சடலமாக மீட்கப்பட்ட 27 வயது பெண் : கணவன் தலைமறைவு!!

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹமா எலிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹமா எலிய பதுலுஓய பிரதேசத்தைச் சேர்ந்த 27 பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தனது கணவருடன் வீட்டில் வசித்து வந்த நிலையில், கணவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் : வெளிவந்த காரணம்!!

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக தோட்ட மண்வெட்டியால் தாக்கி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் ஈச்சங்குளம் அம்மிச்சைத்யன் பகுதியைச் சேர்ந்த 58 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்றுமுன்தினம் (09.11.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் பின்னர் பிரதேசத்தை விட்டு தப்பியோடிய சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். கொலையுடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

30 பேருடன் பயணித்த தனியார் பேருந்து கோர விபத்து!!

பதுளை, படலபிட்டிய பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீடொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (10.11.2024) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் சுமார் 30 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து படலபிட்டிய பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வீடொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பஸ்ஸின் சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்ற பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தனியார் பஸ் விபத்துக்குள்ளான போது, ​​வீட்டில் ஒரு சிறு குழந்தை மற்றும் ஒரு தம்பதி இருந்த நிலையில் அவர்கள் ஒரே அறையில் இருந்ததால், குடியிருப்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து தப்பி வந்த 09 இலங்கையர்கள் யாழில் கைது!!

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு வந்த 09 இலங்கையர்களை யாழ்ப்பாணம் நெடுந்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் மண்டபம் அகதி முகாமில் தங்கியிருந்த திருகோணமலை மன்னார் மற்றும் முல்லைத்தீவு , ஆகிய பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் படகொன்றில் சட்டவிரோதமான முறையில் நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்த நெடுந்தீவு பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்காக நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தந்தையின் வாகனத்தால் பறிபோன பிள்ளையின் உயிர்!!

கொழும்பு மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புகையிரத குடியிருப்புக்கு முன்பாக ஜீப் வாகனமொன்று வீட்டிற்கு அருகில் நிறுத்த சென்ற போது குழந்தையொன்று ஜீப்பில் நசுங்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மருதானை பகுதியில் உள்ள புகையிரத வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த 3 வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.

நேற்று (10) பிற்பகல் வீட்டுக்கு அருகில் ஜீப் வாகனத்தை நிறுத்துவதற்கு தந்தை பின்பக்கத்திற்கு வாகனத்தை செலுத்தியுள்ளார்.

அதன்போது , பின்னால் வந்த அவரது குழந்தை வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தையின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இரு நாட்களுக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை!!

எதிர்வரும் புதன்(14) மற்றும் வியாழன்(15) ஆகிய இரண்டு தினங்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

தேர்தல் காரணமாக வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் அந்தந்த பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர்களிடம் இன்று கையளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் பணிகளுக்கு அவசியமான, மேசை, கதிரை, மண்டபம் போன்றவற்றை வழங்கச் சகல வலய கல்வி பணிப்பாளர்களும், அதிபர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

யாழில் திடீரென முளைத்த CCTV காமராக்கள்!!

யாழில் வீதியில் குப்பை போடுபவர்களை கண்டறிய CCTV காமராக்கள் 24 மணித்தியால கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – காரைநகர் வீதி கல்லுண்டாயில், வீதி ஓரங்களில் பொதுமக்களால் வீசப்படும் குப்பைகளை கட்டுப்படுத்த அந்தப்பகுதிகளில் CCTV காமராக்களை பொருத்தி யாழ் மாநகரசபை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

 

290 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்!!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தாமதமானதால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

11 மணித்தியாலங்களுக்கும் மேலாக விமானம் தாமதமாக புறப்பட்டதாக, பயணிகள் தெரிவித்தனர். இந்த விமானம் 290 பயணிகளுடன் இன்று அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் இரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, மெல்போர்ன் பயணிகள் சிலர் வேறு விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் எஞ்சிய பயணிகள் ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கூடிய விரைவில் மெல்பேர்னுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

வாகன விபத்தில் ஒருவர் பரிதாப உயிரிழப்பு!!

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனாகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளார்.

பனாகொட சந்தியில் இருந்து அத்துருகிரிய பிரதேசத்தை நோக்கி பயணித்த அடையாளம் காணப்படாத வாகனம் ஒன்று எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 22 வயதுடைய பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சடலம் தற்போது ஹோமாகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்திற்கு காரணமாக வாகனம் தப்பிச் சென்றுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

1000 கோடி ரூபா மோசடி செய்த வெளிநாட்டை சேர்ந்த தம்பதியினருக்கு கொழும்பு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

குருணாகல் மாவட்டத்தை மையமாகக் கொண்டு பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி சுமார் 1000 கோடி ரூபாவை மோசடி செய்த வெளிநாட்டை சேர்ந்த கணவன் மனைவியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தபோது எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோசடி சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பொலிஸார், சந்தேகநபர் மலேசியாவில் தலைமறைவாக இருந்து இலங்கை வந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை அழைத்துச் செல்வதற்காக அவரது மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொண்டு வரும் நிலையில், சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இணைய மோசடியில் சிக்கிய 58 இலங்கையர்கள்!!

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் கிருலப்பனை அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை நாட்டில் இணைய மோசடியில் ஈடுபட்டு சீனர்கள் பலர் அண்மையில் கைதாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் நிராகரித்தால் நாடாளுமன்றம் செல்லமாட்டேன் : சுமந்திரன்!!

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார் .

தேர்தல் கால ஊடகச் செவ்வியில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்த்துள்ளதாவது,

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை என்பதனால் வேறு கட்சிகளிலும், சுயேச்சைகளிலும் போட்டியிடுபவர்களினாலேயே தமிழரசு மீது அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன

இதேநேரம் அநுராகுமார திஸாநாயக்காவின் கட்சியைப் பொறுத்த மட்டில் ஊழல் அற்ற ஆட்சி, நேர்மையான நிர்வாகம் தொடர்பில் தமிழர்களிடம் ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பு இருக்கலாம்.

ஆனால், தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையில் அவர்களுக்கு முழுமையான ஈடுபாடு கிடையாது.

நாட்டில் எல்லாரும் சமமாகப் பேணப்பட்டால் , நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்தால் , எல்லாப் பிரச்சினைகளும் தீரும் என அவர்கள் எண்ணுகின்றார்கள். தமிழர்கள் தனியான ஒரு மக்கள் குழாம், அவர்கள் தனியான தேசம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

அவர்களிடம் பிற நல்ல விடயங்கள் இருக்கலாம். ஆனால், எங்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் இணங்காதவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள்.

ஆகவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு வாக்களியுங்கள் எனக் கோருகின்றோம் என்றார்.

இதேநேரம் முதன் முதல் 2010 இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வந்தாலும் அதன் பின்பு இரண்டு தடவைகள் நேரடியாகப் போட்டியிட்டே நாடாளுமன்றம் சென்றதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

அந்தவகையில் இம்முறையும் வெற்றியீட்டியே நாடாளுமன்றம் செல்வேனேயன்றி, தேர்தலில் மக்கள் என்னை நிராகரித்தால் நான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லப்போவதில்லை எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்தகாலங்களில் இன்னொருவரின் வாக்குசீட்டுக்களை மோசடி செய்தே சுமந்திரன் நாடாளுமன்றம் சென்றதாக குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனது காருக்கு இறுதிச் சடங்கு செய்து நல்லடக்கம் செய்த தொழிலதிபர்!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அதிர்ஷ்டமிக்கது என்று கருதிய காருக்கு இறுதிச் சடங்கு செய்து, அதனை நல்லடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தொழிலதிபர் சஞ்சய் போல்ரா , கடந்த 2006ஆம் ஆண்டு சொகுசு கார் ஒன்றை வாங்கினார். அதன்பிறகு அவர் தமது வாழ்வில் ஏற்றங்களையே சந்தித்தார்.

அந்தக் கார் வந்தபின்னரே அதெல்லாம் நடந்தது எனக் கருதிய அவர், அதனைத் தம் குடும்பத்தில் ஒருவரைப்போல் கருதினார்.

இந்நிலையில், அந்தக் காரை வாங்கி 18 ஆண்டுகளாகிவிட்டதால் அதனை வேறு யாருக்கும் தராமல், அடக்கம் செய்து சமாதி எழுப்பதொழிலதிபர் சஞ்சய் போல்ரா முடிவுசெய்தார்.

இதற்காக, 2,000 அழைப்பிதழ்களையும் அச்சிட்டு, அவர் தமது கிராம மக்களுக்கு அழைப்பு விடுத்தார். (நவம்பர் 7) நடந்த அந்நிகழ்வில் தடபுடல் விருந்தும் பரிமாறப்பட்டது.

தனது பிரியமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சஞ்சயின் கார் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அவருக்குச் சொந்தமான தோட்டத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, புதைக்கப்பட்டது. இந்த விந்தையான நிகழ்வு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இலங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காண்டீபனுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உயர் விருது!!

உலகின் முதன்மையான பல்கலைக்கழகமான அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த தன்னார்வ தலைமைத்துவ விருதினை இலங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலேந்திரன் காண்டீபனுக்கு வழங்கியுள்ளது.

சமூக முன்னேற்றத்துக்காக காண்டீபன் ஆற்றிய சேவைக்காகவும் அதற்கான அவரது அர்ப்பணிப்புக்காகவும் இந்த கௌரவத்தை அப்பல்கலைக்கழகம் அளித்துள்ளது.

காண்டீபனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது இலங்கை மற்றும் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புலமைத்துவம் மற்றும் சமூக வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணியையும் பிரதிபலிப்பதுடன், உலகளாவிய ஹார்வர்ட் சமூகத்தில் அவர் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது.

1636ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் தொன்மைச்சிறப்புடைய பல்கலைக்கழகம் ஆகும். அத்துடன், இன்றுவரை உலகின் மிகச்சிறந்த ஆய்வாளர்கள், தலைவர்கள்

விற்பன்னர்களை உருவாக்கி அதன் மூலம் சமூகமாற்றத்தை ஏற்படுத்தி வருகின்ற, உலகின் முதன்மைப் பல்கலைக்கழகமாகவும் பல நூற்றாண்டுகளாக திகழ்ந்து வருகின்றது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ பழைய மாணவர் சங்கமான ’ Harvard Club of Sri Lanka’ ஆனது, உலகின் 119-ஆவது ஹார்வர்ட் சங்கமாக இலங்கையில் 2021-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இதன்மூலம் உலகளாவிய ரீதியில் புலமைத்துவம் மற்றும் தொழில்துறை சார் மதிப்பு வாய்ந்த ஹார்வர்ட் வலையமைப்புக்குள் இலங்கையும் இணைந்து கொண்டது.

இந்தநிலையில், இந்த சங்கத்தின் நிறுவுநர் மற்றும் நிர்வாக சபைத்தலைவர் என்ற வகையில், தலைமைத்துவம் – சிறப்புநிலை – சேவை முதலானவற்றின் பெறுமதிகளை முன்னிறுத்திய காண்டீபன், பல புதிய முன்னெடுப்புகளை ஆரம்பித்து வைத்தார்.

இவ்வாண்டில் அவர் தலைமையேற்று நடாத்திய BIG BOLD BRAVE – Harvard ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டில், 15க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பல்துறை விற்பன்னர்கள் பங்கேற்றமை, சர்வதேச தளத்தில் இந்நிகழ்வினைப் பேசுபொருளாக்கியது.

இலங்கை ஹார்வர்ட் சங்க உறுப்பினர்களின் துணையுடன், கோவிட் பெருந்தொற்று காலத்தில், #SaveLivesSriLanka என்னும் சுகாதார முன்னெடுப்பினை பாலேந்திரன் காண்டீபன் ஆரம்பித்திருந்தமை அக்காலப்பகுதியில் பாரிய முக்கியத்துவம் பெற்றது.

இம்முன்னெடுப்பினால் 15 பொதுமருத்துவமனைகளுக்கு அண்ணளவாக 5 கோடி ரூபாய் பெறுமதியான அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டிருந்தமை, பல உயிர்களைப் பாதுகாக்கவும் நோயாளர்களைக் குணமாக்கவும் காரணமாகியிருந்தது.

தற்போது இலங்கையின் குறிப்பிடத்தக்க வெற்றிகரமான தொழில்முனைவோர்களில் ஒருவராக உள்ள காண்டீபன், தமது ஊடகவாழ்க்கையில் கெப்ப்பிடல் மகாராஜா குழுமத்தில் தலைமை நிறைவேற்று அதிகாரி மற்றும் பணிப்பாளர் பதவிகளை வகித்தமை மட்டுமன்றி, ஊடகத்துறையில் பெரும் சாதனைகளை தனது இளம்வயதிலேயே படைத்திருந்தார்.

குறித்த ஊடகத்தில் தலைமை அதிகாரியாகப் பதவிவகித்த காண்டீபனால், நடாத்தப்பட்ட “மகா இலட்சாதிபதி” நிகழ்ச்சி இலங்கை தமிழ்த்தொலைக்காட்சி வரலாற்றில் மக்களின் பாரிய வரவேற்பைப்பெற்றது.

தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக 250 அங்கங்களையும் தாண்டி ஒளிபரப்பப்பட்ட சிறப்பும் கொண்ட இந்த நிகழ்ச்சியும் அவர் நேர்காணல் செய்து நடத்திய சமூக-அரசியல் நிகழ்ச்சியான ‘மின்னலும்’ பாலேந்திரன் காண்டீபனின் தொடர்பாடல் மற்றும் தலைமைத்துவத்திறன்களை உலகறியச் செய்திருந்தன.

அவரின் தயாரிப்பில் உருவான தனியார் வானொலிகள் இரண்டின் நிகழ்ச்சிகள், இலங்கை ஊடக வரலாற்றில் மக்கள் குரலாக ஒலித்தன. அவை அக்காலத்தில் மிகப்பெரும் சமூகத்தாக்கத்தையும் மாற்றங்களையும் ஏற்படுத்திய நிகழ்ச்சிகளாக இருந்தன.

ஊடகத்துறையிலிருந்து ஒரு தொழில்முனைவோராகவும் கல்வியாளராகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்ட காண்டீபன், தமிழ்ப்பண்பாட்டில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதன் மூலம், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான பீடத்தை ஏற்படுத்த முனைந்த தமிழ் ஆர்வலர்களின் தலைமைக் குழுவின் அங்கத்தவரான காண்டீபன், அந்த முயற்சியில் வெற்றியும் கண்டார்.

உலகின் பல நாடுகளிலும் வாழ்கின்ற தமிழ்பேசும் மக்களை இந்த நோக்கத்திற்காக ஒன்றிணைத்து நிதி திரட்டப்பட்டது.

அதன் விளைவாக, இன்று, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டதுடன், அதன் பேராசிரியராக சங்கத்தமிழ் ஆய்வு வல்லுநர் பேராசிரியர் மார்த்தாவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாமல், 400 ஆண்டுகளுக்கு மேலான ஹார்வர்ட் பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக, தமிழியல் சார்ந்த கலாநிதிப்பட்ட ஆய்வொன்று தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ‘19 இளம் உலகத்தலைவர்கள்’ பட்டியலில் காண்டீபனின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்து.

அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள விக்டோரியா பல்கலைக்கழகம் அவருக்கு ’இளம் சாதனையாளர் விருதையும்’ வழங்கியது. அவுஸ்திரேலியாவின் வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணைக்குழுவினால் காண்டீபனுக்கு தலைமைத்துவ விருதும் வழங்கப்பட்டிருந்தது.

உலகின் சிறந்த விளம்பர மற்றும் ஊடக உருவாக்கத்தினை வெளிப்படுத்தும் நியூயோர்க் விழாவின், ஆலோசனைக்குழுவில் நியமிக்கப்பட்ட ஒரே இலங்கையராகவும் இவர் கருதப்படுகின்றார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழையமாணவரான காண்டீபன், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் Executive MBA/PLDA பட்டக் கற்கையையும் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் MBA பட்டக் கற்கையையும் நிறைவு செய்துள்ளார்.

காண்டீபனால் ஸ்தாபிக்கப்பட்ட அக்கடமிக்ஸ் குழுமம், Miami Ad School, Ivy Future Leader Academy, மொழி அமைப்பு (www.mozhi.com) ஆகியவற்றுடன் EMBRAX Innovations நிறுவனத்தையும் உள்ளடக்கி, சிறப்புற இயங்கி வருகின்றது.

சவூதி அரேபியாவில் முதன் முறையாக தோன்றிய பனிப்பொழிவு!!

சவூதி அரேபியாவின் (Saudi Arabia) அல்-ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும் காணொளிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

இவ்வாறான வறண்ட பாலைவன நிலப்பரப்பில் இந்த நிகழ்வுகள் ஏற்படுவது அதிசயமாகப் பார்க்கப்படுகின்றது.

எனினும், அரபிக் கடலிலிருந்து உருவாகி ஓமன் வரை நீண்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த பனிப்பொழிவிற்குக் காரணம் என சவூதி அரேபியாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் கடுமையான வானிலை நிலவும் என்றும் பலத்த மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.

இந்த வானிலை காரணமாக வாகன சாரதிகள் சிரமத்திற்கு ஆளாகலாம் என்றும் மக்கள் கவனத்துடன் செயற்படுமாறும் தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

21 மாவட்டங்களுக்கு இன்று நள்ளிரவு வரை விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!!

இலங்கையில் உள்ள 21 மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இன்றிரவு 11.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.