வவுனியாவில் அண்மையில் ஏற்ப்பட்ட மழைவெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் கமநல அபிவிருத்தி நிலையங்களின் கீழ் செய்கைபண்ணப்பட்ட 3529.25 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அழிவடைந்த நெற்காணிகள் தொடர்பாக கமத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள காப்புறுதிச்சபையின் உத்தியோகத்தர்களால் மதீப்பீடு செய்யும் பணிகள் அண்மையநாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.
மதிப்பீட்டின் அடிப்படையில் 1387.5 ஏக்கர் நெற்காணிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏக்கருக்கும் தலா 14,400 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா- கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவாக விசேட வழிபாடும் அஞ்சலி நிகழ்வும் இன்று (26.12.2024) இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் மற்றும் அகிலாண்டேஸ்வரர் ஆலயதர்மகர்த்தா சபையும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், இறந்தவர்களிற்கு ஆத்ம சாந்தி வேண்டி நெய் தீபம் ஏற்றப்பட்டு மோட்ச வழிபாடும் இடம்பெற்றது.
இதில் அந்தணச் சிவாச்சாரியார்கள், ஆலய தர்மகர்த்தா சபையினர், ஆலய பகத்தர்கள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மோட்ச வழிபாட்டில் ஈடுபட்டனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களின் 20 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று (26.12.2024) இடம்பெற்றது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத் சந்திர தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது உயிரிழந்தவர்களிற்கு காலை 9.25 – 9.27 வரை இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், இந்து,கிறிஸ்தவ, பௌத்த மதத்தலைவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளுடன் உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் சுனாமி பேரவலம் தொடர்பாகவும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாகவும் அரச அதிபரின் கருத்துரையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திணைக்கள தலைவர்கள், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் சுனில் யாதவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சுனில் யாதவ் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா பொலிஸார் இந்தக் கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கொலையை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் உறுப்பினர் ரோஹித் கோடாரா செய்ததாகக் கூறி தானே பொறுப்பேற்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் யாதவ், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் முக்கிய உறுப்பினராக இருந்தாலும், தற்போது தனித்து செயல்பட்டு வந்தார். அவர் மீது ராஜஸ்தானில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்தக் கொலைக்கு காரணம், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் மற்றொரு உறுப்பினரான அங்கித் பாதுவை சுனில் யாதவ் கொன்றதற்கு பழி வாங்குவதற்காக செய்ததாக ரோஹித் கோடாரா கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்காவுக்குச் சென்ற பின்னரும் தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தினரைப் பற்றியும் தவறான தகவல்களை பரப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கொலை வழக்கிலும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் நடிகர் சல்மான் கானை கொல்ல முயற்சி செய்ததாகவும் லாரன்ஸ் பிஷ்னோய் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகரில் மத்திய கிடங்கு நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் தேவேந்திர சாண்டல்.
இவருடைய மனைவி டீனா. இதய நோயாளியான டீனாவை கவனித்து கொள்வதற்காக தனது பணியில் இருந்து ஓய்வு காலத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே சாண்டல் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சாண்டல் ஓய்வு பெற்ற நாளில் பிரிவுபச்சார விழா நடத்தப்பட்டது. இந்த வழியனுப்பு விழாவில் மனைவியுடன் கலந்து கொண்டார்.
அவருடன் உறவினர்கள், நண்பர்கள் சூழ விழா நடைபெற்று கொண்டிருந்தது. தம்பதியர் இருவரும் மாலை சூடி கோலாகலமாக விழா நடந்து கொண்டிருக்க புகைப்படம் எடுக்க தயாராக இருக்கும்படி தம்பதியை கேட்டு கொண்டனர்.
இதனால், இருவரும் எழுந்து நின்றனர். அப்போது, நிற்க சிரமப்பட்ட டீனா மயக்கம் வருவதுபோல் இருப்பதாகக் கணவரிடம் கூறியிருக்கிறார். அவரை அமர வைத்து விட்டு, தண்ணீர் கொண்டு வரும்படி கணவர் கூறினார்.
சுற்றியிருந்தவர்களில் டீனாவை புகைப்படத்திற்கு ஏதுவாக புன்னகைக்கும்படி கூறியுள்ளனர்.
டீனாவும் அதற்கு ஏற்ப சிரிக்க முயற்சி செய்து முடியாமல் மேஜை மீது சரிந்து கீழே விழுந்துள்ளார். இதனால் பதறியபடி அவரது கணவரும், உறவினர்களும் உடனடியாக டீனாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கொண்டு வரும் வழியிலேயே டீனா உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளனர்.
விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டனர். உடல்நிலை சரியில்லாத டீனாவுக்காக அவருடைய கணவர், முன்பே ஓய்வு பெற்று அவரை கவனித்து கொள்ள முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில் அது பெரும் சோகத்தில் முடிந்த காட்சி அங்கிருந்தவர்கள் கண்களில் நீரை வரவழைத்தது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
சிற்றூந்து ஒன்று மோதி பின்னர், அந்த சிற்றூந்தினால் இழுத்து செல்லப்பட்டு, சில்லு தம்மீது ஏறிய போதும் உயிர் பிழைத்த சிறுவனின் காணொளி வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மகாராஸ்டிராவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிற்றூந்து ஒன்று புறப்படும் வேளையில் சிறுவன் ஒருவர், அதற்கு முன்னால் சென்று விளையாடியுள்ளார்.
இதன்போது, சிற்றூந்து ஓட்டுநர், சிறுவனை காணாத நிலையில், குறித்த சிற்றூந்து சிறுவனை மீது மோதியுள்ளது.
இதன் பின்னர் சிறுவன் சிற்றூந்தினால் இழுத்துச்செல்லப்பட்டு இறுதியில் சிற்றூந்தின் பின் சில்லு உடம்பில் ஏறிய நிலையில், சிறுவன் எழுந்து நின்று, அழும் காட்சி காணொளியாக பதிவாகியுள்ளது.
இத்ததைகைய விபத்துக்கு பின்னரும் குறித்த சிறுவன் உயிர்பிழைத்துள்ளமை பலரின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அக்காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
Accident: A six-year-old boy, playing in an industrial area in #Vasai, was critically injured after being accidentally run over by an aggregated cab on Wednesday.
மாத்தளையில் பலருக்கு தன் உயிரைக் கொடுத்து தன் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்ட பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
மாத்தளை அதமலே பகுதியில் வசித்து வந்த 24 வயதுடைய உதேஷிகா சந்தமாலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரு தினங்களுக்கு முன், காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கார் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானார்.
இதனையடுத்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தமாலியை மூளையில் உள்ள இரத்தக் கசிவு காரணமாக காப்பாற்ற முடியாதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை அறிந்த சந்தமாலியின் குடும்பத்தினர் அவரது இதயம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புக்களை தானமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதற்கமைய, சந்தமாலியின் இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டுள்ளதுடன், பதுளை போதனா வைத்தியசாலையில் சிறுநீரகம் தேவைப்பட்ட நோயாளர் ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
மற்றைய சிறுநீரகம் கண்டி பொது வைத்தியசாலையில் உள்ள நோயாளி ஒருவருக்கு மாற்று சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அத்துடன் சந்தமாலியின் ஏனைய உடல் உறுப்புக்களை மேலும் சிலருக்கு கொடுக்க மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் இருந்த போதிலும், உயர் கல்வித் தரத்தை எட்டிய உதேஷிகா, இசையிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கியுள்ளார்.
குறித்த யுவதி மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன், பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளார். பல முறை புற்று நோயாளிகளுக்காக தனது தலைமுடியை கூட அவர் தானம் செய்துள்ளார்.
கனடாவினை சேர்ந்த நண்பர்கள் இருவர் அதிர்ஷ்டலாப சீட்டின் மூலம் 1 மில்லியன் டொலரை பரிசாக பெற்றுள்ளனர்.
வான்கூவரை சேர்ந்த வாய் ஹிங் யுவன் (Wai Hing Yuen) மற்றும் டாங் மெய் டெங்(Tang Mei Deng) என்ற இரண்டு நண்பர்கள் இணைந்து இந்த அதிர்ஷ்டலாப சீட்டினை வாங்கியுள்ளனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினமான நேற்று(25.12.2024) அவர்களுக்கு பணப்பரிசு கிடைத்துள்ளது.
கடந்த 11ஆம் திகதி குறித்த சீட்டு வாங்கப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான அறிவிப்பால் நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து, நண்பர்களுடன் குழுவாக வெளிநாட்டு சுற்றுலா பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே இரண்டு நண்பர்களும் இணைந்து அதிக அதிர்ஷ்டலாப சீட்டுக்களை வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இருந்து வெளிநாட்டுப் பெண்ணும் அவரது மகளும் நாடு கடத்தப்படவுள்ளனர். நத்தார் பண்டிகையை முன்னிட்டு களுத்துறை சிறைச்சாலையில் இருந்த கைதிகள் சிலர் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 பேர் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட கைதிகளில் ரஷ்ய பெண் ஒருவரும் அவரது 4 வயது மகளும் அடங்குவதாக சிறைச்சாலை அத்தியட்சகர் வசந்த குமார ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் கீழ் வெளிநாட்டு பெண்ணுக்கு களுத்துறை நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெலிசர குடிவரவு தடுப்பு முகாமில் ஒப்படைக்கப்பட்ட மகளும் பெண்ணும் எதிர்வரும் நாட்களில் ரஷ்யாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இரண்டு ரஷ்ய பிரஜைகளும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹபரண- பொலன்னறுவை பிரதான வீதிக்கு அருகில் எரிந்த கெப் ஒன்றிற்குள் இருந்து நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்னேரிய வீதியில் பயணித்த நபர் ஒருவர், கெப் ஒன்று தீப்பிடித்து எரிவதாக பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து மின்னேரிய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
நேற்று இரவு 10 மணியளவில் தீ பரவியதாகவும், இதன்போது கெப் ஹபரணையை நோக்கி செல்லும் வீதியில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதில் வேறு யாரும் இருக்கவில்லை எனவும் மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருவரை கொலை செய்து அவரது சடலத்தை வாகனத்தில் வைத்து தீ வைத்து எரிப்பதற்காகவே கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மின்னேரியா பொலிஸாரும் பொலன்னறுவை மாநகரசபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகளும் தீயை முழுமையாக அணைத்தனர். தீப்பிடித்த கெப் வண்டி, கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ரஷ்யா பயணித்த பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அசர்பைஜான் தலைநகர் பாகு நகரில் இருந்து ரஷியாவின் ட்ரோஸ்னி நகருக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டது.
இந்த விமானத்தில் 67 பேர் பயணித்தனர். விமானம் கஜகஸ்தான் நாட்டின் வான்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது, அதிக பனிமூட்டம் நிலவியுள்ளது. இதனால், விமானத்தை கஜகஸ்தானில் உள்ள அக்டாவ் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார்.
அப்போது திடீரென விமானத்தின் மீது பறவைகள் மோதியுள்ளன. இதையடுத்து, விமானத்தை வேகமாக தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விமானம் திடீரென கிழே விழுந்து வெடித்து சிதறியது.
இந்த சம்பவத்தில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை விமான விபத்தில் 62 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், 42 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நத்தால் தினத்தில் இடம்பெற்ற இந்த விமான விபத்து உலகை உலுக்கியுள்ளது.
அஜர்பைஜானில் உள்ள பாகுவில் இருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னிக்கு பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்று கீழே விழந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (25-12-2024) பகல் இடம்பெற்றுள்ளதாக கஜகஸ்தான் அவசரக்கால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்டாவ் விமான நிலையம் அருகே அந்த விமானம் விழுந்து வெடிக்கும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் 42 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் உயிர் பிழைத்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், கஜகஸ்தானில் விபத்துக்குள்ளான விமானத்தில் எந்தெந்த நாட்டை சேர்ந்த பயணிகள் பயணித்துள்ளனர் என்பதற்கான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த விமானத்தில் அஜர்பைஜான் நாட்டை சேர்ந்த 37 பயணிகளும் ரஷ்யாவை சேர்ந்த 16 பயணிகளும் கஜகஸ்தானை சேர்ந்த 6 பயணிகளும் கிர்கிஸ்தானை சேர்ந்த 3 பயணிகளும் பயணித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் (24.12.2024) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த முறைப்பாட்டில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலர்களான மாணவனும் மாணவியும் பேசிக் கொண்டு இருந்துள்ளனர்.
இதன்போது அங்குவந்த அடையாளம் தெரியாத இருவர் மாணவரை தாக்கிவிட்டு அவர் கண்முன்னே மாணவியை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட காதலர்கள் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், சம்பம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,சம்பவம் தொடர்பில் நடைபாதையில் பிரியாணி கடை நடத்தும் இளைஞர் கைது செய்யப்பட்டு மேலதிக முன்னெடுத்து வருகின்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண நகரில் உள்ள நகைக் கடையொன்றில் மேற்கூரை உடைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (24) நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதன்போது 40 இலட்சம் ரூபா பணமும் 30 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளரால் நேற்று (25) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர்நீத்தவர்களிற்கான 20ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று (26.12.2024) இடம்பெற்றது.
பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத்தூபியில் குறித்த பிரார்த்தனை நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
குறித்த நினைவுத்தூபியானது சுனாமி பேரலை ஏற்பட்டு 31 ஆம் நாளில் நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையின் முதலாவதாக அமைக்கப்பட்ட தூபியாகவும் விளங்குகின்றது. தற்போது நகரசபையால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றது.
நரசிங்கர் ஆலயத்தின் உப தலைவர் கோ.சிறிஸ்கந்தராஜா, தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், முத்து முகமது மற்றும் இந்து, பௌத்த மதகுருமார்கள்,பொதுஅமைப்புகள், கிராமமக்கள், சமூகஆர்வலர்கள், என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு (25.12.2024) இடமபெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…
நேற்றயதினம் இரவு குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். கோவில்குளம் பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார், மற்றவர் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ் அராலிபகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயதான இளைஞரே மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.