இந்த வருடத்தின் முதலாவது சந்திரகிரகணம் எதிர்வரும் 23ஆம் திகதி நிகழவுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி பிற்பகல் 03.09 இலிருந்து இரவு 7.24 வரை இதனை பார்வையிட முடியும் என கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிழக்கு வான்பரப்பில் இதனை அவதானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திரகிரகணம் தோன்றும் திசைகளில் குறைந்தளவு பிரகாசம் காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த வருடத்தின் அடுத்த சந்திர கிரகணம் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி நள்ளிரவில் நிகழும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில், இலங்கை அணி சார்பாக விளையாடுவதற்கு வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் இடத்திற்கு ஜெப்ரி வெண்டர்ஸே பெயரிடப்பட்டுள்ளார்.
உபாதைக்குள்ளாகியுள்ள லசித் மாலிங்க இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் லசித் மாலிங்கவிற்கு பதிலாக ஜெப்ரி வெண்டர்ஸே 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில், இலங்கை அணி சார்பாக விளையாடுவார் என்று இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
மொனராகல-உலந்தாவ,கிவுலேயார பிரதேசத்தில் நேற்றைய தினம் அதிகாலை காணாமல் போனதாக கூறப்பட்ட ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.54 வயதான இவர் முன்பள்ளி ஒன்றின் ஆசிரியர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரை காணவில்லை என்று இவரது சகோதரி மொனராகல பொலிஸிசாரிடம் முறைப்பாடு செய்துள்ள நிலையில், இவரது சடலம் இன்று காலை கெலேபந்த பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆசிரியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மொனராகல பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை தாதி உத்தியோகஸ்தர்கள் வேலை புறக்கணிப்பினால் போதனா வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ள நிலையில் இன்றைய தினம் வைத்தியசாலை இயக்கம் முடங்கியுள்ளது. கடந்த 15ம் திகதி யாழ்.போதனா வைத்தயசாலையில் கண் சிகிச்சை விடுதியில் நோயாளர் ஒருவரை பார்வையிடச் செனறிருந்த உறவினர் ஒருவர் குறித்த விடுதியில் நின்றிருந்த ஆண் தாதி ஒருவருடன் முரண்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த உறவினர் வைத்தியசாலை பொலிஸார் ஊடாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்த நிலையில் குறித்த ஆண் தாதியை வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்து பணிப்பாளருடன் பேசிய பொலிஸார் விடுதிக்குள்ளும் நுழைந்து விசாரணை நடத்தியுள்ளனர்.தொடர்ந்து விசாரணைக்கென குறித்த ஆண் தாதியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து நீதிமன்றத்தில் முற்படுத்தியதுடன் 70 ஆயிரம் ரூபா காசு பிணையில் விடுதலை செய்துள்ளனர்.
இந்நிலையில் வைத்தியசாலை ஊழியருக்கு வைத்தியசாலை நிர்வாகம் பாதுகாப்பு வழங்கத் தவறியமை மற்றும், பொய் குற்றச்சாட்டை சுமத்தியவருக்கு நடவடிக்கை எடுக்காமையினை கண்டித்து தாதி உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியர்கள் இன்றைய தினம் முழுஅளவில் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் பொய் குற்றச்சாட்டை சுமத்திய நபர் தாதி உத்தியோகத்தர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தாதியர்கள் கோரியுள்ளனர்.இதனால் போதனா வைத்தியசாலையின் சகல செயற்பாடுகளும் முடங்கிய நிலையில் மிக அவசியமான அவசர சிகிச்சை மட்டும் நடைபெறுகின்றன.இந்நிலையில் வெளிநோயாளர் பிரிவில். நோயாளர்கள் நிறைந்து வழிகின்றனர்.
எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து (21) பாணின் விலையை 3 அல்லது 5 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா நிறுவனம் கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை 7 ரூபா 20 சதமாக அதிகரித்ததாலும் பின்னர் நுகர்வோர் வாரத்தை முன்னிட்டு மீண்டும் அது குறைக்கப்பட்டது.
நுகர்வோர் வாரத்தை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்டிருந்த கோதுமை மாவின் விலையை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளமை தொடர்பில் தமக்கு அறியக் கிடைத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவாக அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலையையும் 3 அல்லது 5 ரூபாவினால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் விலையை அதிகரிக்கும் பட்சத்தில் கட்டாயம் பாணின் விலை அதிகரிக்கும் என பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகருக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பியகம பகுதியில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்பு சம்பவமும், நேற்று ஜா எல கொட்டுகொட பகுதியில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்பு சம்பவமும் ஒரே மாதிரியானவை என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.எனவே இது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாக மின்சக்தித்துறை அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் சுமார் 50 வருடங்களாக பணியில் இருக்கும் பொறியியலாளர்களின் கருத்துப்படி இந்த இரண்டு மின்மாற்றி வெடிப்புக்கள் போன்று உலகில் வேறு எங்கிலும் வெடிப்புகள் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இது தொடர்பில் விசாரணைகளை நடத்த ஜேர்மனின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.பியகமவில் உள்ள உபமின் நிலையத்தின் மின்மாற்றியில் கடந்தவாரம் ஏற்பட்ட வெடிப்புக்கும், கொட்டுகொட உப மின் நிலைய மின்மாற்றியில் நேற்று ஏற்பட்ட வெடிப்புக்கும் இடையில் ஒற்றுமைகள் காணப்படுவதாக சிறிலங்கா மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு மின்மாற்றிகளிலும், மர்மமான முறையில் வெடிப்புகள் ஏற்பட்டதையடுத்து மின்விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டன.இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட சிறிலங்கா மின்சக்தி அமைச்சின் செயலர், சுரேன் பட்டகொட, இரண்டு மின்மாற்றிகளில் ஏற்பட்ட வெடிப்புகளுக்குமான காரணம் குறித்து பொறியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
பியகம, கொட்டுகொட உபமின்நிலையங்களுக்குள் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையிலும் இந்த இரண்டு மின்மாற்றிகளிலும் எவ்வாறு ஒரே விதமான வெடிப்பு ஏற்பட்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்த வெடிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பது மர்மமாகவே இருப்பதாக இந்த துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம்மிக்க பொறியாளர்கள், தெரிவித்தனர்.
உலகின் வேறெங்கும் இதுபோன்று மின்மாற்றிகளில் வெடிப்பு ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் பழுதடைந்த மின்மாற்றிகளை திருத்தும் பணிகள் முடியும் வரை, நீர்கொழும்பு பிரதேசத்தில் மின்தடை ஏற்படும் என்றும் சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.நேற்று பிற்பகல் வெடிப்பு ஏற்பட்ட கொட்டுகொட உபமின்நிலையத்துக்கு சிறிலங்கா விமானப்படையினர் பாதுகாப்பு வழங்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டியில் கேரளாவை சேர்ந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.
விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சுப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி இறுதிச்சுற்று சென்னையில் நேற்று நடைபெற்றது.
சுப்பர் சிங்கர் 5ன் இறுதிச்சுற்றில் பரீதா, ராஜகணபதி, சியாத், ஆனந்த், லட்சுமி என ஐந்து பேர் போட்டியிட்டனர். இவர்களில் பரீதாவும், ராஜகணபதியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்ற மூன்று பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். பரீதா, ஆனந்த், சியாத் ஆகிய போட்டியாளர்களுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்தின் ‘பிரமாண்ட குரலுக்கான தேடல்’ என்ற அடைமொழியுடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் பாடகர்கள் மற்றும் தமிழ்த் திரையிசை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி, சென்னை டி.பி. ஜெயின் கல்லூரியில் 6 மணி முதல் நடைபெற்று இரவு 12 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று தாமதமாக 12.45 மணி அளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் முதல் இடத்தை பிடித்தார். முதல் இடத்தை பிடித்த ஆனந்த் அரவிந்தாக்ஷுக்கு 75 லட்சம் இந்திய ரூபா மதிப்புள்ள இல்லம் பரிசாக வழங்கப்பட்டது. பரீதா, இரண்டாம் இடத்தை பிடித்தார் இவருக்கு 10 லட்சம் இந்திய பரிசு வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை பிடித்த ராஜ கணபதிக்கு 5 லட்சம் இந்திய ரூபா பெறுமதியான பரிசு வழங்கப்பட்டது. நான்காம் இடத்தை பிடித்த லட்சுமிக்கு மூன்று லட்சமும், ஐந்தாம் இடத்தை பிடித்த சியாத்க்கு இரண்டு லட்சம் பரிசு வழங்கப்பட்டன.
நடிகர் கலாபவன் மணி மரணம் குறித்த விசாரணை சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது. நடிகரின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவும் அரசு தயாராக இருக்கிறது என்று கேரள மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி, தெரிவித்தார்.
தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள கலாபவன் மணி கடந்த 6ம் திகதி மரணம் அடைந்தார். பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது குடித்தபோது மயங்கி விழுந்த அவரை வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். கலாபவன் மணி உடலை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் அருந்திய மதுவில் அளவுக்கு அதிகமாக மெத்தனால் இருந்ததாக தெரிவித்தனர்.
உரிமம் பெற்று விற்கப்படும் மதுவில் இவ்வளவு அதிக அளவில் மெத்தனால் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்கள். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கலாபவன் மணியின் குடற்பகுதிகள் ரசாயன ஆய்வுக்காக கொச்சியில் உள்ள வட்டார ரசாயன ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வில் அவருடைய உடலில் கொடிய விஷம் கலந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஆய்வகத்தின் இணை இரசாயன ஆய்வாளர் முரளிதரன் நாயர் கூறுகையில், கலாபவன் மணியின் வயிற்று குடற்பகுதி மாதிரிகளில் மிகவும் கொடிய பூச்சிக் கொல்லி மருந்தான குளோர்பைரிபோஸ் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இது தவிர, மெத்தனால் மற்றும் எத்தனால்(மது) ஆகியவையும் இருந்தன என்றார்.
எனவே மதுவில் கலாபவன் மணிக்கு பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
கலாபவன் மணி மரணம் அடைவதற்கு முன்தினம் அவருடன் மலையாள நடிகர்கள் சாபு, ஜாபர் இடுக்கி ஆகியோர் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது. பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். கலாபவன் மணி மது அருந்திய போது நான் அங்கிருந்து சென்று விட்டேன் என்று சாபு வாக்குமூலம் அளித்தார்.
ஜாபர் இடுக்கி, நாங்கள் எல்லோரும் சேர்ந்து மது அருந்தினோம் என்று கூறினார். நடிகர் சாபுவுக்கும், கலாபவன் மணிக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாக இணையதளங்களில் தகவல் பரவியது. இதனை சாபு மறுத்துள்ளார். கலாபவன்மணி மரணத்தில் தேவையில்லாமல் என்னை சம்பந்தப்படுத்துகின்றனர். அவருடன் நான் மது அருந்தவில்லை என்று கூறினார்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தற்போது அருண், விபின், முருகன் ஆகிய 3 பேரை பிடித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கலாபவன் மணி வீட்டில் வேலை பார்த்தவர்கள். கலாபவன் மணி வைத்தியசாலையில் இறந்ததும் இவர்கள் 3 பேரும் அவசரமாக பண்ணை வீட்டுக்கு திரும்பி வீட்டை சுத்தப்படுத்தி உள்ளனர்.
அங்கிருந்த மதுப்போத்தல்களையும் அப்புறப்படுத்தி உள்ளனர். கலாபவன் மணி வாந்தி எடுத்ததையும் கழுவி சுத்தப்படுத்தி இருக்கின்றனர். தடயங்களை இவர்கள் 3 பேரும் அழித்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். இதனால், 3 பேரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
இதுகுறித்து கலாபவன் மணியின் தம்பி இராமகிருஷ்ணன் கூறும்போது, என் அண்ணனுடன் மது அருந்திய யாரும் பாதிக்கப்படவில்லை. என் அண்ணன் உடலில் மட்டுமே அளவுக்கு அதிகமான மெத்தனால் இருந்து இருக்கிறது. அவர் உயிர் இழப்பதற்கு முன்பாக அவருடன் மது அருந்திய அத்தனை பேர் மீதும் எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
காசர்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கேரள மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி, நடிகர் கலாபவன் மணி மரணம் குறித்த விசாரணை சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது. நடிகரின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவும் அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.
தாய் ஒருவர் தனது இரண்டரை மாத ஆண் சிசுவுக்கு கொடுத்த பால் சிசுவின் மூச்சு குழாயில் சென்றுள்ளது. இதனால் அந்த சிசு மூச்சு தினறி உயிரிழந்துள்ளது.
இச் சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை சவூத் தோட்டத்தில் 17.03.2016 அன்று இடம் பெற்றுள்ளது என தலவாக்கலை பொலிஸ் சிறுவர் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி வீ. சுந்தர் ராஜ் நேற்று தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வட்டகொடை சவூத் தோட்டத்தில் வசிக்கும் சசிக்குமார் ரிதிக்சன் என்ற ஆன் சிசுவின் தாய். வீ. முருகாந்தினி. இவர் உயிரிழந்த குறித்த சிசுவை 7 மாதத்தில் சத்திர சிகிச்சையின் மூலம் பெற்றெடுத்துள்ளார்.
வலிப்பு (பிட்) நோய் மற்றும் குருதி அழுத்த நோயினால் பீடிக்கப்பட்டதன் காரணமாகவே இவர் 7மாதத்தில் குழந்தையை பெற்றெடுக்க கூடிய நிலை உருவாகியுள்ளது.
சம்பவ தினமான 17ம் திகதி இரவு வழமைபோல் சிசுவுக்கு பால் கொடுத்துள்ளார். இதன் போது பால் குழந்தையின் மூச்சி குழாயில் சென்று தினறல் ஏற்பட சிசுவை அருகில் உள்ள வட்டகொடை வைத்தியசாலைக்கு வாகனம் மூலம் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கிருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்ட சிசுவை கொண்டு செல்ல அம்புலண்ஸ் இல்லாத காரணத்தினால் தனியார் வாகனத்தினூடாக கொண்டு சென்ற வேளையில் இடைநடுவில் நள்ளிரவு 2 மணியலவில் சிசு மரணமடைந்துள்ளது.
சிசுவின் மரண பரிசோதணையை மேற்கொண்ட நுவரெலியா சட்ட வைத்திய அதிகாரி டப்ளியூ.ஜீ.எஸ். குமாரதுங்க, சிசுவின் மூச்சி குழாயில் பால் இறுகியதனால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை சிசுவின் மரணவிசாரணையை நகா பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி ஆர்.ஆர். உடுகமகெதர முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை அல்லது நாளை மறுதினம் வெளியிடப்படவுள்ளது.
இலங்கை பரீட்சை திணைக்களம் இந்த தகவலை கொழும்பு ஊடகமொன்றுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை 20ம் திகதி அல்லது நாளை மறுதினம் 21ம் திகதி வெளியிடப்படவுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆறு லட்சத்து எழுபதாயிரம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிளை டுபாய் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமொன்று இன்று சனிக்கிழமை ரஷ்யாவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 61 பேரும் பலியாகியுள்ளனர்.
டுபாயில் இருந்து பயணித்த எப் இசட் 981 ரக பயணிகள் விமானம் தெற்கு ரஷ்யாவில் உள்ள ரொஸ்டாவ் ஒன் டோன் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக உரிய வெளிச்சம் இல்லாமல் இருந்ததன் காரணமாக விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விமானத்தில் 55 பயணிகள் இருந்ததாகவும், 6 பேர் விமான ஊழியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து ரொஸ்டாவ் ஒன் டோன் விமான நிலையத்தை நோக்கிப் பயணிக்கும் அனைத்து விமானங்களும் மற்றொரு விமான நிலையத்திற்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
759 சுகாதார தொண்டர்களையும் சிற்றூழியர்களாக எமது திணைக்களத்திற்கு உள்ளீர்க்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
நேற்று மதியம் அவரது இணைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்..
வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக பல சுகாதார தொண்டர்கள் சுகாதார திணைக்களத்துடன் இணைந்து மக்களுக்குரிய அத்தியாவசிய சுகாதார சேவையினை வழங்கியது எல்லோரும் அறிந்த விடயம்.
இச்சுகாதார சேவையில் இருந்தவர்கள் 2014ம் ஆண்டு இறுதியில் வந்த 25.01.2014, 25.02.2014 ஆகிய இரண்டு மத்திய அரசின் சுற்று நிருபத்தின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் ஜனவரி 2015ம் ஆண்டு 900 பேருக்கு சுற்றூழியர்களுக்கான வேலை வழங்கியுள்ளோம்.
அந்த வேலைவாய்ப்பானது மத்திய அரசின் சுற்று நிருபத்தின் பிரகாரம் வேலைக்கு உள்ளீர்க்கப்படும் மொத்த எண்ணிக்கையை வடக்கு மாகாணத்தின் ஆளணியாக மாற்றுவதாக எமக்கு கூறப்பட்டது. தற்போது 900 பேரினை வடக்கு மாகாணத்தில் உள்வாங்கப்பட்ட பின்னர் திறைசேரியின் கீழ் வரும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் சுற்று நிருபத்தில் வந்ததன் அடிப்படையில் பதவி உள்ளீர்ப்பு செய்யப்பட்டவர்களை தொழில் வெற்றிட ஒதுக்கீடு செய்யப்படாமை (காடர்) ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது.
தற்போதைய நிலைமையில் ஆளணியாக மாற்றாமல் இருப்பதனால் எமது மாகாணத்தில் இருக்க வேண்டிய சிற்றூழியர்களுக்கு மேலதிகமாக 600 பேர் இருப்பதாக முகாமைத்துவ சேவைகள் தினைக்களத்தின் புள்ளி விபரங்கள் உள்ளது.
எனவே 900 பேரினை நாம் உள்ளீர்ப்பு செய்யும் போது ஏற்கனவே தொண்டர்களாக இருந்த இச்சுற்று நிருபத்தின் படி உள்ளீர்ப்பு செய்ய முடியாமல் தவறப்பட்ட 759 சுகாதார தொண்டர்கள் வெவ்வேறு கால கட்டத்தில் 1 வருடத்தில் இருந்து 10 வருடம் வரையான காலப்பகுதியில் வேலை செய்தவர்கள் உள்ளனர்.
180 நாள் தொடர்ச்சியாக வேலைசெய்ததன் திட்டத்தின் அடிப்படையில் இந்த 759 பேரையும் மேலதிகமாக உள்ளீரப்பு செய்யுமாறு மத்திய அரசிற்கு வடக்கு மாகாணத்தின் அமைச்சு காரியத்தின் அனுமதி மற்றும் ஆளுனருடைய அனுமதியினை பெற்று முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி கேட்டு கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன் அனுப்பியுள்ளோம். ஆனால் இன்று வரை அதற்கான அனுமதி கிடைக்காதமை ஒரு துர்ப்பாக்கிய நிலைமையே.
இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மற்றும் நல்லாட்சி அரசின் ஜனாதிபதி ஆகியோரிடம் இது தொடர்பாக பல தடவை பேசியுள்ளதோடு இது தொடர்பாக அவர்கள் தங்களது பூரண ஆதரவினை தருவதாக அதற்கான அனுமதியினை தருவதாக கூறியபோதும் இன்று வரை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி இன்மையினால் தான் 759 சுகாதார தொண்டர்களையும் சிற்றூழியர்களாக எமது திணைக்களத்திற்கு உள்ளீரக்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம்.
யுத்தம் நடைபெற்ற போது சுகாதார திணைக்களம் சேவையை வழங்குவதற்கு எம்முடன் இணைந்து தொண்டர்களாக வந்த வேலை செய்தவர்களை அவர்களின் தராதரங்களிற்கு ஏற்ப சிற்றுழியர்களாக சுகாதார சேவை திணைக்களத்திற்குள் உள்ளீர்ப்பு செய்வதற்கு நாங்கள் மிகவும் ஆவலாக உள்ளோம்.
கடந்த 10 மாதகாலமாக எங்களால் ஆன முயற்சிகளை எடுத்த போதும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி இன்மையினால் தான் எம்மால் உள்ளீர்க்க முடியாமல் போனது.
இது தொடர்பாக நேற்று யாழ் நகரில் நடைபெற்ற எமது அமைச்சினுடைய ஆலோசனை சபையினுடைய கூட்டத்தின் போது அங்கு வருகை தந்த 80 யாழ் மாவட்ட தொண்டர்களிடம் இவ்விடயம் தொடர்பாக பேசி விளக்கமளிக்கப்பட்ட பின்னர், யாழ் மாவட்டத்தில் முதற் கட்டமாக எல்லா சுகாதார தொண்டர்களையும் பிரதிநிதித்துவபடுத்தக் கூடிய ஒரு குழ ஒன்றினை அமைப்பதாக கூறியுள்ளதுடன் அக்குழு எம்முடன் தொடர்பில் இருக்கும் நாம் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக நேரத்திற்கு நேரம் தெரியப்படுத்துவதாக சொல்லியுள்ளோம்.
அதே நேரத்தில் இது தொடர்பாக வடமாகாணத்தை பிரதிநிதிப்படுத்துகின்ற எமது பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசியுள்ளோம். அவர்கள் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் சம்மந்தப்பட்ட அமைச்சர் உடன் கதைத்து சுகாதார தொண்டர்களாக கடைமையாற்றியவர்களை எமது அரச சேவையினுள் சிற்றூழியர்களாக உள்வாங்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
1400 பேரை ஒரே நேரத்தில் சுகாதர சேவைக்குள் எடுப்பதற்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் எவ்வளவிற்கு எமக்கு அங்கீகாரத்தை தரும் என்கின்ற பிரச்சனை இருப்பதால் இறுதியாக நாங்கள் கேட்டது சுகாதார தொண்டர்களாக கடமையாற்றியவர்கள் சுகாதார அமைச்சினுள் சிற்றூழியர்களாக இல்லாமல் விட்டாலும் வடக்கு மாகாண சபைக்கின் கீழ் வருகின்ற எல்லா திணைக்களங்களினுடைய சிற்றூழியர்களாக முன்னுரிமையின் அடிப்படையில் கீழ் உள்வாங்கப்பட வேண்டும் என்று அரசிடம் கேட்டுள்ளோம்.
அந்த வகையில் இச்சுகாதார தொண்டர்களின் நியமனம் தொடர்பாக மாகாண சபை தொடர்ந்து முயற்சி எடுப்பதுடன் அவர்களிற்குரிய நியமனம் வழங்குவதற்கு மிகவும் உறுதியாக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.
வவுனியா உக்கிளாங்குளத்தில் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட கங்காதரன் ஹரிஸ்ணவியின் படுகொலையுடன் தொடர்பு பட்டவர் என்ற சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர் நேற்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது பொலிசாரின் விசாரணைக்கு மேலும் 14நாள் விளக்க மறியல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 01.04.2016 வரை விளக்கமறியலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
உலகில் பிடிக்கப்பட்ட எலிகளிலேயே மிகவும் பெரிய எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 4 அடி நீளமும் 11½ கிலோ எடையும் கொண்டுள்ளது.
வடக்கு லண்டனைச் சேர்ந்தவர் டோனி ஸ்மித். இவர் எரிவாயு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பெரிய எலி ஒன்று அருகிலிருந்த வளைக்குள் இருந்து வெளியில் வந்துள்ளது.
அதைக்கண்டதும் டோனி ஸ்மித் பிடித்து விட்டார். அந்த எலி வாலின் நீளத்தோடு சேர்த்து 4 அடி நீளமும் 11½ கிலோ எடையும் கொண்டுள்ளது. பூனையை விடவும் உருவத்தில் மிகவும் பெரிதாக உள்ளது.
இதுவரை பிடிக்கப்பட்ட எலிகளிலேயே இதுதான் மிகப்பெரிய எலி என்று தெரிய வந்துள்ளது. எனவே, கின்னஸ் புத்தகத்திலும் இது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் எங்கள் வீட்டில் வளர்க்கும் நாயின் அளவுக்கு எலி பெரிதாக இருக்கிறது என்று டோனி சுமித் கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றுப் படிவங்களின் மாற்றும் மற்றும் பல காரணிகளினால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக இத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது 2 பாகை செல்சியல் அதிகரித்துள்ள வெப்பநிலை எதிர்வரும் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய குறிப்பிட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களை எடுத்தது.
இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாடி, 19.4 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ஓட்டங்களை எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
44 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடங்கலாக 83 ஓட்டங்களை அதிரடியாக பெற்ற ஜோ ரூட் இங்கிலாந்து வெற்றியை உறுதிசெய்ததோடு போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.