வரி செலுத்தாமல் உள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனிக்கு அடுத்ததாக 1,300 ’மெக்டொனால்ட்(McDonald) உணவகங்களை கொண்டு பிரான்ஸ் நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஆனால், ஐரோப்பிய நாடுகளிலேயே ஆண்டுக்கு சுமார் 4.4 பில்லியன் யூரோ(73 ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்) வரை இந்த உணவகம் பிரான்ஸில் விற்பனை செய்து வருகிறது.
மேலும், கடந்த 2009 ஆண்டு வரை இந்த நிறுவனம் பிரான்ஸில் நாட்டில் சுமார் 10,000 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியும், சுமார் 1.2 பில்லியன் யூரோவை பிரான்ஸ் அராசங்கத்திற்கு வரியாக செலுத்தியுள்ளதாக நிறுவனமே அண்மையில் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், சுமார் 300 மில்லியன் யூரோ(49,86,11,49,000 இலங்கை ரூபாய்) வரை மெக்டொனால்ட் வரி செலுத்தவில்லை என்றும், அந்த வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் அரசாங்கம் கடந்தாண்டு உணவகத்துக்கு உத்தரவிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இது குறித்து மெக்டொனால்ட் நிறுவனத்திடம் செய்தியாளர்கள் பேசியபோது, ‘பிரான்ஸ் நாட்டில் அதிக வரி செலுத்தும் நிறுவனங்களில் மெக்டொனால்ட் நிறுவனமும் ஒன்று’ என தெரிவித்துள்ளது.
ஆனால், அரசாங்கம் உத்தரவிட்டுள்ள செலுத்தப்படாத வரி தொகையை பற்றி அந்த நிறுவனமும் எந்த கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போலந்து நாட்டில் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அது தற்போது வீட்டுற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
போலந்து நாட்டில் வசித்து வரும் 41 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் அண்மையில் அங்குள்ள Wroclaw பல்கலைக்கழக மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இவரது மூளையில் குணப்படுத்த முடியாத கட்டி இருந்ததால், கர்ப்பிணிக்கு பிரசவம் பார்ப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனினும், கடுமையான போராட்டங்களுக்கு பிறகு, கர்ப்பிணி பெண்ணை சுயநினைவு இல்லாமலே 55 நாட்கள் மருத்துவமனையில் வைத்தனர்.
இந்த நாட்களில் வயிற்றில் இருந்த குழந்தை நன்கு வளர்ந்துள்ளது. எனினும், நீண்ட நாட்கள் குழந்தை வயிற்றில் இருப்பது அதன் உயிருக்கு ஆபத்து என தீர்மானித்த மருத்துவர்கள் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தையை மருத்துவர்கள் பாதுகாப்பாக வெளியே எடுத்து அதிநவீன சிகிச்சை மூலம் கண்காணித்து வந்துள்ளனர்.
குழந்தை பிறந்ததும் தாயாருக்கு அளித்து வந்த சிகிச்சையை நிறுத்தியதால், அவர் உயிரிழந்தார்.குழந்தை பிறந்தபோது ஒரு கிலோ மட்டுமே இருந்ததால், கடந்த 3 மாதங்களாக குழந்தை மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.
இந்நிலையில், குழந்தைக்கு 3 கிலோ எடை அதிகரித்துள்ளதை தொடர்ந்து, உயிரிழந்த தாயாரின் உறவினர்களை அழைத்த மருத்துவர்கள் அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.
தற்போது அந்த குழந்தை வீட்டிற்கு திரும்பி விட்டதாகவும், குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் பச்சிளம் குழந்தைகளுக்கு, திருமணம் செய்து வைத்த கொடுமை நிகழ்ந்துள்ளது. குழந்தை திருமணம் 2006ம் ஆண்டு குழந்தை திருமண சட்டத்தின் கீழ் இந்தியாவில் சட்டவிரோதமானது.
ஆனாலும், இந்தியாவில் குழந்தை திருமணம் இன்றளவும் ஆங்காங்கே நடந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தூர்கார் என்ற நகரத்தில் நடந்த குழந்தை திருமணம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
திருமணம் என்ற வார்த்தை கூட தெரியாத அந்த பச்சிளம் குழந்தைகள், தங்களுக்கு நடப்பது என்ன என்று அறியாமல் பயத்தில் அழுதுள்ளனர்.
அந்த வீடியோவில், 12 வயது சிறுவனுக்கு 5 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்த 5 வயது சிறுமி அழுவதை கூட பொருட்படுத்தாமல், திருமண சடங்குகளை நிகழ்த்தியுள்ளனர்.
சுமார் 2 நாட்களில் 6 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஸ்ஸாமில் பெண் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற ஆணின் ஆணுறுப்பை வெட்டி கொலை செய்து புதைத்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
அஸ்ஸாமில் உள்ள Bharajuli என்ற கிராமத்தில் வசித்து வந்த, திருமணமான ரிதா ஓரங் என்ற ஆதிவாசி பெண்னை கடந்த ஏப்ரல் 4ம் திகதி, கிருஷ்ணா பூமிஜ் (30) என்ற நபர் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற அந்த நபரின் ஆணுறுப்பை வெட்டி கொலை செய்துள்ளார். மேலும், அந்த நபரின் உடலை 7 பெண்களின் உதவியுடன், அருகில் இருக்கும் கல்லறை பகுதியில் புதைத்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் செவ்வாய்க் கிழமை தான் பொலிசருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை செய்த அந்த பெண்ணையும், அவரது கணவரையும் பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், ரிதாவிற்கு உதவிய 7 பெண்கள் பற்றியும் விசாரித்து வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் அன்குர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
பொலிசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட கிருஷ்ணனின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் நடத்திய விசாரணையில் தான் இந்த கொலை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கிருஷ்ணாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ரிதா கிருஷ்ணா பற்றி கூறுகையில், அவன் எங்கள் வீட்டில் நுழைந்து என்னையும், என் மகளை பலாத்காரம் செய்ய முயன்றான். ஆனால் சுதாரித்து கொண்ட நான், விரைவில் கோடாரியை கையில் எடுத்துவிட்டேன்.
இதை பார்த்த அவன் எனக்கெதிராய் சண்டையிட முயன்றான். பின்னர் வீட்டை விட்டு ஓடிய அவனை துரத்தி அடித்தேன், இந்த தாக்குதலில் கீழே விழுந்த அவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
அவன் இந்த தாக்குதலில் உயிர் தப்பிடுவான் என்ற பயத்தில் தான், நான் அவனது ஆணுறுப்பை வெட்டினேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அன்று மாலையே அவர் 7 பெண்களின் உதவியுடன் கிருஷ்ணாவின் உடலை புதைத்துள்ளார்.
மூத்த பொலிசார் சிலர் கொலை செய்யப்பட்ட கிருஷ்ணா பற்றி கூறுகையில், அவன் ஒரு மோசமான தேடப்படும் குற்றவாளி.
அவன் மீது இரண்டு வழக்குகளில் பிணையில் வெளி வரமுடியாத கைது வாரண்டுகள் உள்ளன என தெரிவித்துள்ளனர்.
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா வடக்கு வலய புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு உதவிவழங்கப்பட்டது.
வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டு நிதியிலிருந்து வவுனியா வடக்கு வலய புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு கட்டிட புனரமைப்புக்காக உதவி வழங்கப்பட்டது.