கொள்ளையடிக்க சென்ற இடத்தில் அசந்து உறங்கிய இளைஞன்.. கையும் களவுமாக பிடித்த போலீசார்!!

சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் ‘கிரீன் ட்ரெண்ட்ஸ்’ என்ற பிரபல தனியார் அழகு நிலையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர்.

இதையடுத்து நேற்று காலை ஊழியர்கள் கடையை திறந்தனர். அப்போது கடையில் இருந்த பொருட்கள் மற்றும் லேப்டாப் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அழகு நிலைய மேலாளர் ஜெயகுரு, அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, ​​மாடியில் ‘குறட்டை’ சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் மாடிக்கு சென்று பார்த்தபோது குடிபோதையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒருவரை கண்டனர். இதையடுத்து போலீசார் அவரை எழுப்பி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் ஆந்திராவை சேர்ந்த கிஷோர் (24) என்பது தெரியவந்தது. நள்ளிரவில் பியூட்டி பார்லரின் பூட்டை உடைக்க முயன்றதும், எதுவும் கிடைக்காததால் குடிபோதையில் மாடியில் தூங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், வேறு ஏதேனும் கடைகளில் திருடிச் சென்றாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டுநாயக்கா மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையங்களில் நிகழ்வுள்ள மாற்றம்!!

இலங்கையில் உள்ள கட்டுநாயக்கா மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையங்களை விஸ்தரிக்கப்பட உள்ளதாகவும் இதற்கான முன்மொழிவுகளை அரசாங்கம், சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து கோரியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் விமான நிலைய முகாமைத்துவ நிறுவனம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக புகழ்பெற்ற நிறுவனங்களிடம் இருந்து முன்மொழிவுகளை கோரியுள்ளது.

இருப்பினும், கொழும்பு விமான தகவல் பிராந்தியத்திற்கு அருகாமையில் விமான நிலையங்கள் காணப்படும் இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிடம் இருந்து முன்மொழிவுகள் கோரப்படவில்லை.

போட்டித்தன்மை காரணமாக இவ்வாறு முன்மொழிவுகள் கோரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனமானது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்காக ஜப்பானிய நிறுவனங்களிடமிருந்து விலை மனுக்களை கோரியுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி வரையில் விலைமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையக் கட்டிடத்தை கட்டி முடிக்கும் இந்த திட்டமானது, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதியத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட உள்ளது.

இதில் பிரதான முனைய கட்டிடம், உயரமான சாலை போன்ற உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் காலக்கெடு ஜனவரி 29ம் திகதியன்று முடிவடைகிறது.

இடியுடன் கூடிய மழை.. நாட்டில் மீண்டும் மாறிய வானிலை!!

நாட்டின் பல பகுதிகளின் மழை வீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று (30) முதல் அடுத்த சில நாட்களில், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.  மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-35 கிலோ மீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

பாடசாலை நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம்!!

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பாடசாலை நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களின் வருடாந்த பாடசாலை வருகை 210 நாட்கள் என்ற தேவை 181 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதிக எண்ணிக்கையிலான பொது விடுமுறை நாட்கள் இருப்பதன் காரணமாக பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2024 ஆம் கல்வியாண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்வதற்கு ஜனவரி 02 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை பாடசாலையின் முதல் மூன்று வாரங்கள் நடைபெறும்.

2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணைக்கான பாடசாலை ஆரம்பம் ஜனவரி 27 ஆம் திகதி நடைபெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 2025 ஆம் ஆண்டிற்கான 26 பொது விடுமுறை நாட்களில், வார இறுதி நாட்களில் 04 விடுமுறைகள் மட்டுமே உள்ளன, ஏனைய அனைத்து பொது விடுமுறைகளும் வார நாட்களில் உள்ளன.

அதற்கமைய, 210 நாட்களுக்கு பாடசாலை செயற்பாடுகளை நடத்த முடியாது என தெரிவித்த கல்வி அமைச்சு, 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்களை 181 நாட்களாக மட்டுப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமது சகோதரர் கொலை செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய குடும்பம் குற்றச்சாட்டு!!

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் 7வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த வெளிநாட்டவர், கொலை செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உறவினர்கள் இதனை தெரிவித்துள்ளனர். தமது சகோதரரின் மரணத்திற்கு இலங்கை நீதி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி 51 வயதான அவுஸ்திரேலிய நபர் ஒருவர் கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் 7வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார்.

சகோதரின் மரணத்தை அடுத்து இலங்கை வந்த அவரது தாய், சகோதர, சகோதரிகள் அவர் தொடர்பான தகவல்களை தேடியுள்ளனர். இந்நிலையில் சகோதரர் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த நபர் மாடியிலிருந்து குதிப்பதை தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோதும் அது பலனளிக்கவில்லை. இந்நிலையில் உயிரிழந்த வெளிநாட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா – பூவரசன்குளம் பகுதியில் துப்பாக்கி மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் 18,000 மில்லி லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று (30.12) தெரிவித்தனர்.

வவுனியா, பூவரசன்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இரண்டாம் செங்கல்படை பகுதியில் விசேட சுற்றி வளைப்பு ஒன்றை பூவரசன்குளம் பொலிசார் மேற்கொண்டனர்.

இதன்போது உள்நாட்டு துப்பாக்கி மற்றும் பெரல் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த கசிப்பு உற்பத்திக்கான 18,000 மில்லிலீற்றர் கோடா என்பன மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

பெற்றோரின் பொறுப்பற்ற செயலால் 2 வயதுக் குழந்தை பரிதாபமாக மரணம்!!

காலில் ஏற்பட்ட காயத்திற்காக தாய்க்கு கொண்டு வந்த வலிநிவாரணி மருந்தை அருந்திய 2 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. புத்தளம் கல்லடி பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு வயதும் ஏழு மாதமுமான எஸ்.ஏ.வினுக மண்டித் என்னும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

பெற்றோர்கள் பாராத வேளையில், திரவ வலிநிவாரணி மருந்தை குறித்த குழந்தை எடுத்து குடிக்க முயற்சித்துள்ள நிலையில், குழந்தையின் தந்தை அதனை அவதானித்து மருந்து போத்தலை குழந்தையிடம் இருந்து பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து, பெற்றோர் குழந்தையை பாலாவியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், குழந்தை வலிநிவாரணியை அருந்தியதன் காரணமாக மயக்கமடைந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மேலதிக சிகிச்சைக்காக குழந்தை முந்தலம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் நோயாளர் காவு வண்டியில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து, இந்த மரணம் வலிநிவாரணியை உட்கொண்டதால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் குழந்தையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குழந்தையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் நிறுவகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண் விரிவுரையாளர்!!

யாழ்ப்பாண பகுதியில் புற்றுநோய் காரணமாக இளம் விவசாய பாட விரிவுரையாளர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்.நல்லூர் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சர்ஜனா கருணாகரன் என்ற விரிவுரையாளரே இ்வ்வாறு நேற்றயதினம் (28.12.2024) உயிரிழந்துள்ளார்.

இளம் விவசாய பாட விரிவுரையாளர் மரணம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாசமாக வளர்த்த ஆடு : பறிபோன 10ம் வகுப்பு மாணவனின் உயிர்!!

திருநெல்வேலி மாவட்டத்தில், தான் பாசமாக வளர்த்து வந்த ஆட்டை தந்தை விற்றதால் 10ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா.

இவரது மனைவி சிவனியம்மாள். இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உண்டு. இளைய மகன் உலகநாதன் (15), கங்கைகொண்டான் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர்களது வீட்டில் ஆடு வளர்த்து வந்த நிலையில் அந்த ஆட்டின் மீது உலகநாதன் பாசமாக இருந்தான்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக அந்த ஆட்டை தந்தை சுப்பையா விற்பனை செய்தார். இதனால் உலகநாதன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

பள்ளிக்கூடத்துக்கு செல்ல மாட்டேன் என்றும் அடம் பிடித்து வந்துள்ளார். எனவே உலகநாதனை தாயார் சிவனியம்மாள் கண்டித்தார். ஆட்டுக்காக வருத்தப்பட வேண்டாம், பள்ளிக்கூடத்துக்கு சென்று நன்றாக படிக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது உலகநாதன் விஷம் குடித்துள்ளார். இதில் வாந்தி எடுத்து உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் பார்த்து தாயார் சிவனியம்மாளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

உடனே உலகநாதனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உலகநாதன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழும்பில் குவியும் குப்பைகள்!!

கொழும்பு மாநகரசபைக்குள் அதிகளவான குப்பைகள் சேர்வதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வழமையாக நாளாந்தம் 450 தொன் குப்பைகள் அகற்றப்படும்.

ஆனால் பண்டிகைக் காலங்களில் இது இம்மாத இறுதிக்குள் 500 தொன்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நாளாந்தம் சாதாரணமாக 420 தொடக்கம் 450 தொன் குப்பைகள் அகற்றப்படுகின்ற நிலையில், பண்டிகைக் காலத்தில் குப்பைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகைக் காலத்தில் கொழும்புக்கு அதிகளவானவர்கள் வருகை தருவதால் இந்தத் தொகை சுமார் 500 தொன்களாக அதிகரிக்காலாம் என கணித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிகளவான உணவுப்பொருட்கள் வீசப்படுவதனால் மக்கும் கழிவுகளின் அளவு அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் செங்கின் தாக்கத்தை கட்டுப்படுத்த எதிர்வரும் வாரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தினங்களாக இரண்டு தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மனைவியின் தாயை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மருமகன்!!

இரத்தினபுரி, எஹேலியகொட பிரதேசத்தில் நேற்று பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் மகளின் கணவரே இந்த குற்றத்தை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும், கொலையின் பின்னர் சந்தேகநபரான மருமகன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 60 வயது எனவும், சடலம் அவிசாவளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தலைமறைவான சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் விளம்பத்தால் ஏமாந்த உணவக உரிமையாளர்!!

பஸ் ஒன்று விற்பனைக்கு இருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் விளம்பரங்களைப் பதிவிட்டு ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபா மோசடி செய்த விமானப்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் களுத்துறை, ஹந்தபான்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய விமானப்படை சிப்பாய் என கூறப்படுகின்றது.

விமானப்படை சிப்பாய் பஸ் ஒன்று விற்பனைக்கு இருப்பதாக கூறி சமூக ஊடகங்களில் விளம்பரங்களைப் பதிவிட்டுள்ளார்.

இந் நிலையில், குருணாகல் – மெல்சிறிபுர பிரதேசத்தில் வசிக்கும் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்று பஸ்ஸை வழங்காமல் மோசடி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரான விமானப்படை சிப்பாயைக் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெல்சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு!!

இரத்தினபுரி இறக்குவானை பிரதேசத்தில் மாணிக்கக் கல் அகழ்வு ஆராய்ச்சியின் போது உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல் ஸ்கோப்போலைட் கெட்ஸ் ஐ சன்ஸ் ஸ்டோன் (Scopolite Cat’s Eye sSunstone) சூரியக்கல் என ஆராய்ச்சியின் போது அறியப்பட்டுள்ளது.

இது சூரியனுடைய கல் என்றும் மிகவும் அதிஷ்ட கல் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. வெகுவிரைவில் இந்தக் கல் ஏல விற்பனைக்கு விடப்படவுள்ளது

பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை : கல்வி அமைச்சின் தீர்மானம்!!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 6,000 ரூபா கொடுப்பனவை இவ்வருட இறுதிக்குள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கல்வியமைச்சினால் அனுகூலங்களைப் பெறுவதற்குத் தகுதியான பிள்ளைகளைத் தெரிவு செய்து அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கல்வி அமைச்சு முன்னின்று செயற்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று  முன்தினம்(26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

14 வயது சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பில் காதலனை தேடும் பொலிஸார்!!

14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 41 வயதுடைய காதலனை கைது செய்வது தொடர்பில் பதுரலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் களுத்துறை, தொடங்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. களுத்துறை, பதுரலிய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியே பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி கடந்த 25 ஆம் திகதி அன்று தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதன்போது, சந்தேக நபர் தனது நண்பனுடன் இணைந்து முச்சக்கரவண்டியில் சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பின்னர், சந்தேக நபர் இந்த சிறுமியை தொடங்கொட பிரதேசத்தில் உள்ள தனது நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து, பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமியின் தந்தை இது தொடர்பில் பதுரலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

சந்தேக நபரான காதலனை கைது செய்வது தொடர்பில் பதுரலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.