கடல் அட்டை வளர்ப்புப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி, பூநகரி, பிதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி இலவன்குளம் பகுதியில் நேற்று முதல் இக்குடும்பத்தினர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த தமது தொழிலில் ஈடுபடும் பகுதியில் கடல் அட்டை வளர்ப்பு பண்ணை அமைக்கப்பட்டுள்ளமையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பண்ணையை அகற்றி தமது தொழிலை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இவர்கள் உண்ணாவிரதமிருக்கின்றனர்.
பாடசாலைக்கு செல்லும் சிறார்கள் நால்வருடன் தமக்கு நீதி கிடைக்கும் வரை தாய், தந்தை ஆகியோர் உண்ணாவிரதத்தை தொடரவுள்ளனர்.
இப்பகுதியில் கடல் அட்டை வளர்ப்பிற்கு தொழில் புரியும் கடல் தொழிலாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடல் அட்டை வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கு நீரியல் வள திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு கடல் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களும் தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
இப் பகுதியில் இயற்கையாக கடலட்டை வளர்ந்து வருவதாகவும், அப்பகுதியில் பெண்கள் பகுதி நேரமாக கடலட்டை பொறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கடல் அட்டை வளர்ப்பு பண்ணை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் தமது தொழிலை முன்னெடுத்து செல்ல முடியாத நிலை தொடர்பில் மேலதிகாரிகளிற்கு எடுத்து கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
சரியான தொழில் இன்மையால் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்று வந்த நான், போதிய வருமானம் இன்மையால் கல்வியை தொடர முடியாது மீண்டும் இப்பகுதிக்கு வந்து கல்வி கற்று வருவதாக தெரிவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவி, தமது குடும்பம் பாரிய பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றார்.
மின்சாரத் தடையை தடுக்க அரசாங்கம் புதிய சட்டமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. மின்சாரம் தடைப்பட்டால் அதன் பொறுப்பினை மின் பொறியியலாளர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் விசேட சட்டமொன்று உருவாக்கப்பட உள்ளது.
அண்மையில் நாடு முழுவதிலும் இடம்பெற்ற மின்தடைக்கு எந்தத் தரப்பினரும் பொறுப்பினை எற்றுக்கொள்ளவில்லை.
இதனால் மின் பொறியியிலாளாகள் மற்றும் அதிகாரிகள் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மின்சாரம் தடைப்படுவது குறித்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் தலைமையில் அண்மையில் விசேட கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டில் ஆட்சி செய்த அராசங்கம் மின்சார புனரமைப்பு சட்டமொன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டிருந்தது. எனினும் அந்தச் சட்டத் திருத்தம் அமுல்படுத்தப்படவில்லை.
எதிர்வரும் காலங்களில் மின்சாரம் தடைப்பட்டால் அதற்பான பொறுப்பினை கூற வேண்டிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் சட்டமொன்றை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
4 வயதும் ஏழு மாதங்களேயான சேயா சௌவ்தமி என்ற சிறுமியை, வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியான இலந்தாரி ஜெடிகே சமன் ஜயலத் என்பவருக்கு மேல் நீதிமன்றம், மரண தண்டனை விதித்ததுடன் 60 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 45 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்தது.
நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன, அவருக்கு மரணதண்டனை விதித்ததுடன் 60 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 45 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
கம்பஹா, கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படல்கம பகுதியில் கடந்த செம்டெம்பர் 11ம் திகதிக்கும் செப்டெம்பர் 13ம் திகதிக்கும் இடையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், முழு நாட்டையுமே உலுக்கியது மட்டுமன்றி, குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை விதிக்கவேண்டும் என்ற குரலும் ஓங்கியிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே, சட்டமா அதிபரினால், சந்தேகநபருக்கு எதிராக நேரடியாகவே மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அதிகுற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.
சிறு வயதான சேயா சௌவ்தமி பக்மீதெனிய என்பவரை மரணமடையச் செய்தமை அல்லது மரணத்தை எதிர்நோக்கும் அபாயத்துக்கு உள்ளாக்கியமை, அதனூடாக அவருடைய சட்டரீதியான பாதுகாவலரான சமந்தி ரேணுகா என்பவரின் பாதுகாப்பை இல்லாமல் செய்து, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை, அந்தச் செயற்பாடுகளின் ஊடாக சிறுவயதேயான அச்சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை, அந்தச் செயற்பாட்டிலிருந்து பாலியல் திருப்தியைப் பெற்றுக்கொள்வதற்கு வன்கொடுமை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை மற்றும் சிறுமியைப் படுகொலை செய்தமை மனிதப் படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழேயே அவருக்கு எதிராக டிசெம்பர் மாதம் 23ம் திகதியன்று, அதிகுற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு, 2016 மார்ச் மாதம் 3ம் திகதியன்று வழங்கப்படவிருந்த நிலையில், தீர்ப்பு 15ம் திகதியன்று (நேற்று) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சேயா சௌவ்தமி, 2010 செப்டெம்பர் 16ம் திகதியன்று பிறந்தார். அவருக்கு இன்றுடன் ஐந்தரை வயது பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வீட்டிலுள்ள கட்டிலில் 2015ம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் 11ம் திகதி இரவு உறங்கிக் கொண்டிருந்த போது சேயா சௌவ்தமி, கடத்தப்பட்டார்.
இந்நிலையில், வீட்டுக்கு அண்மையிலுள்ள வாய்க்காலிலிருந்து இரண்டு நாட்களின் பின்னர், அதாவது 13ம் திகதியன்று, அவரது சடலம் நிர்வாணமான நிலையில் மீட்கப்பட்டது.
படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபரான சமத் ஜயலத்தின் மரபணு அறிக்கை (டி.என்.ஏ), படுகொலை செய்யப்பட்ட சிறுமியான சேயா சௌவ்தமியின் சடலத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உயிரியல் மாதிரிகளுடன் பொருந்தியிருந்தது. இதனையடுத்தே, அவருக்கு எதிராக அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, ஜனவரி மாதம் 25ம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டு, ஜனவரி 29ம் திகதியன்று நிறைவடைந்தது. சாட்சி அட்டவணையில் 30 பேர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதில் அறுவர் மட்டுமே சாட்சியளித்திருந்தனர்.
பிரதிவாதியின் கோரிக்கைக்கு அமைவாகவே, ஜூரி சபை இன்றி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் கடந்த 26ம் திகதியன்று மன்றில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன, முறைப்பாட்டாளரின் சட்டத்தொகுப்புரையை ஆறு மணிநேரத்துக்கு மேலாக நிகழ்த்தினார்.
வழக்கின் பிரதிவாதி, குற்றத்தைச் செய்த முறைமை, சுயாதீனமான சாட்சிகள், பிரதிவாதியின் வாக்குமூலம் உள்ளிட்டவற்றை தனது தொகுப்புரையில் முன்வைத்தார். குற்றம் இடம்பெற்று 72 நாட்களுக்குள் பிரதிவாதிக்கு எதிராக அதிகுற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது என்பதுடன் குற்றம் இடம்பெற்று 166 நாட்களுக்குள் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்தன.
குற்றம் இடம்பெற்று 184 நாட்களில், (அதாவது சேயா சௌவ்தமிக்கு 5 வயதும் 6 மாதங்களும் நிறைவடையும் நாளான) நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இது இலங்கை சட்ட வரலாற்றில், மிகவும் குறைந்த நாளிலேயே தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்காகும்.
வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்படவிருந்த நிலையில், பிரதிவாதியான இலந்தாரி ஜெடிகே சமன் ஜயலத், கடும் பாதுகாப்புடன் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். நீதிமன்றத்தின் பாதுகாப்பைப் பொலிஸார் அதிகரித்திருந்தனர்.
வழக்கில் சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியான பிரதிவாதி இனங்காணப்பட்டுள்ளார் என்று அறிவித்த, மேல் மாகாணத்தைச் சார்ந்த நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன, தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னர் ஏதாவது கூற விரும்புகின்றீரா என பிரதிவாதியைப் பார்த்துக் கேட்டார்.
பிரதிவாதியின் கூண்டுக்குள் தலையைக் கவிழ்த்தவாறு நின்றிருந்த சமத் ஜயலத் ‘இவ்வாறான குற்றங்கள், மது மற்றும் புகைப்பொருள் பாவனையினாலே இடம்பெறுகின்றன. வேறொன்றும் கூறுவதற்கு இல்லை’ என்றார்.
இந்நிலையில், முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்து சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன, ‘சின்னஞ்சிறு சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, படுகொலை செய்தமை, முழு நாட்டையும் உலுக்கியது. அவ்வாறான குற்றத்துக்காக அதியுச்சபட்ச தண்டனையை வழங்கவேண்டும் எனக் கோரிநின்றார்.
பிரதிவாதியின் சார்பில், அரச செலவில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சத்துரங்க அமரதுங்க, பிரதிவாதி மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளில் இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொண்டமையால், அச்சம்பவங்களின் தன்மைக்கேற்ப தண்டனையைக் குறைக்குமாறு கோரிநின்றார்.
தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னர் கருத்துரைத்த நீதிபதி, ‘பெற்றோர், வீட்டில் சுதந்திரமாக இருக்கின்றோம் என்பதற்காக, பிள்ளைகளின் பாதுகாப்பில் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. தற்போதைய பிள்ளைகளின் பாதுகாப்பு மிகப் பயங்கரமானதாகவே இருக்கின்றது. தற்போதைய பெற்றோர் இரவுவேளை வரையிலும் தொலைக்காட்சிகளை பார்க்கின்றமையால், இவ்வாறான குற்றங்களை இழைக்கின்ற வெளியாருக்கு, இலகுவில் சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றது’ என்றார்.
அதன் பின்னர், நீதிமன்றத்தில் அந்த அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டன. மின்விசிறிகள் நிறுத்தப்பட்டன. அறை இருண்டது. அனைவரும் எழுந்து நின்று மௌனம் காத்தனர். அதன்பின்னர் நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.
‘இந்த வழக்கின் பிரதிவாதியை, இந்த நீதிமன்றம் குற்றவாளியாக இனங்கண்டுள்ளது. ஆகையால், முதலாவது குற்றத்துக்கு 20 வருடங்கள் கடூழியச் சிறையும் 10 ஆயிரம் ரூபாவும், இரண்டாவது குற்றத்துக்கு 20 வருடங்கள் கடூழியச் சிறையும 25 ஆயிரம் ரூபாய் தண்டமும். மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 20 வருடங்கள் கடூழியச் சிறையும் 10 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்படுகின்றது.
இந்த தண்டத்தை செலுத்தாவிடின் மேலதிகமாக ஒருவரும் சிறைத்தண்டனை விதிக்கப்படவேண்டும்.
நான்காவது குற்றமான சிறுமிக்கு மரணத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக அவருக்கு இந்த நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கின்றது.
ஜனாதிபதி நியமிக்கின்ற நாளன்று, நேரத்தில் மற்றும் இடத்தில் குற்றவாளியின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டி அவரது உயிர், அவரது உடலிலிருந்து பிரியும் வரையிலும் தூக்கிலிடப்படவேண்டும்’ என்று தீர்ப்பளித்து, தீர்ப்பில் ஒப்பமிட்டார்.
ஒப்பமிட்ட அந்தப் பேனையை உடைத்து வீசிவிட்டு நீதிபதி, மன்றிலிருந்து பிற்பகல் 12 மணியளவில் வெளியேறிவிட்டார்.
அதனையடுத்தே மின்விளக்குகள் ஒளிர விடப்பட்டன. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான சமத் ஜயலத், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதேவேளை, மன்றுக்கு வெளியே வந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சேயா சௌவ்தமியின் தந்தை, ‘என்னுடைய மகளின் புகைப்படங்களைப் பிரசுரிப்பதையோ, வெளியிடுவதையோ ஊடகங்கள் இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் விடயத்தில், பெற்றோர் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. இந்தத் தீர்ப்பு திருப்தியளிக்கின்றது’ என்றார்.
பேக்கரி உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கான விலையை ஏழு ரூபாவால் குறைக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. மேலும், நுகர்வோர் வாரத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நுகர்வோர் சேவைகள் அதிகார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையை எதிர்வரும் 20ம் திகதி வரை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நுகர்வோர் வாரத்தை முன்னிட்டு நுகர்வோருக்கு பான் விலையை குறைத்து விற்பனை செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தையும் இவ்வாறு அமுல்படுத்தவுள்ளதாக, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
வவுனியா பாவற்குளம் பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர் கட்டுத்துவக்கில் அகப்பட்டு படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
செட்டிகுளம் பகுதியில் வசித்து வந்த சிவபாதம் யோகேந்திரம் வயது 40 வயல் வேலை செய்வதற்கு பாவற்குளம் சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் (14.03.2016) பிற்பகல் வேலை முடிந்து வீடு திரும்பும்போது வயலில் இருந்த கட்டுத்தவக்கில் சிக்குண்டு படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மாவட்ட மெய்வன்மைச் சங்கம் நடத்தும் இளையோருக்கான தடகளப் போட்டிகளும் திறந்த வயதுப்பிரிவினருக்கான அஞ்சல் ஓட்ட நிகழ்வுகளும் எதிர்வரும் 19 ஆம் திகதி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளன.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான இளையோர் விளையாட்டு நிகழ்வில் 100 மீற்றர், 400 மீற்றர், 1,500 மீற்றர் ஓட்டப் போட்டிகளும் அஞ்சலோட்ட நிகழ்வுகளும் முப்பாய்ச்சல், நீளம் பாய்தல், குண்டு போடுதல் மற்றும் தட்டெறிதல் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
திறந்த வயதுப் பிரிவினருக்கான போட்டியில் அஞ்சலோட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதில் பங்குபற்ற விரும்புவோர் தமது விண்ணப்பங்களை 16 ஆம் திகதிக்கு முன்பாக மெய்வன்மைச் சங்கத்திடம் ஒப்படைக்குமாறு வவுனியா மாவட்ட மெய்வன்மைச் சங்கச் செயலாளர் கே.விஜிதரன் அறிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில் அனைத்துப் பிரிவிலும் புதுக்குளம் மகாவித்தியாலய அணி கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது.
கனகராயன்குளம் மகா வித்தியாலய மைதானத்தில் கடந்த சனிக்கிழமை இறுதியாட்டங்கள் நடைபெற்றன.
15 வயதினருக்கான இறுதியாட்டத்தில் புதுக்குளம் மகாவித்தியாலய அணியை எதிர்த்து கனகராயன் குளம் மகாவித்தியாலய அணி மோதியது. முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளாலும் கோல் எதனையும் பதிவுசெய்ய முடியவில்லை. இரண்டாம் பாதியிலும் இதே நிலைமை நீடித்தது.
ஆனால் ஆட்டம் முடிவடைவதற்கு ஒரு நிமிடம் இருக்கும் போது புதுக்குளம் மகாவித்தியாலய அணி ஆட்டத்தின் ஒரே கோலைப் பதிவுசெய்து கிண்ணம் வென்றது.
17வயதுப் பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் புதுக்குளம் மகாவித்தியாலய அணியை எதிர்த்து தரணிக்குளம் கனிஷ்ட வித்தியாலய அணி மோதியது. இதில் இரு அணிகளும் ஆட்டம் முடிவடையும் வரை கோல் எதனையும் பதிவு செய்யவில்லை.
இதனால் சமநிலை தவிர்ப்பு உதைகள் மூலம் கிண்ணம் தீர்மானமாகும் நிலைமை. சமநிலைத் தவிர்ப்பில் புதுக்குளம் மகாவித்தியாலய அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.
19 வயதுப் பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் புதுக்குளம் மகாவித்தியாலய அணியை எதிர்த்து தரணிக்குளம் கனிஷ்ட வித்தியாலய அணி மோதியது. இதில் ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய புதுக்குளம் மகாவித்தியாலய அணி, ஆட்டநேர முடிவில் 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியனாகியது.
உலக கிண்ண T20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலககிண்ணம் T20 போட்டி தொடரின் பிரதானச் சுற்று நேற்று ஆரம்பமானது. முதல் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணித்தலைவர் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இதையடுத்து குப்தில், கேன் வில்லியம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அஸ்வின் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை சிக்சர் அடித்து தனது ஓட்ட எண்ணிக்கையை தொடங்கிய குப்தில் அடுத்த பந்திலேயே ஆட்டம் இழந்தார்.
இதன்மூலம் T20 உலகக்கோப்பை தொடரை குப்தில் சிக்சருடன் தொடங்கினார். நெஹ்ரா வீசிய அடுத்த ஓவரின் 3வது பந்தில் முன்றோ ஆட்டமிழந்தார்.
பின்னர் 3 வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சனுடன் கோரி அண்டர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிலைத்து நின்று விளையாடியது.
இதன் காரணமாக 6 ஓவரில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 33 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 7வது ஓவரை வீசிய ரெய்னா வில்லியம்சனை சிறப்பாக ஸ்டம்பிங் செய்து வெளியேறினார்.
அவர் 16 பந்தில் 8 ஓட்டங்கள் எடுத்திருந்தார். பின்ன நியூசிலாந்து அணியினர் ஓட்டங்களை குவிக்க முடியாமல் திணறினர். டெய்லர் 10 ஓட்டங்களிலும் கோரி அண்டர்சன் 34 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்.
சான்ட்னெர் 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்களை எடுத்தது.
இதையடுத்து 127 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா துடுப்பெடுத்தாடி வருகிறது.
இதையடுத்து 127 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மா மற்றும் தவான் ஆரம்ப வீரர்களாக துடுப்பெடுத்தாடினர்.
இந்நிலையில் முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்த நிலையில் தவான் ஆட்டமிழந்தார்.
பின்னர் விராத் கோஹ்லி களமிறங்கினார். சிறிது நேரத்தில் ரோகித் சர்மா சுரேஷ் ரெய்னா யுவராஜ் சிங் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அப்போது இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 24 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பின்னர் அணித்தலைவர் டோனி மற்றும் கோஹ்லி இணை சிறிது நேரம் தாக்கு பிடித்தாடியது.
இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 39 ஆக இருந்தபோது கோஹ்லி 23 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர்வந்தவர்களும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
அதிகப்பட்சமாக டோனி 30 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 79 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
முதல் போட்டியிலேயே இந்திய அணி சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்திருப்பது இந்திய ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.
பெண்கள் அன்று மட்டுமல்ல எல்லா காலக்கட்டதிலுமே சீரியல் பார்ப்பதை விடுவதில்லை. அதிலும் தற்போது உள்ள குடும்ப பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களுக்கு பெரிதும் அடிமையாகி வருகின்றனர் என்றே சொல்லலாம்.
கணவர், பிள்ளைகளை வேலைக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் அனுப்பிவிட்டு நாள்முழுவதும் வீட்டு வேலைகளில் இருக்கும் குடும்பப் பெண்கள் பொழுது போக்கிற்காக தொலைக்காட்சித் தொடர்களைப் பார்கின்றனர். அதை பார்த்து உணர்ச்சி வசம்மும் படுவார்கள்.
அவ்வாறு இந்த காணோளியில் ஒரு பெண் தொலைக்காட்சித் தொடரப் பார்த்து தேம்பி தேம்பி அழும் பொழுது அருகில் இருக்கும் குழந்தை அம்மா அழுவதை பார்த்து என்ன செய்கின்றது என்று நீங்களே பாருங்கள்.
புதிதாக தயாரித்துள்ள வெடிகுண்டு மூலம் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரை சில வினாடிகளில் சாம்பல் ஆக்கி விடுவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகொரியா கடந்த சில ஆண்டுகளாகவே ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை போன்றவற்ற மேற்கொண்டு வருகிறது. இதனால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் கொரியா எல்லையில் அமெரிக்கக்கூட்டு படையினர் மற்றும் தென்கொரிய வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வடகொரியா அமெரிக்காவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்கத்தின் செய்தி ஊடகமான டிபிஆர்கே விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது, வட கொரியா தயாரித்துள்ள ஹைட்ரோஜன் வெடிகுண்டு சோவியத் யூனியன் தயாரித்த வெடிகுண்டை விட ஆற்றல் வாய்ந்தது.
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணையில் இந்த வெடிக்குண்டு பொருத்தப்பட்டு நியூயோர்க்கில் உள்ள மன்ஹாட்டன் நகரில் விழச்செய்தால் சில வினாடிகளில் அந்த நகரமே சாம்பல் ஆகிவிடும் என்று தெரிவித்துள்ளது.
பொருளாதார தடை விதிக்கப்பட்டும் அந்நாட்டு தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது பல்வேறு நாடுகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக வடகொரியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான ரஷ்யா, வீண்பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் இது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்கும்படியும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திரிஷா செல்லப் பிராணிகள் மீது அதிகமான பிரியம் கொண்டவர். அது அனைவரும் அரிந்த விஷயம். அண்மையில் பாஜக எம்எல்ஏ ஒருவர் போராட்டத்தின்போது, காவல்துறையினர் குதிரையின் காலை உடைத்தனர்.
அந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில், அதனை பார்த்த திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில், ஆம், உங்களை நரகத்தில் போட்டு எரிக்க வேண்டும் என்று நான் வேண்டுதல் வைக்கிறேன். இது ஒரு அசிங்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகவா லோரன்ஸ் தனது அறக்கட்டளை அமைப்பின் மூலம் பல்வேறு உதவிகளை ஓசை இல்லாமல் செய்து வருகிறார். அசோக் நகரில் உள்ள ராகவா லோரன்சின் பூர்வீக இல்லத்தை ஆதரவற்றோரின் ஆசிரமமாக மாற்றி இருக்கிறார். இங்கு 100க்கும் அதிகமானோர் தங்கி இருக்கிறார்கள்.
இவர்களுக்கு தேவையான உணவு, உடை, தங்கும் இடம் மருத்துவ உதவி அனைத்தையும் ராகவா லோரன்ஸ் வழங்குகிறார். இதுபோல பூந்தமல்லியில் ஏழை குழந்தைகள் இலவசமாக தங்கி படிக்கும் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு 150க்கும் அதிகமான குழந்தைகள் தங்கிப் படிக்கிறார்கள். இவர்களுக்கு கல்வி, சீருடை, உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதற்கான முழு பொறுப்பையும் ராகவா லோரன்ஸ் அறக்கட்டளை ஏற்று நடத்துகிறது. இதுமட்டுமல்ல, ஏழை குழந்தைகளின் உயிர் காக்கும் சத்திர சிகிச்சைகளுக்கும் ராகவா லோரன்ஸ் உதவி வருகிறார்.
இதயக் கோளாறு உள்ள பிஞ்சு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக உதவி கேட்டு வருபவர்களுக்கு இலவசமாக சிகிச்சை செய்வதற்கான உதவிகளை செய்து வருகிறார். இதுவரை 127 குழந்தைகளின் இதய சிகிச்சைக்கு உதவி இருக்கிறார்.
சமீபத்தில் 3 மாத குழந்தையின் இதய சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று ஒரு ஏழை தம்பதி கேட்டுக் கொண்டனர். இந்த குழந்தையின் இதய சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ராகவா லோரன்ஸ் செய்து இருக்கிறார். இது இவரது உதவியால் உயிர் பிழைத்த 128வது குழந்தையாகும்.
இதுபற்றி கூறிய ராகவா லோரன்ஸ், ‘‘சிறுவயதில் எனக்கும் தலையில் ஒரு பிரச்சினை இருந்தது. ‘நான் குணம் அடைந்தால் ராகவேந்திருக்கு என்னை ஒப்படைப்பதாக எனது தாயார் வேண்டிக் கொண்டார். நான் நலம் பெற்றேன். இதனால் என் பெயரை ராகவா லோரன்ஸ் என்று மாற்றிக் கொண்டேன். பிஞ்சு குழந்தைகள் இதய நோய் பாதிப்பால் வரும்போது பரிதாபமாக இருக்கிறது. அதற்கு உதவி செய்து அவர்கள் உயிர் பிழைக்கும் போது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே பாகிஸ்தான் வீரர்களை அதிகம் நேசிக்கின்றார்கள் என்ற அப்ரிடியின் கருத்து தனக்கு அதிர்ச்சியும், அதிக மன வேதனையும் அளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ஜாவீத் மியாண்டட் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜாவீத் மியாண்டட் அளித்த பேட்டியில் , “ இது போன்ற கருத்துக்களை கூறியதற்காக வீரர்களே வெட்கப்பட வேண்டும். உங்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.
இக்கருத்து குறித்து பாகிஸ்தான் வழக்கறிஞர்கள் சங்கம் அப்ரிடியின் கருத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதில் பாகிஸ்தானின் நலனுக்கு எதிராக உள்ளது எனவும், இக் கருத்துக்காக நாட்டிடம் மன்னிப்பு கேட்டு தனது கருத்தை அப்ரிடி திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் அணித் தலைவர் அப்ரிடி..
எனது கிரிக்கட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன். எமக்கு இந்தியாவில் கிடைக்கும் அன்பு சிறப்பானதாகும். பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே பாகிஸ்தான் வீரர்களை அதிகம் நேசிக்கின்றார்கள்.
கொல்கத்தாவில் விளையாடுவதில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக நாங்கள் ஒருபோதும் உணரவில்லை. இந்தியாவில் கிரிக்கட் விளையாடும் போது கிடைக்கும் ஆனந்தத்தை உலகில் வேறு எங்கும் நான் அனுபவித்தது கிடையாது.
அப்ரிடியின் இந்த கருத்தால் பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.