மின்சாரம் தடைப்பட்டதனால் மின்னுயர்த்திக்குள் சிக்கிக்கொண்ட யுவதியொருவர் 45 நிமிடங்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் கொழும்பு- 02, கொம்பனி வீதியில் இடம்பெற்றுள்ளது. கொம்பனி வீதியில் உள்ள புகையிரத வீடமைப்பு தொகுதியில் வசிக்கும் யுவதியே இவ்வாறு மீட்கப்பட்டவராவார். குறித்த யுவதி, மின்னுயர்த்தியின் மூலமாக ஏழாவது மாடியிலிருந்து, கீழே வந்துகொண்டிருந்தபோதே, திடீரென மின்சாரம் தடைப்பட்டதால் இடைநடுவில் சிக்கிக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில், தீயணைப்பு சேவை திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து செயற்பட்ட தீயணைப்பு பிரிவினர், அந்த யுவதியை மீட்டுள்ளனர்.மின்னுயர்த்தியானது அதி அழுத்தம் கொண்ட ஹைட்ரோலிக் உபகரணம் ஊடாக அறுத்து துண்டாக்கப்பட்டதன் பின்னரே, அந்த யுவதி மீட்கப்பட்டார். தான், மின்னுயர் த்திக்குள் சிக்கிக்கொண்டதாக அந்த யுவதி, தன்னுடைய தொலைபேசியின் ஊடாக தாயாருக்கு தெரிவித்துள்ளார். அவ்வாறு தெரிவித்திருக்காவிடின், அந்த யுவதியை காப்பாற்றியிருக்க முடியாது என்றும் தீயணைப்பு படையினர் அறிவித்துள்ளனர்.
17 வயது சிறுவனை பணையக் கைதிதாக வைத்து வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இனந்தெரியாத ஆயுத குழுவொன்று கொள்ளையடித்த சம்பவம் நேற்றிரவு வீரஹென மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆயுத குழுவினர், தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளதோடு வீட்டில் இருந்த 17 வயது சிறுவனையும் கடத்திச் சென்று கொச்சிக்கடை பகுதியில் விடுவித்துள்ளர். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத அதேவேளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை 27,600 மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவிக்கையில்,
நாட்டிலுள்ள 15 பல்கலைக்கழகங்களுக்கும் 18 உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.கடந்த வருடம் 25,200 மாணவர்களையே பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்கப்பட்டனர்.இம்முறை பல்கலைக்கழக கற்கைநெறியை தொடர்வதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கையேட்டை எதிர்வரும் 24 ஆம் திகதி மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
வவுனியா தாண்டிக்குளத்தில் 40 மில்லிகிராம் ஹேரோயின் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து 40மில்லி கிராம் ஹேரோயினை ஒருவரிடமிருந்து வாங்கிக் கொண்டு வந்தபோது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில் குறித்த நபரிடம் சோதனை மேற்கொண்டபோது 40மில்லி கிராம் ஹேரோயின் பொதியினை தன்வசம் வைத்திருந்த 45வயதுடைய வவுனியா தேக்கவத்த பகுதியைச் சேர்ந்த நபரைக் கைது செய்துள்ளதாகவும்,
விசாரணையின் பின்னர் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் விசாரணையின் பின்னர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் வவுனியா போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
கணவனை வெட்டிக் கொன்ற மனைவி ஒருவர் கோடரியுடன் பொலிஸில் சரணடைந்த சம்பவம் ஒன்று வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்று இரவு வவுனியா – புபுதுகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
43 வயதான எஸ்.எஸ்.திசாநாயக்க என்ற நபரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் தினமும் வீட்டிற்கு மதுபோதையில் வந்து மனைவியுடன் சண்டையிடுவதாகவும், நேற்றைய தினமும் இவ்வாறு மது போதையில் சண்டையிடும்போதே இந்த அனர்த்தம் நடந்திருக்கலாம் எனவும் பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பில் இன்றும் சர்ச்சை நிலை நீடிக்கிறது.
இந்நிலையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியாதென இந்திய மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரது விடுதலை தொடர்பிலேயே இந்திய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ள போதும், அதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சு மறுப்பு வெளியிட்டுள்ளது.
அதேவேளை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர்களை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இதன் மூலம் 7 பேரது விடுதலை குறித்து கடந்த ஆண்டுகளில் தமிழக அரசின் கோரிக்கையை 2ஆவது முறையாக மத்திய அரசு நிராகரித்துள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோரி தமிழகம் முழுவதும் கடந்த 2014ம் ஆண்டில் போராட்டம் வெடித்தது. இதையடுத்து 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்த தமிழக அரசு, இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
ஏலவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அந்த கடிதத்தை நிராகரித்த நிலையில், கடந்த மாதம் 2ம் திகதி திடீரென மீண்டும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இந்த கடிதமும் நிராகரிக்கப்பட்ட நிலையில் 7 பேரும் விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் மத்திய அரசு மனு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அவிஸ்ஸாவெல-ஹேவாயின்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்று மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக அவிஸ்ஸாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் உள்ள மின் இணைப்பில் மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அவிஸ்ஸாவெல பொலிஸாரும்,பிரதேசவாசிகளும் இணைந்து தீயைக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தினால் எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என்றும்,ஆனால் வீட்டிலிருந்த சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலக விளையாட்டு அரங்கில் ஆண்டுதோறும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அசத்தும் வீரர், வீராங்கனைக்கு புகழ்பெற்ற ‘லாரெஸ்’ விருது வழங்கப்படுகிறது. ‘விளையாட்டின் ஒஸ்கார்’ என்று அழைக்கப்படும் இந்த விருது 2000ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டு ஜம்பவான்கள், தொழில்முறை விளையாட்டு எடிட்டர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய லாரெஸ் ஸ்போர்ட்ஸ் குழு விருதுக்கு தகுதியானவரை தேர்வு செய்து கவுரவிக்கிறது.
இதன்படி 17வது லாரெஸ் விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று முன்தினம் இரவு வெகுவிமரிசையாக நடந்தது.
இதில் உலகின் முதன்நிலை டென்னிஸ் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இந்த ஆண்டுக்கான லாரெஸ் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார். இவர் ஏற்கனவே 2012, 2015-ம் ஆண்டுகளிலும் இந்த விருதை பெற்றிருக்கிறார்.
ஆஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி, ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட், பார்முலா1 கார்பந்தய நடப்பு சம்பியன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் ஆகியோரும் இதற்கான போட்டியில் இருந்த போதிலும் அவர்களை ஜோகோவிச் பின்னுக்கு தள்ளிவிட்டார்.
2015ம் ஆண்டில் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி அமர்க்களப்படுத்திய ஜோகோவிச் 88 ஆட்டங்களில் 82ல் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறும் போது, ‘இந்த விருதை பெறுவதில் மிகுந்த பெருமை அடைகிறேன். என்னிடம் சிறந்த குழுவினர் (பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் இது சாத்தியமல்ல.
டென்னிஸ் மீது நான் கொண்டுள்ள காதல் மற்றும் ஆர்வத்துக்கு கடமைப்பட்டுள்ளேன். அது தான் என்னை இங்கு கொண்டு வந்திருக்கிறது. எனக்குள் பல்வேறு வகையில் உந்து சக்தியாக இருந்த நிக்கி லாவ்டா (முன்னாள் பார்முலா1 கார்பந்தய வீரர்), சமீபத்தில் மறைந்த கால்பந்து ஜம்பவான் நெதர்லாந்தின் ஜோஹன் கிருப் ஆகியோருக்கு இந்த விருதை சமப்பிக்கிறேன்’ என்றார்.
இதே போல் கடந்த ஆண்டு 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றதோடு டென்னிஸ் உலகில் முதன்நிலை ராணியாக வலம் வரும் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சிறந்த வீராங்கனையாக தேர்வானார். அவர் இந்த விருதை பெறுவது இது 3வது முறையாகும். ஆனால் விழாவுக்கு அவர் வரவில்லை.
வாழ்நாள் சாதனையாளர் விருதை மூன்று முறை பார்முலா1 கார்பந்தய பட்டத்தை வென்றவரான ஒஸ்திரியாவின் 67 வயதான நிக்கி லாவ்டாவுக்கு வழங்கப்பட்டது. ‘‘இந்த விருதை தோல்வி அடைவோருக்கு அர்ப்பணிக்கிறேன். ஏனெனில் தோல்வியில் இருந்து தான் நான் நிறைய கற்றுக்கொண்டேன்’ என்று லாவ்டா குறிப்பிட்டார். உலக ரக்பி சம்பியன் நியூசிலாந்து அணி, உலகின் சிறந்த அணிக்குரிய விருதை தனதாக்கியது.
அசாம் மாநிலம் தென்கான் என்ற இடத்தை சேர்ந்தவன் மிதுதாஸ் (வயது 23). கார் மெக்கானிக். இவன் கடந்த மாதம் அந்த பகுதியை சேர்ந்த ஆதிவாசி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தான். இதுபற்றி பொலிசில் புகார் செய்யப்பட்டது. பொலிசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அவனை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஆதிவாசி பெண்ணின் உறவினர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் 50க்கும் மேற்பட்டடோர் திரண்டு வந்து மிதுதாசை கடுமையாக தாக்கினார்கள். அப்போது அங்கு 3 பொலிசார் இருந்தனர். கும்பல் அதிகமாக இருந்ததால் அவர்களால் தடுக்க முடியவில்லை. மிதுதாசை அரிவாளாலும் வெட்டினார்கள். அதில் ஏற்பட்ட காயத்தில் உப்பை கொட்டினார்கள். இதனால் வலி தாங்காமல் மிதுதாஸ் துடித்தான்.
பொலிசார் அவனை மீட்டு அரசு வைத்தியசாலையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தான். பொலிசார் முன்னிலையிலேயே குற்றவாளி தாக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் பலாத்கார குற்றவாளி மீது பொலிசார் முதலிலேயே உரிய நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த சம்பவம் நடந்ததாக ஊர் மக்கள் கூறினார்கள்.
வவுனியாவில் வசந்தகாலத்தை நினைவூட்டும் வீதியோரம் பூத்துக் குலுங்கும் பல மரங்கள் வீதி அபிவிருத்தியைக் காரணம்காட்டி இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டன. மிகுதியாக இருப்பது நீதிமன்ற வளாகத்திற்க்கு முன்னால் உள்ளது. மற்றையது வலயக் கல்வி அலுவலகத்திற்க்கு முன்னால் உள்ளது மட்டுமே. தற்போது அவை இரண்டும் பூத்துக் குலுங்குகின்றன.
அழிக்கப்பட்ட மரங்களுக்கு ஈடாக எந்த ஒரு இடத்திலும் மரக்கன்றுகள் நாட்டப்படவும் இல்லை.வவுனியா பஐார் வீதி மற்றும் புகையிரத நிலைய வீதி தற்போது காப்பெற் இடப்பட்டு வீதி அகலப்படுத்தும் பணிகள் இடம் பெறுகின்றன. இருந்தும் மின்சாரத் தூண்கள் வீதியில் இடையூறாக நிற்கும் நிலையில் நிழல் தரும் மரங்கள் அகற்றப்படுகின்றமை வேதனை அளிக்கிறது.
பஜார் வீதியில் நிழலில் ஓதுங்கி இளைப்பாற ஓரு இடத்தில் கூட மரம் இல்லை. இவ்விடயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், நகரசபையினர், சூழலியலாளர்கள் கவனத்திலெடுப்பார்களா?
எமது வடமாகாண சபையின் சுற்றுச்சூழல் அமைச்சருக்கு ஓரு சிறிய விண்ணப்பம் A9 வீதியின் இருமருங்கிலும் இந்திய தமிழ் நாட்டில் உள்ளதைப் போன்று பயன்தரு மரங்களை நாட்டினால் இதனால் விளையும் பயன்கள் சொல்லித் தெரியவேண்டியதில்லை.