இடியுடன் கூடிய மழை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாட்டின் சில பகுதிகளில் இன்று (07) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

அத்துடன் தென் மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிருகக் காட்சிச் சாலையின் ஒரேயொரு ஒராங்குட்டான் குரங்கும் உயிரிழப்பு!!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நீண்டகாலமாக பார்வையாளர்களை மகிழ்வித்த ஒரேயொரு ஒராங்குட்டான் குரங்கும் உயிரிழந்துள்ளது.

இந்தோனேசியாவில்(Indonesia) இருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு நன்கொடையாக கிடைத்த கோனி ஒராங்குட்டான் தம்பதிக்கு 2009 ஆம் ஆண்டு இந்த ஒராங்குட்டான் குரங்கு பிறந்தது.

அண்மையில் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஒராங்குட்டான் குரங்கு நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளது. இறக்கும் போது இதற்கு சுமார் 15 வயது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த ஒராங்குட்டான் குரங்கின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திணறிய விமானங்கள்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த நான்கு விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

இன்று காலை கட்டுநாயக்க பிரதேசத்தில் நிலவிய பனிமூட்டமான காலநிலை காரணமாக இவ்வாறு திருப்பி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இன்று அதிகாலை 5:00 மணியளவில் டுபாயில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யூ.எல்-226 விமானம், சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-881 விமானம்,

இந்தியாவின் பெங்களூரில் இருந்து அதிகாலை 05-05 மணிக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-174 விமானம் என்பன மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

மேலும், துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து இன்று காலை 06:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம், இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்காவில் இருந்து திருப்பி விடப்பட்ட விமானங்கள் காலை 09:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளன.

காலை 07.00 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழ்ந்திருந்த அடர்ந்த மூடுபனி படிப்படியாக குறைந்து தற்போது விமான நிலையம் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதால், விமான சேவைகள் சாதாரணமாக நடைபெறுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

HMPV வைரஸ் குறித்து இலங்கையர்கள் அச்சம்கொள்ள வேண்டாம்!!

இந்த நாட்களில் சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், சில சந்தர்ப்பங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட ஒரு வைரஸ் நிலை என இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என வைரஸ் நோய்க்கான இலங்கை விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே வைத்தியர் ஜூட் ஜயமஹா இதனை தெரிவித்துள்ளார். இதன்போது வைத்தியர் ஜூட் ஜயமஹா HMPV வைரஸ் தொடர்பான அறிகுறிகளையும் விளக்கினார்.

பொதுவாக இருமல், சளி, இலேசான காய்ச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும், மேலும், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு நிமோனியாவாக மாறலாம்.

ஆனால் இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது மற்றும் அனைவருக்கும் நடக்காது. இது உயிரிழப்பதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவு. சில நாட்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்றவற்றுக்குப் பிறகு பெரும்பாலான மக்கள் குணமடைகின்றனர். வைரஸ் உள்ளதா என்று சோதிக்க வேண்டிய அவசியமுமில்லை என தெரிவித்தார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை : கணவன் தலைமறைவு!!

மாத்தறை பிரதேசத்தில் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று (06) பிற்பகல் , திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிந்திகேவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் , நில்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தையடுத்து, சந்தேக நபரான கணவன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் மிரளவைத்த தனிநபர் கடன்!!

இலங்கையில் தனிநபர் கடன் 13 இலட்சம் ரூபாயை தாண்டிள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் செலுத்தப்பட வேண்டிய மொத்த பொதுக் கடன் தொகை 29,150 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் இது 6.47 வீத அதிகரிப்பாகும் என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2023ஆம் ஆண்டில் 8 இலட்சத்து 31,951 மில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட்டுள்ளதுடன் 75 இலட்சத்து 41,282 மில்லியன் ரூபா திறைசேரி பில்கள் மூலமாகவும் பெறப்பட்டுள்ளது.

இதன்படி, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023ஆம் ஆண்டு பெறப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களின் அளவு 67.4 சதவீத அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின் படி, 2023ஆம் ஆண்டு தனிநபர் கடன் பெறுமதியும் அதிகரித்துள்ளதாகவும், அது 13 இலட்சத்து 22,793 ரூபாவாகும் எனவும் கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை 2022 ஆம் ஆண்டில், தனிநபர் கடன் தொகை 12 லட்சத்து 34,358 ஆக இருந்த நிலையில் இது ஒரு வருடத்தில் 88,435 ரூபாய் அதாவது 7.16 சதவீதம் அதிகரித்துள்ளது.

எனினும் , நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு அளவு வலுவாக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் இருந்து பயணித்த பேருந்து மோதி உயிரிழந்த இளைஞன்!!

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் சிறாம்பியடி பகுதியில் நேற்று (06.01.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த இளைஞனே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாகக் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவிற்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது!!

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருந்து 700 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதில் பயணித்த 36 வயதுடைய பெண் ஒருவரும், அவரது சகோதரர் எனக் கூறப்படும் 30 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஓமந்தைப் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இவரை தெரியுமா? பொதுமக்களின் உதவிகோரும் பொலிஸார்!!

கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க எட்டம்பிட்டிய பொலிஸார் பொதுமக்களிடம் உதவிகோரியுள்ளனர்.

பதுளை , எட்டம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 03 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக எட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல் போயுள்ள சிறுமியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தில் 16 வயதான இரத்நாயக்க முதியன்சேலாகே கவீஷா தெவ்மணி எனும் சிறுமியே காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ல பொலிஸார், சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் எட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் 071-8591528 அல்லது 055-2295466 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

தனியார் நிதி நிறுவனத்தில் அடகு நகையை மீட்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை நிறுவன ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததோடு, அவரை தாக்குவதற்கும் முற்பட்டதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்லது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 19 இலட்சம் ரூபாவுக்கு நபரொருவர் தங்க ஆபரணங்களை அடகு வைத்திருந்தார்.

இதனையடுத்து அவர் அடகு வைக்கப்பட்ட தனது நகைகளை மீட்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் பணத்துடன் அந்நிறுவனத்துக்குச் சென்றுள்ளார்.

அவ்வேளை, செலுத்தவேண்டிய வட்டி மற்றும் முதல் பணத்தொகை தொடர்பில் கணக்குப் பார்த்தபோது, செலுத்தவேண்டிய மொத்தத் தொகை 20 இலட்சம் ரூபா என நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

அதற்கு, அந்த நபர், தான் 20 இலட்சம் ரூபா பணம் கொண்டுவந்துள்ளதாக கூறி நகைகளை தருமாறு கேட்க, “இப்போது உங்களது நகைகளை தரமுடியாது ஏன் அவசரமாக மீட்கப் போகின்றீர்கள் இன்னும் இரு நாட்களுக்கு இருக்கட்டும் திங்கட்கிழமை தருகின்றோம் என கூறியுள்ளனர்.

அதற்கு நகை அடகுவைத்த நபர், தனக்கு அவசரமாக நகைகள் தேவை என கூறி நகைகளை கேட்டபோது நிறுவனத்தினர் நகைகளை கொடுக்க மறுத்துள்ளனர்.

அதனையடுத்து, ஒரு மணிநேரத்துக்குப் பிறகு மீண்டும் நிறுவனத்துக்குச் சென்ற நபர் தான் அடகுவைத்த ஆபரணங்களை கேட்டுள்ளார்.

அப்போது, அங்கு கடமை புரியும் உத்தியோகத்தர் ஒருவர் நகைகளை பெறச் சென்ற நபரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்கவும் முற்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த நிதி நிறுவனத்தில் கடமையாற்றும் குறித்த உத்தியோகத்தர்கள் தன்னிடம் மாத்திரமின்றி, இன்னும் பலரிடம் இதேபோன்று அத்துமீறி நடந்துகொண்டதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

மேலும் , வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை இன்னும் சில நாட்கள் நிறுவனத்தில் வைத்திருந்தால் செலுத்தவேண்டிய வட்டிப் பணத்தொகை அதிகரிக்கும் என்ற நோக்கத்திலேயே நிறுவனத்தினர் நகைகளை திருப்பிக் கொடுக்க மறுப்பதாகவும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவாகியுள்ள மாற்றம்!!

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (06) சற்று குறைந்துள்ளது. தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 777,541 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 27,430 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 219,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் (22 karat gold 1 grams) விலையானது 25,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 201,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 24,010 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 192,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர் – மக்கள் ஒன்றுகூடியமையால் பதற்ற நிலை!!

கண்டி, வத்தேகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டலஹகொட பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் வத்தேகம பகுதியை சேர்ந்த 38 வயதுடையவராகும். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தேகம பொதுச் சந்தையில் மீன் வியாபாரியான இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு முன்னால் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மலர்சாலையில் இருந்து அவரது சடலம் வத்தேகம பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது,

​​குற்றவாளிகளை கைது செய்யுமாறு கோரி சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக வத்தேகம நகரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர் தொட்டியில் வீழ்ந்து மாணவி பலி : 3 பெண்கள் அதிரடி கைது : வகுப்பாசிரியை சிறையில் அடைப்பு!!

 

பள்ளியில் எல்கேஜி மாணவி பலியான விவகாரத்தில் தாளாளர், முதல்வர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் வகுப்பாசிரியை சிறையில் அடைக்கப்பட்டார். விக்கிரவாண்டி பழைய காவல் நிலைய தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (34).

திண்டிவனம் தாலுகா ஆபீசில் இசேவை மைய ஆப்ரேட்டராக உள்ளார். இவரது மனைவி சிவசங்கரி. இவர்களின் மூத்த மகள் லியா லட்சுமி (3), செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்தார். நேற்று முன்தினம் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து லியா லட்சுமி பலியானார்.

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குபதிந்து பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில் மாணவியின் உடலை நேற்று காலை 8.15 மணி முதல் 9.30 மணி வரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டர் கீதாஞ்சலி தலைமையிலான 3 பேர்குழுவினர் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்தனர்.

பின்னர் மாணவியின் உடல், அவரது பெரியப்பா ஞானவேலிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மருத்துவ பரிசோதனை செய்தனர்.

அதில் பள்ளி தாளாளர் எமில்டா மற்றும் பள்ளி முதல்வர் டோமினிக் மேரி ஆகியோர் உயர் ரத்தஅழுத்தம் காரணமாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து ஆசிரியை ஏஞ்சலை, விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியநாராயணன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 10ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே மாணவியின் இறுதிச்சடங்கு நேற்று மாலை நடைபெற்றது.

இதில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். மாணவியின் வீட்டிற்கு அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின்,

முதல்வர் அறிவித்த ரூ.3 லட்சத்திற்கான காசோலையை மாணவியின் தாயிடம் வழங்கி ஆறுதல் கூறினர்.

அப்போது அமைச்சர் பொன்முடி கூறுகையில், ‘இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய விசாரணை நடத்தி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் 3 பேர் கொண்ட குழுவினரும் நேற்று அந்த பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த போது விபரீதம்.. 7வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சலாக்கா பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பாத்திமா சஹானா என்ற மாணவி மருத்துவக் கல்வி 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி பாத்திமா சஹானா நேற்று இரவு 11 மணியளவில் விடுதியின் 7வது மாடிக்கு சென்றுள்ளார்.

அங்கு தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த பாத்திமா, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த பாத்திமாவை மீட்ட மாணவிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த பாத்திமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் புகார்!!

தனது முகநூல் பதிவிற்கு ‘இழிவான கருத்துக்கள் மற்றும் ஆபாசமாக கமெண்ட் செய்து வருபவர்களின் மீது நடிகை ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை ஹனி ரோஸ்,

தனது முகநூல் பதிவின் கீழ் வெளியான அவதூறான கருத்துகளுக்கு எதிராக எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். ஒரு பிரபலமான நபரின் இரட்டை வார்த்தைகளால் அவமானப்படுத்தப்பட்ட போதிலும் சிலர் என் மௌனம் குறித்து கேள்வி எழுப்பினர்.

இது போன்ற அவமானங்களை நான் அனுபவிக்கிறேன் என்று பலர் என் மௌனத்தை தவறாக நினைக்கிறார்கள்.

அவரது பதவியேற்பு சலுகைகளை நான் மறுத்து விட்டேன். பழிவாங்கும் விதமாக எனது சமீபத்திய பதவியேற்பு விழாக்களில் அவர் தானாக முன்வந்து, என் பெயரை இழிவான தொனியில் குறிப்பிட்டார்.

ஒரு நபர் தெளிவான நோக்கத்துடன் பெண்களுக்கு எதிரான பாலியல் நிறக் கருத்துக்களை நாடினால் அது குற்றம் என்பதை நான் கண்டேன்.

நான் இத்தகைய அவமானங்களை அவமதிப்பு மற்றும் பரிதாபத்துடன் புறக்கணிக்க முனைகிறேன் ஆனால் நான் எதிர்வினையாற்ற மாட்டேன் என்று அர்த்தமல்ல. ஒருவரின் பேச்சு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது உகந்தது அல்ல” என்றார்.

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!!

இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் இன்று (06) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

அத்துடன் சபரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.