அமெரிக்கா – லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ!!

அமெரிக்கா(USA)-லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக குறைந்தது 10 பேர் இறந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் மாநில மருத்துவ பரிசோதகர் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில், இந்த காட்டுத்தீயானது வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 7ஆம் திகதி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுதீயானது இன்றுவரை கொழுந்துவிட்டு எரிகின்றது.

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் காட்டுத்தீ வேகமாக பரவியுள்ளது. காற்றின்வேகம் அதிகமாக இருப்பதால் காட்டுத்தீ குறையாமல் அதிகரித்து வருகின்றது.

இதில் பாடசாலைகள், ஹாலிவுட் நடிகர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த காட்டுத்தீயில் 16 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி இதுவரை எரிந்து நாசமாகியுள்ளது. கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் அந்த பகுதி முழுவதும் எரிமலை வெடித்ததை போன்று காட்சியளிக்கிறது.

எனவே அந்த பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையே காட்டுத்தீ காரணமாக கலிபோர்னியா மாகாண அரசாங்கம் அங்கு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளதுடன்,

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மற்றொருபுறம் உலங்குவானூர்திகள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அண்டை மாகாணங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல் ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர்களையும் இந்த பணியில் ஈடுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் தனது இத்தாலி பயணத்தை இரத்து செய்து உள்ளார். லொஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் கலிபோர்னியா காட்டுதீ மிக பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சுமார் 4.89 லட்சம் கோடி வரையில் பொருளாதாரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பிலான அறிவிப்பு!!

நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

விடைத்தாள் மதிப்பீடு 64 மையங்களில் புதன்கிழமை (8) தொடங்கியது என்று அவர் கூறினார். 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திதி நடைபெற்றது.

சிங்கள மொழி மூலம் 244,092 பேரும், தமிழ் மொழி மூலம் 79,787 பேரும் உட்பட மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இரும்புக் கம்பியால் எலுமிச்சை பழம் பறித்த இளம்பெண் பரிதாபமாக மரணம்!!

திருவள்ளுர் அடுத்த வரதாபுரம் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி பக்தவச்சலம்.இவரது மனைவி 42 வயது லோகேஸ்வரி. இவர் தனது வீட்டின் மாடியிலிருந்து.

இரும்பு கம்பியால் எலுமிச்சை பழம் பறிக்க முயற்சித்துள்ளார். அந்த இரும்பு கம்பி தாழ்வாக செல்லும் மின்சார கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு மகேஸ்வரி துடிதுடித்து பலியானார்.

மின்சாரம் தாக்கி பலியானதை கண்ட குடும்பத்தினர் மின்சாரத்தை நிறுத்திவிட்டு அவர் உடலை மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து தாலுகா போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், அவர் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் குழந்தைகள் எதுவும் இல்லை.

குடியிருப்பு பகுதிகளின் மேல் செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகளை மாற்றி அமைக்க கோரி ஏற்கனவே மின்சார வாரியத்திற்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மின்சாரத்துறை அலட்சியப்போக்கால் இளம் பெண் பலியானதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டி திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாழ்வாக குடியிருப்பு பகுதியில் செல்லும் மின்கம்பியை மாற்றி அமைக்க மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் போலீசார் கூறியதால் பின்னர் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதனால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு நிலவியது.

இளம் பெண்ணை குத்திக் கொலை செய்த சக ஊழியர்!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கால் சென்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இளம்பெண்ணை சக ஊழியர் ஒருவர் வெறித்தனமாக கத்தியால் குத்திய நிலையில், சிகிச்சைப் பலனின்றி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்ப முயன்ற சக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் எரவாடா பகுதியில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கான தனியார் கால் சென்டர் ஒன்றில் சுப்தா ஷகர்(28) எனும் இளம்பெண் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் அவர் தனது பணி முடிந்து வீட்டிற்கு கிளம்ப வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து கிளம்பிய போது னார். அப்போது சக ஊழியரான கிருஷ்ணா சத்யநாராயண் கனோஜா(30) அங்கு சென்றுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையே நிதி தொடர்பான தகராறு ஏற்பட்ட போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணா, சுப்தா ஷகர் காதரை பலமுறை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்நிலையில் கத்தியால் குத்தப்பட்ட சுப்தாவை அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்தா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “நடந்த சம்பவம் குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கனோஜா கத்தியை காட்டி, ஷகர் காதரை மிரட்டிய நிலையில் பல முறை குத்தி உள்ளார்.

அதிக ரத்த இழப்பால் பாதிக்கப்பட்ட அந்த பெண் வலியோடு தரையில் விழுந்து கிடந்தார். பின்னர் அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும் சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார். கனோஜா கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்” என்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திடீரென கொட்ட ஆரம்பித்த முடி : 72 மணி நேரத்தில் வழுக்கை : அச்சத்தில் மக்கள்!!

இந்திய கிராமம் ஒன்றில் உள்ள மக்களுக்கு திடீரென முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கையாவதால் அச்சம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, புல்தானா மாவட்டத்தில் உள்ள பாண்ட்கான், கல்வாட், ஹிங்னா கிராமங்களில் இவ்வாறு அங்குள்ள மக்களுக்கு முடி உதிர்வதாக கூறப்படும் நிலையில் ஏராளமான மக்கள் பாதிக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

72 மணி நேரத்தில் வழுக்கை

அங்குள்ள ஆண், பெண் என இருவரும் கடந்த சில வாரங்களாக முடி உதிர்தல் பிரச்சனைக்கு உள்ளாகி வருகின்றனர். இதில், பலருக்கு வழுக்கை தலை ஆகும் அளவுக்கு பிரச்னை ஏற்படுகிறது.

இவர்களுக்கு, உச்சந்தலையில் சிறிது அரிப்பு ஏற்படுகிறது. இதையடுத்து, சில நாட்களுக்கு பின் ரோமத்தின் தன்மை சொரசொரப்புடன் மாறுதல் ஏற்பட்டு 72 மணி நேரத்தில் வழுக்கையாகி தானாகவே முடி உதிர்ந்து விடுகிறது.

அவர்கள் தங்களது தலைமுடியை லேசாக கோதினாலும் மொத்த முடியும் வந்து விடுவதாக கூறுகின்றனர்.

இந்த மூன்று கிராமங்களில் சுமார் 50 பேருக்கு கடந்த ஒரு வாரத்தில் முடி உதிர்ந்துள்ளதால் அச்சம் நிலவுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தண்ணீர் மாதிரிகளை எடுத்து சோதனை

இதற்கான காரணம் என்னவென்று இன்னும் கண்டறியவில்லை. இருந்தாலும் மாவட்ட அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று தண்ணீர் மாதிரிகளை எடுத்து சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, முடி மற்றும் தோல் மாதிரிகளை சோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் ரமா பாட்டீல் கூறுகையில்,

“கடந்த 10 நாட்களாக எங்கள் கிராமங்களில் ஒருவித மர்ம நோய் பரவுகிறது. முடியை தொட்டாலே உதிர்கிறது” என்றார்.

இந்த 2நிலையில் முடி கொட்டுவது சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

தலைமுடியை வெட்டியதால் உயிரை மாய்த்த பாடசாலை மாணவன்!!

வெல்லவாய , மெதகலகம பிரதேசத்தில் தலைமுடி வெட்டியதால் பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவனின் தலைமுடியை வெட்டுமாறு அவனது தாயாரிடம் பாடசாலையில் அறிவுறுத்தப்பட்டிருந்த காரணத்தினால், தாய் மாணவனின் தலைமுடியை சிறிதளவு வெட்டியுள்ளார்.

இதன்போது மாணவனுக்கும் அவனது தாய்க்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெல்லவாய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய வாகனம் வாங்கவுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

தற்போதைய சூழ்நிலையில் புதிய வாகனங்களை கொள்வனவு செய்வது பொருத்தமானதாக இருக்காது என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர்,” முன்னதாக வாகன இறக்குமதி நிறுத்தப்பட்ட பின்னர் இலங்கையில் இருக்கின்ற வாகனங்களின் விலை பலமடங்கு அதிகரித்தன எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், இந்நிலையில், வாகனங்களை வைத்து கொள்ள முடியாது பலர் விற்பனை செய்த நிலையில் அதனை கொள்வனவு செய்தவர்கள் அவற்றை விற்பனை செய்ய முடியாது சிரமத்தில் உள்ளனர்.

ஏற்கனவே, அரச துறையில் இருக்கின்ற, அனுமதி பத்திரங்களை வைத்து கொண்டிருப்பவர்கள், மிக பெரிய எண்ணிக்கையில் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான நிலையில், எந்த கட்டுபாடும் இல்லாமல், வாகன இறக்குமதியை அனுமதிக்குமாக இருந்தால் டொலரின் வெளிப்பாய்ச்சல் மிகப்பெரிய அளவில் இடம்பெற வாய்ப்புள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக இலங்கையில் தற்போதுள்ள டொலர் கையிருப்புக்கள் கரைந்து விடும். எனவே அரசாங்கம் டொலர் கையிருப்பை கரைத்து விடாமல் வாகன இறக்குமதியையும் அதேநேரத்தில் அனுமதிக்க வேண்டிய ஒரு சூழல் இருக்கின்றது.

இந்நிலையில், வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்டால், பழைய வாகனங்களின் விலை குறைவடையும் என்னும் மக்களின் கருத்து சாத்தியப்பட வாய்ப்பில்லை எனவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

இதேவேளை, விலைக்குறைப்பு ஒரு சிறிய மாற்றத்தில் ஏற்படலாமே தவிர பழைய நிலைமையில் வாகனங்களின் விலைகள் இருக்காது. எனவே, இப்போதைய சூழ்நிலையில் வாகனங்களை வாங்காமல் இருப்பது தான் பொருத்தமானதாக இருக்கும்.

ஏனென்றால், புதிய வாகனங்கள் அனுமதிக்கப்படும் போது, பழைய வாகனங்களின் சந்தை ஒரு குறிப்பிட்ட அளவில் நிலை கொள்ளும்.

ஒரு குறிப்பிட்ட விலைமட்டத்திற் அது சமநிலை அடைய வாய்ப்பு இருக்கின்றது. அது தான் மிக பொருத்தமான தருணமாக இருக்கும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(10) தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது . 792,107ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 27,950ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 223,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 25,630ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 205,000ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 24,460 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams)195,650ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 214,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 198,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சட்டத்தரணி பரிதாபமாக உயிரிழப்பு!!

திருக்கோவில் பிரதேச தம்பட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தம்பிலுவிலை சேர்ந்த சட்டத்தரணி லயன் எஸ்.சசிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (05) மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது தம்பட்டை பிரதேசத்தில் கென்றர் வாகனமொன்று மோதி படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று (09) உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் தடவையியல் மருத்து துறையில் டிப்ளோமா பட்டம் பெற்ற எஸ்.சசிராஜ் ,அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர் என்பதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும் செயற்பட்டிருந்தவர் என கூறப்படுகின்றது.

இன்று காலை கிளிநொச்சி A9 வீதியில் விபத்து : ஒருவர் பலி!!

கிளிநொச்சி ஏ-09 வீதியில் கந்தசாமி கோவிலடியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (10.01) காலை 5.45 மணியளவில் யாழ். பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த விபத்தில் கனேசபுரம் கிளிநொச்சியை சேர்ந்த குமரேஸ்வரன் யோகலிங்கம் (வயது-75) என்பவரே உயிரிழந்துள்ளார்.

 

கொழும்பில் காணாமல் போன தமிழரை தேட உதவி கோரும் பொலிஸார்!!

காணாமல் போன ஒருவரை கண்டு பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 69 வயதான மாணிக்கம் துரைசிங்கம் ரொபின்சன் என்பவரே இவ்வாறு காணாமல் காணாமல் போயுள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் திகதி முதல் குறித்த நபர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து அடி எட்டு அங்குலம் உயரமுடைய மாநிறமான ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீல நிற டெனிம் காற்சட்டையும், நீல நிற சேர்ட்டும் அணிந்திருந்த நிலையில் குறித்த நபர் காணாமல் போயுள்ளார். இந்த நபருக்கு நினைவாற்றல் குறைவு என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் பற்றிய விபரங்கள் தெரிந்தால் 0718591571 அல்லது 0112431861 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் கொட்டாசேனை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

யாழில் ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி நிதிசேகரிப்பு : இருவர் கைது!!

யாழ். நெல்லியடி பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியினையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் பெயரையும் பயன்படுத்தி நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மதபோதகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நெல்லியடி நகரில் நிதிசேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, நிதி கொடுக்க மறுத்தவர்களை அநுரவின் ஒளிப்படத்தைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.

இதன்போது, வர்த்தகர்களுக்கும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டோருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அங்கு கூடிய வர்த்தகர்கள் குறித்த நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்க்கொண்டு நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபர்களை கடுமையாக எச்சரிக்கை செய்த பின் விடுவித்துள்ளனர்.

நிதி சேகரிப்பில் ஈடுபட்ட மதபோதகர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் சிறுவர்களைப் பராமரிப்பதற்காகவே இந்த நிதி பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த மதபோதகர் கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரசார மேடைகளில் ஆசியுரைகளை கூறி தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவு கோரி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம் இடியுடன் கூடிய மழை!!

நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தாயின் செயலால் ஆத்திரமடைந்த மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

மொனராகலையில் தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  கடந்த 8ஆம் திகதி வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல பகுதியில் குறித்த மாணவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

15 வயதான எதிரிமன்னகே கவீஷ லக்மால் என்ற மாணவனே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். குறித்த மாணவன் அதே பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

மாணவனின் தந்தை சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார். உரிய முறையில் முடி வெட்டிய பின்னர் மாணவனை பாடசாலைக்கு அனுப்புமாறு தாயாரிடம், பாடசாலை ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கமைய, தாயார் தலைமுடியை வெட்டியதால் ஆத்திரமடைந்த மாணவன் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை வெல்லவாய ஆதார மருத்துவமனையில் நடைபெறவுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அடகு வைக்கப்படும் தங்க நகைகள் : இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை!!

இலங்கையில் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக கடன் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உணவுத் தேவைகளுக்காக தங்க ஆபரணங்கள் அடகு வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்ப அலகுகள் தங்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாக தெரியவந்துள்ளது.

“உணவு அடிப்படையிலான தகவல் மற்றும் செயல் வலையமைப்பு” (FLAN Sri Lanka) நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. அமைப்பின் ஆராய்ச்சி அதிகாரி ஷெஹாரி விஜேசிங்கவினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு (2024) மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி, காலி, நுவரெலியா, கொழும்பு, அனுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ மற்றும் மஹரகம பிரதேச செயலகப் பிரிவுகள் இந்த ஆய்விற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்த கணக்கெடுப்புக்காக, மேற்கண்ட மாவட்டங்களில் இருந்து 1352 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குடும்பங்களில் 34.3 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். மொத்த மாதிரியில் 62 சதவீதம் பேருக்கு நிரந்தர வருமானம் இல்லை என்பதும், சுமார் 57 சதவீதம் பேருக்கு உணவுப் பாதுகாப்பு இல்லை என்பதும் தெரியவந்தது.

இந்த மாதிரியில் உள்ள 35 சதவீத வீட்டுக்காரர்களின் மாத வருமானம் 49,589 ரூபாவாகும். கணக்கெடுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அவர்களின் வருமானத்தில் 42 சதவீதத்தை உணவுக்காக செலவழிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் 6 சதவீதம் சுகாதாரத்திற்காகவும் அதேபோல் கல்விக்கு 9 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. கணக்கெடுக்கப்பட்ட வீட்டுக்காரர்களில் 60 சதவீதம் பேர் புகைபிடித்தல் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குழுவில் 31.7 சதவீதம் பேர் உணவு வாங்க கடன் பெற்றுள்ளதாகவும், தங்க ஆபரணங்களை அடகு வைத்து, சொத்துக்களை விற்று கடனுக்கு பணம் எடுத்தல் போன்றவற்றின் மூலம் உணவுக்கு பணம் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது விலை அதிகரித்துள்ள நிலையிலும் மக்கள் அரிசி நுகர்வை குறைக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில் அனுமதிப்பத்திரமின்றி தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனத்துடன் ஒருவர் கைது!!

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (08.01.2025) அனுமதிப்பத்திரமின்றி 73 தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனத்துடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே திவுல்வெவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது மரக்காரம்பளை பகுதியில் குறித்த பட்டா ரக வாகனத்தினை மறித்து சோதனைக்குட்படுத்திய சமயத்தில்,

73 தேக்கு மரக்குற்றிகளை அனுமதிப்பத்திரம் இன்றி ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் பட்டா ரக வாகனத்தினை பொலிஸார் கைப்பற்றியமையுடன் வாகனத்தின் சாரதியினையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த பட்டா ரக வாகனம் மற்றும் 73 தேக்கு மரக்குற்றிகள் என்பவற்றுடன் கைது செய்யப்பட்ட வாகனத்தின் சாரதியையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.