தகாத உறவு வைத்திருந்ததற்காக சவூதியில் தண்டனைப் பெற்ற இலங்கைப் பெண் தாயகம் வருகை!!

Capture

சவூதி அரேபிய நாட்டில் கற்களால் அடித்து கொலை செய்யப்படவிருந்த இலங்கைப் பெண் தாயகம் வரவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண் சவூதி அரேபிய நாட்டில் நபர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததன் காரணமாகவே இந்த தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இலங்கைப் பெண்ணுக்கு கற்களால் அடித்து கொலைசெய்யுமாறும், இதனுடன் தொடர்புடைய இளைஞனுக்கு 100 கசையடிகளும் வழங்குவதற்கும் சவூதி அரசு தீர்மானித்துள்ளது.

இதனையடுத்து இந்த தண்டனையை வழங்க வேண்டாம் என இலங்கையிலும், உலக நாடுகளிலும் எதிர்ப்புகள் ஏற்பட்டதோடு, இலங்கை அரச தரப்பிலும் சவூதி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன் இவர்களுடைய கோரிக்கைகளை ஆராய்ந்த சவூதி அரசு, இந்தப் பெண்ணுக்கான தண்டனையை 4 வருட சிறை தண்டனையாக மாற்றி அமைத்தது.

மேலும் கடந்த வாரம் இடம்பெற்ற சவூதி மன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு குறித்த பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமையவே குறித்த பெண் இலங்கைக்கு வரவுள்ளதாக பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி திருகோணமலைக்கு திடீர் இடமாற்றம்!!

Vavuniya-Court

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் வவுனியாவில் இருந்து திருகோணமலைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் வவுனியாவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்.

பிரதம நீதியரசரின் உத்தரவுக்கமைய இடம்பெற்றுள்ள இந்தத் திடீர் இடம் மாற்றம் நாளையில் இருந்து நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் அன்றே விபத்தில் இறந்த இளைஞன்!!

Mranam

மன்னார் மாவட்டம், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் தனது பிறந்த நாள் அன்று மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து ஞாயிற்றுக் கிழமை (17.04) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நந்தீஸ் என அழைக்கப்படும் ஜேசுதாசன் பேசி சந்துரு ரெவல் என்ற இளைஞன், தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை சக நண்பர்களுடன் மதியம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பின்னர் தனது சக நண்பன் ஒருவனை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மீண்டும் முள்ளிக்குளம் கிராமத்திற்கு சென்ற போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மரம் ஒன்றுடன் மோதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் போது படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எனினும் குறித்த இளைஞன் உயிரிழந்ததோடு மற்றைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் அவருடைய பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மது போதையில் மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக சென்றதன் காரணத்தினாலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

வினையில் முடிந்த விளையாட்டு : மரதன் ஓடியவர் மரணம்!!

marathan

சூரியவெவ பிரதேசத்தில் புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற போட்டியில் கலந்து கெண்ட ஒருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சூரியவெவ பிரதேச செயலகம் மற்றும் பொலிஸார் இணைந்து கடந்த 19ம் திகதி ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் மரதன் ஓட்டப் போட்டிகளும் நடைபெற்றன.

இதில் கலந்து கொண்ட சூரியவெவ – மீன்பிடிக் கிராம பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இந்தநிலையில் தனது கணவருக்கு நெஞ்சுவலி பிரச்சினை இருப்பதால் இந்த மரதன் ஓட்டப் போட்டியில் அவரைக் கலந்து கொள்ள வேண்டாம் எனத் தான் கூறியதாகவும் எனினும் அவர் அதனை கருத்தில் கொள்ளாது போட்டியில் கலந்து கொண்டதாகவும், உயிரிழந்தவரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் போட்டிக்கு முன்னர் வைத்தியப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா குருக்கள் புதுக்குளம் அ.த.க.பாடசாலைக்கு ம.தியாகராசா உதவி!!

 
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா தெற்குவலய குருக்கள் புதுக்குளம் அ.த.க.பாடசாலைக்கு உதவிவழங்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டு நிதியிலிருந்து வவுனியா தெற்குவலய குருக்கள் புதுக்குளம் அ.த.க.பாடசாலைக்கு நிழல்பிரதி இயந்திரம் ஒன்றை வழங்கினார்.

IMG_1561 IMG_1562 IMG_1563 IMG_1564 IMG_1565

100 கோடி பவுண் செலவில் பிறந்தநாள் கொண்டாட்டம்!!

1422577340745

பிரித்­தா­னிய மகா­ரா­ணியின் 90 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக அந்நாட்டு மக்கள் செலவிடும் தொகை சுமார் 100 கோடி பவுண்களை (இலங்கை ரூபா­வில் 20,008 கோடி­) தாண்டும் என ஆய்வின் மூலம் தெரி­ய­­வந்­துள்­ளது.

பிரித்தா­னி­ய மகா­ராணி எலிசபெத்தின் உண்மையான பிறந்த தினம் ஏப்ரல் 21 ஆம் திகதியும், அதிகாரப்பூர்வ பிறந்த தினம் ஜூன் 11 ஆம் திகதியும் பிரித்தா­னி­யா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.மகா­ரா­ணி­யின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக, நாடு முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மகா­ரா­ணி­யின் பிறந்த நாள் விழாவுக்காக சராசரியாக ஒவ்வொரு பிரித்­தா­னி­ய பிரஜையும் 42.98 பவுண்செலவிடத் திட்டமிட்டுள்ளனர். அதிலும், குறிப்பாக ஆண்கள் பெண்களைக் காட்டிலும் கூடுதலாக 20 பவுண் செலவிட உத்தேசித்துள்ளனர்.இதன்படி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களுக்காக சுமார் 100 கோடி பவுண் செலவிட உள்ளதாக ஆய்வில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

அஜித்துடன் இணையும் கமல்ஹாசன் – ரசிகர்கள் உற்சாகம்!!

28-ajith-kamal

கமல்ஹாசன் பல வருடங்களாக தன்னிடம் பி.ஆர்.ஓ. வாக இருந்தவரை கடந்த டிசம்பர் மாதம் நீக்கியிருந்தார். அதன்பிறகு என்ற பி.ஆர்.ஓவையும் நியமிக்காமல் இருந்த அவர் தற்போது அஜித்தின் மனேஜரை தன்னுடைய பி.ஆர். ஓ வாக நியமித்துள்ளார் கமல்.

இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. கமல்ஹாசனின் இந்த கூட்டணியால் அஜித், கமல் இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.அப்படி கமலும், அஜித்தும் இணைந்தால் நிச்சயம் அப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

கொளுத்தும் வெயிலில் அனுஷ்கா படும் கஷ்டம்!!

anushka_3_0_0

தென்னிந்தியா சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக ரிஸ்க் எடுத்து நடிக்கும் ஹீரோயின் அனுஷ்கா. இவர் அடுத்து பாகுபலி-2 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இப்படத்திற்காக அனுஷ்கா நகை, கிரீடம் என அணிந்து நடித்து வருகிறாராம்.மேலும், கொளுத்தும் வெயிலிலும் அனுஷ்கா இப்படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு நடிப்பதாக கூறப்படுகின்றது.

 

காகிதப்பூ

Flower

மலரும் மலர்கள் யாவும்
பெண்ணவள் வண்ணம்.

மணம் கொள்ளா மலர் நீ
யார் செய்த பாவம்.

மனம் கொண்ட மனிதரும்
பணம் கொண்டே பாசம்.

பெண் மலர் உன் சீர் தனம் காணா,
மண் மகள் கேட்பாள் சீதனம்.

உன்னை ஈன்ற தாயவள் மகிழ்வு
உனக்கில்லை. பலிச்சொல் மலடியாம்.

காகிதப் பூ நீ வாடாதே.
காந்தள் மலராய் துணிந்து எழு.

வீண் பழி தானே எரிந்து விடும்.
விசையாய் விண்ணைத் தொட்டு விடு.

ஒரு பொழுதும் வாடாத காகிதப் பூ.
வாழ்வை கொடுத்திடு பிறர்க்கென்றும்.

உன் அன்பைத் தேடும் சொந்தங்கள்
ஆயிரம் உண்டு உலகில்.

எதற்கு வீண் தயக்கம்.
துணிந்திரு விடிந்திடும் உலகம் தானே.

-குமுதினி ரமணன்-

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தண்ணீர் பஞ்சம்: அணைகளை திறக்கும் சீனா!!

Skintype2.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் தங்களது அணைகளில் இருந்து தண்ணீரை திறந்துவிட சீனா முடிவு செய்துள்ளது.எல் நீனோ விளைவு காரணமாக பூமியில் திடீர் மழை, கடும் வெயில் போன்றவை ஏற்பட்டு வருகின்றன. இந்த எல் நீனோ தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.

இதனால் கடந்த பத்து ஆண்டுகளில் சந்திக்காத வறட்சியை தாய்லாந்து சந்தித்து வருகிறது. அங்குள்ள 76 மாகாணங்களில் 14 மாகாணங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வருகின்றன.வியட்நாமின் நிலையோ இன்னும் மோசமாக உள்ளது. கடந்த 90 ஆண்டுகளில் பார்த்திராத பஞ்சத்தை அந்நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

1.8 மில்லியன் குடிமக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இதேபோல் லாவோஸ், கம்போடியா ஆகியவையும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றன.இந்நிலையில் வறட்சியை ஓரளவு போக்கும் விதமாக தங்கள் நாட்டில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீரை திறந்துவிட சீனா முடிவுசெய்துள்ளது.

இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லூ காங் கூறுகையில், நீர் குறைந்துள்ள இந்த காலம் முழுவதுமே அணைகள் திறந்திருக்கும்.இதன் மூலம், தாய்லாந்து வியட்நாம், லாவோஸ், மியான்மர் போன்ற நாடுகள் நன்மை பெறும் என்று தெரிவித்துள்ளார்.

 

வேலையில்லாத ஒவ்வொரு குடிமகனுக்கும் 3 லட்சம் மாத ஊதியம்: அரசு அதிரடி திட்டம்!!

job-seekers-beware-these-social-media-traps-46dbba7ca8-12

சுவிட்சர்லாந்து நாட்டில் வேலையில்லாமல் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் எவ்வித நிபந்தனை இன்றி மாதந்தோறும் 3 லட்ச ரூபாய் ஊதியமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.உலகிலேயே முதன் முதலாக வேலையில்லாமல் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கு மாத ஊதியம் வழங்குவது குறித்து சுவிட்சர்லாந்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், சுவிட்சர்லாந்து நாட்டு சட்டப்படி, ஏதாவது ஒரு புதிய திட்டம் அல்லது சட்டத்தை கொண்டு வந்தால், அதற்கு அந்நாட்டு மக்கள் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அரசாங்கம் செயல்படுத்த முடியும்.மக்களிடம் பெரும்பான்மை குறைந்திருந்தால் அரசாங்கம் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது. எனவே, வேலையில்லாத குடிமகன்களுக்கு மாத ஊதியம் வழங்குவது தொடர்பான இந்த திட்டம் மீது எதிர்வரும் யூன் மாதம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பில், அரசின் திட்டத்திற்கு மக்கள் வாக்களித்து விட்டால், உடனடியாக இந்த திட்டம் அமுலுக்கு கொண்டு வரப்படும்.அதாவது, சுவிஸில் வேலையில்லாமல் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒவ்வொரு மாதமும் 2,500 பிராங்க்(3,76,980 இலங்கை ரூபாய்) வழங்கப்படும்.

வேலையில்லாத வாலிபர்களுக்கு 625 பிராங்க்(94,256 இலங்கை ரூபாய்) மாத ஊதியமாக வழங்கப்படும்.இதே வரிசையில், ஒரு குடிமகன் குறைந்த பட்சம் 1,000 பிராங்க் மாத ஊதியமாக பெற்று வந்தால், அவருக்கு அரசாங்கத்தின் சார்பில் கூடுதலாக 1,000 பிராங்க் அளிக்கப்படும்.

ஆனால் ஏற்கனவே 2,500 பிராங்க் மாத ஊதியம் பெற்று வரும் குடிமகனுக்கு, மேலே கூறப்பட்ட அரசாங்க ஊதியம் வழங்கப்பட மாட்டாது.எனினும், மேலே கூறப்பட்டுள்ள இந்த தொகையை இன்னும் அரசாங்கம் இறுதி செய்யவில்லை. இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ள அதிகாரிகள் இந்த தொகையை அரசிற்கு சிபாரிசு செய்துள்ளனர்.

பொதுமக்களின் வாக்கெடுப்பில் இந்த திட்டம் நிறைவேற ஒப்புதல் அளித்தால், வேலையில்லாத குடிமகனுக்கு எவ்வளவு மாத ஊதியம் வழங்கலாம் என அரசு இறுதி செய்யும். எனினும், வேலையில்லாத குடிமகனுக்கு சராசரியாக மாதம் 2,500 பிராங்க் ஊதியமாக கிடைக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேலையில்லாத குடிமகன்களுக்கு நிபந்தனை இல்லாத மாத ஊதியம் அளிக்கும் இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு 208 பில்லியன் பிராங்க் செலவாகும்.சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வறுமையை வேரோடு நீக்குவதற்கும், பொதுமக்கள் கண்ணியத்தோட நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கும் இந்த திட்டத்தை கொண்டு வரவுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதும், அல்லது தடை செய்யப்படுவதும் எதிர்வரும் யூன் மாதம் நடக்கவுள்ள வாக்கெடுப்பு தான் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தாய்மைக்கே அவமானம்: ’காமத்திற்காக’ நடந்த கொடூரக் கொலை!!

Kasaragod-Techie-murders-paramour’s-daughter-and-mother-in-law2

கேரளாவில் ஐ.டி ஊழியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவரது சக பெண் ஊழியருக்கு வாழ் நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நினோ மேத்யூ என்ற நபரும் அனுசாந்தி என்ற பெண்ணும் கேரளாவில் உள்ள ஐ.டி பார்க்கில் பணிபுரிந்து வந்துள்ளனர். அனுசாந்திக்கு லிஜேஷ் என்ற கணவரும் 3 வயதில் ஒரு குழந்தையும் இருந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தங்களின் காதலுக்கு தன் கணவரும், குழந்தையும் இடையூறாக இருப்பதாக கருதிய அனுசாந்தி, நினோ மேத்யூ-உடன் இணைந்து அவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.இந்த சம்பவம் கடந்த 2014ம் ஆண்டு நடந்துள்ளது. நினோ மேத்யூஸ் அனுசாந்தியின் 3 வயது மகளான ஸ்வஸ்திகாவை கொலை செய்ததோடு, அனுசாந்தியின் மாமியாரான ஓமனாவையும் கொலை செய்துள்ளார்.

இந்த கொலைகளை செய்த போது வீட்டில், லிஜேஷ் இல்லாததால், லிஜேஷ் வருவதற்காக அரை மணி நேரம் நினோ மேத்யூஸ் அங்கே காத்திருந்துள்ளார்.இதையடுத்து லிஜேஷையும் கொலை செய்ய முயன்ற போது அவர் அதிஷ்டவசமாக காயங்களுடன் தப்பியோடியுள்ளார்.

அவர் அக்கம் பக்கத்தினரிடம் நடந்தவற்றை கூறிய பின்னர் தான் இந்த கொலை சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.இது தொடர்பான வழக்கு நடந்த வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 49 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

85 ஆவணங்கள் ஆதாரமாக காட்டப்பட்டுள்ளன.மேலும் குற்றம்சாட்டபட்டவர்களின் லேப்டாப்பில் இருந்த வீடியோ ஆதாரங்களும் தடயங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இதில் முக்கிய சாட்சியாக அனுசாந்தியின் கணவர் லிஜேஷ் அளித்த வாக்குமூலம் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ள திருவனந்தபுரம் நீதிமன்றம், இந்த வழக்கினை அரிதினும் அரிதான வழக்கு என குறிப்பிட்டுள்ளது.மிகவும் கொடூரமான மற்றும் இழிந்த குற்றம் என இதனை குறிப்பிட்ட நீதிபதி, அனுசாந்தி இந்த கொலை குற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும், அவர் பெண் என்பதால் இந்த வழக்கின் தீவிர தண்டனையில் இருந்து விலக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அனுசாந்தியின் இந்த செயல் “தாய்மைக்கு அவமானம்” என குறிப்பிட்ட நீதிபதி, காமத்திற்காக பெற்ற மகளையும், மாமியாரையும் இரக்கமற்ற முறையில் கொலை செய்ய அனுசாந்தி உதவியதை குறிப்பிட்டுள்ளனர்.நினோ மேத்யூவிற்கு மரண தண்டனையும், அனுசாந்திக்கு வாழ் நாள் சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளனர்.மேலும், இருவரும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவற்றில் 50 லட்சம் ரூபாயை அனுசாந்தி கணவர் லிஜேஷுக்கு வழங்குமாறு குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா பூவரசங்குளம் சன்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் வலைப்பந்தாட்டப் போட்டிகள்!!

 
தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு பூவரசங்குளம் கந்தன்குளம் சன்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், வவுனியா மாவட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டு கலந்துகொண்ட கழகங்களுக்கிடையில் வலைப்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியீட்டிய கழக வீரர்கள் வெற்றிக்கிண்ணங்களும், பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கந்தன்குளம் சன்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் சிவானந்தம் (ரவி) தலைமையில் நேற்று முன்தினம் (17.04.2016) கந்தன்குளம் கிராமத்தில் நடைபெற்ற இந்த வலைப்பந்தாட்ட போட்டியில் ஓமந்தை, வேப்பங்குளம், நெளுக்குளம், கற்பகபுரம், பாரதிபுரம், தாலிக்குளம் பூவரசங்குளம், வேலங்குளம், கந்தன்குளம் கிராமங்களைச்சேர்ந்த 18 அணிகள் பங்குபற்றியிருந்தன.

அணிக்கு நான்கு வீரர்களைக்கொண்டு விலகல் முறையில் (knockout) நடைபெற்ற வலைப்பந்தாட்ட போட்டியில்,
முதலாம் இடத்தை – அம்பிகை விளையாட்டுக்கழகமும் (பாரதிபுரம்),
இரண்டாம் இடத்தை – கிருஷ்ணா விளையாட்டுக்கழகமும் (தாலிக்குளம்),
மூன்றாம் இடத்தை – வேப்பங்குளம் விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டன.

பூவரசங்குளம் கிராம அலுவலர் கஜேந்தன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சார்பில் அவரது பிரதிநிதியாக கந்தா ஆகியோர் கலந்துகொண்டு வெற்றியீட்டிய கழக வீரர்களை வெற்றிக்கிண்ணங்களும், பதக்கங்களும் வழங்கி கௌரவித்தனர்.

இந்த வலைப்பந்தாட்ட போட்டிக்கான நிதியுதவி அனுசரணையை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வழங்கியிருந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்கும் தீர்வுத்திட்ட யோசனைகளை கூட்டமைப்பு சாதகமாகப் பரிசீலிக்கும் : சிவசக்தி ஆனந்தன்!!

 
தமிழ் மக்களினுடைய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வைக்காண வேண்டிய இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் பேரவையினாலும், வடமாகாணசபையினாலும் தனித்தனியே முன்மொழியப்பட்ட தீர்வுத்திட்ட யோசனைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு சாதகமாகப் பரிசீலிக்கும் என்று தாம் நம்புவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த 17.04.2016 ஞாயிறன்று மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பிலேயே சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்:

நீண்டகாலமாக தமிழ் மக்கள் தமக்கான தீர்வு என்ன என்பதை முழுமையாக கூறவில்லை என்று பலராலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக பிரதம மந்திரி அவர்களும் முக்கிய அமைச்சர்களும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன? என்பதை முன்வைக்கவில்லை என்று குறைகூறியுள்ள நிலையில், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராகவும் வடமாகாண முதலமைச்சராகவும் திகழும் கௌரவ க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் முன்வைக்கப்பட்டிருக்கின்ற தீர்வுத்திட்ட யோசனைகளை நாம் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டிய நேரம் வந்துள்ளது என்று தெரிவித்தார்.

கலந்துரையாடலில் கலந்துகொண்ட பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தமது பிரதேசங்களின் குறைகளையும் தேவைகளையும் முன்வைத்தனர்.

நீண்ட காலமாக மிகவும் மோசமாக சேதமடைந்துள்ள போக்குவரத்து பாதைகள் புனரமைத்து தரப்பட வேண்டும்.

மல்லாவி பொலிஸ் நிலையத்தின் காணியில் ஒரு பகுதியை (மூன்றரை ஏக்கர்) பிரதான பஸ் நிலையத்துக்குப் பெற்றுத்தர வேண்டும்.

மல்லாவி சந்தை கட்டடத்தொகுதியில் ஏற்கனவே சந்தையில் கடை வைத்திருந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.

மல்லாவி பொலிஸாரின் இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆலங்குளம் பொதுநோக்கு மண்டபம், முன்பள்ளி கட்டடம் அமைந்துள்ள ஒரு ஏக்கர் காணியை விடுவித்து தரவேண்டும்.

மத்திய மாகாண அரசுகள் அரச நியமனங்கள் வழங்கும்போது மாவட்ட அடிப்படையில் வெற்றிடங்களுக்கு ஏற்ப வழங்க வேண்டும்.

பிரதேசத்தில் குறையாக உள்ள மின்சார வேலைகளை பூர்த்தி செய்து தரவேண்டும்.

மல்லாவியில் ஒரு கலாசார மண்டபம் கட்டித்தரவேண்டும்.

வடமாகாணத்தின் தலைநகரமாக மாங்குளத்தை அமைக்க வேண்டும்.
மாகாண அமைச்சர்கள் மாவட்டங்களுக்குச் செலவு செய்த பணத்தை மாவட்ட ரீதியாக வெளிப்படுத்த வேண்டும்.

வவுனிக்குளத்திலிருந்து தென்னியங்குளத்துக்கு ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் அமைத்து தரவேண்டும்.

பிரதேசத்துக்கான மரண விசாரணை அதிகாரி, துணுக்காய் வலயத்துக்கான நிரந்தரமான வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீர்வை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் மாந்தை கிழக்கு முன்னைநாள் தவிசாளர் திரு.தணிநாயகம், உபதவிசாளர் செந்தூரன், அதிபர்கள், ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள், மல்லாவி மனிதநேய இளைஞர் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

DSC02547 DSC02548 DSC02555 DSC02560 DSC02564

சிறுநீரிலிருந்து பிறப்பிக்கப்பட்ட மின்சக்தியை உள்ளடக்கிய மின்கலம்!!

Urin

சிறுநீரிலிருந்து பெறப்பட்டமின்சக்தியை கொண்ட எரிபொருள் கலமொன்றை பிரித்தானியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விருத்தி செய்துள்ளனர்.

மேற்படி சிறுநீரால் செயற்படும் மைக்ரோபியல் எரிபொருள் கலமொன்று ஒரு டொலர் அளவான குறைந்த விலையைக் கொண்டதாகும்.

எடுத்துச்செல்லக்கூடிய, மீளப் புதுப்பிக்கக்கூடிய இந்தக் கலம் பின்தங்கிய பிராந்தியங்களுக்கு சுற்றுச்சூழல் நட்புறவுடைய சக்தி வளத்தைப் பெற்றுத் தருவதாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிவனொளிபாத மலையில் வழிதவறிய 200 யாத்திரிகர்கள்!!

Sivanoli

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொண்டவர்களில் சுமார் 200 பேர் வழிதவறியுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புத்தாண்டின் பின்னரான காலப் பகுதியில் மாத்திரம் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு வருகைத் தந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் வழியாக மலை ஏறியவர்கள் வழி தவறி இரத்தினபுரி வழியாக இறங்கிய சம்பவங்கள் பல பதிவாகியுள்ளது. இவ்வாறு வழி தவறியவர்களில் அதிகளவான சிறுவர்களும் முதியவர்களும் அடங்கியுள்ளனர்.

அதிக சன நெரிசல் காரணமாகவே இவர்கள் வழி தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை பொலிஸார் மீட்டு குடும்ப உறவினர்களுடன் சேர்த்து வைத்துள்ளனர்.

யாத்திரை மேற்கொள்ளும் பொழுது முதியோர் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனத்துடன் இருக்கும் படி நல்லத்தண்ணி பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.