பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!!

இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் நோயாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி : மதிய உணவில் பல்லி!!

நாவலப்பிட்டி வைத்தியசாலையின் உணவகத்தில் நோயாளி ஒருவர், கொள்வனவு செய்த உணவு பொதியில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் இரண்டாவது வார்டில் உள்ள ஒரு நோயாளி நேற்று காலை அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் சோற்று பொதியினை கொள்வனவு செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் பல்லியை அவதானித்துள்ளார்.

இது குறித்து மருத்துவமனையின் பொது சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவமனை பணிப்பாளரிடமும் நோயாளி முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வைத்தியசாலை பொது சுகாதார ஆய்வாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் தகவல் வெளியிட அவர் மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொது சுகாதார ஆய்வாளர் நுவான் கெகுலந்தரவும் விசாரணை நடத்தியுள்ளார். மேலும், வைத்தியசாலையின் பணிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் திருமணமான இரு மாதத்தில் இளைஞன் உயிர்மாய்ப்பு!!

யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்தின் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (14.01) மீசாலை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக உள்ள புகையிரத பாதையில்இடம்பெற்றுள்ளது. கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டி பகுதியை சேர்ந்த 19 வயதான இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

திருமணமாகி இரண்டு மாதங்களான இவ்வாறு உயிரை மாய்துள்ளதாக கூறப்படும் நிலையில் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

காதலுக்கு எதிர்ப்பு : யுவதியை கடத்திய இளைஞன்!!

கேகாலை -தெரணியகல பகுதியில் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிதமையால் 18 வயது யுவதி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த யுவதி அதேபகுதியில் வசிக்கும் 19 வயது இளைஞன் ஒருவருடன் காதல் உறவிலிருந்து வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதற்குக் குறித்த யுவதியின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தமையினால் குறித்த இளைஞர் தமது நண்பருடன் யுவதியின் வீட்டிற்குச் சென்று அவரை கடத்தியுள்ளனர்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் கைதான இருவரும் நீதவான் முன்னிலையில் நேற்று பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

அதன்போது, கைதுசெய்யப்பட்ட யுவதியின் காதலன் எனக் கூறப்படும் இளைஞர் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மற்றைய இளைஞர் 17 வயதுடையவர் என்பதால் அவரை நன்னடத்தை இல்லத்துக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்.

யாழில் பெண் உட்பட இருவரிடம் வினோதமான முறையில் பல இலட்சம் ரூபா கொள்ளை!!

யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண்ணொருவரிடம் கடந்த 07.01.2024 அன்று 2 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

0740313003 என்னும் இலக்கத்திலிருந்து தொடர்பு கொண்டு தனியார் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறி பெண்ணின் வங்கி கணக்கு இலக்கம்,

தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வங்கி கணக்கில் உள்ள தொலைபேசி இலக்கம் என்பவற்றை பெற்று கடவுச்சொற்களையும் அவரின் அறியாமையை பயன்படுத்தி அதன் மூலம் இலங்கை வங்கி கணக்கின் Smart pay செயலியில் உள்நுழைந்து ரூபா 200,000 பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இதே முறையில் 0774650187 என்னும் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு குறித்த பிரதேசத்தின் வேம்படியை சேர்ந்த முதியவர் ஒருவரிடமும் நேற்று (14-01-2025) 29 இலட்சத்து 22 ஆயிரம் ரூபா பணத்தை திருடியுள்ளனர்.

இச் சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும் வங்கியில் முறையிட்ட பொழுதும், மக்கள் வங்கியின் கணக்கு ஒன்றிற்கு பணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வங்கி கணக்கின் விபரம் தமது செயலியில் காட்டப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

குறித்த பெண் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திலும் முதியவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த முன்னாள் போராளி!!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (15.01.2025) மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் வாழைச்சேனை கறுவாக்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய விஜயநாதன் வினோசித் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த குறித்த நபர் வாழைச்சேனை கிரான் வீதியிலுள்ள ஜஸ்பக்றரிக்கு அருகாமையில் உள்ள மதுபானசாலை ஒன்றிலிருந்து சம்பவதினமான நேற்றிரவு 8.30 மணிக்கு வீடு செல்வதற்காக வீதிக்கு நடந்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னாள் போராளி மீது மோதி விபத்துக்குள்ளானதில் வீதியில் வீழந்து சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, மோட்டார் சைக்கிளை செலுத்தி சந்தேகநபர் அதனை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.

பின்பு பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் கைவிட்டுச் சென்ற மோட்டர் சைக்கிளை மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மன்னார் நீதிமன்றம் முன்பாக துப்பாக்கி சூடு : இருவர் உயிரிழப்பு : குவிக்கப்பட்ட பொலிஸார்!!

மன்னார் நீதிமன்றம் முன்பாக பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் (16.01) வருகை தந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீதிமன்ற முன்றலில் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அசாத் ஹனீபா தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னர் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவரை மற்றைய தரப்பினர் படுகொலை செய்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக வருகை தந்தவர்கள் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தால் நீதிமன்ற சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இரண்டாம் இணைப்பு : மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அசாத் ஹனீபா தெரிவித்துள்ளனர்.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் டின் மீன்கள் வாங்குவோர் அவதானம்!!

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என தகவல் வௌியாகியுள்ளது.

இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்களின் பிரகாரம், இலங்கையில் 28 வர்த்தக நாமங்களின் கீழ் டின்மீன்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.

இவற்றில் 15 வர்த்தக நாமங்களைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே தரச்சான்றிதழ் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுள்ளன.

அவற்றின் மூலமாக சந்தைப்படுத்தப்படும் 48 வகையான டின்மீன்களுக்கு இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

அதோடு ஏனைய 13 வர்த்தக நாமங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கும் எதுவித தரச்சான்றுகளும் வழங்கப்படாத நிலையிலேயே அவற்றின் டின்மீன்கள் சந்தைப்படுத்தப்படுவதாக தேசிய கணக்காய்வு நிறுவனத்தின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில் (Sri lanka) தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (15) சற்று குறைவடைந்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 788,468 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

24 கரட் தங்கம் ஒரு கிராமின் (24 karat gold 1 grams) விலை 27,820 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 222,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் (22 karat gold 1 grams) விலையானது 25,510 ரூபாவாக பதிவாகியுள்ளது.  22 கரட் தங்கப் பவுணொன்றின் ( 22 karat gold 8 grams) விலையானது 204,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 24,350.ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று (21 karat gold 8 grams) 194,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!!

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை பேக்கரி சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அந்த அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன உள்ளிட்ட பேக்கரி உரிமையாளர்கள் குழு இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டது.

டொலரின் விலை குறைந்துள்ள போதிலும் ஒரு கிலோ கோதுமை மாவை 190 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

ஒரு கிலோவுக்கு 45 ரூபா வரி குறைக்கப்பட்டு, கோதுமை மாவை இறக்குமதி செய்ய எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கினால், நிறுவனங்களின் ஏகபோக உரிமை உடைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாண் விலை அதிகரிப்பினால் பாண் பாவனை ஓரளவு குறைந்துள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

பேக்கரி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும், அதற்காக கோதுமை மா மற்றும் வெண்ணெய் இறக்குமதியாளர்களை அழைத்து உடனடியாக கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் பேக்கரி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

திருமணம் செய்த காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கமலாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார். கருத்தனூர், பொட்டியபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் துர்காதேவி.

இருவரும் கமலாபுரம் அரசுப் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வருகின்றனர்.இந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது வீட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதையடுத்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கோரி ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.

இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்த்ததால், போலீசார் தம்பதியரின் பெற்றோரை அழைத்து சமரசம் செய்தனர். அப்போது, ​​இரு தரப்பினரும் சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டு, பெற்றோருடன் புதுமண தம்பதியினரை அனுப்பி வைத்தனர். இரு தரப்பினரின் உறவினர்களும் காவல் நிலையத்தில் கூடியதால், சிறிது நேரம் அந்தப் பகுதி பதட்டமாக இருந்தது.

சுற்றுலா சென்ற இடத்தில் மர்ம மரணம்.. மனைவியை கொன்ற கணவன்.. போலீசில் தந்தை புகார்!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் பிரியங்கா சர்மா. அவரது கணவர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார். அவர்கள் மூவரும் சமீபத்தில் தாய்லாந்திற்கு விடுமுறைக்குச் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், தாய்லாந்தில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பிரியங்கா சர்மா மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து லக்னோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பிரியங்காவின் தந்தை சத்யநாராயண் சர்மா, அவரது கணவர் ஆஷிஷ் பிரியங்கா சர்மாவை கொலை செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆஷிஷ் வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்ததாகவும், திருமணமானதிலிருந்து பிரியங்காவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காண்பவர்களை திரும்பிப் பார்க்கவைக்கும் ஒரு வித்தியாசமான ஜோடி : காதலியின் கவலை!!

இங்கிலாந்தின் சாலைகளில் அந்த ஜோடி நடந்துசெல்லும்போது, அவர்களை திரும்பிப் பார்க்காதவர்கள் குறைவு.

ஆம், அந்தப் பெண் 3 அடி 8 அங்குல உயரமே கொண்டவர். அவரது காதலரோ, 5 அடி 8 அங்குல உயரம் கொண்டவர். இங்கிலாந்திலுள்ள Gloucestershireஐச் சேர்ந்தவர் கெய்ட்லின் (Caitlin Hellyer, 23).

3 அடி 8 அங்குல உயரமே கொண்ட கெய்ட்லின், தன் காதலரான கய் (Guy Pritchard, 33)உடன் செல்லும்போது, தன்னை அவரது மகள் என மக்கள் நினைத்துவிடுகிறார்கள் என்று கவலை தெரிவிக்கிறார்.

எனக்கு 23 வயதாகிறது, நான் பருவம் எய்திய ஒரு பெண். ஆனால், மக்களில் சிலரோ என்னை அவருடைய தங்கை என நினைக்கிறார்கள் என்கிறார் அவர்.

கெய்ட்லினுக்கு Achondroplasia Dwarfism என்னும் பிரச்சினை காரணமாக எலும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிட்டதால் அவரது உயரம் அதிகரிக்காமல்போய்விட்டது.

என்றாலும், கெய்ட்லினும் கய்யும் முதன்முதலில் சந்தித்தபோது, கண்டதும் காதல் ஏற்பட்டுவிட்டதாம் இருவருக்கும். தங்களைக் குறித்து மற்றவர்கள் என்ன சொன்னாலும் கவலை இல்லை என்று கூறும் இந்த அபூர்வ ஜோடி, எங்களுக்குள் உயரம் எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்கிறது.

“மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கவே” உயிரை மாய்த்துக்கொண்ட 12 வயது பிரித்தானியச் சிறுமியின் பதிவு!!

பிரித்தானியாவில் துஸ்பிரயோகத்திற்கு இரையான 12 வயது சிறுமி ஒருவர், தமது உயிரை மாய்த்துக்கொள்ளும் முன்னர் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துகள் நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரித்தானியாவின் Southport பகுதியை சேர்ந்த Semina Halliwell என்ற 12 வயது சிறுமி, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாம் இறக்கப் போகிறேனா என மருத்துவர்களிடம் வினவியதும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஜூன் மாதம், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை அதிகமாக உட்கொண்டு உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் சிறுமி Semina Halliwell மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது, சிறுமி தமது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்ததன் சில நிமிடங்கள் முன்னர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துகள் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இனி உயிருடன் இருக்க விரும்பாததை விட மோசமானது எதுவுமில்லை ஆனால் நீங்கள் நேசிக்கும் சிலரை காயப்படுத்த விரும்பாததால் மட்டுமே உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சில நிமிடங்களுக்கு பின்னர், மனதளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளேன், மகிழ்ச்சியாக இருப்பதாக நாளும் நடிக்கலாம்,

ஆனால் மிகுந்த வலியுடன் இருக்கிறேன், மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கவே ஆசைப்படுகிறேன், எனது வாழ்க்கையை மொத்தமாக தொலைத்துவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.

விசாரணை அதிகாரி Chris Maher தெரிவிக்கையில், ஜூன் 9ம் திகதி நள்ளிரவு Semina Halliwell தமது சமூக ஊடக பக்கத்தில் இதை பதிவு செய்துள்ளார் என உறுதி செய்துள்ளார்.

மட்டுமின்றி, தற்கொலை முயற்சிக்கு பின்னர் அவர் பதிவு செய்துள்ள புகைப்படமும் அலைபேசியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தமது சகோதரருக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள மருந்துகளையே Semina Halliwell தற்கொலைக்கு என உட்கொண்டுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், ஆபத்தான நிலையில் மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு, இறுதியில் உறுப்புகள் செயலிழந்த நிலையில் ஜூன் 12ம் திகதி மரணமடைந்துள்ளார்.

சிறுமி Semina Halliwell மரணமடைவதற்கும் 5 மாதங்கள் முன்னர், ஜனவரி மாதம் சிறுவன் ஒருவனால் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் செல்லபப்ட்டு Semina Halliwell வன்கொடுமைக்கு இரையானார்.

அதன் பின்னரே உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் Semina Halliwell மிகவும் பாதிக்கப்பட்டதாக அவரது தாயார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, சிறுமியின் ஆடைகள் அற்ற புகைப்படம் ஒன்றும் அவர் கல்வி பயின்ற பாடசாலை மாணவர்களிடையே பரவியதும் சிறுமியை தற்கொலை முடிவெடுக்கத் தூண்டியதாக கூறப்படுகிறது.

இலங்கையில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ வரை கடும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்பை குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வெளிநாடு சென்று டிக்டொக்கிற்கு அடிமையான தாய் : இலங்கையில் பரிதவிக்கும் குடும்பம்!!

டிக்டொக் சமூக வலைத்தளத்திற்கு அடிமையான இளம் மனைவி, குடும்பத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கணவனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தம்புள்ளையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு வீட்டை விட்டு சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாக குவைத்திற்கு பணிப்பெண்ணாக மனைவி சென்றுள்ளார்.

இதன்போது டிக்டொக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் அதற்கு அடிமையானதாக பாதிக்கப்பட்ட கணவன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக குடும்பத்துடன் தொடர்பு கொள்வதை முற்றாக நிறுத்திய மனைவி, டிக்டொக்கில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார்.

மனைவியின் செயற்பாட்டில் கடும் அதிருப்தி அடைந்த கணவன், மனைவி மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திடம் கோரியுள்ளார்.

எனினும் குறித்த பெண் ஏற்கனவே இலங்கை வந்துள்ள நிலையில் வேறு நபருடன் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், பொலிஸாரின் உதவியுடன் அவரை தேடிப்பிடித்து வீட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளார்.

வீட்டுக்கு வந்த மனைவி சில தினங்களில் அனைவரையும் ஏமாற்றிய நிலையில் மீண்டும் தப்பிச் சென்றுள்ளதாக கணவன் தெரிவித்துள்ளார்.