ஓமானில் இலங்கைப் பெண்ணுக்கு நடந்த கொடூரம் : நேரடியாக வெளியிட்ட உண்மைகள்!!

கடந்த 2022ஆம் ஆண்டு பணிப் பெண்ணாக ஓமான் நாட்டிற்குச் சென்ற மட்டக்களப்பு – முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த பெண் வீடுதிரும்பியுள்ளார்.

இராசலிங்கம் யசோமலர் என்னும் குறித்த பெண், கடந்த ஒரு வருடமாக எதுவித தொடர்புகளும் இல்லாமல் இருப்பதாகவும் அவரை உரியமுறையில் மீட்டுத்தருமாறு அவரது குடும்பத்தினர் கடந்த 19.12.2024 அன்று ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், அந்த பெண் கடந்த 11ஆம் திகதி திடீரென தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளதாக அப்பெண்ணின் சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் கோரிக்கை

இவ்விடயம் தொடர்பில் அப்பெண்ணின் குடும்பத்தினர் நேற்று முன்தினம்(16.01.2025) மாலை தமது வீட்டில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வீடு திரும்பிய பெண் பேசுகையில், தான் வெளிநாடு சென்று 2 வருடங்கள் ஆகின்றன. அதில் ஒருவருட காலத்திற்கான சம்பளத்தை நான் தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர் எமது குடும்பத்திற்கு அனுப்பியிருந்தார்.

மற்றைய வருடத்திற்குரிய சம்பளம் எதனையும் அவர்கள் எமது வீட்டிற்கு அனுப்பவில்லை, என்னை அடித்து துன்புறுத்தினார்கள்.

மொட்டைமாடியில் வெயிலில் முழங்காலில் நிற்குமாறு பணித்தார்கள், கரண்டியை சூடாக்கி காலில் வைத்தார்கள் இவ்வாறு பல கொடுமைகளை நான் அங்கு அனுபவித்தேன்.

எனவே, நான் வேலை செய்தமைக்கு மிகுதியாகவுள்ள ஒரு வருடத்திற்குரிய சம்பளத்தை எனக்கு பெற்றுத்தர வேண்டும். என்னை மீட்டெடுப்பதற்கு உதவிய ஊடகங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

FIFA World Cup : 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டம்!!

உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு, மொராக்கோ நாட்டில் 30 லட்சம் நாய்கள் கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

2030 ஆண்டு கால்பந்து உலக கோப்பை தொடர், ஸ்பெயின், போர்ச்சுகல், மொராக்கோ ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதனையொட்டி, இந்த நாடுகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தசூழலில், தங்கள் நாட்டிலுள்ள 30 லட்சம் தெருநாய்களை கொல்லும் நடவடிக்கையில், மொராக்கோ அரசு இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நச்சுத்தன்மை வாய்ந்த ராசாயனத்தை செலுத்தியும், சுட்டும், அடித்தும் நாய்கள் கொலை செய்யப்படுவதாக, அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச விலங்குகள் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான கூட்டமைப்பு, இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அதேபோல், பிரபல விலங்கு உரிமைகள் வழக்கறிஞருமான ஜேன் குடால், நாய்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டுமென, FIFAவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையின் யூடியூபர் ஒருவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!!

இலங்கை நடிகரும் யூடியூபருமான சுதத்த திலக்சிறிக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சுதத்த திலக்சிறி நடத்தும் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பகிரப்பட்ட கருத்துக்கள் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் இருந்ததாக கூறியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை முன்னாள் அமைச்சர் மனுச நாணயக்கார சார்பில் சட்டத்தரணிகளால், குறித்த நடிகருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்கள் : அவசர உதவி கோரும் பொலிஸார்!!

கடந்த ஜனவரி 16 ஆம் திகதி மன்னாரில் (Mannar) நடந்த துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

தொடர்பு கொள்ள

இந்நிலையில், சந்தேக நபர்களை அடையாளம் காண புலனாய்வாளர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில் குறித்த சந்தேகநபர்களின் வரைபடங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மேலும், அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடன் அறிவிக்குமாறு கோரியுள்ளனர்.

தகவல்களை அறிய தர, மன்னார் பொலிஸ் தலைமையக அதிகாரியின் 0718591363 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது மன்னார் பொலிஸ் நிலையத்தின் 0232223224 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

10 மாத ஆண் குழந்தைக்கு எமனான தாய் : இலங்கையில் மற்றுமொரு துயர சம்பவம்!!

ஹபரண – பலுகஸ்வெவ பகுதியில் 10 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 10 மாத ஆண் குழந்தை மர்மமாக உயிரிழந்துள்ளதாக நேற்றையதினம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குழந்தையின் மரணத்திற்கு, அதன் தாயார் தான் காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

புலனாகம – பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீட்டில், தாய் மற்றும் தந்தை, சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குழந்தை வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு(16.01) தந்தை வெளியே சென்ற சமயம் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையின் தாயார் இரவு நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் உள்ள நீர் குழாய்க்குள் குழந்தையை அமிழ்த்தி விட்டு பின்னர் மீண்டும் கட்டிலுக்கு கொண்டு வந்து கிடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனை அந்த தாயார் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர், இது ஒரு கொலை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயாரான 34 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணகைளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

 

வவுனியா நெளுக்குளத்தில் 12 வாகன பற்றரிகளுடன் ஒருவர் கைது!!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் 12 வாகன பற்றரிகளை மகேந்திரா ரக வாகனத்தில் ஏற்றிச்சென்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளமையுடன் குறித்த வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே.திவுல்வெவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் நெளுக்குளம் பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போதே குறித்த மகேந்திரா ரக வாகனத்தினை சோதனைக்குட்படுத்திய போது வாகனத்தில் 12 வாகன பற்றரிகளை மீட்டெடுத்துள்ளனர். குறித்த வாகன பற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்தமையுடன் அவ் வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வாகன உரிமையாளர்கள் பற்றிரிகள் எவையும் களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் உடனடியாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ முறைப்பாட்டினை வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த நான்கு வாரத்திற்கு முன்னர் வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில வாகன பற்றரிகளை களவாடிய குற்றச்சாட்டில் நான்கு வாகன பற்றரிகளுடன் இருவரை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் மர்மப் பொருள்!!

கிளிநொச்சி சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கிய நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கரையொதுங்கிய உருளை வடிவிலான மர்மப் பொருளில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுத்துக்கள் தெளிவற்ற நிலையில் காணப்படுகின்றது.

இதனடிப்படையில் குறித்த மர்ம பொருளானது சீரற்ற காலநிலையால் கரையொதுங்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகழிறது. இந்நிலையில், அண்மைக்காலமாக வடக்கு கடற்பரப்பில் பல்வேறு விதமான மர்ம பொருட்கள் கரையொதுங்கி வருகின்றது.

இவ்வாறு கரையொதுங்கிய உருளை வடிவிலான மர்மப் பொருளை கடற்படையினர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.  அதேவேளை மட்டக்களப்பு கடற்கரையிலும் இவ்வாறு ஒரு மர்மபொருள் ஒன்று கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு மோகத்தால் 61 இலட்சத்தை இழந்த யாழ் இளைஞன்!!

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தாக கூறி 61 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக 61 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்ற பின்னர் , இளைஞனை வெளிநாடு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் சந்தேகநபர்கள் எடுக்கவில்லை.

இந்நிலையில் , பாதிக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் மூவரை கைது செய்தனர்.

கைதான சந்தேக நபர்களை நேற்றைய தினம் (16) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை மூவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

நான்கு வயது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த பெண் : சிறுவனின் சடலம் மீட்பு!!

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல்போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் இன்று(17) மீட்கப்பட்டுள்ளது. தினேஷ் ஹம்சின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தலவாக்கலை பொலிஸாரும், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த தேடுதலின்போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக தனது நான்கு வயது மகனுடன் தாயொருவர், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்குடன் தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் நேற்று மாலை குதித்திருந்தார்.

இதனையடுத்து குறித்த தாய் மீட்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவன் காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய தினம் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

41 வயதான குறித்த பெண் கணவரை பிரிந்து பூண்டுலோயா பகுதியை சேர்ந்த மற்றுமொரு நபருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

அந்நபர் மற்றுமொரு திருமணம் செய்துகொள்வது தொடர்பில் எழுந்த பிரச்சினையாலேயே இப்பெண் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாம் இணைப்பு

தலவாக்கலைப் பிரதேசத்தில் நான்கு வயதுக் குழந்தையொன்றுடன் பெண்ணொருவர் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (16) மாலை, 41 வயதுடைய தாயொருவர் தனது நான்கு வயதுக்குழந்தையுடன் , தலவாக்கலை – மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார்.

அதனைக் கண்ட பொதுமக்கள் பொலிசாருக்குத் தகவல் வழங்கியுள்ளதுடன், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில் தாய் காப்பாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் பொலிசாரினால் அழைத்துச்செல்லப்பட்டு, லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரது நான்கு வயதுக்குழந்தை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் குழந்தையை தேடும் பணியில் பொலிஸாரும் பொது மக்களும் நேற்று மாலை வரை ஈடுபட்டிருந்தனர்.

 

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் மின்சார கட்டண குறைப்பு!!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 20 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் இன்று(17) இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, இன்று(17.01.2025) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.

இதன்படி, வீட்டுப்பாவனையின் போதான, 0 – 30 அலகுகளுக்கு 29 வீதமும், 31 – 60 அலகுகளுக்கு 28 வீதமும், 61 – 90 அலகுகளுக்கு 19 வீதமும், 91 – 180 அலகுகளுக்கு 18 வீதமும், 180 அலகுகளுக்கு மேல் 19 வீதமும் குறைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பொதுத் தேவை கருதிய மின் பாவனையாளர்களுக்கு 12 வீதமும், அரச நிறுவனங்களுக்கு 11 வீதமும்,

ஹோட்டல் துறைக்கு 31 வீதமும், வழிபாட்டுத்தலங்களுக்கு 21 வீதமும், தொழிற்துறைக்கு 30 வீதமும், வீதி விளக்குகளுக்கு 11 வீதமும் மொத்த விலைக் குறைப்பு 20 வீதம் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு : இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கான மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறை திருத்தமின்றி தற்போதைய அளவிலேயே மின்கட்டணத்தைப் பேணுவதற்கு இலங்கை மின்சார சபை பரிந்துரைத்துள்ளது.

எனினும் இந்த விடயம் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் கோரியுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதித் தீர்மானத்தை இன்று அறிவிக்கவுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) மீண்டும் அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 216,000 ரூபாவாக உள்ளது.

மேலும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 199,800 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,712.57 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

கடந்த வாரம் (10) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 215,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 198,500 ரூபாவாகவும் இருந்தது.

யாழில் நகைக்கடைக்குள் நுழைந்த மர்மக் குழு : சிசிரிவி காணொளி தொடர்பில் புலனாய்வுப் பிரிவு விசாரணை!!

யாழ்ப்பாணம் (Jaffna) கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குள் நுழைந்த குழுவொன்று 30 இலட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம், நேற்று (16.01.2025) மதியம் இடம்பெற்றுள்ள நிலையில் அது தொடர்பான சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது.

சம்பவத்தின் போது, குற்ற புலனாய்வு பிரிவு (சிஐடி) என தெரிவித்து நகைக் கடைக்குள் நுழைந்த மூவரடங்கிய குழு சோதனை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இதன்போது, அக்குழுவினர் கடையில் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். மேலும், கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

கேரள இளைஞர் ஷரோன் ராஜ் கொல்லப்பட்ட வழக்கில் காதலி கிரீஷ்மா குற்றவாளி : நீதிமன்றம் அதிரடி!!

கேரள மாநிலம் பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியைச் சேர்ந்த ஷரோன் ராஜும் கன்னியாகுமரியைச் சேர்ந்த கிரீஷ்மாவும் காதலித்து வந்தனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு கிரீஷ்மா வீட்டில் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அவரை திருமணம் செய்ய கிரீஷ்மாவும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த ஷரோன் ராஜ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷரோன் ராஜை சமாதானப்படுத்திய கிரீஷ்மா,

கடந்த 2022 அக்டோபர் 14 ஆம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லை எனக் கூறி ஷரோன் ராஜை வீட்டிற்கு அழைத்துள்ளார். கிரீஷ்மா அழைத்ததை நம்பி ஷரோன் ராஜ் தனது நண்பருடன் அவரது வீட்டிற்கு சென்றார்.

அப்போது ஷரோன் ராஜுக்கு குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார் கிரீஷ்மா. அதனை பருகிய ஷரோன் ராஜ் பின்னர் தனது நண்பருடன் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட ஷரோன் ராஜ், கிரீஷ்மா குளிர்பானம் கொடுத்ததை கூறியுள்ளார். வயிற்றுவலி நிற்காததால் மருத்துவமனையல் அனுமதிக்கப்பட்டார் ஷரோன் ராஜ்.

தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் ஷரோன் ராஜ். கடைசி வரை தனது காதலி மீது ஷரோன் ராஜ் சந்தேகப்படவில்லை,

அவரைக் காட்டிக் கொடுக்கவும் இல்லை. ஆனால் அவரது ரத்த மாதரிகளில் விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், இது திட்டமிடப்பட்ட கொலை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, துணை ஆணையர் ஜான்சன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கிரீஷ்மா ஷரோன் ராஜுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.

வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இருவரும் ஒன்றாக இருந்த போட்டோக்களை காட்டி பிரச்சனை செய்து விடுவார்

என்ற அச்சத்தில் ஷரோன் ராஜை கொலை செய்ய திட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்தார். இதில் கிரீஷ்மாவின் தாய் மற்றும் தாய் மாமாவுக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதையடுத்து கிரீஷ்மா மீது கடத்தல் அல்லது கொலைக்கு கடத்தல், விஷத்தால் காயம் ஏற்படுத்துதல், கொலைக்கு தண்டனை,

ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் நெய்யாட்டின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அப்போது கிரீஷ்மாவின் தாயார் சிந்துவுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எனவே க்ரீஷ்மாவின் தாய் விடுவிக்கப்பட்டார். மேலும் கிரீஷ்மாவும், அவரின் தாய்மாமனும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கின் தண்டனை நாளை அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

அணையில் தவறி விழுந்த 4 மாணவிகள் : 2 பேர் உயிரிழப்பு ஒருவர் கவலைக்கிடம்!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பீச்சி அணையில் 4 மாணவிகள் தவறி விழுந்த நிலையில், அலீனா(16), ஆன் கிரேஸ் (15) ஆகிய இரண்டு மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் 2 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒரு மாணவி கவலைக்கிடமான நிலையில், சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன் கிரேஸ், ஐரீன், அலீனா மற்றும் நிமா, நிமாவின் சகோதரி ஹிமாவின் நண்பர்கள் என குழுவினர் தேவாலய விருந்து கொண்டாட்டங்களுக்காக பீச்சி அணைக்கட்டுக்குச் சென்றுள்ளனர்.

பீச்சி நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த தோழி ஒருவரைக் காப்பாற்ற குழுவினர் முயற்சித்தபோது, ​​நான்கு மாணவிகளும் தண்ணீரில் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் ஒரு மாணவி உயிரிழந்த நிலையில், பட்டிக்காட்டைச் சேர்ந்த 16 வயது அலீனா திருச்சூரில் உள்ள ஜூபிலி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் பட்டிக்காட்டைச் சேர்ந்த எரின் என்பவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

திருச்சூர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்ட சிறப்பு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பீச்சியைச் சேர்ந்த 12 வயது சிறுமி நிமாவின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய மருத்துவ அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு நான்கே நாள் தான் : மகளை சுட்டு கொலை செய்த தந்தை!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கபாலியரில் வசித்து வருபவர் 20 வயது தனு கர்ஜார். இவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

ஆனால் தனு எனக்கு வீட்டுக்கு பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை. வேறு ஒருவரை காதலிப்பதாக தந்தை மகேஷ் கர்ஜாரியிடம் கூறியுள்ளார்.

ஆனால் மகேஷ் அதனை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தனு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் திருமணம் செய்வதற்கு தன்னை கட்டாயப்படுத்தி வருவதாகவும், தனக்கு ஏதாவது நடந்தால் தந்தையும் பிற உறவினர்களும் தான் பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் என்னை தினமும் அடித்து துன்புறுத்துகின்றனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விக்கி என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் தனுவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்களும் பிரச்சனையை பேசி தீர்க்க முயற்சி செய்தனர். அப்போது தனு வீட்டிற்கு செல்ல மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் மகளிர் பாதுகாப்பு அமைப்பாளர் ஒன் ஸ்டாப் சென்டருக்கு தன்னை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மகேஷ் தனியாக பேச வேண்டும் என கூறி மகளை அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

துப்பாக்கி சத்தம் கேட்டதும் அதிர்ச்சியடைந்த போலீசார் அங்கு சென்று பார்த்த போது மகேஷ் தனுவை கொலை செய்தது தெரியவந்தது. திருமணத்திற்கு 4 நாட்கள் முன்பாக தந்தை மகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘இங்கிலீஷும் தெரியல கருப்பா வேற இருக்க’ கணவரின் குடும்பத்தினர் கிண்டல் செய்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

நீ கருப்பா இருக்க இங்கிலீஷும் பேச தெரியல என்று கணவரின் குடும்பத்தினர் கிண்டல் செய்து வந்ததால் புதுமணப்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் கேரளாவை உலுக்கியெடுத்திருக்கிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொங்கொட்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் சசனா மும்தாஜ் (19).

இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த ஆண்டு மே 27ம் தேதி அதே மாவட்டத்தின் முரயூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் வாஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான 20 நாட்களுக்குள், அப்துல் வாஹித் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய்க்கு வேலைக்காகச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து, சஹானா மும்தாஜ் தனது கணவரின் மாமனார் மற்றும் மாமியாருடன் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

இதற்கிடையில், திருமணமானதிலிருந்து சஹானாவை அவரது கணவர் அப்துல் வாஹித் மற்றும் அவரது குடும்பத்தினர் மனரீதியாக துன்புறுத்தி வருகின்றனர்.

கணவரும் அவரது குடும்பத்தினரும் சஹானாவின் நிறத்தைக் காரணம் காட்டி, அவருக்கு ஆங்கிலம் சரியாகப் பேசத் தெரியாது என்று கூறி சித்திரவதை செய்துள்ளனர்.

அப்துல் வாஹித் துபாயில் இருந்த போது வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் அவரைத் துன்புறுத்தி வந்தார். அப்துல் விவாகரத்து செய்யப் போவதாகவும் கூறியுள்ளார். இதனால், சஹானா மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததால், படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

இதை அறிந்த கல்லூரி ஆசிரியர்கள், சஹானாவின் குடும்பத்தினரிடம் அவரது நிலை குறித்து தெரிவித்தனர். இதையடுத்து, சஹானாவின் குடும்பத்தினர் அவளை கொங்கோட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

அவருக்கு மனநல சிகிச்சையும் வழங்கப்பட்டது. அவரது உடல்நிலை சற்று மேம்பட்ட பிறகு, அவரது குடும்பத்தினர் சஹானாவை மீண்டும் அவரது கணவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது ​அவரது மாமியார், என் மகனுடன் 20 நாட்கள் மட்டுமே வாழ்ந்ததாக சஹானாவிடம் கூறினார்.

பின்னர் அவர் இந்த உறவு தொடரும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? அவரது உடல் நிறம் குறித்தும் அவர் சித்திரவதை செய்தார்.

இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சஹானா, கொங்கோட்டியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பினார்.

இந்த நிலையில், கணவர் குடும்பத்தினர் ஆங்கிலம் சரியாகப் பேசத் தெரியாததாகவும், அவரது உடல் நிறத்தை விமர்சித்ததாகவும் கூறி சித்திரவதை செய்ததையடுத்து சஹானா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிகாலை வெகுநேரமாகியும் சஹானாவின் அறைக்கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சஹானாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.