போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!!

புதிய இணைப்பு : போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு சென்ற சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று (21) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு : அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்று (21) காலை நாடாளுமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது வாகனத்தில் விஐபி (VIP) விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக அர்ச்சுனாவின் வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்போது பொலிஸ் அதிகாரிகள் அவரது அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர்.

இந்நிலையில், ஆவணங்களை வழங்க மறுத்து, இடையூறு விளைவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலமாக மீட்கப்பட்ட இளம் தம்பதி : பின்னணி குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

குருணாகல், பன்னல பிரதேசத்தில் காட்டுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட இளம் தம்பதியின் மரணத்திற்காக காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த தம்பதி கடன் சுமையிலிருந்து தப்பிக்க முடியாமல் நஞ்சருத்தி உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இராணுவ மேஜரான 38 வயதான சமரசிங்க பத்திரனகே ஜனக சதுரங்க அவரது மனைவியான தேஷானி அனுராதிகா என்ற 32 வயதான ஆசிரியையுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இருவருக்கும் 4 வயது பிள்ளை ஒன்று இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கன்கானியமுல்ல காட்டிற்கு அருகே ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ளதாக பன்னால பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் தினுக பிரியஞ்சித்துக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.

அதற்கமைய, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, ​​அந்த இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மரத்தின் அருகே தம்பதியினர் இறந்து கிடந்ததும், அருகில் ஒரு நஞ்சு மருந்து மற்றும் நெக்டோ போத்தல் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த நபரின் சட்டைப் பையில் ஒரு கையடக்க தொலைபேசி இருப்பதையும், அந்த தொலைபேசிக்கு ஒரே இலத்தில் இருந்து 119 முறை அழைப்புகள் வந்ததையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

அந்த எண்ணை அழைத்தபோது, ​​இறந்த தம்பதியினர் திருமணமான தம்பதிகள் என்பது தெரியவந்தது.

உயிரை மாய்த்துக் கொண்ட இடத்தில் மனைவியின் தந்தைக்கு எழுதிய கடிதமும் கண்டெடுக்கப்பட்டது, அதில் சொத்து தகராறு காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப நாங்கள் மிகவும் கடினமாக முயற்சித்தோம். ஆனால் நாங்கள் தோல்வியடைந்தோம். எங்கள் சகோதரிகள் என்ன சொல்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.” என்று அந்த கடிததத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவரும் கடுமையான கடன் சுமையில் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர், மேலும் பிரேத பரிசோதனைக்காக குளியாப்பிட்டி மருத்துவமனைக்கு சடலங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக மரணம்!!

மட்டக்களப்பில் 24 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், மின் இணைப்பை பெற முயற்சி செய்துள்ள வேளையில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளமை தெரிய வருகின்றது.

இந்நிலையில், நபரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கொட்டித்தீர்த்த மழையால் மட்டக்களப்பில் பல பகுதிகளின் போக்குவரத்து பாதிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொட்டித்தீர்க்கும் மழை காரணமாக பிரதான குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் பல பகுதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மண்டூர் – வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப் பாதையின் ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன.

இன்று(20) காலை போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அலுவலகங்களுக்கு கடமைக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துச் செய்வது பாதிக்கப்பட்ட நிலையில், போரதீவுப்பற்று பிரதேச சபையின் ஊடாக உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்துச் சேவை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று பாலையடிவட்டை – வெல்லாவெளி பிரதான வீதி, மண்டூர்-ராணமடு வீதி,வெல்லாவெளி – உகன வீதி போன்றன வெள்ளம் காரணமாக போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் உன்னிச்சையின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணாக வவுணதீவுப்பகுதிக்கான பல்வேறு போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதனால் பொது மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

 

மனைவி வெளிநாடு சென்ற சில மாதங்களில் கணவன் பரிதாபமாக மரணம்!!

குருணாகல், பொல்பிதிகம பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மான் மோதிய விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார்.

தெலம்பிவ பகுதியை சேர்ந்த 38 வயதான ஜயந்த குமார மில்லாவல என் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 11 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிரிபிட்டிய நகரத்திலிருந்து பொல்பித்திகமவுக்கு சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த இருவரும் ஹிரிபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் குருநாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் தொழிலுக்கு சென்று 2 மாதங்களேனும் நிறைவடையாத நிலையில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்புக்கு சென்ற பேருந்து கோர விபத்து : 14 பேர் மருத்துவமனையில்!!

மட்டக்களப்பு காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சேருநுவர பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சேருநுவர – கந்தளாய் வீதியில் சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்பாக உள்ள வளைவுக்கு அருகில் இன்று திங்கட்கிழமை (20) காலை குறித்த பஸ் விபத்து இடம்பெற்றுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக குறித்த பஸ் வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் இருந்த மரத்தடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ் விபத்திற்குள்ளாகும் போது பஸ்ஸில் 49 பயணிகள் பயணித்துள்ளனர்.

விபத்து காரணமாக காயமடைந்த பஸ் சாரதி, பஸ் நடத்துடனர் உட்பட 14 பேர் சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சாரதியும் 9 பயணிகளும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பஸ் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்!!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு ரயில் கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று (20.01) மீட்கப்பட்டுள்ளது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கண்டியில் ஆற்றில் பாய்ந்த கார் ஆண் – பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

கண்டி – பன்னில பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் நேற்றயதினம் (19.01.2025) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஆணொருவரும் பெண்ணொருவரமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றது.

யாழில் விசாரணைக்கு சென்றவர் மரணம்: பொலிஸ் தாக்குதலில் உயிரிழந்தாரா?

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் தீருவில் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் சந்திரபாலன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்று (19.01) பருத்தித்துறை நகர் பகுதியில் மது போதையில் நின்றபோது அவருக்கு பிடியாணை உள்ளதாக கூறி விசாரணை செய்ய வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் இரவு குறித்த நபர் உயிரிழந்த நிலையில் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனையடுத்து வைத்திய சாலைக்கு நேரில் சென்று சடலத்தை பார்வையிட்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டார்.

அதனையடுத்து, யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகள் நடைபெற்று, சடலத்தின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலில் அடி காயங்கள் காணப்படுவதாகவும் இது பொலீஸாரின் தாக்குதலால் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேக வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் வெடிப்புச் சம்பவத்தால் பரபரப்பு!!

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் இன்று தி (20) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளினால் ஏற்படும் ஆபத்துக்களைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டுப் பிரிவினர், கட்டுநாயக்க விமான நிலைய முனையத்திற்கு அருகில் கூட்டம் கூட்டமாகப் பறந்து திரிந்த பறவை கூட்டத்தை விரட்டுவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பறவை கூட்டத்தை விரட்ட துப்பாக்கிச் சூடு

இந்நிலையில் எதிர்பாராத விதமாகக் குறித்த துப்பாக்கிச் சூடு விமான நிலைய விலங்குகள் மற்றும் பறவைகளின் ஆபத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் பயணித்த கெப் வாகனத்தின் மீது விழுந்து வெடித்துள்ளது.

இதனால் கெப் வாகனத்திலிருந்த ஏனைய வெடிபொருட்களும் வெடித்துச் சிதறியதால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது.

வெடிப்பு சம்பவத்தால் கெப் வாகனத்திலிருந்த மூன்று அதிகாரிகள் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்கை்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

64 வயது மணமகனுக்கும், 68 வயது மணமகளுக்கும் காதல் திருமணம்!!

64 வயது மணமகனுக்கும், 68 வயது மணமகளுக்கும் முதியோர் காப்பகத்தில் காதல் திருமணம் நடைபெற்றது.

இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், ராஜமுந்திரியில் சுவர்ணாந்திரா முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர்.

இந்த முதியோர் இல்லத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நாராயணபுரி பகுதியை சேர்ந்த மூர்த்தி (64) என்பவர் தங்கி உள்ளார். இவருக்கு கை மற்றும் ஒரு கால் செயலிழந்துவிட்டது.

அதேபோல, அங்கு கடப்பா மாவட்டம், கம்முலகுண்டா பகுதியை சேர்ந்த ராமலட்சுமி (68) என்பவர் தங்கி உள்ளார். இவர், மூர்த்திக்கு தேவையான உதவிகளை செய்துவந்தார்.

அவருக்கு சாப்பிடவும், நடக்கவும், மருந்து மாத்திரைகளை தவறாமல் கொடுத்துள்ளார். இதனால், மூர்த்தி ஓரளவுக்கு குணமானார்.

இந்நிலையில், இருவரும் தனக்கு துணை அவசியம் என்று கருதி திருமணம் செய்து இணைந்து வாழ முடிவு எடுத்தனர். இதுகுறித்து முதியோர் காப்பக நிர்வாகியான ராம்பாபுவிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

இதில் இருவருக்கும் உறவினர்கள் யாரும் இல்லாததால் முதியோர் இல்லத்திலேயே திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.

அதன்பேரில் கடந்த 17-ம் திகதி அன்று மூர்த்தி, ராமலட்சுமி திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து தம்பதிகள் கூறுகையில், “வயதானவர்களுக்கு கண்டிப்பாக துணை இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

வயதை நாங்கள் தடையாக நினைக்கவில்லை. எங்களுடைய கடைசி காலங்கள் வரை பிரியாமல் இருப்போம்” என்றனர்.

கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி… மரண தண்டனை அறிவித்ததும் மௌனம்!!

கேரளாவில் காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மாவட்டமான கன்னியாகுமாரியைச் சேர்ந்த இளம்பெண் கரீஸ்மா. அதேபோல, திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர் ஷரோன் ராஜ். கடந்த 2021-ம் ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்பு படித்த கரீஸ்மா, இளநிலை 3-ம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணவரை காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து, கரீஸ்மாவுக்கு அவரது பெற்றோர் ராணுவ அதிகாரி மாப்பிள்ளையை நிச்சயம் செய்தனர். அதற்கு அவரும் சம்மதித்தார்.

பின்னர், காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று நினைத்த கரீஸ்மா, பல மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து அவரை கொலை செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால், அது அவருக்கு பலன் அளிக்கவில்லை.

பின்னர், கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் திகதி ஷரொன் ராஜை வீட்டுக்கு அழைத்த க்ரீஷ்மா, அவருக்கு மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் என குடிக்க வைத்தார்.

பின்னர், வீட்டிற்கு சென்றதும் இரவு பலமுறை ஷரொன் ராஜ் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சில நாட்களிலே உடல் பாகங்கள் செயல் இழந்து அவர் உயிரிழந்தார்.

பின்னர், அவரது குடும்பம் கரீஸ்மா மீது புகார் அளித்தது. அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் கரீஷ்மா விஷம் கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து, இந்த வழக்கில் கரீஸ்மா கொலை குற்றவாளி என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று கரீஸ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்போது, நீதிபதி தீர்ப்பை வாசிக்க தொடங்கியதும் அழ தொடங்கிய க்ரீஷ்மா, மரண தண்டனையை அறிவிக்கவும் அழுகையை நிறுத்தி மௌனமானார்.

யாழ் சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை : வாடகைக்கு வந்தவர்களால் அதிர்ச்சி!!

யாழ்ப்பாணவாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் . நகர் பகுதியில் கன்ரர் ரக வாகனத்தில் வாடகை சேவையில் ஈடுபட்டு வரும் சாரதி ஒருவரின் நகைகளே நேற்றைய தினம் (19) கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வாகன வாடகை தரிப்பிடத்திற்கு வந்த இருவர் , கிளிநொச்சி பகுதியில் இருந்து பொருட்களை ஏற்றி வர வேண்டும் என கூறி வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி கிளிநொச்சி நோக்கி பயணித்துள்ளனர்.

இதன்போது பரந்தன் பகுதியில், வீதியோரமாக வாகனத்தை நிறுத்த கோரி , அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கி, சாரதிக்கு குடிப்பதற்கு வழங்கியுள்ளனர்.

அதனை குடித்தவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். வீதியோரமாக நீண்ட நேரமாக வாகனத்தில் சாரதி அசைவின்றி காணப்பட்டுள்ளார்.

இதனை வீதியால் சென்றவர்கள் அவதானித்து , சாரதியின் அருகில் சென்று பார்த்த போது , சாரதி மயக்கத்தில் இருப்பதனை அறிந்து உடனடியாக அவரை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரே சாரதி சுயநினைவுக்கு வந்துள்ளார்.

அதன் பின்னரே தனது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து , சம்பவம் தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் திமிங்கலத்தின் வாந்தியை வைத்திருந்தவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோ அம்பருடன்( திமிங்கலத்தின் வாந்தி) மீனவர் ஒருவர் பொலிஸாரால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட் சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 58 வயதுடைய மீனவர் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனது வீட்டில் அம்பர் தொகையை மறைத்து வைத்துள்ள நிலையில், அதனை நீர்கொழும்பு பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் மீண்டும் செயற்படத் தொடங்கிய டிக் டொக்!!

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) அறிவிப்பைத் தொடர்ந்து, டிக் டொக் (TikTok) செயலி அமெரிக்க பயனர்களுக்கு அதன் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது,

ட்ரம்ப் பதவியேற்ற பின் குறுகிய வீடியோ பகிர்வு பயன்பாட்டுக்காக மீண்டும் ஒன்லைனில் அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேசியப் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்யும் சட்டத்தை இயற்றினார்.

அவ்வாறு விற்பனை செய்யத் தவறினால், டிக்டொக் செயலியை அப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்க உத்தரவிடப்படும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்குக் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில், நேற்று (19) முதல் குறித்த செயலிக்கான தடை நடைமுறைக்கு வந்தது.

இதனையடுத்து, டிக்டொக் நிறுவனம் தற்காலிகமாக அதன் சேவையை நிறுத்துவதாக அறிவித்தது.

இதன்படி அப்பிள் ஐ ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டொக் செயலி நீக்கப்பட்டது.இந்தநிலையிலேயே, அமெரிக்காவில் டிக்டொக் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

இன்று அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், டிக்டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக உறுதியளித்ததையடுத்து, சேவையை மீண்டும் தொடங்குவதாக டிக்டொக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பதவியேற்றவுடன் அதிரடி மாற்றங்கள் : உத்தரவுகளில் கையெழுத்திடவிருக்கும் டிரம்ப்!!

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் (Donald Trump) இன்று (20) பதவியேற்கவுள்ள நிலையில் அதிபராகப் பொறுப்பேற்றவுடன் முதல் நாளிலேயே பல உத்தரவுகளில் டிரம்ப் (Donald Trump) கையெழுத்திட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் ,

நாடு கடத்துதல் திட்டம்

அமெரிக்க வரலாற்றிலேயே ஆகப்பெரிய நாடு கடத்துதல் திட்டத்தை அறிமுகம் செய்யவிருப்பதாக டிரம்ப் உறுதி கூறியிருந்தார். அமெரிக்காவில் புகலிடம் தேடுவோர், தெரிவிக்கப்படாத குடியேறிகள் எனச் சுமார் 11 மில்லியன் பேர் உள்ளனர்.

அவர்களில் 500,000 பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள். புகலிடம் தேடுவோரைப் பாதுகாக்கும் சட்ட நடைமுறைகளை டிரம்ப் முடக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லைகளில் அவசர நிலை அறிவிப்பு

வெளிநாட்டைச் சேர்ந்த குடியேறிகள் நாட்டிற்குள் நுழையவோ தங்கவோ தடை விதிக்க அமெரிக்க எல்லைகளில் அவசரநிலையை அறிவிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

அதற்கு Title 42 எனும் சட்டத்தை நடைமுறைபடுத்தலாம். அந்தச் சட்டம் பொதுச் சுகாதார அவசரநிலையைக் குறிக்கும். ஆனால் அதை அதிபரால் அறிவிக்கமுடியாது. நோய்த்தடுப்பு, கட்டுப்பாட்டு நிலையத்தால் மட்டுமே அதைப் பிறப்பிக்க முடியும்.

வட அமெரிக்காவுக்கு வரி விதித்தல்

கனடா, மெக்சிகோ ஆகியவற்றிலிருந்து வரும் இறக்குமதிகளுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கவிருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார். போதைப்பொருள் கடத்தலை அவர் காரணமாகச் சுட்டினார். இதனால் வட அமெரிக்காவின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படலாம்.

குற்றவாளிகளுக்குப் பொது மன்னிப்பு

அதிபரானவுடன் முதல் 9 நிமிடங்களில் வழக்குகளை ஆராய்ந்து பொதுமன்னிப்பு வழங்கவிருப்பதாய் டிரம்ப் தெரிவித்திருந்தார். அமெரிக்க வரலாற்றிலேயே ஆக அதிகமானோருக்கு ஒரே நேரத்தில் பொதுமன்னிப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எரிசக்தித்துறையில் புரட்சி

உடனடியாக தேசிய எரிசக்தி அவசரநிலை அறிவிக்கப்படும். புதிய திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும்.

குடியுரிமை வழங்குவதில் மாற்றம்

அமெரிக்கக் குடியுரிமை இல்லாத தம்பதிக்குப் பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உத்தரவில் கையெழுத்திட டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.