கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு ‘பி’ பிரிவின் கீழ் 50,000 கடவுச்சீட்டுகள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, இந்த தொகைக்கு மேலதிகமாக, நவம்பர் மாத இறுதிக்குள் சுமார் 100,000 கடவுச்சீட்டுகளும்,

டிசம்பரில் 150,000 கடவுச்சீட்டுகளும் மொத்தமாக 750,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பெறப்படும் என தெரிவித்துள்ளது.

அத்துடன், மற்றொரு தொகுதி கடவுச்சீட்டு வாங்கும் பணியும் தொடங்கியுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 1,600 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு, டிசம்பர் தொடக்கத்தில் இந்தத் தொகை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு,

விண்ணப்பதாரர்கள் கோரும் கடவுச்சீட்டுகளின் அளவுக்கேற்ப கடவுச்சீட்டு வழங்கும் முறை மாற்றியமைக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தற்போது இணைய வழியின் ஊடாக திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வதற்கான அமைப்பை தயார் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் அந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டு ஈழத் தமிழருக்கு வாய்ப்பு கொடுத்த நடிகர் விஜய்!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது தொடர்பில் எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால் அவர் தன் பிரமாண்டமான மாநாட்டில் ஈழத் தமிழர் இருவருக்கு வாய்ப்பளித்தமை உண்மையில் பாராட்டுக்குரியது என தோழர் பாலன் முகநூலில் தெரிவித்துள்ளார்.

ஒருமுறை தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றில் நடந்த போட்டி நிகழ்ச்சியில் ஈழத் தமிழ் அகதி இளைஞன் ஒருவன் பங்குபற்றியிருந்தான். சில வாரங்கள் கடந்த பின்னர் அவ் இளைஞன் ஒரு ஈழத் தமிழ் அகதி என்பது குறித்த தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கு தெரிய வந்துள்ளது.

உடனே அந்த அகதி இளைஞன் எவ்வித காரணமும் கூறாமல் நிகழ்வில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் ஏற்கனவே தன் படம் ஒன்றில் ஈழத் தமிழ் பெண் ஒருவருக்கு நடிக்க நடிகர் விஜய் வாய்ப்பு கொடுத்தார்.

இப்போது தன் அரசியல் மாநாட்டில் தமிழ்த்தாய் பாடவும் தமது கட்சி பாடல் ஒன்றை எழுதவும் என இரு ஈழத் தமிழருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இவர் இவ்வாறு வாய்ப்பளிப்பது இனி மற்றவர்களும் ஈழத் தமிழருக்கு வாய்ப்பளிக்க வழி செய்கிறது என முகநூலில் தோழர் பாலன் என்பவர் குறித்த கருத்தை பதிவிட்டுள்ளார்.

பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் கடைசி வட்ஸ்அப் பதிவு!!

பதுளை – துன்ஹிந்தவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 41 பேர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (02-11-2024) இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவர்களில் 39 பேர் பதுளை போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் குறித்த விபத்தில் 23 வயதுடைய 2 பல்கலைக்கழக மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.

நிவிதிகல, தொலபுகமுவ, பஹல கந்தவில் வசித்த இசுரி உமயங்கனா மற்றும் குருநாகல், ஹுனுபொலகெதர, அம்பகொட்டே பகுதியில் வசித்து வந்த பூபதி ஹெட்டிமுல்ல ஆகிய இரு மாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், விபத்தில் உயிரிழந்த மாணவிகளில் ஒருவரான இசுரி உமயங்கனா, நேற்று (01) தனது தந்தையின் பிறந்த நாளுக்கு வாட்ஸ்அப்பில் வாழ்த்துச் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதிகாலையில் எழுந்த நிலையில், 05.03 மணிக்கு வட்ஸ்அப்பில் அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்த இரு மாணவிகளின் சடலங்களும் பிரேத பரிசோதனையின் பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா நாணயத்தாள்!!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறு ஓர் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் இவ்வாறான போலி தகவல் பரப்பப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கம் பெருந்தொகை பணத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதாக சில தரப்பினர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் பின்னணியில் இந்த 5000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் உருவப்படமும் அவரது கையொப்பமும் இடப்பட்ட புதிய நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் இந்த நாணயத்தாளானது போலியானது எனவும் இது எடிட் செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்ட நாணயத்தாள் ஒன்று இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த காலத்தில் நாட்டின் நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்க(Ravi Karunanayaka) செயற்பட்டதுடன் மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன் மகேந்திரன்(Arjun Mahendran) கடமையாற்றி இருந்தார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள இந்த நாணயத்தாள் அச்சிடப்பட்ட திகதியாக கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் திகதியே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவி பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்தில் இதுவரையில் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!!

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி 20 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைவாக 10 ரூபாவாக இருந்த பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரியை 30 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சந்தையில் தற்போது போதியளவு வெங்காயம் கையிருப்பில் இல்லாததால் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலத்த காற்று வீசக்கூடும் : காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழைக்கான வளிமண்டலச் சூழல் சாதகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில், காலை வேளையில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

பதுளை பேருந்து விபத்து தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து பதுளை, துன்ஹிந்த பகுதியில் விபத்துக்குள்ளானதற்கு சாரதியே காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்து ஏற்படுவதற்கு முன்னர் பேருந்தின் பிரேக் செயலிழந்ததாக சாரதி மாணவர்களிடம் கூறியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.

இருப்பினும், பேருந்து சாரதி தற்போது ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால், அவரிடம் வாக்குமூலம் பெறமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், விபத்துக்கான காரணம் பிரேக் செயலிழந்ததா அல்லது அதிவேகமாக வாகனம் செலுத்தியதா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதுளை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1ஆம் திகதி காலை இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு மாணவிகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 39 மாணவர்கள் காயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்களின் உயிருக்கு இருந்த ஆபத்து தற்போது மறைந்துவிட்டதாகவும், நேற்றைய நிலவரப்படி அவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 10 பேரில் சிலர் நேற்று பொது விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் கூறியுள்ளார்.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்த இரு மாணவிகளின் மரணத்திற்கு தலை மற்றும் மூளையில் ஏற்பட்ட பலத்த பாதிப்பே காரணம் என தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் (03.11) மகா சங்கரத்தினத்தின் சமய அனுஷ்டானங்களின் பின்னர் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கும் மத்தியில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்!!

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 240,109 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது. அவர்களில் 99,939 பேர் வீட்டுப் பணிப்பெண்கள் எனவும் 70,396 பயிற்றப்பட்ட பணியாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பித்த இலங்கையர்களின் எண்ணிக்கை 240,109 ஆகும். இதில் 99,939 பெண் தொழிலாளர்கள் மற்றும் 142,170 ஆண் தொழிலாளர்கள் உள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 70,396 பயிற்சிபெற்ற தொழிலாளர்கள் வௌிநாட்டு வேலைக்காக நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 62,177 ஆண் தொழிலாளர்கள் மற்றும் 8,219 பெண் தொழிலாளர்கள்.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 2,565,365 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் தமிழ்க்கடை ஒன்றில் 16 கிலோ தங்கம் திருட்டு : திடுக்கிடும் சிசிரிவி காட்சிகள்!!

கனடாவில் (Canada) தமிழ் பேசும் நபர்களால் இயக்கப்பட்டு வரும் வர்த்தக நிலையம் ஒன்றில் 16 கிலோ தங்கம், இனம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான காணொளி அந்த வர்த்தக நிலையத்தில் உள்ள சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது. இதற்கமைய, சம்பவத்தின் போது, 6 நபர்கள் முகமூடி அணிந்த நிலையில் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்துள்ளனர்.

தொடர்ந்து, அவர்கள் கண்ணாடி கதவுகளை உடைத்து அங்கிருந்து தங்கத்திலான பொருட்களை எடுத்து செல்கின்றமை குறித்த சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

மரத்தால் வந்த பிரச்னை : அண்ணன் குடும்பத்தையே கொலை செய்த தம்பி!!

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகில் உள்ள மோட்டூர் கிராமம் தலைவாசல் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (37). இவரது மனைவி ருக்மணி (27). மேலும், மாரிமுத்துவின் தம்பி முருகன் (35) அவரது மனைவி சிவரஞ்சனி (24).

இந்த நிலையில், முருகன் வீட்டின் அருகில் உள்ள மரத்தை வழிப்பாதைக்கு இடையூறாக இருந்ததாக, அண்ணன் மாரிமுத்து மரத்தை வெட்டியுள்ளார்.

இதனால் மாரிமுத்துவுக்கும், தம்பி முருகனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாரிமுத்து சிறை சென்று வந்துள்ளார். இந்நிலையில், முருகனுக்கு அரசு தொகுப்பு வீடு வழங்கப்பட்டு உள்ளது.

இதனால், முருகன் வீட்டுக்குச் செல்லும் பாதையில் மாரிமுத்து, வழியை மறித்து வாகனத்தை நிறுத்தி உள்ளார். இதனால் மாரிமுத்துவுக்கும், முருகனுக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது முருகன் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனி ஆகியோர், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், மாரிமுத்து மற்றும் ருக்மணியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த கணவன் – மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், இது குறித்து கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில், சாமல்பட்டி போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய முருகன் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனியை தேடி வந்தனர்.

இந்த நிலையில், கொலை செய்து தப்பி ஓடிய முருகன் பவானி பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், சிவரஞ்சனியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி மாற்றுத்திறனாளியான செவிப்புலனற்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ((01.11) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சுண்டுக்குழி பகுதியைச் சேர்ந்த அருளானந்தன் யேசுதாசன் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றையதினம் கச்சேரி வீதியில் உள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட போது ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மேலும் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஸ்பெயினில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

தென்கிழக்கு ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ள நிலைமை காரணமாக காணாமல் போனவர்களை மீட்பதற்காக தற்போது பாதுகாப்புப் படையினருக்கு மேலதிகமாக 500 வீரர்களும், பல ஆளில்லா விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நேற்று பிற்பகல் வரை பாதிக்கப்பட்ட 4,500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 நாட்கள் கடந்துள்ள போதும், குறித்த பிரதேசம் இயல்புநிலைக்கு திரும்பாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை வெறும் 8 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்ததால் பேரழிவை வலேன்சியா மக்கள் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்பெயின் மக்களை பெருமழை வேறொரு விதமாக பாதிப்படைய வைத்துள்ளது.

இதற்கிடையில் அந்நாட்டின் வலேன்சியா, ஹூல்வா, காஸ்டெலான், மலோர்கா, கேட்டலோனியாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஹொங்கொங் சிக்ஸர்ஸ் தொடரில் அரைஇறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி!!

கிரிக்கெட் ரசிகர்களை சிக்ஸர் மழையில் நனையவைக்கும் அணிக்கு 6 வீரர்கள் கொண்ட ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடரின்(Hong Kong Sixes International Cricket Tournament) காலிறுதிச் சுற்றில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

நேபாளம் அணியுடன் இன்று(02.11.2024) இடம்பெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அணிக்கு 6 வீரர்கள் கொண்ட ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடரில் லஹிரு மதுஷங்க தலைமையிலான 7 வீரர்கள் கொண்ட இலங்கை அணி விளையாடி வருகிறது.

ஏ பிரிவில் தென்னாப்பிரிக்காவும், சி பிரிவில் பாகிஸ்தானும் முன்னிலை வகிக்கிப்பதோடு, அரை இறுதிப்போட்டிக்கு குறித்த இரு அணிகளும் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

22 வயது யுவதிக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த காதலன் கைது!!

புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகக்கூறி காதலியிடம் பணம் பெற்ற காதலனை இரத்தினபுரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பதினொரு மாதங்களுக்கு முன்னர் இரத்தினபுரியில் தற்செயலாக சந்தித்த நுவரெலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞனுடன் உறவுகொண்ட வேவெல்லத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்.

காதலரின் வேண்டுகோளுக்கு இணங்க படங்களை எடுத்து காதலனின் கைபேசிக்கு அனுப்பியதாகவும், காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் தான் அவ்வாறு செய்ததாகவும் பொலிஸில் ஒப்புக்கொண்டுள்ளார்.

நுவரெலியாவினை சேர்ந்த காதலன் இரத்தினபுரிக்கு வந்து காதலியை பல தடவைகள் சந்தித்ததாகவும், திருமணத்தின் பின்னர் நுவரெலியாவில் வீடு ஒன்றை நிர்மாணிக்க விரும்புவதாகவும், அதற்கு 100,000 ரூபா தேவைப்படுவதாகவும் யுவதியிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த யுவதி ஒரு இலட்சம் ரூபாவை காதலனுக்கு வழங்கியுள்ளார். சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் பணம் கேட்டு யுவதியின் நிர்வாண படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், 20 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லொறியொன்று வானுடன் மோதி விபத்து : ஒருவர் பலி – 20 பேர் வைத்தியசாலையில்!!

நுவரெலியா – நானுஓயா, ரதெல்ல குறுக்கு வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (01.11) மாலை 06.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று ஹட்டன் பகுதியில் இருந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வழியாக நுவரெலியா நோக்கி சென்ற வான் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியில் தடையாளி முறையாக இயங்காமை காரணமாக ஏற்பட்ட இயந்திர கோளாறே இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பலத்த மழை பெய்யக்கூடும் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

நாட்டில் மாலை அல்லது இரவு வேளையில் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (02.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேற்கு, தென் வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.