கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான தந்தை மற்றும் மகள்!!

மாணிக்கக்கற்களை சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற தந்தையும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில், சுமார் 17,450,875 ரூபாய் மதிப்புள்ள மாணிக்கக்கற்களை மறைத்து வைத்து சீனாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்த காரணத்திற்காகவே இவர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் சுங்க அதிகாரிகளால், நேற்று முன்தினம் இரவு (13) சீன பிரஜைகளான தந்தையும் மகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரான 45 வயது தந்தையும் அவரது 21 வயது மகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாணிக்கக்கற்களில் சந்திரகாந்தி, கோமேதா, அரனுல், வைரோடி மற்றும் பச்சை ஆகியவை அடங்கியுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனம் ஒன்றில் வழங்கப்படும் உணவில் கராப்பான்பூச்சி : அதிர்ச்சியில் ஊழியர்கள்!!

கொழும்பு துறைமுக சிற்றூண்டிசாலையில் கொள்வனவு செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி கிழக்கு கொள்கலன் முனையத்தின் ஊழியர்கள், சமையலறையிலிருந்து பெறப்பட்ட உணவுப் பொட்டலத்தில் கரப்பான் பூச்சி உள்ளமை கண்டுபிடித்துள்ளனர்.

கொழும்பு துறைமுக சமையலறையில் சமைக்கப்படும் உணவு தொடர்பிலும், அதன் நிர்வாகம் மற்றும் தரம் ஆகியவற்றில் கடுமையான விமர்சனங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கத்தியில் இருந்து உடைந்த சிறிய துண்டு ஒன்று உணவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழுவினால், சமையலறையில் உணவு பாதுகாப்பாக சமைக்கப்படுவதை உறுதி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் அண்மைய நாட்களால் சில தொழிற்சங்கங்களின் செல்வாக்கால், உணவுப் பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும் ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் செயற்பாடுகள் குறித்து துறைமுக ஊழியர்கள் கடும் கோபம் அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

நீராட சென்ற இளைஞன் மாயம் : தொடரும் தேடுதல் நடவடிக்கை!!

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் இளைஞரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் இணைந்து தேடிய போதும் நேற்று (14 ) மாலை வரை குறித்த இளைஞன் மீட்கப்படவில்லை.

இளைஞன் காணாமல் போனமை குறித்து மடு பொலிஸாருக்கு கிடைத்த முறை பாட்டைத் தொடர்ந்து மடு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் இளைஞன் நீராடச் சென்ற பகுதிக்குச் சென்ற பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் தேடுதல்களை மேற்கொண்டனர்.

சம்பவத்தில் 23 வயதுடைய புஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இளைஞன் கடந்த திங்கட்கிழமை (13) ஐந்து பேருடன் மடு தேவாலயத்திற்கு சென்றுவிட்டு மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைப்பொங்கலுக்கு 470 வகை உணவு : மாப்பிள்ளையை திக்குமுக்காட வைத்த பெண் வீட்டார்!!

தமிழர்களின் பாரம்பரியத்தில் தமிழர் திருநாளான தை பொங்கல் முக்கியமான திருவிழா ஆகும்.பொங்கலுக்கு திருமணமாகி சென்ற பெண்ணுக்கு பெண் வீட்டார் சார்பில் சீர் கொடுக்கும் நிகழ்வு இன்றும் கிராமங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திருமணமான முதல் 3 வருடத்திற்கு பெண்ணின் சகோதரர்கள் தனது சகோதரியின் பிறந்த வீட்டிற்கு சென்று சீர் அளிப்பார்கள். சகோதரர் இல்லாத பட்சத்தில் பெண்ணின் தந்தையே சீர் கொண்டு செல்வார்.

சிலர் காலம் முழுவதும் பொங்கல் சீர் அளிப்பார்கள். அதே போல் புதிதாக திருமணமான தம்பதிகள், தங்களது திருமணத்ததிற்கு பின்னர் வரும் முதல் பொங்கலை தல பொங்கல் என கொண்டாடுவார்கள்.

இந்த தல பொங்கலுக்கு புதுமண தம்பதிகளை பெண் வீட்டிற்கு அழைத்து பெண் வீட்டார் விருந்து வைப்பார்கள்.

அதே போல் இந்த ஆண்டு புதுச்சேரியின் ஏனாம் பகுதியில் உள்ள தம்பதிக்கு தல பொங்கல் விருந்தில் 470 வகை உணவுகளை வைத்து பெண் வீட்டார் பிரமிக்க வைத்துள்ளனர்.

ஏனாம் பகுதியில் வணிகர் சங்க கௌரவத் தலைவராக உள்ள சத்யபாஸ்கர் வெங்கடேஸ்வரின் மகள் டாக்டர் ஹரிண்யாவுக்கும் விஜயவாடாவை சேர்ந்த சாகேத்திற்க்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர் தனது 4 சகோதரர்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இன்று தல பொங்கல் கொண்டாட இந்த தம்பதி பெண் வீட்டிற்கு வந்த போது,

20 வகையான அரிசி உணவுகள், 30 வகை புதிய ஊறுகாய், 20 பொடிகள், 40 வகை காய்கறிகள், 20 வகையான பழங்கள், 50-க்கும் மேற்பட்ட இனிப்புகள், என 470 வகை உணவுகளை பரிமாறி வீட்டிற்கு வந்த மாப்பிள்ளையை பிரமிக்க வைத்துள்ளனர்.

யாழில் கரையொதுங்கிய மிதவைப்படகு : பிரதேசவாசிகள் சந்தேகம்!!

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த மிதவை படகானது நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் இன்றைய தினம் (15)கரையொதுங்கியுள்ளது.

மிதவை படகில் புத்த சம்ய அடையாளங்கள் காணப்படுவதால் மியான்மார் நாட்டு பகுதியில் இருந்து குறித்த மிதவை வந்திருக்கலாம் என மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரதேசவாசிகள் மிதவை படகை சென்று ஆவலுடன் பார்வையிடுவதாக கூறப்படுகின்றது.

 

வவுனியாவில் மழைக்கு மத்தியிலும் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுகள்!!

வவுனியாவில் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் தமிழர்களின் தை திருநாளாம் பொங்கல் தினமான இன்று மக்கள் தங்கள் வீடுகள் வர்த்தக நிலையங்களை அலங்கரித்து புத்தாடை அணிந்து தைப் பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழைக்கு மத்தியிலும் வவுனியா கந்தசாமி ஆலயம், வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயம், தாஸ்கோட்டம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் உட்பட வவுனியாவில் பல ஆலயங்களில் பொங்கல் பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வீடுகள், கடைகளிலும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

சூரிய பகவானை தைத் திருநாளிலே வழிபடும் முகமாக அதிகாலையிலே பொங்கலுக்குரிய வேலைகளை முடித்து சூரிய பகவான் காலையில் எழுந்துவரும் வேளையில் பொங்கல் படைத்து விசேட வழிபாடுகள் செய்வது தமிழர் பண்பாடாகும்.

இன்று நடைபெற்ற தை திருநாள் நிகழ்வுகளில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு சூரிய பகவானுக்கு தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர்.

வவுனியாவில் களைகட்டிய தைப்பொங்கல் : மட்பாண்டங்களின் கொள்வனவில் மக்கள் ஆர்வம்!!

வவுனியாவில் தைப்பொங்கலை முன்னிட்டு வியாபாரம் களைகட்டியதையடுத்து நகரின் மத்திய பகுதியில் பொங்கல் பொருட்கள் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. பொலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

தைப்பொங்கல் திருநாள் நாளைய தினம் (14.01) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

இம்முறை மக்கள் மட்பாண்டப் பொருட்களை கொள்வனவு செய்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக மண்டபாண்ட உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கடந்த வருடத்தினை விட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதுடன் பட்டாசு , தோரணங்கள் , கரும்பு என்பவற்றின் விற்பனையும் அதிகளவில் காணப்படுகின்றது.

இலங்கை ஆசிரியர்களுக்கான விசேட அறிவிப்பு!!

இலங்கை பரீட்சை திணைக்களம் ஆசிரியர் கல்லூரிகளுக்கான இறுதித் தேர்வு பற்றிய சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பட்டதாரி அல்லாத பயிற்சி ஆசிரியர்களுக்கான பயிற்சி பாடத் தேர்வை மே 2025 இல் நடத்த பரீட்சை திணைக்களம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் கூறியுள்ளது.

 

கொழும்பில் தற்கொலை செய்த 16 வயது சிறுமி : வெளியான தகவல்!!

கொழும்பில் பொரளையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 12ஆவது மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் உயிரிழந்த சிறுமி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (10) இரவு 16 வயது பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவருகிறது.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பொரளை பொலிஸார், சிறுமி மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமி கொழும்பில் உள்ள ஒரு முன்னணி மகளிர் பாடசாலையில் 10 ஆம் தரத்தில் படித்து வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இறந்த சிறுமி சிறிது காலமாக மன அழுத்தம் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக சிறுமியின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் உடல் தற்போது தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் நிறுவனத்தின் பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் நிறுவனத்தின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் பெண்களுக்கு தொல்லை கொடுத்த மூவர் : சபாநாயகரின் அதிரடி நடவடிக்கை!!

நாடாளுமன்றத்தின் பெண் பணியாளர்களுக்கு தவறான முறையில் தொல்லை கொடுத்த மூவரை பணிநீக்கம் செய்யுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையிலான குழு சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் சபாநாயகர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட மூவரும் 2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் குறித்த பெண் பணியாளர்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் வெளியானதையடுத்து, மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தனவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, நாடாளுமன்றத்தின் 15 ஊழியர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த விசாரணைகளின் அடிப்படையிலேயே சபாநாயகர், குற்றம் சுமத்தப்பட்ட மூவரையும் பணிநீக்கம் செய்துள்ளார்.

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!!

இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

யாழில் பட்டாசு கொளுத்திய இருவர் கைது!!

யாழில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பட்டாசு கொளுத்திய இருவர் யாழ். பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பகுதியில நேற்று வெள்ளிக் கிழமை (10.01) இடம் பெற்ற மரண சடங்கு ஒன்றின் போது பருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகாமையில் அதிக சத்தமாக பட்டாசுகள் வெடிக்கவிடப்பட்டுள்ளன.

குறித்த சத்தம் காரணமாக பருத்தித் துறை நீதிமன்றத்தில் வழக்குகளை கொண்டு நடத்த முடியாமல் இருந்ததனால் நண்பகல் 11:50 மணிக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் 25 நிமிடங்களின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நீதிமன்ற பொலிஸார் ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

விரைந்து செய்யப்பட்ட பொலிஸார் பட்டாசு கொளுத்திய இருவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் போது இருவரும் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த சிறுமி!!

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து வீழ்ந்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தம் நேற்று இரவு ஏற்பட்ட நிலையில், சிறுமி கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பொரளை, சர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த சிறுமி மன அழுத்தம் காரணமாக சிறிது காலமாக சிகிச்சை பெற்று வந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

எனினும் சிறுமி அந்த மாடியில் உள்ள பெல்கனியில் இருந்து குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பதை கண்டறிய பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இளம் ஜோடிக்கு நேர்ந்த கதி!!

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை சேர்ந்த இருவரை தனுஷ்கோடி அருகே கைது செய்து பொலிஸார் விசாரணையை செய்து வருகின்றனர்.

அண்மைக் காலமாக இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரத்திற்கு இலங்கை தமிழர்கள் சட்டவிரோத படகு மூலம் வருவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தனுஷ்கோடி பொலிஸ் அதிகாரிகளுக்கு சில இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இலங்கை சேர்ந்த 2 நபர்கள் ஈரோடு பகுதியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து சட்டவிரோதமான முறையில் கள்ள படகு மூலம் இலங்கை செல்ல உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனுஷ்கோடி பொலிஸார் இன்றையதினம் (10-01-2025) அதிகாலை முதல் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு ஜோடியை பிடித்த விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த டிரோஷன் மற்றும் சஹானா என தெரியவந்தது.

குறித்த ஜோடி ஏற்கனவே இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்கள் எனவும், மீண்டும் தமிழகத்தில் இருந்து ராமேஸ்வரம் கடல் ஊடாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயற்சி மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் எதற்காக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயற்சி மேற்கொண்டனர். ஏதேனும் கடத்தல் சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டார்களா மேலும் இவர்கள் மீது வழக்கு ஏதேனும் உள்ளதா என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி பொலிஸார் தீவிர விசாரணையை நடாத்தி வருகின்றனர்.

பிறந்து பன்னிரண்டே நாட்களான குழந்தை உயிரிழப்பு : மருத்துவமனைமீது குற்றச்சாட்டு!!

ஹோமாகம ஆதார மருத்துவமனையில் பிறந்து பன்னிரண்டே நாட்களான குழந்தை ஒன்று தாய்ப்பால் அடைத்து இறந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைமீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

உயிரிழந்த குழந்தை ஹோமாகம ஆதார மருத்துவமனையின் முன்கூட்டிய குழந்தைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவமனை ஊழியர்கள் கவனக்குறைவாக தாய்ப்பால் கொடுத்ததால் குழந்தை இறந்ததாக குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இறந்தவர் யுகன் உதயங்கா என்ற பன்னிரண்டு நாள் குழந்தையாகும். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 27 ஆம் திகதி காசல் மகளிர் மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை, குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை என்பதால், மேலதிக சிகிச்சைக்காக அதே நாளில் ஹோமாகம ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 8 ஆம் திகதி அதிகாலையில் தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவென, குழந்தையைப் பார்க்கச் சென்றபோது, ​​குழந்தை பால் வாந்தி எடுத்த நிலையில், குளிர்ச்சியாகவும், எதிர்வினையாற்றாமலும் இருப்பதைக் கண்டுள்ளார்.

இதையடுத்து , சந்தேகப்பட்ட தாய், வார்டில் பணிபுரியும் ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்க தேடியும், எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. விசாரித்ததில், அனைத்து மருத்துவமனை ஊழியர்களும் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், குழந்தையை மருத்துவரிடம் கொண்டு சென்றபோது ​​ , நுரையீரலுக்குள் பால் சென்றதே அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று முன்தினம் (09) ஹோமாகம ஆதார மருத்துவமனையில் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது, அதில் குழந்தையின் நுரையீரலில் தாய்ப்பால் சிக்கியதாலேயே குழந்தை இறந்தது தெரியவந்தது.

மருத்துவமனை மீது குற்றம் சாட்டும் பெற்றோர் , மேலும் இந்த விஷயத்தில் முழுமையான விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கோருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயார் ஹோமாகம தலைமையக காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளரான சிறப்பு மருத்துவர் எரங்க ராஜபக்ஷ,

இந்த சம்பவம் தொடர்பாக தனக்கு புகார் கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதாக நம்புவதாகவும் கூறியுள்ளார்.

கொழும்பிலிருந்து சென்ற பேருந்து விபத்து : 13 பேர் காயம்!!

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 10வது மைல்கல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து சாலையை விட்டு விலகி அதன் முன் பகுதி ஒரு பாறையிலிருந்து சரிந்து நின்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காயமடைந்த 13 பேர் பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து இன்று காலை 6:30 மணியளவில் நிகழ்ந்ததாகவும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.